Wednesday, December 5, 2012

Codes & Standards (குழாயியல்_பாகம் 4)


3. சட்டத்தொகுப்புகளும் நியமங்களும் திட்ட விவரணைகளும் ( Codes- Standards - Specification)

டிஸ்கி : இன்றைய பதிவு, கொஞ்சம் தியரி தான்..இனி அடிக்கடி ASME/API போன்ற நியமங்கள் பற்றி அடிக்கடி பார்ப்போம் என்பதால், அதைப் பற்றிய அடிப்படைப் புரிதலுக்காக இந்தப் பதிவு.

பொறியியலில் எந்தவொரு செயலினைச் செய்வதற்கும், வரையறுக்கப்பட்ட செயல்முறைகள் உள்ளன. அவை காலம் காலமாக பொறியியல் துறையில் நாம் அடைந்த வெற்றி/தோல்விகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவையாகும். சில அரசு நிறுவனங்கள் மற்றும் சில தனியார் நிறுவனங்கள், பொறியியலில் ஒவ்வொரு துறைக்கும் தெளிவான செயல்முறைகளை தொகுத்து வைத்துள்ளன. அந்த வகையில், குழாயியல் துறைக்கும் சில நியமங்கள், ASME, API போன்ற நிறுவனங்களால் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றி சுருக்கமாக இங்கே காண்போம்.

சட்டத்தொகுப்புகளும் (Codes) நியமங்களும் (Standards) :

Codes  எனப்படும் சட்டத்தொகுப்புகள், குழாயியல் டிசைன், கட்டுமானம் போன்றவற்றிற்குத் தேவையான, அடிப்படையான சில வழிமுறைகளைச் சொல்பவையாகும். இவை பொதுவாக குறிப்பிட்டு வரையறுக்காமல் பொதுவான தன்மையுடையவையாக இருக்கும். நியமங்கள் என்பவை தெளிவான வழிமுறைகளுடன் கூடிய, செயல்முறைகள் மற்றும் விதிகளின் தொகுப்பாக இருக்கும்.

உதாரணமாக, ஒரு குழாயானது துருப்பிடித்தலில் இருந்து காக்கப்பட, வண்ணம் பூசப்பட வேண்டும் என்று மட்டுமே சட்டத்தொகுப்பு சொல்லும். நியமம் என்பது அந்த வண்ணப்பூச்சானது, எவ்வளவு தடிமனுக்குப் பூசப்பட வேண்டும், எத்தனை முறை பூசப்பட வேண்டும், என்னென்ன வேதிப்பொருட்களை உள்ளடக்கியதாக, அந்த வண்ணப்பூச்சு இருக்க வேண்டும் என விலாவாரியாக வகுத்துச் சொல்லும்.

ஆனாலும் நடைமுறையில் சட்டத்தொகுப்புகளும், நியமங்களும் தெளிவாகப் பிரித்தறிய முடியாவண்ணமே உள்ளன.

இருப்பினும், ASME. API, BS, IS போன்ற நிறுவனங்களால் தொகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை சட்டத்தொகுப்புகள் என்றும், சேவைப் பயனர்(Client)களின் விதிமுறைத் தொகுப்பை நியமங்கள் என்றும் கொள்ளலாம்.

திட்ட விவரணைகள் (Project Specification):

திட்டம் என்பது குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காக, சேவைப் பயனர்களால் ஆரம்பிக்கப்படும் பெரும்பணி ஆகும். அந்த திட்டத்தை நிறைவேற்ற தெளிவான திட்ட விவரணைகள் சேவைப்பயனர்களால் கொடுக்கப்படும்.

