Monday, March 7, 2011

டாஸ்மாக்கும் திருட்டும் விபச்சாரமும்

எங்கள் வயல்காட்டுக்கும் அடுத்திருந்த வேலிமுள் காட்டிற்கும் இடையில் ஒரு ஓடை மட்டுமே உண்டு. அந்த வேலிக் காட்டில்தான் கள்ளச் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். நான் அப்போது 4வதோ 5-வதோ படித்துக் கொண்டிருந்தேன்.
ஒருநாள் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப் போன என் அப்பா, வேலை முடிந்ததும் சாராயம் குடிக்க வேலிக்காட்டுக்குள் நுழைந்தார். அப்போது திடீரென போலீஸ் ரெய்டு வந்துவிட்டது. அடித்துப் பிடித்து ஆளுக்கொரு பக்கம் ஓட்டம் எடுத்தனர். அப்பாவும் ஓடையில் உருண்டு விழுந்து, அங்கிருந்து போலீஸ் கண்ணில் படாமல் எங்கள் வயலுக்குள் தவழ்ந்தே நுழைந்தார். பிறகு அங்கிருந்த மண்வெட்டியை எடுத்து வரப்பை வெட்டுவதுபோல் பாவ்லா காட்ட ஆரம்பித்தார். துரத்திவந்த போலீஸும் ‘இவர் யாரோ ஒரு விவசாயி’ என விட்டு விட்டுப் போய்விட்டனர்.

பிறகு, கை வைத்த பனியனெல்லாம் கரிசல் மண் கறையுடன் வீடு வந்து சேர்ந்தார். என் அம்மா கடுப்பாகி திட்டித் தீர்த்தார். ‘அந்த எழவை இப்படிக் குடிக்கணுமா?”என்று கேட்டார். பத்து வயதில் இதைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு, பல விஷயங்கள் புரிந்தது.சட்டத்தின் படியும், சமூகத்தின் பார்வையிலும் குடிப்பது ஒரு தவறான பழக்கம் என்பது பசுமரத்து ஆணி போல் மனதில் பதிந்தது. அதன்பின் கல்லூரி ஹாஸ்டல் வாழ்விலும், அயல்நாட்டில் வாழ்ந்த போதும் நான் குடித்ததே இல்லை.

இப்போது தமிழகத்தில் நடப்பது என்ன? அரசாங்கமே சாராயம் விற்கிறது. போலீஸ் காவல் காக்கிறது. பிராந்தி விஸ்கி வாங்குவது என்பது பெப்ஸி, கோக் வாங்குவது போல் இயல்பான விஷயமாக ஆகிவிட்டிருக்கிறது. குடிப்பது குறித்த குற்ற உணர்ச்சியையே இது இல்லாமல் ஆக்கிவிடுகிறதே..இதனைப் பார்த்து வளர்கின்ற நம் குழந்தைகள் மனதில் குடிப்பழக்கம் தவறு என்று எப்படிப் படும்? 

முன்பெல்லாம் ஒருவன் குடிக்கப் பழக வேண்டுமென்றால் அதற்கான வாய்ப்பைத் தேடிப் போகவேண்டும். ஆனால் இப்போது நம்மைச் சுற்றிலும் டாஸ்மாக் கடைகள் இருந்து கொண்டு வா வா என்று அழைக்கின்றன. இத்தகைய சூழலில் வளரும் குழந்தைகள். மதுவிற்கு அடிமையாகவே இங்கு வாய்ப்பு அதிகம்.
மதுவிலக்கு கேட்கும்போதெல்லாம் அரசு தரப்பில் சொல்லப்படுவது கள்ளச் சாராயம் பெருகிவிடும் என்பது தான். ஆனால் அரசே மது விற்பதால் நம் குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் பாதிப்பை விட, கள்ளச் சாராயமே பெட்டர். குறைந்தது ’அது ஒரு தப்பான விஷயம் ’ என்ற உண்மையையாவது அவர்கள் புரிந்து கொள்வர்.

டாஸ்மாக்கில் மது விற்பதன் மூலம் ஒரு சந்ததியையே குடிகாரர்களாக ஆக்கிக்கொண்டிருக்கிறோம்.  மக்கள் நலன் அல்ல, வியாபாரம்தான் முக்கியம் என்றால் அட்லீஸ்ட் மதுபான விலைகளையாவது கூட்டலாமே..ஒரு மினி குவார்ட்டர் 200 ரூபாய் என்று விற்க வேண்டியது தானே?

