Monday, December 24, 2012

கேளுங்கள் தரப்படும் (கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்)

இந்திய ஞான மரபில் உள்ள ஞானிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், என் மனதுக்கு நெருக்கமானவராக நான் எப்போதும் உணர்வது  இயேசுநாதரைத் தான்.இந்திய ஞான நூல்களைப் படிக்கும் ஒருவருக்கு அடிப்படை ஆன்மீக அறிவு அவசியமாய் உள்ளது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், அவை ஆன்மீகத் தேடல் கொண்டோருக்காக எழுதப்பட்டவை. 

பின்னர் புராணங்கள் அவற்றை எளிமைப்படுத்தினாலும், புராணங்களின் மறைபொருளை சரியானபடி உணர, ஆன்மீக அறிவு தேவையாகவே உள்ளது. அவ்வாறு அடிப்படைப் பயிற்சிகள் இல்லாமல், கீதையைவோ தம்மத்தையோ படிக்கும் ஒருவர் தவறான புரிதலுக்குச் செல்லும் வாய்ப்புகளும் அதிகம். (கீதை ஒரு கொலைநூல் என்று கண்டுபிடித்த புத்திசாலி சைண்டிஸ்ட்களை நினைவுகூறுங்கள்!)

ஆனால் வாழ்க்கையில் அடிபடாத சிறு வயதிலேயே இயேசுநாதரின் வார்த்தைகள் என்னை வசீகரித்திருக்கின்றன. அதற்குக் காரணமாக பின்னர் நான் புரிந்துகொண்டது, அவற்றின் எளிமை தான்.என் வாழ்வில் நான் முதன்முதலாகக் கேட்ட, இயேசுவின் வாக்கியம் ‘கேளுங்கள் தரப்படும்..தட்டுங்கள் திறக்கப்படும்..தேடுங்கள் கிடைக்கும்’ என்பது தான். புகழ்பெற்ற அந்த கிறிஸ்தவப்பாடல், இப்போதும் என் மனதை உருக்குவது, என் வாழ்வின் பல இக்கட்டான சூழ்நிலைகளிலும் வழித்துணையாய் வருவது.


கல்லூரி முடிந்து, உண்மையான உலகை நான் எதிர்கொண்ட காலம் தான், என் வாழ்வின் மோசமான காலகட்டம். சரியான வேலையும் அமையாமல், நண்பர்களுடன் தொடர்பும் இல்லாமல், குடும்பத்தின் அரவணைப்பும் இல்லாமல் தனித்துத் திரிந்த நாட்கள் அவை.அந்த நேரத்தில் ஆன்மீகப் புத்தகங்களை என்னை வாழ வைத்தன. அதன்பின், சில வருடங்களில் நான் கற்றுக்கொண்டது ஒன்றே ஒன்று தான்:

‘நாம் ஒரு விஷயத்திற்கு ஆசைப்படுகிறோம் என்றால் அதற்கு நம்மை தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு தகுதிப்படுத்திக்கொண்டபின் இறைவனிடம் வேண்டினால் கேட்பது தரப்படும். பன்றிகளுக்கு முன் முத்தை யாரும் வீச மாட்டார்கள். நாம் நம்மை தகுதிப்படுத்திக்கொள்ளாதவரை எதுவும் நம்மை வந்தடையாது;வந்தாலும் நம்மிடம் நிலைக்காது.’

எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொறியியல் வாழ்க்கையிலும் பல சிக்கலான தருணங்கள் வருவதுண்டு.சில முக்கியமான பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் திணறும்போதோ அல்லது முடிவெடுக்க முடியாமல் தவிக்கும்போதோ எனக்கு கை கொடுப்பது இயேசுவின் அந்த வார்த்தைகள் தான்...’கேளுங்கள் தரப்படும்..தட்டுங்கள் திறக்கப்படும்..தேடுங்கள் கிடைக்கும்’. இந்த வார்த்தைகளை மனதிற்குள் சொல்லிக்கொள்ளும்போது, தன்னம்பிக்கை பிறக்கும். இறைவன் நம்மைக் கைவிட மாட்டான் என்று தோன்றும். அது உண்மையாகவும் ஆகும்.


பைபிளில் எனக்குப் பிடித்த பகுதி என்றால் மலைப்பிரசங்கம் தான். தன் வாழ்வின் செய்தியனைத்தையும் அந்த சொற்பொழிவிலேயே இயேசுநாதர் சொல்லிவிட்டதாகவே எனக்குத் தோன்றும். ‘’கேளுங்கள் தரப்படும்’-க்கு அடுத்த படியாக எனக்குப் பிடித்த வாக்கியம் ‘நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்கு தெரியாதிருக்கட்டும்.’ என்பது தான். இந்த உலகிற்கு வரும்போது ஆடைகூட இல்லாமல் தான் வந்தோம். இப்போது இங்கே நாம் பெற்றிருப்பது அனைத்தும், இந்த உலகிடமிருந்து பெற்றுக்கொண்டவையே. அப்படி இருக்கும்போது, பிறருக்கு உதவுவதை பெரிய விஷயமாகப் பேசுவது நகைப்புக்குரியது அல்லவா? மண்டை காய வைக்கும் ஆன்மீக விளக்கங்கள் ஏதுமின்றி, இயேசுநாதர் நேரடியாகவே சொல்கிறார் :தர்மத்தை மறைவாய் செய்யுங்கள். மறைபொருளை இறைவன் அறிவான்.


