Saturday, September 16, 2017

துப்பறிவாளன் - திரை விமர்சனம்

முகமூடிக்குப் பிறகு மீண்டும் ஒரு கமர்சியல் ஹீரோவுடன் கமர்சியல் படம் என்று மிஷ்கின் அறிவித்தபோது, கொஞ்சம் பயமாகவே இருந்தது. இருந்தாலும், முகமூடி சொதப்பிவிட்டதை மிஷ்கினே ஒத்துக்கொண்டதால், பழைய தவறுகளைக் களைந்து தரமான கமர்சியல் படமாக வரும் என்று எதிர்பார்த்தேன். எதிர்பார்ப்பை நிறைவேற்றிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

ஷெர்லாக் ஹோம்ஸ் கதாபாத்திரத்தை கணியன் பூங்குன்றனாக தமிழ்ப்படுத்துவதில் ஆரம்பிக்கிறது மிஷ்கின் டச். துப்பறிவாளன் கேரக்டருக்கு இது முதல் படம்(பார்ட்) என்பதால், கணியன் யார், எப்படிப்பட்டவன் என்று நமக்கு புரியவைக்க கொஞ்சம் அதிக நேரத்தையே படம் எடுத்துக்கொள்கிறது. ஆனாலும் கணியனின் புத்திசாலித்தனத்தையும், கிறுக்குத்தனத்தையும் நாம் புரிந்துகொண்டால் தான், இரண்டாம்பகுதி பரபரப்ப்பில் கணியன் செய்யும் சிறு நகாசு வேலைகளைக்கூட நாம் புரிந்து ரசிக்க முடியும். உதாரணம், ஹோட்டல் ரிசப்சனில் மொட்டை மறைந்ததும் ஜான் விஜய்க்கு ஆபத்து என்று ஓடுவது.

பெரிய பெரிய கேஸ்களை எல்லாம் வேண்டாம் என்று சொல்லும் ஹீரோ, ஒரு சிறுவனின் நாய்க்குட்டி கேஸை எடுத்துக்கொண்டு துப்பறிவது தான் கதை. மிக எளிமையான கேஸ் என்று தோன்றுவது, தேன் கூட்டில் கைவைத்தது போல் பல சிக்கல்களுக்குள் ஹீரோவையும் நம்மையும் கொண்டு செல்கிறது. முதல் ஃபைட் சீனில் ஆரம்பித்து, கிளைமாக்ஸ்வரை ரோலர் கோஸ்டர் பயணம் தான்.

டெவில் குரூப்பின் வேலைகளை ஹீரோ துப்பறிந்து நெருங்க, நெருங்க, டெவில் குரூப் தன்னைத்தானே ஓவ்வொருவராக அழித்துக்கொள்வது தமிழுக்கு புதுமை தான். ஹீரோவோ போலீஸோ வில்லன் குரூப்பை கொல்வதில்லை. அவர்களே தங்களை கொன்றுகொல்கிறார்கள்; மெயின் வில்லன் டெவில் மட்டுமே எஞ்சி ஹீரோ கையால் சாகிறான்.

கமர்சியல் ஆடியன்ஸுக்காக இதில் மிஷ்கின் நிறைய இறங்கி வந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். பாக்கியராஜ் நெஞ்சில் குத்தப்படும்போது, நெஞ்சுவலி என்று பாக்கியராஜ் ‘நடித்த’ ஷாட் வந்து போவது ஒரு உதாரணம். இந்த மாதிரி ஸ்பூன் ஃபீடிங் வேலைகள், மிஷ்கின் ரசிகர்களுக்குத் தேவையில்லை. கால்களை காட்டும் ஷாட் இல்லாதது எனக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. எங்குபோனாலும் அறிவுஜீவிகள் கால்களைப் பற்றியே கேட்டு, மிஷ்கினை வெறுப்பேற்றிவிட்டார்கள் போல. ஒருவர் சினிமாவில், தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொள்வது அவ்வளவு எளிதல்ல. மணிரத்னம் என்றால் இருட்டு, ரஜினி என்றால் தலை கோதுதல் என்று கஷ்டப்பட்டு ஒரு அடையாளத்தை பிடித்து வைத்தால், அறிவுஜீவிகளுக்கு அது பொறுப்பதில்லை. ‘ஏன் இருட்டுலயே படம் எடுக்கிறார்?...ஏன் கமல் மாதிரி நடிக்க மாட்டேங்கிறார்...ஏன் காலையே காட்டுகிறார்’ என்று கிளம்பி வந்துவிடுகிறார்கள். இதற்கு மிஷ்கின் இறங்கிப்போவது சரியல்ல.


