Saturday, December 29, 2018

2018 - எனக்கு ‘மிகவும்’ பிடித்த படங்கள்


சென்ற புத்தாண்டு சபதமாக எழுதியது இது : // இந்த ஆண்டு சபதமாக, ஒரு படம் நல்ல படம் என்று உறுதியாகத் தெரிந்தால் தான் தியேட்டர் பக்கம் போவது என்று முடிவு செய்திருக்கிறேன். சிந்திய ரத்தமெல்லாம் போதும். முடிந்தவரை இந்த புத்தாண்டு சபதத்தை காப்பாற்றுவேன். ஜெய் ஜக்கம்மா! //

90% இந்த சபதத்தை நிறைவேற்றியிருக்கிறேன். சூப்பர் ஸ்டார், சுந்தர்.சி போன்ற எனக்குப் பிடித்தவர்களுக்காக பார்த்தவை மீதி 10%.

இந்த வருடம் சுமாராகவே ஆரம்பித்தது. முதல் நான்கு மாதங்களில் வந்த படங்கள் எதுவும் சொல்லும்படி இல்லை. மே மாதம் வந்த இரும்புத்திரை தான் இந்த வருடத்தின் முதல் ஹிட் மூவி. வருடத்தின் இரண்டாம்பாதியில் தான் நல்ல படங்கள் வரிசையாக வந்து நம்மை அசர வைத்தன.
பார்த்ததில் பெஸ்ட் மூவீஸ் என்று 8 படங்கள் ரிலீஸ் வரிசையில்...

1. இரும்புத்திரை :
டிஜிட்டல் இந்தியாவின் ஆபத்தை கமர்சியலாகச் சொன்ன படம். டெக்னாலஜியை வைத்து படம் செய்யும்போது, புரியா விதத்தில் சொல்லிசொதப்புபவர்களே அதிகம். ஆனால் இயக்குநர் மித்ரன் சாமானியனுக்கும் புரியும்படி எளிமையாகவும் வலிமையாகவும் திரைக்கதையை அமைத்திருந்தார். இதுவொரு விழிப்புணர்வுப் படமாகவும் ஆனது. படம் பார்த்த பலரும் மொபைல் ஃபோனில் இருக்கும் ஆபத்தை புரிந்துகொள்ள முடிந்தது. ரொம்ப வருடங்களுக்கு அப்புறம், விஷாலுக்கும் ஒரு ஹிட்.

2. நடிகையர் திலகம் :
ஜெமினி போர்சனில் சொதப்பினாலும், ஒரு நல்ல பயோபிக் படம். வெறும் புகழ்ச்சிப்படமாக இல்லாமல், ஈகோவும் மதுவும் எப்படி திறமைசாலிகளைக்கூட அழிக்கின்றன என்று விரிவாக பதிவு செய்திருந்தார்கள். கீர்த்தி சுரேஷ் ,வெறும் இமிட்டேசனாக முடிந்து போகாமல், சாவித்திரியாகவே வாழ்ந்து காட்டியிருந்தார். இப்போதும் எந்த சீனை நினைத்தாலும்,சாவித்திரி முகம் தான் நினைவுக்கு வருகிறது. கீர்த்தியின் கரியரில் பெஸ்ட் மூவியாக இது எப்போதும் இருக்கும்.

3. கடைக்குட்டி சிங்கம் :
இன்றைக்கு தமிழ் சினிமாவில் இருக்கும் அத்தனை கத்துக்குட்டி இயக்குநர்களுக்கும் பாடம், இந்தப் படம். ’ஃபேமிலிசெண்டிமெண்ட் எல்லாம் எடுபடாது ,அதெல்லாம் சீரியல் கான்செப்ட்’ என்ற மாயையை உடைத்து, குடும்பம் குடும்பமாக மக்கள் தியேட்டருக்கு வருவார்கள் என்று நிரூபித்த படம். இப்போது எல்லாருமே பெரிதாக ஏதாவது சொல்ல வேண்டும் என்று ‘ஹை-கான்செப்ட்’ தேடி அலைகிறார்கள். இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என்று எல்லாருமே ‘பெருசா, ஆ-ன்னு அசந்து போற மாதிரி’ கதை தேடி அலைகிறார்கள். விளைவு, ஏ செண்டரில் அல்லது ஃபேஸ்புக்/ட்விட்டரில் மட்டுமே வெற்றி அடைகிறார்கள். கொரியன் படங்கள் பாதிப்பில் இந்த மண்ணிலிருந்தும் மக்களிடமிருந்தும் அந்நியப்பட்டு வரும் படங்களே இப்போது அதிகம்.

ஆனால் கடைக்குட்டி சிங்கம் ஒரு எளிமையான, இந்த மண்ணின் கதை. ‘ஹீரோ தன் அக்கா பெண்களை விட்டுவிட்டு, ஹீரோயினை காதலிக்கிறான். குடும்பம்/உறவு பிரிகிறது. அக்காக்களின் சம்மதத்தை வாங்கினானா, குடும்பம் ஒன்று சேர்ந்ததா?’ என்பது தான் கதை. இதை யாராவது புது இயக்க்குநர் வேறு தயாரிப்பாளரிடம் சொல்லியிருந்தால், ‘இதெல்லாம் கதையா?’ என்று அடித்துவிரட்டியிருப்பார்கள். இந்த கதையில் இருந்த செண்டிமெண்ட்டை சூர்யாவும் கார்த்தியும் நம்பியதாலே, மக்களுக்கு நெருக்கமான இந்தப் படம் உருவனாது; எதிர்பார்த்தபடியே ஹிட் ஆனது.

