எதனாலோ தெரியாது, சின்ன வயசுல எனக்கு சிக்கன் குழம்பு ஒத்துக்கொள்வதேயில்லை. சாப்பிட்ட அடுத்த நாள் வயித்தைக் கலக்கிடும். அதுக்காக மனுசன் சிக்கன் சாப்பிடாமலா இருக்க முடியும்? அதனால சனிக்கிழமை மட்டுமே கறி எடுக்கணும் என்று வீட்டில் அன்புக்கட்டளை போட்டிருந்தேன். அப்போத் தானே ஞாயிற்றுக்கிழமை க்ளியர் பண்ணிட்டு, திங்க்கக்கிழமை ஸ்கூலுக்குப் போக முடியும்?
அப்படியான ஒரு ஞாயிற்றுக்கிழமையில் அவசரமாக கண்மாய்க்கு ஓடிக்கொண்டிருந்தேன். கண்மாய்க்கரையில் நான் போய்க்கொண்டிருக்கும்போது ‘ஏலே. செங்கோவி’ன்னு ஒரு சத்தம். யாருன்னு பார்த்தால், நம்ம மச்சான் ஒருத்தர். பக்கத்துல இருந்த பொட்டல் காட்டில் இருந்து கூப்பிட்டார். சாயந்திரமானா ஸ்கூல்/காலேஜ்-ல இருந்து வந்ததும் அந்த காட்டுக்குத் தான் படிக்கப்போவோம். பக்கத்துலேயே ஒரு தென்னந்தோப்பும் உண்டு. வெயில் அடிச்சா தோப்பு, இல்லேன்னா பொட்டல் வெளின்னு படிக்க ரம்மியமான இடம். அவரும் அப்போ கையில ஒரு புக்கோட நின்னாரு. பக்கத்துல ஒரு நாய் வேற காவலுக்கு நிற்குற மாதிரி நின்னுச்சு.
ரம்மியத்தை ரசிக்கிற நிலைமைல நாம இல்லையே..அதனால ‘போய்யா’ன்னுட்டு கண்மாய்க்குள்ளே இறங்கிட்டேன்.
எங்கூர்ல படிச்சவங்க கம்மி. அந்த மச்சான், அந்த கம்மிகள்ல ஒருத்தர். அப்போ காலேஜ்ல படிச்சுக்க்கிட்டிருந்தார். ரொம்ப நல்ல மனுசன். ஏதாவது சீன் புக் கிடைச்சா மனப்பாடம் ஆகுறவரைக்கும் படிச்சுட்டு, ’இனிமே இதனால ஒரு எஃபக்ட்டும் இல்லே’-ங்கிற ஸ்டேஜ் வந்ததும் என்கிட்டக் கொடுத்துடுவாரு. அப்பேர்ப்பட்ட நல்ல மனுசன்கூட நின்னு பேச முடியலியேன்னு கொஞ்சம் வருத்தம் தான்.இருந்தாலும் என்ன செய்ய..
அரை மணி நேரம் கழிச்சு நான் திரும்பி வரும்போதும் ‘செங்கோவி...வா..வா’ன்னு கூப்பிட்டாரு. கைல இருக்கிற புக்கை வேற காட்டுனாரு. ’ஆஹா..புதுசா ஏதோ வந்திருக்கு போல..’ன்னு ஆவலாய்ட்டேன். ஆக்சுவலா முதமுதல்ல அவர் புக் கொடுத்தப்போ நான் வாங்க மாட்டேன்னுட்டேன். ஏன்னா அவருக்கு ரெண்டு தங்கச்சிங்க உண்டு. ரெண்டுல ஒன்னையாவது டாவடிக்கலாமான்னு ஒரு யோசனை நமக்கிருந்துச்சு. ‘இப்போ புக்கை வாங்கிப் படிச்சுட்டு, நாளைக்கு பொண்ணு கேட்டுப் போனா ‘ஏ..இவன் அயோக்க்யப்பயலாச்சே..இவனுக்கு என் தங்கச்சியைக் கொடுக்க மாட்டேன்’ன்னு சொல்லிட்டாருன்னா என்னா பண்றது-ங்கிற தொலைநோக்குப் பார்வையோட, நான் மறுத்தேன்.
