சமீபகாலமாக தமிழ்சினிமாவின் மேல் அதிகளவு வைக்கப்படும் குற்றச்சாட்டு, காப்பியடித்தல். ஏதாவது ஆங்கிலப் படத்தையோ அல்லது உலகப்படத்தையோ சுட்டு தமிழ்சினிமா எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. இன்று இணைய வளர்ச்சியால் உலக சினிமா என்பது சாமானியருக்கும் எட்டும் விஷயமாக ஆகிவிட்டதாலேயே, மக்களால் குறிப்பாக நம் பதிவர்களால், எந்தப் படம் எங்கிருந்து சுடப்பட்டது என்று எளிதாக கண்டுபிடிக்கவும் முடிகிறது.
இருப்பினும் காப்பிக்கும் இன்ஸ்பிரேஷனுக்கும் ஒத்த சிந்தனைக்கும் இடையே உள்ள வித்தியாசம் புரியாமல் பலரும் விமர்சிக்கும் நிகழ்வும் இங்கே நடக்கிறது.
தமிழ்சினிமாவில் நிகழும் காப்பியடித்தலை இரண்டு வகைகளாகச் சொல்லலாம்.
முதலாவது, ஒரு படத்தை அப்பட்டாமாக (50%க்கு மேல்) காட்சிக்குக் காட்சி சுட்டு எடுப்பது. உதாரணமாக அமீரின் யோகியைச் சொல்லலாம். எவ்வித லஜ்ஜையும் இன்றி, அப்படியே ஜெராக்ஸ் எடுப்பதோடு நில்லாமல், இது தன் சிந்தனையில் உதித்த சரக்கு தான் என்று சாதிக்கும் வல்லமையும் இத்தகைய படைப்பாளிகளுக்கு உண்டு. அதுவே நம்மை கோபத்தின் உச்சிக்குக் கொண்டு செல்கிறது என்றால் மிகையில்லை. இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என்பதிலும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
அடுத்தவகை காப்பியானது, ஒரு திரைப்படத்தின் சில/ஒரு காட்சியை மட்டும் சுட்டு எடுப்பது.
மொத்தத்தில் பல திரைப்படங்களின் காட்சிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக சுட்டு, இணைப்பது. அந்த குறிப்பிட்ட காட்சி, என்னுடைய சிந்தனையில் உதித்தது தான் என்று இயக்குநர் சாதிக்காதவரை, இது சகித்துக்கொள்ளக்கூடிய விஷயமே.(நமது படைப்பாளிகள் காப்பிரைட் பிரச்சினை போன்ற காரணங்களால், மூல திரைப்படத்தை சொல்ல முடியாத சூழல் இருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. )
ஏனென்றால் ஒரு கதை அல்லது நாவல் உருவாக்கத்திற்கும் திரைக்கதைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. ஒரு கேரக்டரின் சிந்தனை என்னவென்பதை நாவலில் சொல்லிவிட முடியும். ஆனால் திரைப்படத்தில் அவ்வாறு மைண்ட் வாய்ஸாக ஓரளவிற்கு மேல் சொல்ல முடியாது. அதற்காகவே சினிமா ஜாம்பவான்களின் படத்தை நம் படைப்பாளிகள் ரெபஃர் செய்கிறார்கள்.
சில சினிமா ஜாம்பவான்கள், திரைக்குறியீடுகள் மூலமாகவே அதைச் சொல்வதைப் பார்த்தால், நம் மக்களும் அதைப் பின்பற்றுவதில் தவறில்லை. எனவே ஒரு உணர்ச்சியை, சூழ்நிலையை நம் சூழலுக்கு ஏற்றாற்போல் காட்டுவதற்கு ஒரு பழைய/உலக திரைப்பட காட்சி உதவுமானால், அதை உபயோகிப்பது பெரிய தவறில்லை தான். உண்மையில் திரைக்கதை/இயக்கம் சொல்லித்தரும் எல்லா நிறுவனங்களிலும், இந்த ரெபஃரன்ஸ் செய்யும் விஷயத்தை கற்றுத் தருகிறார்கள்.