மலைப் பிரசங்கத்தின் வார்த்தைகள் அனைத்துமே எளிமையானவை, உண்மையானவை. நாம் இறைவனிடம் பலவாறு வேண்டிக்கொள்கிறோம். தினமும் வேண்டினாலும், வேண்டியது கிடைத்தாலும் நம் கோரிக்கைகள் தீர்வதேயில்லை. இறைவன் நம்மை நல்லபடியாக கவனித்துக்கொள்வானா என்ற கவலை, ஆன்மீகவாதிகளுக்கு இருந்துகொண்டே இருக்கிறது. அத்தகைய நம்பிக்கை குறைந்தோர்க்கு, இயேசுநாதர் சொல்வது ஒன்று தான் : தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியென்றால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை, தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா?

மாபெரும் நம்பிக்கை தரும் விஷயத்தை எளிமையாகச் சொல்லிச் செல்லும் இயேசுநாதரின் மலைப்பிரசங்கத்தின் உச்சமாக நான் நினைக்கும் வரிகள் இவை தான்: பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம், நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள்.

இந்த உலகம் மேன்மை பெற, இதை விடவும் நாம் வேறெதும் செய்ய வேண்டாம். நம் பொருளை பிறர் திருடக்கூடாது என்று நினைக்கிறோம்; நாமும் அப்படியே நினைப்போமாக! நம்மை யாரும் இழிவாக நடத்தக்கூடாது என்று நினைக்கின்றோம், நாமும் அப்படியே இருப்போமாக!

இந்த உலகிற்கு அன்பைப் போதித்த இயேசுமகான் அவதரித்த நன்னாளில், மலைப்பிரசங்கத்தை ஒரு முறையேனும் படிப்போம்.அந்த மாபெரும் ஞானியின் வார்த்தைகளை வாழ்வில் கடைப்பிடித்து, கடைத்தேறுவோம்.


நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!

மேலும் வாசிக்க... "கேளுங்கள் தரப்படும் (கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

14 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, December 21, 2012

இணைப்பான்களும் அவற்றின் வகைகளும் (குழாயியல்_5)

ன்றைய பதிவில் இணைப்பான்களின் வகைகளைப் பற்றியும், அவற்றில் எல்போ எனும் இணைப்பான் பற்றியும் பார்ப்போம்.

வரையறை:

ஒரு குழாய் செல்லும் திசையினை மாற்ற உதகின்ற அல்லது குழாயில் இருந்து வேறொரு கிளையினை உருவாக்க அல்லது குழாயின் அளவினைக் குறைக்க உதவுபவையே இணைப்பான்கள் (Fittings) ஆகும்.










வகைகள்:

இணைப்பான்கள் என்பவை பொதுவாக ஒரு குழாயை இன்னொரு குழாயுடன் இணைக்கப் பயன்படுபவை என்பதால், சென்ற குழாய் பற்றிய பாடத்தில் சொல்லியபடி இணைக்கும் முறையினைப் பொறுத்து ஐந்து வகைகளாகப் பிரிக்கப்படும் :

4.1. முட்டுப் பற்றவைப்பு (Butt Welding) இணைப்பான்கள்

4.2. பொருந்து வாய் பற்றவைப்பு (Socket Welding) இணைப்பான்கள்

4.3.மரை இணைப்பு (Threaded Connection) இணைப்பான்கள்

4.4. குழாய்ப் பட்டை இணைப்பான்கள் (Flanges)

4.5. அச்சுக் கிளைகள் (O-Lets)


4.1.முட்டுப் பற்றவைப்பு (Butt Welding) இணைப்பான்கள்:

சென்ற குழாய் பற்றிய பாடத்தில் சொல்லியபடியே, இவ்வகை இணைப்பான்கள் சாய்வு முனை (Bevel End) கொண்டிருக்கும். மேலும் முட்டுப் பற்றவைப்பு முறை மூலம் இணைக்கப்படும். 2" மற்றும் அதற்கு மேற்பட்ட குழாய்களை இணைக்கப் பயன்படுபவை இவ்வகை இணைப்பான்கள் ஆகும். எனவே குழாயியலில் அதிகளவு பயன்படுவது இவ்வகை இணைபான்களே ஆகும். இனி இதன் உள்வகைகளைப் பார்ப்போம்:

1. எல்போக்கள்(Elbows)
2. டீ-க்கள்(Tee)
3. குறைப்பான்கள் (Reducers)
4. மூடிகள்(Caps)

4.2. பொருந்து வாய் பற்றவைப்பு (Socket Welding) இணைப்பான்கள்:

