எனக்குப் பிடித்த இயக்குநர்களில் ஒருவரான பால் தாமஸ் ஆண்டர்சனின்
மாஸ்டர்பீஸ்களில் ஒன்று, There Will Be Blood. பணம் சம்பாதிப்பதற்காக எதையும் செய்யத்துணியும்,
சம்பாதிப்பதைத் தவிர வேறு எதைப் பற்றியும் கவலைப்படாத ஒரு முழு நெகடிவ் கேரக்டரின்
கதையைச் சொன்ன படம்.
நல்லவர்களைப் பற்றி எத்தனையோ படங்கள் ஆராய்ந்து தள்ளிவிட்டாலும்,
வில்லன் என்பதைத் தாண்டி கெட்டவர்களைப் பற்றி படங்கள் பேசுவதில்லை. ஆன்ட்டி ஹீரோ சப்ஜெக்ட்டில்
கூட, எப்படியாவது ஹீரோவை நியாயப்படுத்திவிட்டுத்தான் கதை சொல்ல வேண்டியிருக்கிறது.
காரணம், வணிக வெற்றி குறித்த அச்சம்.
’அவன் கெட்டவன்..ஏன்னா, அவன் கெட்டவன்..அவ்ளோ தான்’ என்று சிம்பிளாக
உண்மையை நம் முன் வைக்கும் கதைகள் அரிது. எவ்வித மசாலாவும் சால்ஜாப்பும் இல்லாமல் ஒரு
வறண்ட உண்மையை நம் முன் வைத்த படம், There Will Be Blood.
அதில் மையப்பாத்திரத்தில் நடித்த டேனியல் டே-லெவிஸ்ஸின் நடிப்பு
மறக்க முடியாதது. உடன் வேலை செய்பவர்கள், வளர்ப்பு மகன், சொந்த பந்தம் என எல்லோரையும்
சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்தி, தூக்கி எறியும் கதாபாத்திரத்தை கண்முன் கொண்டு
வந்திருப்பார் டேனியல். அதற்காக ஆஸ்கார் விருதையும் தட்டிச் சென்றார். ஒளிப்பதிவிற்காகவும்
ஆஸ்கர் கிடைத்தது.
ஆயில் & கேஸ் இண்டஸ்ட்ரியில் வேலை செய்பவன் என்ற முறையில்
அந்த படத்தின் மேல் தனிப் பிரியம் உண்டு. மறக்க முடியாத கேரக்டராக, டேனியல் கேரக்டர்
பலநாட்கள் என்னைத் தொந்தரவு செய்தது.
மனசாட்சியை ஊமையாக்க சிறிய காரணம் கிடைத்தாலும், மனிதனால் எவ்விதக்
கீழ்மையான காரியத்தையும் செய்துவிட முடியும். வெகுஅரிதாக சிலரால், மனசாட்சி உறுத்தல்
இல்லாமல் ஒரு மோசமான வாழ்க்கையை வாழ முடியும் என்பது தான் எவ்வளவு அபாயகரமான விஷயம்.
அதை இலக்கியங்கள் பதிவு செய்வது பெரிதில்லை. சினிமா போன்ற ஒரு வணிக ஊடகத்தில் இந்த
கசப்பான உண்மை பதிவாவது போற்றப்பட வேண்டிய விஷயம்.
’There Will Be Blood டேனியல் மாதிரி தமிழில் ஒரு கேரக்டரைப்
படைத்துவிட முடியுமா? லாஜிக் கேள்வி கேட்டே படத்தை ஒழித்துக்கட்டிவிட மாட்டார்களா?’
என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். அதற்கெல்லாம் பதிலாக வந்திருக்கும் படம் தான், கொம்பையாப்
பாண்டியன்…மன்னிக்கவும், கிடாரி!
சாத்தூர் என்ற சிறுநகரத்தில் வாழும் கொம்பையாப் பாண்டியன் எனும்
தாதாவின் வளர்ச்சியையும் வாழ்க்கையையும் பேசுகிறது கிடாரி. நம்பிக்கை துரோகமும், கொலையும்
குற்றமும் மூச்சுவிடுவது போல் இயல்பான நடவடிக்கையாகக் கொண்ட ஒரு தாதாவை கண்முன் நிறுத்தியது
தான் படத்தின் பெரும் வெற்றி.
வெளியானபோது பரவலாகக் கவனிக்கப்படாமல் போன படம். அதற்கு முதல்
காரணம், படத்தின் ஹீரோ சசிக்குமாரின் முந்தைய படங்கள். நட்புன்னு என்னன்னு தெரியுமா
என்று பேசும் வழக்கமான படங்கள் போன்ற தோற்றத்தை படத்தின் போஸ்டர்களும் பாடல்களும் முன்னோட்டமும்
கொடுத்துவிட்டன.
