என் தூரத்து உறவினரான மாமா ஒருவருக்கு ராமராஜன் என்றாலே பிடிக்காது. கரகாட்டக்காரனைத் தவிர வேறு ராமராஜன் படங்களை அவர் பார்த்ததில்லை. சிறுவயதில் இதுபற்றி அண்ணன் ஒருவரிடம் கேட்டபோது, ‘அந்த டவுசர் பாண்டியன் நளினியை தள்ளிக்கிட்டுப் போய்ட்டான்லடா...அந்த கோபம் மாமனுக்கு!’ என்று சொன்னார். சிவாஜி-எம்ஜிஆர்-ரஜினி ரசிகர்களை மட்டுமே தெரிந்த அந்த வயதில் ஒரு நடிகைக்கு ரசிகர் என்பதை நம்ப முடியவில்லை. அண்ணன் அதை ஒருநாள் நிரூபித்தார். மாமா ஃபுல் மப்பில் மஹாதியானத்தில் ஆழ்ந்திருந்தபோது, அண்ணன் ஏதோ ஒரு மழைப்பாட்டையும் அதில் நளினியின் நவரச நடிப்பையும்(!) சிலாகிக்கத் தொடங்கினார். மாமாவுக்கு வந்ததே கோபம். ‘டேய்..அவளைப் பத்தி எப்படிடா நீ இப்படிப் பேசலாம். அவ உனக்கு அத்தை முறைடா’ என்று மாமா அடிக்கப் பாய்ந்து, ஒரே ரகளை. அன்று முதல் நளினி எங்களுக்கு அத்தை ஆனார்!
கால ஓட்டத்தில் மாமா தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விட்டார்; நளினி அத்தையையும் மறந்துவிட்டேன். சமீபத்தில் 1980களில் வந்து கமர்சியலாக வெற்றியடைந்த படங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.
தங்கைக்கோர் கீதம்
24 மணி நேரம்
நூறாவது நாள்
யார்?
பிள்ளைநிலா
கீதாஞ்சலி - என எந்த படத்தை எடுத்தாலும், அதில் நளினி அத்தை இருப்பது ஆச்சரியப்படுத்தியது.
கமலும் ரஜினியும் மாஸ் ஹீரோ ஆகும் ஆசையில், கமர்சியல் குப்பைகளை அள்ளிக்கொட்டிக்கொண்டிருந்தபோது, மோகன் - விஜயகாந்த் - சத்தியராஜ் போன்ற ஹீரோக்கள் தான் நினைவில் நிற்கும் படங்களைக் கொடுத்திருக்கிறார்கள். மணிவண்ணன் போன்ற குறைத்து மதிப்பிடப்பட்ட இயக்குநர்கள் தான் த்ரில்லர் ஜெனரில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் பெரிய உதவியாக நளினியும் இருந்திருக்கிறார்.
ஏனென்றால், பொதுவாகவே ஹீரோயின்ஸ் குழந்தைக்கு அம்மாவாக நடிப்பதையோ கல்யாணமான பெண்ணாக நடிப்பதையோ விரும்புவதில்லை. காதலியாக நடித்து, ரசிகர்களின் கவர்ச்சிக்கன்னியாக பெயர் எடுப்பதே பொருளாதார ரீதியாகவும் அவர்களுக்கு நல்லது. அத்தைக்கு அந்த மாதிரி பிற்போக்கு சிந்தனைகள் எல்லாம் இருந்த மாதிரித் தெரியவில்லை.
பெரும்பாலும் திருமணமான குடும்பப்பெண் கேரக்டரைத் தான் செய்திருக்கிறார். தங்கைக்கோர் கீதத்தில் கல்லூரி மாணவி, 24 மணி நேரம்/100வது நாளில் மனைவி, பிள்ளை நிலாவில் அம்மா, கீதாஞ்சலியில் திமிர்பிடித்த பெண் என்று கதை நாயகியாக, டைரக்டர்களின் ஆர்ட்டிஸ்ட்டாகவே இருந்திருக்கிறார்.
நூறாவது நாள் படத்தின் வெற்றிக்கு நளினியின் கண்களும் முக்கியக்காரணம். தான் கண்ட கனவு பலித்துவிடுமோ என்று பதறி, ஒரு உயிரைக் காப்பாற்ற துடிக்கும் கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார். கீதாஞ்சலியில் திமிர்பிடித்த பணக்காரப்பெண்ணாக வந்து திருந்தும் கேரக்டர். பிள்ளை நிலாவில் அந்த திமிர் கேரக்டரை ராதிகா எடுத்துகொள்ள, தலைகீழாக அப்பாவிப் பெண் வேடம். தன் குழந்தையின் உடலில் ஆவியிருப்பதை அறிந்து, குழந்தையை விட்டு விலகவும் முடியாமல் நெருங்கவும் முடியாமல் தவிக்கும் அம்மாவாக அசத்தியிருப்பார். எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதற்குரிய நியாயத்தைச் செய்பவராகவே இருந்திருக்கிறார்.
