Saturday, November 11, 2017

வாழ்க்கையில் சலிப்பு : கள்ளக்காதல் தான் தீர்வா, பிட்டுப் பட டைரக்டர்ஸ்?

காதலும் காதலிக்கின்ற காலங்களும் ஏன் பசுமையானவையாக, இனிமையானவையாக கொண்டாடப்படுகின்றன என்றால், அப்போது நமக்கு பொறுப்பு என்று ஏதும் இல்லை. மூன்று வேலையும் சோறு போடவும் தங்குவதற்கு இடம் கொடுக்கவும் பெற்றோர் இருக்கிறார்கள். எனவே ஹார்மோன்களின் பிரச்சினையை மட்டும் நாம் பார்த்துக்கொண்டால் போதும்.

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்ற வாழ்த்துடன் திருமண வாழ்க்கையை ஏகப்பட்ட கனவுகளுடன் ஆரம்பிக்கிறோம். அந்த பதினாறில் ‘ மளிகைக்கடன் பாக்கி, வீட்டுவாடகை, கூடிக்கொண்டே போகும் வேலைப்பளு, சொந்தக்காரர்களின் பாலிடிக்ஸ், ஆபீஸ் பாலிடிக்ஸ், ஆஸ்பத்திரி செலவுகள், ஸ்கூல் பீஸ்’ போன்றவை அடக்கம் என்று கொஞ்ச காலத்திலேயே புரிந்துவிடும்.

இந்திய நிறுவனங்கள் தனது ஊழியர்களை நடத்தும் விதத்தை மனித உரிமை மீறலில் தாராளமாகச் சேர்க்கலாம். வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் பலரும் இந்தியாவில் மீண்டும் வேலை செய்ய விரும்புவதே இல்லை. இந்தியாவில் எட்டுமணி நேர வேலை என்பதே கிடையாது. காலையில் எட்டு மணிக்கு உள்ளே போய், இரவு எட்டு மணிக்குக் கிளம்பும்போது, என் பாஸ் ‘என்னப்பா...அதுக்குள்ள கிளம்பிட்டே?’என்று கேட்ட கொடுமையெல்லாம் உண்டு. அதிக நேரம் சக்கையாகப் பிழிந்து வேலை வாங்குவது, ஆபீஸ் பாலிடிக்ஸ், ஜாதி பாலிடிக்ஸ், அதிக நேரம் வேலை செய்பவனுக்கே ஊதிய உயர்வு/புரமோசன் என்பது தான் இஞ்சினியர், மீடியா ரிப்போர்ட்டர், லேத் ஆபரேட்டர் என எல்லாவகைப்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை முறை.

கூடிக்கொண்டே போகும் வீட்டுவாடகை & மருத்துவச் செலவுகள், வீட்டு ஓனரின் இம்சைகள், சொந்தக்காரர்களின் அக்கறையான பாலிடிக்ஸ் என பெர்சனல் வாழ்க்கையும் ஆஹா, ஓஹோ தான்.

காலையில் அடித்துப்பிடித்துக் கிளம்பி, பஸ்ஸிலோ ட்ரெய்னிலோ கூட்டத்தில் சிக்கிக் கசங்கி, ஆபீஸிலும் நொந்து நூழாகி, திரும்ப கூட்டத்தில் சாறு பிழியப்பட்டு, வீட்டு வேலைகளையும் பிள்ளைகளின் ஹோம் ஒர்க்கையும் முடித்துவிட்டுச் சாய்ந்தால், புராண மன்மதனும் தூங்கிவிடுவான். பெரும்பாலும் செக்ஸ் என்பதே வார இறுதிக் கொண்டாட்டம்/வேலைகளின் ஒன்றாக ஆகிவிடும். அதையும் பிள்ளைகள் தூங்காது கெடுக்கும் என்று கருட புராணம் சொல்கிறது.

ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கை என்பதே இத்தனை சிக்கல்களுக்கு இடையிலும் தப்பி வாழ்வது தான். ’நித்தம் நீ மூன்று முறை கட்டிலில் சேர்ந்துவிடு’ என்று சொல்லும் சினிமாப் பாடல்கள் கேட்டு வாழ்க்கையை உயர்குடி படைப்பாளிகள் புரிந்துகொள்ளகூடாது.