1 1/2”மற்றும் அதற்குக் குறைவான குழாய்களை இணைக்கப் பயன்படுபவை பொருந்து வாய் பற்றவைப்பு (Socket Welding) இணைப்பான்கள் ஆகும். இவற்றின் உள்வகைகள்:

1. எல்போக்கள்(Elbows)
2. டீ-க்கள்(Tee)
3. அச்சுக் குறைப்பான்கள் (Swages)
4. மூடிகள்(Caps)
5. இடையிணைப்பான்கள்(Couplings)
6. குழாய்ப் பொருத்திகள்(Unions)


4.3.மரை இணைப்பு (Threaded Connection) இணைப்பான்கள்:

1 1/2”மற்றும் அதற்குக் குறைவான குழாய்களை இணைக்கப் பயன்படுபவை மரை இணைப்பு இணைப்பான்கள் ஆகும். இவை காலப்போக்கில் கசிவிற்கு வழிவகுக்கும் என்பதால், இவற்றை பொதுவாக தண்ணீர்க் குழாய்களை இணைக்கவே பயன்படுத்துவர்.பெட்ரோலியப் பொருட்களைக் கொண்டு செல்லும் குழாய்களை இணைக்க மரை இணைப்புகலைப் பயன்படுத்துவதௌத் தவிர்ப்பது நல்லது. இவற்றின் உள்வகைகள்:

1. எல்போக்கள்(Elbows)
2. டீ-க்கள்(Tee)
3. அச்சுக் குறைப்பான்கள் (Swages)
4. மூடிகள்(Weld Caps)
5. இடையிணைப்பான்கள்(Couplings)
6. குழாய்ப் பொருத்திகள்(Unions)

இனி இணைப்பான்களின் உள்வகைகளை ஒவ்வொன்றாக அடுத்து வரும் பார்ப்போம்.

(தொடரும்)
மேலும் வாசிக்க... "இணைப்பான்களும் அவற்றின் வகைகளும் (குழாயியல்_5)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

8 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, December 11, 2012

சூப்பர் ஸ்டாரிடம் கற்றுக்கொள்ள 5 விஷயங்கள்

1. நல்ல குடும்பத் தலைவன்:

பூமி என்ன தான் தன்னைத் தானே நாளெல்லாம் சுற்றினாலும், சூரியனை மையமாகக் கொண்டு சுற்றி வரும்வரையே அதற்கு வாழ்வு. சூரிய சக்தி இல்லையென்றால் பூமி சிவம் இல்லை. அதே போன்று குடும்பம் இல்லையேல், தான் இல்லை என்று உணர்ந்தவர். இதை சினிமாத்துறையில் இருந்துகொண்டு உணர்பவர்கள் குறைவு. பதிவுலகிலேயே கொஞ்சம் ஹிட்ஸ் வந்தாலே, குடும்பத்தைக் கவனிக்க, நேரம் ஒதுக்க நாம் தடுமாறும்போது, சூப்பர் ஸ்டார் எனும் மாபெரும் ஒளிவட்டமாக இருந்தும் நல்ல குடும்பத் தலைவனாக வாழ்பவர். தான் ராத்திரி-பகல் பாராமல் உழைப்பதெல்லாம் தன் குடும்பத்திற்கே..அவர்கள் இல்லாமல் தான் இல்லை என்று உணர்ந்தவர். தன் சம்பாத்தியத்தை எவ்விதத்திலும் வீணடிக்காமல் குடும்பத்திற்கென்றே உழைத்துக்கொட்டிய உழைப்பாளி.

தற்போதைய இந்திய சமூகம் என்பது முதல் தலைமுறை பட்டதாரிகளால், முதல் தலைமுறை பணக்காரர்களால் ஆனது. அவரது பல ரசிகர்களும் அப்படிப்பட்டவர்களே. ஒவ்வொரு ரசிகனும் தன் குடும்பத்தை எப்படிக் கவனிக்க வேண்டும் என்று வார்த்தையால் சொல்லாமல், வாழ்க்கையாக வாழ்ந்து காட்டியவர்.
2. எளிமையும் பணிவும்:
இப்போதும் பயணம் அம்பாசடர் காரில் தான். வெளியில் வருவது வழுக்கைத் தலையுடன் தான். இமேஜ் என்பது பற்றி எவ்விதக் கவலையுமின்றி, எளிமையைவே தன் இமேஜாக ஆக்கியவர். எவ்வளவு தான் புகழ் இருந்தாலும், அதைத் தன் தலைக்குள் ஏற்றிக்கொள்ளாதவர். திறமைசாலிகளைக் கண்டால், மரியாதை கொடுக்கத் தயங்காதவர்.இப்போதும் பாலச்சந்தருக்கும் மகேந்திரனுக்கும் அன்று கொடுத்த அதே மரியாதையைக் கொடுக்கும் பணிவு கொண்டவர்.

இன்றும் ஷூட்டிங் இடைவேளையில் மரத்தடியில் பெஞ்ச் போட்டு உறங்கும் ஒரே ஹீரோ.’ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ளே’ என்று உணர்ந்தவர், நமக்கு உணர்த்தியவர்.

