19.க்ளிஷே எனும்
ஆபத்து
.திரைக்கதை ஆசிரியர்களை
டரியல் ஆக்கும் விஷயம், க்ளிஷே. இது என்ன என்று சிம்பிளாகப் பார்த்தால், ஏற்கனவே பார்த்துச்
சலித்த காட்சிகள் என்று சொல்லலாம்.
உதாரணமாக சிறுவனாக
இருக்கும் ஹீரோ பெரியனவாக ஆனான் என்பதைச் சொல்ல வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு
எளிய வழியாக இருந்தது, ஒரு சைக்கிளில் ஏறி பெடலை மிதிப்பதைக் காட்டுவது தான். சைக்கிள்
சக்கரத்துடன் காலச்சக்கரமும் சுற்றிவிடும். எம்.ஜி.ஆர் காலத்தில் ஆரம்பித்து டி.ராஜேந்தர்
காலம்வரை, இந்த உத்தி பயன்படுத்தப்பட்டது.
ஆனால் ஒரு கட்டத்தில்
இது பார்வையாளர்களுக்கு சலிப்பையும் ஏளனச் சிரிப்பையும் உண்டாக்கியது. ஏனென்றால் எப்போதும்
புதிய விஷயங்களை எதிர்பார்த்தே, அவர்கள் தியேட்டருக்கு வருகிறார்கள். எளிதில் யூகிக்கக்கூடிய
அல்லது ஏற்கனவே பிற படங்களில் வந்த காட்சிகள் அவர்களை படத்துடன் ஒன்ற வைக்காமல் தொந்தரவு
செய்யும். அவையே கிளிஷே என்று சொல்லப்படுகின்றன.
அண்ணாமலை ஷூட்டிங்கில்
இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிற்கு ஒரு சிக்கல் வந்தது. இளைஞனாக பால்காரனாக இருக்கும்
சூப்பர் ஸ்டார், 18 வருடங்களுக்குப் பிறகு வயதானவராகவும் பணக்காரனாகவும் ஆனதைக் காட்ட
வேண்டும். வயது மட்டும் கூடுகிறது என்றால், அண்ணாமலை சைக்கிளையே மிதிக்க வைத்துவிடலாம்.
ஆனால் உழைப்பால் உயர்கிறார் என்றும் காட்ட வேண்டும்.
எனவே அவர் குடும்பத்துடன்
சில பிஸினஸ் செய்வதாக, பிண்ணனி இசையுடன் காட்டலாம் என்று முடிவெடுத்து, காட்சிகளை ஷூட்
செய்தார். அதன்பின் எடுத்ததைப் போட்டுப் பார்த்தபோது, துண்டு துண்டாக காலம் நகர்வது
டாகுமெண்டரி பட எஃபக்ட்டைக் கொடுப்பது தெரிய வந்தது. அப்போது என்ன செய்யலாம் என்று
யோசித்தபோது தான், ஒரு புது ஐடியா அவருக்கு உதித்தது.
நண்பனை எதிர்த்து
ஒரு சவால் பாடலை பிண்ணனியில் சூப்பர் ஸ்டார் பாடுவதாக காட்சிகளை அமைத்தார். ‘வெற்றி
நிச்சயம்’ என காற்றில் முடி பறக்க சூப்பர் ஸ்டார் பாட, கூடவே காலமும் ஸ்மூத்தாக உருண்டு
ஓடியது. அப்போது மிகவும் பாரட்டப்பட்ட உத்தி இது. சைக்கிள் பெடல் க்ளிஷேவைத் தாண்டி,
புதிதாக யோசித்ததால் அந்த காட்சிகளை ரசிக்க முடிந்தது.
ஆனால் இன்று அதே
உத்தியை படத்தில் வைத்தால், ‘ஒரே பாட்டுல கோடீஸ்வரன் ஆகப் போறான்யா’ எனும் சலிப்பே
பார்ப்பவர் மனதில் எழும். அதாவது புதிய, ரசிக்கத்த விஷயமாக இருந்த உத்தி, இன்று க்ளிஷே
ஆகிவிட்டது. இது தான் திரைக்கதை ஆசிரியனுக்கு இருக்கும் பெரும் சவால். முதல்முறை ஒரு
திரைக்கதையை எழுதிவிட்டு, அதில் எத்தனை காட்சிகள் க்ளிஷேயாக இருக்கின்றன என்று எண்ணிப்பார்த்தால்,
உங்கள் ‘ரைட்டர் ஈகோ’ டமார் ஆகிவிடும்.
