இதுவரை திரைக்கதைக்குத்
தேவையான அடிப்படை விஷயங்களை முதல் பாகத்திலும், திரைக்கதையை வடிவமைக்க உதவும் ப்ளேக்
ஸ்னிடரின் பீட் ஷீட்டை இரண்டாம் பாகத்திலும் பார்த்துவிட்டோம்.
வெறும் தியரியாக
மட்டுமல்லாமல், இவையெல்லாம் உண்மையிலேயே உதவக்கூடிய விஷயங்கள் என்பதை துப்பாக்கி மற்றும்
முந்தானை முடிச்சு படங்களை விவரித்ததன்மூலம் நாம் நிரூபித்திருக்கிறோம். இந்தத் தொடரின்
நோக்கமே, கதைக்கரு முதல் முழுத் திரைக்கதை வரை எப்படி உருவாக்குவது என்று படிப்படியாக
விளக்குவது தான்.
உங்களிடம் இருக்கும்
கதையில் அடிப்படை விஷயங்களும் பீட் ஷீட்டின் படி 15 பீட்களும் இருக்கிறதா என்று செக்
செய்துகொள்ளுங்கள். 15 பீட்ஸில் ஒன்றிரண்டு குறைந்தாலும், இடம் மாறி வந்தாலும் பிரச்சினை
இல்லை என்று ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.
இப்போது நீங்கள்
அடுத்துச் செய்ய வேண்டிய விஷயம், உங்களுக்குப் பிடித்த படங்களையும் சில வெற்றிப்படங்களையும்
எடுத்துக்கொண்டு இந்த அடிப்படை விஷயங்களும், பீட் ஷீட்டும் எந்த அளவிற்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன
என்று கற்றுக்கொள்ள ஆரம்பியுங்கள். எந்த திரைக்கதை
ஜாம்பவான்களைக் கேட்டாலும், பல திரைக்கதைகளைப் படித்து கற்றுக்கொண்டதாகவே சொல்கிறார்கள்.
ஆரம்பத்தில் நானும்
திரைக்கதையைப் படித்து என்ன கற்றுக்கொள்ள முடியும் என்று குழம்பியிருக்கிறேன். செக்
லிஸ்ட் இல்லாமல் திரைக்கதைகளைப் படித்தால், படம் பார்த்தது போல் தான் இருக்கும். (அதைவிட
சுவாரஸ்யம் குறைவாகவே இருக்கும்.) இந்தத் தொடரில் உள்ள விஷயங்களை செக் லிஸ்ட்டாகக்
கொண்டு, திரைக்கதைகளைப் படிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் என்பதே எனக்குப் பின்னாளில்
தான் புரிந்தது. எனவே உங்களுக்கும் அதையே சிபாரிசு செய்கிறேன்.
இந்த இடத்தில்
ஒரு ஒப்புதல் வாக்குமூலம்…எனக்கு திரைக்கதைகளைப் படிக்கப் பிடிக்காது. அவற்றை படமாகப்
பார்த்துக் கற்றுகொள்ளவே பிடிக்கும். ஒரு படத்தை முதல் இரண்டுமுறை பார்க்கும்போது,
கதையில் இன்வால்வ் ஆகிவிடுவோம். அதன்பிறகு பார்க்கும்போதே, அதில் உள்ள விஷயங்கள் பிடிபடத்துவங்கும்.
இந்தத் தொடரில் விளக்கப்பட்ட துப்பாக்கி, முந்தானை முடிச்சு போன்ற படங்களையும் பிற
ஆங்கிலப்படங்களையும் ‘பார்த்தே’ நான் கற்றுக்கொண்டிருக்கிறேன். எனவே உங்களுக்கும் இந்த
’வியாதி’ இருந்தால்…டோண்ட் ஒர்ரி.
இப்போது உங்களிடம்
ஒரு கதையும், பீட் ஷீட்டும் உருவாகியிருக்க வேண்டும். இனி ஒவ்வொரு பீட்டுக்குள்ளும்
போய், சீன்களை நாம் டெவலப் செய்யவேண்டும். அதைப் பற்றி அடுத்து விரிவாகப் பார்க்கும்
முன், ஒரு யூ-டர்ன் அடிக்க வேண்டியுள்ளது. அதை இப்போது அடிப்போம்.
ஆங்கிலத்தில் வரும் எல்லா திரைக்கதை புத்தகங்களையும் படித்துவிட்டு, அதில் சொல்லப்பட்ட மாதிரியே த்ரீ ஆக்ட் ஸ்டர்க்சர், பீட் ஷீட் இவற்றை வைத்து ஒரு திரைக்கதையை உருவாக்கினாலும்.....அது இங்கே ஓடுவது கஷ்டம்!