இவ்வளவு சிக்கல்களுக்கு இடையில் வாழும்போது, சலிப்பு என்பது தவிர்க்க முடியாதது. ‘இது என்ன வாழ்க்கை...ஏன் வீட்டுக்காரர் ஆபீஸையே கட்டிக்கொண்டு அழுகிறார்..ஏன் மனைவிக்கு செக்ஸில் ஆர்வமே இல்லை..ஒரு நல்லது, பொல்லதுக்குப் போக முடிகிறதா...வீட்டுஓனர் திட்டிவிட்டுப் போகிறார்’ என்று பிரசினையிலேயே உழலும்போது, மனது சந்தோசத்தைத் தேடும். சந்தோசமாக இருப்பதும், இருக்க விரும்புவதும் தான் மனிதனின் வாழ்க்கை நோக்கமே. யாராவது ஆணோ/பெண்ணோ, சிரித்து ஆறுதலாகப் பேசினால், வெகுசிலருக்கு...........கவனிக்க, எல்லா ஆண்களுக்கும் பெண்களுக்கும் அல்ல, வெகுசிலருக்கு அந்த தோளில் சாய்ந்துகொள்ள ஆசை வரும்.

ஆனால் ‘உயர்குடி’ சினிமாக்காரர்கள் நினைப்பது போல், கள்ளக்காதல் என்பது அத்தனை எளிதானது அல்ல. ஹாலிவுட் திருட்டு டிவிடிக்களைப் பார்த்து வளரும் முதிராப் படைப்பாளிகள் நினைப்பது, எங்காவது யாருக்கும் தெரியாமல் ஒருநாள் குஜாலாக இருந்துவிட்டுப் போவது ஈஸி என்று.

அமெரிக்காவில் முன்பின் தெரியாத ஒரு பெண் ‘ஹாய்’ என்று சொன்னால், பதிலுக்கு ஆணும் ‘ஹாய்’ என்று சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இருப்பான். இங்கே ஒரு பெண் அப்படிச் செய்தால், ‘மச்சி...ஒரு ஆண்ட்டி என்னைப் பார்த்து லுக் விட்டுச்சு மச்சி. ஹாய்கூடச் சொல்லுச்சு’ என்று முதலில் ஒரு நண்பர்கள் மாநாடு நடக்கும். அடுத்த நாள் அந்த பெண்மணியின் பின்னாலேயே வந்து, வீட்டு அட்ரஸ், ஆபீஸ் அட்ரஸ் என முழு விபரங்களும் சேகரிக்கப்படும். ஏனென்றால், முப்பதைத் தாண்டிய ஆண்களும்கூட பாலியல் வறட்சியால் வாடும் சமூகம் இது. ’எங்க வீட்டுக் கொடியில் இடமில்லை. அதனால இன்னைக்கு ம்ட்டும் உங்க வீட்டுக்கொடியில் துணி காயப்போட்டுக்கறேன்’ என்பது போல் எல்லாம் இங்கே ஒரு பெண்ணால்‘ஒன் நைட் ஸ்டேண்ட்’ எடுத்துவிட முடியாது.

கள்ளக்காதல் என்பது முதிரா முற்போக்குவாதிகள் நினைப்பது போல், அத்தனை எளிதான, கிளுகிளுப்பான விஷயம் இல்லை. எனது நட்பு/சொந்த வட்டங்களில் இருந்து இரு சிறு உதாரணங்களைப் பார்ப்போம்.

எனக்குத் தெரிந்த ஒரு பையனுக்கு தந்தை-தாய் இருவரும் ஆசிரியர்கள். ஒரு திருமணமான பெண்மணியுடன் பையன் முதலில் சகஜமாகப் பேசத் தொடங்கினான். கூட இருந்த பையன்கள் எல்லாம் ஏற்றிவிட, கள்ளக்காதல் மலர்ந்தது. சில காலம் கழித்து, அதில் இருந்து வெளியேறலாம் என்று நினைக்கும்போது தான் சிக்கல் வந்தது. அந்த பெண்மணி பையனின் வீட்டுக்கே வந்து பெரிய ரகளை. எங்காவது பையனுக்குப் பெண் பார்த்தால், அந்த ஊருக்கே போய் அட்டகாசம் செய்துவிடுவார் அந்தப் பெண்மணி. அவருக்கு கணவன், குழந்தைகள் உண்டு. கணவனிடமும் பேசிப்பார்த்தாகிவிட்டது, பல பஞ்சாயத்துகளும் செய்தாகிவிட்டது. இன்னும் புதைகுழியில் இருந்து பையன் மீளவில்லை. ’சொல்வதெல்லாம் உண்மை’வரை பிரச்சினை போய்விட்டது.

