Sunday, August 17, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-21)


21.கேரக்டர்களின் வளர்ச்சி (Character Arc)

ஒரு தீம் எப்படி உருவாகிறது என்றும் அதனை ஒன் லைனாக ஆக்குவது எப்படி என்றும் ஆரம்பித்தோம். கதாநாயகன் - குறிக்கோள்- வில்லன் மூன்றையும் டெவலப் செய்வது எப்படி என்று பார்த்தோம். இப்போது உங்கள் கதை ஒரு தெளிவிற்கு வந்திருக்கும். அடுத்து, அந்தக் கதையை திரைக்கதையாக ஆக்கும் முன்னர் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
  • சஸ்பென்ஸா? சர்ப்ரைஸா?
  • லாஜிக்
  • க்ளிஷே
  • எக்ஸ்போசிசன் எனும் நவீன வெளிப்பாடு
  • Character Arc
  • கேரக்டர்களை உருவாக்குதல்
  • நட்டு வச்ச ரோஜாச் செடி!

ஒரு கதை என்பது ஒரே நாளில் முழு வடிவம் அடைவதில்லை. இரண்டு/மூன்று மாதங்களாவது உள்ளுக்குள்ளே ஓடிக்கொண்டே இருக்கும். அப்போது கவனிக்க வேண்டிய, செக்-லிஸ்ட் போன்ற விஷயங்கள் தான் மேலே சொன்னவை.

இவற்றில் இந்த வாரம், கேரக்டர்களின் வளர்ச்சி எனப்படும் குணச்சித்திர வளைவு பற்றிப் பார்ப்போம்; வாருங்கள்!

பொதுவாக ஒரு கதையின் ஆரம்பத்தில் ஹீரோ ஒரு அமைதியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்பான். அப்போது அவனுக்கு ஏதோ நடக்கும். ஒரு சாகசம் ஆரம்பம் ஆகும். இறுதியில் ஹீரோ ஜெயிப்பான். வில்லன்களை வீழ்த்துவது, ஜெயிப்பது என்பதெலாம் புறவுலகில் நடக்கும் விஷயங்கள். அதே நேரத்தில் ஹீரோவின் கேரக்டர் என்ன விதமான வளர்ச்சியை, மாற்றத்தை அடைகிறதே என்பதே குணச்சித்திர வளைவு. அதாவது ஹீரோவின் வளர்சிதை மாற்றமே குணச்சித்திர வளைவு ஆகும்.

தேவர் மகனை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். படத்தின் ஆரம்பத்தில் ரயிலில் கமலஹாசன் கௌதமியுடன் வந்திறங்குவார். தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு கொடுப்பார். அப்போது தான் படித்து முடித்துவிட்டு, உலகம் பற்றி அறியாத இளைஞனாக ஊருக்குள் நுழைவார். தாரை தப்பட்டைக்கு டான்ஸ் ஆடியபடியே, அவர் அறிமுகம் அமர்க்களமாக இருக்கும்.

அதே படத்தின் இறுதிக்காட்சியைப் பாருங்கள். அதே இடத்தில் ரயிலில் ஏறி ஜெயிலுக்குப் போகிறார். இப்போதும் அவருக்கு விடைதர ஊரே திரண்டு நிற்கிறது. ஆனால் இந்த கமலஹாசன், முதல் காட்சியில் ஆட்டம் போட்டபடியே வந்த சக்திவேல் அல்ல; இவர் தேவர் மகன். இனி அப்படி ஜாலியாக ஆட முடியாது, ஆட மாட்டார். ஏன்?

இடையில் நடந்த விஷயங்கள் வெளியில் மட்டுமல்லாது, அவர் குணத்திலும் மாற்றத்தைக் கொண்டுவந்துவிட்டன. ஒரு ஆர்க் போன்று அவர் சாதாரணமாக ஆரம்பித்து, உணர்ச்சியின் உச்சிக்கு போய் மீண்டும் அமைதிக்குத் திரும்பிவிட்டார். ஆனால் அது அவரது கேரக்டரை மொத்தமாக மாற்றிவிட்டது. இது தான் குணச்சித்திர வளைவு என்பது.

ரஜினியின் பில்லாவை எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டாவது ரஜினி பெண்மைக் குணம் கொண்டவராக அறிமுகம் ஆவார். ஒரு சாமானியன். ஆனால் பில்லாவாக நடிக்கப் போய், தப்பிப்பிழைத்தல் எனும் குறிக்கோளை அடைந்து உயிரைக் காப்பாற்றியபின், அவர் பழைய ரஜினி அல்ல. நல்ல குணம் கொண்ட பில்லா என்று சொல்லும் அளவிற்கு, பில்லாவின் தைரியத்தை கற்றுக்கொண்டு வந்துவிடுகிறார்.

இந்த குணச்சித்திர வளைவு எதற்காகத் தேவை? நாம் ஏற்கனவே பார்த்தபடி, பார்வையாளர்கள் படத்தின் ஹீரோவுடன் தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்வார்கள். ஹீரோ செய்யும் சாகசங்களை எல்லாம் தாங்கள் செய்வது போல் உணர்வார்கள், ஹீரோ அடையும் மனமாற்றத்தையும் தாங்களே அடைவது போல் உணர்வார்கள். படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை ஹீரோ, பெரிய மாற்றங்கள் இல்லாமல் அப்படியே இருந்தால், படம் தட்டையாகத் தோன்றும்.