சீன் புக் வாங்குறது ஒருவகையான கஷ்டம்னா, படிச்சு முடிச்சப்புறம் அதை யார்கிட்டயும் மாட்டிக்காம டிஸ்போஸ் பண்றது வேறுவகையான கஷ்டம். பொட்டல் காட்டுல எரிச்சு, பக்கத்துல வைக்கப்படப்பு ஏதாவது தீப்பிடிச்சுட்டா வம்பு..கிழிச்சுப் போட மனசு வராது.வந்து கிழிச்சாலும் ஒரு சின்னத் துணுக்குகூட ‘பருத்த..’ என்று காட்டிக்கொடுத்துவிடும் அபாயமும் உண்டு. நான் ஒரு கல்லுளி மங்கன் என்பதால், யாரிடமும் சொல்ல மாட்டேன் என்ற நம்பிக்கையில் மச்சான் என்னைப் பிடித்துக்கொண்டார். நானும் ’கல்வியா? காதலா?’ என்று தீர யோசித்து கல்வியே முக்கியம் என்ற முடிவுடன், அவரிடமிருந்து வாழ்க்கைக்கலவி புத்தகங்களை வாங்கி படிக்க ஆரம்பிச்சேன்.
அதனால இப்பவும் ஆசையோட மச்சான்கிட்டப் போனா, பக்கத்துல இருந்த நாய் (நாயை நாயின்னு சொல்லலாமா? இதுக்கு வேற மிருக வதைன்னு பஞ்சாயத்தை கூட்டிடாதீங்கப்பா..) என் மேல பாய்ஞ்சு வந்திடுச்சு. நான் பதறிப்போய் நின்னா, என் காலடில கம்முன்னு உட்கார்ந்துக்கிச்சு. ‘யோவ், என்னய்யா இது?’ன்னேன். அதுக்கு அவரு ‘ அதான் மாப்ளை எனக்கும் புரியலை..நான் படிப்போம்னு வந்தேன். இது வந்து பக்கத்துல உட்கார்துக்கிச்சு. ஒரு அடி எடுத்து வச்சாலும் கடிக்க வருது. ஒன்றரை மணி நேரமா இப்படியே நின்னுக்கிட்டிருக்கேன், தெரியுமா? அதனால தான் உன்னைக் கூப்பிட்டேன்’ன்னார்.
அடப்பாவி மனுசா..புக்கை வேற காட்டினியேன்னு நினைச்சுக்கிட்டிருக்கும்போது, ‘மாப்ளே, நீ இப்படியே இரு. நான் போயி யாரையாவது கூட்டிட்டு வர்றேன்’ன்னு கிளம்புனார். அவர் ஒரு அடி எடுத்து வைக்கவும் என் காலடில இருந்த நாய் அவரைப் பார்த்து பாய்ஞ்சது. இப்போ அவர் காலடில உட்கார்ந்துக்கிச்சு. என்னடா இது சோதனை-ன்னு அய்யனார் சிலை மாதிரி அங்கேயே நிக்கிறோம். இப்படியே அரை மணி நேரம் போச்சு. யாரும் வர்ற மாதிரியும் தெரியலை.
அப்போத் தான் எனக்கு ஒரு ஐடியா தோணுச்சு. நான் ஒரு அடி எடுத்து வச்சேன். நாய் என்கிட்ட ஓடி வந்து உட்கார்ந்துக்கிச்சு. ‘மச்சான், இப்போ நீயும் ஒரு அடி எடுத்து வையி..நாய் உன்கிட்ட வரும். இப்படியே அடிமேல் அடி வச்சு கண்மாய்க்கரைப் பக்கம் போயிடுவோம்’ன்னேன். அவரும் ஒரு அடி எடுத்து வைக்க, நாய் ஓட, அப்புறம் நான் ஒரு அடி எடுத்து வைக்கன்னு ஆளுக்கு நாலு அடி நடந்திருப்போம். அதுக்கே அரைமணி நேரமுன்னு ஒரு மணி நேரம் ஆகிப்போச்சு.
இப்போ சிக்கன் தன்னோட ‘மறு சுழற்சி’யை என் வயித்துகுள்ள ஆரம்பிச்சிருந்துச்சு. ’அய்யய்யோ..மச்சான், வயித்தைக் கலக்குது’ன்னேன். ‘எனக்கும்தான் மாப்ளே’ன்னாரு. ‘யோவ், உனக்கு கலக்கிறது வேற..எனக்குக் கலக்குறது வேற’ன்னேன். ‘அது எப்படி மாப்ளே?’ன்னாரு. உஸ்ஸ்..மறுபடியும் ஒரு சுழற்சி..பேசாம இருந்தா கொஞ்சம் மட்டுப்படும்போல தோணுச்சு. நான் ஒன்னும் சொல்லாம நின்னேன். கொஞ்ச நேரத்துல அந்த நாய் முகத்துல ஒரு ஒளிவட்டம் தெரிஞ்ச்சு. என்னடான்னு திரும்பிப் பார்த்தா, கூட்டமா நாய்ங்க வருது. நமக்கோ வயித்துக்குள்ள ட்ரெயினே ஓடுது. செத்தோம்டான்னு நினைக்கும்போது தான், அந்த அதிசயம் நடந்துச்சு.