நல்ல மனைவி, இரு வயது வந்த பெண் குழந்தைகளுடன் வாழ்ந்துவந்த ஒருவருக்கும் வாழ்க்கையில் சலிப்பு. அப்படியென்றால் கள்ளக்காதல் தான் தீர்வென்று பல பெரியவர்(!)களின் சினிமாக்களும் கதைகளும் சொல்கின்றனவே. எனவே ஒரு இடத்தில் ஐக்கியம் ஆனார். அது இன்னொரு புதைகுழி. ’இரு பெண் குழந்தைகளின் வாழ்க்கை கெடாமல் இருக்க வேண்டுமென்றால், குடும்பத்தை விட்டுவிட்டு, கள்ளக்காதலியுடன் போவதே ஒரே வழி’ எனும் நிலைமைக்கு ஆளானார். அவர் குடும்பமும் ‘தயவு செய்து இங்கே வராதீரும்’ என்று அவரைக் கெஞ்சி, கள்ளக்காதலியிடமே அனுப்பி வைத்தார்கள்.

இதே நிலை தான் ஒரு பெண், கள்ளக்காதலில் சிக்கும்போதும். ’நினைத்தால் டிவியை ஆன் செய்து படம் பார்த்துவிட்டு, ஆஃப் செய்வது போல் ஒரு பெண்ணை/ஆணை தொட்டு விலகிவிடலாம்’ என்று முதிரா முற்போக்குவாதிகள் நினைக்கிறார்கள். வாழ்க்கை அவ்வளவு எளிதானதல்ல. இங்கே இலவசம் என்று எதுவும் கிடையாது. ஏதோவொரு வகையில் அதற்குரிய விலையைக் கொடுத்தே தீர வேண்டும்.

ஒரு படைப்பாளி சமூகத்திற்கு நல்லது சொல்லாவிட்டாலும், கெட்டது சொல்லாமல் இருக்க வேண்டும். திருமண வாழ்வில் சலிப்பென்பது படைப்பாளிக்கும் வரும், படைப்பாளியின் அப்பா-அம்மாவிற்கும் வந்திருக்கும். அதற்காக ‘அப்பா...நீ அடுத்த வீட்டு ஆண்ட்டியை கரெக்ட் பண்ணு..அம்மா, உன்னை பால்காரன் ரொம்பநாளா லுக் விடறான். நீ அவன்கூட ஒருநாள் போய்ட்டு வா. உங்க பிரச்சினை எல்லாம் தீர்ந்திடும்.’ என்று இந்த முற்போக்கு படைப்பாளிகள் தீர்வு சொல்ல மாட்டார்கள் என்று நம்புகிறேன். தன் குழந்தைகளுக்கும், குடும்பத்திற்கும் சொல்ல முடியாத தீர்வை, சமூகத்திற்குச் சொல்லலாமா?

வாழ்க்கையில் அனுபவமின்மையும், ‘முற்போக்குவாதி’ என்று பெயரெடுக்கும் ஆசையும் தான் அரைவேக்காட்டு படங்களுக்குக் காரணம். இயக்குநர் கே.பாலச்சந்தர் இந்த முதிரா முற்போக்குவாதிகளின் பிதாமகன். இன்றைக்கு பாலச்சந்தரின் ‘கள்ளக்காதல்’ படங்களுக்கு எந்த மதிப்புமில்லை என்பது இளைய தலைமுறை படைப்பாளிகள் நினைவில் வைக்க வேண்டும்.

சில காலம் முன்பு நண்பர் ஒருவர் ‘ஒரு ஷார்ட் ஃபிலிம் எடுக்கப்போகிறேன். கதை ஓகேவான்னு சொல்லுங்க’ என்று ஒரு கதை சொன்னார். ஒரு பாலியல் தொழிலாளி-மாதவிடாய்-ஒரு கஸ்டமர் என்பது தான் கதைக்களம். திருமணமாகாத ஆண்களுக்கு மாதவிடாய் என்பது ‘ஹே..ஹே...மூணுநாள் லீவு’ என்று தமிழ் சினிமா சொல்லிக்கொடுத்தது தான் தெரியும். அதில் உள்ள சிரமங்களைப் பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாது. எனவே நண்பரிடம் ‘உங்களுக்கு கல்யாணம் ஆகும்வரை, இந்தக்கதையை எடுக்காதே.’ என்று சொன்னேன். இல்லையென்றால் ‘சரஸ்வதி’ என்று ஒரு காவியம் இந்நேரம் படைக்கப்பட்டிருக்கும்.