மூன்று அங்க வடிவம்,
பீட் ஷீட் இவையெல்லாம் இருந்தால் போதுமா? இவை பெர்ஃபெக்ட்டாக அமைந்தாலே படங்கள் ஓடிவிடுமா?
எனும் கேள்விகள் இங்கே எழுப்பப்பட்டே வருகின்றன. இவற்றைப் பின்பற்றி திரைக்கதை எழுதும்
ஒருவர், ஹாலுவுட்டிற்கு ஏற்றபடியே(?) ஒரு திரைக்கதையை உருவாக்கிவிடும் ஆபத்து நிறைய
இருக்கிறது. அதாவது, அது நம்மூரிலும் ஹிட் ஆகாது, ஹாலிவுட்காரனும் இந்தக் கதையை சீந்தமாட்டான்
எனும் நிலைமை பல ‘த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சர்’ படங்களுக்கு நிகழ்ந்திருக்கின்றன.
உதாரணமாக, The
Call என்றொரு ஹாலிவுட் படம் 2013ல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. படத்தின் கதை ஆரம்பம்
ஆவதில் இருந்து, ஒரு பெண் ஒரு காரின் டிக்கியில் அடைத்துவைக்கப்பட்டு பயணம் செய்வது
போன்றே திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.
அதே போன்று ஒரு
விறுவிறுப்பான ஆக்சன் படம், தமிழில் வந்த அரிமா நம்பி. ஹீரோவும் ஹீரோயினும் சேஸிங்கிலேயே
இருப்பது போல் அமைத்திருந்தார்கள். ஆனால் இந்தப் படம், சூப்பர் ஹிட் ஆகவில்லை. ‘என்னப்பா
இது..ஓடிக்கிட்டே இருக்கிறாங்க..கொஞ்சநேரம் தூங்கி எழுந்துட்டுப் பார்க்கிறேன், அப்பவும்
ஓடிக்கிட்டே இருக்கிறாங்க!” என்பது தான் அரிமா நம்பிக்குக் கிடைத்த விமர்சனம். இதில்
வேடிக்கை என்னவென்றால், The call படத்தைப் பார்த்துவிட்டு ஒன்றுமே சொல்லாமல் பாராட்டியவர்கள்கூட,
அரிமா நம்பியை விமர்சித்தார்கள்.
இரண்டு படங்களுக்கும்
தரத்தில் பல வித்தியாசங்கள் இருந்தாலும், கொஞ்ச நேரம் தூங்கிவிட்டுப் பார்த்தாலும்
ஓடிக்கொண்டே தான் இருப்பார்கள். ஆனால் The Call படத்தில் அது ஒரு குறையாக இல்லை. ஏன்?
முதலில் நாம் தெரிந்துகொள்ள
வேண்டிய விஷயம், நாம் எல்லாப் படங்களையும் ஒரே அளவுகோலில் வைத்துப் பார்ப்பதில்லை.
ஹிந்திப் படத்தில் உள்ள ‘ஓவர் எக்ஸ்போசரை’ சாதாரணமாக ஏற்றுக்கொள்ளும் நாம் தான், தமிழ்ப்படத்தில்
அப்படி வந்தால் கொதித்தெழுகிறோம். மலையாளப்படங்களில் வரும் நிதானமான திரைக்கதையை ரசிக்கும்
நாம்தான், தமிழில் அதே படம் டப்/ரீமேக் செய்யப்பட்டாலும் ‘டெட் ஸ்லோ’ என்று சொல்கிறோம்.
கன்னட லூசியாவை ரசிக்கிறோம், தமிழ் ‘என்னைப் போல் ஒருவனை’ ஃப்ளாப் ஆக்குகிறோம்.
ஒரே ஆடியன்ஸ் தான்…ஆனால்
ஒவ்வொரு படத்தையும் அணுகும்விதம் வேறுபடுகிறது. ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும், ஒவ்வொரு
வகையான எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. ஒரு படைப்பாளியாக, இந்த வித்தியாசத்தை கவனத்தில்
கொள்வது நல்லது. இப்போது எல்லாத் துறைகளிலுமே முக்கியமான விஷயமாக ஆகிவிட்ட ஒன்றைத்தான்
இங்கேயும் சொல்கிறேன்:
Know your
Customers/Audience.
அடுத்து சீன்களை
டெவலப் செய்யும் முன், முதலில் உங்கள் ஆடியன்ஸை அறிந்துகொள்ளுங்கள். வெற்றிக்கு அதுவே
அடிப்படை. இதுபற்றி மேலும்…
(தொடரும்)
2 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.