Monday, October 7, 2013

தம்பதிகள், குழந்தைப் பிறப்பை தள்ளிப் போடலாமா?

குழந்தையின்மை என்பது 
நவீன சமுதாயத்தைப் 
பீடித்திருக்கும் புற்றுநோய்! - Vicki Donor படத்திலிருந்து.

மீப காலமாகவே புதுமணத் தம்பதிகளிடம் குழந்தை பெறுவதைத் தள்ளிப்போடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. குறைந்த பட்சம் இரண்டு வருடங்களுக்காவது வாழ்க்கையை எஞ்சாய் பண்ண வேண்டும், இருவரும் வேலை பார்த்து பணம் சேமித்துக்கொள்ள வேண்டும என பல நியாயமான காரணங்களின் அடிப்படையில் இந்த முடிவானது தம்பதிகளால் எடுக்கப்படுகிறது. ஆனால் இத்தகைய முடிவை எடுக்கும் முன், நாம் சில விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது.

சொல்லு..கேட்போம்!
 குழந்தையற்ற ஒரு தம்பதியால் தத்தெடுத்து வளர்க்கஏப்பட்டவன் என்ற முறையில், ஒரு பெண் மலடிப்பட்டத்துடன் வாழ்வதன் கொடுமையை நான் மற்றவரை விட நன்கறிவேன். என்ன தான் சமூகம் நாகரீகம் அடைந்துவிட்டதாகக் கூறினாலும், சொந்தக்காரர்கள் மத்தியில், விஷேச தினங்களில் சமூகத்தின் உண்மைக் குணம் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். யாராவது தற்செயலாக ஏதாவது கூறினால்கூட, அதுவும் சமூகத்தின் கேலியாகவே தாய்மையடையாத பெண்ணால் உணரப்படும். தவிர்க்கப்பட வேண்டிய, ஆனால் தவிர்க்க முடியாத உளச்சிக்கல் அது.

இரண்டு ஆண்டுகள் சந்தோசமாக புதுமண வாழ்வை அனுபவிப்பது நல்ல விஷயம் தான். ஆனால் அதற்காக குழந்தைப் பிறப்பைத் தவிர்ப்பது, பின்னாளில் உங்களுக்கு வேதனையான அனுபவத்தைக் கொடுக்கும் என்பதே உண்மை. ரெண்டு வருசம் தள்ளிப்போட்டால் குழந்தை பிறக்காதென்று மருத்துவம் சொல்கிறதா? என்று நீங்கள் என்மீது பாயலாம். நான் மருத்துவன் அல்ல, நான் கண்ட பலரின் அனுபவங்களின் அடிப்படையிலேயே இதைப் பேச விழைகின்றேன்.

முதலாவதாக, புதுமணத் தம்பதிகள் குறிப்பாக பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. ஆண்களைப் பொறுத்தவரை, திருமணம் ஆகும்வரை பெண் என்பவள் வெறும் சதைப்பிண்டம் தான். அவளுக்குள்ளும் ஒரு மனது உண்டு என்பதோ. அவளும் வலியும், வேதனையும், வருத்தமும், அவமானமும் அடையக்கூடிய ஒரு உயிர் என்றோ ஆண்களுக்கு உறைப்பதில்லை. ஆணைப் பொறுத்தவரை, பெண் என்பவள் செக்ஸ் உணர்ச்சியைத் தூண்டும் ஒரு டாய், அவ்வளவே!
அடப்பாவி!
ஆனால் திருமணத்திற்குப் பின், 24 மணி நேரமும் ஒரு பெண்ணுடன் வாழும்போதே, ஆண் அவளை செக்ஸைத் தாண்டி பார்க்கத் துவங்குகிறான். இன்னொருவகையில் சொல்வதென்றால், பார்க்க வைக்கப்படுகின்றான். அவளும் தன்னைப் போலவே கோபப்படுவாள்/வருத்தப்படுவாள், தனக்கு தன் வீட்டார் போலவே அவளுக்கும் ஒரு பின்புலமும், பாசம் காட்டும் ஜீவன்களும் உண்டு, அவளுக்கென்று தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் உண்டு என்று ஆண் கல்யாணத்திற்குப் பிறகே புரிந்து கொள்கிறான்.

