Friday, January 29, 2016

இறுதிச் சுற்று - திரை விமர்சனம்


அதாகப்பட்டது..:
மன்மதன் அம்பு, வேட்டைக்குப் பிறகு, நான்கு வருடங்கள் கழித்து மாதவன் நடிக்கும் படம் என்ற ஒரே காரணத்திற்காகவே இந்த படத்தைப் பார்க்க நினைத்தேன். இந்தியிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் தயாராகும் படம் என்றாலே நமக்கு அலர்ஜி. இரண்டுங்கெட்டானாக படத்தை எடுத்து, நம்மை கதற விட்டுவிடுவார்கள். பெண் இயக்குநர் வேறு. பெண்ணியம், புர்ச்சி என்று சுற்றிச் சுற்றி அடிப்பார்களோ எனும் பயம் வேறு. 
ஆனாலும் சி.வி.குமார் தயாரிப்பு என்பதால் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. கூடவே முன்னாபாய், 3 இடியட்ஸ் போன்ற அற்புதமான ஹிந்திப் படங்களைக் கொடுத்த ராஜ்குமார் ஹிரானி, இந்த படத்தின் தயாரிப்பாளராக இணைந்திருக்கிறார் என்றதும், இதுவொரு வித்தியாசமான படமாக இருக்கப்போகிறது என்று பட்சி கூறியது. எதிர்பார்த்த மாதிரியே, இன்னொரு பொன் (காக்கா) முட்டை!


ஒரு ஊர்ல :
ஒரு தோற்றுப்போன குத்துச்சண்டை வீரன்&பயிற்சியாளன், ஒரு குப்பத்துப் பெண்ணை உலக சாம்பியனாக ஆக்குவதே கதை.


உரிச்சா:

இந்தக் கதையில் என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப் போகிறது? ஹீரோவின் சோகக்கதை, ஹீரோயினின் வறுமை+லட்சியம், ஹீரோ உதவுவது, சோதனைகள், அதிகாரிகளின் பாலிடிக்ஸ், இறுதியில் வெற்றி என்பது தான் இவ்வகைக் கதைகளின் டெம்ப்ளேட். ஆனால் இந்த படத்தில் இவை எல்லாமே இருக்கின்றன, ஆனால் புதிதாக. இதுவரை பார்த்திராத வகையில், படத்தைக் கொண்டுபோகிறார்கள். ஹிரோவின் கதையை ஜஸ்ட் லைக் தட் வசனத்தில் கடந்துபோகிறார்கள். ஹீரோயினுக்கு லட்சியம் இல்லை, அக்காவுக்குத் தான் லட்சியம். பாலிடிக்ஸ் சீன்கள் யதார்த்தத்தின் உச்சமாக இருக்கின்றன. திரைக்கதையை இன்ச் பை இன்ச் செதுக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு சீனும், கதை நகரும் விதமும் அட்டகாசம்.

1990களில் அஸ்வினி நாச்சப்பா எனும் ஓட்டப்பந்தய வீராங்கனையின் வாழ்க்கையை மையப்படுத்தி, அஸ்வினி எனும் படம் வந்து சூப்பர்ஹிட் ஆனது. அதற்குப் பிறகு, இவ்வகை விளையாட்டு படங்கள் தமிழில் வெற்றி பெறவில்லை. அதிலும் பாக்ஸிங் என்றால் சுத்தம். சமீபத்தில் மான் கராத்தே, பூலோகம் போன்றவை சுமாரான வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, இறுதிச் சுற்று களமிறங்கியுள்ளது.

மாதவன் ஒரு திமிர்பிடித்த கோச் என்றால், அவரை விடவும் திமிர் பிடித்த, தைரியசாலியாக ஹீரோயின். இருவரும் மோதிக்கொள்ளும்போது, செம ரகளையாக இருக்கிறது. மாதவன் பற்றி அறிந்து, கொஞ்சம் கொஞ்சமாக அவர் காதலில் விழுவது கவிதை. அக்காவின் கனவு ஒரு பக்கம், ஹீரோவின் கனவு இன்னொரு பக்கம். நடுவே ஹீரோயின் என கதைக்களம் போகப் போக சூடாகிக்கொண்டே செல்கிறது.

இது பார்த்து ரசிக்க வேண்டிய படம் என்பதால், காட்சிகள் எதையும் விவரிக்க விரும்பவில்லை. ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை நம்மை படத்துடன் ஒன்ற வைத்து, ஆனந்தக் கண்ணீருடன் கண்கலங்க வைத்து படத்தை முடிக்கிறார்கள்.

பெண் இயக்குநர்கள் மீதான பயத்தைப் போக்கி, நம்மை அசரவைக்கும் படத்தைக் கொடுத்த இயக்குநர் சுதா கொங்குராவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!


மாதவன்:

‘இந்த படத்துக்காக உடம்பை ஏற்றினேன், அதற்கு இரண்டு வருடம் உழைத்தேன்’ என்றெல்லாம் மாதவன் பேட்டி கொடுத்தபோது, அது வழக்கமான க்ளிஷே பில்டப்பாகத்தான் தோன்றியது. ஆனால் படத்தைப் பார்க்கும்போது, மாதவனின் கடும் உழைப்பு தெரிகிறது. அவர் வரும் ஒவ்வொரு சீனிலும் நடிப்பு ராட்சசனாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். தம்பி படத்திற்குப் பிறகு, அதே மாதவன் வெற்றிகரமாகத் திரும்பி வந்திருக்கிறார். தனு வெட்ஸ் மனு போன்ற படங்களின் மூலம் ஹிந்தியில் தொடர்ந்து வெற்றிகரமான ஆளாக இருந்தாலும், தமிழில் விழுந்துவிட்ட கேப்பை இந்த அருமையான படத்தின் மூலம் ஈடு செய்திருக்கிறார். திரைக்கதை உதவி என்று மாதவன் பெயர் வருகிறது. இந்த படத்தின் உருவாக்கத்தில் அவரது பங்களிப்புக்கு ஏற்ற வெற்றியை அவர் பெற்றிருக்கிறார்.


படத்தில் ‘வயசாகிடுச்சு’ எனும் வசனம் அடிக்கடி வந்தாலும், தாடி-மீசையை எடுத்துவிட்டால் மேடி இப்போதும் ஹேண்ட்சம் யூத் தான்!


ரித்திகா சிங்:

உண்மையிலேயே பாக்சர். ஆனால் சிம்பிளான அழகி. அதைவிட ஆச்சரியம், நடிப்பில் பின்னுவது. ஒரு குப்பத்துப் பெண்ணாக துடுக்குத்தனம் காட்டுவதும், அக்காவின் கனவுக்கு உதவுவதும், அதிகார வர்க்கத்தின் பாலிடிக்ஸில் சிக்கி சின்னாபின்னமாவதுமாக எல்லா சீனிலும் நம்மை நடிப்பால் நாக்-அவுட் செய்கிறார். மாதவன், நாசரையே சில சீன்களில் தூக்கிச் சாப்பிட்டுவிடுகிறார். அதிலும் கிளைமாக்ஸில் ஓடிவந்து, மாதவன் மேல் தாவுவது சூப்பர்.

சொந்த பந்தங்கள்:

நாசருக்கு இதுவொரு முக்கியமான படம். அப்படியே அந்த கேஷுவல் கோச்சிங் கேரக்டரை ஸ்க்ரீனில் கொண்டுவந்திருக்கிறார். ராதாரவியிடம் மாதவனின் ஓடிப்போன மனைவி பற்றி கமெண்ட் அடிக்கும் இடம் அதகளம். வில்லனாக வரும் ஹிந்தி நடிகர் ஜாகீர் உசேனும் மிரட்டியிருக்கிறார்.

ஹீரோயினின் அக்காவாக நடித்திருப்பவர், மும்தாஜ் சர்க்கார். பி.சி.சர்க்கார் எனும் பிரபல மேஜிக் நிபுணர் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவரின் மகள் இவர். மிகவும் நுணுக்கமான நடிப்பாற்றலும், அந்த அக்கா கேரக்டரை வாழ்ந்து காட்டியிருக்கிறார். இடைவேளைக்குப் பின் ஹீரோயினுக்கும் இவருக்கும் நடக்கும் மௌனயுத்தத்தில், இவரின் நடிப்பு தான் டாப்.

