Wednesday, May 24, 2017

கடுகு - சினிமா விமர்சனம்


தமிழில் வந்த சிறுகதைகளில் மிக முக்கியமானது, அசோகமித்ரனின் புலிக்கலைஞன். அதிக அளவில் விவாதிக்கப்பட்ட, விவாதித்தாலும் தீராத உள்ளடக்கம் கொண்ட கதை புலிக்கலைஞன். சினிமா வாய்ப்புத் தேடி வரும் ஒரு அப்பாவி, தனக்கு புலிவேஷம் கட்டி ஆடத்தெரியும் என்கிறான். பசியால் வாடிய தேகமும், மிகுந்த பவ்யமும் கொண்ட அந்த அப்பாவி சொல்வதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அவன் அவர்கள் முன் புலிவேஷம் கட்டி, ஆடிக்காட்டத் தயாராகிறான். அடுத்து எழுத்தாளர் அசோகமித்ரனின் அற்புதமான நடை, அந்த சினிமா அலுவலத்திற்குள் புலிக்கலைஞன் காட்டும் புலிப்பாய்ச்சலை கண்முன் நிறுத்துகிறது. நிஜப்புலியே வந்துவிட்டதுபோல் எல்லோரும் பயந்துபோகிறான். ஆட்டம் முடிந்ததும், மீண்டும் சாதரணன் ஆகி வாய்ப்புக்காக கெஞ்சி நிற்கிறான். புலியைக் காணவில்லை!

ஒரு கலைஞன் என்பவன் யார், அந்தக் கலையில் ஈடுபடும்போது அவன் எவ்வாறு இன்னொரு ஆளாக மாறிப்போய்விடுகிறான் என்பதை இந்தளவுக்கு எந்த எழுத்தாளரும் துல்லியமாகப் பதிவு செய்ததில்லை. எழுத்தாளன், நடனக்கலைஞன், பாடகன், இசையமைப்பாளன் என யாராக இருந்தாலும், அவர்களையும் மீறி கலை தன்னை நிகழ்த்திக்கொள்கிறது. பல சாதனையாளர்கள் மீண்டும் மீண்டும் ‘இது இறைவனின் லீலை. நான் வெறும் கருவி’ என்று சொல்லிப் பணிவது இதனால் தான். கலையைச் ‘செய்யும்வரை’ அது கலையாக இருப்பதில்லை. அது தானே நிகழும்போதே, கலை ஆகிறது. அந்த நேரத்தில் கலைஞனும் அவனை மீறிய வேறொரு உருவை அடைகிறான்.

இது கலைக்கு மட்டும் தான் என்றும் குறுக்கிவிட முடியாது. ஒரு பீரோவை நகர்த்துவதற்கு நான்குபேரைக் கூப்பிடும் பெண்மணி, அதே பீரோ தன் குழந்தை மேல் சாய்ந்தால், பாய்ந்து வந்து பீரோவைப் பிடித்து நிமிர்த்துவிடுவாள். அங்கே அவளுக்குள் உறங்கும் அன்பு, அவளை மீறி வெளிப்பட்டுவிடுகிறது. ஏதோவொரு நெருப்பு, எல்லோருக்குள்ளும் கனன்றுகொண்டுதான் இருக்கிறது.

இவ்வாறு சிந்திக்கச் சிந்திக்க பல்வேறு திறப்புகளை புலிக்கலைஞன் கதை கொடுத்துக்கொண்டேயிருக்கிறது. இன்னும் தீவிர விவாதத்திற்கு உட்படும் கதையாக அது இருக்கிறது. அதில் இருந்து ‘புலிக்கலைஞனுக்குள் உறைந்திருக்கும் புலி’ என்ற ஒன்லைனை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று யூகிக்கிறேன். ஏறக்குறைய அதே ஹீரோ கேரக்டர், அதே போன்ற சினிமா சம்பந்தப்பட்ட காட்சியுடன் படத்தில் அறிமுகம் ஆகிறது.

ட்ரான்ஸ்ஃபர் ஆகும் போலீஸ் இன்ஸ்பெக்டரின் எடுபிடியாக ஹீரோ ராஜகுமாரனும் தரங்கம்பாடிக்கு வருகிறார். அந்த அழகான ஊர் தான் கதைக்களம். இந்த படத்தை மேலும் அழகாக்குவது, படத்தில் வரும் மனிதர்கள்.

