Wednesday, June 21, 2017

லென்ஸ் - ஒலக சினிமா அலசல்

இந்த வருடம் பரபரப்பாக பேசப்பட்டு, அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய படம். ஆனால் இந்த வருடம் என்னை அதிகம் ஏமாற்றிய படம் இது தான். போலி உலக சினிமாக்கள் என்று ஒருவகை உண்டு. மிகவும் அக்கறையோடு எடுக்கப்பட்ட படம் எனும் மேல்மட்ட தோற்றத்துடன், கொஞ்சம் உலுப்பினால் வெளிறிப்போகும் கலைப்படைப்புகள் இங்கே நிறைய உண்டு. ஒரு பெரிய குடும்பத்தையே காப்பாற்றும் பெண்ணின் கண்ணீர்க்கதை என்று 1970களில் வந்த ஒலக சினிமாக்களை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். இந்த மாதிரிப் படங்களை குறை சொல்ல யாரும் துணியமாட்டார்கள் என்பது பெரிய அட்வாண்டேஜ்.

இந்த படத்தின் பிரச்சினை என்னவென்று பேசவேண்டும் என்றால், கதையை விலாவரியாக இங்கே சொல்லியாக வேண்டும். ஸ்பாய்லர் அலர்ட்!

படத்தின் கதை என்ன?

ஹீரோ-ஹீரோயினின் முதலிரவுக் காட்சியை ஒருவன் ரகசியமாகப் படம் பிடித்துவிடுகிறான். அந்த பென் ட்ரைவ் வில்லன்/செகண்ட் ஹீரோ(?)வுக்கு கிடைக்க, இண்டர்நெட்டில் அப்லோட் செய்துவிடுகிறான். எல்லோருக்கும் விஷயம் தெரிந்து, ஹீரோயின் தற்கொலை செய்துகொள்கிறாள்.

ஹீரோ நெட்டில் அப்லோட் செய்தவன் யார் என்று பல ஆராய்ச்சிகள் செய்து, ஒரு முகமூடி அணிந்த பெண்ணின் வெட்சாட் மூலம் செகண்ட் ஹீரோவை கண்டுபிடிக்கிறான். அந்த முகமூடிப் பெண்ணின் கணவன் தான் தான் என்று ஹீரோ, செகண்ட் ஹீரோவிடம் சாட்டுக்கு வருகிறான். அவன் பின்னால் கட்டிலில் அந்த முகமூடிப்பெண் மயங்கிக்கிடக்கிறாள். செகண்ட் ஹீரோ கண்முன்பே அந்த பெண்ணின் ஆடைகளை எல்லாம் ஹீரோ துகிலுரிகிறான். இறுதியாக அந்த முகமூடியைக் கழட்டுகிறான்..அய்யோ, அது முகமூடிப்பெண் அல்ல..செகண்ட் ஹீரோவின் மனைவி!

செகண்ட் ஹீரோ மனைவியை விட்டுவிடும்படி கெஞ்ச, ஹீரோ தன் முன்கதையைச் சொல்லி செகண்ட் ஹீரோவின் தப்பை உணரச்செய்கிறான். அவளை விட்டுவிட வேண்டும் என்றால் தான் தற்கொலை செய்து இறப்பதை பார்க்க வேண்டும் என்று சொல்லி, தற்கொலை செய்துகொள்கிறான்..சுபம்! (செகண்ட் ஹீரோவுக்குத் தெரியாத முக்கிய பின்குறிப்பு & நீதி: ஹீரோ நல்லவர்..துகிலுரியப்பட்டது செகண்ட் ஹீரோவின் மனைவி அல்ல, அந்த முகமூடிப்பெண் தான்..அவள் ஒரு கால்கேர்ள்..அவளை அம்மணம் ஆக்கலாம்..தப்பில்லை!)

1980களில் அறிஞர் எஸ்.ஏ.சி.அவர்களின் படங்கள் ஏகப் பிரபலம். முதல் காட்சியில் ஹீரோவின் தங்கையையோ, பாட்டியையோ நான்கு வில்லன்கள் ரேப் செய்துவிடுவார்கள். ஹீரோ ஒவ்வொரு வில்லனாகத் தேடிச் சென்று, கொன்று பழிவாங்குவார். அந்த படங்கள் லென்ஸை விட பெட்டர் என்று தான் சொல்ல வேண்டும்.