 நெகடிவ் பாயிண்ட்ஸ்:

- மாதவன் தவிர்த்து, வேறு அட்ராக்சன் எதுவும் விளம்பரத்தில் இல்லாதது. ஹிந்தியிலாவது நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கினார்கள். தமிழில் மாதவனின் கம் பேக் மட்டும் தான் ஒரே விளம்பரம். மக்கள் எல்லாம் அரண்மனை-2 எனும் குடிசைப் பக்கம் தான் ஒதுங்குகிறார்கள்.

 பாசிடிவ் பாயிண்ட்ஸ்:
- திரைக்கதை
- மாதவன் & ரித்திகாசிங்
- சந்தோஷ் நாராயணனின் ’கதையை நகர்த்தும்’அருமையான பாடல்கள்
- பாக்ஸிங் படங்களில் முக்கியம், எடிட்டிங் தான். பெர்ஃபெக்ட் எடிட்டிங்!
- ஆரஞ்சு டோனில் யதார்த்தத்தைப் பதிவு செய்திருக்கும் ஒளிப்பதிவு
- ஒரு நல்ல இயக்குநருக்கான அடிப்படை அடையாளம், வாய்ஸ் சின்க் தான். ஹீரோயினுக்கு தமிழ் சுத்தமாகத் தெரியாது. ஆனால் படத்தில் பெர்ஃபெக்ட்டாக வாயசைத்திருக்கிறார். அதில் ஆரம்பித்து, எல்லா விஷயத்திலும் பக்கா டைரக்சன்.

பார்க்கலாமா?
கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.
மேலும் வாசிக்க... "இறுதிச் சுற்று - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, January 22, 2016

ரஜினி முருகன் - திரை விமர்சனம்

அதாகப்பட்டது..:
பொங்கலுக்கு தாரை தப்பட்டையை இறக்கி கதிகலங்க வைத்தவர்கள், நிதானமாக இன்று, இங்கே ரஜினி முருகனை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். படம் இந்தியாவில் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்டது, இண்டர்நெட்டில் வந்து ஐந்து நாட்கள் ஆகிவிட்டன. இருந்தும், குடும்பம் குடும்பமாக தியேட்டரை நோக்கி படையெடுக்கிறார்கள் நம் மக்கள். இவ்வளவு எதிர்பார்ப்பு இருந்துமா ரிலீஸ் ஆக முடியாமல் கிடந்தது எனும் ஆச்சரியத்தை தவிர்க்க முடியவில்லை. ஒருவழியாக ரஜினி முருகன் பார்த்தாகிவிட்டது.
ஒரு ஊர்ல :
கதை..அது வந்து..சிவ கார்த்திகேயன் சார், சூரி சார்..அப்புறம் கீர்த்தி மேடம்..ராஜ்கிரண் சார்கூட இருந்தார்..கதை...ஆங், தாத்தா ராஜ்கிரண் சாருக்கு ஒரு பங்களா வீடு இருக்கு. அதை வித்து பேரன் சிவா சாருக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து தருவோம்ன்னு நினைக்கிறார். அதில் வரும் சிக்கல்களும், அதை பேரனும் தாத்தாவும் தீர்ப்பதே கதைன்னு வைத்துக்கொள்ளலாம்.


உரிச்சா:

ஒரே வரியில் ‘வ.வா.சங்கம்’ ரிட்டர்ன்ஸ்-ன்னு சொல்லி முடிச்சிடலாம். ஜாலியான, ரகளையான, ரொம்ப சீரியஸாகப் போய்விடாத திரைக்கதை. கொண்டாட்டம் தான் முக்கியம், நம்பி வர்றவங்க, சந்தோசமாக திரும்பிப் போக வேண்டும் என்பது தான் ஒரே குறிக்கோள். அந்த வகையில் கலக்கியிருக்கிறார்கள்.

சிவா சார், சூரி சார் நட்பை விளக்கும் காமெடிக் காட்சிகள், தொடர்ந்து சிவா சார் கீர்த்தி மேடத்தைக் காதலிக்கும் காமெடிக் காட்சிகள், தாத்தா ராஜ்கிரண் சார் செத்துப்போகும்(!) காமெடிக் காட்சிகள் என எல்லாவற்றையும் காமெடியாகவே நகர்த்திப் போகிறார்கள். ஒரு சீன் சீரியஸ் ஆனாலும், அடுத்த சீனிலே முந்தைய சீனின் சீரியஸ்னெஸ்ஸையும் காலி செய்கிறார்கள். குருநாதர் ‘டாஸ்மாக் புகழ்’ ராஜேஸ் சார் வழியில் திரைக்கதையை அமைத்திருக்கிறார் பொன்ராம் சார். கொஞ்சம் நல்ல கருத்துக்களையும் சொல்வதால், குருவை மிஞ்சிய சிஷ்யன் ஆகிறார். (வரி விலக்கிற்காக(!) குடிக்கிற சீன் வைப்பதைத் தவிர்த்தால், இன்னும் நன்றாக இருக்கும்.)

காமெடி எனும் இனிப்பு நல்ல விஷயம் தான். ஆனால் இரண்டு மணி நேரம் திகட்டத் திகட்ட அதையே திணிக்கும்போது, கொஞ்சம் அலுப்பு வந்துவிடுகிறது. பொன்ராம் சார் அடுத்த படத்தில் நல்ல வலுவான கதையுடன் இறங்கவில்லையென்றால், குருநாதர் போன்று ஆகிவிடலாம்.

ஆனாலும் ஆரம்ப உறி அடிக்கும் காட்சி முதல், காதல் காட்சிகள், ராஜ்கிரண் சார் செய்யும் மெல்லிய காமெடிகள், பஞ்சாயத்து சீன், கத்தி சீன், கிளைமாக்ஸில் ராஜ்கிரண் சாரும் சமுத்திரக்கனி சாரும் செய்யும் ரகளை, சிவா சாருடன் சேரும்போது மட்டும் கலக்கும் சூரி சார் என படத்தில் ரசிக்க வைக்கும் அம்சங்கள் ஏராளம். கூடவே இமான் சாரின் அருமையான பாடல்களும் சேர, பொங்கல் கொண்டாட்டம் உத்தரவாதம்!

வ.வா.சங்கம், நாட்டாமை சார், கரகாட்டக்காரன் சார் போன்ற படங்களைப் போல் நம்மை ரிலாக்ஸ் மூடிலேயே வைப்பது தான் படத்தின் பெரும் பலம்!

சிவ கார்த்திகேயன் சார்:

ரொம்ப கேஷுவலான நடிப்பு, அளவான ஸ்டைல், சூரி சாருடன் அளப்பறை என சிவ கார்த்திகேயன் சார் தன் ட்ரேட் மார்க்ஸில் முத்திரை பதிக்கிறார். இன்னும் சீரியஸான சீன்களில் நடிக்க ஏன் தயங்குகிறார் என்று தெரியவில்லை. இப்படியே எஸ்.வி.சேகர் சார் மாதிரி எத்தனை நாளைக்கு காமெடி ஹீரோவாகவே தொடர்வது? அடுத்த கட்டத்திற்கு அவர் நகர வேண்டிய நேரம் இது. அவரது அடுத்த படங்கள் பற்றிய அறிவுப்புகள் நம்பிக்கை தருகின்றன. வ.வா.சங்கத்து சிவா சார், அப்படியே திரும்பி வந்திருப்பது படத்திற்கு நல்லது; சிவா சாரின் வளர்ச்சிக்கு நல்லதல்ல.

