Monday, January 26, 2015

திரைக்கதை சூத்திரங்கள் – II-பகுதி 34

Blake Snyder-ன் பீ ஷீட்டில் இன்று.........
 
7. B Story :
ஒரு ஹீரோ.
அவன் வாழ்வில் ஒரு சம்பவம்.
அதனால் கிடைக்கிறது ஒரு குறிக்கோள்.
அதில் பல தடைகள்..டிஷ்யூம்..டிஷ்யூம்.
கிளைமாக்ஸ்.

இது தான் மெயின் ஸ்டோரி..அதாவது A Story. இப்படியே போய்க்கொண்டிருந்தால், ஆடியன்ஸுக்குப் போரடித்துவிடும். நமக்கும் போதுமான சீன் தேறாது! என்ன தான் ஆக்சன் இருந்தாலும், ரிலாக்ஸ் பண்ண வேறு சில விஷயங்களையும் அவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டும். அது தான் B story எனப்படும் கிளைக்கதை.

இந்த கிளைக்கதை என்பது தமிழ் சினிமாவில் 90% காதல் கதை தான். ஹீரோவுக்கு ஹீரோயினுடன் மோதல், தொடர்ந்து காதல், காதல் மலர்ந்தவுடன் மெயின் கதையின் வில்லனால் ஹீரோயினுக்குத் தொந்தரவு, எல்லாவற்றுக்கும் சேர்த்து வைத்து ஹீரோவின் கிளைமாக்ஸ் பதிலடி. இது தான் தமிழ் சினிமாவில் மெயின் கதையும் கிளைக்கதையும் பின்னிப்பிணையும் டெம்ப்ளேட்.

மெயின் கதையே காதல் கதை தான் என்றால், ஹீரோவுக்கு அன்பு கிடைக்காத துயரக்கதையோ அல்லது ஹீரோவுக்கு தீர்க்க முடியாத நோய்(எயிட்ஸ்??) வந்த கதையோ அல்லது மொக்கையாக வில்லனின் ஒருதலைக்காதலோ கிளைக்கதையாக எழுதப் படும்.

இந்தக் கால நெட்டிசன்கள் புத்திசாலிகள் என்பதால், நீங்கள் பி ஸ்டோரியை ஓப்பன் செய்ததுமே கிளைமாக்ஸ்வரை அது எப்படிப் போகும் என்று சொல்லிவிடுவார்கள். யூகிக்க முடிந்த திரைக்கதை என்று விமர்சனம் எழுதி வெறுப்பேற்றுவார்கள். இதில் இருந்து தப்ப, பி ஸ்டோரியை சுவார்ஸ்யமான சீன்களால் நிரப்புவது அவசியம். காதல் எபிசோட் கலக்கல் என்று சொல்ல வைக்க வேண்டும்; ஜாக்ரதை.

காதலைத் தவிர்த்து வேறுவகை பி ஸ்டோரிகள் அபூர்வமாக தமிழ் சினிமாவில் வருவதுண்டு. உதாரணம், பில்லா.

பில்லாவில் இரண்டு கிளைக்கதைகள் உண்டு. ஒன்று, ஹீரோயினின் பழி வாங்கும் படலம். இரண்டாவது தேங்காய் ஸ்ரீனிவாசனின் பழி வாங்கும் படலம். முதலாவது கிளைக்கதை காதல் தான் என்றாலும், மிகவும் வித்தியாசமானதாய் அமைந்திருந்தது. அந்த மாதிரி புதுமையாகச் சொல்வது தான் திரைக்கதை ஆசிரியனுக்கு இருக்கும் சவால்.

தேவர் மகனில் வரும் கிளைக்கதையான கௌதமியுடனான காதல், அதை சிவாஜி எதிர்கொள்ளும் விதம், ’ஒய் சக்தி ஒய்’ சீன், ரேவதி  கௌதமியிடம் கெஞ்சுவது என வழக்கமான ‘மோதல்-காதல்-பிரச்சினை’ டெம்ப்ளேட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கும்.

பி ஸ்டோரியை புத்திசாலித்தனமாக வித்தியாசமானதாக ஆக்குவது தான் உங்கள் சவால். ஹீரோவின் மெயின் பிரச்சினையைத் தீர்க்கும் ஒரு விஷயமாக உங்கள் பி ஸ்டோரி ஆக்குவது தான் இதில் உள்ள சீக்ரெட். தேவர் மகனில் ரேவதி கல்யாணமும், பில்லாவில் தேங்காய் ஸ்ரீனிவாசனின் உதவியும் தான் ஹீரோவின் மெயின் பிரச்சினையைத் தீர்க்க முக்கியக் காரணிகளாக இருக்கும். மெயின் கதைக்கு ஒட்டாமல் கிளைக்கதை இருந்தால், ரொம்ப பழைய ட்ரிக்காகத் தெரியும்!

எனவே பி ஸ்டோரியை சாதாரணமாக நினைத்து, ஹீரோயினை ஹீரோ ஈவ்-டீஸிங் செய்யும் காட்சிகளால் நிரப்பிவிடாதீர்கள். ஹீரோ குறிக்கோளை அடைய உதவும் விஷயமாகவும், மெயின் கதையில் இருந்து ஆடியன்ஸை ரிலாக்ஸ் பண்ணும் விஷயமாகவும் வைத்துக்கொள்ளுங்கள்.

