Sunday, April 6, 2014

ஒரு பிள்ளை பெற்றால் போதுமா?

தாத்தா பாட்டி காலத்தில் வீட்டுக்கு 12 பிள்ளைகள் என்பதுகூட சகஜமான விஷயமாக இருந்தது. சென்ற தலைமுறையில் நான்கு முதல் இரண்டு குழந்தைகளாக குறைந்துவிட்டது. இப்போது இரண்டு என்பதே அதிகம் எனும் எண்ணம் பலருக்கும் வந்துவிட்டது. ஒரு குழந்தையுடன் நிறுத்திக்கொள்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள். இன்றைய பொருளாதாரச் சூழலில் ஒன்றை வளர்ப்பதே பெரிய விஷயம் என்று பலரும் நினைக்கிறார்கள். எனது நண்பர்களிடம் நான் எப்போதும் ஒற்றைப் பிள்ளையுடன் நிறுத்தாதீர்கள் என்றே சொல்லி வந்திருக்கிறேன். 

நான் ஒற்றைப்பிள்ளையாக, தனியாக வளர்ந்ததை நண்பர்கள் அறிவீர்கள். அதனால் இண்ட்ரோவெர்ட்டாக ஆனதும், புதுநபர்களுடன் பேசவேண்டும் என்றால் கூச்சத்தால் திருவுதிருவென விழிப்பதையும் நெருங்கிய நண்பர்கள் நன்றாகவே அறிவார்கள். அந்த ஸ்டார்ட்டிங் ட்ரபுளை என்ன செய்தும், இன்னும் மாற்ற முடியவில்லை. ஆனால் அதையும் தாண்டி, வேறு சில அனுபவங்களே ஒரு பிள்ளை போதாது எனும் முடிவுக்கு என்னைக் கொண்டு சென்றன.
நான் ஸ்கூலில் படிக்கும்போதே எனது (வளர்ப்பு)அப்பாவிற்கு 60 வயது தாண்டிவிட்டது. பொதுவாகவே எப்போதெல்லாம் எனக்கு காலாண்டு,அரையாண்டு, முழுப்பரிட்சை நடக்கிறதோ, அப்போதெல்லாம் அவருக்கு உடம்புக்கு முடியாமல் போய்விடும். அது எதனால் என்று எங்களுக்குப் புரிவதே இல்லை. ‘பிள்ளையை படிக்க விடுதாரா இந்த மனுசன்?’என்ற அம்மாவின் புலம்பலுடனே ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆவார். கிராமத்தில் கடை வைத்திருந்தோம். அதை நாலைந்து நாள் பூட்டினால் சோத்துக்கு சிங்கி அடிப்பதோடு, கஸ்டமர்களையும் இழக்க வேண்டிவரும்.

எனவே அம்மா கடையில் தான் இருக்க வேண்டி வரும். நான் பரிட்சைக்குப் போயே ஆக வேண்டும். கடைக்கு டவுனில் இருந்து சரக்கும் வாங்கி வரவேண்டும். அப்போது கிராமத்துக்கு பஸ் வசதியும் கிடையாது. எனவே காலையில் கிளம்பி, பலசரக்கு-மிட்டாய்-காய்கறிக் கடைகளில் சரக்கு லிஸ்ட்டையும் காசையும் கொடுத்துவிட்டு, ஆஸ்பத்திரி போய் அப்பாவைப் பார்த்து சாப்பாடு கொடுத்துவிட்டு, பள்ளிக்குப் போய் பரிட்சை எழுதுவேன். அப்பாவும் வேறு வழியின்றி தனியே மேனேஜ் பண்ணுவார். தெரிந்த டாக்டர் என்பதால், நர்ஸ்களும் பார்த்துக்கொள்வார்கள். கணக்குப் பரிட்சை எழுதும்போதே கறிவேப்பிலைக்கு காசு கொடுத்தோமா, அப்பாவுக்கு பக்கத்து ரூம் ஆட்கள் டீ வாங்கிக் கொடுத்திருப்பார்களா என்ற சிந்தனை ஓடும். 