கீர்த்தி மேடம் சுரேஷ் சார்:

‘பத்து ஜோதிகா மேடத்திற்குச் சமம்’ என்று ப்ரியதர்சன் சாரால் பாராட்டப்பட்டவர் கீர்த்தி மேடம். அந்த அளவிற்கு நடிக்க ஸ்கோப் இல்லையென்றாலும், க்யூட்டாக வந்து, சின்னச் சின்ன எக்ஸ்பிரசன்களில் நல்ல நடிப்புத்திறமையுள்ள நடிகை என்று நிரூபிக்கிறார். அடுத்த சில வருடங்களுக்கு இவரது ஆட்சி தான் என்று நினைக்கிறேன். இது என்ன மாயம் கவிழ்த்தினாலும், ரஜினி முருகன் காப்பாற்றியது நமக்கு சந்தோசம்.

சூரி சார்:
பொன்ராம் சார் + சிவ கார்த்திகேயன் சார் உடன் சேரும்போது மட்டும் சூரி சாருக்கு காமெடி பிச்சுக்கிட்டு வருவது என்ன மாயம் என்று தெரியவில்லை. டீக்கடை நடத்தும் காட்சிகள், வெளிநாட்டுப் பெண்ணை உஷார் செய்வது என மனிதரின் அட்டகாசம் படம் முழுக்க தொடர்கிறது. ‘ராஜ்கிரண் சாரின் இன்னொரு பேரன் சூரி சார் தான்’ என்று சொல்வார்களோ என்று நினைத்தேன்!

சொந்த பந்தங்கள்:

பெரும் கூட்டமே நடித்திருந்தாலும் ராஜ்கிரண் சார் - சமுத்திரக்கனி சார் -அச்யுத் குமார் சார் ஆகிய மூவர் தான் கலக்கியிருக்கிறார்கள். ராஜ்கிரண் சாரை புதிதாகப் பாராட்ட ஒன்றுமில்லை. மாஸ் & பாயும்புலியில் சமுத்திரக்கனி சாரை வில்லனாக ஏற்றுக்கொள்ள மனம் மறுத்தது. சார்மேல் இருக்கும் நல்ல எண்ணமும் ஒரு காரணம். ஆனால் இதில் தான் ஒரு நடிகராக ஜெயித்திருக்கிறார். ஒரு கிராமத்தானுக்குரிய உடல்மொழி கொண்டவர் சமுத்திரக்கனி சார். அது, இந்த வில்லன் கேரக்டருக்குத் தான் சரியாகப் பொருந்தியிருக்கிறது எனலாம்.

கன்னட லூசியாவில் நம்மை அசத்திய அச்யுத் குமார் சார், இதில் கீர்த்தி மேடத்தின் அப்பாவாக, ரஜினி சார் ரசிகனாக நடித்திருக்கிறார். மூவரில் இவருக்கே அதிக கைதட்டல்கள். ரஜினி சார் மேனரிசம், ரஜினி சார் வீடியோக்களை வைத்து புத்திமதி சொல்வது என அருமையான கேரக்டர் ஸ்கெட்ச்.

 நெகடிவ் பாயிண்ட்ஸ்:

- காமெடி தான் முக்கியம், கதையல்ல என்று கும்மியடித்திருப்பது!

- கே.எஸ்.ரவிகுமார் சார் & ஹரி சார் படங்களில் பெரிய குடும்பத்து ஆட்கள் என்று டஜன் கணக்கில் கேரக்டர்கள் வந்தாலும், அவர்கள் யார் என்பதும் என்ன உறவுமுறை என்பதும் ஆடியன்ஸுக்குத் தெளிவாகச் சொல்லப்படும். இங்கே பெரும் கூட்டம் வருகிறது, யார் மாமா, யார் சித்தப்பா என்று கடைசிவரை புரிவதே இல்லை.

- திகட்டும் காமெடி


 பாசிடிவ் பாயிண்ட்ஸ்:
- அசராமல் அடிக்கும் காமெடி வசனங்கள்
- சிவகார்த்திகேயன் சார் & கீர்த்தி மேடத்தின் ஸ்க்ரீன் ப்ரசன்ஸ்
- அனைத்து காமெடிக் காட்சிகளும்
- இமான் சாரின் அட்டகாசமான பாடல்கள்
- பாலசுப்பிரமணியன் சாரின் கலர்ஃபுல் ஒளிப்பதிவு (ஹீரோ, ஹீரோயினுக்கு பெரும்பாலும் பஞ்சுமிட்டாய் கலர் ட்ரஸ் தான்!)

பார்க்கலாமா?

‘ரஜினி சார் படங்களை ரசிக்க வேண்டுமென்றால், மூளையை கழட்டி வைத்துவிட்டுப் போக வேண்டும்’ என்று முன்பு சொல்வோம். அது, ரஜினி முருகனுக்கும் பொருந்தும். எம்ப்டியா போங்க, சந்தோசமாத் திரும்பி வாங்க!

முக்கியக் குறிப்பு: விமர்சனம் எழுதும்போது ‘சார்’ போட வேண்டும் என்று ஒரு பின்நவீனத்துவ ஜில்ஜங்ஜக் மரபு உருவாகியிருப்பதாகச் சொன்னார்கள். எனவே முன் ஜாக்ரதையாக சாருடன், மேடத்தையும் சேர்த்துப் போட்டுவிட்டேன். ஒன்னும் தப்பு இல்லீங்களே? :)
மேலும் வாசிக்க... "ரஜினி முருகன் - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, January 21, 2016

திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 69

69.ஜெனர் - ஃபேமிலி / செண்டிமெண்ட்

தமிழ் சினிமாவில் காதலுக்கு அடுத்து வெற்றிகரமான ஜெனராக இருப்பது, ஃபேமிலி ஜெனர் தான். பொதுவாகவே நாம் உணர்வுப்பூர்வமானவர்கள் என்பதால், செண்டிமெண்ட்டுக்கு என்றும் மதிப்பு குறைவதில்லை. புதிதாக திரைக்கதை எழுத வரும் தேர்ந்தெடுப்பது த்ரில்லர் ஜெனரைத் தான். ஆனால் வெற்றிப்படங்களின் லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தால், ஃபேமிலி செண்டிமெண்ட் படங்கள் அல்லது செண்டிமெண்ட்டை பி-ஸ்டோரியாக கொண்ட படங்களின் தாக்கத்தை உணரலாம். சமீபத்திய உதாரணம், த்ரிஷ்யம் / பாபநாசம். எனவே ஆக்சன், கேங்ஸ்டர் என எந்தவொரு ஜெனரில் திரைக்கதை எழுதினாலும், அதில் செண்டிமெண்டிற்கு இடம் இருந்தால் தயங்காமல் செண்டிமெண்ட்டைப் பொதுமான அளவு கலந்து அடியுங்கள்!

டிவிக்கள் வந்தபின், முழுமையான ஃபேமிலி செண்டிமெண்ட் படங்களுக்கு மதிப்பு குறைந்துவிட்டாலும், பி ஸ்டோரியை டெவலப் செய்ய உதவும் என்பதால் இந்த ஜெனரின் வகைகளைப் பார்ப்போம்.

1. உறவுக் கதைகள்: 
ஒரு குடும்பத்தில் இருக்கும் இரு உறவுகளின் உணர்வை மட்டும் மையப்படுத்தி வருபவை, இந்த வகைப் படங்கள். உதாரணமாக கணவன் - மனைவி, அண்ணன் - தங்கை, அண்ணன் - தம்பி, அப்பா-மகன், அம்மா - மகன் என்று குறிப்பிட்ட உறவை மட்டும் விரிவாக எடுத்துச் சொல்பவை இந்த உறவுக் கதைகள். நட்புக் கதைகளையும் இதே உறவுக்கதைகளின் கீழ் அடக்கிவிட முடியும்.