பெரும்பாலும், ஒரு வருட காலமாவது ஆகிறது அவனுக்கு உறைக்க! இது நல்ல விஷயம் தான். அதே நேரத்தில் இது பெண்ணின் மீதான ஈர்ப்பைக் குறைத்துவிடுகிறது. இதையே பெரியவர்கள் நாகரீகமாக ‘ஆசை அறுபது நாள்..மோகம் முப்பது நாள்’ என்று சொல்லி வைத்தார்கள். இரண்டு ஆண்டுகள் கழித்து, அந்தப் பெண் (இப்போது பெண்மணி) மீதான ஈர்ப்பு என்பது, அவர்களுக்கிடையிலான உறவின் தன்மையைப் பொறுத்ததாக ஆகிவிடுகிறது. அன்பான உறவு நீடித்தால் ஓகே. இல்லையென்றால்.........!

அடுத்ததாக, பொருளாதாரப் பிரச்சினைகள். பணத்தேவை என்பது  இரண்டாயிரம் சம்பளத்தில் ஆரம்பித்து இரண்டு லட்சத்தைத் தாண்டினாலும் தீருவதில்லை. நாம் இது தான் இலக்கு என்று ஒரு ஸ்டேட்டஸுக்கு உயரும்போது, மற்றொரு இலக்கு வந்து நிற்கிறது. இன்று பெரும்பாலும் ஆண்-பெண் இருவரும் சம்பாதிக்கும் நிலையில், அது உண்டாக்கும் ஈகோ சார்ந்த பிரச்சினைகள் வேறு. இவை உண்டாக்கும் மன அழுத்தங்கள், பாலியல் ஈர்ப்பைக் குறைப்பது மட்டுமல்லாது விந்தணு எண்ணிக்கையையும் குறைப்பதை இன்றைய மருத்துவம் கண்டுகொண்டுள்ளது.

அடுத்ததாக, சம்பந்தி வீட்டார் தொல்லை. நமது சமூகத்தைப் பொறுத்தவரை திருமண வாழ்வு என்பது இரு மனம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் மட்டுமல்ல. அது இரு குடும்பங்களின் உறவு மட்டுமல்ல. அது இருவேறு வம்சங்களின் உறவு. ‘எங்க செய்முறை வேற..இப்படிச் செய்யலியா? நாங்க என்ன குறைஞ்சவங்களா?’ என்று சொந்தபந்தங்கள் கிளப்பும் பஞ்சாயத்துகளிலேயே, பாதி மனநோயாளியாக ஆக வேண்டியிருக்கும். மாமியார் பிரச்சினை போனஸ். கூடவே நாத்தனாரும் இருந்துவிட்டால், அமோகம் தான்.

குறித்துக்கொள்ளுங்கள் புதுமணத் தம்பதிகளே...ஒரு குழந்தையைப் பெற்றெடுக்காதவரை மாமியாரும் நாத்தனாரும், அந்தப் பெண்ணை இந்தக் குடும்பத்தின் அங்கத்தினராக, பையனின் மேல் உரிமையுள்ளவளாக மனதளவில் ஏற்றுக்கொள்வதே இல்லை. என்னுடைய பல நண்பர்களும், குழந்தையைப் பெற்றபிறகே தங்கள் சகோதரி(நாத்தனார்)களிடம் இருந்து விடுதலை பெற்றிருக்கிறார்கள். (‘இவங்களுக்கு குழந்தை இல்லாட்டியும் நல்லதே’ என்று எண்ணும் நல்ல உள்ளங்களையும் நான் கண்டிருக்கிறேன்!)

இன்றைய வாழ்க்கை முறை, நம் உடலில் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் விளைவுகள் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். சீக்கிரமே வயதிற்கு வருவது, கர்ப்பப்பையில் நீர்க்கட்டி, கருவுறாமை, கருச்சிதைவு என்று முந்தைய தலைமுறை கண்டிராத பல விஷயங்களையும், பெரும்பாலான இன்றைய தலைமுறை கண்டுகொண்டிருக்கிறது. குறிப்பாக அதிக உடல் உழைப்பற்ற, ஏ.சி.வாழ்க்கை முறையின் விளைவுகளோ இவை என்று நான் ஐயுறுகிறேன்.
ஓகே..யோசிக்கிறேன்!
எனவே தான் நவீன வாழ்க்கைமுறை உங்கள் உடலை சிதைக்கும் முன், ஆண்-பெண் ஈர்ப்பு குறையும் முன், சமூக-பொருளாதார சிந்தனைகள் உங்களை முடக்கும் முன் குழந்தைச் செல்வங்களைப் பெற்றெடுங்கள். இந்த விஷயத்தில் எந்தவொரு தாமதத்தையும் அனுமதிக்காதீர். ‘இன்னும் விஷேசமில்லையா?’ எனும் பெரியோரின் கேள்வியை தொல்லையாக எடுத்துக்கொள்ளாதீர். அது தொல்லை அல்ல, அனுபவத்தால் விளைந்த எச்சரிக்கை.

