Sunday, August 3, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-18)

18. லாஜிக் ஜாக்கிரதை
திரைக்கதை எழுத்தாளர்களை மிரட்டும் இரு வார்த்தைகள் லாஜிக்கும் க்ளிஷேயும். இந்த பதிவில் லாஜிக் பற்றிப் பார்ப்போம்.

முதலில் லாஜிக் என்றால் என்னவென்று புரிந்துகொள்வோம். லாஜிக் என்பதை தமிழில் தர்க்கம் என்று மொழிபெயர்க்கலாம். தர்க்கம் என்பது விவாதம் என்று பொருள்படும். அதாவது தவறாகத் தோன்றும் ஒரு விஷயத்தை விவாதம் மூலம் உண்மை என்று நிறுவ முடியும் என்றால், அது தர்க்கரீதியில் சரி..அதாவது லாஜிக்கான விஷயம் என்று அர்த்தம்.
உதாரணமாக பில்லா போன்ற ஆள் மாறாட்டக் கதையை எடுத்துக்கொள்வோம். ஒரிஜினலின் இடத்திற்கு டூப்ளிகேட் ஆள் மாறாட்டம் செய்து போகிறார். அப்படி ஆள் மாறாட்டத்தில் போகும் ஆளிற்கு, ஏதோவொரு விதத்தில் அடிபடும் வாய்ப்பு இருக்கிறது இல்லையா? அப்போது அவர் ஹாஸ்பிடலுக்குப் போவார். அது ஒரிஜினல் ஆள் வழக்கமாகச் செல்லும் இடமாக இருக்கும். அந்த டாக்டர் ஒரிஜினலை மட்டுமே அறிந்தவராக இருப்பார். அடிபட்ட ஆள்மாறாட்ட ஆளிற்கு, ஒரிஜினலின் ப்ளட் குரூப் ரத்தத்தை ஏற்றிவிட்டால் என்ன ஆகும்?

சங்கு தான் இல்லையா? எனவே அப்படி சீன் வைக்கக்கூடாது என்று விட்டுவிடலாமா? 
ல்லை.

ஒரிஜினலுக்கும் டூப்ளிகேட்டுக்கும் ப்ளட் குரூப் வெவ்வேறாகத் தான் இருக்குமா?
ஆம்

ஒன்றாக இருக்க வாய்ப்பே இல்லையா?
இருக்கு..0.0001% வாய்ப்பு இருக்கு.

அப்போ அந்த டூப்ளிகேட் 0.0001% ஆளாக இருக்கலாம், இல்லியா?
ஆம்..இருக்கலாம்.

எனவே இது தர்க்கரீதியாக சரி தான். லாஜிக் என்பது உண்மை அல்ல, உண்மை மாதிரி, உண்மைக்கு அருகே வரும் ஒரு விஷயம்.

இப்போது நான் எழுத நினைத்திருக்கும் ஒரு திரைக்கதையின் ஒன் லைனை சொல்கிறேன்:
ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணிற்கும் உடன் வேலை பார்க்கும் வில்லனுக்கும் காதல். இந்த காதலுக்கு இடைஞ்சலாக இருப்பது, அந்த பெண்ணின் கணவனும்,(ஹீரோ) மாமியாரும், அவளின் மூன்று வயது குழந்தையும். இந்த மூவரையும் கொன்றுவிட்டால், நாம் சேர்ந்துவிடலாம் என்று திட்டமிடுகிறாள். வில்லன் சென்று மூன்று பேரையும் கொல்ல முயற்சிக்கிறான். மாமியாரும், குழந்தையும் இறந்துவிடுகிறார்கள். ஹீரோவும் இறந்துவிட்டதாக வில்லன் நினைக்கிறான். ஆனால் ஹீரோ உயிர் பிழைக்கிறான். அப்புறம் என்ன ஆச்சு என்பதே கதை.