தாய் பாசம் பற்றி எடுக்கப்பட்ட படங்களைப் பட்டியலிட்டால் இந்தப் பதிவு போதாது. தமிழ் சினிமாவின் எவர் க்ரீன் செண்டிமெண்ட் அது. அதில் இருந்து மாறுபட்டு, அப்பாவுக்கும் மகனுக்குமான உறவைப் பற்றிப் பேசிய படம் தவமாய் தவமிருந்து. அண்ணன் - தங்கை பாசம் என்றதும் இப்போதும் நம் நினைவுக்கு வருவது பாசமலர். படம் வெளியாகி 50 ஆண்டுகளுக்கு மேல் ஆனபின்பும், இன்றும் பாசமலரை விடச் சிறந்த அண்ணன் - தங்கை படம் வரமுடியவில்லை. ஒரு திரைக்கதை மாணவனாக நாம் இந்தப் படங்களை முழுமையாக ஸ்டடி செய்ய வேண்டும். எதனால் இத்தகைய படங்கள் இன்றும் போற்றப்படுகின்றன, எப்படி அந்த கேரக்டர்கள் படைக்கப்பட்டிருக்கின்றன என்று ஆராய்வது அவசியம்.

இரு உறவுகள் ஒற்றுமையாக இருந்தன, அதன்பின் அவை ஏதோ பிரச்சினையால் பிரிந்தன, மீண்டும் ஒன்றாக இணைந்தன என்பது தான் இந்தவகைப் படங்களின் ஒன்லைன். பொதுவாக பிரிவு நடக்கும்போது, இருவரும் ஒருவரையொருவர் எதிரியாக நினைத்து சண்டை போடுவதும், பிறகு உண்மை/தவறு புரிந்து இணைவதும் வழக்கம். பாசமலரைப் பொறுத்தவரை வாழ்க்கை அவர்களை சுற்றிச் சுற்றி அடித்துப் பிரித்தாலும், அண்ணனும் தங்கையும் ஒருவரையொருவர் விட்டுக்கொடுப்பதே இல்லை. ஆடியன்ஸ் இரு கேரக்டரையும் ஒன்று போல் நேசிக்கும் அளவிற்கு திரைக்கதையை செதுக்கியிருப்பார்கள். இன்றுவரை சிவாஜியா, சாவித்திரியா, யார் பாசம் உயர்ந்தது எனும் கேள்வி எழவே இல்லை. இருவரையும் சமமாகவே மக்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

கவனித்துப் பார்த்தால், தவமாய் தவமிருந்து படத்திலும் அப்பா - மகன் கேரக்டர் ஸ்கெட்ச்சிலும் திரைக்கதையிலும் பாசமலர் டெக்னிக் இருப்பதைப் பார்க்கலாம். மகனும் நல்லவன், அப்பாவும் நல்லவர். சந்தர்ப்ப சூழ்நிலை தான் வில்லன். அந்த ஜெனரில் எவ்வளவோ படங்கள் வந்தாலும், இத்தகைய நுணுக்கமான வேலைப்பாடுகள் தான் அந்த படங்களுக்கு தனித்தன்மையைக் கொடுத்தன. இதைத் தான் ஒவ்வொரு வெற்றிப்படங்களில் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

2. குடும்பக் கதைகள்:

’ஒரு அமைதியான, அழகான குடும்பம். அங்கே ஒரு பிரச்சினை வந்து அமைதி குலைகிறது. இறுதியில் எல்லாம் சுபம்.’என்பது தான் இவ்வகைக் கதைகளின் ஒன்லைன். விசுவின் அத்தனை படங்களையும் இந்த வகையின் கீழ் கொண்டுவந்துவிடமுடியும். டிவி சீரியல்களை வாழ வைப்பதே இந்த குடும்பக் கதைகள் தான். டிவி சீரியல்களின் வருகைக்குப் பின் ஃபேமிலி செண்டிமெண்ட்டில் இத்தகைய ‘குடும்பத்தில் பிரச்சினை’கதைகளுக்கு வரவேற்பில்லாமல் போனது. ஆனாலும் வானத்தைப் போல, ஆனந்தம் போன்ற படங்கள் நல்ல பாடல்கள் மற்றும் நகைச்சுவையின் துணையோடு களமிறங்கி வெற்றி கொண்டதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கே.எஸ்.ரவிகுமாரின் நாட்டாமை டைப் படங்கள் எல்லாமே இந்த ஜெனரின் கீழ் தான் வரும். அதில் காமெடி, பாட்டு, காதல், ஆக்சன் என எல்லாவகையான மசாலாக்களையும் தூவி, விசு சாயலே இல்லாமல் ஆக்கி வெற்றி பெற்றவர் கே.எஸ்.ரவிகுமார்.

எனவே குடும்பக் கதைகளுக்கு மார்க்கெட் இல்லாவிட்டாலும், அவற்றை புதுமையாகச் சொன்னால் வெற்றி பெறவே செய்யும். அதற்கு சமீபத்திய உதாரணம், பாபநாசம். சமீப காலத்தில் கிராமங்கள்வரை ரீச் ஆன கமலஹாசன் படம் பாபநாசம் தான். அதற்குக் காரணம், அதில் இருந்த த்ரில்லர் ஜெனர் அல்ல; ஃபேமிலி ஜெனர் தான்.

இந்த ஆண்டு கமல் இரண்டு த்ரில்லர் படங்களில் நடித்தார். ஒன்று பாபநாசம், இன்னொன்று தூங்காவனம். பாபநாசத்தில் குடும்பத்திற்கு ஆபத்து, தூங்காவனத்தில் மகனுக்கு ஆபத்து. பாபநாசம் அடைந்த வெற்றியை தூங்காவனத்தால் அடைய முடியவில்லை. காரணம், செண்டிமெண்ட் எனப்படும் எமோசன் அங்கே இல்லாததால் தான். பாபநாசத்தை விடவும் வேகமான த்ரில்லர் தூங்காவனம். ஆனால் ஹீரோவின் பதைபதைப்பினை ஆடியன்ஸ் அடையாததால், படம் தோல்வியடைந்தது. அதற்குக் காரணம் மகனுக்கும் அப்பாவுக்குமான உறவும், (பிரிந்து போன) மனைவிக்கும் கணவனுக்குமான உறவும் தெளிவாக, நம் மண் மணம் கமழ சொல்லப்படாதது தான்.

எனவே த்ரில்லர் கதை தான் எழுதுவேன் என்று துடிக்கும் இள ரத்தங்கள், செண்டிமெண்ட்டின் மதிப்பை உணர பாபநாசத்தையும் தூங்காவனத்தையும் பத்து முறை பார்க்கவும்.


3. புது வரவுக் கதைகள்:

’அமைதியான குடும்பம் ஏதோவொரு பிரச்சினையில் சிக்கிக் கிடக்கிறது. அங்கே ஒரு புது கேரக்டர் வந்து, எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கிறது’என்பது தான் இவ்வகைக் கதைகளின் ஒன்லைன். இந்த வகைப் படங்களை வெற்றிகரமாகச் செய்தவர், இயக்குநர்  விக்ரமன். இந்த ஒன்லைனை வைத்து புது வசந்தம், கோகுலம், பூவே உனக்காக என்று சூப்பர் ஹிட் படங்களாகக் கொடுத்தார். குறிப்பாக பூவே உனக்காக படத்தின் ஸ்பெஷாலிட்டியே, காதல் ஜெனரும் ஃபேமிலி ஜெனரும் மிகச் சரியாக மிக்ஸ் ஆனது தான். கேரக்டர்களின் இயல்பு மாறும், பிரச்சினை மாறும். ஆனால் இதே ஒன்லைனை வைத்து தொடர்ந்து அவரால் ஹிட் கொடுக்க முடிந்தது. ஒரு ஹீரோ புது இடத்திற்குப் போய் மாற்றங்களை உருவாக்குகிறான் என்றாலே நாம் விக்ரமன் படங்களை ஒருமுறை ரெஃபரென்ஸ் செய்துகொள்வது நல்லது!

------------

ஒரு கதையை டெவலப் செய்யும்போது ஏ ஸ்டோரியின் ஜெனர் வேண்டுமானால் நமக்குத் தெளிவாகத் தெரியலாம். பி ஸ்டோரி என்பது பொதுவாக தானே டெவலப் ஆகி வரும் விஷயம். பி ஸ்டோரி காதல் தான் என்று நினைத்து டெவலப் செய்யும்போது, அதைவிட ஃபேமிலி ஜெனர் சரியாக வரும் சூழ்நிலை வரலாம். எனவே இதுவரை பார்த்த ஜெனர் வகைகள் அனைத்தையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். எந்த ஜெனர் சரி என்பது சில நேரம் நம்மை விட நம் கதை நன்கு அறியும்.