இதில் கொடுமை என்னவென்றால், அந்த ஆஸ்பத்திரி தெருவிற்கு அடுத்த தெருவில் தான் நான் பிறந்த வீட்டார் இருந்தார்கள். பெற்றவரோ, அண்ணனோ, அக்காக்களோ எட்டிக்கூடப் பார்க்க மாட்டார்கள். (என் அப்பா, என்னைப் பெற்றவருக்கு சித்தப்பா தான்!) பரிட்சை முடிந்ததும், மார்க்கெட்டுக்குப் போய் சரக்கு வாங்கி, சைக்கிளில் வைத்துக்கொண்டு கிராமத்துக்குப் போவேன். வீட்டுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு, அப்பாவுக்கு சாப்பாடும் அடுத்த பரிட்சைக்கான புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓட வேண்டும். மாலை வரை இருந்துவிட்டு, இரவு வீடு வருவேன். முன்பின் அறியாத பக்கத்து ரூம் ஆட்களிடமும் இரவில் அப்பாவையும் பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு வருவேன்.
அந்த நேரங்களில் தனியே ஓடுவது மிகவும் கஷ்டமாக இருக்கும். இன்னொரு பிள்ளையையும் தத்தெடுத்திருக்கலாமே என்று நினைத்துக்கொள்வேன். சுமையை கொஞ்ச நேரம் கைமாற்றக்கூட ஆள் இருக்காது. நான் காலேஜ் படிக்க மதுரை ஹாஸ்டலில் தங்க வேண்டி வந்தபோது தான், ரொம்பக் கவலையாக இருந்தது. இனியும் தொந்தரவு தர வேண்டாம் என்பதாலோ என்னவோ, அப்பா நான் மூன்றாம் ஆண்டு படிக்கும்போதே காலமானார். ஒருவேளை இன்னொரு தம்பி இருந்திருந்தால், இன்னும் கொஞ்சகாலம் ஆஸ்பத்திரிக்கும் வீட்டிற்கும் அவர் அலைந்தே வாழ்ந்திருக்கலாம். 

கெட்டதற்கு மட்டுமல்ல, நல்லதற்கும் இன்னொரு ஆள் தேவை என்று பின்னாளில் காலம் புரிய வைத்தது. கல்யாணம் என்றால் ஆயிரத்தெட்டு சடங்கு, சாத்திரங்களை வைத்திருக்கிறார்கள், நம் மக்கள். பத்திரிக்கை கொடுப்பதில் ஆரம்பித்து திருமணத்திற்கு முந்தைய நாள் ஊர் அழைப்பு, மூன்றாவது முடிச்சை சகோதரி போடுவது, தாய் மாமன் முக்கியத்துவம் என்று பல சாத்திரங்கள். ‘கல்யாணம் கட்டிப்பார்’ என்ற பழமொழிக்கு என்ன அர்த்தம் என்பதை சொந்த, பந்தங்கள் தங்களது வீம்பு, வெட்டி பந்தா மூலம் நன்றாகவே புரிய வைப்பார்கள். தூரத்து சொந்தமாக இருந்தாலும் மாப்பிள்ளையோ, மாப்பிள்ளையின் உடன்பிறப்போ அல்லது அப்பாவொ தான் நேரில் வந்து அழைக்க வேண்டும். இல்லையென்றால் ‘என்னை மதிக்கலை’ என்று பெரிய ரகளை நடக்கும். எனவே ஒவ்வொரு வீட்டிற்கும் நானே போக வேண்டிய நிலை.

மண்டபம் புக் பண்ணுவதில் ஆரம்பித்து சமையலுக்கு சாமான் வாங்குவதுவரை வேலைகள் இன்னொரு பக்கம் குவிந்து கிடக்கும். இதற்கெல்லாம் பங்காளிகளைத் தான் நாட வேண்டும். எனக்கு நான்கு பங்காளிகள் குடும்பம் உண்டு. மூத்தவருக்கு மட்டும் மூன்று ஆண்பிள்ளைகள். மற்றவர்களுக்கு ஒரு பிள்ளை தான். அதனால் மூத்தவர் காட்டும் பந்தா இருக்கிறதே..அப்பப்பா. 