3. நேரம் தவறாமை:

அவர் சூப்பர் ஸ்டார் என்று பிரகடனப்படுத்தப்பட்ட பின்னும், தனக்காக யாரும் காத்துக்கொண்டிருக்கக்கூடாது என்று நினைத்தவர்.எந்த ஒரு ஷூட்டிங்கும் தன்னால் தாமதமாகவோ, கேன்சல் செய்யப்படவோகூடாது என்ற அக்கறை கொண்டவர்.நடிகர் திலகம் சிவாஜிக்குப் பிறகு, நேரந்தவறாமையைக் கடைப்பிடிப்பதில் வல்லவர் இவரே.தனக்கு சம்பளம் தரும் முதலாளிகள், தனது நடவடிக்கைகளால் நஷ்டப்படக்கூடாது என்று நினைப்பவர்.

நேரந்தவறாமைக்கு அடிப்படை, மற்றவர்களைவிட நான் உயர்ந்தவன் என்ற தலைக்கனம் இல்லாததே!
 
4. தன்னம்பிக்கை:

சூப்பர் ஸ்டார்,

கமலஹாசன் போல் டான்ஸில்/நடிப்பில் சிறந்தவர் இல்லை.
விஜயகாந்த்/அர்ஜூன் போல் ஃபைட் செய்பவரும் இல்லை.
பிரபு போல் சிவப்பழகன் இல்லை.

ஆனாலும் அவர் சூப்பர் ஸ்டார்!

நமது துறையில் சில விஷயங்களில் நம்மை விடவும் சிறந்தவர்கள் இருப்பார்கள். ஆனாலும் இறைவன் நமக்குக் கொடுத்திருக்கும் (ஸ்டைல் போன்ற) திறமைகளைகளை தன்னம்பிக்கையுடன் செயல்படுத்தினால், உச்சத்தைத் தொடலாம் என்று நமக்கு உணர்த்தியவர் சூப்பர் ஸ்டார்.
5. ஆன்மீகம்:

வேலை, பணம், புகழ் எல்லாம் இந்த வாழ்க்கைக்கு மட்டுமே பயனளிக்கக்கூடியது.நாம் போகும்போது எடுத்துக்கொண்டு போகக்க்ப்போவது நம் பாவ-புண்ணியத்தையும் அந்தரங்க ஆன்மீக வாழ்க்கையை மட்டுமே. எனவே தான் வாழ்க்கையில் எல்லாவித வசதிகளையும், பேர்-புகழையும் சம்பாதித்து/அனுபவித்து முடித்துவிட்டாலும் ஒரு நல்ல மனிதனுக்கு அது மட்டுமே போதாது என்று தன் ஆன்மீக ஆர்வத்தால் நமக்கு உணர்த்தியவர்.

ஆன்மீகரீதியாக தன்னை ஒரு மாணவனாகவே கருதிக்கொள்பவர்.ஆன்மீகப் பயணம் நீண்டது, பல ஜென்மங்களுக்கும் தொடர்வது என்ற புரிதல் கொண்டவர். ஆன்மீக ஈடுபாடு இருந்தாலும், பிற மதத்தை/மதத்தினரை இழிவாகப் பார்க்காத பண்பாளர்.

சூப்பர் ஸ்டாருக்கு இனிய பிறந்த தின நல்வாழ்த்துகள்!
மேலும் வாசிக்க... "சூப்பர் ஸ்டாரிடம் கற்றுக்கொள்ள 5 விஷயங்கள் "
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

14 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, December 5, 2012

Codes & Standards (குழாயியல்_பாகம் 4)


3. சட்டத்தொகுப்புகளும் நியமங்களும் திட்ட விவரணைகளும் ( Codes- Standards - Specification)

டிஸ்கி : இன்றைய பதிவு, கொஞ்சம் தியரி தான்..இனி அடிக்கடி ASME/API போன்ற நியமங்கள் பற்றி அடிக்கடி பார்ப்போம் என்பதால், அதைப் பற்றிய அடிப்படைப் புரிதலுக்காக இந்தப் பதிவு.

பொறியியலில் எந்தவொரு செயலினைச் செய்வதற்கும், வரையறுக்கப்பட்ட செயல்முறைகள் உள்ளன. அவை காலம் காலமாக பொறியியல் துறையில் நாம் அடைந்த வெற்றி/தோல்விகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவையாகும். சில அரசு நிறுவனங்கள் மற்றும் சில தனியார் நிறுவனங்கள், பொறியியலில் ஒவ்வொரு துறைக்கும் தெளிவான செயல்முறைகளை தொகுத்து வைத்துள்ளன. அந்த வகையில், குழாயியல் துறைக்கும் சில நியமங்கள், ASME, API போன்ற நிறுவனங்களால் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றி சுருக்கமாக இங்கே காண்போம்.