இனி பாகம் IV-ல் பார்த்த திரைக்கதை எழுதுவது எப்படி என்பதன் மீதிப் பகுதிகளைப் பார்த்துவிட்டு சுபம் போடுவோம்!

(தொடரும்)

மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 69"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, January 18, 2016

திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 68


68. ஜெனர் - நகைச்சுவைப் படங்கள்

ஜெனர்களிலேயே கஷ்டமானது, இந்த நகைச்சுவை ஜெனர் தான். த்ரில், சோகம் போன்ற விஷயங்களைக்கூட எளிதில் ஆடியன்ஸிடம் தூண்டிவிடலாம்; ஆனால் சிரிக்க வைப்பது ரொம்ப ரொம்பக் கஷ்டம். நகைச்சுவை என்பதற்கான வரையறையும் காலப்போக்கில் மாறிக்கொண்டே வருகின்றன. ஆரம்ப காலப் படங்களில் அஷ்டகோணல் சேட்டைகளுக்குக்கூட நம் ஆட்கள் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார்கள். 90% பழைய படங்களின் நகைச்சுவைகள் தற்போது சிரிப்பை வரவழைப்பதில்லை. பழைய காதல், சோக காவியங்களின் டெம்ப்ளேட்கூட இப்போதும் வெற்றி பெற வாய்ப்பு உண்டு. ஆனால் நகைச்சுவையைப் பொறுத்தவரை, காலப்போக்கில் வரும் மாற்றங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

மற்ற ஜெனர்களை விட, இந்த ஜெனருக்கு ஒரு தனித்தன்மை உண்டு. அது, நடிகர்களின் பங்களிப்பு தான் நகைச்சுவை ஜெனர் மாற்றங்களுக்கு அடிப்படையாக உள்ளது. சமீப காலத்தில் நோக்கினால் கவுண்டமணி, விவேக், வடிவேலுவின் வருகையால் புதுவிதமான காமெடிகள் உருவானதை நாம் உணர முடியும். ஒரு நல்ல நகைச்சுவைக் கலைஞனால், இந்த ஜெனரை புதிய திசையில் மாற்றிவிட முடியும். நகைச்சுவை நடிகர்களை மூன்று வகையாக நாம் பிரித்துவிட முடியும். ஒன்று, காளி என். ரத்தினம், நாகேஷ், செந்தில், வடிவேலு போன்ற முட்டாள் கேரக்டர் வகையினர்; மற்றொன்று என்.எஸ்.கே,விவேக், கவுண்டமணி போன்ற அறிவாளி கேரக்டர் வகையினர். மூன்றாவது, ஒய்.ஜி.மகேந்திரன், ஜனகராஜ், சந்தானம் போன்ற நண்பேன்டா வகையினர்.


ஒவ்வொரு காலகட்டத்திலும், இதில் ஏதேனும் ஒருவகையினரின் ஆதிக்கத்தின் கீழ் நகைச்சுவை ஜெனர் வரும். அந்த காலகட்ட நகைச்சுவைப் படங்கள், இந்த கேரக்டர்களை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்படும். அதாவது, நீங்கள் புத்திசாலி காமெடியனை மனதில் வைத்து திரைக்கதை உருவாக்கியிருக்கலாம். அது படமாக்கப்படும்போது, புத்திசாலி கேரக்டர் நடிகர் கிடைக்கவில்லையென்றால் அல்லது முட்டாள் கேரக்டர் நடிகருக்கு மார்க்கெட் கூடிவிட்டால், திரைக்கதையை அதற்கேற்ப மாற்ற வேண்டியிருக்கும். வின்னர் திரைக்கதை கவுண்டமணியை மனதில் வைத்து எழுதப்பட்டது. ஆனால் வடிவேலு கமிட் ஆனதும், மொத்த திரைக்கதையும் அதற்கேற்ப மாற்றப்பட்டதை இதற்கு நல்ல உதாரணமாகக் கொள்ளலாம். எனவே இந்த மூன்றுவகை கேரக்டர்களை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

1. முட்டாள் காமெடியன்:

இந்த வகையைத் துவக்கி வைத்தவராக, காளி என்.ரத்தினத்தைச் சொல்லலாம். சபாபதி (1941)-ல் அவர் நடித்த முட்டாள் வேலைக்காரன் கதாபாத்திரம் இன்றுவரை பேசப்படும் ஒன்றாக இருக்கிறது. இந்த வகை நடிகர்கள் ஈகோவை சுத்தமாக விட்டுவிட்டு, கலைக்காக நம்மை மகிழ்விப்பதற்காக தன்னையே தாழ்த்திக்கொள்ளும் உன்னதமான நடிகர்கள் என்றே சொல்ல வேண்டும். தற்போதைய நகைச்சுவை நடிகர்களின் செயல்படுகளைப் பார்க்கும்போது, இது எவ்வளவு கடினமான பணி என்பது புரியும். தன்னைத் தாழ்த்தி புகழ்பெற்றவர்கள்கூட, ஒரு கட்டத்தில் ஈகோவால் அப்படி நடிக்க முடியாமல் அழிவதை நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். உண்மையில், மக்களிடம் இவ்வகை காமெடியன்களுக்கு நல்ல மரியாதையும், பெரும் ஆதரவும் கிடைப்பது வழக்கம்.

ஹீரோவுடன் இருந்தாலும் சரி, வேறு காமெடியனுடன் இருந்தாலும் சரி; இவ்வகை கேரக்டர்கள் செய்யும் காரியங்கள் எல்லாம் தவறாகவே முடிந்து ஆடியன்ஸுக்கு சிரிப்பை வரவழைக்கும். ஹீரோவின் காதல் ஆனாலும், பழி வாங்கல் ஆனாலும் ஹீரோவுக்கு துணையாக இருந்து, மிகச்சரியாக சொதப்புவது இந்த கேரக்டர்களின் தனித்திறமை. இவர்களுக்கு உடல்மொழி ஒரு முக்கிய ஆயுதமாக இருக்கும். அங்க சேஷ்டைகள் மூலம், திரையில் வந்தாலே சிரிக்க வைத்துவிடுவார்கள். நாகேஷ் நுணுக்கமான அங்க அசைவுகள்/பார்வைகள் மூலம் இதை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துவார். இந்த தலைமுறையில், வடிவேலு அதில் வித்தகர் என்பதைச் சொல்லத் தேவையில்லை. தனது நடிப்புத்திறமையால், ஒரு ஆவரேஜ் நகைச்சுவையைக்கூட சிறப்பானதாக இவர்களால் ஆக்க முடியும்.

2. அறிவாளி காமெடியன்:

சமூக அவலங்களைச் சுட்டிக்காட்டுவதும், ஹீரோ உட்பட சக கதாபாத்திரங்களை டர்ர் ஆக்குவதும் இவ்வகை காமெடி கேரக்டர்களின் அடிப்படை இயல்பு. இதைத் துவக்கி வைத்தவராக, என்.எஸ்.கிருஷ்ணன் எனும் கலைவாணரைச் சொல்லலாம். அதை இன்னும் முன்னெடுத்துச் சென்றவராக எம்.ஆர்.ராதாவைக் குறிப்பிடலாம். மக்களின் மூட நம்பிக்கைகள், சமூக அவலங்கள், ஹீரோ துதி என எல்லாவற்றையும் ரவுண்டி கட்டி அடிக்கும் வல்லமை கொண்டவர்கள் இவ்வகையினர். உண்மையிலேயே தனக்கென்று சில கொள்கைகளை வைத்திருக்கும் அறிவுஜீவிகளே இவ்வகை நடிகர்களாக ஆரம்ப காலத்தில் வந்தனர். திரைப்படங்களில் நேரடி அறிவுரை/பிரச்சாரம் தேய்ந்து போய், 1970களில் திரைமொழி மூலம் கதை சொல்லுதல் நடைமுறைக்கு வந்தது. அது இத்தகைய நேரடிப் பிரச்சார காமெடியை மறைமுகமாகப் பாதித்தது எனலாம்.