விஷாலுக்கு இதுவொரு முக்கியமான படம். ஆரம்பக் காட்சிகளில் கணியன் பூங்குன்றனாக மிஷ்கின் சேட்டைகளுடன் வெடுக்,வெடுக்கென அவர் நடப்பதும் பேசுவதும் பீதியூட்டினாலும், கொஞ்சநேரத்தில் அந்த கேரக்டர் நம் மனதில் உட்கார்ந்துவிடுகிறது. இரண்டாம்பாதியில் வரும் ஆக்சன் சீகுவென்ஸ், விஷாலுக்கு சரியான வேட்டை என்று தான் சொல்ல வேண்டும். மவுத் ஆர்கன் ஃபைட்டும் சைனீஸ் ரெஸ்டாரண்ட் ஃபைட்டும், பைக் சேஸிங்கும் விஷால் இறங்கி அடிக்கும் களங்கள்.


ஒருமுறை ஜாக்கிசான் ஃபைட் சீன்ஸ் பற்றிப் பேசும்போது ‘அதில் ஒரு ரிதம் இருக்கும். அதுவும் ஒருவகை நடனம் தான்’ என்று சொல்லியிருந்தார். அவரது சைனீஸ் படங்களில் அதை நாம் பார்க்கலாம். ஆனால் ஹாலிவுட் படங்களில் அந்த ரிதம் இருக்காது. துப்பறிவாளன் சண்டைக்காட்சிகளில் அந்த ரிதத்தை உணர முடிந்தது. சைனீஸ் ரெஸ்டாரண்ட் சண்டைக்காட்சியில், மியூசிக்கும் கருப்பு-சிவப்பு-வெள்ளை கலர் பேலட்டும் மயிர்க்கூச்செறியும் ஃபாஸ்ட் மூவ்மெண்ட்டும் நம்மை கிறங்கடிக்கின்றன. அதிலும் ஷூ-விற்கு க்ளோசப் வைத்து ஒரு சின்ன டிரம்ஸ் பீட் போட்டிருக்கிறார்கள்..கொன்னுட்டாங்க!

பிரசன்னா தான் நமக்கு காமிக் ரிலீஃப் கொடுப்பது. நிறைய காட்சிகளில் அவரது ‘ம்..ஆ’போன்ற ஒற்றை வார்த்தை ரியாக்சனுக்கே சிரிப்பலை எழுகிறது. பவர் பாண்டிக்கு அடுத்து இதிலும் ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக பிரசன்னா ஜெயித்திருப்பது சந்தோசம்.

ஹீரோயின் அனு இமானுவேல், நல்ல அறிமுகம். மருண்ட பார்வையுடன் விஷாலை அவர் எதிர்கொள்வதே அழகு. ‘கடைசிவரை’ பிக்பாக்கெட்டாக இருந்து, நம்மை கொள்ளை கொள்கிறார். மிஷ்கின், கால்களை கைவிட்டாலும் ஹீரோயினின் கைகளுக்கு இரு முக்கிய இடங்களில் க்ளோசப் வைக்கிறார். ஒன்று, ஹீரோ கைகளில் முத்தமிடும்போது...அடுத்து, வினய்யை ஹீரோயின் வீட்டுக்குள் அழைக்கும்போது. ஒரு நல்ல ஃபிலிம் மேக்கரின் வேலையே, இப்படி பார்வையாளர்களின் சப்-கான்ஸீயஸ் மைண்டுடன் விளையாடுவது தான். ராபர்ட் ப்ரெஸ்னனின் பிக்பாக்கெட் மூவியில், கைகளை மிக அழகாக காட்சிப்படுத்தியிருப்பார். இதிலும் அதிகம் அப்படி எதிர்பார்த்தேன். இரு இடங்களில் மட்டும் வலுவாக ‘பிக்பாக்கெட்டின்’ கைகளை காட்டி முடித்துவிட்டார்.

