Tuesday, April 26, 2016

Yojimbo (1961) & A Fistful of Dollars (1964) - வேற்றுமையில் ஒற்றுமை!

அகிரா குரோசவா - செர்ஜியோ லியோனி

இந்த இரண்டு மேதைகளைக் கடந்துவராத சினிமா மாணவன் இருக்க முடியாது. திரைமொழியில் தனித்த முத்திரை பதித்த படைப்பாளிகள் இவர்கள். இந்த இரண்டு பேருமே நமது போற்றுதலுக்கு உரியவர்கள். ஆனாலும் காலத்தின் கோலம், ஒருமுறை இருவரும் மோதிக்கொள்ளும் சூழல் வந்தது. காரணம், குரோசவா படத்தை லியோனி ‘சுட்டு’விட்டது தான்.


அமெரிக்காவில் சட்டத்தின் ஆட்சி நடக்காத இருண்ட காலகட்டம் 50 ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது. 1850-1900ஆம் ஆண்டுகளில் அமெரிக்க மேற்கு மாகாணங்களில் நிலவிய சூழலை அடிப்படையாக வைத்து வந்த கதைகள், வெஸ்டர்ன் ஜெனர் என்று அழைக்கப்படுகின்றன. ’ஏறக்குறைய பாலைவனம் போன்ற ஒரு ஊர். அதைக் காவல் காக்கும் பொறுப்பில் ஷெரீஃப்கள். துப்பாக்கியுடன் கொலை, கொள்ளை என அழையும் ஆட்கள், கௌபாய் வேடம், குறைந்தபட்சம் ஒரு அழகான பெண், கௌபாய் ஹீரோ’என்பது தான் இந்த ஜெனரின் மசாலா ஐட்டங்கள்.

Dashiell Hammett என்ற அமெரிக்க நாவலாசிரியரின் நாவல்  Red Harvest. அதை கமுக்கமாக சுட்டு, யோஜிம்போ கதையை உருவாக்கினார் குரோசவா. (ஆனால் பேட்டிகளில் The Glass Key என்ற வேறு நாவலைச் சொன்னார். விவரம்!). ஜப்பானின் சாமுராய் கேரக்டரும் கௌபாய் கேரக்டரும் ஒத்துப்போனதால், வெஸ்டர்ன் மூவியை சாமுராஜ் மூவியாக ஒரு ஜெராக்ஸ் போட்டார். Yojimbo என்ற அந்த படமும் பிரமாதமாக வந்தது.

செர்ஜியோ லியோனி ஒரு இத்தாலிய இயக்குநர். The Colossus of Rhodes என்ற சுமாரான படத்தை கொடுத்துவிட்டு, ‘நாம் எடுக்க நினைத்த படம் இப்படி இல்லையே?’எனும் குழப்பத்தில் இருந்தவர் கண்ணில் சிக்கியது, யோஜிம்போ. அதைப் பார்த்ததுமே ‘அடடா..இந்த சாமுராயை கௌபாயாக மாற்றினால் சூப்பரான வெஸ்டர்ன் மூவி கிடைக்குமே’ என்று துள்ளிக்குதித்தார். கிடைக்கத்தால் செய்யும், ஏனென்றால் அதுவே வெஸ்டர்னை சாமுராயாக சுட்ட படம் தானே! இந்த முன்கதையை அறியாமல், பக்காவாக ஒரு வெஸ்டர்ன் மூவி A Fistful of Dollars எடுத்தார். அதுவரை வெஸ்டர்ன் மூவி என்றால், இயக்குநர் John Ford பெயர் தான் ஞாபகம் வரும். ஆனால் A Fistful of Dollars ரிலீஸ் ஆனபின், வெஸ்டர்ன் என்றால் லியோனி என்று ஆனது.