அரசு டாஸ்மாக்கில் மது விற்கவில்லையென்றால், தனியார் ஏலம் எடுத்து சம்பாதிப்பர் அல்லது கள்ளச்சாராய வியாபாரிகள் கொழிப்பர். எனவே தனியாருக்குப் போகும் வருமானம், அரசு கஜானாவிற்கு கொண்டுவரவே மது விற்கிறோம்’ என்ற சாக்குப்போக்கு அரசால் சொல்லப்படுகிறது. கள்ளச்சாராயம் விற்கப்படுகிறதென்றால் அதைச் சட்டப்படி தண்டிக்கவேண்டியது போலீஸின் கடமை. அது முடியாதென்பதால், அரசே விற்பது சரியா?

சென்ற மாதம் சென்னையில் ஒரு அரசு ஊழியர் வீட்டில் 80 பவுன் நகை திருடு போய்விட்டது. இது மாதிரி பல ஊர்களில் திருட்டு நடத்தி பல தனியார் கொழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் போலீஸால் தடுக்க முடியவில்லை. எனவே இப்படி வீணாக தனியாருக்குப் போகும் ‘தங்க வருமானத்தை’ அரசே எடுத்துக் கொள்ளலாமே? அதற்காக, படித்த(!) திடகாத்திரமான பட்டதாரிகளைத் தேர்ந்தெடுத்து ’அரசுத் திருடர்’ வேலை கொடுக்கலாமே?

இன்னொரு பக்கம் விபச்சாரமும் நடந்துகொண்டுதான் உள்ளது, நடிகைகள் முதல் அழகிகள் வரை கைது செய்யப்பட்டுக் கொண்டே உள்ளனர். ஆனாலும் முழுமையாக விபச்சாரத்தை ஒழிக்க முடியவில்லை. இந்தத் தொழிலில் லட்சம் லட்சமாகப் பணம் புரள்கிறது. அநியாயமாக சில தனியார் புரோக்கர்கள் சம்பாதிக்க்கிறார்கள்!!!. எனவே இந்தப் பணத்தை அரசு கஜானாவிற்குத் திருப்பும்விதமாக, அரசே விபச்சார விடுதிகளை நடத்தினால் என்ன?
’நாட்டில் கள்ளக்காதல் பெருகியதற்குக் காரணம் அரசு விபச்சாரத்தை அனுமதிக்காததுதான்’ என்று சில வீணாய்ப் போன விஞ்சானிகள் கண்டுபிடித்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எனவே அரசு வருமானத்தைப் பெருக்கும் விதமாகவும், கள்ளக்காதலை ஒழிக்கும் விதமாகவும் அரசே விபச்சார விடுதி நடத்தலாமே? பெண்களை மட்டும் வைத்து நடத்தினால், கள்ளக்காதல் செய்யும் ஆண்கள் மட்டுமே பயனடைவர். அந்த ‘கள்ளக் காதலிகள்’ என்ன பாவம் செய்தார்கள்? எனவே அரசு கருணையோடு ஆண்களுக்கும் ‘அரசு விபச்சார விடுதி’யில் வேலை கொடுக்கலாமே?

டாஸ்மாக்கில் மது விற்பனை செய்ய என்னென்ன நியாயங்கள் சொல்லப்படுகின்றனவோ, அத்தனையும் திருட்டுக்கும், விபச்சாரத்திற்கும் பொருந்தும். ஒரு சமூகத்தில் லட்சக்கணக்கான குடும்பங்களை சீரழித்துத் தான் அரசு கஜானாவை நிரப்ப வேண்டுமா? உழைக்கும் சமூகங்களின் பணத்தை அட்டையாய் உறிஞ்சித் தான், அரசு கஜானா நிரப்பப்பட வேண்டுமா? படித்த, நாகரீகமான சமூகம் இதை அனுமதிக்கலாமா? 

’குடித்துவிட்டு அடிக்கடி எங்கோ விழுந்து கிடக்கும் சித்தப்பாவை ஆட்டோவில் கூட்டி வரும் சித்தி, குடிகார அண்ணனின் அடி தாங்காமல் நடு இரவில் அலறியபடி வெளியே ஓடி வரும் அண்ணி, குடிகார அப்பாவை நம்ப முடியாமல் ஒரு பொறுக்கியுடன் ஓடி கல்யாணம் செய்து வாழ்வைத் தொலைத்த மாமா பெண்’ என பல கண்ணீர்க் கதைகளை என் உறவினர் வட்டத்தில் பார்த்திருக்கிறேன்; பார்த்துக் கொண்டும் இருக்கிறேன்.

சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பல நூறு வருடங்கள் பின் தங்கியிருந்த சமூகங்கள் மெல்ல மெல்ல முன்னேறி வரும் நேரம் இது. ஆனால் தெருவுக்கு ஒரு டாஸ்மாக் கடையைத் திறந்து அவர்களை மேலும் கீழே அழுத்துகின்ற வேலையைத் தான் நாம் செய்து வருகின்றோம்.

ஊழல், விலைவாசி போன்ற பிரச்சினைகளை விடவும் சமூகத்திற்கு மிக அபாயகரமானது இந்த அரசு மது விற்பனை. ஆனால் இந்தத் தேர்தலில் அது ஒரு பிரச்சினையாகவே எந்தவொரு கட்சியாலும் முன்வைக்கப்படவில்லை என்பது தான் மிக மிக வேதனையான விஷயம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

57 comments:

 1. இந்த‌ ப‌திவுக்கு ஒரு ராய‌ல் ச‌ல்யூட்,..

  ம‌துபான‌ம் இப்ப‌ டீ மாதிரி ஆகிருச்சு

  திருட்டு ச‌மூக‌ உரிமை மாதிரி ஆயிருச்சு

  விப‌ச்சார‌ம் பிட்டு ப‌ட‌ம் பார்க்க‌றது மாதிரி ஆயிருச்சு

  அர‌சாங்க‌மே கொள்ள‌க்கூட்ட‌மாயிருச்சு,..

  ஊரில் பண்ணாதையா நான் ப‌ண்ணிட்டேன் அப்படியென்று எதி கேள்வி வேறு,.வெட்க‌மேயில்லை,..

  ReplyDelete
 2. கட்டுரை அருமை..... நாம பாட்டுக்கு சொல்லிக்கிட்டு இருக்க வேண்டியது தான்.... அரசாங்கம் காதுல விழாது.எனது வலைபூவில் இன்று:இந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ

  ReplyDelete
 3. @jothi:ராயல் சல்யூட்டிற்கு நன்றி ஜோ!

  ReplyDelete
 4. @தமிழ்வாசி - Prakash:ஊதுற சங்கை ஊதுவோம்னு தான்..

  ReplyDelete
 5. நல்ல பதிவு. so called society and its bogus status

  ReplyDelete
 6. ஆமா பாஸ். இந்த கருமத்தை எப்படியாவது தடை செய்யணும்..

  ReplyDelete
 7. உங்க பதிவு அருமை நண்பா..............

  ஆனால், குடி விஷயத்தில் நான் கருத்து சொல்லும் அளவுக்கு இல்லை என்பதே உண்மை மன்னிக்கவும்.

  ReplyDelete
 8. அடிச்சு தூள் கிளப்பீட்டீங்க செங்கோவி...சூப்பர்

  ReplyDelete
 9. Sengovi,

  You are absolutely right. Here Government sells Liquor and want to privatise the Education, Medicine like essential services.

  Very Pathetic that we are still living and voting for such Nuisences... We donot have any other option also.

  Very Nice and energetic post...

  Keep posting .. :-)

  http://anubhudhi.blogspot.com/

  ReplyDelete
 10. அரசு திருந்தாட்டி குடிமக்களை திருத்தக்கூடிய வழிகளை பாருங்கையா.

  ReplyDelete
 11. //ஊழல், விலைவாசி போன்ற பிரச்சினைகளை விடவும் சமூகத்திற்கு மிக அபாயகரமானது இந்த அரசு மது விற்பனை. ஆனால் இந்தத் தேர்தலில் அது ஒரு பிரச்சினையாகவே எந்தவொரு கட்சியாலும் முன்வைக்கப்படவில்லை என்பது தான் மிக மிக வேதனையான விஷயம்.//
  உண்மைதான்! ஆனா ஆட்சியை மக்கள் சேவையா நினைக்கிறவங்க இப்ப இருந்தா
  நீங்க சொல்றபடி சிந்திப்பாங்க.
  இப்ப இருக்கிறவனுங்க எல்லாமே ஆட்சியை தொழிலா நினைக்கிறவனுங்க என்னென்ன செஞ்சி மக்கள சிந்திக்க உடாம நாம நல்லா சம்பாதிக்கணும்னு யோசிக்கிறவனுங்க. இவனுங்க கிட்ட போயி இதையெல்லாம் எதிர்பார்க்கிறீங்க

  இவனுங்களுக்கு தேர்தலே, அடுத்த அஞ்சி வருஷத்திற்கு நாட்டை கொள்ளையடிக்கிறதுக்கு கான்ட்ரேக்ட் உரிமம் வாங்கிறதுக்கு தான்

  ReplyDelete
 12. பின்னூட்ட தொடர்பிற்கு

  ReplyDelete
 13. 'நச்'னு நல்லாச் சொல்லியிருக்கீங்க!