உதாரணமாக விருமாண்டியில் வரும் சிறைக்கலவரக் காட்சியானது ஸ்பார்டகஸ் திரைப்படத்தில் வரும் கலகக்காட்சியின் சாயலைக் கொண்டிருக்கும். கமலஹாசன் திறமையாக அந்தக் காட்சியை பயன்படுத்தியிருப்பார். இவ்வாறு ஓரிரு காட்சிகளை காப்பி செய்ததற்காக, நாம் ஒரு படத்தையே/இயக்குநரையே புறக்கணிப்பது சரியானதாக இருக்காது.
நம் மக்களை பெரிதும் குழப்பும் விஷயம், காப்பிக்கும் இன்ஸ்பிரேசனுக்கும் உள்ள நுண்ணிய வித்தியாசமே. இன்ஸ்பிரேசன் என்பது ஏதேனும் ஒரு கரு அல்லது காட்சி, படைப்பாளி மற்றொரு கதையை உருவாக்க உந்துதலாக இருப்பதே ஆகும்.
விருமாண்டி படத்தின் அடிநாதம், அகிராகுரேசேவாவின் ராஷமானை ஒட்டியிருக்கும். கஜினி படம், மெமென்டோவை தழுவியே இருக்கும். பேங்க் கொள்ளை எனும் கருவை வைத்து ஹாலிவுட்டில் எவ்வளவோ படங்கள் வந்துவிட்டன. இனியும் அவை வரவே செய்யும். அதற்காக 'அய்யோ..இது காப்பி..சுட்டுட்டான்' என்று ஹாலிவுட்டில் யாரும் கூக்குரல் எழுப்பி, படைப்பாளிகளை இம்சிப்பதில்லை. உண்மையில் அத்தகைய பொழுதுபோக்கு கருக்கள் எளிதில் காலாவதியாவதில்லை.
ஆனால் தமிழில் சமீபகாலமாக ஏதேனும் சிறிது ஒற்றுமை தென்பட்டால்கூட, 'அய்யோ திருடன்' என்று கத்தி ஊரைக்கூட்டும் போக்கு அதிகரித்துவருகிறது. இது நிச்சயம் தமிழ்சினிமாவிற்கு,குறிப்பாக வணிக சினிமாவிற்கு நல்லதே அல்ல. காப்பி-இன்ஸ்பிரேசன் என்பது பற்றியாவது நம் மக்களுக்கு கொஞ்சம் புரிதல் இருக்கிறது. ஆனால் 'ஒத்த சிந்தனை' பற்றி எவ்வித புரிதலும் இன்றி சிலர் பேசுவதைப் பார்க்கையில் பரிதாபமாக இருக்கிறது.
ஒரு படைப்பு எவ்வாறு உருவாகிறது, அப்போது படைப்பாளியின்சிந்தனை செயல்படும் முறை என்ன, தன் சிந்தனைச் சிக்குகளிலிருந்து அவன் கோர்த்தெடுப்பது என்ன என்ற புரிதல், பெரும்பாலான சாமானியர்களுக்கு இல்லையென்பதே உண்மை. இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. ஆனால் அவ்வாறான ஆசாமிகள், எல்லாம் தெரிந்தவர்போல் தீர்ப்பு எழுதும்போது தான் பிரச்சினை வருகிறது. முதலில் எல்லோரும் அறிந்துகொள்ளவேண்டிய விஷயம், ஒரு கரு ஒருவரின் மூளையில் மட்டுமே வரும், அதே விஷயம் வேறொருவருக்கு வர வாய்ப்பே இல்லை என்று நினைப்பது மடத்தனம்.
'ஒற்றுமையாக நான்கு அண்ணன் தம்பிகள், அவர்களின் திருமணத்திற்குப் பின் அவர்களுக்கிடையே ஏற்படும் பிணக்குகள் மற்றும் அதன் தீர்வுகள்' என்ற இந்தக் கரு ஒற்றை மூளையில் மட்டுமே உதிக்கக்கூடிய அற்புத விஷயமா என்ன? ஒரு ரோபோவிற்கு உணர்ச்சியிருந்தால் என்னாகும் என்ற யோசனையும் ஒருவருக்கு மட்டுமே வருமா என்ன?
'விபச்சாரக் கும்பலிடம் மாட்டிக்கொண்ட மகள்-மீட்கப் போராடும் அப்பா' என்பது மகாநதியின் கரு. அதன்பிறகு வந்த ஹாலிவுட் படமான டேக்கன் படத்தின் கருவும் அதுவே. (மகாநதியில் ரஜினி நடித்திருந்தால் என்று யோசித்தால், அதுவே டேக்கன்!). இதற்காக கமலை ஹாலிவுட்காரன் காப்பியடித்தான் என்று சொல்லிவிடமுடியாது.