அதையும் மீறி, மேலே வந்தவர் என்று கவுண்டமணியைச் சொல்லலாம். என்.எஸ்.கே அல்லது எ.ஆர்.ராதா போன்று திரைக்கு அப்பால், கவுண்டமணி சமூக அக்கறையோ அல்லது தனிப்பட்ட கொள்கைகளோ கொனடவர் அல்ல. எகத்தாளம், ஹீரோ உட்பட அருகில் இருப்போரை வாரி விடுவது, கேலி, கிண்டல் தான் அவரது காமெடிக்கு அடிப்படை. எதையும் போட்டுத் தாக்குவது தான் அவரது பாணி. இன்றைக்கு அவரது ரசிகர்கள் மிகக் கவனமாக ‘எம்.ஆர்.ராதா பாணி’க்கு ஒத்துவரும் கவுண்டமணி காமெடிகளை மட்டும் பொறுக்கியெடுத்து, அவரை அறிவுஜீவி காமெடியனாக முன்னிறுத்துகிறார்கள். ஆனால் அவரது படைப்புகளும், அப்போதைய அவரது நடவடிக்கைகளும் உண்மை அப்படி அல்ல என்றே சொல்கின்றன. இருப்பினும், அவரைத் தவிர்த்துவிட்டு இந்த அறிவாளி வகையைப் பற்றி எழுத முடியாது என்பதையும் நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். அவருக்குப் பின், இதை வெற்றிகரமாகச் செய்தவர் விவேக். திரைக்கு அப்பாலும் தன்னை சமூக அக்கறை கொண்டவராக நிலைநிறுத்தியபடி, இந்த அறிவாளி வகையில் வெற்றிவாகை சூடினார்.

இத்தகைய கேரக்டர்களை எழுதும்போது, அவர்கள் மற்ற எல்லா கேரக்டர்களையும் டாமினேட் செய்யும் குணம் உள்ளவர்கள் என்பதையும் மனதில் வைத்தே எழுத வேண்டும். ஒரு அளவிற்கு மேல் இவர்களை முட்டாள் வகையாக காட்ட முடியாது. கவுண்டமணி சில காட்சிகளில் அப்படி வந்தாலும், ஒட்டுமொத்தத்தில் அவரது கை ‘ஓங்கியே’ இருக்கும்.

3. நண்பேன்டா:
என்னைப் பொறுத்தவரை, இந்தவகை நடிகர்கள் நம் பரிதாபத்திற்கு உரியவர்கள் என்பேன். நல்ல திறமைசாலிகளாகவும், சாதாரண வசனத்தைக்கூட சுவராஸ்யமானதாக ஆக்கும் வல்லை படைத்தவர்களாகவும், முழுப்படத்தையும் தாங்கும் நகைச்சுவைத் திறன் கொண்டவர்களாகவும் இவர்களைச் சொல்லலாம். ஆனால், காலப்போக்கில் இவர்களை மக்கள் மறந்துவிடுவது தான் கொடுமை. தங்கவேலு, சந்திரபாபு, ஜனகராஜ், சார்லி, ரமேஷ் கண்ணா, சந்தானம் போன்றோர் இவ்வகையில் தான் வருவார்கள்.

பூவே உனக்காக படத்தை சார்லி கேரக்டர் இல்லாமல் யோசிக்க முடியுமா? அல்லது ஓகேஓகே படத்தைத் தான் சந்தானம் கேரக்டர் இல்லாமல் பார்க்க முடியுமா? ஆனாலும் முந்தைய முட்டாள் & அறிவாளி வகையினர் அளவுக்கு இவர்களுக்கு திரை ஆயுளும் நீடித்த புகழும் கிடைப்பதில்லை. (சந்தானம் கவுண்டமணி பாணியைப் பின்பற்றினாலும், கவுண்டமணி செய்த ‘நண்பன்’ கதாபாத்திரங்களைத் தாண்டி சந்தானம் ஏதும் செய்துவிடவில்லை. சத்யராஜ்-கவுண்டமணி காம்பினேசனில் வரும் ’கவுண்டமணி கேரக்டர்’ மட்டும் தான் சந்தானம். கவுண்டமணி அதையும் தாண்டி பன்முகத்தன்மை கொண்டவர், அது சந்தானத்திடம் மிஸ்ஸிங்.)

பெரும்பாலும் ஹீரோவுக்கு நண்பனாக வருபவர்கள் இவ்வகையினர். நண்பன் கேரக்டர் என்பது ஹீரோவின் மனசாட்சி என்று ஏற்கனவே பார்த்திருக்கிறோம். படம் முழுக்க காமெடியை தொடரவும், ஹீரோ யோசிப்பதை வசன காட்சியாக்கவும் உதவுபவை இவ்வகைக் கேரக்டர்கள். மேலே பார்த்த முட்டாளாகவோ அல்லது அறிவாளியாகவோ இந்த நண்பேண்டா கேரக்டர் இருக்கவும் வாய்ப்பு உண்டு.

அடுத்து, நகைச்சுவைப் படங்களின் வகைகளைப் பார்ப்போம்.

1. ஆள் மாறாட்டக் கதை:

இரட்டை வேடப் படங்கள் பற்றி நாம் ஏற்கனவே விரிவாகப் பார்த்திருக்கிறோம். ஒரே உருவ ஒற்றுமை உள்ள இருவர் இடம் மாறுவதால், உருவாகும் குழப்பங்கள் இவ்வகைக் காமெடிக்கு நல்ல உதாரணம். அடுத்து, ஒரே ஆள் இருவேறு நபராக நடிக்கும் தில்லுமுல்லுக் கதைகளும் இந்த வகையில் தான் வரும். தற்போது வழக்கொழிந்து போன, வீரா போன்ற இரண்டு பொண்டாட்டிக் கதைகளும் இவ்வகை தான்.

இரு நேரெதிர் கதாபாத்திரங்கள் தங்கள் இடத்தை மாற்றிக்கொள்ளும்போது நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களும், உண்மை வெளிப்பட்டுவிடுமோ எனும் சஸ்பென்ஸுமே இவ்வகைக் கதைகளின் அடிப்படை பலம். எங்க வீட்டுப்பிள்ளை, பலே பாண்டியா, ஊட்டி வரை உறவு, தில்லுமுல்லு, சதி லீலாவதி, காதலிக்க நேரமில்லை, உள்ளத்தை அள்ளித்தா போன்ற படங்களை ஸ்டடி செய்தால், இவ்வகைப் படங்கள் பற்றி நிறையக் கற்றுக்கொள்ளலாம்.


2. Screwball காமெடிக் கதைகள்:

பாலியல் வேட்கை தான் இவ்வகைக் காமெடிக்கு அடிப்படை. ஹீரோவுக்கு காதலி கிடைப்பாளா, மாட்டாளா எனும் மையக் கதையுடன் நண்பேன்டா வகையும் இணையும்போது, இவ்வகை ரொமாண்டிக் காமெடிகள் கிடைக்கும். ஹீரோ கல்யாணம் ஆனவர் என்றால், முதலிரவு நடக்குமா, நடக்காதா எனும் கேள்வியை எழுப்பும் படங்களும் இவ்வகையில் தான் வரும். சபாபதி(1941) முதல் பல பாக்கியராஜ் படங்கள் வரை, இதற்கு ஏகப்பட்ட உதாரணங்களைப் பார்க்கலாம். முந்தனை முடிச்சு, இது நம்ம ஆளு என பல படங்களில் ‘அது நடக்குமா?’ தான் கதைக்களம். இதை ஆபாசமின்றிச் சொல்ல, தனித் திறமை வேண்டும்!