சட்டத்தொகுப்புகளும் (Codes) நியமங்களும் (Standards) :

Codes  எனப்படும் சட்டத்தொகுப்புகள், குழாயியல் டிசைன், கட்டுமானம் போன்றவற்றிற்குத் தேவையான, அடிப்படையான சில வழிமுறைகளைச் சொல்பவையாகும். இவை பொதுவாக குறிப்பிட்டு வரையறுக்காமல் பொதுவான தன்மையுடையவையாக இருக்கும். நியமங்கள் என்பவை தெளிவான வழிமுறைகளுடன் கூடிய, செயல்முறைகள் மற்றும் விதிகளின் தொகுப்பாக இருக்கும்.

உதாரணமாக, ஒரு குழாயானது துருப்பிடித்தலில் இருந்து காக்கப்பட, வண்ணம் பூசப்பட வேண்டும் என்று மட்டுமே சட்டத்தொகுப்பு சொல்லும். நியமம் என்பது அந்த வண்ணப்பூச்சானது, எவ்வளவு தடிமனுக்குப் பூசப்பட வேண்டும், எத்தனை முறை பூசப்பட வேண்டும், என்னென்ன வேதிப்பொருட்களை உள்ளடக்கியதாக, அந்த வண்ணப்பூச்சு இருக்க வேண்டும் என விலாவாரியாக வகுத்துச் சொல்லும்.

ஆனாலும் நடைமுறையில் சட்டத்தொகுப்புகளும், நியமங்களும் தெளிவாகப் பிரித்தறிய முடியாவண்ணமே உள்ளன.

இருப்பினும், ASME. API, BS, IS போன்ற நிறுவனங்களால் தொகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை சட்டத்தொகுப்புகள் என்றும், சேவைப் பயனர்(Client)களின் விதிமுறைத் தொகுப்பை நியமங்கள் என்றும் கொள்ளலாம்.

திட்ட விவரணைகள் (Project Specification):

திட்டம் என்பது குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காக, சேவைப் பயனர்களால் ஆரம்பிக்கப்படும் பெரும்பணி ஆகும். அந்த திட்டத்தை நிறைவேற்ற தெளிவான திட்ட விவரணைகள் சேவைப்பயனர்களால் கொடுக்கப்படும்.

திட்ட விவரணை என்பது கீழ்க்கண்ட விவரங்களை உள்ளடக்கி இருக்கும்:

1. திட்டத்தின் நோக்கமும், செய்யப்பட வேண்டிய காரியங்களையும் உள்ளடக்கும் ஒப்பந்த ஆவணம்.
2. குழாய், குழாய்ப்பட்டை, இணைப்பான்கள், வால்வுகள் உள்ளிட்ட குழாயியலின் பாகங்கள், எந்த உலோகத்தால் செய்யப்பட வேண்டும் என குறிப்பிடும் உலோக விவரணைகள்
3. குழாயியல் கட்டுமானம் சார்ந்த விதிமுறைகள்
4. அவற்றைச் சோதிக்கும் வழிமுறைகள்
5. மேற்கண்டவற்றை விரிவாக எடுத்துரைக்கும் சேவைப் பயனரின் நியமங்கள்

உதாரணமாக, கொள்கலனில் இருந்து இரண்டாவது தொட்டிக்கு தண்ணீரினைக் கொண்டு செல்வது தான் நம் திட்டம் என்றால், அந்த குழாயியல் பாகங்களின் உலோகங்கள் என்ன, பம்ப்பின் கொள்திறம் என்ன, தொட்டியின் கொள்ளளவு என்ன என்பது போன்ற சகல விஷயங்களும் திட்ட விவரணையில் தரப்படும்.

நியம நிறுவனங்கள்:
நாம் குழாயியலில் பயன்படுத்தும் சில நியமங்களை உருவாக்கும் சில நிறுவனங்களின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன:

1. The American Petroleum Institute (API)
2. The American Nataional Standards Institute (ANSI)----இது இப்போது ASME உடன் இணைக்கப்பட்டுவிட்டது.
3. The American Society for Testing and Materials (ASTM)
4. The American Welding Soceity (AWS)
5. The Manufacturers Standardization Soceity of Valves and Fittings (MSS-SP)
6. The American Society of Mechanical Engineers (ASME)
7. Biritish Standards (BS)
8. Indian Standards (IS)
9. DIN standards
10. JIS Standards


ASME நியமங்கள்:

குழாயியலில் அதிகம் பயன்படுத்தப்படுபவை ASME சட்டத்தொகுப்புகள் தான்.கீழே உள்ள நியமங்கள், குழாயியலுக்கு அடிப்படையானவை:


ASME B31.1 : Power Piping (இது மின்நிலையங்களில் பயன்படுகிறது.)

ASME B31.2 : Fuel Gas Piping----(தற்போது உபயோகத்தில் இல்லை. இதற்குப் பதிலாக ANSI Z223.1 பயன்படுத்தப்படுகிறது.)

ASME B31.3 : Process Piping (இது பெட்ரோலிய மற்றும் ரசாயன நிறுவனங்களில் பயன்படுவது.)