  ReplyDelete
 14. @bxbybz தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே!

  ReplyDelete
 15. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) மேலும் மேலும் மதுபானத் தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்கிறார்களேயொழிய, தடை செய்வது மாதிரி தெரியவில்லையே போலீஸ்கார்..

  ReplyDelete
 16. @விக்கி உலகம் //குடி விஷயத்தில் நான் கருத்து சொல்லும் அளவுக்கு இல்லை // குடிக்கிறவராய் இருக்கலாம்...குடிகாரராய் ஆகி விடக்கூடாது.

  ReplyDelete
 17. @ரஹீம் கஸாலி //அடிச்சு தூள் கிளப்பீட்டீங்க செங்கோவி// உங்கள் பாராட்டுக்கு நன்றி செங்கோவி..நான் எழுதிய நல்ல பதிவுகளில் ஒன்றாக இதுவும் நிற்கும்!

  ReplyDelete
 18. @Sankar Gurusamy //Keep posting .. :-) // உங்கள் ஆதரவுடன் தொடர்வேன் சார்.

  ReplyDelete
 19. kalakkal sir......niyaaymaana aathangam....ellor manathilum nirkkum kelvi

  ReplyDelete
 20. @கே. ஆர்.விஜயன் போதைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களைத் திருத்துவது ரொம்பக் கஷ்டம் சார்!

  ReplyDelete
 21. @Karikal@ன் - கரிகாலன் //இவனுங்களுக்கு தேர்தலே, அடுத்த அஞ்சி வருஷத்திற்கு நாட்டை கொள்ளையடிக்கிறதுக்கு கான்ட்ரேக்ட் உரிமம் வாங்கிறதுக்கு தான்// கரெக்டாச் சொன்னீங்க சார்!

  ReplyDelete
 22. @middleclassmadhavi தங்கள் பாராட்டிற்கு நன்றி சகோதரி.

  ReplyDelete
 23. @ரிஸால் அஹமது ஆமாங்க..ரொம்ப நாளாவே மனசுல இருந்தது..

  ReplyDelete
 24. சிறப்பான பதிவு

  ReplyDelete
 25. நாங்கள் ஆட்ச்சிக்கு வந்தபிறகு தொப்புளில் பம்பரம் விட வசதி செய்து தருவோம்!

  ReplyDelete
 26. என் மனக்குமுறலை அப்படியே சொல்லி இருக்கீங்க.

  அருமையான பதிவு.

  எனக்கு ஒன்னே ஒன்னு புரியலைங்க....
  கள்ளச்சாராயம் குடிச்சு மக்கள் சாகவேணாமேன்னு அரசு மது விக்குதாமே.

  கள்ள சாராயம் குடிச்சா தீமைன்னு தெரிஞ்சும் குடிக்கும் மாக்களை காப்பாத்தணுமா என்ன?

  என்னமோ போங்க.....

  மூணு தலைமுறையைக் குடிகாரன்களா ஆக்கி வச்சுருக்கு அரசாங்கம்:(

  ReplyDelete
 27. http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_06.html இளைஞர்கள் முக்கியம் - புத்ததேவ். ஆட்சியை தக்கவைப்போம் - காரத்

  ReplyDelete
 28. @Speed Master கருத்துக்கு நன்றி மாஸ்டர்!

  ReplyDelete
 29. @ttpian மிக்க நன்றி நண்பரே..பம்பரம் மட்டுமல்லாது தொப்புளும் இலவசமாகத் தரவும்.