3. சூழ்நிலை காமெடிக் கதைகள்:

ஹீரோ தனக்குப் பொருந்தாத ஒரு சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு அவஸ்தைப் படும் கதைகள் இவ்வகையில் வரும். அவ்வை சண்முகி, வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற படங்கள் இதற்கு நல்ல உதாரணம். மனைவி/குழந்தைக்காக பெண் வேடமிடும் ஹீரோ, மாமனார் முதல் ஹவுஸ் ஓனர் வரை பலராலும் காதலிக்கப்படும் ரகளையான சூழல் தான் கதைக்களம். ஹீரோவுக்கு ஒரு குறிக்கோள்; அதை அடைய வேண்டுமென்றால், தனக்குப் பொருந்தாத சூழலுக்கு அவன் போயே ஆக வேண்டும் என்பது தான் இவ்வகைப் படங்களின் ஒன் லைன்.

கலாட்டா கல்யாணம் படத்தையும் இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். ஹீரோயினுக்கு மூன்று சகோதரிகள். ஹீரோவுக்கு கல்யாணம் ஆக வேண்டுமென்றால், ஹீரோயினின் சகோதரிகளுக்கு ஹீரோவே மாப்பிள்ளை பார்க்க வேண்டும். இப்படி ஒரு இக்கட்டில் ஹீரோ சிவாஜி சிக்கிக்கொள்ள, வயிறு வலிக்க நம்மை சிரிக்க வைத்த படம் கலாட்டா கல்யாணம்.

4. இரு துருவங்களின் கதைகள்:
இரண்டு நேரெதிர் இயல்புடைய கேரக்டர்களை மையப்படுத்தி வரும் காமெடிக்கதைகள் இவை. தெனாலியில் வந்த டாக்டர்-பேசண்ட் முதல், கலகலப்பில் வந்த நல்ல-கெட்ட சகோதரர்கள் வரை இதற்கு பல உதாரணங்கள் தமிழில் உண்டு. ஒரு கேரக்டரால் இன்னொரு கேரக்டர் சிக்கலில் மாட்டுவது அல்லது ஒரு கேரக்டர் போன்று ஒன்னொருவர் மாறும் கேரக்டர் ஆர்க் போன்றவை தான் இந்த வகைக் காமெடிக்கு அடிப்படை.


5. நண்பேன்டா கதைகள்
ஒரு மெல்லிய மெயின் கதையை எடுத்துக்கொண்டு, அத்துடன் கூடவே பயணிக்கும் ஒரு காமெடி கேரக்டரையும் உருவாக்கிவிட்டால், அது தான் நண்பேண்டா! வின்னர், உனக்காக எல்லாம் உனக்காக, விக்ரமனின் பல படங்கள் இதற்கு நல்ல உதாரணங்கள். நல்ல காமெடிக் காட்சிகளும், சிறந்த நகைச்சுவை நடிகரும் இவ்வகைக் கதைக்கு அவசியம்.

6. ப்ளாக் காமெடி:

சோகமான மற்றும் சீரியஸான விஷயங்களையும் காமெடியாகச் சொல்பவை இந்த வகைப் படங்கள். தமிழில் சூது கவ்வும், மூடர்கூடம் ஆகிய இர படங்கள் தான் இந்த வகையில் வந்திருக்கிறது. நானும் ரவுடி தான் படத்தில், வில்லன் போர்சன் மட்டும் ப்ளாக் காமெடியாக வரும். கொஞ்சம் அசந்தாலும் கோமாளித்தனமான படமாகப் போய்விடும் ஆபத்துள்ளவை ப்ளாக் காமெடிப் படங்கள்.

(தொடரும்)
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 68"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Wednesday, January 13, 2016

BOFTA : சினிமா மேக்கிங் பற்றி சுந்தர்.சி கொடுத்த அற்புதமான உரை

தமிழ் சினிமாவில் நான் மதிக்கும் இயக்குநர்களில் ஒருவர், சுந்தர்.சி. இதை நான் சொல்லும்போதெல்லாம் நண்பர்கள் அதிர்ச்சி ஆகிறார்கள். 

பிடித்த இயக்குநர்கள் வரிசையில் பாரதிராஜா, மகேந்திரன், மிஷ்கின் போன்றோருடன் சுந்தர்.சியைச் சேர்ப்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. நகைச்சுவை என்பது மிகவும் கஷ்டமான விஷயம். த்ரில்லர், காதல், சோகம் போன்றவற்றைவிட, நகைச்சுவை ஜெனர் மிகவும் ரிஸ்க்கானது. அதில் ஒருவர் இருபது வருடங்களுக்கு மேலாக வெற்றிப்படங்களைக் கொடுக்கிறார் என்றால், அது சாதாரண விஷயமே அல்ல.

ஹிட்ச்காக் காலத்தில் அவரை ‘வெறும்’ த்ரில்லர் பட இயக்குநராகவே பலரும் பார்த்தார்கள். ஆனால் அந்த ஒரு ஜெனரில் அத்தனை வெரைட்டியாகவும் டெக்னிகலி மிரட்டலாகவும் அவர் செய்த சாதனைகள் பின்னரே புரிந்துகொள்ளப்பட்டன. அதே போன்று, சுந்தர்.சியின் பெயரும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்றாக இடம்பெறும்.

நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் அவர் பல நல்ல அறிவுரைகளை குறும்பட இயக்குநர்களுக்கு வழங்கியிருக்கிறார். அப்போதே, இவர் ஏன் டெக்னிகல் பேட்டிகளைக் கொடுப்பதில்லை என்று நினைத்திருக்கிறேன். இப்போது BOFTA ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் அவர் கொடுத்திருக்கும் இரண்டு மணி நேர உரை, என் எதிர்ப்பார்ப்பை பூர்த்திசெய்துள்ளது. 

‘பாலச்சந்தர், பாரதிராஜா போன்றோரே சும்மா இருக்கும்போது, நாம் அலட்டலாமா?’என்ற எண்ணத்திலேயே டெக்னிகலாகப் பேசாமல் அமைதியாக இருப்பதாக அவர் சொல்கிறார். இந்த அருமையான பேட்டியில், அவருடன் இந்த இடத்தில் மட்டும் மாறுபடுகிறேன். முன்னோர் செய்த தவறை நாமும் செய்ய வேண்டியதில்லை. ஃபிலிம் ஸ்கூலில் சேர முடியாத பலருக்கும், இத்தகைய டெக்னிகல் பேட்டிகள் பேருதவியாக இருக்கும் என்றால் மிகையில்லை. குறைந்தது இணைய மீடியாக்களிலாவது, தமிழ் சினிமா டெக்னிஷியன்கள் இத்தகைய உபயோகமான பேட்டியைக் கொடுக்க வேண்டும் என்பதே என் பல வருட வேண்டுகோள்.

சுந்தர்.சியின் இந்த அருமையான பேட்டியையும், தொடர்ந்து பாலா, ஆர்யா போன்றோரின் பேட்டியையும் எடுத்ததோடு நில்லாமல், இணையத்திலும் வெளியிட்ட BOFTA-விற்கும், ’யுடிவி’ தனஞ்செயனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

யூடியூப் லின்க்ஸ்: 

https://www.youtube.com/watch?v=4z15UluasxU
https://www.youtube.com/watch?v=Pn8i0-E4qOA
https://www.youtube.com/watch?v=fAXs6baey6s
 https://www.youtube.com/watch?v=W2e8y0NhJH8


சுந்தர்.சி. பேச்சில் உதிர்ந்த சில முத்துக்கள் இங்கே:


- அசிஸ்டெண்ட்டாக இருக்கும்போது, சீன் போட்டு நடிக்காதீர்கள். வேலை செய்வது போல் ஓவர் பில்டப் காட்டி நடிக்காதீர்கள். சின்சியராக வேலை செய்தால், பல கண்கள் உங்களைக் கவனிக்கும். வாய்ப்பு,

தேடி வரும்.

- ஒவ்வொரு படம் ஆரம்பிக்கும்போதும், பென்ச் மார்க்காக ஏற்கனவே வந்த ஒரு படத்தை வைத்துக்கொள்ளுங்கள். காதலிக்க நேரமில்லை தான் உள்ளத்தை அள்ளித்தாவிற்கு பெஞ்ச் மார்க்.