பாலியல் தொழிலாளி, முறைகெட்ட உறவு எல்லாம் எளிதாக முற்போக்கு படைப்பாளி ஆக உதவும் விஷயங்கள். அதை எதிர்த்து யாரும் கருத்து சொன்னால் ‘ஆணாதிக்க வாதி..பிற்போக்குவாதி’ என்று முத்திரை குத்திவிடலாம். இருப்பினும், தெரியாத விஷயத்தைப் பற்றி கருத்து சொல்லக் கிளம்புவது முட்டாள்தனம் மட்டுமல்ல, சமூகத்திற்குக் கேடும்கூட.


சரி, வாழ்க்கையில் சலிப்பு தட்டும்போது என்ன செய்வது?

மறந்துவிட்ட கனவுகளையும், இழந்துவிட்ட சந்தோசத்தையும் (குடும்பத்திலேயே) மீட்டு எடுப்பது தான். பொருளாதாரம் அனுமதிக்கும் அளவில், ஒரு டூர் போய் வரலாம். குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு, இருவரும் லீவ் போடலாம். சொந்த மண்ணிற்குப் போய், ஒரு காலத்தில் எப்படி இருந்தோம் என்று நினைவுகளை புதிப்பிக்கலாம். இலக்கியத்திலும், நல்ல(!) சினிமாக்களிலும் கவனம் செலுத்தலாம். திருமண ஆல்பத்தை புரட்டிப்பார்க்கலாம். எங்கே ஆரம்பித்து, எங்கே சிக்கிக்கொண்டிருக்கிறோம் என்று அப்போது பேசிக்கொள்ளலாம். பணத் தேவை எப்படி எல்லா நுண்ணுணர்வுகளையும் அழிக்கிறது என்று கலந்துபேசி, விழிப்புணர்வு பெறலாம். பண்டிகைகளிலும், நண்பர்கள்/சொந்தங்களின் நல்லதுகளில் கலந்துகொள்ளலாம்.

ஒரு படைப்பாளி இந்த விஷயத்தை பொறுப்புடன் எப்படி அணுகுவது என்று தெரிந்துகொள்ள, சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போல் படம் மிகச்சிறந்த உதாரணம்.

மோகன்லாலும், மீனாவும் திருமண வாழ்வின் சலிப்புக் காலகட்டத்தில் இருக்கும் தம்பதிகள். கணவன் சந்தோசத்தைத் தேடி, இன்னொரு பெண்ணைத் தேடுகிறான். மனைவிக்கு மூன்று ஆண்களிடமிருந்து அழைப்பு வருகிறது.

முறைகெட்ட உறவு எத்தனை சிக்கலானது, அதில் இறங்கினால் என்ன ஆகும் என்று மெல்லிய நகைச்சுவையுடன் படத்தின் முதல்பாதி பேசுகிறது. இரண்டாம்பாதியில் கணவன் - மனைவி இருவரும் இணைந்து, இழந்துவிட்ட மகிழ்ச்சியை மீட்டு எடுக்கிறார்கள். மீண்டும் தங்கள் திருமண வாழ்வின் துவக்க கால சந்தோசத்தையும் காதலையும் க்ண்டெடுக்கிறார்கள்.

படம் பார்த்து நெகிழ்ந்து போனேன். அந்த படைப்பாளி, இந்த சமூகத்தின் மேல் கொண்டுள்ள அக்கறையும் கருணையும் என்னை நெகிழ வைத்தது. ஆண் என்றாலும் பெண் என்றாலும் வாழ்வதற்கான முறை என்பது ஒன்று தான் என்பதை புரட்சி மோடுக்குப் போகாமலேயே, சிரிக்கச் சிரிக்கச் சொன்ன படம் அது.

திருமணமான அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்று ஏற்கனவே இங்கே பரிந்துரை செய்திருந்தேன். மீண்டும் சில புத்திசாலிகளுக்கு, அந்த படத்தைப் பரிந்துரைக்கிறேன்.

திருமண வாழ்வில் சலிப்பு என்பது தவிர்க்க முடியாதது. அதில் இருந்து மீள கள்ளக்காதலே வழி என்று சொல்லும் படைப்பாளிகள், இந்த படத்தை 100 முறை பார்க்க ஆணையிடுகிறேன். அவ்வளவு நேரம் செலவிட முடியாது என்றால், அந்த படத்து இயக்குநரின் வீட்டு கோமியத்தை வாங்கிக் குடிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

அமிதாப் மாமாவுக்கு கோபம் வந்துவிட்டதால், பதிவு நிறைவு பெறுகிறது!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.