ASME B31.4 : Pipeline Transportation Systems for Liquid Hydrocarbons and Other Liquids -- (ஒரு இடத்தில் இருந்து மற்றோர் தொலைதூர இடத்திற்கு அல்லது ஒரு நாட்டில் இருந்து மற்றோர் நாட்டிற்கு பெட்ரோலியம் போன்ற திரவங்களைக் கொண்டு செல்வதற்கான நியமம் இது.)

ASME B31.5 : Refrigeration Piping and Heat Transfer Components

ASME B31.8 : Gas Transmission & Distribution Piping Systems (வாயுப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான குழாயியல் நியமம் இது.)

ASME B31.9 : Building Services Piping B31.9

ASME B31.11 - Slurry Transportation Piping Systems


ஒரு திட்டம் என்ன திரவத்தை, எவ்வாறு கொண்டு செல்லப்போகிறது என்பதைப் பொறுத்து, அதற்குரிய நியமத்தின்படி குழாயியல் வடிவமைக்கப்படுகிறது. பொதுவாக சேவைப்பயனரின் திட்ட விவரணையிலேயே எந்த நியமத்தின்படி நாம் வடிவமைப்பு செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கும்.

(நாங்கள் B31.3, B31.4 & B31.8 மட்டுமே உபயோகிக்கிறோம்.)

அடுத்த பகுதி முதல், குழாயியலின் பாகங்களைப் பற்றிய பதிவுகள் தொடரும்.


டிஸ்கி-2 : சென்ற பதிவில் குழாய்க்கான நியமங்களாக சிலவற்றைக் குறிப்பிட்டிருந்தேன்..அவை:

ASME B36.10M - Welded and Seamless Wrought Steel Pipe
ASME B36.19M - Stainless Steel Pipe


இதே போன்று வரும்பகுதிகளிலும் தொடர்ந்து நியமங்கள் குறிப்பிடப்படும். இவை அனைத்துமே இணையத்தில் இலவசமாக (திருட்டு பிடிஎஃப்-ஆக) கிடைக்கிறது. 

குழாயியல்  படிக்க உண்மையில் ஆர்வம் உள்ளோர், தரவிறக்குங்கள். (காப்பி ரைட் பிரச்சினை காரணமாக இங்கே லின்க் கொடுக்க விரும்பவில்லை.) சும்மா, ஒரு தடவை வாசித்துக்கொள்ளுங்கள். அவை அனைத்தும் மனப்பாடமாக தெரிய வேண்டிய அவசியம் இல்லை.இவை ரெஃபரென்ஸ் டாக்குமெண்ட்ஸ் மட்டுமே. ஆனால் எந்த நியமம், எதற்கு என்று தெரிந்திருப்பது அவசியம். அதை மட்டும் மனப்பாடம் செய்யுங்கள்.

மேலும் வாசிக்க... "Codes & Standards (குழாயியல்_பாகம் 4)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

8 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, December 4, 2012

அதிரடிக்கார மச்சானும் அசாம்காரன் ஜட்டியும்

டிஸ்கி: பதிவெழுத வந்த புதிதில் எழுதிய பதிவு இது. எப்படியோ பப்ளிஷ் ஆகாமல், ட்ராஃப்ட்டிலேயே கிடந்திருக்கிறது. இப்போது தான் பார்த்தேன்..உடனே பப்ளிஷ்ஷ்ஷ்! (இதில் வரும் மச்சான்...நான் தான்!!)


ரொம்ப தர்மசங்கடமான நிலைமை ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நேரம் வரும். நம்ம அதிரடிக்கார மச்சானுக்கு காலேஜ்ல சேர்ந்த முதல்நாள் ஹாஸ்டலில் வந்தது. அவரது ஹாஸ்டல் ரூமில் மொத்தம் 3 பேர்..சேர்ந்தாப்போல் 3 கட்டில்கள்!

அதனால என்ன என நீங்கள் நினைக்கலாம்..மச்சான் ஒரு ’சுதந்திரப் பிரியர்’.தூங்கும்போது ஜட்டி போடுவது அவருக்கு பிடிக்காது. ரூம் மேட்-ல் ஒருவர் நாகர்கோயில்காரர். அவரிடம் நைஸாக மச்சான் மேட்டரை சொன்னபோது, அவர் “ எனக்கும்தான் புடிக்காது..ஹி..ஹி..” என்றார். இன்னொரு ரூம் மேட் அஸ்ஸாம்காரன்..தமிழ் மாலும் நஹி..மச்சானுக்கோ இங்கிலிபீசு டோண்ட் நோ..மனதுக்குள் செண்டன்ஸ் ஃபார்ம் பண்ணி சொல்லுமுன் விடிந்துவிடும்..ஜட்டியை கழட்டமுடியாது போய்விடும் அபாயம்..எனவே துணிந்து பேசத்தொடங்கினார்.

Friend, small request”

“yes..”

“Actually, I don’t put jatti in night”

“what’s jatti?”

“this one” (துணிந்து காமித்தார்)

Oh, underwear?..don’t you wear  while sleeping?”

“Yes”..கேட்டவுடன் கொந்தளிக்கத் துவங்கினான் அவன்.