அவ்வளவு ஏன், எனது முந்து சிறுகதையை படித்த நண்பர் ஒருவர், அந்த கதையின் கருவானது ஏற்கனவே காலச்சுவடில் வந்த ஒரு கவிதையைப் போன்று இருப்பதாகச் சொன்னார். எந்தக் கவிதை என்றும் அந்த நண்பருக்கு சரியாக ஞாபகமும் இல்லை.எனக்கு காலச்சுவடு படிக்கும் பழக்கம் இல்லை. எனவே ஒரே போன்ற விஷயம், இருவருக்கு தோன்றுவது இயல்பானதே. இன்னும் சொல்வதென்றால் பதிவுலகில் நான் எழுத நினைக்கும் சில விஷயங்களை, நான் நினைத்த அதே கோணத்தில் தம்பி ஜீ எழுதிவிடுவார். (அதே போன்றே அரசியல் பதிவுகளைப் பொறுத்தவரை ரஹீம் கஸாலி. ). அதற்குக் காரணம், ஜீயும் நானும் ஒரே விதமான இலக்கியவாதிகளை கடந்துவந்தவர்கள் என்பது தான்.
எனவே மட்டையடியாக காப்பி-இன்ஸ்பிரேசன் - ஒத்த சிந்தனை ஆகிய மூன்றையும் ஒன்றாக குழப்பிக்கொண்டு, தாக்குவதைத் தவிர்த்துவிட்டு, ஆரோக்கியமான விமர்சனத்தை நாம் முன்வைத்தால், தமிழ்சினிமாவின் வளர்ச்சிக்கு பதிவுலகமும் கைகொடுத்தது போல் ஆகும்.
எனவே மட்டையடியாக காப்பி-இன்ஸ்பிரேசன் - ஒத்த சிந்தனை ஆகிய மூன்றையும் ஒன்றாக குழப்பிக்கொண்டு, தாக்குவதைத் தவிர்த்துவிட்டு, ஆரோக்கியமான விமர்சனத்தை நாம் முன்வைத்தால், தமிழ்சினிமாவின் வளர்ச்சிக்கு பதிவுலகமும் கைகொடுத்தது போல் ஆகும்.
அருமையாக சொன்னீங்க செங்க்ஸ். ஒத்த சிந்தனையுள்ளவங்க எல்லா இடத்திலும் உண்டு. அந்த சிந்தனைக்கு முதலில் உயிர்கொடுப்பவே இங்கு போற்றப்படுகிறான். அடுத்தவனுக்கு பேர் காப்பிக்காரன் அவன் முந்தைய (வனின்)படைப்பை பார்த்திராவிட்டாலும் கூட.
ReplyDeleteநான் எழுத நினைக்கும் சில விஷயங்களை, நான் நினைத்த அதே கோணத்தில் தம்பி ஜீ எழுதிவிடுவார்.//
ReplyDeleteஉண்மைதான் எனக்கும் அந்த அனுபவங்கள் உண்டு...!
சூப்பர் செங்கோவி...!
ReplyDeleteஇன்ஸ்பிரேசனுக்கும்- அப்படியே பிரதி பண்ணுவதற்குமிடையில் நிறைய வித்தியாசங்கள் இருப்பது உண்மை. ஆனால், அதை படைப்பாளிகளும் நேர்மையாக கையாள வேண்டும்.
எனக்கு படம் எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தை அல்லது திரைக்கதையினூடாக படைப்பியல் மீதான ஆர்வத்தை அண்மையில் கற்றுத்தந்த படம் ஆடுகளம். அந்தப்படம் எந்தப்படங்களின் இன்ஸ்பிரேசன் என்று வெற்றிமாறன் சொல்லியிருக்கிறார். இது, வெற்றிமாறன் மீது பயங்கர மரியாதையையே ஊட்டியது.
மாறாக, தெய்வத்திருமகளை எடுத்து வைத்துக் கொண்டு சொந்தமாக எல்லாமும் புடுங்கியது போல ஏ.எல்.விஜய் போன்றவர்கள் கதைவிடுகிற போதுதான் பிரச்சினை வேறு கோணத்தில் போய் நிற்கிறது. இவை, தவிர்க்கப்பட்டாலே போதும் படைப்பாளிகளை நல்ல விதமாக அடையாளப்படுத்துவர்கள்.
