Saturday, July 22, 2017

விக்ரம் வேதா - திரை விமர்சனம்



ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி.

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விக்ரம் (மாதவன்), தாதா வேதா(விஜய் சேதுபதி) கூட்டத்தை வரிசையாக என்கவுண்டரில் போட்டுத்தள்ளுகிறார். அடுத்து விஜய் சேதுபதிக்கே குறிவைக்கும்போது, அந்த வேதாளமே வந்து சரண்டர் ஆகிறது. அது ஏன் என்பதைத் தான் மிரட்டலாகச் சொல்லியிருக்கிறார்கள்.

படத்தில் முதலில் பாராட்டப்பட வேண்டியது, பிண்ணனி இசை. ‘தனனனணா’ இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. டஸ்க்கு டஸ்க்கு பாடல், கறுப்பு வெள்ளை தீம் மியூசிக் என ஒரு இசைப்புரட்சியே நடத்தியிருக்கிறார் சாம் சி.எஸ். கடந்த ஒரு வருடமாக எனது ஃபேவரிட் மியூசிக் ஆல்பமாக இருப்பது, புரியாத புதிர் (மெல்லிசை). விஜய் சேதுபதி நடித்த அந்தப் படம் ஏனோ ரிலீஸ் ஆகாமல் கிடக்கிறது. ஆனால் அதன் மியூசிக் ஆல்பத்தில் உள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் அட்டகாசம். இன்னும் சொல்வதென்றால், விக்ரம்வேதாவை விட மெல்லிசை பெட்டர். ஒரு புதிய இசை ஆளுமை உருவாகி வருவதாகவே கணிக்கிறேன். விக்ரம்வேதாவை தாங்கிப் பிடிப்பது சாமின் இசை தான். இதற்காகவே தியேட்டருக்குப் போகலாம்.

புஷ்கர் காயத்ரி எப்போதுமே மெயின் ஸ்ட் ரீம் படங்கள் எடுப்பதில்லை. புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் எனும் ஆர்வத்தை அவர்களது படங்களில் தொடர்ந்து பார்க்கலாம். இந்த படத்தில் தான் அது சரியாக கூடிவந்திருக்கிறது.

வேதாளம் ஒரு கதை சொல்லும். முடிவில் இக்கட்டான ஒரு கேள்வி கேட்கும். சரியாக பதில் சொல்லவில்லையென்றால், விக்ரமாதித்யனின் தலை வெடித்துவிடும். இந்த ஐடியாவை வைத்துக்கொண்டு திரைக்கதையில் புகுந்து விளையாடியிருக்கிறார்கள். இவ்வளவு மெனக்கெடல்களுடன் தமிழ் சினிமாவில் சமீபத்தில் வந்த திரைக்கதை எதுவும் இல்லை.

முதலில் வேதா ஒரு கதை சொல்கிறான். முடிவில் ஒரு கேள்வி கேட்கிறான். ‘செய்தவனைக் கொல்லணுமா? செய்யச் சொன்னவனைக் கொல்லணுமா?’ அதற்கு விக்ரம் ஒரு பதில் சொல்ல, விக்ரமின் நண்பன் கொல்லப்படுகிறான். வேதா கேட்ட கேள்விக்கான அர்த்தமே வேறோ என்று விக்ரமுடன் சேர்ந்து நாமும் மிரண்டு போகிறோம். படத்தின் ஆரம்பக் காட்சிகளில் காமெடியாக வரும் பே-ஆஃப் வசனங்கள், பிற்பாதியில் மெயின் ட்விஸ்ட்டாக ஆசம், ஆசம். கேங்ஸ்டர் மூவிகளில் துரோகத்திற்கு முக்கிய இடம் உண்டு. இதில் யார், யாருக்கு துரோகம் செய்கிறார்கள் என்பதில் காட்டியிருக்கும் ட்விஸ்ட் அருமை.

மணிகண்டனின் வசனங்கள் இயல்பாகவும், புன்னகையை வரவழைப்பதாகவும் இருக்கின்றன. வரலட்சுமி சொல்லும் ‘அக்காங்’கைக்கூட ரசிக்க முடிகிறது.

கறுப்புக்கும், வெள்ளைக்கும் நடுவே நடக்கும் போராட்டத்தில், இரண்டுக்கும் இடையே இருக்கும் கோடு ஒரு கட்டத்தில் அழிவதை ரசிக்கத்தக்க வகையில் சொல்லியிருக்கிறார்கள். நல்லது-கெட்டது பற்றிய பல்வேறு கேள்விகளையும் சிந்தனைகளையும் கேள்விகளையும் எழுப்பியபடியே போகிறது படம். முழுக்க பதிலும் சொல்லாமல், நம்மிடமே கேள்விகளைக் கொடுத்து அனுப்பிவைக்கிறார்கள்.

மாதவனின் இண்ட்ரோ சீன் ஆகிய அந்த என்கவுண்டர் சீனைவிட, விஜய் சேதுபதியின் இண்ட்ரோ சீனுக்கு தியேட்டரே அதிர்கிறது. இத்தனைக்கும் ஆளைக் காட்டுவதே இல்லை. கால்கள், கையில் மசால்வடை, அருமையான ஷாட்ஸ், அட்டகாசமான பிண்ணனி இசையைக் கொண்டு தியேட்டரையே கொண்டாட வைத்திருக்கிறார்கள்.