  ReplyDelete
 30. @துளசி கோபால் முதலில் டீச்சரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...//கள்ள சாராயம் குடிச்சா தீமைன்னு தெரிஞ்சும் குடிக்கும் மாக்களை காப்பாத்தணுமா என்ன?// போதைக்கு அடிமையாதல் நோய் அல்லவா..நோயாளிகளை நீங்கள் சொல்கிறபடி கை விட முடியாதே சகோதரி..ஏன் மேலும் மேலும் நோயாளிகளை உண்டாக்குகிறார்கள் என்பதே முதல் கவலை..ஏற்கனவே நோயாளி ஆனவர்களை திருத்துவது மற்றொரு பெரிய கவலை..ரொம்ப கஷ்டமானது கூட!

  ReplyDelete
 31. //எனவே இந்தப் பணத்தை அரசு கஜானாவிற்குத் திருப்பும்விதமாக, அரசே விபச்சார விடுதிகளை நடத்தினால் என்ன?// மானமுள்ளவன் இதைப் படிச்சான்னா நாக்கை புடுங்கிகிட்டு செத்துடுவான்.

  ReplyDelete
 32. \\இன்னொரு பக்கம் விபச்சாரமும் நடந்துகொண்டுதான் உள்ளது, நடிகைகள் முதல் அழகிகள் வரை கைது செய்யப்பட்டுக் கொண்டே உள்ளனர்.\\எனக்கு ஒரு டவுட்டு, ஒரு ஆணும் பெண்ணும் பரஸ்பரம் சமதத்துடன் "சந்தோஷமாக" இருந்தால் அது சட்டப் படி தப்பில்லை என்று உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டதாமே, அப்புறம் எதை வைத்து விபச்சாரம் என்று கைது செய்கிறார்கள்? போலீஸ் வந்து கேட்டால் நாங்க ரெண்டு பெரும் சம்மதத்தோடுதான் இங்கே தனியாக இருக்கிறோம் என்று சொல்லி தப்பித்துக் கொள்ளலாமே?

  ReplyDelete
 33. \\சில தனியார் புரோக்கர்கள் சம்பாதிக்க்கிறார்கள்!!!. \\இது ஒண்ணுதான் தமிழக அரசு இன்னும் செய்யாம இருக்குது, பாம்பே மாதிரி இதையும் சட்டப் பூரவமாக்கி நாலு காசு பாத்தாலும் பாத்தானுங்க, யார் கண்டது.

  ReplyDelete
 34. \\பல கண்ணீர்க் கதைகளை என் உறவினர் வட்டத்தில் பார்த்திருக்கிறேன்; பார்த்துக் கொண்டும் இருக்கிறேன்.\\ உங்க வயசுக்கே இவ்வளவு அனுபவங்கள். 88 வயசான மனிதர், அதில் என்பது வருடம் அரசியல் அனுபவம், ஐந்து முறை முதலமைச்சர், மூணு பெண்ட்டடி, பத்து பிள்ளைளை, கணக்கில்லா பேரப் பிள்ளைகள், இத்தனையும் பார்த்த ஒரு பெரிய மனுஷனுக்கு எவ்வளவு அனுபவம் இருக்கணும், பொறுப்பு இருக்கணும், மக்கள் நலன் மேல் அக்கறை இருக்கணும்? அதெல்லாம் இல்லை, நீங்க எல்லோரும் கல்லீரல் நோயால் சாவுங்க, உங்க பெண்டாட்டி தாலியை அறுத்து எனக்கு பணமா குடுங்க. நானும் என்னோட சந்ததியும் சுகமா இருந்தா போதும். இதையும் பார்த்துகிட்டு இலவசமா குடுக்கும் சோத்தையும், சாராயத்தையும் குடித்துவிட்டு ஓட்டு போடும் தமிழ்க் குடிமகன், தமிழ்நாடு எங்கே விளங்கும்?

  ReplyDelete
 35. கொல்கத்தா ,மூம்பை , இந்திய வில் தான் உள்ளது நாட்டிக்கு ஓரைய சட்டம் என்ன்றால் மட்டற்ற எடைதில் என்

  ReplyDelete
 36. பயங்கரமான அலசலா இருக்கே....

  ReplyDelete
 37. @Jayadev Das:பணம் வாங்கினால் மட்டுமே தவறென்று சட்டம் சொல்கிறது..ஓசின்னா தப்பில்லையாம்...என்னமோ போங்க..இதெக்கால்ம் தனியா உட்கார்ந்து ‘நானா யோசிக்கணும்’!

  ReplyDelete
 38. @Jayadev Das //உங்க வயசுக்கே இவ்வளவு அனுபவங்கள். 88 வயசான மனிதர், அதில் என்பது வருடம் அரசியல் அனுபவம்// ஐயாவோட ஒரு பிள்ளையும் குடியாலயே வாழ்க்கையை தொலைச்சவர் தான்...ஆனாலும் புரியலியே..அம்மாக்கும் புரியலியே..