‘ஆண்டவன் நமக்கு கொடுப்பது என்று முடிவு செய்திருந்தால், இரண்டு வருடம் கடந்தாலும் கொடுக்கத்தானே செய்வான்?’ என்று தத்துவரீதியாக நீங்கள் யோசிக்கலாம். இருந்தாலும், எளிதாக உங்களுக்குள் முடிய வேண்டிய விஷயத்தை சிக்கலாக்கி, ஆண்டவனை வேறு தொந்தரவு செய்ய வேண்டுமா என்று யோசியுங்கள்.

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
மக்கட் பேறல்ல பிற.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

26 comments:

  1. மிக சரியாகவும் தெளிவாகவும் சொல்லப்பட்ட பதிவு. நிஜமாகவே இதை எழுதிய உங்களை பாராட்டுகிறேன்

    ReplyDelete
  2. அன்பான உறவு நீடித்தால் ஓகே. இல்லையென்றால்.........!
    இல்லை என்றால் பிள்ளை எதற்கு? ஊருக்காகவா??

    ReplyDelete
  3. சிறந்த பதிவு செங்கோவி .... தற்போதைய சூழலில் கணவன் மனைவி இருவருமே பணிக்கு செல்வதால் திருமணம் செய்த புதிதில் குழந்தை வேண்டாமென தள்ளிவைக்கின்றனர். சில வருடத்திற்குப் பிறகு 'முயற்சி' செய்தால் கைகூடாமல் போய் விடுகிறது. லேட் மேரேஜ் கூட இதற்கு காரணமாகிறது.

    மருத்துவ ரீதியாகவும் சில விசயங்களை பகிர்ந்திருக்கலாம்.

    ReplyDelete
  4. இன்றைய சூழ்நிலை இவ்வாறு தவறாக நினைக்க வைத்து விடுகிறது... இதனால் மேலும் மேலும் பிரச்சனை தான்... நல்லதொரு ஆக்கத்திற்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete
  5. சமுதாயத்தை உற்று கவனித்த அனுபத்தில் இருந்து வந்துள்ளன வரிகள்... அருமை.

    ReplyDelete
  6. நல்ல விழிப்புணர்வு பதிவு.

    ReplyDelete
  7. மிகவும் அருமையாக,நாசூக்காக இன்றைய இளம் சமுதாயத்துக்கு ஏற்ற வகையில் எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்!நன்று!!!

    ReplyDelete
  8. //Avargal Unmaigal said...
    மிக சரியாகவும் தெளிவாகவும் சொல்லப்பட்ட பதிவு. நிஜமாகவே இதை எழுதிய உங்களை பாராட்டுகிறேன் //

    நன்றி மதுரை!

    ReplyDelete
  9. // Youngcrap said...
    அன்பான உறவு நீடித்தால் ஓகே. இல்லையென்றால்.........!
    இல்லை என்றால் பிள்ளை எதற்கு? ஊருக்காகவா?? //

    லாஜிக்கலா உங்க கேள்வி ஓகே..பிடிக்கலைன்னாலும் குழந்தை பெத்துக்கிறதும் அந்த குழந்தைக்காகவே வாழ்ந்து தங்கள் வாழ்க்கையை அர்த்தமாக்கிக் கொள்வதும் நம் சமூக யதார்த்தம்.

    ReplyDelete
  10. // Manimaran said...
    லேட் மேரேஜ் கூட இதற்கு காரணமாகிறது.

    மருத்துவ ரீதியாகவும் சில விசயங்களை பகிர்ந்திருக்கலாம். //

    உண்மை தான்... லேட் மேரேஜ் பாயிண்டை பதிவில் விட்டு விட்டேன். முன்பெல்லாம் 25 வயதிலேயே ஆணுக்கு கல்யாணம் ஆகிவிடும். ஆனால் படிப்பு, வேலை, செட்டில் ஆவது என 30ல் தான் திருமணமே. அதுவும் இந்த விஷயத்தை ஆழமாகப் பாதிக்கவே செய்கிறது.

    ReplyDelete
  11. // திண்டுக்கல் தனபாலன் said...
    இன்றைய சூழ்நிலை இவ்வாறு தவறாக நினைக்க வைத்து விடுகிறது... இதனால் மேலும் மேலும் பிரச்சனை தான்... நல்லதொரு ஆக்கத்திற்கு பாராட்டுக்கள்...//

    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தனபாலன்.

