Monday, January 12, 2015

திரைக்கதை சூத்திரங்கள்-II-பகுதி 33

ப்ளேக் ஸ்னிடரின் பீட் ஷீட்டைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த வரிசையில் இன்று....

4. Catalyst (வினையூக்கி):

இதுவரை ஹீரோவின் நார்மல் வாழ்க்கை எப்படி இருக்கிறது, யாரெல்லாம் முக்கியக் கேரக்டர்கள் என்பதைக் காட்டிவிட்டோம். இனி கதைக்குள் நுழைய வேன்டிய தருணம் இது. சாதாரணமாகச் சென்றுகொண்டிருக்கும் ஹீரோவின் வாழ்வில் ஒரு சம்பவம் நடக்கிறது. அது அவனது வாழ்க்கையை வேறு திசையில் மாற்றப்போகிறது அல்லது தலைகீழாக எல்லாவற்றையும் புரட்டிப்போடப் போகிறது. அந்தச் சம்பவமே/சீனே, கேட்டலிஸ்ட் ஆகும்.

தேவர் மகனில் வடிவேலு, கமல் & கவுதமிக்காக கோவில் பூட்டை உடைக்கும் சீன், கேட்டலிஸ்ட்டிற்கு நல்ல உதாரணம். ‘படித்தவன், தன்னுடன் படிக்கும் ஆந்திராப் பெண்ணைக் காதலிப்பவன், ஊரில் பெரிய குடும்பம், அவர்களுக்கு ஒரு எதிரிக் குடும்பம்’ என செட்டப்பில் எல்லாவற்றையும் சொன்னபிறகு, இந்த சீன் வருகிறது. சாதாரணமாகத் தெரியும் இந்த சீனில் இருந்து தான் ஹீரோவின் வாழ்க்கை மாறப்போகிறது.

பில்லா படத்தைப் பொறுத்தவரை, பில்லா சாவது தான் கேட்டலிஸ்ட் சீன். அது தான் இன்னொரு ரஜினி/அஜித்தின் வாழ்க்கையை மாற்றப் போகும் சீன். கத்தி படத்தைப் பொறுத்தவரை, ஜீவாவை ‘கதிரேசன்’ விஜய் காப்பாற்றும் சீன் தான் கேட்டலிஸ்ட். காதல் கதைகளைப் பொறுத்தவரை, பெரும்பாலும் இருவரும் சந்திக்கும் சீனே கேட்டலிஸ்ட் ஆக இருக்கும்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம், கேட்டலிஸ்ட் சீனிலேயே ஹீரோ ஆக்சனில் இறங்கும் அவசியம் இல்லை. இந்த விஷயம் எல்லாவற்றையும் மாற்றப்போகிறது என்று ஹீரோவுக்கோ ஆடியன்ஸுக்கோ அப்போதே தெரிய வேண்டிய அவசியம் இல்லை. இப்பொழுது கேட்டலிஸ்ட் பற்றி உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த கேட்டலிஸ்ட் சீனை எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரம் கொண்டுவருகிறீர்களோ, அவ்வளவுக்கு படம் விறுவிறுப்பானதாக ஆகும். இன்டர்வெல்வரை செட்டப்பை இழுத்துவிட்டு, பிறகு கேட்டலிஸ்ட்டுக்கு வந்தால், அலெக்ஸ்பாண்டியன் கதி தான் ஏற்படும்!


சமீபத்தில் வந்த பிசாசு படத்தின் முதல் காட்சியே கேட்டலிஸ்ட் சீன் தான். செட்டப் என்று அரைமணிநேரம் அறுக்கும் கதையே இல்லை. அதனால்தான் படம் 1:50 நிமிடங்களில் முடிந்தது, விறுவிறுப்பாகவும் இருந்தது.

5. Debate (மனப்போராட்டம்):

காலையில் ஆபீஸ்க்குப் போய்க்கொண்டிருக்கிறீர்கள். ஒரு ரவுடிக்கும்பல் ஒருவனை விரட்டியபடி செல்கிறது. அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?

உங்களிடம் ஓட்டு வாங்கி ஜெயித்த கவுன்சிலர்/எம்.எல்.ஏ, ஒரே வருடத்தில் பலகோடி மதிப்புள்ள இடத்தை வாங்கி, ஒரு பெரிய பங்களாவைக் கட்டுகிறார். என்ன செய்வீர்கள்?

உண்மையைச் சொல்வதென்றால், ஒன்றும் செய்ய மாட்டீர்கள். 'நமக்கு எதுக்கு வம்பு' என்று ஒதுங்கிச் செல்வீர்கள். படம் பார்க்கும் ஆடியன்ஸும் அப்படித்தான். எனவே ஹீரோ வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டுக்கொண்டு ஆக்சனில் இறங்கினால், ஆடியன்ஸ் கதையை விட்டு வெளியேறிவிடுவார்கள்.

கேட்டலிஸ்ட்டில் ஏதோவொன்று நடந்துவிட்டதாலேயே ஹீரோ ஆக்சனில் இறங்கினால், மிகவும் செயற்கையாக இருக்கும். 'இதைச் செய்யலாமா? இதனால் வரும் பின்விளைவுகள் என்ன? இதைச் செய்யும் தகுதி தனக்கு இருக்கிறதா?' எனும் அனலிஸை ஹீரோ செய்ய வேண்டும். அது ஒரு நிமிடமாக இருக்கலாம் அல்லது பத்து நிமிடமாகவும் இருக்கலாம். 'ஐய்ய்..சாமி சோறு போடுது' ரேஞ்சில் ஹீரோ வில்லனை ஒழிக்க கிளம்பக்கூடாது. 