திட்ட விவரணை என்பது கீழ்க்கண்ட விவரங்களை உள்ளடக்கி இருக்கும்:

1. திட்டத்தின் நோக்கமும், செய்யப்பட வேண்டிய காரியங்களையும் உள்ளடக்கும் ஒப்பந்த ஆவணம்.
2. குழாய், குழாய்ப்பட்டை, இணைப்பான்கள், வால்வுகள் உள்ளிட்ட குழாயியலின் பாகங்கள், எந்த உலோகத்தால் செய்யப்பட வேண்டும் என குறிப்பிடும் உலோக விவரணைகள்
3. குழாயியல் கட்டுமானம் சார்ந்த விதிமுறைகள்
4. அவற்றைச் சோதிக்கும் வழிமுறைகள்
5. மேற்கண்டவற்றை விரிவாக எடுத்துரைக்கும் சேவைப் பயனரின் நியமங்கள்

உதாரணமாக, கொள்கலனில் இருந்து இரண்டாவது தொட்டிக்கு தண்ணீரினைக் கொண்டு செல்வது தான் நம் திட்டம் என்றால், அந்த குழாயியல் பாகங்களின் உலோகங்கள் என்ன, பம்ப்பின் கொள்திறம் என்ன, தொட்டியின் கொள்ளளவு என்ன என்பது போன்ற சகல விஷயங்களும் திட்ட விவரணையில் தரப்படும்.

நியம நிறுவனங்கள்:
நாம் குழாயியலில் பயன்படுத்தும் சில நியமங்களை உருவாக்கும் சில நிறுவனங்களின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன:

1. The American Petroleum Institute (API)
2. The American Nataional Standards Institute (ANSI)----இது இப்போது ASME உடன் இணைக்கப்பட்டுவிட்டது.
3. The American Society for Testing and Materials (ASTM)
4. The American Welding Soceity (AWS)
5. The Manufacturers Standardization Soceity of Valves and Fittings (MSS-SP)
6. The American Society of Mechanical Engineers (ASME)
7. Biritish Standards (BS)
8. Indian Standards (IS)
9. DIN standards
10. JIS Standards


ASME நியமங்கள்:

குழாயியலில் அதிகம் பயன்படுத்தப்படுபவை ASME சட்டத்தொகுப்புகள் தான்.கீழே உள்ள நியமங்கள், குழாயியலுக்கு அடிப்படையானவை:


ASME B31.1 : Power Piping (இது மின்நிலையங்களில் பயன்படுகிறது.)

ASME B31.2 : Fuel Gas Piping----(தற்போது உபயோகத்தில் இல்லை. இதற்குப் பதிலாக ANSI Z223.1 பயன்படுத்தப்படுகிறது.)

ASME B31.3 : Process Piping (இது பெட்ரோலிய மற்றும் ரசாயன நிறுவனங்களில் பயன்படுவது.)

ASME B31.4 : Pipeline Transportation Systems for Liquid Hydrocarbons and Other Liquids -- (ஒரு இடத்தில் இருந்து மற்றோர் தொலைதூர இடத்திற்கு அல்லது ஒரு நாட்டில் இருந்து மற்றோர் நாட்டிற்கு பெட்ரோலியம் போன்ற திரவங்களைக் கொண்டு செல்வதற்கான நியமம் இது.)

ASME B31.5 : Refrigeration Piping and Heat Transfer Components

ASME B31.8 : Gas Transmission & Distribution Piping Systems (வாயுப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான குழாயியல் நியமம் இது.)

ASME B31.9 : Building Services Piping B31.9

ASME B31.11 - Slurry Transportation Piping Systems


ஒரு திட்டம் என்ன திரவத்தை, எவ்வாறு கொண்டு செல்லப்போகிறது என்பதைப் பொறுத்து, அதற்குரிய நியமத்தின்படி குழாயியல் வடிவமைக்கப்படுகிறது. பொதுவாக சேவைப்பயனரின் திட்ட விவரணையிலேயே எந்த நியமத்தின்படி நாம் வடிவமைப்பு செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கும்.

(நாங்கள் B31.3, B31.4 & B31.8 மட்டுமே உபயோகிக்கிறோம்.)

