Monday, June 19, 2017

டுபாக்கூர்களிடம் ஜோசியம் பார்க்கப் போகலாமா?


பெரும்பாலான ஜோதிடர்கள் அரைகுறைகள், டுபாக்கூர்கள். அதுபற்றிய பதிவு இது.

நான் எப்போது இந்தியா போனாலும் செய்வது, ஒரு ஜோதிடரைப் பார்த்துவிடுவது. அதை விட சிறந்த பொழுதுபோக்கு இல்லையென்றே சொல்வேன். நானே ஒரு அரைகுறை ஜோசியன் என்பதால் ஆரம்பித்த விளையாட்டு இது.

ஒருவன் ஜோசியம் பார்க்க வருகிறான் என்றால் அவனுக்கு ஏதோவொரு பிரச்சினை என்பது ஜோதிடர்களின் திடமான நம்பிக்கை. படிப்பு, வேலை, கல்யாணம், பணம், உடல்நலம் என ஏதோவொன்றில் சிக்கல் என்று அவர்களாகவே நினைத்துக்கொள்கிறார்கள். நான் அப்படி நாறிக்கிடந்த காலங்களில் ஜோதிடம் பக்கம் திரும்பியதில்லை. இப்போது ஒரு ஹாபியாக ஜோதிடரை பார்ப்பது என் வழக்கம். சிலநேரங்களில் வீட்டு அம்மணியும் வேடிக்கை பார்க்க வருவதுண்டு.

இப்படி ஒரு கிறுக்கன் சும்மா வருவான் என்று அவர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள் போலும். ஜாதகத்தை பவ்யமாக கையில் கொடுத்துவிட்டு எதிரே அமர்வேன். ஜோதிடர் கொஞ்ச நேரம் ஜாதகத்தையும் என்னையும் எடை போடுவார். பொதுப்பலன்களுடன் ஜோதிடர் ஆரம்பிப்பார்.

‘இந்த ஜாதகர் கடின உழைப்பாளி’ என்று அவர் ஆரம்பிக்கவும் தங்கமணி என்னைப் பார்ப்பார். ‘இந்த விஷயம் உங்க மேனேஜருக்குத் தெரியுமா?’ என்பது பார்வையின் பொருள்! இந்த பார்வைப் பரிமாற்றம் ஜோதிடரை பீதியாக்கும். அடுத்த அஸ்திரத்தை எடுத்துவிடுவார். ‘ஏழில் சந்திரன்..அழகான, லட்சணமான மனைவி அமைவாள்’ என்பார். நான் ‘ஆஹான்’ என்றபடியே வீட்டுக்காரம்மாவை திரும்பிப்பார்ப்பேன். அவரோ ‘சரி, சரி...தானிக்குத் தீனி சரியாப் போச்சு’ என வேறுபக்கம் திரும்பி சுவரை வெறிப்பார். இதிலேயே ஜோதிடர் வெறுத்துவிடுவார்.

அடுத்து கொஞ்ச நேரம் மயான அமைதி நிலவும். கட்டத்தை ஸ்டடி பண்ணுகிறாராம். சரி செய்யட்டும் என காத்திருப்போம். ஜோதிடர் கணக்குகளில் ஆழ்ந்திருப்பார். ‘இவனைப் பார்த்தால் படிக்கிற குழந்தையாத் தெரியலை. கழுத்தில் செயினையும் தொப்பையையும் பார்க்கும்போது வசதியாத்தான் தெரியுது. கல்யாணமும் ஆகித் தொலைஞ்சிருக்கு. குழந்தைங்க...ஆங்’ என்று நிமிர்வார். ‘ஆண் குழந்தை இருக்க வேண்டுமே?’ என்று பாசிடிவ்வாக ஆரம்பிப்பார். ‘ஆமாம்...இரண்டு பசங்க’ என்பேன். ‘அப்போ அதுவும் பிரச்சினை இல்லையா?..அட நாதாரிகளா’ என ஜோதிடர் மனதில் திட்டுவது நன்றாகவே கேட்கும்.

