Tuesday, January 6, 2015

திரைக்கதை சூத்திரங்கள்-II-பகுதி 32

 Blake Snyder-ன் பீட் ஷீட்டில் இன்று நாம் பார்க்க இருப்பவை : Theme Stated and Set-up.

2. Theme Stated (கரு சொல்லப்படுதல்):

இது முன்பு பார்த்த 'ஓப்பனிங் இமேஜின்' வசன வடிவம் என்று சொல்லலாம்.

ஒரு நல்ல திரைக்கதை என்பது, ஏதாவதொரு தீம்-ஐ மையப்படுத்தியே எழுதப்படும். உதாரணம், காதல்-தப்பிப் பிழைத்தல்-பாசம். படத்தின் கரு என்ன என்பதை ஏதாவது கேரக்டர் நேரடியாகவோ அல்லது கேள்வி வடிவிலோ சொல்வது தான் Theme Stated.

முந்தானை முடிச்சு படத்தில் ஊர்வசி தான் கதைநாயகி என்று முன்பே பார்த்தோம். அவர் அப்பாவிடம் அடிவாங்கும் இரண்டாவது சீனில் சொல்வார் : "இந்த ஊர்ல எல்லா ஆம்பளையும் வப்பாட்டி வச்சிருக்கான். எனக்கு இந்த ஊரு மாப்பிள்ளை வேண்டாம்ப்பா."

அது காமெடியாக அப்போது தெரிந்தாலும், பாக்கியராஜ் மேல் அவர் காதல் கொள்ள அதுவே முக்கியக் காரணமாக பின்னால் வரும்.

சமீபத்திய உதாரணம்: டொக்கு ஆயிட்டீங்களா?

ஆரண்ய காண்டம் படம், சுப்பு-சம்பத்-ஜமீன் தார் ஆகிய மூவரின் வாழ்க்கையைப் பேசும் ஆரண்ய காண்டத்தின் மையம், சிங்கப்பெருமாள். அந்த மூவரின் வாழ்க்கையையும் புரட்டிப்போடும் ஆளாக சிங்கப்பெருமாள் வருகிறார். அதற்குக் காரணம், டொக்கு ஆகிட்டோமோ எனும் பயம். அதையே அந்த மூன்று கேரக்டர்களும் வெவ்வேறு சீன்களில் சிங்கப்பெருமாளிடம் சொல்கிறார்கள்:

உங்களால முடியலேன்னா, என்னை ஏன் அடிக்கிறீங்க?
டொக்கு ஆயிட்டீங்களா?
கிழட்டுக்கோழி தோத்துப்போச்சு.

இது தான் தமிழ் சினிமாவில் வந்த மிகச்சிறந்த 'தீம் ஸ்டேட்டேட்' எனலாம்.

முதலில் சாதாரணமாகத் தெரியும் இத்தகைய வசனங்கள், படம் நகர நகர முக்கியமானதாக ஆகிக்கொண்டே வரும். ஆடியன்ஸின் சப்-கான்ஸியஸ் மைண்டை, கருவிற்கு ஏற்ப தயார் செய்வதில் ஓப்பனிங் இமேஜுக்கும், இந்த வசனத்திற்கும் முக்கியப் பங்கு உண்டு.

ஒரு படம் எதைப் பற்றியது, எதை நோக்கி நகரப்போகிறது என்று குறிப்பால் உணர்த்துபவை இந்த வசனங்கள்.

ஆனால் மிகவும் ஜாக்ரதையாக கையாள வேண்டிய விஷயம் இது. பணத்தை விட அன்பே முக்கியம் என்பது தான் கரு என்பதற்காக, 'பணம் போதும்ன்னு இன்னைக்கு நீ நினைக்கலாம். ஆனால் என்னைக்காவது அன்புக்காக ஏங்குவே' என்பது போன்ற அரதப்பழசான வசனங்களை எழுதிவிடாதீர்கள்.

இது முடிந்தவரை மறைமுகமாக, ஆடியன்ஸுக்கு உடனே உறுத்தாதவகையில் இருப்பது அவசியம்.

அதற்காக இதை எழுதிவிட்டுத்தான் அடுத்த சீனையே நீங்கள் எழுத வேண்டும் என்று அவசியம் இல்லை. இரண்டு டிராஃப்ட் முடிந்தபிறகே, நம் படம் என்ன மாதிரி டோனில் வரப்போகிறது என்று பிடிபடும். அப்போது இதை எழுதினால்கூடப் போதுமானது.

3. Set Up:

படத்தின் முக்கிய கேரக்டர்கள் யார், யார்? அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்பது போன்ற, கதையின் அடித்தளத்தை விவரிக்கும் காட்சிகள் தான் செட்டப். ஹாலிவுட்டைப் பொறுத்தவரை முதல் பத்து நிமிடங்களில் இவை சொல்லப்பட்டுவிடும்.

தமிழ் சினிமாவில் முதல் 20 நிமிடத்தில் அல்லது அரைமணிநேரத்தில் சொல்லப்படும் விஷயம், செட்டப். இதை எவ்வளவு சுருக்கமாகச் சொல்லிவிட்டு, முக்கிய கதைக்குள் நகர்கிறோமோ, அவ்வளவுக்கு திரைக்கதை கச்சிதமாக இருக்கும். இல்லையென்றால், என்ன தான் சொல்ல வர்றாங்க என்று ஆடியன்ஸ் சலித்துக்கொள்ளும் நிலை தான் ஏற்படும்.