ஹீரோயினை வேலைக்கு அழைக்கும் ஹீரோ, அவரது பிக்பாப்பெட் மூளையை துப்பறிவதற்கு பயன்படுத்திக்கொள்வார் என்று எதிர்பார்த்தால், வீட்டு வேலைக்காரி ஆக்கியது  கொடுமை.

மிஷ்கினை நாம் நேசிப்பதற்குக் காரணம், ஒவ்வொரு சீனையும் அழகாக்கவும் நேர்த்தியாக வடிவமைக்கவும் அவர் எடுத்துக்கொள்ளும் அக்கறை தான். ஹீரோவின் வீடு வடிவமைக்கப்பட்ட விதமும், அதன் க்ரீன் - ப்ரொவ்ன் கலர் பேலட்டும் ஒரு புதிய லுக்கை கொடுக்கின்றன. கதை சென்னையில் தான் நடக்கிறது. முடிந்தவரை பேக்ரவுண்டை ப்ளர் ஆக்கி, காட்சிகளை அழகாக்குகிறார். ஒரு சீனில் அவர் காஃபி போட வேண்டும். அது சாதாரண காஃபி அல்ல. மரணத்திற்கான தூது. அந்த இடத்தில் வெர்மீரின் கிச்சன் மெய்ட் (மில்க் மெய்ட்) பெயிண்டிங்கை பயன்படுத்துகிறார்.

சினிமா என்பது பல கலைகளின் சங்கமம் ஒரு நல்ல கலை ரசிகன் ஃபிலிம் மேக்கர் ஆகும்போது, உலகில் உள்ள கலைகளையும் சாத்திரங்களையும் தன் படைப்பினுள் கொண்டுவருகிறான். வான்கோவின் ஓவியங்களும் வெர்மீரும் ஓவியங்களும் பல காட்சிகளுக்கு இன்ஸ்பிரேசன் ஆகியிருக்கின்றன. அகிரா குரசோவாவின் ட்ரீம்ஸ் ஒரு நல்ல உதாரணம். ஒரு தமிழ் படத்தில் வெர்மீரின் ஓவியத்தையும், அதை பிரதிபலிக்கும் ஷாட்டையும் பார்த்தபோது மிக மகிழ்ச்சியாக இருந்தது. ( இதையும் ஒரு இணைய அறிவுஜீவி, காப்பி என்று கிண்டல் அடித்திருந்தார். தலையில் அடித்துக்கொண்டேன்! )

வினய்-ஆண்ட்ரியா-பாக்கியராஜ்-மொட்டை-தாடி-ஜான் விஜய் என்று வில்லன் கும்பலையும் அவர்களுக்குள் இருக்கும் பாசப்பிணைப்பையும் படம் அழகாக பதிவு செய்கிறது. மொட்டை தற்கொலை செய்யும் காட்சி கவிதை என்றால், பாக்கியராஜ் சாகும் காட்சி சோகம். வில்லன் என்றாலும் பாக்கியராஜுக்குள் ஒரு மனிதம் இருக்கும். தனக்கு நெஞ்சுவலி என்று பதறிய கார் டிரைவருக்கு பணம் கொடுப்பதும், அவன் சாகப்போவது தெரிந்து திரும்பிப் பார்த்தபடி போவதும், மனைவிக்கு விடுதலை கொடுப்பதும் டச்சிங்கான சீன்ஸ். பாக்கியராஜை பேசவிட்டால் சொதப்பிவிடும் என்று ஒரு வரி டயலாக்கிலேயே மேனேஜ் செய்திருப்பது மிஷ்கினின் புத்திசாலித்தனம்.

ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும்......................

ஆரம்ப காட்சிகள் நீளமாக, பொறுமையைச் சோதிக்கின்றன. ஹீரோயின் கேரக்டரைத் தவிர வேறு எந்த கேரக்டருமே நம் மனதைத் தொடுவதில்லை.

துப்பறிவாள் வில்லனைப் பிடிக்கிறார். அவர்கள் இதுவரை என்ன செய்தார்கள், இது முழுமையாக என்ன கேஸ் என்பது தான் ஆடியன்ஸுக்கு சுத்தமாக விளங்கவில்லை. எல்லாவற்றையும் வசனத்திலேயே சொல்ல, கமலேஷ் யார், ராம் ப்ரசாத் யார் என்று நாம் யோசிப்பதற்குள் படம் முடிந்துவிடுகிறது.