’பத்தாம் அதிபதி ஏழில்...தொழில்காரகனைப் பார்க்கிறான். சுக்கிரனோடு...’எனும் ரேஞ்சில் ஏதோ தொழில் கட்டம் பற்றி சொல்லிவிட்டு முகத்தைப் பார்ப்பார். உஷாராகி ரியாக்சன்களையெல்லாம் ரிமூவ் செய்து, க்ளீன் சிலேட்டாக முகத்தைக் காட்டுவேன். வீட்டுக்காரம்மாவோ எப்போதும் பூர்ண சந்திரன். ‘இப்படி உட்கார்ந்தா எப்படிடா...இப்போ இவனுக்கு தொழில்ல பிரச்சினைன்னு சொல்றதா, இல்லேன்னு சொல்றதா?’ என ஜோதிடரே கடுப்பில் கன்ஃபியூஸ் ஆவார்.

‘சரி கழுதை அதை விடுவோம்...இப்போ இவனுக்கு 37 வயசுன்னா அப்பா-அம்மா ஓல்டு பீப்பிள்..பிடிச்சுட்டேன்...அவங்கள்ல யாருக்கோ உடம்பு சரியில்லை’ என தெளிவாகி ஜோதிடர் அடுத்த பாயிண்டைப் போடுவார். ‘அப்பா - அம்மா ரெண்டு கட்டமுமே கொஞ்சம் பிரச்சினை காட்டுதே’. நான் ‘ஆமாம்’ என்று சொன்னதும் அவர் முகத்தைப் பார்க்க வேண்டுமே...மூன்று மணி நேரம் உச்சாவை அடக்கியவன் ட்ரான்ஸ்ஃபார்மரைக் கண்டதுபோல் இருக்கும்!

அப்படியெல்லாம் நிம்மதியாக இருக்க விடுவோமா? ‘அவங்கள்லாம் போய்ச் சேர்ந்து பல வருசம் ஆச்சு’ என்று அடுத்த குண்டைப் போடுவேன். ‘ஆங்..அதான் கட்டம் சொல்லுது’ என்றபடியே என்னை உற்றுப்பார்ப்பார். ‘மீ பாவம்..உனக்கு என்ன தான் வேணும்’ என்று கண்கள் கெஞ்சும். கடைசியில் அவரே சரண்டர் ஆகி ‘சரி..இப்போ உங்களுக்கு என்ன பார்க்கணும்?’ என டைரக்ட் டீலிங்கிற்கு வருவார்.

‘இப்போ நேரம் எப்படி இருக்கு? அது எல்லாக் கட்டத்துக்கும் என்ன சொல்லுதுன்னு சொல்லுங்க’ என்பேன். ‘எல்லாக் கட்டத்துக்குமா?...மறுபடி முதல்ல இருந்தா?’ என ஜோதிடர் வெறுத்துப்போவார். பெரும்பாலும் வீட்டுக்காரம்மா தான் மனமிரங்கி ‘நாங்க சொந்த ஊர்ல எப்போ செட்டில் ஆவோம்?’ என்று கேட்பார். ஏதோ ‘2+2 எவ்ளோ சொல்லுங்க’ என்று கேட்டதுபோல் ஜோதிடர் உற்சாகமாகிவிடுவார். அஜக்குபுஜக்கு என்று வேகமாக கணக்குப் போட்டு ‘இன்னும் இரண்டே வருசம் தான்..வந்திடலாம்’ என்று தீர்ப்பளிப்பார். ‘இதைத் தான்யா ஆறு வருசமா சொல்றீங்க’ என நினைத்தபடி நன்றி கூறி விடைபெறுவோம். அப்போது அவர் ‘போய்ட்டு வாங்க’ என்று சொல்வது முப்பத்து முக்கோடி தேவர்கள் பூமாரி பொழிந்து ஆசீர்வதித்தது போல் இருக்கும்!