4.மேற்குத் தொடர்ச்சி மலை :
நீண்ட நாட்களுக்குப் பிறகு, தமிழில் ஒரு யதார்த்தப் படம். மலைவாழ் மக்களின் வாழ்க்கையை கொஞ்சமும் சினிமாத்தனம் இல்லாமல், நாம் அருகே இருந்து பார்ப்பது போல், அப்படியே பதிவு செய்திருந்தார்கள்.அதிசயமாக, எல்லா மீடியாக்களும் மக்களும் இந்த படத்தைக் கொண்டாடினார்கள். மேலும் நல்ல படங்கள் வருவதற்கான உத்வேகத்தைக் கொடுத்த படம்.

5. பரியேறும் பெருமாள் :
மக்கள் மீதான அன்பும் அக்கறையும் தான் ஒரு படைப்பாளிக்கான முதன்மைத் தகுதிகள். அப்படிப்பட்ட படைப்பாளியாக மாரி.செல்வராஜ் அறிமுகமான படம். இந்த மண்ணில் நிலவும் சாதிவெறியை அப்பட்டமாக, பக்கச்சார்பின்றி, நேர்மையாக பதிவு செய்த படம். எதிராளியின் மனசாட்சியையும் தட்டி எழுப்பிய கதை சொல்லும் பாணி தான் இந்த வருடத்தின் முக்கியமான படமாக பரியேறும் பெருமாள்(மேல ஒரு கோடு)-ஐ ஆக்கியது.

6.96 :
’ஜானு, ஜாணூ’ என்று மக்களை கிறுக்குப்பிடித்து அலைய வைத்த படம். ஆட்டோகிராஃபின் அப்டேட்டட் வெர்சன். விஜய் சேதுபதி கரியரில் பெரிய ஹிட் மூவி. த்ரிஷா கரியரில் பெஸ்ட் மூவி. ஹீரோ & ஹீரோயினின் நடிப்பால் மட்டுமே இத்தகைய படங்களை வெற்றிபெற வைக்க முடியும். அதை சிறப்பாக இருவரும் செய்திருந்தார்கள். அதிரடியாக எதுவும் இல்லாமல், மெல்லிய மயிலறகால் வருடுவது போன்ற படமாக்கல் மூலமே
ஜெயித்தார்கள்.

சமீபத்தில் ஒரு ஹிந்தி விமர்சகர் யூ-டியூபில் இந்தப் படம் பற்றி பேசியிருந்தார். ‘ காதல் படம் என்ற பெயரில் கண்றாவிப் படம் எடுக்கும் ஹிந்தி இயக்குநர்களுக்கு இந்தப் படம் ஒரு பாடம்.' என்று சொல்லியிருந்தார். கீழே கமெண்ட்டில் ஹிந்திவாலாக்கள் இந்தப் படத்தை தமிழிலேயே பார்த்து, கொண்டாடியிருந்தார்கள். இந்த படத்தில் இருந்த ஃபீல், மொழி தாண்டி அனைவரின் மனதையும் தொட்டிருந்தது.

(இந்தப் படம் ஒரு உதவி இயக்குநரின் கதையைத் திருடி எடுக்கப்பட்டதாக புகார் கிளம்பியது. அதில் உண்மையிருக்க 50% வாய்ப்பு இருப்பதாகவே உணர்கிறேன். பாதிக்கப்பட்டவருக்குச் சொல்வதெல்லாம் ‘இந்த உலகம் இப்படித்தான்..இதிலேயே தேங்கிவிடாமல் மீண்டு வாருங்கள்!’)

7. ராட்சசன் :

தமிழில் ஒரு முழுமையான த்ரில்லர். பதற வைத்த படம். முண்டாசுப்பட்டி போன்ற காமெடிப்படம் கொடுத்த இயக்குநரிடம் இருந்து இவ்வளவு வீரியமான படத்தை எதிர்பார்க்கவில்லை. தமிழில் இருக்கும் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக, ராட்சசன் அவருக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தது. முனீஷ்காந்த்தும், விஷ்ணு விசாலும் கிறிஸ்டோபராக நடித்தவரும் குறிப்பிடத்தக்க நடிப்பைக் கொடுத்திருந்தார்கள். எளிதில் மறக்க முடியாத படம், ராட்சசன்.

8. வட சென்னை :
தியேட்டரை விட்டு வரும்போது, மிரண்டு போய் வந்தது இன்னும் நினைவிருக்கிறது. புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு நம்மை மிரட்டிய ஒரு கேங்ஸ்டர் மூவி. ஒவ்வொரு சீனையும் செதுக்கியிருந்தார்கள்.
தேவையில்லாத கெட்டவார்த்தைப் பிரயோகங்களும் வெற்றிமாறனின் கனவுப்படம் எனும் அதீத எதிர்பார்ப்பும்தான் நெகடிவ்.
அற்புதமான மேக்கிங், ஜிலேபியை பிய்த்துப்போட்டது போல் பிணைந்து பிரியும் திரைக்கதை, தனுஷ், ஆண்ட்ரியா,அமீர், சமுத்திரக்கனி என ஏறக்குறைய எல்லா நடிகர்களின் சிறந்த நடிப்பு என்று பல பிளஸ் பாயிண்ட்கள். மொத்தத்தில் டெக்னிகலாக மிகச் சிறந்த படம் இது. புதுப்பேட்டை மாதிரியே கால ஓட்டத்தில் கல்ட் மூவி ஆகும் வாய்ப்பு உண்டு.
மேலும் வாசிக்க... "2018 - எனக்கு ‘மிகவும்’ பிடித்த படங்கள்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

2018 - எனக்குப் பிடித்த படங்கள்


சிறந்த படமாக ஆக வாய்ப்பிருந்தும், சில படங்கள் கொஞ்சம் ஸ்லிப் ஆகி நல்ல படங்களாக மட்டுமே முடிந்துவிடும். இந்த வரும் அப்படி வெளியான என்னைக் கவர்ந்த 5 படங்களின் லிஸ்ட், ரிலீஸான ஆர்டரில் :

1. டிக் டிக் டிக் :
விமர்சகர்கள் எல்லாரும் படத்தைக் கழுவி ஊற்றினாலும், பாக்ஸ் ஆபீஸீல் ஹிட் ஆன படம். பெரிதாக எதிர்ப்பார்ப்பு இல்லாவிட்டாலும், போரடிக்காத கதை சொல்லலில் ஜெயித்த படம். படத்தில் நிறைய லாஜிக் மிஸ்டேக்ஸ், யூகிக்க முடிகிற மொக்கை வில்லன் என்றெல்லாம் இருந்தும், தமிழில் புது கான்செப்ட் என்பதால் அசால்ட்டாக ஜெயித்தார்கள்.

