Tuesday, April 26, 2016

Yojimbo (1961) & A Fistful of Dollars (1964) - வேற்றுமையில் ஒற்றுமை!

அகிரா குரோசவா - செர்ஜியோ லியோனி

இந்த இரண்டு மேதைகளைக் கடந்துவராத சினிமா மாணவன் இருக்க முடியாது. திரைமொழியில் தனித்த முத்திரை பதித்த படைப்பாளிகள் இவர்கள். இந்த இரண்டு பேருமே நமது போற்றுதலுக்கு உரியவர்கள். ஆனாலும் காலத்தின் கோலம், ஒருமுறை இருவரும் மோதிக்கொள்ளும் சூழல் வந்தது. காரணம், குரோசவா படத்தை லியோனி ‘சுட்டு’விட்டது தான்.


அமெரிக்காவில் சட்டத்தின் ஆட்சி நடக்காத இருண்ட காலகட்டம் 50 ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது. 1850-1900ஆம் ஆண்டுகளில் அமெரிக்க மேற்கு மாகாணங்களில் நிலவிய சூழலை அடிப்படையாக வைத்து வந்த கதைகள், வெஸ்டர்ன் ஜெனர் என்று அழைக்கப்படுகின்றன. ’ஏறக்குறைய பாலைவனம் போன்ற ஒரு ஊர். அதைக் காவல் காக்கும் பொறுப்பில் ஷெரீஃப்கள். துப்பாக்கியுடன் கொலை, கொள்ளை என அழையும் ஆட்கள், கௌபாய் வேடம், குறைந்தபட்சம் ஒரு அழகான பெண், கௌபாய் ஹீரோ’என்பது தான் இந்த ஜெனரின் மசாலா ஐட்டங்கள்.

Dashiell Hammett என்ற அமெரிக்க நாவலாசிரியரின் நாவல்  Red Harvest. அதை கமுக்கமாக சுட்டு, யோஜிம்போ கதையை உருவாக்கினார் குரோசவா. (ஆனால் பேட்டிகளில் The Glass Key என்ற வேறு நாவலைச் சொன்னார். விவரம்!). ஜப்பானின் சாமுராய் கேரக்டரும் கௌபாய் கேரக்டரும் ஒத்துப்போனதால், வெஸ்டர்ன் மூவியை சாமுராஜ் மூவியாக ஒரு ஜெராக்ஸ் போட்டார். Yojimbo என்ற அந்த படமும் பிரமாதமாக வந்தது.

செர்ஜியோ லியோனி ஒரு இத்தாலிய இயக்குநர். The Colossus of Rhodes என்ற சுமாரான படத்தை கொடுத்துவிட்டு, ‘நாம் எடுக்க நினைத்த படம் இப்படி இல்லையே?’எனும் குழப்பத்தில் இருந்தவர் கண்ணில் சிக்கியது, யோஜிம்போ. அதைப் பார்த்ததுமே ‘அடடா..இந்த சாமுராயை கௌபாயாக மாற்றினால் சூப்பரான வெஸ்டர்ன் மூவி கிடைக்குமே’ என்று துள்ளிக்குதித்தார். கிடைக்கத்தால் செய்யும், ஏனென்றால் அதுவே வெஸ்டர்னை சாமுராயாக சுட்ட படம் தானே! இந்த முன்கதையை அறியாமல், பக்காவாக ஒரு வெஸ்டர்ன் மூவி A Fistful of Dollars எடுத்தார். அதுவரை வெஸ்டர்ன் மூவி என்றால், இயக்குநர் John Ford பெயர் தான் ஞாபகம் வரும். ஆனால் A Fistful of Dollars ரிலீஸ் ஆனபின், வெஸ்டர்ன் என்றால் லியோனி என்று ஆனது.

A Fistful of Dollars படம் சூப்பர்ஹிட் ஆனதே லியோனிக்கு வினையாகிப்போனது. அகிரா குரோசவா வரைக்கும் அவர் புகழ் சென்றடைந்தது. பதிலுக்கு அவர் ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார், ‘உங்கள் படம் பார்த்தேன். நல்ல படம், ஆனால் அது என் படம்’ எனும் நக்கலுடன்! கோர்ட், கேஸ் என அலைந்து, கடைசியில் நஷ்ட ஈடு கொடுத்துத்தான் மீண்டார் லியோனி. (கதையின் ஒரிஜினல் ஆசிரியரான அந்த நாவல் ஆசிரியர் தரப்பு ஏன் இந்த இரு இயக்குநர்கள் மீதும் கேஸ் போடவில்லை என்று வியக்கிறேன்!)