துப்பறிவாளன் என்ன கண்டுபிடித்தார் என்று கேட்டால் ‘கமலேஷ் காசு கொடுத்தான். சொர்ணவேல் பையன் செத்தான். சிம்ரனை விட சொர்ணவேல் பொண்டாட்டி அழகு. அது தெரிஞ்ச சிம்ரன் புருசனும் செத்தான். சொர்ணவேல் ஃபீல் ஆகிட்டான். அவனை டெவில் கொன்னுட்டான். டெவில் யார்னா, டெவில் டெவில் தான். நாயை டெவில் போட்டான். அப்புறம், ஆரணி ஜான் விஜய்யை கொன்னுட்டாள். ஜான் விஜய் சோஃபா கொண்டுவந்தவன். ஆனால் அதுக்குள்ள இருந்த பணம், ராம் பிரசாத் கொடுத்தது. ராம் பிரசாத் சிரிச்சு செத்தார். பாக்கியராஜ் தவண்டு செத்தார். டெவில் காஃபி குடிச்சான். டர்ர்னு சொர்ணவேலை அறுத்துக் கரைச்சான். விக்டர் ஹெல்ப் பண்ணான். ஆரணியை டெவில் போட்டான். பிச்சாவரம் போய்
ஃபாரின் போக பார்த்தான். பாவம், சாரி கேட்டு செத்தான் டெவில்’. இது தான் நடந்தது. புரிஞ்சதா?

படம் முழு திருப்தி தராமல் போகக் காரணமே, என்ன எழவு நடந்தது என்றே புரியாமல் போனது தான். இதை மட்டும் இன்னும் தெளிவாகச் சொல்லியிருந்தால், துப்பறிவாளன் எல்லா செண்டரிலும் ஹிட் ஆகியிருக்கும்.

இருப்பினும், ஒரு விறுவிறுப்பான & தரமான ஆக்சன் படம் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு துப்பறிவாளன் செமயான விருந்து தான்...தாராளமாகப் பார்க்கலாம்.
மேலும் வாசிக்க... "துப்பறிவாளன் - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, September 1, 2017

The Conformist (IL CONFORMISTA)- இத்தாலிய சினிமா - அறிமுகம்


தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் ஒரு சினிமாவைப் பார்க்கிறார். ‘படம் பிடிக்கலை..இதுவொரு குப்பை’ என்று சொல்கிறார். உடனே அவர் கடும் மிரட்டலுக்கு ஆளாகிறார். அவர் வீட்டுப் பெண்களைப் பற்றி வசைமழை பொழிகிறார்கள். தன் அடையாளத்தைக் குறிப்பிட்டே, ‘உன்னை கொலை செய்துவிடுவேன்’ என்று மிரட்டுகிறார்கள். அவர் அந்த படத்தின் ஹீரோவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார், உங்கள் ரசிகர்களைக் கண்டியுங்கள்..அவர்களால் என் உயிருக்கு ஆபத்து என்று. அங்கேயிருந்து எந்த பதிலும் இல்லை. கனத்த மௌனம். ஒரு எழுத்தாளனின் உயிரைவிட ஒரு கமர்சியல் படத்தின் வசூல் முக்கியம் இல்லையா? அடுத்த படம் ரிலீஸ் ஆகும்போது விமர்சனம் எழுத, எழுத்தாளர் யோசிக்க வேண்டும் இல்லையா? 