2. அசுர வதம் :
புதிய வகை கதை சொல்லலை முயற்சித்த படம். கமர்சியலாக வெற்றி பெறாவிட்டாலும், எனக்குப் பிடித்திருந்தது. சசியும், வசுமித்ரவும் சிறந்த நடிப்பை வழங்கியிருந்தார்கள். ஆனாலும் வில்லன் கேரக்டரில் யாராவது ஹீரோ நடித்திருந்தால், திரைக்கதையில் செய்த புதுமை இன்னும் எடுபட்டிருக்கும்.

3. ப்யார் ப்ரேமம் காதல் :
கலாச்சார அதிர்ச்சி கொடுத்தாலும், இளமை பொங்க ஒரு படம். யுவனின் இசையும் ஹீரோ& ஹீரோயினின் பெர்ஃபார்மன்ஸும் குறிப்பிட்டுப் பாராட்டப்பட வேண்டியவை. மேல்தட்டு முற்போக்குக் காதல்(!) தான் படத்தின் கதைக்களமும் பலவீனமும்.ஹிந்தியில் ரீமேக் ஆகிறது என்று நினைக்கிறேன்.அங்கே ஜெயிக்க வாய்ப்பு அதிகம்.

4. கோலமாவு கோகிலா :
நயந்தாராவின் இன்னொரு சூப்பர்ஹிட் மூவி. ப்ளாக் காமெடியில் பின்னி எடுத்திருந்தார்கள். வித்தியாசமான கேரக்டர்கள், வெவ்வேறு உடல்மொழி என்று ஒவ்வொரு கேரக்டருக்கும் இயக்குநர் கொடுத்திருந்த உழைப்பு பிரம்மிக்க வைத்தது. சேகர், டோனி, சோஃபியா, சோஃபியாவின் லவ்வர், இன்ஸ்பெக்டர் என எல்லா கேரக்டருமே ரசிக்க வைத்தார்கள்.
ப்ளாக் காமெடி என்றாலே தமிழ்ப் படைப்பாளிகள் நியாய தர்மத்தை காற்றில் பறக்கவிட்டு விடுகிறார்கள். அதில் இந்தப் படமும் விதிவிலக்கல்ல!

5. கனா :
எதிர்பாராத ஒரு ஹிட் மூவி. க்ளிஷே காட்சிகளும் திரைக்கதையும் தான் படத்தின் பலவீனம். ஆனாலும், ஒரு கிராமத்துப் பெண்ணின் கனா நிறைவேறுவதை சுவாரஸ்யமாகச் சொல்லியிருந்தார்கள். ஒரு படத்தினை தனியே தாங்கிப்ப் பிடிக்கும் அளவிற்கும் அதை ஹிட் ஆக்கும் அளவிற்கும் ஐஸ்வர்யா வளர்ந்திருப்பது ஆச்சரியம் & மகிழ்ச்சி.

இந்த தலைமுறை டாப் ஸ்டார்களான விஜய் சேதுபதியும் சிவகார்த்திகேயனும் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்து, நல்ல படங்களைக் கொடுப்பது பாராட்டுக்குறிய விஷயம். பணத்திற்காக கமர்சியல் குப்பைகளை மட்டுமே எடுக்காமல், நட்புக்காக நல்ல படங்களைத் தயாரிக்கும் குணத்தினை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

6. யூ-டர்ன் :

வித்தியாசமான & சிம்பிளான படம். சமந்தாவின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது. த்ரில்லர் & பேய்ப்படம். பாராட்டப்பட வேண்டிய திரைக்கதை.


மேலும் வாசிக்க... "2018 - எனக்குப் பிடித்த படங்கள் "
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

2018 - எதிர்பார்த்து ஏமாந்த படங்கள்


முன்பே சொன்னது போல், நல்ல படம் என்று தெரிந்தால் தான் தியேட்டர் பக்கம் போனேன். ஆனாலும் சில கலைஞர்கள் மேல் இருக்கும் அபிமானத்தினால் போய், இவையெல்லாம் திருப்தி இல்லாமல் திரும்பிய படங்கள் .

இந்த வருடம் வேறு எங்கும் நான் பெரிதாக சிக்கிக்கொள்ளவில்லை என்பதே பெரும் ஆறுதல். 2019-ல் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

1. கலகலப்பு-2 :
காமெடி என்பது கஷ்டமான விஷயம் மட்டுமல்ல, ஒவ்வொரு காலத்திலும் மாறிக்கொண்டே இருப்பது. பெரும்பாலான ப்ளாக்& ஒயிட் காமெடிகளை இன்று பார்க்கச் சகிக்காது. இப்படி மாறிக்கொண்டே இருக்கும் ஒரு விஷயத்தில் இருபது வருடங்களுக்கு மேலாக சக்ஸஸ்ஃபுல் இயக்குநராக நிலைத்திருப்பது சாதாரண விஷயமல்ல.