ஆனால் இந்தமுறை நாங்கள் பார்த்த ஜோதிடர் கொஞ்சம் சூடான பார்ட்டி. கொஞ்ச நேரத்திலேயே டென்சன் ஆனவர் ‘இது உன் ஜாதகமே இல்லை..நீ சொல்றதும் கட்டமும் மேட்ச்சே ஆகலை..ஓடிப்போயிரு’ என்று விரட்டிவிட்டு விட்டார். ‘இதைக் காட்டித்தான்யா இந்தம்மாவை நான் கல்யாணம் பண்ணியிருக்கேன்’ என்று நான் சொல்லியும் அவர் கேட்கவில்லை. ‘அதெல்லாம் தெரியாது. கரெக்டான ஜாதகத்தோடு வாங்க’ என்று கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக அனுப்பி வைத்துவிட்டார்...ஆனால் நாம் அப்படில்லாம் விட்ற முடியுமா? அடுத்த லீவில் மறுபடி போகணும்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

  1. ஜோசியம் பொய் என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது என்பதே என் அனுபவத்தில் கண்டது. எங்க ஊர் பக்கம் உள்ளூர்ல ஜோஷியம் பாக்க மாட்டாங்க, தெரியாத பக்கத்து ஊர்களுக்குப் போய்ப் பாப்பாங்க. அதுவும் ஒன்னுக்கு நாலஞ்சு பேர்கிட்ட பாப்பாங்க. (நாம எந்த மெடிக்கல் பிரச்சினைனாலும் நாலு டாக்டரை பாத்து உறுதி செய்வது மாதிரி).

    நான் ஸ்கூல் படிக்கும்போது ஒருமுறை எங்க அத்தை அவங்க பையன் ஜாதகத்தை எடுத்துக்கிட்டு எங்க ஊருக்கு ஜாதகம் பார்க்க வந்தாங்க. ஜோசியர் வீட்டுக்கு கூட்டிட்டு போகும் பொறுப்ப என்கிட்டே கொடுத்தார் எங்கப்பா. அத்தையை, ஜாதகம் பார்த்த பின்னர் திரும்ப வீட்டுக்கு அழைச்சிட்டு வராணும்கிறதால, நான் ஜோசியர் வீட்டில் அவங்க கூடவே உட்கார்ந்தேன். ஜோசியர் ஜாதகத்தை பார்த்தார். ஏதேதோ கணக்குகளை போட்டார். பின்னர் ஜாதகனுக்கு வயது எத்தனை வருடம் மாதம், நாள் என்பதில் ஆரம்பித்து பலன்களை சொல்ல ஆரம்பித்தார். நல்லா கவனிக்கணும், ஜோஸ்யருக்கு அவங்க குடும்பத்தைப் பத்தி ஒண்ணுமே தெரியாது, ஆனா எனக்கு எல்லாமும் தெரியும். அவர் குனிஞ்சு ஜாதக கட்டத்தை பார்த்தே சொல்லிக் கொண்டே போனார், அப்போ எனக்கு அப்படியே அவங்க குடும்பத்தில் நடந்த அத்தனையும் படமாக ஓடியது. அத்தை குடும்பத்தினர் வாழ்க்கையில் யாருக்கு என்ன நடந்தது என்ற அத்தனையும் அந்த ஒரு பையனின் ஜாதாகக் குறிப்பில், சொல்லத் போனால் அவன் பிறந்த தேதி, நேரம், இடத்தை வைத்து. இது எப்படி சாத்தியம்?? என்னுடைய ஜாதாகத்தையே பல முறை வெளியில் தெரியாத நபரிடம் காட்டியிருக்கிறோம், அவர்கள் சொல்லும் கணிப்புகள் அத்தனை கச்சிதம். சில சமயம் எண்ணெய் பற்றி என் உள்மனதுக்கு மட்டுமே தெரியும் விஷயங்கள், அவர்கள் வாயிலிருந்து, எப்படி?? இந்த அனுபவம் ஒருமுறை இருமுறை அல்ல, பல முறை. ஜோசியம் வெறும் ஏமாற்று வேலை என்று எப்படி ஒதுக்க முடியும்??

    ReplyDelete
    Replies
    1. பதிவில் டுபாக்கூர் ஜோதிடர்களைப் பற்றித்தான் சொல்லியிருக்கிறேன். நானும் சில நல்ல ஜோதிடர்களைக் கண்டிருக்கிறேன்.

      Delete
  2. Replies
    1. நாடி ஜோதிடம் பார்க்கும்போது, உங்கள் பிறந்த தேதியை சொல்லவே சொல்லாதீர்கள். 2ல் ஆரம்பிக்குமா, 3ஆம் மாதமா என்று போட்டுப் பார்ப்பார்கள். சொல்லவே கூடாது. அதையும் மீறி, சரியாகக் கணித்தால் அவர் நல்ல ஜோதிடர்.

      Delete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.