சூது கவ்வும் கெட்டப் தான் விஜய் சேதுபதிக்கு. ஆனால் உடல்மொழியில் முற்றிலும் வேறு ஆளைக் கொண்டுவருகிறார். என்ன மனுசன்யா இவரு! படம் முழுக்க விஜய் சேதுபதிக்கு கைதட்டல் விழுந்துகொண்டே இருக்கிறது. எதையும் கேஷுவலாக எடுத்துக்கொண்டு, சீரியஸ் விஷயத்தையும் நக்கலான பேச்சுடன் செய்யும்போது, ரசிக்காமல் வேறு என்ன செய்ய?

மாதவனுக்கு நடிக்க அதிக ஸ்கோப் உள்ள கேரக்டர். ஒரு விறைப்பான & ஜாலியான என்கவுண்டர் போலீஸாக அறிமுகமாகி, விஜய் சேதுபதியால் அலைக்கழிக்கப்பட்டு, உண்மையை கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து என முதிர்ச்சியான நடிப்பில் அசத்தியிருக்கிறார். இறுதிச்சுற்றுக்குப் பிறகு, நடிப்பிலும் படத்தேர்விலும் அதே தரத்தை மெயிண்டெய்ன் செய்வது அழகு.

இன்னொரு ஆரண்ய காண்டம் என்று சிலர் பாராட்டினாலும், படம் அந்த அளவிற்கு இல்லை. ஒரு நல்ல கேங்ஸ்டர் த்ரில்லர் மூவி என்று தான் விக்ரம்வேதாவைக் சொல்ல வேண்டும். படத்தைப் பற்றி பலரும் பாராட்டித் தள்ளிவிட்ட நிலையில், சில உறுத்தல்களை இங்கே பேசுவோம்.

தம்பியும் கங்காவும் கொல்லப்பட்ட பிறகும், வேதா ரொம்ப கேஷுவலாக விஷயங்களை டீல் செய்வது இம்பாக்ட்டை குறைக்கிறது. அதிலும் கங்கா இறந்த இடத்தில் நின்றுகொண்டு காமெடி செய்வதெல்லாம் ரொம்பவே ஓவர். அவருக்கென இருந்த குடும்பமே சிதைக்கப்பட்ட பின்பும், காமெடி செய்வதெல்லாம் கொடூரம். தியேட்டரில் சிரித்தாலும், படத்தின் தரம் குறைந்துவிடுகிறது.

அந்த சேட்டன் என்ன ஆனார், கேரள கேங் என்ன ஆனார்கள் என பதில் சொல்லப்படாத கேள்விகள் அந்தரத்தில் தொங்குகின்றன.

இரண்டாவது கதை சொல்லும்போது, படம் தொய்வடைந்துவிடுகிறது. இண்டர்வெல்லுக்குப் பிறகு தான் வேகமெடுக்கிறது. படத்தின் கதையை நேர்கோட்டில் தொகுத்து, இது தான் நடந்தது என்று சாமானியர்களால் புரிந்துகொள்வது கஷ்டம். நிறைய விஷயங்களை நாமே யூகித்துக்கொள்ளட்டும் என்று விட்டிருக்கிறார்கள். அதனால் தான் அதுவொரு புத்திசாலித்தனமான திரைக்கதை; அதே நேரத்தில் அதுவொரு மைனஸ் பாயிண்டாகவும் ஆகிறது.

ஷ்ரதா, வரலட்சுமி என படத்தில் இரண்டே பெண் கேரக்டர்கள் தான். அவர்களுக்கும் ஸ்கோப் மிகவும் குறைவு. புதுபேட்டை மாதிரி முழுக்க முழுக்க ஆண்களின் உலகைக் காட்டும் வறட்சியான, ராவான கதைக்களம். விஜய் சேதுபதி மட்டுமே எல்லாத் தரப்பு ஆடியன்ஸையும் பேலன்ஸ் செய்கிறார்.

இப்படி சிற்சில குறைகள் இருந்தாலும், இந்த அளவிற்கு தமிழில் ஒரு படம் வருவதும், அதில் முண்ணனி நாயகர்கள் தைரியமாக நடிப்பதும் பெரிய அதிசயம். இது தொடர வேண்டும் என்றால், இந்தப் படத்தின் வெற்றி உதவும். புதுப்பேட்டை, ஆரண்ய காண்டம் படங்களின் தோல்வியால் நாம் இழந்தது அதிகம். விக்ரம்வேதா புதிய தொடக்கமாக இருக்கட்டும்.

படத்தில் பெஸ்ட் சீன் என்றால், கடைசி ஒரு நிமிடம் தான். மூன்றே ஷாட்களுடன் படத்தை முடிக்கும்போது, எழுந்து நின்று கைதட்டினோம். விஜய் சேதுபதி இண்ட்ரோ சீனுக்கும் இந்த கடைசி குறும்புக்குமே படத்தைப் பார்க்கலாம்.

டிக்கெட் விலையைப் பற்றி யோசிக்காமல்..........கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.