அடுத்து, ஒத்த சிந்தனை என்பது இயல்பானது. அந்த சிந்தனை ஒவ்வொருவரின் எழுத்தின் அல்லது உருவாக்கத்தின் வழி வருகிற போது தனித்துவமாக இருக்கும். ஆனால், ஒத்த சிந்தனை என்கிற பெயரில் மற்றவர் செய்த எல்லாவற்றையும் பிரதி பண்ணிவிட்டு ஜல்லியடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இறுதியில் இதுதான், இன்ஸ்பிரேசனுக்கும்- பிரதி பண்ணுவதற்கும் இடையிலான வித்தியாசமும், ஒத்தசிந்தனை என்பதற்குமிடையிலான வித்தியாசத்தை பிரித்தறிந்துவிட்டால் போதும் படைப்புக்களை நேர்மையுடன் அணுக முடியும்.
சூப்பர்ண்ணே, ரொம்ப நாளைக்கு முதல் நாம எழுதி ட்ராப்டுல வச்சிரிந்த பதிவு போலவே இருக்கு. குறிப்பா ஒத்த சிந்தனை/கருத்து ஒற்றுமை பற்றி சொல்லியிருக்கறது பலபேர் கவனிக்க தவறும் ஒரு விடயம். பல இடங்களிலும் ஒரே பிரச்சினை இருக்கும் போது அவை தொடர்பான ஒரே கருத்து இரு வேறுபட்ட தனி நபர்களுக்கு இருப்பதில் தப்பு ஏதும் இல்லையே. தமிழில் இவ்வாறு வந்து வாங்கிக் கட்டிக்கொண்ட படங்கள் ஏராளம்.
ReplyDelete//ரஹீம் கஸாலி said...
ReplyDeleteஅருமையாக சொன்னீங்க செங்க்ஸ். ஒத்த சிந்தனையுள்ளவங்க எல்லா இடத்திலும் உண்டு. அந்த சிந்தனைக்கு முதலில் உயிர்கொடுப்பவே இங்கு போற்றப்படுகிறான். அடுத்தவனுக்கு பேர் காப்பிக்காரன் அவன் முந்தைய (வனின்)படைப்பை பார்த்திராவிட்டாலும் கூட.//
இதில் கொடுமை என்னவென்றால் லத்தீன்/ஸ்பானிஷ் என கேள்விப்பட்டிராத படங்களின் பெயரைச் சொல்லி, அதைத் தான் காப்பி அடித்தான் என்று வாதிடுவது தான். சீன் பை சீன் காப்பி என்றால் திட்டலாம், கரு ஒத்துப்போவதெல்லாம் காப்பி என்பது ரொம்பவே ஓவர்.
//MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteநான் எழுத நினைக்கும் சில விஷயங்களை, நான் நினைத்த அதே கோணத்தில் தம்பி ஜீ எழுதிவிடுவார்.//
உண்மைதான் எனக்கும் அந்த அனுபவங்கள் உண்டு...! //
ரொம்ப நல்லதுண்ணே..சிலர் ஒரு படத்தைப் பார்த்துவிட்டு "1947ல ஒருத்தன் ஒருத்தியை கையைப் புடிச்சி இழுத்ததா ஹிந்துல நியூஸ் வந்துச்சு,,அப்புறம் 1956ல இங்கிலீஸ் ரைட்டர் எழுதின நாவல்ல ஹீரோ, ஹீரோயின்கிட்ட ஐ லவ் யூன்னு சொல்வான்..ஏறக்குறைய அதே டயலாக், அப்புறம் 1982ல வந்த கும்பாங்கோசும்பாவா எனும் ஜாப்பான் படத்துல வந்த பைஃட் சீன், இதெல்லாம் கலக்குன மிக்ஸ் தான் இந்தப்படம்' -ன்னு எழுதி படைப்பாளி சிந்திக்காத கோணத்துல எல்லாம் சிந்திக்காங்களே..அது தான் பெரிய காமெடியா இருக்கு.
//மருதமூரான். said...
ReplyDeleteசூப்பர் செங்கோவி...!
