Saturday, December 2, 2017

தேவர் மகன் - தமிழில் ஒரு உலக சினிமா (பாகம்-1)




காட் ஃபாதர் படத்தினை முழுமையாகப் புரிந்துகொள்ள, நியூயார்க்கில் கோலோச்சிய ஐந்து குடும்பங்கள் என்று அழைக்கப்பட்ட இத்தாலிய மாஃபியாவின் வரலாறு பற்றிய புரிதல் அவசியம். அந்தவகையில் தேவர்சாதியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தேவர் மகன் படத்தினைப் புரிந்துகொள்ள, அந்த சாதி பற்றிய சில அடிப்படைப்புரிதல் நமக்கு அவசியமாகிறது. ஒவ்வொரு சாதிக்குமே நிறை குறைகள் நிறைந்த தனித்துவமான வரலாறு உண்டு.  இந்த வரலாற்றுப் பின்புலம் இல்லாமல் பார்க்கும்போது, அது ஒரு கமர்சியல் படமாகவோ ஜாதிப்பெருமை பேசும் படமாகவோ மட்டும் தோன்றும் அபாயம் உள்ளதாலேயே, ஒரு நீண்ட முன்னுரையுடன் துவங்குவோம்.


இந்திய சுதந்திரப் போராட்டத்தை இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று, ஆங்கிலேயர் இந்தியாவில் நுழைந்தபோது எழுந்த எதிர்ப்புப் போராட்டங்கள்/போர்கள். இரண்டாவது முழு இந்தியாவும் ஆங்கிலேயரின் வசம் அடிமைப்பட்டபின்னர், காங்கிரஸ் மூலமாக எழுந்த போராட்டம். தமிழகத்தைப் பொறுத்தவரை சேர, சோழ, பாண்டிய சாம்ராஜ்யங்களின் காலம் முடிந்து, நாயக்கர் வம்ச ஆட்சியின் கடைசிக்கட்டத்திலேயே ஆங்கிலேய படையெடுப்பு நடந்தது. நாயக்கர் ஆட்சிக்காலத்தில் நிவாகத்திற்காக உருவாக்கப்பட்டு, எஞ்சியிருந்த பாளையக்காரர்கள், அந்த ஆங்கிலேயரை எதிர்த்து நின்று போரிட்டார்கள். பூலித்தேவன், கட்டபொம்மன், அழகு முத்துக்கோன் என நீளும் அந்த வீரப்போர்களின் பட்டியல். ஆனாலும் இறுதியில் ஆங்கிலேயரே வெற்றி பெற்றது கசப்பான வரலாறு.

வெற்றி பெற்ற ஆங்கிலேயர் இந்த பாளையக்காரர்களை என்ன செய்தார்கள் என்பதும் நமது பள்ளி வரலாற்றுப் பாடங்களிலேயே தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது. பூலித்தேவன் சிறைபிடிக்கப்பட்டு, மாயமாக மறைந்தார். கட்டபொம்மன் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். அந்த பாளையக்காரர்களுக்காக போரிட்ட வீரர்கள் என்ன ஆனார்கள்? அவர்களை ஆங்கிலேயர் மன்னித்தார்களா? அந்த போர்ப்படை வீரர்களின் வாழ்க்கை என்ன ஆனது? என்பது பற்றி வரலாற்றுப் பாடங்களில் தெளிவான தகவல்கள் இல்லை.

அந்த படைவீரர்கள், போர் புரிபவர்களாக மட்டுமே இல்லை. போரில்லாத காலங்களில் அரண்மனைப் பாதுகாப்பும், ஊர்களின் காவலும் அவர்களின் கையிலேயே இருந்தது. அதாவது, இன்றைய ஆர்மியும் போலீஸும் கலந்த கலவையே அந்த போர்ப்படை. பாளையங்கள் எல்லாம் சிறிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு காவல் தலைவர் இருந்தார். ஊர்க்காவல் படைகள் அவர் தலைமையில் இயங்கி வந்தன. ஒவ்வொரு ஊருக்குமே தலையாரி எனும் கிராம அதிகாரியும் இருந்தார்.(இப்போதும் இந்த பதவி கிராமங்களில் உண்டு) ஊரில் ஏதாவது திருட்டுப் போனால், திருடனைக் கண்டுபிடித்து பொருளை மீட்பது தலைவரின் கடமை. திருடனைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், சில இடங்களில் தலைவரே பொருளுக்குரிய பணத்தை ஊர்சபையில் கட்டும் நடைமுறையும் இருந்தது. எனவே ஊர்க்காவல் படையின் இறுகிய பிடியிலேயே அனைத்து ஊர்களும் இருந்தன. பாளையக்காரர்களின் பெரும்பலமே, இந்த படைகள் தான். பாளையக்காரர்களைக் கண்டு அரசர்கள் அஞ்சும் நிகழ்வுகள்கூட வரலாற்றில் உண்டு.