1995-ல் இருந்த நடிகர்கள், காமெடியன், இசையமைப்பாளர் எல்லாம் ஒதுங்கிவிட்டார்கள். ஆனால் சுந்தர்.சி இன்னும் நின்று விளையாடிக்கொண்டிருக்கிறார்.

சுந்தர்.சி கரியரில் கலகலப்பு ஒரு முக்கியமான படம். பல காட்சிகளை இன்றும் பார்த்தாலும் சிரிக்காமல் இருக்க முடியாது. பார்ட்-2ஐ கலர் கலராக பிரம்மாண்டமாக படத்தை எடுத்திருந்தும், கலகலப்பு-1ல் இருந்த எளிமையும் காமெடியும் மிஸ் ஆகி, நம்மை ரொம்பவே சோதித்தது. அஞ்சலி, ஓவியா இடத்தில் இந்தப் பட ஹீரோயின்ஸை பார்க்கவே சகிக்கவில்லை. மிர்ச்சி சிவாவும் யோகிபாபுவும் மட்டும் கொஞ்சம் காப்பாற்றினார்கள்.

இந்த வருடத்தில் முதல் ‘பார்ட்-2’ படமாக கலகலப்பு-2 வந்தது. நல்ல மாட்டுக்கு ஒரு சூடாக, அதன்பிறகு வந்த எந்தவொரு பார்ட்-2 படத்தையும் பார்க்கவில்லை! (2.0 தவிர்த்து!)

2. காலா / 2.0 :

எந்திரன் இரண்டாம்பாகமாக வந்த 2.0 படத்திற்கு, இந்த வருடத்திற்கான மோசமான திரைக்கதை விருதைக் கொடுக்கலாம். டபுள் ஹீரோ சப்ஜெக்ட் & நியாயம் அக்‌ஷய்குமார் பக்கம் என்று ஆனபின்பு, இறுதியில் சமாதானமாகாமல், பிரம்மாண்டத்திற்காக பெரும் பொருட்செலவில் ஒரு நல்ல மனிதனை அழித்தது போல் ஆகிவிட்டது. ஐ படத்தை அடுத்து ஷங்கருக்கு திரைக்கதையில் இது இன்னொரு பெரும் சறுக்கல்.

நல்லவேளையாக 3டி டெக்னாலஜி படத்தைக் காப்பாற்றியது. ஒரு பேய்ப்படத்தை பாசிடிவ் ஆரா, நெகடிவ் ஆரா என்று உட்டாலக்கடி அடித்துச் சொல்ல முயன்றிருந்தார்கள். ஆனாலும் யுகேஜி படிக்கும் என் பையனைக்கூட அவர்களால் ஏமாற்ற முடியவில்லை. படம் பார்த்தபின் அவன் எனக்குச் சொன்ன கதை இது :

‘ஒருத்தன்..சைண்டிஸ்ட்..ரோபால்லாம் செஞ்சுக்கிட்டு இருக்கான். ஒரு பேய் அவன் உடம்புல பூந்துடுது. ரோபோவை எல்லாம் பிய்ச்சுப் போட்டுட்டுது. பெறகு, சிட்டி 2.0 வும் 3.0ம் வந்து பேயை கொன்னுட்டாங்க.”. - அவ்வளவு தான் இதுக்கு அத்தனை ஃபர்னிச்சரை உடைச்சு, யூடர்ன்லாம் போட்டு....!

அப்புறம் காலா...ராஜ்கிரண் நடிக்க வேண்டிய படம். ‘இதுவரைக்கும் நீ உடைச்சதெல்லாம் பத்தாதா?’ என்று சக ரஜினி ரசிகர்களின் மைண்ட் கதறல் கேட்பதால்...வுடு ஜூட்!

3.இமைக்கா நொடிகள் :
ஒரு நல்ல கதையை ஸ்டார் ஆர்ட்டிஸ்ட்டிற்காக, பிடித்துத் திருக்கி சிக்கலாக்கிச் சொதப்புவது எப்படி என்பதற்கு இந்தப் படம் உதாரணம்.
அண்ணன் - தம்பி. அண்ணன் ஒரு சிபிஐ ஆபீசர்..தம்பி மெடிக்கல் ஸ்டூடண்ட் என்று ஆரம்பித்த படத்தை, நயந்தராவை உள்ளே கொண்டுவந்து, அவருக்காக கதையிலும் கைவைத்து, அவரை ‘உண்மையான’ ருத்ரா ஆக்கி, முறுக்கிக்கொண்ட அதர்வாவை சமாதானப்படுத்த காதல் போர்சன் & கடைசி அரைமணிநேர சைக்கிள் சாகசங்களை வைத்து, ஒரு நல்ல படத்தை மோசமாக பிரசண்ட் செய்திருந்தார்கள்.

ட்விஸ்ட் வைக்கிறேன் பேர்வழி என்று ஒட்டுமொத்த ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து, அதை கிரகிக்க போதிய இடைவெளியும் நமக்குக் கொடுக்காமல் சிக்கலாக கதை சொல்லியிருந்தார்கள்.

சீரியல் கில்லர் ‘ராட்சசன்’-க்கு கிடைத்த வரவேற்பைp பெற வாய்ப்பிருந்தும் மிஸ் செய்துவிட்டார்கள். எனவே சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருக்க வேண்டிய படம், ஹிட் மூவியாக முடிந்து போனது. ஆனாலும் கதை, நயந்தாரா & அனுராக் காஷ்யப்பின் நடிப்பு, பிண்ணனி இசை ஆகியவை குறிப்பிட்டுப் பாராட்ட வேண்டிய விஷயங்கள்.