நம் இணைய போராளிகள் என்றால், ‘ச்சே..காப்பி அடிச்ச நீங்கள்லாம் மனுஷங்களா..உங்க படத்தை குப்பையில் போடணும்..ரெண்டுபேருமே ஒன்னும் தெரியாத கூமுட்டைகள்’ என்று தெளிவான முடிவு எடுத்திருப்பார்கள். ஆனால் உலக சினிமா ரசிகர்கள், அந்த இரண்டு இயக்குநர்களையுமே ஆரத் தழுவிக்கொண்டார்கள். உலக சினிமா வரலாற்றை எழுதும் எவருமே, இந்த இரண்டு பெயர்களை தவிர்ப்பதில்லை. காரணம், சுட்டாலும் வெண்சங்கு வெண்மை தருவதுபோல் கிடைத்த இரண்டு அற்புதமான திரைப்படங்கள், Yojimbo & A Fistful of Dollars.அவற்றின் ஒற்றுமை, வேற்றுமை பற்றி இங்கே பார்ப்போம்.


கதை:

ஹீரோ ஒரு மாவீரன். நாடோடியாக அலைபவன். சட்டம் ஒழுங்கு கெட்டுக்கிடக்கும் ஒரு ஊருக்கு வந்து சேர்கிறான். அங்கே இரண்டு வில்லன் குழுக்கள் இயங்கிவருகின்றன. அவர்களுக்குள் நடக்கும் சண்டையில் ஊரே சீரழிந்து கிடக்கிறது. அவர்களை ஹீரோ அழித்து, ஊரில் அமைதியை நிலைநாட்டுகிறான். இடையில் வில்லன் குரூப்பால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு குழந்தைக்குத் தாயான ஒரு பெண்ணை மீட்டு, அவள் கணவனுடன் சேர்த்து வைக்கிறான்.

குரோசவாவின் யோஜிம்போ படம், ஒரு சமூகப்பிரச்சினையாக இக்கதையை அணுகுகிறது. ஒட்டுமொத்த சீரழிவைக் காட்டுவதே, படத்தின் அடிப்படை நோக்கமாக இருக்கிறது. ஆனால் லியோனி இக்கதையை ஒரு ஆக்சன் அட்வெஞ்சராக அணுகுகிறார். கேரக்டர்களைவிட, சம்பவங்கள் தான் முக்கியத்துவம் பெறுகின்றன.

திரைக்கதை:

திரைக்கதையில் இரண்டு படங்களுமே பல இடங்களில் வேறுபடுகின்றன. குரோசவாவின் படத்தினை ஒரு ஆக்சன் டிராமா என்று சொல்லலாம். ஆனால் லியோனியின் படம், தெளிவான ஆன்சன் அட்வென்சர்.

கதைக்களமான ஊரை எடுத்துக்கொள்வோம். அந்த மக்கள் யார், அவர்களின் தொழில் என்ன, வில்லன்களின் வன்முறையை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள், வன்முறைக்கு எதிரான மனநிலை போன்றவற்றை விளக்க, குரோசவா அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார். ஒரு தெளிவான சமூக சித்தரிப்பு யோஜிம்போவில் இருக்கிறது.

ஆனால் லியோனியின் திரைக்கதையில், அந்த ஊர் ஏறக்குறைய காலியாக கிடக்கிறது. அது மர்மத்தை இன்னும் கூட்டுவதாக ஆகிறது. சமூகத்தின் மனநிலை பற்றியெல்லாம் லியோனி அலட்டிக்கொள்ளவேயில்லை. அந்த நேரத்தில் ஹீரோவை ஒரு சூப்பர் மேனாக பில்டப் செய்துவிடுகிறார். இரு படங்களிலும் ஹீரோ வாள்வித்தை/துப்பாக்கி சுடுவதில் தேர்ந்த திறமைசாலி. அவனது திறமையைக் கண்டு, எல்லாருமே மிரள்கிறார்கள்.