யார் படத்திலும் குறிப்பிடத்தக்க கேரக்டர். சாத்தான் ஹீரோயினின் மனதை மயக்கி, ஆசையைத் தூண்டிவிட, தனக்கு ஏன் அப்படி ஒரு கெட்ட எண்ணம் வந்தது என்று துடித்துப்போகும் கேரக்டர். ஒரு மிடில் கிளாஸ் பெண்ணின் மனவோட்டத்தையும், குற்றவுணர்ச்சியையும் கண்முன் கொண்டுவந்திருப்பார்.
பயம், கோபம் போன்ற உணர்ச்சிகளுக்கு இணையாக சிருங்காரத்தை நயமாக வெளிப்படுத்தும் ஆற்றல் அத்தைக்கு இருந்ததை, மாமா கோவித்துக்கொண்டாலும், நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். வாணிஸ்ரீக்கு அடுத்து, உதடுகளை நளினமாகப் பயன்படுத்தி நடித்தது நளினி அத்தை தான். மாமா அத்தையிடம் கவிழ்ந்ததிலும் ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.
இப்படி ஹீரோயினாக நடித்துக்கொண்டிருக்கும்போதே, மண்ணுக்கேத்த பொண்ணு படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நிழல்கள்ரவிக்கு ஜோடியாக வருகிறார். காரணம், அந்த படத்தின் டைரக்டர் ராமராஜன் அங்கிள்!
’நளினி தேவிகா போன்ற ஒரு நடிகை. 1980களில் பத்து வருடங்களுக்கு மேல் வெற்றிகரமான கதாநாயகியாக, நடிப்புக்குத் தீனி போடும் வித்தியாசமான வேடங்களில் நடித்தவர்’ என்பது தான் நான் உட்பட பலரின் எண்ணம். ஆனால் அவர் 1983ல் தான் உயிருள்ளவரை உஷா மூலம் ஒரு நாயகியாக உருவெடுக்கிறார். 1984ல் நூறாவது நாள், 24 மணிநேரம் மூலம் கரியரின் உச்சத்திற்குப் போகிறார். பிள்ளைநிலா, கீதாஞ்சலி, ஈட்டி, யார்? போன்ற படங்களின் மூலம் 1985ல் ஒரு ஸ்டாராக ஆகிறார். கரிமேடு கருவாயன், பாலைவன ரோஜாக்களில் பெயர் வாங்கினாலும், 1986ல் காதலில் விழுந்து வீழ்ச்சி அடைகிறார்.
சிவாஜியுடன் அவர் நடித்த சாதனை(1986) படத்தில் சினிமா ஹீரோயினாக நளினி வருவார். ஹீரோயின் நளினியை நம்பி இயக்குநர் சிவாஜி ‘அனார்கலி’ எனும் காவியத்தை எடுக்க ஆரம்பிப்பார். பாதியிலேயே திருமணம் செய்யப்போகிறேன் என்று சொல்லிவிட்டு, நளினி காணாமல் போய்விடுவார். இதையே சொந்த வாழ்க்கையிலும் செய்து, பல ரசிகர்களின் மனதை சுக்குநூறாக உடைத்தார். 1987ல் கல்யாணத்துடன் காணாமல் போனார்.
1983-1986 என நான்கு ஆண்டுகளில் தான் இவ்வளவு நல்ல படங்களையும், நல்ல கேரக்டர்களையும் செய்துமுடித்திருக்கிறார். எந்த வேடத்தையும் செய்யத் துணியும் நல்ல நடிகர், நடிகை இருந்தால் தான் இயக்குநர்களாலும் வித்தியாசமான கதைகளை யோசிக்க முடியும். அந்த மூன்று ஆண்டுகளில் பல இயக்குநர்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்திருப்பார். அதை அவரே உடைத்து வெளியேறியது துரதிர்ஷ்டவசமானது. நளினி விட்டுச்சென்ற வெற்றிடத்தைத் தான் பின்னர் வந்த சீதாவும், ரேவதியும் பயன்படுத்திக்கொண்டார்கள்.
நளினி அத்தையின் பழைய படங்களையும் நடிப்பையும் பார்த்துவிட்டு, இப்போது யானையின் பிளிறல் ஓசை பிண்ணனியில் ஒலிக்க அவர் நடிக்கும் காமெடி சீன்களைப் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது. அத்தையை இந்த கோலத்தில் பார்த்து, மாமா எப்படி தாங்கிக்கொள்கிறார் என்று தெரியவில்லை. அவர் எங்கள் கண்ணில் சிக்காமல் காணாமல் போனதிற்கும், இந்த காமெடி கொடுமைக்கும் ஒருவேளை தொடர்பிருக்கலாம்!
0 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.