4.செக்கச் சிவந்தவானம் :

’படம் நல்லா இருக்குப்பா..மணிரத்னம் படம் மாதிரியே இல்லை..சூப்பர்’ என்பது தான் படத்திற்குக் கிடைத்த பாராட்டு. தொடர் தோல்விகளால் துவண்டிருந்த மணிரத்தினத்தின் கம்பேக் மூவி. ஆனாலும் அவர் இப்படி கம்பேக் ஆகியிருக்க வேண்டாம் என்று தோன்றியது. அவரது மோசமான படங்களில்கூட ‘மணிரத்தினத்தின் டச்’ என்பது இருக்கும். அது மிஸ் ஆனதால், மணி ஃபேனாக ஏமாற்றம்!

5. ஜூங்கா / ஒ.ந.நா.பா.சொல்றேன் / சீதக்காதி :

சில முன்னணி ஹீரோக்களை கவிழ்க்க, எதிர்குரூப் நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கும். ஆனால்விஜய் சேதுபதி விஷயத்தில் அந்த கஷ்டமே வேண்டாம்.

‘கஷ்டப்பட்டப்போ ஃப்ரீயா டீ கொடுத்த டீ மாஸ்டர், சீனு வீட்டுக்கு வழி சொன்னவர், நட்புக்காக’ என்று அவர் செய்கிற சில படங்களே அவருக்கு வினையாக முடியும். அவரது நல்ல மனதை மிஸ் யூஸ் செய்கிறார்களே என்ற வருத்தம் தான் இத்தகைய படங்களைப் பார்க்கும்போது தோணும். விசே மேல் இருக்கும் அன்பினால், ரம்மி காலத்தில் இருந்து நமக்கு இதே பாடு தான். இந்த வருட கோட்டாவிற்கு, இந்த மூன்று படங்கள்.

முதல் இரண்டு படங்கள் தோற்றதில் பிரச்சினையில்லை. சீதக்காதி ஜெயித்திருக்க வேண்டிய படம். இரண்டு மணி நேரத்தில் கதை சொல்லியிருந்தால் படம் தப்பித்திருக்கும். ஜவ்வாக இழுத்துக் கெடுத்துவிட்டார்கள். ஹிட் மூவியான செ.சி.வானம் & இந்த வருட மெகா ஹிட் 96 என்று இனிமையாக முடிந்திருக்க வேண்டிய வருஷம்......!

6. சீமராஜா :

’விஜய் மார்க்கெட்டைப் பிடித்துவிட்டார். அடுத்த இ.தளபதி இவர் தான்’ என்று சிவகார்த்திகேயனுக்கு வெற்று பில்டப் கொடுப்பதற்காகவே எடுக்கப்பட்ட படம். ஓப்பனிங் சீன் & சாங்கில் ஆரம்பித்து, எவ்வளவு முடியுமோ அவ்வளவு வெறுப்பேற்றி அனுப்பி வைத்தார்கள்.

தேவையே இல்லாத ராஜா ஃப்ளாஷ்பேக், சிரிப்பே வராத சூரியின் காமெடி, மச்சக்கன்னி தவிர தேறாத இமானின் இசை என்று ஒரு படம் தோற்பதற்கான அத்தனை அம்சங்களும் இருந்தன. சுறா, அஞ்சான், விவேகம் வரிசையில் சிவாவிற்கு சீமராஜா.

7. போனஸ் :

இந்த வருடம் எச்சரிக்கையாகவே தியேட்டரை அணுகியதால், சர்க்கார் பார்க்கவில்லை. படம் ரிலீஸ் ஆகும் முன்பே, பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்த படம் சர்க்கார்.

’ரிசர்வேசனால் தான் இந்தியா முன்னேறலை’என்று வசனம் வைக்கும் ‘சொந்தக்கதை மன்னன்’ முருகதாஸ், இயக்குநர். ’திராவிட இயக்க வரலாற்றை கலைஞர் இல்லாமலேயே எழுதிவிட முடியும். மக்கள்நலத் திட்டங்கள் எதுவும் கலைஞர் கொண்டு வந்ததில்லை’ என்று எழுதி வரும் ஜெயமோகனின் பங்களிப்பு, ரஜினி ஸ்டைலில் போலி அரசியல் செய்யும் ஹீரோ விஜய், ‘ஏடிஎம்கே காரங்க ஏன் டென்சன் ஆகுறாங்க? வில்லன் கேரக்டர் கலைஞரைத் தானே குறிப்பிடுது’என்று விளக்கம் சொன்ன வில்லன் நடிகர் பழ.கருப்பையா, அதைக் கேட்டு புளகாகிதம் அடைந்த அதே கலைஞரின் பேரப்பிள்ளைகளான சன் பிக்சர்ஸ், கூடவே கதைத் திருட்டு - இப்படி ஒரு காம்போ.

இவர்கள் சேர்ந்து நமக்கு அரசியல் பாடம் எடுத்தால், அது எவ்வளவு கண்றாவியாக இருக்கும் என்பதை தியேட்டருக்குப் போய்த்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. எனவே சர்க்காரைப் புறக்கணித்தேன்.

இப்போதும் ஜெயமோகன் என் விருப்பத்திற்குரிய இலக்கியவாதி. ஆனாலும் ஒரு இலக்கியவாதி எல்லா விஷயத்திலும் அறிவுடனும் நேர்மையுடனும் இருக்க வேண்டியதில்லை என்பதை இந்த வருடம் அவர் நிரூபித்தார். பெர்சனலாக எனக்கு அதில் பெரும் வருத்தம். ‘எனது இயல்புக்கு ஒத்துவரும் படங்களிலேயே பணி செய்கிறேன்’ என்று சினிமாவில் வேலை செய்ய ஆரம்பித்தவர், ஸ்டார் ஹோட்டல் சுகவாசத்திற்கு சோரம் போனது பெரும் சோகம்.