அடுத்த பகுதி முதல், குழாயியலின் பாகங்களைப் பற்றிய பதிவுகள் தொடரும்.


டிஸ்கி-2 : சென்ற பதிவில் குழாய்க்கான நியமங்களாக சிலவற்றைக் குறிப்பிட்டிருந்தேன்..அவை:

ASME B36.10M - Welded and Seamless Wrought Steel Pipe
ASME B36.19M - Stainless Steel Pipe


இதே போன்று வரும்பகுதிகளிலும் தொடர்ந்து நியமங்கள் குறிப்பிடப்படும். இவை அனைத்துமே இணையத்தில் இலவசமாக (திருட்டு பிடிஎஃப்-ஆக) கிடைக்கிறது. 

குழாயியல்  படிக்க உண்மையில் ஆர்வம் உள்ளோர், தரவிறக்குங்கள். (காப்பி ரைட் பிரச்சினை காரணமாக இங்கே லின்க் கொடுக்க விரும்பவில்லை.) சும்மா, ஒரு தடவை வாசித்துக்கொள்ளுங்கள். அவை அனைத்தும் மனப்பாடமாக தெரிய வேண்டிய அவசியம் இல்லை.இவை ரெஃபரென்ஸ் டாக்குமெண்ட்ஸ் மட்டுமே. ஆனால் எந்த நியமம், எதற்கு என்று தெரிந்திருப்பது அவசியம். அதை மட்டும் மனப்பாடம் செய்யுங்கள்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

8 comments:

  1. மாலை வணக்கம்,செங்கோவி!வித்தியாசங்கள் புரிகிறது,தொடரட்டும்.

    ReplyDelete
  2. அன்பு செங்கோவி, இந்த ரூல்ஸ் அண்ட் வரைமுறை எனக்கு தெரியாது. ஆணால் எனக்கு தெரிந்தது எல்லாம் Slurry Transportation Piping Systems பைபிங்க்ஸ் மட்டுமே. எனக்கு வேண்டியது எந்த வகையான பைப் மற்றும் இணைபான்கள் என்பது மட்டுமே.

    ReplyDelete
  3. @Yoga.S. வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  4. //siva said...

    அன்பு செங்கோவி, இந்த ரூல்ஸ் அண்ட் வரைமுறை எனக்கு தெரியாது. ஆணால் எனக்கு தெரிந்தது எல்லாம் Slurry Transportation Piping Systems பைபிங்க்ஸ் மட்டுமே. எனக்கு வேண்டியது எந்த வகையான பைப் மற்றும் இணைபான்கள் என்பது மட்டுமே.//

    இந்த ரூல்ஸ் எல்லாமே காம்ன்சென்ஸ் & அனுபவ அடிப்படையில் உருவாக்கப்பட்டவை தான். எனவே அதைப் படிக்காமலேயே நம்மால் ’ரூட்டிங்’ வரைய முடியும் என்பது உண்மை தான்.

    ஆனால் குழாய் தடிமனைக் கணக்கிடும் முறைகள், ரேடியோகிராஃபி போன்ற சோதிக்கும் முறைகளின் தேவைகள் போன்றவை நியமத்திற்கு நியமம் மாறுபடுகின்றன.

    அதாவது முழு சிஸ்டத்தை ‘டிசைன்’ செய்ய வேண்டும் என்றால், அதற்குரிய நியமங்களைப் படித்தே ஆகவேண்டும். டிராஃப்ட்டிங் என்றால், ஸ்பெஸிஃபிகேசனே போதும். நியமங்கள் அந்த புராஜக்ட் ஸ்பெஸிஃபிகேசனை உருவாக்குவோருக்கு அவசியம்.

    ReplyDelete
  5. தொடர் அருமையாக செல்கிறது.தொடருங்கள்

    ReplyDelete
  6. நல்லதொரு தொழில் நுட்ப தொடர்! நன்றி!

    ReplyDelete
  7. நல்ல தகவல் .தொடருங்கள்

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.