ஜனநாயகம் தழைத்தோங்கும் இன்றைய காலகட்டத்திலேயே, காவல்துறை காட்டும் அதிகாரத்தை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அன்றைய நிலபிரபுத்துவ காலகட்டத்தில், இந்த காவல்படைகளுக்கு இருந்த அதிகாரம், ஊர்களில் அவர்களுக்கு எத்தகைய செல்வாக்கையும் மரியாதையையும் நாம் புரிந்துகொள்ளலாம். நமது இந்திய சாதி முறை என்பது தொழில்களின் அடிப்படையில் உருவானது. எத்தனை தொழில்கள் உண்டோ, அத்தனை சாதிகள் இங்கே உண்டு. பழங்குடிகளாக வாழ்ந்த மக்களை, ஒரு அரசின்கீழ் தொகுத்துத்துக்கொள்ள, இந்த சாதியமைப்பு உதவியது. அந்தவகையில், பெரும்பாலான காவல்படைகள் தேவர் சாதியைச் சார்ந்ததாகவே இருந்தன. கள்ளர்-அகமுடையார்-மறவன் என்ற முக்குலமும் தொழிலில் ஒன்றுபட்டே இருந்தன.

ஆங்கிலேயருக்கு எதிரான போரில் பாளையக்காரர்களுடன் போரிட்டு தோல்வி அடைந்த இனங்களுள் முக்கியமானது தேவரினம். பாளையக்காரர்களை வென்று, கொன்றபின், தன்னை எதிர்த்துப் போரிட்ட தேவர்சாதியின் கையில் காவல் நிர்வாகத்தை விட்டுவைப்பது என்பது எவ்வளவு ஆபத்தானது என்று ஆங்கிலேயருக்கு நன்றாகவே புரிந்தது. அன்றும் இன்றும் தேவர் சாதியின் குறைகளில் ஒன்றாக இருப்பது, நெகிழ்வுத்தன்மையற்ற குணம். இறங்கிப்போவது, சமரசம் ஆவது என்பதெல்லாம் இழிவான செயலாகவே தேவர் சாதியில் பார்க்கப்பட்டு வருகிறது. ஒரு போர்ச்சாதியில் நெகிழ்வுத்தன்மை இருப்பது, போர்க்காலத்தில் பின்வாங்கச் செய்யும் என்பதனால் இந்த குணநலன் பரம்பரையாக போதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த ஜனநாயகச் சூழலில் சமரசம் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் அதற்கு பழகியிராத கூட்டத்திடம், ஆங்கிலேயன் காவல் பொறுப்பை எப்படி நம்பிக் கொடுப்பான்? மக்களைத் திரட்டி மீண்டும் போர் செய்யவே அது வழிவகுக்கும் அல்லவா?

ஜனநாயகத்தில் பிறப்பின் அடிப்படையில் தொழில் என்பது நியாயமற்ற ஒன்று. எனவே பிறப்பல்ல, கல்வியே தொழில் செய்ய அடிப்படைத்தகுதி என்று ஆனது. எனவே ஆங்கிலேயர், பிறப்பின் அடிப்படையில் இருந்த காவல்படை அமைப்பை கலைத்தார்கள். தேவர் சாதியின் ஒட்டுமொத்த பிழைப்பு, ஒரே நாளில் பறிபோனது. ஜனநாயகத்தை நிலைநாட்டிய மாதிரியும் ஆச்சு, தன்னை எதிர்த்துப் போரிட்ட சாதியிடம் இருந்து அதிகாரத்தைப் பிடிங்கியதாகவும் ஆயிற்று என்று ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தான் ஆங்கிலேயன். அந்த முடிவு இந்தியாவை ஜனநாயகப் பாதைக்குக் கொண்டு சென்ற அதே நேரத்தில், தேவர்சாதியை தொழில் அற்ற கூட்டமாக ஆக்கியது. விருப்பப்பட்டால், புதிய தேர்வுமுறையின்கீழ்,  போலீஸ் வேலையிலோ ராணுவ வேலையிலோ சேரலாம் எனும் வாய்ப்பும் தேவர்சாதிக்கு கொடுக்கப்பட்டது.