இன்ஸ்பிரேசனுக்கும்- அப்படியே பிரதி பண்ணுவதற்குமிடையில் நிறைய வித்தியாசங்கள் இருப்பது உண்மை. ஆனால், அதை படைப்பாளிகளும் நேர்மையாக கையாள வேண்டும்.
எனக்கு படம் எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தை அல்லது திரைக்கதையினூடாக படைப்பியல் மீதான ஆர்வத்தை அண்மையில் கற்றுத்தந்த படம் ஆடுகளம். அந்தப்படம் எந்தப்படங்களின் இன்ஸ்பிரேசன் என்று வெற்றிமாறன் சொல்லியிருக்கிறார். இது, வெற்றிமாறன் மீது பயங்கர மரியாதையையே ஊட்டியது. //
வெற்றிமாறன் மிகவும் நேர்மையான மனிதராக இருக்கிறார். சமீபத்தில்கூட 'ஏன் படங்களுக்கிடையே இவ்வளவு இடைவெளி?' என்று கேட்கப்பட்டபோது, 'முதல் படத்தின் கதையை 30 வருடங்களாக யோசித்து உருவாக்குகிறோம். ஆனால் அடுத்த படங்களை எப்படி உடனே செய்வது?' என்று பதில் சொன்னார்.
நல்ல ஒரு படைப்பாளி.
//Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
ReplyDeleteசூப்பர்ண்ணே, ரொம்ப நாளைக்கு முதல் நாம எழுதி ட்ராப்டுல வச்சிரிந்த பதிவு போலவே இருக்கு. //
யோவ்,அப்படிச் சொல்லக்கூடாதுய்யா..'அய்யய்யோ, என் பதிவை சுட்டுட்டாங்க'ன்னு சொல்லணும்!
கரெக்ட்டு, கரெக்ட்டு.. பேசிக்கலா பல பேரோட பிரச்சனையே இதுதான், எங்கோயோ ரிலீஸ் ஆன, ஏதோ ஒரு மொழி படத்துல வர்ற ஒரு சீன் மாதிரி, நம்ம தமிழ் படத்துலயும் எதேச்சையாக ஒரு சீன் இருந்துட்டா போதும்.. "ஐயையோ சுட்டுட்டான் சுட்டுட்டான்"ன்னு கத்தி விளம்பரம் தேடிக்க வேண்டியது...
ReplyDeleteஇத ஸ்பூஃப் பண்ணி நாங்க எழுதுன "தமிழ்சினிமாவில் அப்பட்டமான காப்பிகள்: முகமூடிகள் கிழிகின்றன!"பதிவுல கூட வந்து சில பேர் சீரியஸ் கமென்ட் போடுருந்தாங்க, சிரிப்பு சிரிப்பா வந்துச்சு!!
மிகவும் அருமையான சிந்தனை அண்ணா! அது வேறொன்றும் இல்லை - ஒரு படம் வெளியாகும் போது, அது இங்கே சுடப்பட்டது, அங்கே சுடப்பட்டது என்று இஷ்டத்துக்கு எழுதுவதால், ஒரு பிரபலம் கிடைக்கிறது அல்லவா!
ReplyDeleteஅந்த பிரபலத்துக்காகத்தான் இப்படியெல்லாம் எழுதுகிறார்கள் என்று நினைக்கிறேன்!
// மொ.ராசு (Real Santhanam Fanz ) said...
ReplyDeleteகரெக்ட்டு, கரெக்ட்டு.. பேசிக்கலா பல பேரோட பிரச்சனையே இதுதான், எங்கோயோ ரிலீஸ் ஆன, ஏதோ ஒரு மொழி படத்துல வர்ற ஒரு சீன் மாதிரி, நம்ம தமிழ் படத்துலயும் எதேச்சையாக ஒரு சீன் இருந்துட்டா போதும்.. "ஐயையோ சுட்டுட்டான் சுட்டுட்டான்"ன்னு கத்தி விளம்பரம் தேடிக்க வேண்டியது... //
அவங்களை சொந்தமா ஒரு கதை எழுதச்சொன்னா, தெரியும் சேதி!
//மாத்தியோசி மணி மணி said...
ReplyDeleteமிகவும் அருமையான சிந்தனை அண்ணா! அது வேறொன்றும் இல்லை - ஒரு படம் வெளியாகும் போது, அது இங்கே சுடப்பட்டது, அங்கே சுடப்பட்டது என்று இஷ்டத்துக்கு எழுதுவதால், ஒரு பிரபலம் கிடைக்கிறது அல்லவா!