கதைத் திருட்டு என்பது காலம் காலமாக தமிழ் சினிமாவில் நடைபெறும் விஷயம் தான். ஒரு உதவி இயக்குநரின் தோள்தடவி, ‘என்னப்பா கதை வச்சிருக்கிறே?’ என்று கேட்டு, அதைத் தானே எடுத்த பெரிய ஆட்கள் இங்கே உண்டு. அதை வேறு யாரிடமாவது சொல்லி எடுக்க வைப்பவர்களும் இங்கே உண்டு.

ஏற்கனவே வறுமையில் உழலும் உதவி இயக்குநர்களால் ஒன்றுமே செய்யமுடிந்ததில்லை. இந்த சூழலில் தான் பாக்கியராஜ் அவர்களின் நிலைப்பாடு, பெரும் ஆதரவைப் பெற்றது. அதற்குக் கிடைத்த ஆதரவும் முருகதாஸிற்கு விழுந்த தர்ம அடியும், பல்லாண்டுக் கோபத்தின் வெளிப்பாடு.
ஆனால் அறத்தின் அத்தாரிட்டியான ஜெயமோகனால், ஒரு இடத்தில்கூட இதைக் குறிப்பிடமுடியவில்லை. ’ஜெயிக்க முடியாத கோழைகளின் கூப்பாடு, என் வெற்றியைப் பார்த்து வயித்தெரிச்சல்’ என்றெல்லாம் அருவருப்பாக எழுதிக்கொண்டே போனார்.

நமது சட்டப்படி கதைக்கருவிற்கு காப்பிரைட் கிடையாது.அதனால் தான் இந்த அயோக்கியர்கள் தைரியமாகத் திருடுகிறார்கள். ஜெயமோகன் அதையே ஒரு நியாயமாக வைத்து ‘கதைக்கருவிற்கு காப்பிரைட் கிடையாதே, அப்புறம் ஏன் கூப்பாடு?’ என்று எகத்தாளமாகக் கேட்கும் அளவிற்கு தரமிறங்கினார்.
இந்த வருடத்தின் மோசமான அறவீழ்ச்சி விருதினை ஜெயமோகனுக்குக் கொடுக்கலாம்!
மேலும் வாசிக்க... "2018 - எதிர்பார்த்து ஏமாந்த படங்கள்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Monday, December 17, 2018

விஜய் சேதுபதி-25 : ’என்ன ஆச்சு?’ - மலரும் நினைவுகள்


2010-ல் தென்மேற்குப் பருவக்காற்று மூலம் ஹீரோவாக அவதாரமெடுத்த விஜய் சேதுபதி, வெற்றிகரமாக 25ஆம் படமாக சீதக்காதியை இந்த வாரம் ரிலீஸ் செய்கிறார். எவ்விதப் பின்புலமும் இல்லாமல், சிறுசிறு வேடங்களில் ஆரம்பித்து,இன்றைக்கு மக்கள் செல்வனாக வெற்றிவாகை சூடியிருக்கும் விஜய் சேதுபதியின் பயணத்தை கொஞ்சம் திரும்பிப்பார்ப்போம்.

புதுப்பேட்டை, நான் மகான் அல்ல போன்ற ஆரம்ப காலப் படங்களில் துணைநடிகராக ஒரு ஓரத்தில் நிற்பதில் ஆரம்பித்தது அவரின் திரைப்பட வாழ்க்கை. 2004 முதல் 2010வரை சினிமாவில் கொட்டிக்கிடக்கும் உதிரிகளில் ஒன்றாகவே அவரது காலம் கடந்தது. ஆனாலும் அந்த காலகட்டத்தில் ஷார்ட் ஃபிலிம்களிலும் நடித்துக்கொண்ட்டிருந்தார்.

அதன்மூலம் தன்னை கூர்தீட்டிக்கொண்டதோடு, குறும்பட அலையில் ஒரு அங்கமாகவும் ஆனார். குறும்பட வட்டாரங்களில் தெரிந்த முகமாகவும் ஆனார். விளைவு, தென்மேற்குப் பருவக்காற்று படத்திற்கு ஹீரோவாக பரிந்துரைக்கப்பட்டார்.

சீனு.ராமசாமியும் இவருக்குள் இருக்கும் கலைஞனைக் கண்டுகொள்ள, ஹீரோவாக நமக்கு அறிமுகமானார் விஜய் சேதுபதி. ஆனாலும் இப்படி ஒரு படம் ரிலீஸ் ஆனதே பெரும்பாலானோர்க்குத் தெரியாது. படம் தேசியவிருது பெற்றபோது தான், படம் பற்றிய சிறிய பேச்சு எழுந்தது. ஹீரோவாக நடித்த படம் கமர்சியலாக ஊத்திக்கொள்ள, சுந்தரபாண்டியனில் வில்லன் வேடம்,வர்ணத்தில் முத்து கேரடர் என்று மீண்டும் போராட்ட வாழ்க்கை.

2012-ல் தமிழ் சினிமாவில் எழுந்தது, குறும்பட கலைஞர்களின் புதிய அலை. பீட்சா எனும் அணுகுண்டு, தமிழ்சினிமாவின் மத்தியில் விழுந்தது. ஏதோ சாதாரணப் படம் என்று உள்ளே நுழைந்தவர்களை உண்மையிலேயே மிரட்டித் துவைத்தது படம். கார்த்திக் சுப்புராஜ், சி.வி.குமார், சந்தோஷ் நாராயணன் போன்றோருடன் விஜய் சேதுபதி எனும் ‘நடிகனை’யும் பீட்சா எல்லாப்பக்கமும் கொண்டுசேர்த்தது.