ஒரு படம் வெற்றிபெற, படத்துடன் பார்வையாளர்கள் ஒன்ற வேண்டியது அவசியம். ஹீரோ என்ன ஃபீல் பண்ணுகிறானோ, அதையே படம் பார்ப்போரும் ஃபீல் பண்ண வேண்டும். அதனால் தான் இந்த குணச்சித்திர வளைவு முக்கியமான விஷயமாக, திரைக்கதை உத்தியில் இருக்கிறது.

எல்லா விதிகளுக்குமே சில விதிவிலக்குகள் இருக்கவே செய்யும். அதிலும் நம் தமிழ் சினிமாவில் விதிவிலக்குகளுக்குப் பஞ்சம் இல்லை. துப்பாக்கி படம், ஒரு வெற்றிகரமான ஆக்சன் படம். அதில் ஹீரோ முதலில் எப்படி அறிமுகம் ஆகிறாரோ, அப்படியே தான் இறுதியிலும் இருக்கிறார். குணச்சித்திரத்தில் பெரிய மாற்றம் இல்லை. அட்டகாசமான திரைக்கதையாலும், நல்ல ஆக்சன் சீகுவென்ஸ்களாலும் அந்தப் படம் வெற்றி பெற்றது. இருப்பினும் குணச்சித்திர வளைவும் இருந்திருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

தமிழில் குணச்சித்திர வளைவு சிறப்பாக அமைந்த படங்களில் ஒன்று, மிஷ்கினின் அஞ்சாதே. படத்தின் ஆரம்பத்தில் நரேன் பொறுக்கியாகவும், அஜ்மல் நல்லவராகவும் இருப்பார்கள். கதையின் ஓட்டத்தில் இருவரும் நேரெதிர் நிலையை அடைவார்கள். மிகவும் நுணுக்கமாக மிஷ்கின் அதைச் சித்தரித்திருப்பார். பொறுக்கி போலீஸ் ஆகிவிடுவான், போலீஸ் ஆக வேண்டியவன் ஒரு கடத்தல் கும்பலில் இணைந்துவிடுவான். அட்டகாசமான குணச்சித்திர வளைவு அது!

குணச்சித்திர வளைவு என்பது ஹீரோவின் வளர்ச்சியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அஜ்மல் கேரக்டர் போல் ஹீரோவின் வீழ்ச்சியாகவும் இருக்கலாம். சில நேரங்களில் புறவுலகில் ஹீரோ தோற்றுக்கொண்டே வர, அகவுலகில் ஹீரோ ஜெயித்துக்கொண்டே போகும்படியும் அமையும். உதாரணம், ரத்தக்கண்ணீர்.

எம்.ஆர்.ராதா சொத்துக்களை எல்லாம் இழந்து நோய் முற்றிக்கொண்டே வரும்போது, அவர் மனதளவில் தன் தவறுகளை உணர்ந்த நல்லவராக உருமாறிக்கொண்டு வருவார். அதாவது, வெளியில் நெகடிவ்..உள்ளே பாசிடிவ். வெளியில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்து பரிதாபப்படுவதா அல்லது அவர் மனம் திருந்துவதைப் பார்த்து சந்தோசப்படுவதா என்று நாம் ஒரு கலவையான உணர்ச்சியுடன் அந்தப் படத்தைப் பார்ப்போம். அதுவும் அந்த படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம்.
இப்போது உங்கள் கதையை எடுத்துக்கொள்ளுங்கள். குணச்சித்திர வளைவு என்பது ஹீரோவுக்கு மட்டுமல்ல, எல்லா கேரக்டர்களுக்கும் பொருந்தும் ஒரு விஷயம். உங்கள் கதையில் வரும் கேரக்டர்கள், என்ன விதமான அக மாற்றத்தை/வளர்ச்சியை அடைகிறார்கள் என்று பாருங்கள். அதை மேலும் எப்படி உணர்ச்சிகரமாகச் சொல்வது என்று யோசித்து, மெருகேற்றுங்கள். ஏனென்றால், பார்வையாளனையும் படத்தையும் இணைக்கும் முக்கியமான டூல், இந்த குணச்சித்திர வளைவு.


(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

7 comments:

  1. ரத்தகண்ணீர் போலவே சமீபத்திய உதாரணம் சதுரங்கவேட்டை..
    துப்பாக்கியில் ஹீரோவின் குணசித்திரம் தட்டையவே இருப்பது போல தோன்றினாலும், அது அந்த வளைவின் பீக்லயே இருந்ததுனால நாம கவரபட்டோம்!

    ReplyDelete
  2. இதை மட்டும் சொல்லி முடிச்சுக்குவோம் : அஞ்சான் படத்திலும் நல்ல குணச்சித்திர வளைவு இருந்தது. என்ன பிரச்சினை என்றால், படத்தில் வரும் கேரக்டர்களுக்கு இல்லாமல், படம் பார்க்க வந்த ஆடியன்ஸுக்கு அதை அருமையாக அமைத்திருந்தார்கள். தேவர் மகன் ஓப்பனிங் சீன் போல் உள்ளே போனோம். ஆனால்..!

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா நல்ல உதாரணம்!

      Delete
  3. நல்லவனுக்கு நல்லவன் - நீங்க சொல்லும்போது எனக்கு நினைவுக்கு வந்த ஒரு படம்..!

    ReplyDelete
  4. நல்ல விளக்கம்,உதாரணங்களும் கூட.

    ReplyDelete
  5. குணச்சித்திர வளைவு என்ற நல்லதொரு விளக்கத்தை அறிந்து கொண்டேன்! வார்த்தையும் புதிது! நன்றி!

    ReplyDelete
  6. குணசித்திர வளைவு...ஆஹா...புதுசா இருக்குய்யா !

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.