‘நேர்மை என்றால் ஹமாம்’ என்பது போல் நல்லவர் என்றால் அந்த நடிகர் தான் எனும் பிம்பம், மீடியாக்களால் கடந்த பத்து வருடங்களாகவே வளர்த்தெடுக்கப்பட்டது. கிளிப்பிள்ளை மாதிரி எல்லோருமே இன்று அவர் நல்லவர் என்று ஒத்துக்கொள்வார்கள், நீங்கள் உட்பட. பாசிடிவ் செய்திகளைத் தவிர வேறு எதுவுமே எங்கேயும் வெளிவரவில்லை. நெகடி செய்திகளும் உடனடியாக நீக்கப்பட்டன, மறைக்கப்பட்டன. தற்போதுகூட ஒரு பிரபல இணையதளத்தில் அந்த படத்தின் விமர்சனம் ‘திருத்தி’ எழுதப்பட்டது. முதல்நாள் மோசமான படம் என்ற விமர்சனம், அடுத்த நாளே அருமை என்றது. இப்படி பாசிடிவ் செய்திகளை மட்டுமே கேட்டு பழகிப்போன ரசிகர்களுக்கு, திடீரென ஒரு படம் குப்பை என்று நெகடிவ் விமர்சனம் வரவும், அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. ‘என் தலைவன் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்..அவர் படத்தையே குறை சொல்றியா?’ என்று மிரட்டலில் இறங்கிவிட்டார்கள்.

ஏன் விமர்சித்த எழுத்தாளனுக்கு ஃபோன் செய்து ‘கொன்று விடுவேன்’ என்று ‘சொன்னார்கள்’? ஏனென்றால் கையில் அதிகாரம் இல்லை, எனவே ‘சொன்னார்கள்’. இல்லையென்றால் செய்திருப்பார்கள். தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரு சில நல்லவர்களில் ஒருவர் என்று மீடியாக்களால் முன்னிறுத்தப்படும் நடிகரின் ரியாக்சனே இப்படி என்றால், மற்றவர்கள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. தனக்கு எதிரான கருத்தை யாரும் வெளியிட்டுவிடக்கூடாது, அந்த கருத்தும் கருத்தைச் சொல்பவரும் சமூகத்தில் இருந்தே ‘நீக்கப்பட’ வேண்டியவர்கள் என்பது தான் பாசிசம். இது சென்ற வாரத்தில் இங்கே நடந்த வரலாறு!

ஹிட்லர், முசோலினி போன்ற தனிமனிதர்களால் எப்படி ஒரு கூட்டத்தையே வெறிபிடிக்க வைக்க முடிந்தது என்பதற்கான பதில், இந்த சமகால நிகழ்வுகளில் ஒளிந்திருக்கிறது. எழுத்தாளரை மிரட்டியவர்கள் யார் என்று பார்த்தால், மிகப் பெரிய ரவுடியாகவெல்லாம் இருக்க மாட்டார்கள். சாமானியர்கள். அன்றாடங்காய்ச்சிகள். சுய அடையாளம் இல்லாதவர்கள். தன் தலைவனைப் பற்றியோ தலைவன் சம்பந்த விஷயங்களைப் பற்றியோ எதிர்மறைக் கருத்தை சகித்துக்கொள்ள முடியாத மனநிலைக்கு தள்ளப்பட்டவர்கள். மிகத் தீவிரமாக தன் தலைவனை நேசிப்பவர்கள். ஆனால் இவர்களை விடவும் மோசமான ஆட்கள் உண்டு, அவர்கள் தான் Conformists.


ஒரு சாதாரண திரைப்படத்திற்காக ஒரு இலக்கியவாதி மேல் தாக்குதலே நடந்தாலும், ஒன்றுமே நடக்காதது போல் கமுக்கமாக இருப்பவர்கள். அந்த நடிகராலோ அல்லது அவர்களின் ரசிகர்களாலோ கிடைக்கும் ஆதாயங்களை இழக்க விரும்பாதவர்கள். தனக்கு பயன் கிடைக்கும் என்று தெரிந்தால், ரசிகர் கூட்டத்துடன் இணைந்து தாக்குதலில் இறங்கக்கூடியவர்கள். இவர்களுக்கு ஃபாசிச தலைமையின் கொள்கை பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மெஜாரிட்டி ஆதரவு எந்தப் பக்கம் இருக்கிறதோ, எந்தப் பக்கம் இருந்தால் சௌகரியங்கள் கிட்டுமோ அந்தப் பக்கம் நிற்கக்கூடியவர்கள். ஃபாசிச தலைமையை விட, அவர்களை ஆதரிக்கும் கூட்டத்தை விட ஆபத்தான ஆட்கள் இந்த Conformists.