“My god! It’s ridigulous..I can’t, never allow this in my room..This is indecescent..I heard that Tamilians are different kind of people..but I didn’t expect to this level..I can’t sleep without underwear”

தமிழனுக்கு இழுக்கு என்றதும் மச்சான் பின்வாங்கினார். கொசுவர்த்தி சுத்த, அப்பா சொன்ன அறிவுரை ஞாபகம் வந்தது:” என்ன கஷ்டம் வந்தாலும் சரிடா மவனே, நீ இன்ஜினேரிங் படிச்சு முடிக்கணும், பெரிய பெரிய பாலமா கட்டணும் (கவனிக்க: மச்சான் சிவில் இன் ஜினேயர் அல்ல!!)

மனதைத் தேற்றிக்கொண்டு, படுத்தார் மச்சான். இன்னொரு சுவரோரம் நாகர்கோயில்காரரும் துக்கத்தை அடக்கிக் கொண்டு சாய்ந்தார். நடுவில் இருந்த கட்டிலில் அஸ்ஸாம்காரன் உட்கார்ந்து ஏதோ படித்துக்கொண்டிருந்தவன் புத்தகத்தை மூடிவிட்டு எழுந்தான்.

சட்டையைக் கழற்றினான்.
பனியனைக் கழற்றினான்.
பேண்ட்டை கழட்டினான்.

வெறும் ஜட்டியுடன் நின்றவன், ஓடிவந்து இருவருக்கும் இடையில் தொபுக்கடீர் என்று படுத்தான்.

அலறி அடித்துக்கொண்டு, தமிழ்ச் சிங்கங்கள் எழுந்தன. மச்சான் கேட்டார்

”என்னடா பண்றே?..ச்சே..what are you going?”

“Sleeping”

அது தெரியுதுடா வெண்ணை..why only jatti?”

“I told you, no?..I CAN”T SLEEP WITHOUT Jatti”

அடப்பாவி..உன் இங்கிலிபீசுல தீயை வைக்க..அப்போ நாங்க சொன்னதை ’ஜட்டிகூட இல்லாம தூங்குவோம்னா’ எடுத்துக்கிட்டே?“என்று சொன்னவாறே அஸ்ஸாம்காரனுக்கு தர்ம அடி தொடங்கியது.

மேலும் வாசிக்க... "அதிரடிக்கார மச்சானும் அசாம்காரன் ஜட்டியும்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

22 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

குழாய்_குழாயியல் (பாகம் 3)

வரலாறு:

ஆற்றங்கரையோரத்திலேயே மனித நாகரீகம் தோன்றியதாக வரலாறு சொல்கின்றது. தண்ணீரே மனித வாழ்வின் அடிப்படைத் தேவையாக இருப்பதே அதன் காரணம். கூடி வாழ ஆரம்பித்த மனிதனின் முதல் தொழிலாக விவசாயம் உருவானது. ஆற்றங்கரை ஓரங்களில் வாழ்ந்த வரை தண்ணீருக்குப் பிரச்சினை இல்லை தான். ஆனால் சற்று தொலைவில், சுற்று வட்டாரத்தில் உள்ள நிலங்கள் எல்லாம் விவசாய நிலங்களாக மாறியபோது, தண்ணீருக்கான தேவையும் உயர்ந்தது. தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் சிந்தனையும் உருவானது. அப்போது தான் மனிதன், உலகின் முதல் குழாயினைக் கண்டுபிடித்தான். ஆம், மூங்கில்களே மனிதன் முதன்முதலாய் பயன்படுத்திய குழாய்கள் ஆகும்.
அதன்பின்னர் எகிப்தில் முதன்முதலாக சுட்ட களிமண்ணால் செய்யப்பட்ட குழாய்கள் பயன்பாட்டுக்கு வந்தன. பின்னர் தொழில் வளர்ச்சி பெருகப் பெருக ஈயம், வெண்கலம் மற்றும் இரும்பினால் ஆன குழாய்கள் பயன்பாட்டுக்கு வந்தன.

உலோகங்கள்:

தற்பொழுது நமது பொறியியல் துறைகளில் பயன்பாட்டில் இருக்கும் உலோகங்கள் இவைதான்:

எஃகு (Carbon Steel)
துருப்பிடிக்கா எஃகு(Stainless Steel)
உலோகக் கலவைகள் (Alloy steels)
அலுமினியம் (Aluminium)
தாமிரம் (Copper)
பித்தளை (Brass)
காரீயம் (Lead)
வார்ப்பு இரும்பு (Cast Iron)

வரையறை:

திரவம் அல்லது வாயுவை ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு கடத்த உதவும் உள்ளீடற்ற உருளையே குழாய் எனப்படும்.

குழாய் அளவுகள்:

ஒரு குழாயினைக் குறிப்பிட மூன்று அளவுகள் தேவை. வெளிவிட்டம் (Outside Diameter), தடிமன் (Wall Thickness) மற்றும் நீளம் (Length).
இதில் நீளம் என்பது நமது தேவைக்கு ஏற்ப குறிக்கப்படுவதாகும்.