கிடாரி என்ற தலைப்பும் கிடாரியை ஹீரோவாக முன்னிறுத்தியதும்
தவறு. தவமாய் தவமிருந்து வந்தபோது, இயக்குநர் சேரன் ஹீரோ தான். ஆனாலும் பேட்டிகளிலும்
விளம்பரத்திலும் ராஜ்கிரண் தான் இந்த படத்தின் ஹீரோ என்று சொன்னார். அதே போன்று, கொம்பையாப்
பாண்டியன் கேரக்டரில் வாழ்ந்த வேல.ராமமூர்த்தி தான் ஹீரோ என்று விளம்பரப்படுத்தியிருக்க
வேண்டும்.
அப்படி செய்திருந்தால், படத்தின் ஓப்பனிங் சீனிலேயே கொம்பையாப்பாண்டியன்
ரத்த வெள்ளத்தில் கிடப்பது பெரிய தாக்கத்தை உண்டாக்கியிருக்கும். ஹீரோ சசிக்குமார்
என்ற எண்ணத்தில் உட்கார்ந்திருக்கும் ஆடியன்ஸுக்கு, பாதிப்படத்துக்கு மேல் தான் இது
கொம்பையாப் பாண்டியனின் கதை என்றே புரிகிறது.
படத்தில் கொம்பையாப் பாண்டியன் கேரக்டருக்கு அடுத்து பாராட்டப்பட
வேண்டியது, திரைக்கதை. கொம்பையாப் பாண்டியனை குத்தியது யார் என்ற கேள்வியுடன் படம்
துவங்குகிறது. அதற்கான பதிலை மூன்று குறுங்கதைகளில் ஒரு கேரக்டர் தேடுகிறது.
முதல்கதை, கொம்பையாப்பாண்டியனின் வளர்ச்சியைச் சொல்கிறது. இரண்டாவது
கதை, எவ்வளவு இயல்பாகவும் ஜாலியாகவும் அடுத்தவருக்கு பிரச்சினை செய்து வாழ்கிறார்கள்
என்று பதிவு செய்கிறது.
மூன்றாவது கதை தான் வலுவானது. இவர்களால் தன் குழந்தையை இழந்த
ஒரு தாயின் பழி உணர்ச்சியை உரக்கச் சொல்கிறது. கொம்பையாப்பாண்டியன் கேரக்டருக்கு அடுத்து
நம் மனதில் நிற்பது இந்த கேரக்டரும், அதைச் செய்த நடிகை சுஜா வருணியும் தான். கொம்பையாப்
பாண்டியனின் மகனாக வரும் வசுமித்ர-வின் நடிப்பு கவனிக்கப்பட வேண்டியது. தன் உடல்மொழி மூலமும் கண்களின்
மூலமிம் ஒரு உதவாக்கரையை கண்முன்னே கொண்டுவருகிறார்.
சுஜாவின் குழந்தை இறந்ததற்குக் காரணம் கிடாரி எனும்போதே,
ஏற்கனவே கிடாரிக்கு ஒட்டாமல் இருக்கும் ஹீரோயிச பில்டப்கள் சுத்தமாக வீழ்ந்துவிடுகின்றன.
இயக்குநர் இந்த இடத்தில் கொம்பையாப் பாண்டியனும் கிடாரியும் ஒன்று தான் என்று ஆணித்தரமாகச்
சொல்லப் பயந்து மழுப்பியது படத்தின் பெரும்குறை.
கிடாரிக்கும் கொம்பையாப்பாண்டியனுக்கும் பெரிய வித்தியாசம்
இல்லை. கொம்பையாப் பாண்டியனுக்கு மனசாட்சி கிடையாது. கிடாரிக்கு மனசாட்சி உண்டு. அதை
ஆஃப் செய்ய, விசுவாசம் போன்ற சிறுகாரணம் போதும். அவ்வளவு தான் வித்தியாசம். இதில் கிடாரியை
ஹீரோவாக நிறுவ முயன்றதில் தான், இன்னொரு சுப்ரமணியபுரத்தை இழந்திருக்கிறார்கள்.
கொம்பையாப் பாண்டியன் நல்ல தாதா போன்ற இமேஜுடன் படத்தை ஆரம்பித்து,
கொஞ்சம் கொஞ்சமாக அவரது இருண்ட பக்கத்தைக் காட்டி, நெப்போலியன் கதையில் முழு கெட்டவராக
காட்டியிருப்பது பாராட்ட வேண்டிய விஷயம்.
படத்தின் கிளைமாக்ஸில் கொம்பையாப் பாண்டியனை பழி வாங்கும் கிடாரி,
மீண்டும் கொம்பையாப்பாண்டியனின் வேலையைத் தொடர்வதாக முடித்திருப்பது நமக்கு முழு திருப்தியைத்
தரவில்லை. கிடாரி திருந்தி, அந்த இடத்தில் இருந்து நல்லது செய்கிறான் என்று நாமே யூகித்துக்கொள்ள
வேண்டியிருக்கிறது.
There Will Be Blood ஹீரோ டேனியலுக்கு ஆஸ்கார் கிடைத்தது போன்றே,
நியாயத்திற்கு வேல.ராமமூர்த்திக்கு உயரிய விருதுகள் கிடைக்க வேண்டும். லங்கோடு உடன்
வேல்கம்பை எடுத்துக்கொண்டு, அவர் வீராவேசமாக வெளியே வரும் காட்சி இன்னும் கண்ணுக்குள்
நிற்கிறது.
எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவிலும் பிண்ணனி இசையிலும் வாய்ஸ் ஓவர்
கதை சொல்லும் பாணியிலும் அசத்தியிருந்தார்கள். There Will Be Blood மாதிரி நேர்கோட்டில்
கதை சொல்லாமல், சுவாரஸ்ய்த்திற்காக நான் – லீனியரில் கதை சொல்லியிருக்கிறார்கள். இதில்
சிக்கல் என்னவென்றால், கொம்பையாப்பாண்டியனை முழுதாகப் புரிந்துகொள்ள இரண்டாம் முறையும்
படம் பார்க்க வேண்டியதாகிறது.
படம் ரிலீஸான வெள்ளிக்கிழமையே படம் பார்த்து ‘சூப்பர்’ என்று
சொல்லிவிட முடியாத அளவுக்கு நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட படம் இது. ஓடிக்கொண்டே
ஒன்னுக்கு அடிக்கும் ஆசாமிகள், கொஞ்சம் நேரம் ஒதுக்கி நிதானமாகத் தான் இந்தப் படத்தை
பார்க்க வேண்டும். கொஞ்சநாட்களில், கிடாரி தனக்கான இடத்தை அடையும் என்று நம்புகிறேன்.
ஆனந்த விகடனில் சென்ற ஆண்டுக்கான சிறந்த இயக்குநர் விருது,
கிடாரி இயக்குநர் பிரசாத் முருகேசனுக்கும் சிறந்த வில்லன் விருது நம் கொம்பையாப் பாண்டியனுக்கும் வழங்கப்பட்டது. அதன்பிறகே இந்தப் படத்தை நான்
பார்த்தேன். என்னை மாதிரியே ‘இது வழக்கமான சசிக்குமார் படம்’ என்று நினைத்து தவறவிட்டவர்கள்,
இப்போது பார்க்கலாம்.
இனித்தான் பார்க்க வேண்டும் உங்களின் பகிர்வை படித்த பின் தான் சினிமா பற்றிய ஆர்வம் வருகின்றது வலையில் மீண்டும் காண்பதைப்போல)))
ReplyDeleteபாருங்கள் நேசரே...நல்ல படம்.
Deleteகிரிஸ்டோஃபர் ந்நோலனே கூட சசிகுமாரை வைத்துப் படமெடுத்தால் அந்தப்பக்கமே திரும்பிப் பார்க்க மாட்டேன்..
ReplyDeleteஉங்க நேர்மை பிடிச்சிருக்கு!
Deleteஅதே மாதிரி சசிகுமாரின் "வெற்றிவேல்" படமும் அருமையாக வந்திருக்கும் படம்தான் (கடைசி அரை மணி நேர மொக்கையை தவிர்த்து).
ReplyDeleteஅந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியான புள்ளதான் கிடாரிலயும் ஜோடி என்பது கொசுறுத்தகவல்..
சசியின் டெம்ப்ளேட் படங்களுக்குப் பயந்து, நான் வெற்றிவேல் பார்க்கவில்லை.
Deleteகிட்டத்தட்ட சசியின் டெம்ப்ளேட் படம்தான்.. ஆனாலும் இன்னொரு நாடோடிகளாக வந்திருக்க வேண்டிய படம் "வெற்றிவேல்". முடிந்தால் பார்த்துவிட்டு கருத்திடவும். நன்றி..
Deleteநன்றி செங்கோவி.
ReplyDeleteவிகடன் விருது
'சிறந்த வில்லன் - 2016'
எனக்கு கிடைத்தது.
சாரி சார்..அதைக் குறிப்பிட மறந்துவிட்டேன்.
Deleteஉங்களைப் போன்ற எழுத்தாளர் என் தளத்திற்கு வந்தது எனக்குப் பெருமை...நன்றி சார்.
@வேழ ராமமூர்த்தி : ஐயா, மதயானைக்கூட்டம், கிடாரி போன்ற படங்களில் மிரட்டலான உங்கள் கதாப்பாத்திரங்கள், கொம்பன் போன்ற படங்களினால் வீண்டிக்கப்படுவதாக உணர்கிறேன். அது போல சாதிய வட்டத்துக்குள் தாங்கள் சிக்குவதாகவும் உணர்கிறேன். தவிர்த்தால் சிறந்த படங்களில் தங்கள் பங்களிப்பு இருக்கும் என்பது என் கருத்து. நன்றி..
ReplyDeleteநானும் தவற விட்ட படம் அண்ணா
ReplyDeleteபெரியப்பா மதுரை வாசி மதுரை என்றாலே ஒரு தரப்பினர் என்றே அனைவரும் நினைக்கின்றனர் அவரின் உடல் வாகு பேச்சு எந்த கதைக்கு கதாபாத்திரம் பொறுந்துமோ அவ்வாரே இயக்குனர்கள் அனுவார்கள் கதைகளத்தை பொறுத்தே
ReplyDelete