குரோசவாவின் ஹீரோவிற்கு தெளிவான சாமுராய் பிண்ணனி உண்டு. அந்த ஊருக்கு வந்தவுடனே, தனது திட்டங்களையும் எண்ணங்களையும் தெளிவாக ஹீரோ வெளிப்படையாகப் பேசுகிறான். வாலிப வயதைக் கடந்தவன். எனவே வாழ்க்கையில் அடிபட்ட ஒரு அமைதியை ஹீரோவின் நடத்தையில் பார்க்க முடியும்.

ஆனால் லியோனியின் ஹீரோ, ஒரு மர்மமான ஆசாமி. அவன் என்ன நினைக்கிறான், ஏன் இதைச் செய்கிறான் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. இந்த மர்மமும், ஹீரோவாக நடித்த க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டின் மேஜிக்கும் இணைந்து நம்மை மயக்கியது உண்மை. இரண்டு ஹீரோக்களில் லியோனியின் ஹீரோ தான் பெரும்பாலானோரின் மனம் கவர்ந்தவர் ஆனார்.


ஊரையே ஆட்டிப்படைக்கும் வில்லன்களை கொஞ்சம் கோமாளிகளாகவே குரோசவா சித்தரிக்கிறார். முடிந்தவரை கேலிப்பொருட்களாக ஆக்குகிறார். ஹீரோவிடம் அவர்கள் கெஞ்சி நிற்கிறார்கள். (மெயின் வில்லனான தம்பியைத் தவிர்த்து!).

லியோனியின் வில்லன்கள் கோமாளிகள் அல்ல. சீரியஸான ஆசாமிகள். ஒரு இறுக்கமான சூழலை, தான் இருக்கும் இடத்தில் உருவாக்கும் ஆட்கள். ஆக்சன் படங்களின் முக்கியவிதியான ‘பெட்டர் தி வில்லன், பெட்டர் தி மூவி’யை ஃபிஸ்ட்ஃபுல் ஆஃப் டாலர்ஸ் பின்பற்றுகிறது.

கதையின் முக்கிய வில்லன், ஒரு வில்லன் குடும்பத்தின் தம்பி. அனைத்து வில்லன்களிலும் டெரரானவன். லியோனியின் கதைப்படி, ஹீரோவுக்கு இணையானவனாக மெயின் வில்லன் வருகிறான். ஆனால் அகிரா குரோசவாவின் வில்லனிடம் ஒரு துப்பாக்கி இருக்கிறது. எல்லோரும் வாள் வைத்து சண்டையிடும்போது, துப்பாக்கி வைத்திருப்பவனாக இருப்பது அவனை வலுவானவாக ஆக்குகிறது.
இந்த மெயின் வில்லன், யோஜிம்போவில் பாதிப்படத்திற்குப் பிறகு தான் வருகிறான். ஆனால் லியோனி அவனை சீக்கிரமே கொண்டுவந்துவிடுகிறார்.

இன்னொரு முக்கியமான வித்தியாசம், அந்த பெண் கேரக்டர். கதைநாயகி என்று சொல்லலாம். மெயின் வில்லனின் பிடியில் இருப்பவள். அவள் கணவனும், குழந்தையும் வில்லனுக்கு எதிராக எதுவும் செய்ய இயலாமல், என்றாவது அவளை விட்டுவிடுவார்கள் என்று காத்திருக்கிறார்கள். இந்த கதையை குரோசவா, ஊரின் அவலங்களில் ஒன்றாக வைத்திருக்கிறார். ஆனால் லியோனியைப் பொறுத்தவரை, இது தான் முக்கியமான கதையே!

ஃபிஸ்ட்ஃபுல் ஆஃப் டாலர்ஸ் படத்தின் முதல் காட்சியில் ஹீரோ ஊருக்குள் நுழைந்ததுமே, கதைநாயகியின் நிலைமையைப் பார்த்துவிடுகிறான். இறுதியில் அவளை மீட்கிறான். இது தான் முக்கிய ப்ளாட்டாக இருக்கிறது. ஒரு தெளிவான ஆக்சன் மூவி இமேஜை இது உருவாக்கிவிடுகிறது. குரோசவா, அந்த கதைநாயகியை பாதிப்படம் முடிந்தபிறகே நமக்கு அறிமுகப்படுத்துகிறார். ஹீரோ-சமூகம்-வில்லன் என்று தான் அவர் பயணிக்கிறார். லியோனியின் படம், குரோசவாவின் படத்தைவிட சுவாரஸ்யமானதாக ஆவது இந்த வித்தியாசத்தினால் தான்.