-லொகேசனில் திடீர், திடீரென முடிவுகள் எடுக்க வேண்டிவரும். சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்க, சைக்காலஜிக்கலாக தயாராக இருக்க வேண்டும்.

- ஒரு பக்கா திரைக்கதை அமைந்துவிட்டால், வெற்றி நிச்சயம்.

- காட்சிகள் துண்டு, துண்டாக இருந்தால் ஆடியன்ஸ் படத்துடன் ஒன்ற முடியாது. எனவே சீகுவென்ஸ் போன்று சில சீன்கள் இருக்க வேண்டும். (சுந்தர்.சி படங்கள், காமெடி சீகுவென்ஸுற்குப் பெயர்

பெற்றவை!)

- காமெடி என்பது கதையை நகர்த்துவதாக, கதைக்குள் காமெடியாக இருக்க வேண்டும். கதையில் வரும் கேரக்டர் ஒன்று காமெடியனாக இருந்தால், ஆடியன்ஸ் படத்துடன் ஒன்றுவார்கள்.

- வின்னர் ஒரிஜினல் ஸ்க்ரிப்ட்படி, இடைவேளை வரை தான் வடிவேலு காமெடி வரும். ஆனால் வடிவேலுவின் நடிப்பும், பிரசாந்த் மார்க்கெட் டவுன் ஆனதும் தான், வடிவேலு படம் முழுக்க வரக் காரணம்.

(சூழ்நிலைக்கேற்ற முடிவுக்கு உதாரணம்.)

- ஹீரோ துதியில் இறங்காமல், படத்தின் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்யுங்கள்.

- பிற படங்களின் இஸ்பிரேசனில் தான் சில சுந்தர்.சி படங்கள் உருவாகியிருக்கின்றன.

- லொகேசனில் கான்ஃபிடன்ஸுடன் வேலை செய்யுங்கள். யாருக்காகவும் பயப்படாதீர்கள்.

- ரஜினி, கமல் போன்றோரின் வளர்ச்சிக்குக் காரணம் இயக்குநருக்கு அவர்கள் தரும் மரியாதை தான்.

- லாஜிக்கை விட, சுவாரஸ்யமும் செண்டிமெண்ட்டுமே (டிராமடிக் எஃபக்ட்டே) முக்கியம். எல்லா சீன்களும் லாஜிக்காக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அருணாச்சலத்தில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்

மேனேஜர், ரஜினியை இரவு 12 மணிக்கு எழுப்பி வெளியே போகச் சொல்லும் சீன் இதற்கு உதாரணம்.

- சினிமா எடுப்பதற்கான இலக்கணங்களை அறிந்துவிட்டு, பிறகு அதை மீறலாம். (Know the rules to break them!)

- சினிமா ஒரு விஷுவல் மீடியம். எனவே ஆடியன்ஸ் விஷுவலாக புரிந்துகொள்ளும் விஷயத்திற்கு, மைண்ட் வாய்ஸை யூஸ் பண்ணாதீர்கள்.

- ஒரு நடிகரை மனதில் வைத்து திரைக்கதை எழுதாதீர்கள். கிடைத்த நடிகரின் பாடி லாங்குவேஜுக்காக, அந்த கேரக்டரை இம்ப்ரூவ் செய்யுங்கள்.

- எப்போது ஒருவன் தன் இருகைகளை மறக்கிறானோ, அப்போதே அவன் நல்ல நடிகன் ஆகிறான்.
- சினிமா என்பது கடைசிவரை செதுக்கிக்கொண்டே இருக்க வேண்டிய ஒரு விஷயம்.
- டைட்டானிக், 40 நாட்களில் ஷூட்டிங் முடிந்த படம். எனவே தெளிவான திட்டமிடலுடன் இறங்கினால், 60 நாட்களில் ஷூட்டிங்கை முடித்துவிடலாம். ஒருநாளைக்கு 5 நிமிடத்திற்கான ஃபுட்டேஜ் எடுத்தால்

கூடப் போதுமே!

- பட்ஜெட்டை எப்போதும் மைண்ட்டில் வைத்துக்கொள்ளுங்கள். படம் ஓடினாலும், ஓவர் பட்ஜெட்டினால் நஷ்டம் வந்துவிடலாம்.

- நன்றாக நேரம் எடுத்து, ப்ரி-புரடக்சன்/ப்ளானிங்கை பக்காவாக செய்துகொள்ளுங்கள். ஷூட்டிங்கில் இம்ப்ரூவ் செய்தாம் மட்டும் போதும்.

- புதுமுகங்களை வைத்து எடுக்கும்போது, ஒர்க்‌ஷாப்.ரிகர்சல் மூலம் ட்ரெய்னிங் கொடுங்கள்.

- இந்த ஜெனர் தான் என்று லிமிட் செய்துகொள்ளாதீர்கள். நமக்கு எது சரியாக வரும் என்று போகப்போக தெரியும்.

- ஒரு படம் முடிக்கும்போது, அதில் இருந்து வெளியில் வந்துவிடுங்கள். செண்டிமெண்டலாக, அதில் அட்டாச் ஆகிவிடாதீர்கள். ஒரு படம் முடியும்போதே, அடுத்த பட வேலையில் மூழ்கிவிடுங்கள்.

- பாக்கியராஜ் எழுதிய ‘வாங்க, சினிமா பற்றிப் பேசலாம்’ நூலை அனைவரும் படிக்கவும்.

- டெக்னாலஜி வளர்ச்சியினால், படம் எடுக்கும் நேரம் குறையத்தான் வேண்டும்.

- முதலில் சிஜி சம்பந்தப்பட்ட ஷாட்களை முடித்தால், மேக்கிங் டைமைக் குறைக்கலாம். ஷூட்டிங்கின்போதே, எடிட்டிங்கையும் முடித்துவிடுங்கள்.

- விமர்சனத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அவர்கள் வேலையை அவர்கள் பார்க்கிறார்கள், அவ்வளவு தான். மீடியா, நெட்டில் வருவதைப் படிக்கலாம், அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.

நான் விமர்சனங்களைப் படிப்பதில்லை. படத்தை முடித்தபின், அதை கரெக்ட் பண்ண முடியாது!

- படைப்பாளிகள், ஃபேஸ்புக்/ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் இருப்பது நல்லது அல்ல. ஃபேஸ்புக் போன்ற வெகுஜன ஊடகத்தில், அதிக இன்வால்வ்மெண்ட்டுடன் இருக்காதீர்கள். அங்கே இருக்கும்

20% ஆடியன்ஸை திருப்திப்படுத்த படம் எடுத்தால், வெளியே இருக்கும் 80% ஆடியன்ஸை நாம் இழக்க வேண்டி வரலாம்.

- ஒவ்வொருவருக்காக படம் எடுப்பது கஷ்டம். மெஜாரிட்டி மக்களுக்குப் பிடிக்கும்படியான விஷயங்களை படத்தில் வைத்தால் போதுமானது. ஒவ்வொருவரின் விமர்சனங்களைக்

கண்டுகொள்ளவேண்டியதில்லை.

- ஒவ்வொரு படமும், முதல் படம் போன்ற பயம் இருக்க வேண்டும்.
- முதல் படம் பலவருட உழைப்பில் உருவாவது. அது ஜெயிப்பது எளிது. அதன்பிறகு, சர்வைவல் தான் கஷ்டம்.

- ஒரு படம் ஓடினால், நான்குபேர் கைகொடுப்பார்கள். ஓடவில்லையென்றால், நாலாயிரம் பேர் துக்கம் விசாரிப்பார்கள்.
- டைரக்சன் என்பது 24 மணிநேர வேலை. விழிப்புடன் வேலை செய்யுங்கள்.
- யூடியூப் போன்ற இணையதளங்களில் டெக்னிகல் விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றைப் படித்து, நிறையக் கற்றுக்கொள்ளுங்கள்.
மேலும் வாசிக்க... "BOFTA : சினிமா மேக்கிங் பற்றி சுந்தர்.சி கொடுத்த அற்புதமான உரை"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.