எப்படி இருக்கிறது?................சும்மா சொல்லுங்க, கேவலமாக இருக்கிறது இல்லையா? ’ஒரு தாய், குழந்தையைக் கொல்வாளா? லாஜிக்கே இல்லையே’ என்று தோன்றுகிறது இல்லையா? அது நான் எழுதிய கதை கிடையாது. அது கேரளாவில் இந்த வருடம் நடந்த உண்மைச் சம்பவம். அது கடவுள் எழுதிய கதை. லாஜிக் எங்கேய்யா? என்று அவரிடம் கேட்க முடியுமா?
மேலே சொன்ன சம்பவத்தையும் தர்க்கரீதியாக நடக்க வாய்ப்பு உண்டு என்று நிறுவ முடியும். ஆனால் சினிமாவைப் பொறுத்தவரை லாஜிக் என்பது விவாதித்து நிறுவும் விஷயம் மட்டும் அல்ல. பெருவாரியான மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் விஷயமாகவும் இருக்க வேண்டியது அவசியம். ‘நடப்பதைத் தானே எடுக்கிறோம். லாஜிக்கலாக கரெக்ட் தான்’ என்று நினைத்து எடுத்தால், ஊற்றிக்கொள்ளும்.

எனவே சினிமா லாஜிக் என்பதை ‘தர்க்கரீதியில் சரியான, அதே நேரத்தில் வெகுஜன கருத்துடன் ஒத்துப்போகிற விஷயம்’ என்று தான் வரையறுக்க வேண்டும். அதாவது உண்மையை சுவாரஸ்யத்திற்காக வளைக்கிறோம், ஒரு அளவுடன்!

சினிமாவில் நாம் கதை தான் சொல்கிறோம். அது உண்மை அல்ல என்பது படம் பார்ப்போருக்கு நன்றாகவே தெரியும். எனவே நுணுக்கமாக 100% உண்மையாக இருக்கிறதா என்று பார்ப்பது வீண்வேலை. என்னைப் போன்ற வெட்டி விமர்சகர்கள் ‘அது ஏன் அப்படி இருக்கு? இது ஏன் இப்படி இல்லை?’ என்று எழுதினாலும், பெருவாரியான ரசிகர்களுக்கு அந்த லாஜிக் விஷயம் உறுத்தாது என்பதே உண்மை.

பெர்ஃபெக்ட்டாக உண்மையை எடுத்தால், அது டாகுமெண்டரியாகத்தான் வருமேயொழிய. சினிமாவாக வராது. ஹீரோ 30 பேரை அடிக்கிறான் என்று சீன் வைத்தால், தர்க்கரீதியில் சரியென்று நிரூபிக்க சில காரணங்களையும் கூடவே வைத்தால் போதுமானது. அவர் ஹீரோ..அதனால் அடிப்பார் என்பது மாஸ் ஹீரோ படங்களைத் தவிர்த்து மற்ற படங்களில் எடுபடாது.

எனவே கதையானாலும், சீன் ஆனாலும் லாஜிக் இருக்கிறதா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். அந்த விஷயத்தில் கோட்டை விட்ட படங்கள் நிறைய உண்டு. உதாரணம், கார்த்தி நடிப்பில் வெளியான அலெக்ஸ்பாண்டியன்.
வில்லன் காலாவதியான மருந்துகளை ஒரு கப்பலில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறான். அதை தமிழ்நாட்டுக்குள் விற்க, முதல்வரின் அனுமதி வேண்டும். அவரோ நல்லவர். ஒத்துக்கொள்ள மறுக்கிறார். எனவே அவர் மகளை ஹீரோவை வைத்துக் கடத்தி மிரட்டுகிறான். பின்னர் ஹீரோ மனம் திருந்தி, அடிபின்னுகிறார் என்பதே கதை.

முதல்வரின் அனுமதிக்காக மிரட்டுகிறான் எனும்போது முதல்வர் கையெழுத்துப் போட்டுவிடலாம். அந்த மருந்துகள் எங்கெல்லாம் நாட்டுக்குள் விற்கப்படுகின்றன என்று கண்காணிக்க முதலிலேயே ஏற்பாடு செய்துவிடலாம். மகளை மீட்டவுடன், அந்த மருந்துகளையும் வில்லனையும் அழித்துவிடலாம். ஒரு மாநிலம் என்பது முதல்வரின் கோட்டை. அதற்குள் நுழைய, அவரை மிரட்டுவது என்பது முட்டாள்தனம். ‘சரி, வா’ என்று உள்ளே விட்டு கும்மி விடலாம்.

எனவே அங்கே லாஜிக் சுத்தமாக மிஸ்ஸிங். அதற்குப் பதிலாக பல கண்டெய்னர் லாரிகளில் தங்கம்/போதை மருந்து இருக்கிறது. அதை மாநிலத்துக்கு வெளியே கொண்டு போக வேண்டும். அதற்கு முதல்வர் இடைஞ்சல் செய்யாமல் இருக்க வேண்டும் என்றால், அது லாஜிக்! வேலை முடிந்ததும் எஸ்கேப் ஆகிவிடலாம்.