இருபடங்களிலுமே கிளைமாக்ஸில் வில்லனை ஹீரோ கொல்கிறான். லியோனியின் படத்தில் அதுவொரு சாகசமாக காட்டப்படுகிறது. ரஜினி பட கிளைமாக்ஸ்போல், நம்மை விசில் அடிக்க வைக்கிறது. ஆனால் அகிரா குரோசவா, மெயின் வில்லனின் சாவை கொண்டாட்டமாக ஆக்குவதில்லை. அவர் மனிதநேயத்துடன் அதை காட்சிப்படுத்துகிறார். ஹீரோ சாகக்கிடக்கும் வில்லனை கருணையுடன் அணுகுகிறான். அவன் கேட்பதைச் செய்கிறான். ‘நரகத்தின் வாசலில் உனக்காக காத்திருப்பேன்’ என்று வில்லன் சொல்வதை ஏற்றுக்கொண்டவனாக மௌனத்துடன் நிற்கிறான். ஹீரோவும் ஒருவகையில் பாவியாக உணர்கிறான். கொலை என்பது சாகசம் அல்ல என்று உணர்த்தும் இந்த இடத்தில் தான் அகிரா குரோசவா, லியோனியை மிஞ்சிவிடுகிறார். ஒரு படைப்பாளியாக உயர்ந்து நிற்கிறார்.

மேக்கிங்:

அகிரா குரோசவா, பல சினிமா ஜாம்பவான்களால் குரு ஸ்தானத்தில் வைத்து போற்றப்படுபவர். காற்று-மழை-நகரும் கேரக்டர்கள்-கூடவே நகரும் கேமிரா-லாங் ஷாட், கேரக்டர்களின் மூவ்மெண்டால் மிட்ஷாட்டாகவும் க்ளோசப்பாகவும் மாறுவது என குரோசவாவின் தனித்த ஸ்டைலில் யோஜிம்போவும் படமாக்கப்பட்டுள்ளது.

செர்ஜியோ லியோனி தன்னையே கண்டுகொண்ட படம், ஃபிஸ்ட்ஃபுல் ஆஃப் டாலர்ஸ் என்று சொல்லலாம். ஜான் ஃபோர்டின் லாங் ஷாட் காம்போசிசன் ஸ்டைலுடன் டைட் க்ளோசப் ஷாட்களை இணைத்து அட்டகாசமான புது திரைமொழியை உருவாக்கினார் லியோனி. ஒவ்வொரு காட்சியைமே நடன அமைப்பு போன்று, தெளிவான திட்டமிடலுடன் படமாக்கினார். கூடவே என்னியோ மாரிக்கோனியின் இசைப்பிரவாகமும் இணைந்துகொள்ள, படத்தின் விஷுவல் தரம் எங்கேயோ போய்விட்டது. லியோனி படங்களின் எடிட்டிங் ஸ்டைலும் பலத்த வரவேற்பைப் பெற்றது.


மொத்தத்தில் ஒரே கதையை இரண்டு திரைமேதைகள் எப்படி அணுகுவார்கள், அவற்றை எப்படி காட்சிப்படுத்துவார்கள் என்று நாம் கற்றுக்கொள்ள இரண்டு அருமையான படங்கள் நமக்குக் கிடைத்தன. இதுவரை பார்க்காதவர்கள், கண்டிப்பாகப் பார்க்கவும்!
மேலும் வாசிக்க... "Yojimbo (1961) & A Fistful of Dollars (1964) - வேற்றுமையில் ஒற்றுமை!"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, April 19, 2016

தெறி: அட்லிக்கு கதை சொன்ன கேப்டன் விஜயகாந்த்

தமிழ் சினிமாவில் கதைத் திருட்டு என்பது காலங்காலமாக நடப்பது தான். இன்னொருவர் எழுதிய கதையை, தன் கதை என்று டைட்டில் போட்டுக்கொள்வதும் வழக்கம் தான். ஆனால் தெறி பார்த்த பலரும் நடந்திருக்கும் அநியாயத்தை உடனே புரிந்துகொண்டார்கள். ஆம், நண்பர்களே..தெறி திரைக்கதை, நிச்சயமாக ராஜா ராணி திரைக்கதை எழுதிய நபரால் எழுதப்பட்டதல்ல, அது நம் கேப்டன் விஜயகாந்த் எழுதிய திரைக்கதை! 