சாதுவான புலிக்கலைஞன் கேரக்டருக்கு ராஜகுமாரனைத் தவிர வேறு ஆளை இப்போது நினைத்துப்பார்க்க முடியவில்லை. அவர் ஹீரோவாக நடிக்கிறார் என்றபோது கிண்டலாகவே எடுத்துக்கொண்டோம். ஆனால் படத்தைப் பார்க்கும்போது, சரியான தேர்வு என்று தோன்றியது. கிடைத்த வாய்ப்பில், புலியாகப் பாய்ந்திருக்கிறார். அவரது பேட்டிகளைப் பார்க்கும்போது, இயல்பிலேயே மனிதர் அப்பாவித்தனம் நிரம்பியவராகவே தெரிகிறார். இன்றளவும் தேவயானி அவரை விட்டுக்கொடுக்காமல் பேசுவதற்கும், காதலிப்பதற்கும்   அந்த இன்னோசன்ஸ் தான் காரணம் என்று நினைக்கிறேன். இன்ஸ்பெக்டரிடம் எடுபிடி வேலை செய்வது, ‘தீபிகா படுகோனிடம்’ ஃபேஸ்புக்கில் சாட் செய்வது, ஹீரோயின் ராதிகா ப்ரசீதா மேல் காட்டும் ப்ரியம், அந்த ட்ரெய்ன் காட்சி, கொடுமை கண்டு பதறுவது, இறுதியில் பொங்குவது என்று மனிதர் பொளந்துகட்டியிருக்கிறார். நிறுத்தி, நிதானமாகப் பேசுவது சிலகாட்சிகளில் பொருந்தாமல் போனாலும், அவருக்குள் காத்திருந்த புலிக்கலைஞன் பாய்ந்திருக்கிறான் கடுகில்.


அந்த ஊர் சேர்மனாக, வளரும் அரசியல்வாதியாக பரத். நல்லவன், கெட்டவன் என்றெல்லாம் பிரித்துப்பார்க்க முடியாத ஒரு யதார்த்தமான கேரக்டர். இன்றைய அரசியல்வாதிகளை நாம் திட்டித்தீர்த்தாலும், அவர்களும் ஏதோவொரு காலத்தில் நல்லவர்களாக இருந்தவர்கள் தான். கட்சிச் செலவு, பிரச்சாரத்திற்கு ஆகும் செலவு, ஓட்டுக்கு காசு வாங்கும் நல்லவர்கள் என எல்லாமாகச் சேர்ந்து, அவர்களை ‘அரசியல்வாதி’யாக மாற்றிவிடுகிறது. தமிழ்சினிமாவில் அப்படி முதிர்ந்த அரசியல்வாதிகளை காட்சிப்படுத்தியிருந்தாலும், இந்த மாற்றம் நடக்கும் ட்ரான்சிசன் பீரியடை அதிகம் பதிவு செய்ததில்லை. பதவி மேல் இருக்கும் மெல்லிய ஆசை, அதை பகிரங்கமாக வெளிப்படுத்தாமல் வெட்கச்சிரிப்புடன் எம்.எல்.ஏ கனவு பற்றிப் பேசுவது, பதவிக்காக மனசாட்சி பின்வாங்கும் காட்சி என ஒரு இயல்பான கேரக்டரை பரத் மிகச்சரியாக உள்வாங்கி நடித்திருக்கிறார். சமீபகாலமாக மொக்கைப்படங்களில் மட்டுமே நடித்துவந்த பரத்திற்கு கடுகு ஒரு திருப்புமுனை.

படத்தில் வரும் இன்னொரு முக்கியமான ஆள், அனிருத் கேரக்டரில் வரும் பாரத் சீனி. இவர் படத்தின் தயாரிப்பாளர் & விஜய் மில்டனின் தம்பி. பொதுவாக தயாரிப்பாளர்கள் ஹீரோவாக நடிப்பார்கள் அல்லது படம் முழுக்க டாமினேட் பண்ணுவார்கள். இதில் ஏறக்குறைய காமெடியன் கேரக்டரில் வருகிறார் பாரத் சீனி. ராஜகுமாரனும் இவரும் ஃபேஸ்புக்கை வைத்து அடிக்கும் சீன்கள் எல்லாம் கலகலப்பு தான். அந்த அனிருத்திற்கும் ஒரு அழகான ஒருதலைக் காதல். இவர் செய்வதெல்லாம் பரத்தின் காதலுக்கு சாதகமாகப் போக, சுபிக்‌ஷா பரத்திடம் மனதைப் பறிகொடுக்கிறார். இவையெல்லாம் மெல்லிய காமெடியாக நகர, இரண்டாம்பாதியில் ஒரு சீனில் தான் யார் என்று தன் காதலிக்கு உணர்த்துகிறார். அருமையான காட்சி அது.

