Wednesday, November 15, 2023

ALP: என் ஜோதிடத் தேடலின் தீர்வு

 

என் மனைவியைப் பெண் பார்க்கப் போயிருந்தபோது. இருவீட்டாருக்கும் பரம திருப்தி. மாப்பிள்ளை-பெண்ணுக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப்போன சமயத்தில் ‘இந்தாங்க. பொண்ணு ஜாதகம்’ என்று ஒரு ஜாதகம் நீட்டப்பட்டது.

மற்றவர்கள் கண்ணுக்கு வேண்டுமானால் அது ஜாதகமாகத் தெரிந்திருக்கலாம்; எனக்கு அது அணுகுண்டு போல் தெரிந்தது. ‘நமக்கே முப்பது வயசுல இப்போத்தான் ஒரு பொண்ணு கிடைச்சிருக்கு. அதுக்கும் வேட்டு வைக்க கிளம்பிட்டாங்களா?’ என்று தான் தோன்றியது.

 அப்போது நான் சென்னையில் வேலையில் இருந்தேன். இரவு சென்னை கிளம்பும்போது அந்த ஜாதகத்தையும் எடுத்துக்கொண்டு, கிரேட் எஸ்கேப். ’ஜாதகம் இருந்தாத் தானய்யா குரு மேல நிக்கான், சந்திரன் சைடுல நிக்கான்னு குழப்புவீங்க’ என்று நானா யோசிச்சு எடுத்த முடிவு.

 சென்னை வந்தபின் ‘இங்க நானே பொருத்தம் பார்த்துட்டேன். பத்துக்கு பதினைஞ்சு பொருத்தம் இருக்கு. முதல்ல கல்யாணத்தைப் பண்ணி வைங்க’ என்று அம்மாவிடம் கெஞ்சி..சாரி, சொல்லிவிட்டேன். அப்படி ஜோதிடத்தையே நம்பாத நான் இன்று ALP ஜோதிடத்தில் உயர்நிலை வகுப்பு முடித்த ஜோதிடர். எங்கே நிகழ்ந்தது இந்த மாற்றம்?

 


என் மனைவி முதல் பையனை கருவுற்று இருந்தபோது எனக்கு வேலை போனது. வளைகாப்பு முடிந்து தாய் வீட்டுக்குப் போன மனைவியை குழந்தை பிறந்த பின்பும் திரும்ப அழைக்க முடியவில்லை. பேச்சிலர் ரூமில் நண்பருடன் தங்கிக்கொண்டு வேலை தேடுகிறேன். கிடைத்தபாடில்லை.

 உடன் தங்கியிருந்த நண்பர் ஆன்மீகமான குடும்பத்தைச் சேர்ந்தவர். அனுபவமிக்க  ஃபேமிலி ஜோதிடரே அவர்களுக்கு உண்டு. அந்த நண்பர் தான் ஊருக்குப் போகும்போது ’என்ன தான் பிரச்சினைன்னு பார்த்திடுவோம்’ என்று என் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு போனார்.

 

அந்த ஜோதிடர் நான் பிறந்ததில் இருந்து இப்போதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள், அம்மா-அப்பா – உடன்பிறந்தாருடன் என் உறவுநிலை – எத்தனை உடன் பிறந்தோர் போன்றவற்றை புட்டுப்புட்டு வைத்து எழுதிக்கொடுத்திருந்தார். அப்போது தான் ஜோதிடத்தில் ஏதோ விஷயம் இருக்கிறது என்று புரிந்துகொண்டேன்.

கூடவே அந்த ஜோதிடர் ‘இவருக்கு உள்நாட்டில் வேலை கிடைக்காது. வெளிநாட்டுக்கு முயற்சித்தால் மட்டும் தான் வேலை கிடைக்கும்’ என்று எழுதியிருந்தார். அதுவரை வெளிநாட்டு வேலைக்கு முயற்சிக்காத நான் முயற்சி செய்ய ஆரம்பித்தேன். அதுவரை ’ நாளென் செயும் வினை தானென் செயுமெனை நாடிவந்த கோளென் செயும்?’’ என்று முருகன் மேல் பாரத்தைப் போட்டு வாழ்ந்த எனக்கு, அந்த முருகனே தான் இந்த கோள்களுக்கும் ஏதோ வேலை கொடுத்திருக்கிறான் என்று புரிந்தது.

 ஜோதிடம் மேல் ஆர்வம் வர, நானும் அந்த நண்பரும் பாரம்பரிய ஜோதிடம் படிக்க குருவினைத் தேடி அலைந்தோம். நாங்கள் பார்த்த ஜோதிடர்கள், ஜோதிடம் பார்க்கத் தான் தயாராக இருந்தார்களே ஒழிய நேரடியாக சொல்லித்தர யாரும் தயாராக இல்லை. பிறகு ஜோதிட புத்தகங்களைப் படித்து நாமே கற்றுக்கொள்வோம் எனும் விபரீத விளையாட்டில் இறங்கினோம்.