அதே ஆண்டில் அடுத்து வந்த நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் & சூதுகவ்வும் படமும் சூப்பர்ஹிட் ஆக, ஹாட்ரிக் நாயகனாக ஆனார் விஜய் சேதுபதி. மூன்று வெற்றிப்படங்கள், மூன்றிலும் வெவ்வேறு கதாபாத்திரங்கள். ‘என்ன ஆச்சு?’ எனும் ஒரே கேள்வியை முக்கால்வாசிப்படம்வரை திரும்பத் திரும்பக் கேட்டுகொண்டே இருப்பது ரிஸ்க்கான விஷயம்.அதற்கு விசே கொடுத்த மாடுலேசனும், கைவிரல்களின் நடனமும் அந்த வசனம் வரும்போதெல்லாம் கைதட்ட வைத்தன.

சூதுகவ்வும் படம் இன்னொரு வகையான அதகள அனுபவம். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத, தமிழில் அரிதாக வெல்லும் ப்ளாக் ஹ்யூமர் மூவி. இன்றைய விஜய் சேதுபதியின் ஆரம்பம், அந்த தாஸ் கேரக்டர் என்று சொல்லலாம். அதை முழுமை செய்த படம், இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.

அமைதியானவன், சாமானியன், கூச்சசுபாவம் கொண்டவன் போன்ற சொந்த இயல்புகளைக் கொண்ட கேரக்டர்களையே செய்துவந்த விஜய் சேதுபதியை உடைத்து, இன்றைய கலகலப்பான, ‘நாட்டி பாய்’விஜய் சேதுபதியாக மாற்றிய படங்கள் என்று சூதுகவ்வும் & இ.ஆ.பாலகுமாராவைச் சொல்லலாம்.

ஆனாலும் இதை விஜய் சேதுபதி அப்போதே புரிந்துகொண்டார் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அடுத்து 2014 & 2015-ல் வந்த படங்களில் இந்த மேஜிக் தொலைந்து போயிருந்தது. ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், வன்மம் (அய்யகோ!!) போன்ற படங்களில் எல்லாம் மீண்டும் பழைய விஜய் சேதுபதியே இருந்தார். இடையில் புறம்போக்கு, ஆரஞ்சுமிட்டாய் போன்ற சீரியஸ் படங்களும் நல்ல நடிகர் என்ற பெயரைக் கொடுத்தாலும் கமர்சியலாக எல்லாமே தோல்விப்படங்கள் தான்.

2012-ல் கிடைத்த ஹாட்ரிக் வெற்றி வெறுமனே அதிர்ஷ்டத்தில் கிடைத்த வெற்றி என்று பேச்சு எழுந்தது. இந்த மோசமான காலட்டத்தில் இருந்து, அவர் மீண்டது நானும் ரவுடி தான் மூலம். மீண்டும் ‘வெட்கங் கெட்ட நாட்டி பாய்’ அவதாரம். ரசிகர்கள் தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று அவரும், அவரிடம் என்ன எதிர்பார்க்கலாம் என்று ரசிகர்களும் புரிந்துகொண்ட டர்னிங் பாயிண்ட் என்று நானும் ரவுடி தானைச் சொல்லலாம். மீண்டும் வெற்றிப்பட நாயகனாக அவரை அது ஆக்கியது.

அதன்பிறகு, எத்தனை நடிகர்கள் இருந்தாலும் ஒரு சீனை தனதாக ஆக்கிக்கொள்ளும் வித்தை மேஜிக் அதன்பிறகு எளிதாக அவருக்கு கைகூடி வந்தது. சின்ன ஒன்லைனில் தியேட்டரை தெறிக்கவிடுவது, சட்டென்று எதிர்பாராத ஒன்றை செய்துவிடுவது, ஆக்சனில் மட்டுமல்லாமல் ரியாக்சனிலும் சரியான பீட்டில் எக்ஸ்பிரசன்ஸ் கொடுப்பது, ஒரு கேரக்டர் அந்த இடத்தில் என்ன செய்யும் என்பதை மனநிலை முதல் பாடி லாங்குவேஜ்வரை கணிப்பது போன்றவை விஜய் சேதுபதி மேஜிக்கின் அங்கங்கள்.

முறைக்காத, சிரிப்பு வருது - சேதுபதி
‘அவளும் இருந்தா..நானும் இருந்தேன்’ - கா.க.போ
எஸ்.ஜே.சூர்யா துப்பாக்கியை எடுத்ததும், கையில் இருப்பதை கீழே போட்டு, தளரும் கிளைமாக்ஸ் - இறைவி
ஒரே ஒரு ஓட்டை வடையுடன், முகம் காட்டாமலேயே தெறிக்க விட்ட ஓப்பனிங் - விக்ரம் வேதா
என நான் ரசித்த விசே மொமெண்ட்ஸை சொல்லிக்கொண்டே போகலாம்.

செக்கச் சிவந்த வானத்தில் அத்தனை ஸ்டார்ஸ் இருந்தும், தியேட்டரில் கைதட்டல்களை அள்ளியது விஜய் சேதுபதி தான். இத்தனைக்கும் எல்லாப் பக்கமும் ஆமாம் போட்டுக்கொண்டே போகிற கேரக்டர். அடுத்து வந்த 96 பற்றிச் சொல்லவே வேண்டாம். முழுக்க முழுக்க, நடிப்பாலேயே வெற்றி பெற்ற படம் அது. அந்த படத்தை ரீமேக் செய்யலாம்.ஆனால் விசே-த்ரிஷா பெர்ஃபார்மஸில் இருந்த கெமிஸ்ட்ரியை ரீமேக் செய்வது அவ்வளவு எளிது கிடையாது.

விஜய் சேதுபதி இன்றைக்கு மக்களால் மட்டுமல்லாமல் இண்டஸ்ட்ரியிலும் கொண்டாடப்படுவதற்குக் காரணம், நடிப்புத் திறமை மட்டுமே கிடையாது. அலட்டல் இல்லாத நேர்மையான பேச்சு, இன்னும் பழசை மறக்காத தன்மை, சேரன் போன்ற சம்பந்தமில்லாத மனிதருக்கும் தோள்கொடுக்கும் நட்புணர்வு என்று நிறையச் சொல்லலாம்.