A Fistful of Dollars படம் சூப்பர்ஹிட் ஆனதே லியோனிக்கு வினையாகிப்போனது. அகிரா குரோசவா வரைக்கும் அவர் புகழ் சென்றடைந்தது. பதிலுக்கு அவர் ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார், ‘உங்கள் படம் பார்த்தேன். நல்ல படம், ஆனால் அது என் படம்’ எனும் நக்கலுடன்! கோர்ட், கேஸ் என அலைந்து, கடைசியில் நஷ்ட ஈடு கொடுத்துத்தான் மீண்டார் லியோனி. (கதையின் ஒரிஜினல் ஆசிரியரான அந்த நாவல் ஆசிரியர் தரப்பு ஏன் இந்த இரு இயக்குநர்கள் மீதும் கேஸ் போடவில்லை என்று வியக்கிறேன்!)

நம் இணைய போராளிகள் என்றால், ‘ச்சே..காப்பி அடிச்ச நீங்கள்லாம் மனுஷங்களா..உங்க படத்தை குப்பையில் போடணும்..ரெண்டுபேருமே ஒன்னும் தெரியாத கூமுட்டைகள்’ என்று தெளிவான முடிவு எடுத்திருப்பார்கள். ஆனால் உலக சினிமா ரசிகர்கள், அந்த இரண்டு இயக்குநர்களையுமே ஆரத் தழுவிக்கொண்டார்கள். உலக சினிமா வரலாற்றை எழுதும் எவருமே, இந்த இரண்டு பெயர்களை தவிர்ப்பதில்லை. காரணம், சுட்டாலும் வெண்சங்கு வெண்மை தருவதுபோல் கிடைத்த இரண்டு அற்புதமான திரைப்படங்கள், Yojimbo & A Fistful of Dollars.அவற்றின் ஒற்றுமை, வேற்றுமை பற்றி இங்கே பார்ப்போம்.


கதை:

ஹீரோ ஒரு மாவீரன். நாடோடியாக அலைபவன். சட்டம் ஒழுங்கு கெட்டுக்கிடக்கும் ஒரு ஊருக்கு வந்து சேர்கிறான். அங்கே இரண்டு வில்லன் குழுக்கள் இயங்கிவருகின்றன. அவர்களுக்குள் நடக்கும் சண்டையில் ஊரே சீரழிந்து கிடக்கிறது. அவர்களை ஹீரோ அழித்து, ஊரில் அமைதியை நிலைநாட்டுகிறான். இடையில் வில்லன் குரூப்பால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு குழந்தைக்குத் தாயான ஒரு பெண்ணை மீட்டு, அவள் கணவனுடன் சேர்த்து வைக்கிறான்.

குரோசவாவின் யோஜிம்போ படம், ஒரு சமூகப்பிரச்சினையாக இக்கதையை அணுகுகிறது. ஒட்டுமொத்த சீரழிவைக் காட்டுவதே, படத்தின் அடிப்படை நோக்கமாக இருக்கிறது. ஆனால் லியோனி இக்கதையை ஒரு ஆக்சன் அட்வெஞ்சராக அணுகுகிறார். கேரக்டர்களைவிட, சம்பவங்கள் தான் முக்கியத்துவம் பெறுகின்றன.

திரைக்கதை:

திரைக்கதையில் இரண்டு படங்களுமே பல இடங்களில் வேறுபடுகின்றன. குரோசவாவின் படத்தினை ஒரு ஆக்சன் டிராமா என்று சொல்லலாம். ஆனால் லியோனியின் படம், தெளிவான ஆன்சன் அட்வென்சர்.

கதைக்களமான ஊரை எடுத்துக்கொள்வோம். அந்த மக்கள் யார், அவர்களின் தொழில் என்ன, வில்லன்களின் வன்முறையை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள், வன்முறைக்கு எதிரான மனநிலை போன்றவற்றை விளக்க, குரோசவா அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார். ஒரு தெளிவான சமூக சித்தரிப்பு யோஜிம்போவில் இருக்கிறது.

ஆனால் லியோனியின் திரைக்கதையில், அந்த ஊர் ஏறக்குறைய காலியாக கிடக்கிறது. அது மர்மத்தை இன்னும் கூட்டுவதாக ஆகிறது. சமூகத்தின் மனநிலை பற்றியெல்லாம் லியோனி அலட்டிக்கொள்ளவேயில்லை. அந்த நேரத்தில் ஹீரோவை ஒரு சூப்பர் மேனாக பில்டப் செய்துவிடுகிறார். இரு படங்களிலும் ஹீரோ வாள்வித்தை/துப்பாக்கி சுடுவதில் தேர்ந்த திறமைசாலி. அவனது திறமையைக் கண்டு, எல்லாருமே மிரள்கிறார்கள்.