  ReplyDelete
 39. one of the best blog, i have read.

  good.

  keep it up

  ReplyDelete
 40. @nsk//கொல்கத்தா ,மூம்பை , இந்திய வில் தான் உள்ளது நாட்டிக்கு ஓரைய சட்டம் என்ன்றால் மட்டற்ற எடைதில் என் //ஒரு நாட்டில ஊருக்கு ஒரு சட்டம் ஏன் -னு கேட்குறீங்களா..அதுக்கு ஏங்க டாஸ்மாகுல இருந்து நேரா இங்க வந்த மாதிரி கமெண்ட் போடுதீங்க?

  ReplyDelete
 41. @MANO நாஞ்சில் மனோ நீங்க வேற என்னை ஆராய்ச்சியாளன்னு சொல்லீட்டீங்க..உங்க வார்த்தையைக் சொன்னதைக் காப்பாத்த வேண்டாமா சார்..

  ReplyDelete
 42. அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் பனி

  ReplyDelete
 43. @sharfu//one of the best blog, i have read.// உங்களைப் போன்று முகமறியா நண்பர்கள் பாராட்டுவது பெருமையாக உள்ளது..நன்றி!

  ReplyDelete
 44. @சிட்டி பாபு: உங்கள் ஆதரவுடன் தொடரும் என் பணி..நன்றி சார்!

  ReplyDelete
 45. நல்ல ஆழமான கருத்து இந்த‌ ப‌திவுக்கு ஒரு ராய‌ல் ச‌ல்யூட்,..ம‌துபான‌ம் இப்ப‌ டீ மாதிரி ஆகிருச்சுதிருட்டு ச‌மூக‌ உரிமை மாதிரி ஆயிருச்சுவிப‌ச்சார‌ம் பிட்டு ப‌ட‌ம் பார்க்க‌றது மாதிரி ஆயிருச்சுஅர‌சாங்க‌மே கொள்ள‌க்கூட்ட‌மாயிருச்சு,..

  ReplyDelete
 46. A very good post.. Probably you missed one thing, increase in number of TASMAC scenes in recent tamil movies..It's kind of a free ad for TASMAC.

  ReplyDelete
 47. @Faizal உங்கள் பாராட்டுக்கும் அழுத்தமான கமெண்டிற்கும் நன்றி பாஸ்!

  ReplyDelete
 48. @neovasant ஆமா பாஸ்..அதை விட்டுட்டேன்..டாஸ்மாக்கை ஏதோ டீக்கடை போல் சாதாரணமாகக் காட்டுகிறார்கள்..கரெக்டாச் சொன்னீங்க!

  ReplyDelete
 49. நான் குடிக்காததிற்கான காரணம் வித்தியாசமானது.. ஒரு பிச்சைக்கார பெண்மணி ஒரு உணவு விடுதியிலிருந்து க்ழிவு நீர் வெளிவரும் வழியில் இருந்த பருக்கைகளை எடுத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். இதைக் கண்ட போது நான் எட்டாம் வகுப்பு. கல்லூரியில் சக மாணவன் மது பாட்டில் வாங்க செலவழித்த தொகை அந்த உணவகத்தில் சாப்பாட்டுக்கான தொகையை விட மூன்று மடங்கு. இந்த ஏழை இந்தியாவில் இது தேவைதானா?

  ReplyDelete
 50. காலத்தே எடுக்கும் அவசர தேவையாகும் .மது அரக்கனை ஒழிக்கவந்த அம்மா , மது அரக்கியாய் மாறிவிட்டது ஏனோ .

  ReplyDelete
 51. // அரசே விபச்சார விடுதிகளை நடத்தினால் என்ன?// அதுக்கு பேர் என்னவா இருக்கும்னு நான் ஜிந்திக்கிறேன்.. வழக்கம் போல் "அ" வரிசையில் இருக்குமோ? (ஐ.. மீன் "அழகிகள் விடுதி".. ;) )

  ReplyDelete
  Replies
  1. டாஸ்மாக் கடைக்கு முதல்ல அ-னாவில் பேர் வைக்கணும்.

   Delete
 52. பழைய பதிவானாலும் இன்றும் பொருந்துகிறது! சவுக்கடியான கேள்விகள்! அருமை!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.