அந்த பிரபலத்துக்காகத்தான் இப்படியெல்லாம் எழுதுகிறார்கள் என்று நினைக்கிறேன்! //
உண்மை தான் மணி..பலரும் காப்பி-இன்ஸ்பிரேசன் - ஒத்த சிந்தனை(இதுக்கு வேற நல்ல வார்த்தை இருக்கா?) பற்றி புரிதல் இல்லாமல் சும்மா ஜல்லி அடிக்கிறார்கள்.
இந்த சீன சீன் படத்துல வந்திருக்கு,இந்த தீம் மியூசிக் சப்பானிய படத்துல இருந்து சுடப்பட்டது,இப்படி ஏதாவது சொன்னாதான உலக ஞானம் இருப்பதாக இந்த உலகம் நம்பும்,அட போங்கண்ணே
ReplyDeleteநல்ல விரிவான அலசல்! காப்பிக்கும் ஒத்த சிந்தனைக்கும் உள்ள வித்தியாசம் பற்றி விவரிப்பு அருமை! நன்றி!
ReplyDeleteசெங்கோவி,
ReplyDeleteவணக்கம்.
உங்களுக்கும் எனக்கும் எதோ ஜியோக்ராபி வேலை செய்யுது. எனது அடுத்த பதிவு இதைப் பற்றித் தான் எழுத நினைத்துக் கொண்டிருந்தேன்.
இப்போதும் அப்படித்தான் நினைக்கிறேன் - நீங்கள் காப்பி என்று நினைத்தாலும் பரவாயில்லை.
நீங்கள் சொன்ன காப்பி, இன்ஸ்பிரேஷன் மற்றும் ஒத்த சிந்தனை எனபது மறுக்க முடியாத உண்மைதான்.
ஆனால் பிரச்சினை என்னான்னா அது இன்ஸ்பிரேஷன் என்றால் இது என்னை இன்ஸ்பையர் செய்தது என்று சொல்லாமல் இருப்பதுதான்.
என்னைப் பொறுத்த வரைக்கும் சமரில் ஒரு ஆங்கிலப் படத்தின் தாக்கம் அல்லது இன்ஸ்பிரேஷன் நிச்சயம் இருக்கிறது. அது இன்ஸ்பயர் செய்தது என்று சொல்லாதது தவறு என்றே நினைக்கிறேன்.
ஆனால் ஒத்த சிந்தனை வருவதற்கு நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது. அதை அப்படி சொல்ல முடியாது. எழுதுகிற போது நாம் கூகிள் பண்ணுவதில்லை ஆனால் படம் எடுக்கிரவர்கள் அதை நிறையப் பன்னுவதனால்தான் அவர்கள் இன்ஸ்பிரேஷன் என்று கூட சொல்ல மாட்டேன் என்கிறார்களே என்பதுதான் வேதனை.
செங்கோவி, உங்களோட இந்தப் பதிவை தமிழில் காப்பியடிச்சே படமெடுத்து பொழப்பை ஓட்டிக் கொண்டிருக்கும் சினிமாக்காரனுங்க படிக்க நேர்ந்தா நெகிழ்ந்து போயிடுவானுங்க. என்னமா வாதம் பண்ணுறீங்க!! தமிழ் படங்களில் கப்பியடிப்பதற்க்கு சர்வதேச அளவில் யாரும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை, அப்படி ஒரு வேலை எடுப்பதாக இருந்தால், உங்களை வக்கீலாகப் போட்டால் போதும் எல்லோரையும் உங்க வாதத் திறமையாள வெளியே கொண்டாதுடுவீங்க, மேலும், நாம காப்பிதான் அடிச்சோமான்னு காப்பியடிச்சவனுங்களுக்கே சந்தேகம் வருமளவுக்கு உங்க வாதம் இருக்கும்!!