ஆனால் தேவர்சாதி இதைப் பெரும் அவமானமாகவே எடுத்துக்கொண்டது. பிற சாதிகள் எல்லாம் தத்தமது தொழில்களை செவ்வனே செய்துவர, அவர்களுக்கும் சேர்த்தே போரிட்ட நம்மை எல்லாரும் கைவிட்டார்கள் என்று தேவர்சாதி மனதிற்குள் புழுங்கி அழுதது. எந்த மக்கள்முன் தலைவராகவும், தளபதியாகவும் வலம்வந்தார்களோ, அதே மக்கள்முன் ஏதாவது வேலை கேட்டு நிற்கும் அவலமும் வந்தது. பெரும்பாலும் விவசாயக்கூலிகளாக ஆனார்கள். போர்ப்படையாக வேலை பார்த்து, தேசத்திற்காக இழந்த உயிர்கள் எத்தனை, ஊனமான ஜனங்கள் எத்தனை? அத்தனைக்கும் பிரதிபலன் இதுதானா என்று மனம் குமைந்து தேவர்சாதி பெற்ற அவமானமும், ஏமாற்றமும் தான், இன்றுவர நீடிக்கும் தேவர்சாதியின் மூர்க்கத்தனத்திற்கு அடிப்படை.  ’மானம் தாண்டா முக்கியம்...ஆண்ட பரம்பரைடா..நம்பி வந்தா உயிரைக் கொடுப்போம்டாஎனும் இன்றைய ஆங்கார கூக்குரல்களின் மூலம், அந்த வேதனையான வரலாறு தான்.

இரண்டாவது சுதந்திரப்போரின்போது, மீண்டும் நேதாஜியின் கீழ் முத்துராமலிங்கத்தேவரின் தலைமையில் அணி திரண்டார்கள். அதிலும் நேதாஜி அணிக்கு தோல்வியே மிஞ்சியது. ஆங்கிலேயன் குற்றப்பரம்பரை என்று முத்திரை குத்தினான். இந்தியா ஜனநாயகத்திற்குள் வந்தபோது எல்லா சாதிகளுமே, தங்கள் தொழிலின்மீதான பிடிப்பை இழந்தார்கள். ஆனால் தேவர்சாதியினர் தொழிலுடன்,அதிகாரத்தையும் மரியாதையையும் இழந்தார்கள். மானுடத்தை முன்னேற்ற, இந்த மாற்றம் தவிர்க்க முடியாதது எனும் கசப்பான உண்மையை அப்போது அவர்களுக்கு எடுத்துச் சொல்ல ஆளில்லை.

தேவர்சாதியில் சிலர் காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து, கல்வி மூலம் ஜனநாயகத்தில் ஐக்கியம் ஆனார்கள். ஆனால் பெரும்கூட்டம் 200 வருடங்களுக்கு முந்தைய நிலப் பிரபுத்துவ மனநிலையிலேயே உறைந்து நின்றுவிட்டது. நவீன ஜனநாயக மனநிலைக்கும் நிலப்பிரபுத்துவ மனநிலைக்குமான போராட்டமே தேவர் மகன் திரைப்படம்.

படத்தைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம். அதற்கு முன் அன்றைய தொழில் இழந்த தேவர் சாதி பற்றிய பாரதியின் வரிகள்.....


மறவன் பாட்டு

மண்வெட்டிக் கூலிதின லாச்சே! எங்கள்
வாள்வலியும் வேல்வலியும் போச்சே!
விண்முட்டிச் சென்றபுகழ் போச்சே! இந்த
மேதினியில் கெட்டபெய ராச்சே!

நாணிலகு வில்லினொடு தூணி நல்ல
நாதமிகு சங்கொலியும் பேணி,
பூணிலகு திண்கதையும் கொண்டு, நாங்கள் 
போர்செய்த காலமெல்லாம் பண்டு.

கன்னங் கரியவிருள் நேரம் அதில்
காற்றும் பெருமழையும் சேரும்;
சின்னக் கரியதுணி யாலே எங்கள்
தேகமெல்லாம் மூடிநரி போலே,

ஏழை யெளியவர்கள் வீட்டில் இந்த
ஈன வயிறுபடும் பாட்டில் 
கோழை யெலிக ளென்னவே பொருள் 
கொண்டு வந்து ... ... ...

சோரந்தொழிலாக் கொள்வோமோ? முந்தைச் 
சூரர் பெயரை அழிப்போமோ
வீர மறவர் நாமன்றோ?இந்த 
வீண் வாழ்க்கை வாழ்வதினி நன்றோ?
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.