மேலும் நமது புலனாய்வுப் புளுகார் மேற்கொண்ட விசாரணையில், தெறி திரைக்கதை விவாதத்தில் நடந்த விபரங்கள் நமக்குத் தெரிய வந்திருக்கின்றன. அத்தனையும் அதிர்ச்சி ரகம். கேப்டனின் சத்ரியன் படத்தை சுடுவது சம்பந்தமாகப் பேச, அட்லீ கேப்டனைச் சந்தித்திருக்கிறார். அப்போது கேப்டன் பேசியதே சுவையாக இருந்ததால், அதையே படமாக எடுத்திருக்கிறார். கேப்டன் சேனல் மாறி, சேனல் பேசுவது போன்றே, தெறியும் தறிகெட்டு அலைபாய்வதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். கேப்டன் அட்லி குழுவினரிடம் சொன்னது, உங்கள் பார்வைக்காக:

வணக்கம் மக்கழே..உங்களை எல்லாம் காக்க வச்சுட்டேன். மன்னிக்கணும். இந்த விஜயகாந்த், எந்த டைரக்டரையும் காக்க வச்சவன் இல்லை. இண்டஸ்ட்ரில கேட்டால் சொல்வாங்க. தாணு பெரிய புரடியூசர். எனக்கு பல காலமாத் தெரியும். அவர் சொல்லி அனுப்பியிருக்காருன்னா, மணிரத்னம் திடீர்னு சத்ரியன் பண்ணலாம்னு சொன்னாரு. நல்ல கதை..அவர் பெரிய டைரக்டரு. என்னடா இப்படிச் சொல்றானேன்னு நினைக்கக்கூடாது. நான் இப்போல்லாம் சினிமால நடிக்கலைன்னாலும், நல்லா நீங்க பண்ணுவீங்கன்னு நம்பிக்கை இருக்கு.

விஜய் நம்ம தம்பி. நன்றி மறக்கறவர் இல்லை புலி படம் கொஞ்சமாவது வசூல் பண்ணுச்சுன்னா, நான் எப்பவும் அடிக்கு அடி, உதைக்கு உதை தான். போலீஸ் கேரக்டர் வேற..குழந்தைகள்லாம் விஜய் படத்தை ரசிக்காங்கன்னா, அஜித் வேற நல்ல அப்பாவா நடிச்சாரு. என் புள்ளைங்களுக்கு எப்பவும் நான் ஒரு கண்டிப்பான அப்பாவா..அப்படி இருந்திருக்கேன். இப்போ காலம் மாறிக்கிட்டே இருக்கு..இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா.விஜய், தன் குழந்தைக்கு நல்ல அப்பாவா, ஒரு நண்பனா இருக்கணும்.

சத்ரியன்!.....ஒரு போலீஸ்காரன்..விஜயகுமார் வேற நடிச்சிருந்தாரு. அதனால விஜய்யை விஜயகுமாரா நடிக்க வைக்கலாம். தப்பா நினைச்சுக்கக்கூடாது மக்கழே..அவர் பேரை விஜயகுமார்ன்னு வச்சிக்கலாம். விஜயகுமார், ரஜினி எல்லாரும் எனக்கு நண்பர்கள் தான். ரஜினி பாட்ஷா நடிச்சப்போ, அது நல்ல படம். அவர் போலீஸ் ஸ்டேசன்ல நடந்தப்போ, இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா, விஜய் தம்பிக்கு அது மாதிரி சீன் வைக்கலாம். மீடியா நண்பர்கள்லாம் இருக்காங்க. ஏற்கனவே சத்ரியனை காப்பி அடிக்கிறீங்கன்னு எழுதறாங்க. எழுதட்டும்..இதை எழுதறீங்களே, ஜெயலலிதா பற்றி எழுத துப்பு இருக்கான்னு கேட்டால், விஜயகாந்த் அரசியல் பேசறான்னு சொல்லிடுவீங்க. வேணாம் மக்கழே..

மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறாங்க..சத்ரியன் நல்ல படம். பானுப்ரியா..அவங்களைப் பற்றி உங்களுக்கே தெரியும். நான் சொன்னால், என்னடா இப்படி பேசறான்னு சொல்வீங்க..அவர் நல்ல நடிகை. இதுல மைக்கேல் ஜாக்சனை நடிக்க....என்ன தம்பீ? ஆங், எமி ஜாக்சனை நடிக்க வைக்கிறதாச் சொன்னீங்க..நமக்கு இப்போ உள்ள நடிகைகள்லாம் தெரியறதில்லே தம்பி..பானுபிரியா சத்ரியன்ல பொம்பளைப்புள்ளையா நடிச்சது..நீங்க இந்த மைக்கேல் ஜாக்சனை..ஆங், அதான்..அந்த ஜாக்சனை ஆம்பிளைப்புள்ளையா நடிக்க வைங்க. கமல் சிவப்பு ரோஜாக்கள்ல போட்ட கெட்டப் மாதிரி..ஏன்னா, இனியும் மக்களை இவங்க ஏமாத்த முடியாது..மாற்றம்..இந்த விஜயகாந்த்தால் மட்டும் தான் வரும்.

நான் கோபம் வந்தால் அடிச்சிடுவேன். தப்பு பண்ணால், விஜய் நல்ல தம்பி. அவர் அமைதியானவரு..எல்லாம் நம்ம பசங்க தான். எஸ்.ஏ.சி. என் உயிர் நண்பர். இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா, ஒரு பாசக்கார அப்பா எப்படி சண்டை போடுவான்? நல்லா யோசிக்கணும் மக்கழே..அதுக்குத்தான் பாட்ஷா சொன்னேன்..எல்லாம் சொல்வாங்க, விஜயகாந்த் பேசறதே புரியலைன்னு..புரியறவங்களுக்கு...................புரிஞ்சாப் போதும்.

போலீஸ்காரன், பாசக்கார அப்பா..சண்டை போடறான். ஏன்? தப்பு பண்ணால், யாரா இருந்தாலும் எனக்கு கோபம் வரும். என் கட்சித் தொண்டர்கள் யாரு? என் புள்ளைங்க. அவங்க மேல கைவச்சால்...!(நாக்கை துருத்தினாராம். அட்லீ அதையும் நோட் பண்ணிக்கொண்டாராம்!)

திமுக, அதிமுக ஆட்சில நாடே குட்டிச்சுவராப் போயிருக்கு. ரோட்டில் சின்னக்குழந்தைங்க கூட பிச்சை எடுக்குதுங்க. இதுவா வளர்ச்சி? நான் அமைதியா இருக்கேன்னா, அது என் கட்சித் தொண்டர்களுக்காக..இல்லேன்னா..செய்யட்டுமே..விஜய் தம்பி செய்யட்டுமே..அதையெல்லாம் தட்டிக்கேட்கட்டும். அநியாயத்தை தட்டிக்கேட்க, என்னைக்குமே இந்த விஜயகாந்த் தயங்க மாட்டான். அது சமைஞ்ச புள்ளைக்கும் தெரியும். எது? விஜய் தம்பி நல்லவர்ன்னு..என்ன?..ஓ.அது சமந்தா புள்ளையா?..நான் இப்போல்லாம் சினிமால இல்லீங்க. என் பையன் ஒரு படம் பண்ணான்..(ஏதோ சொல்ல வந்தார், கண்ணீரை துடைத்துக்கொண்டாராம்!)..தப்பை தட்டிக்கேட்டால், சமைஞ்ச புள்ள வரும். அம்மான்னு யார் யாரையோ சொல்றாங்க..யாருடா அம்மா? நல்லா சொல்வேன்..வேணாம்..அம்மான்னா..இப்போ பார்த்தீங்கன்னா, போலீஸாவே இருந்தாலும் அம்மாக்கு புள்ளை தான். அப்படி ஒரு அன்பு..பாசம்..அது அம்மா..யாரை தம்பி அம்மாவா நடிக்க வைக்கப்போறீங்க..சும்மா சொல்லுங்க..அடிக்க மாட்டேன்..ஆங், அவங்களா..நாம ஒன்னும் சொல்லக்கூடாது. அதெல்லாம் தாணு இருக்காரு...நீங்க இருக்கீங்க..எல்லாரும் நல்லா இருக்கணும்..அது தான் இந்த விஜயகாந்த் ஆசை. ஏன்னா, நாம ஒன்னு சொல்லி,  .........!