நடைமுறையில் கதை-திரைக்கதை/சீன்ஸ் ஆகிய இரண்டில் ஒன்று லாஜிக் இல்லாமல் இருந்தால்கூட படம் தப்பித்துக்கொள்கிறது. குறிப்பாக காமெடிப்படங்களை நாமும் ஜாலியாக அணுகுவோம் என்பதால், அங்கே விளையாடலாம். 

னால் அலெக்ஸ்பாண்டியன் போன்ற சீரியஸ் கதையில் லாஜிக் மிஸ் ஆனதால், படம் தோல்வி அடைந்தது. நம்முடைய நோக்கம் பெட்டரான திரைக்கதையை எழுதுவது என்பதால், லாஜிக் விஷயத்தில் காம்ரமைஸ் செய்யாதீர்கள். நீங்கள் திறமையற்றவர் என்பதற்கு வெளிப்படையான உதாரணமாக அது நிற்கும்.


(அடுத்த ஞாயிறு....தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

12 comments:

  1. //வெட்டி விமர்சகர்கள் ‘அது ஏன் அப்படி இருக்கு? இது ஏன் இப்படி இல்லை?’ என்று எழுதினாலும், பெருவாரியான ரசிகர்களுக்கு அந்த லாஜிக் விஷயம் உறுத்தாது என்பதே உண்மை.///

    VIP லாஜிக்ஸ் பற்றி சிலர்(நான் உட்பட) வெட்டி விவாதம் பண்ணபோ தோணுனது இதான்! இங்க ஜெனரல் ஆடியன்ஸ் யாருமே கால் செண்டர்ல முதல் சம்பளம் எவ்வளவு, டென்டிஸ்ட் சம்பளம் எவ்வளவுன்னு ஆராய மாட்டங்கன்னு நினைக்கிறன்!

    ReplyDelete
    Replies
    1. காமெடி இருந்தாப் போதும்ன்னு ஒரு மனநிலை நம் மக்களுக்கு வந்திடுச்சு!

      Delete
    2. காமெடிங்றத விட, ஒரு கொண்டாட்ட மனநிலையை கொடுக்கும் படமா இருந்தா போதும், டபுள் ஓகேன்னு ஆச்சு!

      Delete
  2. அந்த ஸ்ருதி மேட்னஸ் போட்டோவின் குறியீடு என்ன?

    ReplyDelete
    Replies
    1. கடவுளிடம் லாஜிக் எதிர்பார்ப்பது, மேட்னெஸ்!

      Delete
  3. "லாஜிக்கும் க்ளிஷேவும்"......அப்புடீன்னு ஆரம்பிச்சுட்டு,க்ளிஷேவ்(ஹி!ஹி!!ஹீ!!!) பத்தி எதுவும் சொல்லாதமைக்கு வன்மையான கண்டனங்கள்!

    ReplyDelete
    Replies
    1. கிளியை பத்திரமா சேவ்(save) பண்ணனும்ன்னு அர்த்தம்!!

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. அலெக்ஸ் பாண்டியன், சீரியசாலுமே சீரியஸ் கதை(?)யை உடைய படமாங்ணா?

    ReplyDelete
    Replies
    1. சி.எம்.-ஐ மிரட்டுறது சீரியஸ் மேட்டர், இல்லையா!

      லாஜிக் மிஸ் ஆனதால், காமெடி ஆகிடுச்சு.

      Delete
  6. லாஜிக் பார்த்தல், 90% தமிழ் படங்கள் குப்பைகளே.
    சினிமாவில் வரும் விஷேங்களில் குரூப் டான்ஸ், ஹீரோ பாடும் பாட்டு ஊருக்கே கேட்பது, திருவிழாக்களில் முக்கியமான நடிகர்கள் மட்டும் ஆடும்போது ஊரே அமர்ந்து வேடிக்கை பார்ப்பது. etc
    இது போன்ற லாஜிக்கே இல்லாத பல பல விஷயங்கள் நம்ம தமிழ் சினிமாவில் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. இந்த அளவுக்கு லாஜிக் பார்க்க வேண்டியதில்லை. டிராமடிக் எஃபக்ட் தான் முக்கியம்.

      Delete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.