    ReplyDelete
  12. // k.murugaboopathy sivagiri erode said...
    சமுதாயத்தை உற்று கவனித்த அனுபத்தில் இருந்து... //

    அடிபட்டு, மிதிபட்டு, பட்டுத் தெளிந்து.....மேலும் மானே, தேனேயும் சேர்த்துக் கொள்ளலாம் பாஸ்!

    ReplyDelete
  13. // இம்சைஅரசன் பாபு.. said...
    அருமை.:)) //

    சிங்கம் வாயைத் திறக்குன்னா, பதிவு ஹிட் தான்!

    ReplyDelete
  14. // ராஜி said...
    நல்ல விழிப்புணர்வு பதிவு.//

    மருத்துவரின் பார்வையிலும், பெண்களின் பார்வையிலும் இந்த விஷயம் பற்றி பல பதிவுகள் இடப்பட்டிருந்தாலும், ஆண்களின் பார்வையில் இந்த விஷயம் எழுதப்படவில்லை என்று நினைத்தேன். அதைச் சரியாகவே செய்திருக்கிறேன் என்று உங்கள் பின்னூட்டம் உணர்த்துகிறது. நன்றி சகோ!

    ReplyDelete
  15. // Subramaniam Yogarasa said...
    மிகவும் அருமையாக,நாசூக்காக...//

    நம்மளை மாதிரி வெட்கம் வி(கெ)ட்டவர்கள்தானே இதைப் பற்றிப் பேச முடியும் ஐயா!

    ReplyDelete
  16. இதுல என்ன வெட்கம் வேண்டிக் கெடக்குது?///'கோபாலா கோபாலா' படத்தில,வெ.ஆ.மூர்த்தி டயலாக் தான் ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது.

    ReplyDelete
  17. இதுல என்ன வெட்கம் வேண்டிக் கெடக்குது?///'கோபாலா கோபாலா' படத்தில,வெ.ஆ.மூர்த்தி டயலாக் தான் ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது.
    October 8, 2013 at 1:08 PM//ஹீ!ம்ம்

    ReplyDelete
  18. உண்மையில் இந்த பகிர்வு பலரை சந்திக்க வைக்கும் ஒரு விடயம் ஐயா! என்றாலும் புலம் பெயர் தேசத்தில் இந்த இளம் குடும்ப வம்ச விருத்தியில் இன்னும் பல விடயம் இங்கு தாக்கம் செய்கின்றது !

    ReplyDelete
  19. புலம் பெயர்தேசத்தில் வாலிப வயதில் வருவோருக்கு அடைக்கல் விசா கிடைப்பதில் இருக்கும் காலச்சிக்கல்/நடைமுறை சிக்கல்! அது கடந்து பொருளாதார தீர்வின் பின் தம்பதியாகும் போது ஏற்படும் குடியகல்வு/குடிவரவு காத்திருப்புக்கு ஏற்படும் காலம் !!அதன் பின் வரும் புலம் பெயர் மொழி அறிவு வளர்பின் கால நிலை என பலரும் இன்று எதிர்நோக்கும் சூழல் என்பது பதிவு செய்ய வேண்டும் முன்னைய தலைமுறை கடந்து நாம் சிந்திக்க வேண்டும் செங்கோவியாரே! உருகி பின் உணர்ந்து தெளிந்து சுகமாக வாழ காலம் ஓடிவிடுகின்றது சினிமா நடிகை சினேஹா போல !ஹீ எல்லாம் அனுபவம் தான் என்று சொல்ல ஆசைதான் ஆனாலும் !ஹீ !

    ReplyDelete
  20. இன்னும் இது பற்றி பேசுவோம் நேரம் கிடைக்கும் போது தொடர்ந்து விரைவில்!ஹீ

    ReplyDelete
  21. நல்ல பதிவு வாழ்த்துக்கள் இது போன்ற விழிப்புணர்வு இளைய தலைமுறைக்கு அவசியம்

    ReplyDelete
  22. நல்ல பதிவு வாழ்த்துக்கள் இது போன்ற விழிப்புணர்வு இளைய தலைமுறைக்கு அவசியம்

    ReplyDelete
  23. எல்லோரும் படிக்க வேண்டிய விழிப்புணர்வு பகிர்வு.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  24. தங்கள் பேச்சை கண்டிப்பாக கேட்கிறேன்.... ;)

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.