சினிமாக்களில் ஃபாசிச தலைமையைப் பற்றி படங்கள் வந்திருக்கின்றன. அவர்களை ஆதரிக்கும் கூட்டத்தைப் பற்றி, எதிர்க்கும் கூட்டத்தைப் பற்றி, பாதிக்கப்பட்ட கூட்டத்தைப் பற்றியெல்லாம் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இந்த வகைகளில் சேராமல், சுயநலத்தைத் தவிர வேறு எதையும் யோசிக்காத, அதே நேரத்தில் கெட்டவர்கள் என்றும் ஒதுக்கிவிட முடியாத Conformists பற்றி இலக்கியங்களோ, சினிமாக்களோ அதிகம் பேசியதில்லை. காரணம், இதுவொரு சிக்கலான மனநிலை. ‘நிம்மதியாக, ஊரோட ஒத்து வாழ நினைக்கும் அப்பாவிகள்’ என்றும் இவர்களைச் சொல்லலாம், சுயநலத்திற்காக ஒரு தவறுக்கு துணை போகிறவர்கள் என்றும் சொல்லலாம். இந்த சிக்கலான கேரக்டரை காட்சிப்படுத்துவது மிகவும் கஷ்டம். அதை வெற்றிகரமாகச் செய்த படம் ‘ The Conformist (IL CONFORMISTA)'. 

இந்த படத்தின் ஹீரோவின் ஒரே லட்சியம், ஊரோடு ஒத்து வாழ்வது தான். சிறுவயதில் நடந்த சில மோசமான நிகழ்வுகளால், இயல்பான வாழ்க்கையில் இருந்து விலகிப்போனவன் அவன். எனவே ஒரு ’இயல்பு வாழ்க்கை’ வாழ என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்ய விழைகிறான். 

பெரும்பாலான மக்கள் சர்வாதிகாரியின் பக்கம் நிற்கிறார்கள்; அவனும் அங்கே சேர்ந்துகொள்கிறான்.

பெரும்பாலான மக்கள் திருமணம் செய்து வாழ்கிறார்கள்; அவனும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறான். 

திருமணத்திற்கு முன் பாவ மன்னிப்பு கேட்கும் வழக்கம் இருக்கிறது; அவனும் போய் பாவ மன்னிப்பு கேட்டுக்கொள்கிறான். ஆனாலும் அதுவரை செய்த தவறுகளைத் தொடர்கிறான்.

ஹனிமூன் ட்ரிப்புக்கு அவன் கிளம்புகையில், அவனுக்கு ஒரு அசைன்மெண்ட் கொடுக்கப்படுகிறது. ஃபாசிசத்திற்கு எதிர் கருத்து கொண்ட அவனது கல்லூரிப் பேராசிரியரைக் கொல்ல வேண்டும். அவனுக்கு மிகவும் பிடித்த பேராசிரியர் அவர். ’அதனால் என்ன?’ என்று ஹனிமூன் ட்ரிப்பின் ஆன் தி வேயில் அவரைக் கொலை செய்ய ஃப்ரான்ஸ் போய் இறங்குகிறான். அங்கே சிக்கல், ‘அன்னா’ வடிவில் வருகிறது.

அவளைப் பார்த்ததும் காதலில் விழுகிறான். அன்னா ஒரு பேரழகி. ஆனால் வயதான பேராசியரின் இளம் மனைவி. இப்போது காதலுக்காக(!) பின்வாங்குவதா? அல்லது தனது இயல்பு வாழ்க்கை தொடர பேராசியரை போட்டுத்தள்ளுவதா? புது மனைவியை என்ன செய்வது? அன்னாவும் சில நாட்களில் அவன் பேராசியரைக் கொல்ல வந்தவன் என்று புரிந்துகொள்கிறாள். அவளை மீறி, பேராசியரைக் கொல்ல வேண்டும். தேவைப்பட்டால், அவளையும் கொல்ல வேண்டும்! என்ன செய்வான் ஹீரோ?
ஃபாசிசம் எந்த அளவிற்கு மோசமானது என்று அடுத்தடுத்து வரும் நிகழ்வுகளும், கிளைமாக்ஸும் நமக்குச் சொல்கின்றன. படம் முடிகையில் திகைத்துப்போய்த் தான் அமர்ந்திருக்கிறோம். கொஞ்சம் கவனமாக இல்லாவிட்டாலும் நாமும் ஒரு Conformist ஆக மாறும் அபாயம், நம் வாழ்க்கையில் இருப்பதை படம் சுட்டிக்காட்டுகிறது.