லென்ஸ் படக்கதையைச் சுருக்கி, எஸ்.ஏ.சி. ஃபில்டரில் வைத்துப் பார்த்தால்....

ஹீரோவின் மனைவியை வில்லன் ரேப் செய்துவிடுகிறான்.

ஹீரோ வில்லனைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். வில்லனின் மனைவியை வில்லனின் கண்முன்னாலேயே ரேப் செய்கிறான்..வில்லன் துடித்து, தன் தவறை உணர்கிறான்...சுபம்!

மாபெரும் புரட்சிக்கதை தான் இது!

 சில பம்மாத்து வேலைகள் மூலம் லென்ஸ் திரைப்படம் பார்ப்போரை நல்ல படம் என்று நம்ப வைக்கிறது.

1. ஹீரோவை வில்லன் போல் அறிமுகம் செய்கிறது. வில்லனை ஹீரோ போல் அறிமுகம் செய்கிறது. இந்த ட்விஸ்ட் என்னையும் சேர்த்து பலருக்கும் பிடித்திருக்கிறது. ஸ்க்ரிப்ட்டில் உருப்படியான விஷயம் இது.

2. பெண்களின் வீடியோக்களை நெட்டில் அப்லோடு செய்யும் கயவர்களை கண்டிப்பதாக பாவனை செய்கிறது.

3. ஹீரோ-வில்லன் - மோதலுக்கான காரணம் மூன்றும் தான் ஆக்சன்/த்ரில்லர் படங்களின் திரைக்கதைக்கு அடிப்படை. இதில் ஹீரோ கேரக்டர்(சாட்டில் வரும் சைக்கோ), வில்லன் கேரக்டர்(வெட்சாட் வேந்தன்), மோதலுக்கான காரணம் (நெட்டில் அப்லோட் செய்யப்படும் அப்பாவி பெண்களின் வீடியோக்கள்) மூன்றையும் புதிதாகச் சொன்னால் போதும்..பார்ப்பவன் அசந்துவிடுவான்.

லென்ஸ் ஒரு த்ரில்லர் என்று மட்டும் சொல்லியிருந்தால் நமக்குப் பிரச்சினை இல்லை. சர்வதேச விருது பெற்ற சர்வரோக நிவாரணி என்றபின், துகிலுரிவது நம் கடமையாகிறது. இந்த படத்தின் முக்கியப் பிரச்சினையைப் பற்றிப் பேசுவோம்.

எல்லா நாட்டிலும் ஆண்பிள்ளைகளிடம் ‘பெண் என்பவள் வெறும் உடல் அல்ல..அதுவும் உணர்ச்சிகள் & புத்தி நிறைந்த மனித ஜென்மம்’ என்று சொல்லித்தர முயற்சிகள் நடக்கின்றன. இந்தியாவில் தான் பெண்களிடமே ‘நீ வெறும் உடம்பு அல்ல’ என்று புரிய வைக்க போராட வேண்டியுள்ளது. இடுப்பு தெரிந்துவிட்டாலோ, க்ளிவேஜ் தெரிந்துவிட்டாலோ உலகம் அழிந்துவிடாது, உடையை சரிசெய்தால் போதும் என்று இன்னும் எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. தன்னை உடலாக மட்டுமே உணரும் பெரும் சிக்கலில் நம் பெண்கள் சிக்கியிருக்கிறார்கள்.

தெரியாமல் க்ளிவேஜ் தெரிய உட்கார்ந்திருக்கும் அலுவலகத் தோழியிடம் அதைச் சுட்டிக்காட்டவே பயமாக இருக்கிறது. சொன்னால் மிகப்பெரிய அவமானம் நடந்துவிட்டதாக புண்பட்டுப் போய்விடுகிறார்கள். பத்து நாட்களுக்கு தூங்க மாட்டார்கள், சிரிக்க மாட்டார்கள். சமீபத்தில் தீபிகா படுகொனே ஒரு பத்திரிக்கையிடமே ‘ஆமாய்யா...நான் ஒரு பொம்பளை..எனக்கு முலை இருக்கத்தான் செய்யும். அது வெளில தெரியத்தான் செய்யும். அதுல உனக்கென்ன பிரசிச்னை?’என்று தைரியமாக கேட்டிருந்தார். அந்த அளவிற்கு இல்லையென்றாலும், முப்பது நொடிக்கு ஒருதரம் முந்தானையை சரிசெய்யும் பரிதாபத்துக்குரிய அனிச்சைச்செயலைக்கூட பலரால் விட முடிவதில்லை.