வெளிவிட்டம்:

குழாய்கள் அவற்றின் ‘பெயரளவு (Nominal)’ அளவுகளால் குறிக்கப்படுகின்றன. உதாரணமாக ஒரு 4” குழாயின் வெளிவிட்ட அளவு 4” அல்ல, 4.5” ஆகும். அந்த 4” என்பது ‘பெயரளவு’ அளவு ஆகும். எளிதாக குறிக்கப்படுவதற்காகவே இவை வெளிவிட்டத்தின் அருகாமை முழு எண்ணால் குறிக்கப்படுகின்றன. கீழே உள்ள அட்டவணையில் குழாயின் பெயரளவு மற்றும் வெளிவிட்ட அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

12” வரை குழாய்களின் வெளிவிட்டமானது பெயரளவு அளவுகளில் இருந்து மாறுபடுகின்றன. 14” முதல், குழாயின் வெளிவட்டமானது பெயரளவு அளவிலேயே இருக்கும்.

தடிமன் (Wall Thickness):

குழாயைப் பொறுத்தவரை வெளிவிட்டமானது மாறிலி ஆகும்.ஆனால் குழாயின் தடிமனானது வெவ்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. அதாவது ஒரு 4” குழாயின் வெளிவிட்டம் 4.5”ஆகவே இருக்கும். ஆனால் 4” குழாயானது STD, XS, XXS என பல்வேறு தடிமன்களில் கிடைக்கின்றன. திரவத்தின் அழுத்தம், உலோகத்தின் அழுத்தம் போன்ற காரணிகளைக் கொண்டு ASME நியமத்தின்படி,தடிமனானது கணக்கிடப்படுகிறது. (அத்தகைய கணக்கீடுகள், அடிப்படைக் குழாயியலில் வராது)

இப்போது ஒரு 4” குழாயின் தடிமன்களின் அளவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறே வெவ்வெறு அளவுகளுக்கும், குழாய்கள் வெவ்வேறு தடிமன்களில் கிடைக்கின்றன.

குழாய்கள் இணைக்கப்படும் முறைகள்:

பொதுவாக குழாயானது கீழ்க்கண்ட முறைகளில் மற்றொரு குழாய்/இணைப்பான்களுடன் இணைக்கப்படுகின்றது:

1. பொருந்து வாய் பற்றவைப்பு (Socket Welding)

2. முட்டுப் பற்றவைப்பு (Butt Welding)

3. மரை இணைப்பு (Threaded Connection)

குழாய் முனைகள்:

குழாயில் அடுத்து முக்கியமான விஷயம், குழாயின் முனைகள் ஆகும். இது குழாய்களை இணைக்கும் முறையினைப் பொறுத்து கீழ்க்கண்ட முறைகளில் முடிவு செய்யப்படுகிறது.

1. சமதள முனை (Plain End) : 
குழாயானது பொருந்துவாய் பற்றவைப்பு முறையில் இணைக்கப்படும்போது, அதன் முனைகள் சமதளமாக இருக்க வேண்டும்.இணைப்பான்களில் உள்ள பொருந்துவாயில் குழாய் நுழைக்கப்பட்டு, நிரப்புப் பற்றவைப்பு (Fillet Welding) முறையில் குழாய் இணைப்பானுடன் இணைக்கப்படும்.

2. சாய்வு முனை (Bevel End) : 
குழாயானது முட்டுப் பற்றவைப்பு முறை மூலம் இணைக்கப்படும்போது, அதன் முனையானது சரிவாக/சாய்வாக இருக்க வேண்டும்.(கல்லூரியில் வெல்டிங் பற்றிப் படித்தது நினைவிருக்கிறதா?)
3. மரை முனை (Thread End):
குழாய் இணைப்பான்களுடன் மரைகளால் இணைக்கப்படும்போது, அதன் முனை மரைமுனையாக இருக்க வேண்டும். அத்தகைய இணைப்புகளின்போது, குழாயின் முனையில் மரை உருவாக்கப்படும்.

நியமங்கள் (Standards):

ASME B36.10M - Welded and Seamless Wrought Steel Pipe (எஃகு குழாயின் அளவுகள் இதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.)
 
ASME B36.19M - Stainless Steel Pipe (துருப்பிடிக்காத எஃகு குழாயின் அளவுகள் இதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.)

-இவை தவிர சேவைப் பயனர் (Client) நிறுவனத்தின் நியமங்களும் குழாயியல் வடிவமைப்பில் முக்கியப்பங்கு வகிக்கும்.

முடிவுரை:

எனவே ஒரு குழாய் என்றால் கீழ்க்கண்ட விஷயங்கள் வரையறுக்கப்பட வேண்டும் :

பெயரளவு குழாய் அளவு
தடிமன்
குழாய் முனை
இணைக்கப்படும் முறை
நியமங்கள்


(தொடரும்)

மேலும் வாசிக்க... "குழாய்_குழாயியல் (பாகம் 3)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

11 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.