சுபிக்‌ஷா கேரக்டருக்கு அதுவொரு இக்கட்டாண தருணம். எல்லா கேரக்டரையும் சரியாகப் பதிவு செய்த படம், இந்த கேரக்டரை ஏனோ கண்டுகொள்ளாமல் நகர்கிறது. அவருக்கு காதல் வந்த காரணங்களுக்கு உரியவன் பாரத்சீனி, ஆனால் அவர் மனதைப் பறிகொடுத்திருப்பதோ பரத்திடம். இறுதிக்காட்சியில் பரத்துடனே அவர் போகிறார். அதை பாரத் சீனி கேரக்டரும் மிக இயல்பாக எடுத்துக்கொள்கிறது. பாரத் சீனியா, பரத்தா என அவருக்கு வந்திருக்கும் மனசஞ்சலத்தை இயக்குநர் ஏனோ காட்சிப்படுத்தவில்லை.

ஆசிரியையாக வரும் ராதிகா ப்ரசீதா, குற்றம் கடிதல் படத்திலேயே நடிப்பால் நம்மைக் கலங்கடித்தவர். இதிலும் அப்படியே. அதிலும் அவரது ஃப்ளாஷ்பேக் உருக்கம். அதை இயக்குநர் சொல்லியிருக்கும்விதம், பிரமாதம். செய்யாத தவறுக்கு வாழ்நாள் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கும் கேரக்டர். ராஜகுமாரன் மேல் அவருக்கு வரும் காதலில் வலி நிறைந்த யதார்த்தம். தன் ஃப்ளாஷ்பேக்கை சொல்லி முடித்ததும், இருவரும் கைபிடித்து அமர்ந்திருக்கும் ஷாட், ஒரு விஷுவல் கவிதை. புல்லரித்துவிட்டது. இவ்வளவு அழகான, டச்சிங்கான ஷாட்டை அந்த இடத்தில் எதிர்பார்க்கவே இல்லை. கிளைமாக்ஸில் இந்த கேரக்டர் தரும் ட்விஸ்ட்டும், அது ராஜகுமாரனை புலியாக மாற்றுவதும், பரத் முன்பு கொடுத்த டிப்ஸை வைத்தே புலி அவரை வீழ்த்துவதும் நல்ல திரைக்கதைக்கான அடையாளங்கள்.

சின்னப் பெண கீர்த்தி, இன்ஸ்பெக்டராக வரும் இயக்குநர் ஏ.வெங்கடேஷ், அமைச்சர் தாடி வெங்கட் போன்ற எல்லாக் கேரக்டர்களும் மீட்டருக்குள் நடித்திருக்கிறார்கள். இரண்டாம்பாதி முழுக்க வரும் ஒரு பிண்ணனி இசை அருமையாக இருந்தது. தரங்கம்பாடியை கேமிரா சுற்றிச்சுற்றி அழகாக காட்சிப்படுத்தியிருந்தது.

இவ்வளவு ப்ளஸ் பாயிண்ட் இருந்தும், படத்தை பின்னுக்கு இழுப்பது மூன்று விஷயங்கள்.

ஒன்று, இண்டர்வெல் சம்பவம் நடக்கும் இடம். அவ்வளவு பேர் மேடை அருகே கூடியிருக்க, மினிஸ்டர் அப்படி நடந்துகொள்வது காட்சியின் நம்பகத்தன்மையை சுத்தமாக குலைத்துவிடுகிறது. அது தனியே ஒரு பங்களாவில் நடந்ததாக காட்சிப்படுத்தியிருக்கலாம். படத்தின் முக்கியமாக காட்சியில் எப்படி கோட்டைவிட்டார்கள் என்று தெரியவில்லை. படம் பார்ப்பவர்கள், இந்தக்குறையை மன்னித்தால் தான் இரண்டாம்பாதியை ரசிக்க முடியும்.

இரண்டு, ஓவர் செண்டிமெண்ட்டாக இரண்டாம்பாதி நகர்வது. சின்னப்பெண் பாதிக்கப்பட்டதே போதுமானதாக இருக்கும்போது அவரை சாகடிப்பது ஓவர் டோஸ்.

மூன்று, கிளைமாக்ஸில் பரத் திருந்தியதும் கத்தியை எடுத்துக்கொண்டு கிளம்புவது. தப்பைத் தட்டிக்கேட்க அரசியல்ரீதியான வழிகளே இல்லையா, என்ன? ஒரு மசாலாப்படத்தில் இப்படி கிளைமாக்ஸ் சீன் வைக்கலாம். இந்த மாதிரி யதார்த்தப்படத்தில், அதுவொரு தேவையற்ற நீட்சி.

இந்தக் குறைகளை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், ஒரு நல்ல சினிமா பார்த்த அனுபவத்தைக் கொடுக்கிறது கடுகு.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.