கலைஞருக்கு ஜெயலலிதா எதிரி. ஜெயலலிதாவுக்கு கலைஞர் எதிரி. இரண்டு பேருக்கும் நான் எதிரி..அப்போ விஜய்க்கு யார் எதிரின்னு கேட்டால், என்னடா விஜயகாந்த் இப்படில்லாம் கேட்கறான்னு நினைக்கக்கூடாது..யாருங்க, டைரக்டர் மகேந்திரனா? அவரு பெரியவரு..நாங்கல்லாம் அப்பவே..இந்த ஆட்சில பொண்ணுகளுக்குக்கூட பாதுகாப்பில்லை தம்பி. ஒரு ஐடி கம்பெனில வேலை பார்த்த பொண்ணையே ரேப் பண்ணிட்டாங்க. இந்த விஜயகாந்த் ஆட்சில இருந்தால், தப்பு பண்ணவங்களை சும்மா விடுவானா? அடிக்கணும்..விஜய் தம்பி அடிக்கணும்..யாரா வேணா இருக்கட்டும்..மந்திரி மகன்னா, பெரிய கொம்பா? என்னிக்குமே நான் நல்லவங்க பக்கம் தான் நிப்பேன். இப்போ மகேந்திரன் சார் வில்லன் பக்கம் நிக்கிறாரு..இதெல்லாம் சொன்னால், வம்பு தான் வரும். அவர்கூட விஜய் மோதணும். அப்படி மோதும்போது...

ரேவதி எல்லாம் நல்ல நடிகை. ஏன்? தப்பு பண்ணால் அடிக்கணும்..மருமகள்ன்னா யாரு? மரு ‘மகள்’ தான் மருமகள். அப்போ அம்மா, மரு’அம்மா’..தம்பி, உங்களுக்கு செண்டிமெண்ட் நல்லா வருது. நல்லா தூக்கி அடிக்கணும், பாத்துக்கோங்க. அப்படி இருக்கும்போது, ரேவதியைக் கொன்னுட்டாங்க. அதுக்கு என் ஆழ்ந்த நன்றிகள்..அப்போ விஜய் தம்பி அமைதியா இருக்காரு. கேரளால..அது நல்ல ஊரு..நம்ம ஊரு நாசமானதுக்குக்காரணம், நான் சொல்ல மாட்டேன். இங்க அரசியல் பேச மாட்டேன். ஒரு சிஎம் எப்படி இருக்கணும்? கேரளாவுல, விஜய் தம்பி இருக்காரு..மைக்கேல் ஜாக்சன்கூட..

இந்த விஜயகாந்த் வழில யாராவது வந்தால்..வில்லன் வர்றான். மறுபடி..பிள்ளைக்கு ஆபத்து. சில பேருக்கு பிள்ளையால ஆபத்து. நான் சம்முகப்பாண்டியனைச் சொல்லலை. யாரைச் சொல்றேன்னு சொன்னால் தப்பாயிடும்..வேண்டாம்..இந்த விஜயகாந்த்கிட்டே வேண்டாம்..உங்க எண்ணம்...பிள்ளைக்கு ஆபத்து வந்தால், விஜயகாந்த் பொறுப்பானா? நீங்க தான் என் பிள்ளைங்க..ரமணாலயே ஊழலை ஒழிச்சவன் நான்..ரமணா நல்ல படம்..விஜய் தம்பியை ரமணா மாதிரியே எல்லாரும் ‘சாமி’ன்னு டிவில சொல்றாங்க. ஏன்? முருகதாஸ் கதை சொன்னப்பவே, ஒத்துக்கிட்டேன். ஏன்னா, என்னிக்கும் நியாயத்தின் பக்கம் நிப்பான் உங்க விஜயகாந்த்.

இந்த விஜயகாந்த்தால் நஷ்டப்பட்டேன்னு யாரும் சொல்ல முடியாது. சம்பளம் வாங்காமக்கூட நடிச்சிருக்கேன். இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா, இப்போ பேய்ப்படம் தான் ஓடுதாம். யோசிக்கணும் மக்கழே..பேய்ப்படம்..இப்போ விஜய் படம்...இங்கே பேய் யாரு? விஜய். மீடியாக்காரங்கல்லாம் நாம ஒன்னு சொன்னால், அவங்க ஒன்னு எழுதறாங்க..அதனால, வில்லனை அழிக்கணும். விஜய் பேயா வர்றாரு. செண்டிமெண்ட்..பேய் செண்டிமெண்ட், அது தான் விஜயகாந்த்!