இதை எப்படித் தவிர்ப்பது?
க்ளிஷேயான கதையை எளிதில் கண்டுகொண்டு ஆரம்பத்திலேயெ தவிர்த்துவிடலாம். ’ஒரு ஊர்ல ஒரு
நாட்டாமை’ என்று மனதில் முதல்வரி ஓடும்போதே, நிறுத்திவிடலாம். அடுத்து திரைக்கதையை,
அதாவது சீன்களை எழுதும்போதே பிரச்சினை வரும்.
சீன் என்பதில்
இரண்டு விஷயங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. (இது நல்ல பதிவு என்பதால், நல்ல அர்த்தத்தில்
எடுத்துக்கொள்ளவும்!). முதலாவது கேரக்டர்கள், இரண்டாவது இடம்/சூழ்நிலை. ஒரு சீனை யோசிக்கும்போது,
முதலில் நமக்குத் தோன்றுவது க்ளிஷேயாக இருக்கவே வாய்ப்பு அதிகம். அதை அப்படியே எழுதிக்கொள்ளுங்கள்.
கேரக்டர்: பின்னர்
அந்த சீனில் உள்ள வரும் கேரக்டர்களில் ஒன்று அல்லது எல்லாமே வழக்கமானதாக இல்லாமல் வித்தியாசமான
கேரக்டராக மாற்றி எழுதுங்கள். மனிதன் படத்தில் ஜெயிலில் இருந்து ஒருவர் வெளியே வருவார்.
ஷூவில் ஆரம்பித்து கேமிரா மேலே உயரும். (தியேட்டரில் ஆரவாரம்!). பார்த்தால், செந்தில்
அங்கே நின்றுகொண்டிருப்பார். ஹீரோவை எதிர்பார்த்தவர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காமெடி அங்கே
கிடைக்கும். ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆகிறார் ஹீரோ எனும் சீன், க்ளிஷே இல்லாமல் புதியதாக
ஆகியிருக்கும்.
இந்த இடத்தில்
ஒரு ஆங்கிலப்படக் காட்சி ஞாபகம் வருகிறது. The Big Sleep எனும் படம். ஹீரோ ஒரு ரொமாண்டிக்கான
டிடெக்டிவ். ஒரு காட்சியில் வில்லனை டாக்ஸியில் பின் தொடர்வார். அது வழக்கமான சீன்
தான். ஆனால் அந்த டாக்ஸி டிரைவர் ஒரு பெண்ணாக அமைத்திருப்பார்கள். இறங்கும்போது அவர்
தன் விசிட்டிங் கார்டை ஹீரோவிடம் தருவார். வசனங்கள் ஏறக்குறைய இப்படி இருக்கும்:
பெண்: ஃபியூச்சர்ல
தேவைப்பட்டா கூப்பிடு
ஹீரோ: (குறும்புடன்)
நைட்லயா? பகல்லயா?
பெண்: (நக்கலாக)
நைட்டே கூப்பிடு. ஏன்னா பகல்ல நான் டாக்ஸி ஓட்டணும்.
ஒரு வழக்கமான ஃபாலோ
பண்ணும் சீனுக்கு இடையே ஒரு நிமிட ரிலாக்ஸ். இது தான் க்ளிஷேயை புதிய கேரக்டர்கள் மூலம்
மாற்றும் தந்திரம்.
சூழ்நிலை: இன்னொரு
வழி என்னவென்றால், சம்பவம் நடக்கும் இடத்தையோ சூழலையோ வித்தியாசமானதாக ஆக்குவது. ஒரு
அரசு ஊழியருக்கு லஞ்சம் கொடுக்கும் இடம், அரசு அலுவலகமாகவே இருக்கும். அல்லது அந்த
அலுவலகத்தின் அருகேயுள்ள கடையாக இருக்கும். ஆனால் சிவாஜி படத்தில் ஒரு ஹைடெக் பாரில்
வைத்து எம்.எஸ்.பாஸ்கரிடம் சூப்பர் ஸ்டாரும் விவேக்கும் பேசுவதாக காட்சியை அமைத்திருப்பார்கள்.
புதுவிதமான காட்சியைப் பார்க்கிறோம் எனும் எண்ணத்தை அது கொடுக்கும்.