விஷுவல் இலக்கியங்களாகிய உலக சினிமாக்களின் கடமை, பெண்களை அவர்களின் உடலில் இருந்து விடுதலை செய்வதாகவே இருக்க வேண்டும். சமீபத்தில் நிசப்தம் எனும் கொரியக் காப்பி படம் வந்தது. பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்குழந்தையை அவள் குடும்பம் எப்படி நார்மல் லைஃபுக்கு கொண்டுவருகிறது என்பது தான் முழுப்படமுமே. சமீபத்தில் வந்த நல்ல படம் அது. பிரச்சினையை ஊறுகாயாகத் தொட்டுக்கொண்டு, பழி வாங்கலில் இறங்காத நேர்மையான கதை அது. அந்த பெண் குழந்தையின் நார்மல் லைஃப், அந்த சம்பவத்தால் அது சிதைவது, மொத்த குடும்பமும் மீண்டும் அவளை மீட்டு, மீண்டும் குழந்தையாக ஆக்க போராடுவது என்று ஒரு வாழ்க்கையை சித்தரித்தது நிசப்தம்.

ஒரு பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்துவிட்டால் பெண்ணோ, குடும்பமோ தற்கொலை செய்வதை இன்னும் எவ்வளவு காலத்திற்கு யதார்த்தமான விஷயமாகக் காட்டப்போகிறோம்? அவள் அதிலிருந்து மீள்வதைப் பற்றிப் பேசுவது தான் நேர்மையான படைப்பாக இருக்க முடியும்.

இதே படத்தில் ஒரு கால் கேர்ள் கேரக்டர் வருகிறது. அவரின் முகத்தைக்கூட இயக்குநர் காட்டுவதில்லை. செகண்ட் ஹீரோவின் மனைவியை அம்மணமாக்குவதாகச் சொல்லி, இவரின் உடைகளை ஹீரோ முழுக்க கழட்டுகிறார். அதற்காக அவர் அழுவதில்லை, தற்கொலை செய்வதில்லை. ஹீரோவின் பழி வாங்கலுக்கு அவர் முழுமையாக ஒத்துழைக்கிறார். ஆடையின்றி இந்த இரு ஆண்களின் முன் நின்றபின்பும், அவரால் இயல்பாக வாழ முடிவதைப் பார்த்தபின்னும், முட்டாள்களான இரு ஆண்களுக்கும் எதுவும் உறைப்பதில்லை. மனைவியை பார்த்துவிட்டார்களே என்று ஒரு லூசு புலம்புகிறது, மனைவி வீடியோவை ரிலீஸ் செய்துவிடாதே என்று இரண்டாவது லூசு கதறுகிறது. அந்த கால்கேர்ள் கேரக்டர் இவர்களைப் பார்த்து எதால் சிரித்திருக்கும் என்று யோசிக்கிறேன்.

ஆனாலும் இதுவெல்லாம் புரியாமல், மிகவும் சின்ஸியராகவே இயக்குநர் ஜெயப்ரகாஷ் இந்த படத்தை எடுத்திருக்கிறார். அந்த சின்சியாரியையும், அவரின் நடிப்பு & ஆனந்த் சாமியின் நடிப்பையும் பாராட்டவே செய்ய வேண்டும். மேலும், ஆபாச கதைக்களம் என்றாலும் ஆபாசக் காட்சிகளை தவிர்த்திருப்பது நல்ல விஷயம்.

சில நண்பர்கள் இதுவொரு உலக சினிமா என்றும் அவசியம் நான் இதைப் பார்க்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்கள். வெற்றிமாறன் ரிலீஸ் என்றதும் இன்னும் கொஞ்சம் நம்பினேன். பார்த்தால் இதுவொரு நவீன எஸ்.ஏ.சி. படம் என்பதைத் தாண்டி, சொல்வதற்கு ஒன்றுமில்லாத காலி பெருங்காய டப்பா!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.