8. Fun & Games :
ஹீரோ வில்லனை ஒழிக்கலாமா இல்லையா எனும் மனப்போராட்டத்துக்குப் பின் மெயின் கதையில் வருவது இந்தப் பகுதி. ஹீரோ வில்லனை எதிர்க்கிறார் அல்லது வில்லனை எதிர்க்கத் தயாராகிறார். இது சீரியஸான பகுதி அல்ல, கொஞ்சம் லைட்டாக மெயின் கதை நகரும் பகுதி.

உதாரணமாக பில்லாவில் ரஜினி/அஜித் பில்லாவாக நடிக்க ரெடியாகும் பகுதி. பில்லா அல்லது பில்லாவின் குரூப் மேல் ரஜினிக்கு கோபம் ஏதுமில்லை. கேஷுவலாகவே அந்த ட்ரெய்னிங்கை எடுத்துக்கொள்கிறார். அந்த ட்ரெய்னிங்கும், புதிய இடத்தில் அவர் சந்திக்கும் வேடிக்கையான நிகழ்வுகளும் இந்த ஃபன் & கேம்ஸ் பகுதியில் வரும்.

காதல் கதை என்றால் காதலர்கள் ஜாலியாக தங்கள் காதலின் வசந்த காலத்தை அனுபவிக்கும் பகுதி இது. மொத்தத்தில் கதையை நகர்த்தியபடியே ஆடியன்ஸை சிரிக்க வைக்கும் பகுதி, ஃபன் & கேம்ஸ்.

நம் தமிழ் சினிமவில் ஃபன் & கேம்ஸுக்கு என்றே ஒரு சிறப்புப் பகுதி உண்டு. அது, நகைச்சுவைப் பகுதி. சமீபகாலமாக கதைக்கு வெளியே நகைச்சுவைக் காட்சிகள் வரக்கூடாது எனும் அறிவுஜீவிக் கருத்துகள் அதிகம் எழுதப்படுகின்றன. இது ஏ செண்டருக்கு மட்டுமே செல்லுபடியாகும் கருத்து.

தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் ஹிட்ஸில் இன்னும் அசைக்க முடியாத இடங்கள் உடையவை, கரகாட்டக்காரன், சின்னத்தம்பி, நாட்டாமை. மூன்று படங்களே ஆவரேஜ் மெயின் கதை & கிளைக்கதையைக் கொண்ட படங்கள். ஆனால் அவை அதிரிபுதிரி ஹிட் ஆனதற்குக் காரணம், நகைச்சுவையும் சூப்பர் ஹிட் பாடல்களும் தான்.

இது கூத்து நடைபெற்ற காலம் தொட்டே, மெயின் கதைக்கு இடையே நகைச்சுவைப் பகுதிகள் வருவது நம் மரபு. எனவே இதைப் பற்றி பெரிய அசூயை தேவையில்லை. மணிரத்னம், கௌதம் மேனன் போன்ற ஏ செண்டருக்கு படம் எடுக்கும் ஜாம்பவான்கள்கூட இதைச் செய்திருக்கிறார்கள். எனவே ஹாலிவுட் பாணியை அப்படியே காப்பி எடுக்கிறேன் பேர்வழி என்று தயாரிப்பாளரை ஓட்டாண்டி ஆக்குவதை விட, இது பெட்டர்.

தனி நகைச்சுவைக் காட்சிகளை கண்டிப்பாக வைக்க வேண்டிய அவசியம் இல்லை; ஆனால் அதை வைக்க நீங்கள் விரும்பினால் தயங்க வேண்டாம் என்பதே என் பாயிண்ட். (நம் மரபில் உள்ள இத்தகைய விஷயங்கள் பற்றி, ஹாலிவுட் காப்பிகேட்டாக நீங்கள் மாறுவதைத் தடுப்பது பற்றி ப்ளேக் ஸ்னிடரை முடித்தபின் பார்ப்போம்.)

இன்று பார்த்த இரு விஷயங்களையும் குறிப்பிட்ட பக்கத்தில் துவங்கி, குறிப்பிட்ட பக்கத்தில் முடிக்கச் சொல்கிறார் ப்ளேக் ஸ்னிடர். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, இவை படம் முழுக்க விரவியிருப்பதே வழக்கம். எனவே Debate-க்கு அப்புறம் இவை ஆரம்பித்தாலும் இங்கேயே முடிய வேண்டிய அவசியம் இல்லை, படத்தின் இரண்டாம்பகுதியிலும் இவை தொடரலாம். ஹாலிவுட்டை அப்படியே இன்ச் பை இன்ச் காப்பி பண்ண வேண்டாம்!!

(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

 1. படிக்கல,படிச்சுட்டு..............

  ReplyDelete
 2. படிக்கல,படிச்சுட்டு..............

  ReplyDelete
 3. விளக்கம் அருமை. தொடருங்கள்.

  ReplyDelete
 4. அருமை... தொடருங்கள்... தொடரகிறோம்.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.