ReplyDeleteநீங்க சொல்வது போல இன்ஸ்பிரேஷன், ஒரே மாதிரி சிந்தனை ரெண்டு பேத்துக்கு வர்றது இதெல்லாம் நிஜம்னா பரவாயில்லைதான், ஆனா துரதிர்ஷ்டவசமாக 99.99% கேஸ்களில் அது உண்மையில்லை. இன்றைக்கு முன்னணி நட்சத்திரங்கள், இயக்குனர்களில் பலர் அப்பட்டமாக ஒரு படத்தை காப்பியடிக்கின்றனர் அல்லது நாலஞ்சு படத்தைப் பார்த்து அங்கொன்றும் இங்கொன்றுமாக பிச்சு போட்டு படத்தைப் பண்ணுகின்றனர். தெய்வத் திருட்டு மகள் படத்தையெல்லாம் இன்ஸ்பிரேஷன், ரெண்டு பேரும் ஒரே மாதிரி சிந்திச்சான் என்று சொன்னால் அதை விட பெரிய காமடி எதுவும் இருக்க முடியாது. இந்திரன் சந்திரன் படம் கதை மற்றும் சில காட்சிகள் அப்பட்டமாக காப்பியடித்து அதே மாதிரி எடுக்கப் பட்டுள்ளன. இதெல்லாம் இன்ஸ்பிரேஷன் என்று எந்த இனா வானா வும் ஒப்புக்க மாட்டான்.
மேலும் நீங்க நினைக்கிற மாதிரி தமிழக மொத்த சனமும் இவங்க காப்பியடிப்பதைப் பத்தி தெரிந்து வைத்திருக்கவில்லை இணையத்தில் பிளாக் படிப்பவர்களில் ஒரு பிரிவினருக்கு மட்டுமே இவை அத்துபடியாகத் தெரியும், பெரும்பாலான சனத்துக்கு இவர்கள் இன்னமும் யோக்கிய சிகாமணிகள்தான்.
//Jayadev Das said... [Reply]
ReplyDeleteநீங்க சொல்வது போல இன்ஸ்பிரேஷன், ஒரே மாதிரி சிந்தனை ரெண்டு பேத்துக்கு வர்றது இதெல்லாம் நிஜம்னா பரவாயில்லைதான், ஆனா துரதிர்ஷ்டவசமாக 99.99% கேஸ்களில் அது உண்மையில்லை.//
பதிவிலேயே சொன்னதுபோல், 50%க்கு மேல் காட்சிகள் ஒத்திருந்தாலே அது காப்பி தான். உதாரணமாக நாயகன். ஆனால் நம் மக்கள் மகாநதி, Hardcore-ன் காப்பி என்று வாதிடும் அளவிற்கு நிலைமை மோசமாக இருக்கிறது.
Hardcore-மகாநதி-டேக்கன் மூன்றுமே வெவ்வேறு வகை. காப்பியாளர்களை கண்டிக்கும் வேகத்தில், சிறு ஒற்றுமை இருந்தால்கூட வசைபாடுவது சரியா என்பதே எனது கேள்வி.
சிலபடங்களின் சாயல் இல்லாமல் இயக்குவது சில நேரம் இயக்குனர்களுக்கு கடினமான தாக இருக்கும் ஒரு இம்பிரேசன் இந்த காப்பி என்பது என் புரிதல்,நானும் உலகப்படம் பார்க்கும் ரசிகன இல்லை உள்ளூர் மட்டும் தான்:))))
ReplyDeleteDear Sengovi,
ReplyDeleteVery good article. I thought you would mention that the jail scene, including the top angle scene in Mahanadhi was lifted from the wrong one.I happened to see both films within a short span of each other and could not help to notice the similarity.Some people like Kamal and KB shamelessly lift scenes without giving due credit to the original creator.
அட போங்கப்பு... inspire ஆகி அத எழுதுரதுக்கும் தறமை வேனும்.... எந்த Hollywood படமும் பார்க்காம .. சொந்த படம் இயக்கும் சாத்தியம் இப்போ இல்லை.... மனதில் தோன்றிய கதை கூட நம் அல்லது வேறு ஒருவரது வாழ்க்கையை inspire செய்ததாகதான் இருக்கும்......
ReplyDeleteஅருமையான பதிவு/பகிர்வு.ஒரே சிந்தனையில் பலர் இருப்பது என்பது சாத்தியமானதே!//எண் கணித சாஸ்திரத்தில் நான் கண்ட உண்மை இது!///நொட்டை/நொள்ளை,கண்டு பிடித்து விட்டேன், ஊரேக்கா என்று சுய தம்பட்டம் அடிப்பதை விட்டு பதிவுலகம்&பதிவர்கள் தமிழ் சினிமா வளர்ச்சிக்கு உதவுதல் வேண்டும்!
ReplyDelete