நடிப்பையும் தாண்டி, எனக்கு பெர்சனலாக விஜய் சேதுபதியைப் பிடிக்க இரண்டு காரணங்கள் தான்.

1. அதிக படங்களில் நடிப்பது :

2016-ல் ஆறு படங்கள், 2017-ல் 4 படங்கள், 2018-ல் 6 படங்கள். என்னைப் பொறுத்தவரை இதுவே குறைவு தான். சென்ற தலைமுறையில் 10 படம், 18 படமெல்லாம் நடித்திருக்கிறார்கள். இன்றைய தலைமுறை, எல்லாத் துறையிலும், கொஞ்சம் உழைப்பு-நிறையப் பணம் என்று சொகுசாக வாழ விரும்புகிறது. 40 வயதில் இப்படி விஜய் சேதுபதி ஓடி, ஓடி உழைக்கவேண்டிய அவசியம் இல்லை. வெற்று பில்டப்பில் சம்பளத்தை ஏற்றிவிட்டு, வருடம் இரண்டு படம்செய்தால் போதும். அது அவரால் முடியும். ஆனாலும் அவர் அதைச் செய்வதில்லை.

ஒரு ஹீரோ படங்களைக் குறைக்கும்போது வரும் சிக்கல் என்னவென்றால், புதிய இயக்குநர்கள் அறிமுகமாவது கடினமான விஷயமாக ஆகும். அது தமிழ் சினிமாவை தேக்கத்தில் கொண்டுபோய் நிறுத்தும். மேலும், ஹீரோவுக்கு டிமாண்ட் அதிகரிக்கும்போது,ஒரு கதையை ஹீரோவை மட்டுமே திருப்தி செய்ய உருவாக்க வேண்டியதாகிறது. கடந்த மூன்று வருடத்தில் எந்தவொரு வெற்றியும் கொடுக்காத ஹீரோகூட ‘படத்தில் எல்லா சீனிலும் நான் இருக்கணும். முக்கியமான எல்லாவற்றையும் நானே செய்யணும்’ என்று சொல்லும் அவலம் இன்னும் நிலவுகிறது. அதனால் ஹீரோ கால்ஷீட்டிற்காக கதையை வளைத்து அட்ஜஸ்ட் செய்து தோற்கும் புதியவர்கள் இப்போது அநேகம்.

ஒரு ஹீரோ நான்கு படங்கள் செய்கிறார் என்றால், இரண்டு படங்களை புதியவர்களுக்கு கொடுக்க முடியும். ஆறுபடங்கள் செய்தால், இரண்டு ’நல்ல’ படங்களை கமர்சியல் வெற்றி எதிர்பாராமல் நடிக்க முடியும். அதனால் தான், விஜய் சேதுபதி ஓடி, ஓடி உழைப்பது ஒருவகையில் தமிழ் சினிமா வளர்ச்சிக்கு அவரின் சேவை என்கிறேன். (ஆனால், அவர் தனது படங்களின் ரிலீஸை கொஞ்சம் முறைப்படுத்த வேண்டும்.)

2. ஹீரோ இமேஜை உடைத்தது :

ஹீரோ இமேஜை விட ஒரு நல்ல படத்தில் தான் இருப்பது தான் முக்கியம் என்ற விஜய் சேதுபதியின் புரிதல் தான், அவரது வேகமான வளர்ச்சிக்கு முக்கியக் காரணம். முன்பெல்லாம் கதை விவாதத்தில் ஹீரோ என்றாலே 25 வயது வாலிபன் தான். அதற்கு மேலே போய்விட முடியாது, ஹீரோ கால்ஷீட் கிடைக்காது.

ஒரு ஹீரோ நரைத்தமுடியுடன் நடித்தால், தமிழ்சினிமாவே ‘பார்த்தீரா பராக்கிரமத்தை!’ என்று காணாததைக் கண்டதாக அலறும். ஆனால் இன்றைக்கு நாற்பது வயது மனிதனின் கதையையும் சொல்ல முடிகிறது, எழுபது வயது மனிதனின் கதையையும் சொல்ல முடிகிறது. நல்ல கதையும் சுவாரஸ்யமான திரைக்கதையுமே முக்கியம் எனும் தெளிவு பெரும்பாலான ஹீரோக்களுக்கு வந்திருக்கிறது.

மக்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்று ஹீரோக்களும், தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் இப்போது நம்புகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் ‘நான் நாற்பது வயது ஆளாக நடித்திருக்கிறேன்’என்பது பெருமையான விஷயமாக ஆகியிருக்கிறது. டாப் மசாலா ஸ்டார்ஸ் கூட, ஒரு குழந்தைக்கு அப்பாவாக நடிப்பது சகஜமாகியிருக்கிறது. இவையெல்லாம் 2010க்குப் பின் வந்த மாற்றங்கள். இந்த மாற்றத்திற்கு விஜய் சேதுபதியின் வெற்றியும் முக்கியக்காரணம்.

அஞ்சு பாட்டு, நாலு ஃபைட் என்று மசாலாவிற்குள் சிக்காமலேயே, முண்ணனி நட்சத்திரமாக உருவாவது சாதாரணம் அல்ல. அதை விஜய் சேதுபதி சாதித்துக்காட்டியிருக்கிறார். சீதக்காதியை அடுத்து, சூப்பர் டீலக்ஸும், பேட்டயும் வரிசையில் இருக்கின்றன. அந்த மனிதர் இப்போதும் நல்ல படங்களைத் தர, ஓடிக்கொண்டே இருக்கிறார்.


மேலும் வாசிக்க... "விஜய் சேதுபதி-25 : ’என்ன ஆச்சு?’ - மலரும் நினைவுகள்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.