 ‘நட்பு, பகை, நீசம், உச்சம், மாரகாதிபதி, பாதகாதிபதியை மிக்ஸியில் அரைத்து குரு பார்வை பெற்றவரை மட்டும் வெளியே எடுத்தால் கிடைப்பது தான் பலன்’ என்று சுற்றிச் சுற்றி புத்தகங்கள் சொல்லித்தந்தன. எங்களுக்கு அரைக்கவும் தெரியவில்லை; அரைத்தபின் தனியே எடுக்கவும் தெரியவில்லை.

 இதற்கிடையில் எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. ‘நமக்கு ஜோதிடம் வராது போல’ என்று நினைத்து, லக்ன, மாரக, பாதக அதிபதிகள் எல்லாரையும் தூக்கிப் போட்டுவிட்டு வெளிநாடு போய்விட்டேன். ஆனாலும் இருளில் வழி தெரியாமல் தவிப்போர்க்கு தடம் காட்டும் ஜோதி தான் ஜோதிடம் என்று மட்டும் புரிந்துகொண்டேன்.

 

 அதே நேரத்தில் நண்பருக்கு பெண் பார்க்க ஆரம்பித்தார்கள். ஏறக்குறைய ஐம்பது ஜாதகங்களுக்கு மேல் கழித்து, ஒரு பெண்ணின் ஜாதகத்தை தேர்ந்தெடுத்தார் அந்த அனுபவமிக்க ஜோதிடர். நண்பருக்கு திருமணம் ஆனது. திருமணம் ஆன ஒரு வருடத்திற்குள் கணவன் மனைவி பிரிந்தார்கள். டைவர்ஸ் ஆனது.

 

முப்பது வருட அனுபவமிக்க ஜோதிடரின் கணிப்பு எங்கே தவறியது எனும் கேள்வி என்னை உறுத்த ஆரம்பித்த து. ஜோதிடம் உண்மை என்று தெரிகிறது; ஆனால் நட்சத்திரம், கட்டம், தசாபுக்திக்கெல்லாம் பொருத்தம் பார்த்துச் செய்துவைத்த திருமணம் தோல்வி ஆகிறது! இது எதனால் என்று கண்டுபிடிப்போம் என்றால் நமக்கு ஜோதிடம் சொல்லித்தர ஆளில்லை.

பாரம்பரிய ஜோதிடத்தில் ஏதோ ஒரு போதாமை இருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. பன்னிரெண்டு வருடங்கள் இந்தக் கேள்வியை சுமந்து திரிந்தேன். ராசி பலன், கிரக பெயர்ச்சி பலன் வீடியோக்களை பார்க்கும்போதெல்லாம் கிட்டாக் காதலியைப் பார்ப்பது போல் வருத்தத்துடன் கடந்துவிடுவேன்.

 பன்னிரெண்டு வருடம் கழித்து பதிவர் KRP செந்தில் அண்ணன் தான் ALP எனும் நவீன ஜோதிடமுறை பற்றிச் சொன்னார். எங்களின் மதிப்புக்குரிய நண்பரான அன்பழகன் வீரப்பனும் ALP ஜோதிடம் படித்திருக்கிறார் என்று தெரிந்தபோது இன்னும் நம்பிக்கை வந்தது. அன்பு சாரின் நண்பரான வேலாயுதம் எனும் பாலாறு ஸ்வாமிகளிடம் ஜோதிடம் பார்க்க அழைத்துச் சென்றார் செந்தில் அண்ணன். அங்கே தான் ஜோதிடம் கற்றுக்கொள்ள ஆர்வம் பிறந்தது.

 திரு.பொதுவுடை மூர்த்தி ஐயாவின் ALP குடும்பத்தில் மாணவராக ஐக்கியம் ஆனேன். அடிப்படை நிலை ஜோதிட வகுப்பு முடிந்ததும் நான் செய்த முதல் வேலை, நண்பரின் ஜாதகத்தை எடுத்து ஆய்வு செய்தது தான். ALP முறையில் லக்னத்தை நகர்த்தி பலன் பார்த்தபோது, துல்லியமாக கணவன் – மனைவி திருமணமான அதே வருடத்திலேயே பிரிவார்கள் என்று தெரிந்தது.

 அந்த அனுபவமிக்க பாரம்பரிய ஜோதிடர் செய்த தவறு, பிறப்பு லக்னத்திற்கு பலன் பார்த்தது. அங்கே எல்லாமே சரியாக இருந்தது. ஆனால் தற்போது செல்லும் ALP லக்னத்திற்கு பலன் பார்த்திருந்தால், இன்னும் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்யச் சொல்லியிருப்பார். கசப்பான நிகழ்வுகளை தவிர்த்திருக்கலாம்.

 ALP ஜோதிடம் கற்றதால் நான் அடைந்த முதல் பயன், என் மனதை பன்னிரெண்டு ஆண்டுகளாக உறுத்திக்கொண்டிருந்த கேள்விக்கு விடை கிடைத்தது தான்.

மேலும் வாசிக்க... "ALP: என் ஜோதிடத் தேடலின் தீர்வு"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.