இன்னொரு முக்கியமான விஷயம், இதை ஹீரோ செய்யவில்லையென்றால் ஹீரோவுக்கு ஏதாவது ஒரு இழப்பு இருக்க வேண்டும். அது, ஹீரோவின் ஊர்மக்களின் உயிராகவும் இருக்கலாம் அல்லது காதலாக இருக்கலாம் அல்லது நேர்மை/அன்பு போன்ற ஹீரோவின் இயல்பாகவும் இருக்கலாம்.

டிபேட் என்பது தனிக் காட்சிகளாகவும் இருக்கலாம் அல்லது செட்டப்பிலேயே கலந்துவிட்ட காட்சிகளாகவும் இருக்கலாம். ஆக்ட்-2விற்குள் நுழையும்போது, இந்த மனப்போராட்டம் ஆடியன்ஸ் மனதிலும் நடந்திருக்க வேண்டும். ‘ஆமாம்யா, அவன் கிளம்புறது சரி தான்’ எனும் எண்ணம் ஆடியன்ஸுக்கு வந்திருக்க வேண்டும்.

தேவர் மகனில் கமலின் ரியாக்சன் 'என்னை விட்ருங்கய்யா..நான் போறேன்' என்பது தான். 'நான் படித்தவன். இந்த மக்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள். அவர்களின் அறிவுக்கண்ணைத் திறக்கப்போறேன்' என்று உடனே ஆக்சனில் இறங்குவதில்லை. பில்லாவிலும் 'டூப்' பில்லா உடனே ஒத்துக்கொள்வதில்லை. அந்த இரு குழந்தைகளின் படிப்பிற்கு போலீஸ் உத்தரவாதம் கொடுத்தபிறகே ஹீரோ களத்தில் இறங்குகிறார். கத்தி படத்திலும் ஜீவா யார் என்றும், அந்த ஊர் பற்றியும் தெரியும்வரை கதிரேசன் களத்தில் இறங்குவதில்லை.

ஹீரோவுடன் அடியன்ஸை ஒவ்வொரு ஸ்டெப்பிலும் ஒன்ற வைப்பதே நல்ல திரைக்கதை. எனவே இந்த டிபேட் விஷயத்தில் கவனமாக இருங்கள்.
 6. Break Into Two:

ஹீரோ தன் நார்மல் உலகில் வாழ்ந்துவருகிறார். அப்போது ஒரு கேட்டலிஸ்ட் சம்பவம் நடக்கிறது. அதன்பின் ஹீரோவின் மனப்போராட்டம். அது முடிந்ததும், ஹீரோ தன் குறிக்கோளை நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கும் தருணம், இந்த பிரேக் பாயின்ட்.

இந்த சீன் (ஹாலிவுட்) திரைக்கதையில் 25ஆம் பக்கத்தில் வரவேண்டும் என்று ப்ளேக் ஸ்னிடர் சொல்கிறார். தமிழ் சின்மாவிற்கு அவர் சொல்லும் பக்க கணக்குகள் அப்படியே பொருந்தாது. எனவே அவர் சொல்லும் இந்த 'பீட் சீன்கள்’ இருக்கிறதா, முடிந்தவரை அவர் சொல்வதற்கு அருகே வருகிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

தமிழ் சினிமாவில் நான் கவனித்த இன்னொரு விஷயம், இந்த 'இரண்டாம் அங்கத்தில் நுழையும் சீன்' இன்டர்வெல்லில் தான் வருகிறது. ஒன்றே கால் முதல் ஒன்றரை மணி நேரம் கழித்து! திரைக்கதையில் ஒரு பக்கம் என்பது படத்தில் ஒரு நிமிடம் என்பது ஒரு தோராயக் கணக்கு. அதன்படி பார்த்தால், 75-90ஆம் பக்கத்தில் இந்த சீன் வரும். பாடல், ஃபைட் சீன்களுக்கு உரிய நேரத்தையும் கழித்துக்கொண்டால் 60-75 பக்கங்களுக்குள் இந்த சீன் வந்து விடும்.

தேவர் மகனில் இன்டர்வெல் ப்ளாக் தான் இந்த சீன். அப்போது தான் கமல், முழு விருப்பத்துடன் தேவர் மகனாக வந்து நிற்கிறார். பல படங்களில் ஹீரோ வில்லன்களை ஒழிப்பேன் என்று சவால்விட்டு, நம்மை பாத்ரூமுக்கு அனுப்பி வைப்பது உங்களுக்கும் இப்போது ஞாபகம் வருகிரதில்லையா?

டிபேட்டிற்கு அதிக நேரம் தேவைப்படாத கதை என்றால், செட்டப்பிற்கு அரை மணி நேரம் + டிபேட் பத்து நிமிடம் என 40ஆம் பக்கத்திலேயே இந்த சீனைக் கொண்டு வந்துவிட முடியும். பில்லா படத்தில் அப்படித் தான் வரும். டூப்பாகப் போக ரஜினி/அஜித் ஒத்துக்கொள்வது இன்டர்வெல்லிற்கு முன்பே வந்துவிடும்.

குறிக்கோளை அடைய ஹீரோவிற்கு ட்ரெய்னிங் தேவைப்படுவது அல்லது புதிய இடத்திற்கு ஹீரோ நகர்வது என்பது போன்ற சூழ்நிலை இருந்தால், இந்த ஆக்ட் பிரேக் 40ஆம் பக்கத்திற்குள்ளேயே வந்துவிடும்.

சரி..ஹீரோ ஒருவழியாக ஆக்ட்-1ல் இருந்து ஆக்ட்-2விற்குள் குதித்துவிட்டார். இனி.....

(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comment:

  1. நல்ல விளக்கம்.வளரத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஆட்க்சிசன்.(OXYGEN)

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.