குரோசவாவின் ஹீரோவிற்கு தெளிவான சாமுராய் பிண்ணனி உண்டு. அந்த ஊருக்கு வந்தவுடனே, தனது திட்டங்களையும் எண்ணங்களையும் தெளிவாக ஹீரோ வெளிப்படையாகப் பேசுகிறான். வாலிப வயதைக் கடந்தவன். எனவே வாழ்க்கையில் அடிபட்ட ஒரு அமைதியை ஹீரோவின் நடத்தையில் பார்க்க முடியும்.

ஆனால் லியோனியின் ஹீரோ, ஒரு மர்மமான ஆசாமி. அவன் என்ன நினைக்கிறான், ஏன் இதைச் செய்கிறான் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. இந்த மர்மமும், ஹீரோவாக நடித்த க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டின் மேஜிக்கும் இணைந்து நம்மை மயக்கியது உண்மை. இரண்டு ஹீரோக்களில் லியோனியின் ஹீரோ தான் பெரும்பாலானோரின் மனம் கவர்ந்தவர் ஆனார்.


ஊரையே ஆட்டிப்படைக்கும் வில்லன்களை கொஞ்சம் கோமாளிகளாகவே குரோசவா சித்தரிக்கிறார். முடிந்தவரை கேலிப்பொருட்களாக ஆக்குகிறார். ஹீரோவிடம் அவர்கள் கெஞ்சி நிற்கிறார்கள். (மெயின் வில்லனான தம்பியைத் தவிர்த்து!).

லியோனியின் வில்லன்கள் கோமாளிகள் அல்ல. சீரியஸான ஆசாமிகள். ஒரு இறுக்கமான சூழலை, தான் இருக்கும் இடத்தில் உருவாக்கும் ஆட்கள். ஆக்சன் படங்களின் முக்கியவிதியான ‘பெட்டர் தி வில்லன், பெட்டர் தி மூவி’யை ஃபிஸ்ட்ஃபுல் ஆஃப் டாலர்ஸ் பின்பற்றுகிறது.

கதையின் முக்கிய வில்லன், ஒரு வில்லன் குடும்பத்தின் தம்பி. அனைத்து வில்லன்களிலும் டெரரானவன். லியோனியின் கதைப்படி, ஹீரோவுக்கு இணையானவனாக மெயின் வில்லன் வருகிறான். ஆனால் அகிரா குரோசவாவின் வில்லனிடம் ஒரு துப்பாக்கி இருக்கிறது. எல்லோரும் வாள் வைத்து சண்டையிடும்போது, துப்பாக்கி வைத்திருப்பவனாக இருப்பது அவனை வலுவானவாக ஆக்குகிறது.
இந்த மெயின் வில்லன், யோஜிம்போவில் பாதிப்படத்திற்குப் பிறகு தான் வருகிறான். ஆனால் லியோனி அவனை சீக்கிரமே கொண்டுவந்துவிடுகிறார்.

இன்னொரு முக்கியமான வித்தியாசம், அந்த பெண் கேரக்டர். கதைநாயகி என்று சொல்லலாம். மெயின் வில்லனின் பிடியில் இருப்பவள். அவள் கணவனும், குழந்தையும் வில்லனுக்கு எதிராக எதுவும் செய்ய இயலாமல், என்றாவது அவளை விட்டுவிடுவார்கள் என்று காத்திருக்கிறார்கள். இந்த கதையை குரோசவா, ஊரின் அவலங்களில் ஒன்றாக வைத்திருக்கிறார். ஆனால் லியோனியைப் பொறுத்தவரை, இது தான் முக்கியமான கதையே!