சின்னத்தம்பியில் ஆரம்பித்து சிவாஜிவரை இதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம். வேலையில்லாப் பட்டதாரி போன்ற படங்கள் விதிவிலக்கு. விதிவிலக்குகளை நம்பி, திரைக்கதை எழுதுவது அதிக ரிஸ்க்கான விஷயம் என்பதால், 'இதான் மேட்டர்' என்று சட்டுப் புட்டென்று சொல்லிவிடுங்கள்.

எல்லா முக்கிய கேரக்டர்களையும் காட்ட முடியாதென்றால், அவர்களைப் பற்றிய குறிப்பினை விட்டுவைப்பது நல்லது.

எங்கிருந்தோ வந்தாள் திரைப்படத்தில் சிவாஜி, சின்னத்தம்பி பிரபுவை விடவும் பயங்கரமான அப்பாவி. சின்னத்தம்பியாவது கல்யாணம் மட்டும் தான் முடிப்பார்; சிவாஜி கல்யாணத்தை முடிக்காமல் 'எல்லாவற்றையும்' முடித்துவிடுவார். அதை நிரூபிக்க முடியாமல் ஹீரோயின் ஜெயலலிதா தவிக்கும்போது, கிளைமாக்ஸில் முத்துராமன் வந்து பிரச்சினையைத் தீர்த்துவைப்பார். அந்த கேரக்டர் இருப்பது நமக்கு முன்பே சொல்லப்பட்டிருக்கும், கிளைமாக்ஸில் தான் காட்டப்படும். இதே போன்ற சூழலை 'அண்ணா நகர் முதல் தெரு'விலும் பார்க்கலாம். (ஆனால் சத்திராஜ் நல்லவர்!).

எந்திரன் படத்தை எடுத்துக்கொண்டால், முதல் பத்து நிமிடத்திலேயே சைண்டிஸ்ட்-ரோபோ-ஐஸ்வர்யா ராய் பற்றிய தெளிவான சித்திரம் நமக்குக் கிடைத்துவிடும். படத்தின் ஹீரோ யார், அவர் குணநலன் என்ன? ஜாலியான ஆளா? சீரியஸான ஆளா? பின்னால் ஒரு பிரச்சினை வரும்போது, எப்படி ரியாக்ட் பண்ணுவார்? என்பது போன்ற 'கேரக்டர்' பற்றி நாம் முன்பு பார்த்த விஷயங்களை விஷுவலாகச் சொல்ல வேண்டிய இடம், இந்த செட்டப்.

செட்டப்பில் நீங்கள் செய்ய வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயமாக ப்ளேக் ஸ்னிடர் சொல்வது, '6 தீர்க்க வேண்டிய விஷயங்கள்'. ஹீரோவின் கேரக்டரில் இருக்க வேண்டிய குறைகளாக மினிமம் ஆறு விஷயங்கள் இருக்க வேண்டும் என்று சொல்கிறார். 

வசந்தமாளிகை படத்தை எடுத்துக்கொண்டால்...

குடிகாரன்
செல்வத்தில் மிதப்பவன்; ஆனாலும் அன்பு செலுத்த ஆள் இல்லாதவன்
வாழ்க்கையை எஞ்சாய் பண்ணுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்யாதவன்

என்று தான் ஹீரோ கேரக்டர் அறிமுகம் ஆகும். ஆனால் படம் நகர நகர,

குடியை நிறுத்தியவன்
காதலில் விழுந்தவன்
தொழிலாளர்களுக்குப் பரிந்து பேசுபவன்,

என அந்த கேரக்டர் வளர்ந்துகொண்டே இருக்கும்.  ஆம், ப்ளேக் ஸ்னிடர் சொல்வது 'குணச்சித்திர வளைவு' என்று நாம் முன்பு பார்த்த விஷயத்தைத் தான். குணச்சித்திரவளைவின் முதல்பகுதியை, செட்டப்பில் வைத்து விட வேண்டும். அதே போன்றே 'நட்டுவச்ச ரோஜாச் செடியையும்'.

நீங்கள் ஏற்கனவே முப்பது சீன்களுக்கு எழுதிவைத்த கதையில், இவையெல்லாம் மிஸ் ஆகியிருக்கும்.  இந்த '6 தீர்க்க வேண்டிய விஷயங்கள்' மூலம் மேலும் சில சீன்களையும் சுவாரஸ்யத்தையும் நீங்கள் திரைக்கதையில் சேர்க்க முடியும்.

ஹீரோவின் குறிக்கோள் என்ன என்பதையெல்லாம் இதில் நீங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஹீரோவின் ஆர்டினரி வாழ்க்கையை இதில் காட்டுகிறீர்கள். அது எப்படி, எதனால் பாதிக்கப்படுகிறது என்பதை அடுத்து வரும் பகுதிகளில் சொன்னால் போதுமானது.
 
(தொடரும்)
 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

  1. நன்று,தொடரட்டும்..............

    ReplyDelete
  2. இந்தத் தொடரைப் படிக்கப் படிக்க எனக்கே டைரக்டர் ஆகும் ஆசை வருகிறது,யாராவது நல்ல ப்ரொடியூசர் இருந்தா சொல்லுங்க செங்கோவி

    ReplyDelete
    Replies
    1. வரலாறு என்னைப் பாராட்டுமா, திட்டுமான்னு தெரியலியே!!!

      Delete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.