மீதி மூன்று குடும்பங்களும் அருகில் இருக்கும் டவுனுக்குப் போவதென்றால்கூட மூத்தாரிடம் சொல்லிவிட்டுத் தான் செல்ல வேண்டும். இல்லையென்றால், பேச்சு வார்த்தையே நின்றுவிடும். பிறகு கெஞ்சி கூத்தாடி சமாதானப்படுத்துவார்கள். அதே சமயத்தில் திடீரென மூத்தார் குடும்பம் எங்கேயோ கிளம்பிப் போய்விடும். மறுநாள் வந்தவுடன் கேட்டால், ‘அதுவா..திருச்செந்தூர் போய்ட்டு வந்தோம்’ என்பார்கள் கேஷுவலாக. நீ சொல்லாமப் போறியேன்னு கேட்க முடியாது. ஏனென்றால் நல்லது, பொல்லதுக்கு அலைய மூன்று ஆண்பிள்ளைகள் அங்கே உண்டு! கூடப்பிறந்த அவர்களுக்கே அப்படி என்றால், பங்காளியான, ஒற்றை ஆளாக நிற்கும் என் நிலைமையை நீங்களே யோசித்துக்கொள்ளலாம்.

கல்யாணம் முடியும் முன் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பட்டேன். கல்யாணத்துக்கு முதல்நாள், தங்கமணி ஊரில் ரிசப்சன் வைத்திருந்தார்கள். அதற்குக்கூட நான் போகவில்லை. நான் இல்லையென்றால், ஒருவேலையும் நடக்காது என்று தெரியும். ரிசப்சனுக்கு வரவில்லையே என தங்கமணிக்கு சென்ற வருடம்வரை என்மேல் கோபம் உண்டு. சென்ற வருடம், பையனுக்கு மொட்டை போட்டு, காது குத்தும் பங்சனில் தான் அவர் பங்காளிகளின் அருமை, பெருமையை நன்றாக உணர்ந்தார். 

அப்போது என் குடும்பம் மூன்று பேராக ஆகியிருந்ததால், நானே பஸ் புக் செய்து, சமையலுக்கு ஆள் பிடித்து, திருச்செந்தூரில் மண்டபமும் புக் செய்தேன். பங்காளிகளை சும்மா வந்தால் போதும் என்று அழைப்பு மட்டுமே கொடுத்தேன். என்ன செய்தார்கள் தெரியுமா? ‘அதெப்படி எங்களைக் கேட்காம எல்லா வேலையையும் அவனே செய்யலாம்?’ என சண்டை போட்டுவிட்டு ஒருத்தரும் வரவில்லை. பையன் வந்த தைரியத்தில் நான் பெரிதாக அலட்டிக்கொள்ளவும் இல்லை.

இப்படி எல்லா வகையிலும் தனியே அவஸ்தைப் பட்டுவிட்டதால், இன்னொரு குழந்தையும் அவசியம் தேவை என்றே முடிவு செய்திருந்தேன். அது ஆணோ, பெண்ணோ எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. மூத்தவனை தனியே விட்டுவிடக்கூடாது..நாம் பட்ட கஷ்டத்தை அவன் பட்டுவிடக்கூடாது. குறைந்த பட்சம் அவர்களுக்கு திருமணம் ஆகும்வரையாவது ஒருவருக்கொருவர் துணையாக இருப்பார்கள் என்று நினைத்தோம். ஆண்டவன் அருளால் சென்ற வாரம் இரண்டாவதும் ஆண் குழந்தையாக பிறந்தது. இனிமே நானோ, மூத்தவன் பாலாவோ தனி ஆள் இல்லை என்பதே சந்தோசமாக இருக்கிறது. 
இன்னும்கூட இரண்டு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசையாகவே இருக்கிறது. ஆனால் பிரசவத்தின் மீது எனக்கு இருக்கும் பயத்தினாலும், ஒரு வருடத்திற்கு தங்கமணி படும் அவஸ்தையாலும் போதும் என்று முடிவு செய்துவிட்டேன். இரண்டாவது குழந்தை பிறந்த செய்தியறிந்து ஃபேஸ்புக்கிலும், மெயிலிலும், போனிலும் வாழ்த்துச் சொன்ன நண்பர்களுக்கு நன்றி. 