இந்த மாதிரி வித்தியாசப்படுத்துவதில்
ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தனுஷ் நடித்து ஐஸ்வர்யா இயக்கிய ‘3’ படத்தில் பாரில்
கல்யாணம் செய்வதாக ஒரு காட்சி வரும். அது மிகவும் புதுமையான சிந்தனை என்று நினைத்து,
அந்தக் காட்சியை அமைத்திருப்பார்கள். ஆனால் படத்தின் கதை என்ன?
காதலித்துக் கல்யாணம்
செய்கிறார்கள் ஹீரோ-ஹீரோயின், ஹீரோவுக்கு வரும் மனநோயால், அவன் தற்கொலை செய்துகொண்டு
சாகிறான். நன்றாக வாழ வேண்டிய ஒரு இளம் ஜோடிகளின் வாழ்க்கை, விதிவசத்தால் இப்படி துயரமாக
முடிகிறது.
இந்தக் கதையின்
நோக்கம், பார்வையாளர் மனதில் அந்த இழப்பையும் அது தரும் துக்கத்தையும் பதிய வைப்பது
தான். ஹீரோயின் உணர்வதை, படம் பார்ப்போரும் உணர்வதில் தான், படத்தின் வெற்றி இருக்கிறது.
நம் சமூகம் ஒரு செண்டிமெண்ட் சமூகம். 0.001% இணைய போராளிகளைத் தவிர்த்து, தாலிக்கு
மதிப்பளிக்கும் மனிதர்களால் நிறைந்த செண்டிமெட் சமூகம் நம்முடையது. பாரில் கல்யாணம்
செய்துவிட்டு தாலியறுத்தாள் என்பது எந்த தாக்கத்தையும் பார்ப்பவருக்கு ஏற்படுத்தாது.
’பாரில் கல்யாணம் செய்தால், விளங்குமா?’ எனும் கோபமே, படத்தை பார்வையாளர்களிடம் இருந்து
அந்நியப்படுத்தியது.
எனவே க்ளிஷேவைத்
தவிர்த்து வித்தியாசப்படுத்துகிறேன் பேர்வழி என்று நமக்கு நாமே ஆப்பு வைத்துக்கொள்ளக்கூடாது.
இந்த தொடரின் முதல் கட்டுரையில் தீம் பற்றிச் சொன்னது தான் இதற்கும் பொருந்தும். நாம்
வைக்கும் காட்சிகள், வசனங்கள் எதுவும், படம் சொல்ல வருவதை சிதைத்துவிடக் கூடாது.
எனவே வெவ்வேறு
கேரக்டர்களையும் வெவ்வேறு சூழலையும் மாற்றி எழுதிப் பார்த்து, க்ளிஷேவைத் தவிர்க்க
முயற்சி செய்யுங்கள். இது போன்ற சிக்கல்களால் தான் கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிப்பதை
விடவும் கஷ்டம், சீன் பிடிப்பது என்று புலம்புகிறார்கள்!
(தொடரும்)
அருமை
ReplyDeleteநன்றி!
Deleteநன்று!விளக்கங்கள்+ஏற்ற காட்சிகள் என்று.............///கடேசி பாரா வில்லங்கம் தான்!
ReplyDeleteஉண்மை..உண்மை.
Deleteசூப்பர் செங்கோவி.. வர வர எனக்கு செங்கோவி மேனியா வந்திருச்சு என நினைக்கிரேன்... என்ன படம் பார்த்தாலும், உங்க பதிவில் இருப்பதை என்னை அறியாமல் ஒப்பிட்டு பார்க்கிறேன்...
ReplyDeleteஎன் தல ஹாலிவுட் பாலா என்னை காப்பாற்றுவார் :) :)
அவர் ஸ்டைலில் ஒரு விமர்சனம் வந்தால், எல்லாம் தூள் தூளாகிடும்.. பட் ஆள் செம்ம பிசி போல
ஆம்..உங்களைக் காப்பாற்ற என் பதிவுலக குரு ஹாலிவுட் பாலாவால் தான் முடியும்!
Deleteஅருமையாக செல்கிற்து தொடர்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி சுரேஷ்.
Deleteஆஹா சினிமா தொடரிலும் அரசியல் புகுத்தி விட்டீங்களே.ஹீ கச்சத்தீவு !ம்ம் தொடருங்கள் தொடர்கின்றேன்.
ReplyDelete