ஃபிஸ்ட்ஃபுல் ஆஃப் டாலர்ஸ் படத்தின் முதல் காட்சியில் ஹீரோ ஊருக்குள் நுழைந்ததுமே, கதைநாயகியின் நிலைமையைப் பார்த்துவிடுகிறான். இறுதியில் அவளை மீட்கிறான். இது தான் முக்கிய ப்ளாட்டாக இருக்கிறது. ஒரு தெளிவான ஆக்சன் மூவி இமேஜை இது உருவாக்கிவிடுகிறது. குரோசவா, அந்த கதைநாயகியை பாதிப்படம் முடிந்தபிறகே நமக்கு அறிமுகப்படுத்துகிறார். ஹீரோ-சமூகம்-வில்லன் என்று தான் அவர் பயணிக்கிறார். லியோனியின் படம், குரோசவாவின் படத்தைவிட சுவாரஸ்யமானதாக ஆவது இந்த வித்தியாசத்தினால் தான்.

இருபடங்களிலுமே கிளைமாக்ஸில் வில்லனை ஹீரோ கொல்கிறான். லியோனியின் படத்தில் அதுவொரு சாகசமாக காட்டப்படுகிறது. ரஜினி பட கிளைமாக்ஸ்போல், நம்மை விசில் அடிக்க வைக்கிறது. ஆனால் அகிரா குரோசவா, மெயின் வில்லனின் சாவை கொண்டாட்டமாக ஆக்குவதில்லை. அவர் மனிதநேயத்துடன் அதை காட்சிப்படுத்துகிறார். ஹீரோ சாகக்கிடக்கும் வில்லனை கருணையுடன் அணுகுகிறான். அவன் கேட்பதைச் செய்கிறான். ‘நரகத்தின் வாசலில் உனக்காக காத்திருப்பேன்’ என்று வில்லன் சொல்வதை ஏற்றுக்கொண்டவனாக மௌனத்துடன் நிற்கிறான். ஹீரோவும் ஒருவகையில் பாவியாக உணர்கிறான். கொலை என்பது சாகசம் அல்ல என்று உணர்த்தும் இந்த இடத்தில் தான் அகிரா குரோசவா, லியோனியை மிஞ்சிவிடுகிறார். ஒரு படைப்பாளியாக உயர்ந்து நிற்கிறார்.

மேக்கிங்:

அகிரா குரோசவா, பல சினிமா ஜாம்பவான்களால் குரு ஸ்தானத்தில் வைத்து போற்றப்படுபவர். காற்று-மழை-நகரும் கேரக்டர்கள்-கூடவே நகரும் கேமிரா-லாங் ஷாட், கேரக்டர்களின் மூவ்மெண்டால் மிட்ஷாட்டாகவும் க்ளோசப்பாகவும் மாறுவது என குரோசவாவின் தனித்த ஸ்டைலில் யோஜிம்போவும் படமாக்கப்பட்டுள்ளது.

செர்ஜியோ லியோனி தன்னையே கண்டுகொண்ட படம், ஃபிஸ்ட்ஃபுல் ஆஃப் டாலர்ஸ் என்று சொல்லலாம். ஜான் ஃபோர்டின் லாங் ஷாட் காம்போசிசன் ஸ்டைலுடன் டைட் க்ளோசப் ஷாட்களை இணைத்து அட்டகாசமான புது திரைமொழியை உருவாக்கினார் லியோனி. ஒவ்வொரு காட்சியைமே நடன அமைப்பு போன்று, தெளிவான திட்டமிடலுடன் படமாக்கினார். கூடவே என்னியோ மாரிக்கோனியின் இசைப்பிரவாகமும் இணைந்துகொள்ள, படத்தின் விஷுவல் தரம் எங்கேயோ போய்விட்டது. லியோனி படங்களின் எடிட்டிங் ஸ்டைலும் பலத்த வரவேற்பைப் பெற்றது.


மொத்தத்தில் ஒரே கதையை இரண்டு திரைமேதைகள் எப்படி அணுகுவார்கள், அவற்றை எப்படி காட்சிப்படுத்துவார்கள் என்று நாம் கற்றுக்கொள்ள இரண்டு அருமையான படங்கள் நமக்குக் கிடைத்தன. இதுவரை பார்க்காதவர்கள், கண்டிப்பாகப் பார்க்கவும்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.