முந்தைய டெலிவரிப் பதிவு(!) : பிரசவ நேரத்தில் கணவன் தேவையா? 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

24 comments:

  1. ஹூம்....................என்ன செய்ய?துணைக்கு ஒருவர்(பெண்ணோ/ஆணோ) கண்டிப்பாக வேண்டும்.பெரியவர்கள் என்னமோ ஆஸ்திக்கு....... கத்தரிக்காய்க்கு ன்னு என்னமோ சொல்லுவாங்க.அதெல்லாம் கவைக்குதவாது.///கஷ்டமாக இருந்தது..............ம்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் செங்கோவி...

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் சார் அன்புடன் இரா செல்லையா

    ReplyDelete
  4. வாழ்த்துகள் செங்கோவி.. எப்போதும் இன்று போலவே சந்தோஷத்துடன் இருக்கவும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்.இரண்டு தடி பசங்க கூட உங்க மனைவி இனிமேல் பொழுது போக்க நல்ல தெம்பை கடவுள் தருவார்.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் செங்கோவி...

    God Bless...

    ReplyDelete
  7. நல்ல பதிவு! அடுத்து,
    அடுத்தடுத்து ரெண்டு வருசங்களில் ரெண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்வது நலமா? இல்லன்னா மூணு வருஷம் கேப் விட்டு பெற்று கொள்வது நலமா? அவர்களுக்கு இடையில் நட்பும் புரிந்துணர்வும் இந்த ரெண்டு சிச்சுவேஷன்லயும் எப்புடி இருக்கும்ன்னு ஒரு கட்டுரை அவசியம்! :-)

    ReplyDelete
  8. வாழ்த்துகள் செங்கோவி....

    ReplyDelete
  9. Nalla padhivu.. Single child aaga naan ninaitha pala visayangalai solli irukireergal!.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete
  11. வாழ்த்துகள் அண்ணே,எனக்கும் கிட்டத்தட்ட இதே நிலை இருக்கு,மனைவி வீட்டுக்கு ஒரே பெண், நான் வீட்டில் ரெண்டு அக்காக்களுக்கு தம்பி.,ஆனா நல்ல அனுபவமா இருக்கு,. நல்ல பதிவு ன்னு சொன்னா template ஆ இருக்கும்,எல்லாதுக்கும் மேலண்ணே இந்த பதிவு ,வாழ்த்துகள்

    ReplyDelete
  12. அட..வாழ்த்துக்கள் செங்கி...:-)

    ReplyDelete
  13. உறவுகள் இருந்தும் ஒற்றை ஆளாய் கஷ்டப்பட்டிருக்கீறீர்கள்! வலி உணர முடிகிறது! இரண்டாவது குழந்தை பிறந்த செய்தி மகிழ்ச்சி தருகிறது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. ரெண்டு புள்ளைக்கு அப்பா ஆகிட்டிங்க.இனிமேலாவது பெரிய மனுஷனாட்டம் இருங்க .
    மொதல்ல குஷ்பு ,நமீ,பத்மினி,மீனா, சினேஹா, இப்ப லேட்டஸ்டா வாணி கபூர் எல்லாத்தையும் தண்ணி தெளிச்சி தல முழிங்கிட்டு
    ஹன்சி மன்ற தலைவர் பதவிய ராஜினாமா பண்ணிட்டு பா.சி மாதிரி இளைஞர்களுக்கு வழி விடுங்க .
    இல்லேனா , பெரியவன் ஹன்சி மேல காபி (கழுவி ) ஊத்துன மாதிரி சின்னவன் ஆசிட் அடிப்பான் . ஜாக்கிரதை .

    ReplyDelete
  15. வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி.

    வானரம், நான் கலைஞர் மாதிரி. மன்றத்தை வளர்த்து பிள்ளைங்க கைல ஒப்படைப்பேன்..!

    ReplyDelete
  16. உறவுகள் பல பாலபாடம் படிப்பிப்பார்கள் .இரண்டாவது மகன் பிறந்த செய்தி தமிழ்வாசி முன்ன்ரே பகிர்ந்து இருந்தார் முகநூலில் . வாழ்த்துக்கள் செங்கோவிக்கு!

    ReplyDelete
  17. இனி ஹான்சிஹா பாட்டியின் ரசிகர் மன்றத்தை கலைத்துவிட்டு மூத்தவர் வரிசையில் ஐக்கியம் ஆகிவிடுங்கோ!ஹீஈஈஈஈஈஈஈஈ!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.