வில்லன் பிள்ளையைக் கொல்வேங்கிறான். அப்போ விஜய் தம்பி நேராப் போய் வில்லனைக் கொன்னுடலாமே? ஏன் பண்ணலை? இத்தனை வருசமா ஆட்சில இருந்த இவங்க என்ன பண்ணிட்டாங்க? மக்களை ஏமாத்தக்கூடாது. காசு கொடுத்து படம் பார்க்க வர்றாங்கன்னா, ஓட்டுக்கு காசு வாங்கறது வேற..விஜய் தம்பிக்குன்னு ஒரு பேர் இருக்கு..அவர் படத்தை உடனே முடிக்கலாமா? இதைச் சொன்னால், சிலபேருக்கு புடிக்காது. ஆனால், என்னிக்கும் விஜயகாந்த் உள்ளதைத்தான் பேசுவான். அதான் மக்கழே..விஜய் அப்பால்லாம்...சட்டம் ஒரு விளையாட்டு, சட்டம் ஒரு இருட்டறைன்னு...மூணு, நாலு வில்லங்க..வரிசையா சோலியை முடிப்பேன். ஏன்? தப்புப் பண்ணாங்க....!! விஜய் தம்பிக்கும் மூணு வில்லங்க..என்னடா திடீர்னு பேய், மூணு வில்லன்னு சொல்றானேன்னு நினைக்கக்கூடாது. விஜயகாந்த் சொன்னால், அதில் அர்த்தம் இருக்கும்.

என்னை கருப்பு எம்.ஜி.ஆர்ன்னு சொல்றாங்களேன்னு சிலர் கேட்கறாங்க. அது, மக்கழ் சொல்றது..எம்.ஜி.ஆர் யார்? ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே’ன்னு சொன்னாருல்ல..அவர் தான்..அது மாதிரி மெசேஜ் சொல்லணும் படத்துல..தாய்க்குலத்தை என்னிக்கும் மதிக்கிறவன் இந்த விஜயகாந்த். அதனால, ஒரு பிள்ளை நல்லவன் ஆகுறதோ, கெட்டவன் ஆகுறதோ, அப்பா வளர்க்கிறதுலே..அப்போ ஒரு பிள்ளை தப்புப் பண்ணினால், அப்பாவுக்கும் தண்டனை கொடுக்கணும்..கலைஞர் ஐயா மேல என்னிக்கும் எனக்கு மரியாதை உண்டு. என் கல்யாணமே அவர் தலைமையில தான் நடந்தது. இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா, இது மாதிரி நல்ல மெசேஜ் சொல்லணும்.

இது மாற்றத்துக்கான நேரம். எல்லாரும் படம் முடிஞ்சு தியேட்டர் வாசலை தாண்டும்போது, ஒரு டூயட் வைங்க தம்பி. மைக்கேல் ஜாக்சன் பாவம் இல்லையா? அந்தப் புள்ளயும் ஆடட்டும். விஜயகாந்த் நம்பி வந்த யாரையும் ஏமாற்ற மாட்டான். நீங்க தாராளமா சத்ரியனை சுடுங்க தம்பி. உங்க கண்ணும் சிவப்பா இருக்கே? பத்து மணிக்கெல்லாம் கடையைப் பூட்டிடுவாங்க. சீக்கிரம், கிளம்புங்க. பார்த்து போய்ட்டு வாங்க!

---------------

இப்படி குவாண்டின் டொரண்டினோ பாணியில் கேப்டன் சொன்ன நான் லீனியர் திரைக்கதையை அட்லீ அப்படியே எடுத்து ஜெயித்திருக்கிறார். தேர்தல் முடிந்தவுடன், கேப்டனுடன் அடுத்த பட ஆலோசனையை அட்லீ ஆரம்பிப்பார் என்று புளுகார் சொல்லி நம்மை கிறுகிறுக்க வைத்தார்!


மேலும் வாசிக்க... "தெறி: அட்லிக்கு கதை சொன்ன கேப்டன் விஜயகாந்த்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.