அந்த நாய்ங்க எங்களை கிராஸ் பண்ணி, எங்கேயோ ஓட ஆரம்பிச்சதுங்க. அந்தக்கூட்டத்துல கொழுக்மொழுக்னு குஷ்பூ மாதிரி ஒரு பொட்டை நாயும் இருந்துச்சு. அதைப் பார்த்து நம்ம நாய் புக் படிக்காமலேயே மையல் கொண்டுச்சு. அந்த குஷ்பூவைப் பார்த்து எடுத்தாரு பாருங்க ஓட்டம்..அவரு குஷ்பூ பின்னாடி ஓட, மச்சான் வீட்டைப் பார்த்து ஓட, நான் கண்மாயைப் பார்த்து ஓட-ன்னு செம ரகளையா இருந்துச்சு அந்த சீனு!
அப்புறம் ரெண்டு மாசம் கழிச்சு, தம்பி ஒருத்தன்கிட்ட இதைச் சொன்னப்போ, அவன் ஹாஹான்னு சிரிச்சுக்கிட்டே நாய் ஏன் அப்படிப் பண்ணுச்சுன்னு சொன்னான். ஒருநாளு இவன் தன் கோஷ்டியோட அங்க படிக்கப் போயிருக்கான். அங்க அந்த நாயி ‘அந்த கொழுக் மொழுக்’கூட எதிரும்புதிருமா சந்தோசமா இருந்திருக்கு. இவனுக வழக்கம்போல கல்லையெடுத்து விரட்டியிருக்காங்க. நாயும் கத்திக்கிட்டே ஓடியிருக்குங்க. நாய்க்கு ஞாபக சக்தி உண்டா?-ன்னு எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு.
அதுக்கு அப்புறம் அந்த இளஞ்சோடிகளைக் காப்பத்தும் பூந்தோட்டக் காவல்காரனா ஆனேன். பாவம்..அதுகளே ஒருத்தர் முகத்தை இனொருத்தர் பார்க்க முடியாதபடி ஆண்டவன் ஒரு சாபத்தைக் கொடுத்திருக்கான்..இதுல இவங்க வேற இம்சை பண்ணா, அதுங்க என்ன செய்யும்? அதனால யாராவது அந்த ஜோடிங்க ஜல்சா பண்றதை உத்துப்பார்த்தாலே ‘ஏலே, என்னலே இங்க வேடிக்கை..ஓடுங்களே..இந்த பொசிசனைக் கத்துக்கிட்டு என்னலே பண்ணப்போறீங்க..அது வேஸ்ட்டுலே’-ன்னு சொல்லி விரட்டி விட்டுட்டுவேன்..இப்போ ஒலகம்பூரா வாழுற தமிழ் ஜாம்பவான்களை நான் கேட்டுக்கிறது என்னன்னா..
பூக்களைத் தான் பறிக்காதீங்க..
நாய்களைத் தான் பிரிக்காதீங்க!
பூக்களைத் தான் பறிக்காதீங்க..
ReplyDeleteநாய்களைத் தான் பிரிக்காதீங்க!/////
ஹா... ஹா.... ஆக... நாயை கல்லால் அடிக்க கூடாது. தொரத்தக் கூடாது
அருமையாக எழுதியுள்ளீர் நல்வாழ்த்து.
ReplyDelete‘ஏ..இவன் அயோக்க்யப்பயலாச்சே..இவனுக்கு என் தங்கச்சியைக் கொடுக்க மாட்டேன்’ன்னு சொல்லிட்டாருன்னா என்னா பண்றது-ங்கிற தொலைநோக்குப் பார்வையோட, நான் மறுத்தேன்.//:)
ReplyDeleteஅடுத்து பன்னியை பிரித்த கதை வருமா?
ReplyDelete"""ஏகப்பட்டது""" இருக்கும் போலிருக்கே.....!!!!!!!!!!!!
ReplyDeleteஇனி பன்னிகளைதான் பிரிக்காதீங்க வரும் ஹி ஹி...
ReplyDeleteஎன்ன அறிவுரை!
ReplyDeleteஹி.ஹி.ஹி.ஹி.................
ReplyDeleteபடிக்கும் போது சிரிப்பு அதுவா வருது செங்கோவி...
ReplyDeleteநாய் பொழப்பு சார் அப்படின்னு இனி யாராவது சொல்லட்டும் குமட்டுல குத்தரேன்!
ReplyDelete