இத்தாலிய சினிமாக்களில் பை சைக்கிள் தீவ்ஸ், சினிமா பாரடைசோ பற்றிப் பேசப்பட்ட அளவிற்கு, ஏனோ இந்தப் படத்தைப் பற்றிப் பேசப்படவில்லை. இந்த படத்தின் ஒளிப்பதிவு, உலகப் புகழ்பெற்றது. பல ஃபிலிம் இன்ஸ்டுயூட்களில் ஒளிப்பதிவிற்காக ஸ்டடி செய்யப்படுவது!

என்னைப் பொறுத்தவரை இது தான் இத்தாலிய சினிமாக்களில் பெஸ்ட் என்பேன்!
மேலும் வாசிக்க... "The Conformist (IL CONFORMISTA)- இத்தாலிய சினிமா - அறிமுகம் "
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

விவேகம் - பாவம் அஜித்!

'நான் கெட்டவன் இல்லை..கேடுகெட்டவன்’ன்னு சிவா டயலாக் எழுதி, அதை அஜித் ரசிகர்கள் கொண்டாடியபோதே நினைச்சேன், இன்னும் பெருசா அந்தாளு செய்வார்னு! ...செஞ்சுட்டார்!


அஜித்தின் தொப்பையை பலரும் கேலி செய்திருக்கிறார்கள். சில பேட்டிகளில் நேரடியாகவே கேட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் உடம்பைக் குறைக்காத அஜித், இந்த படத்திற்காக குறைத்திருக்கிறார். காரணம், உண்மையிலேயே சிவாவையும் இந்த படத்தையும் நம்பியிருக்கிறார்...பாவம்!

வேகமான ஒரு கமர்சியல் படம் கொடுக்க வேண்டும், அதில் அஜித்தை ஹாலிவுட் ஹீரோ மாதிரிக் காட்ட வேண்டும் எனும் ஆர்வம் எல்லாம் ஓகே தான். ஹாலிவுட் படம் தயாரிப்பதற்கான ஆர்ட், கேமிரா, எடிட்டிங் ஒர்க் எல்லாம் செய்துவிட்டு, கதை-திரைக்கதை-வசனத்தை தெலுங்கு மசாலா ரேஞ்சுக்கு யோசித்தது நியாயமா? 

பொதுவாக ஒரு ஷாட் மனதில் நிற்க நாலு செகண்ட் வேண்டும் என்பது நடைமுறை. இதை ஹாலிவுட்டில் உடைத்து, ஒரு செகண்டிற்கும் கீழே ஷாட்ஸ் வைத்து வெற்றிபெற்றது Bourne Identity. அதில் இருந்து ஆக்சன் படங்கள் என்றாலே கேமிராவை ஆட்டணும், ஷாட் லென் த்தை குறைக்கணும் என்று ஆனது. அதை விவேகத்தில் சின்சியராகவே முயற்சித்திக்கிறார்கள். 

சண்டைக்காட்சிகளில் மட்டும் அதைச் செய்திருந்தால் பரவாயில்லை. வசனக்காட்சிகளில்கூட கேமிராவை அங்கும் இங்கும் அலைபாய்ந்ததில், எதுவுமே மனதில் நிற்காமல் எரிச்சல் வந்தது தான் மிச்சம். படத்தின் பெரிய மைனஸ், இந்த கணக்கீடு இல்லாத ஷாட் காம்போசிசன் தான். சுடுகிற குண்டு எங்கே போகிறது, எங்கிருந்து அடியாள் வருகிறான் என்று எதையுமே புரிந்துகொள்ளாத அளவில் தான் சண்டைக்காட்சிகளும் இருக்கின்றன. அஜித்தே பல வருடம் கழித்து, காலை தூக்கி எல்லாம் அடித்திருக்கிறார்; அந்த உழைப்பை நீங்ககூட மதிக்கலேன்னே எப்படி ப்ரோ?

இன்னொரு பெரும் கொடுமை, வசனங்கள். இவ்வளவு கடுப்பேற்றும் வசனங்களை ஒரே படத்தில் நான் கேட்டதேயில்லை. புருசன் பொண்டாட்டி பேசும்போதுகூடவா பஞ்ச் டயலாக் வைக்கிறது. ஒன்று கேமிராவில் மூஞ்சியை வைத்துப் பேசும் பஞ்ச் டயலாக் அல்லது ஹீரோவை வில்லனே புகழும் பில்டப் டயலாக்ஸ். எதுவுமே ஒரு அளவுக்குள் தான் இருக்க வேண்டும். இது டூ மச்..முடியல.

அந்த ‘கோட்டைசாமி’ சீன் எல்லாம் எப்படித்தான் யோசித்தார்களோ...ஏனய்யா, டேமை பார்த்தவுடனே லிங்கா ஞாபகம் வரவேண்டாமா? அலெக்ஸ்பாண்டியனில் ஓப்பனிங் சீனில் கார்த்தி குதித்தபோதும், குருவியில் விஜய் வைரத்தை திருடி குதித்தபோதும், லிங்காவில் பைக் டூ பலூனில் தலைவர் குதித்தபோதும் என்ன ஆச்சுன்னு சிவாவுக்கு உண்மையிலேயே தெரியாதா? ஒரே ஒரு அஜித் ரசிகரைக் கூப்பிட்டு டேம் சீனை சொல்லியிருந்தால்கூட, சிவா காலில் விழுந்தாவது நிறுத்தியிருக்க மாட்டாரா? 

இது எல்லாத்தையும்கூட பொறுத்துப்பேன்..ஆனால் கிளைமாக்ஸ் ஃபைட்டில் ஹீரோயினை பாட விட்டீங்களே..அந்த கொடுமையை மட்டும் மன்னிக்கவே மாட்டேன். ஹாலுவுட் தரம்னு சொல்லித்தானே கால்ஷீட் வாங்கிட்டு, பரவை முனியம்மா ரேஞ்சுக்கு பாட விட்றுக்கீங்களே...பாட்டாவது நல்லா இருந்தால் தப்பிச்சிருக்கலாம். தியேட்டரிலேயே சிரிக்கிறாங்க.

மேலே சொன்ன 5 பத்திகளைத் தவிர, மத்தபடி படம் நல்லா இருக்கு...நல்லாத் தானே இருக்கு.ஆமா, ஆமா!

அஜித்துக்கு இரண்டே வேண்டுகோள்கள் தான் :

1. நீங்க ஜனா, ஆழ்வார், பில்லா-2 எடுத்தால்கூட ரசிகர்கள் தியேட்டருக்கு வந்திடுவாங்க. அதனால் வெறுமனே ரசிகர்களுக்காக படம் எடுக்காமல், எங்களையும் கொஞ்சம் மனசுல வைங்க. அப்புறம் அந்த சிவா தம்பிகிட்டே ‘ஏம்ப்பா, என் ரசிகர்களுக்காக படம் எடுத்தியா? இல்லே, விஜய் ரசிகர்களுக்காக இந்த படத்தை எடுத்தியா?’ன்னு மறக்காமல் கேட்டிடுங்க.

2. உங்களை பலரும் மதிக்கக்காரணமே, சொந்தக் காலில் நின்று முன்னேறி மேலே வந்தவர் என்பது தான். அப்படிப்பட்ட நீங்கள் என்ன செய்யவேண்டும் என்றால், உங்களை மாதிரியே பெரிய பின்புலம் இல்லாமல் முன்னேறப் போராடும் இயக்குநர்களுக்குத் தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும். அது தான் நியாயமாக இருக்கும். இந்த விஷ்ணுவர்த்தன், சிவா மாதிரி பணக்கார வீட்டு செல்லப்பிள்ளைகளை வளர்த்துவிட்டது போதும். கொஞ்சம் குனிந்து கோடம்பாக்கத்தைப் பாருங்கள். வியர்க்க, விறுக்க எத்தனையோ பேர் உங்களுக்காக நல்ல கதையுடன் அலைந்துகொண்டிருக்கிறார்கள்! 

உங்க செல்லப்பிள்ளைகள் உங்களை வச்சுச் செய்றாங்கன்னு இன்னுமா உங்களுக்குப் புரியல?
மேலும் வாசிக்க... "விவேகம் - பாவம் அஜித்!"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.