Tuesday, December 29, 2015

திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 67

67. திரும்பத் திரும்பப் பார்த்துப் பார்த்து....

ஒரு திரைக்கதை எழுதுவதற்குத் தேவையான அடிப்படைகளையும், திரைக்கதை வடிவம் பற்றியும் பார்த்து முடித்துவிட்டோம். திரைக்கதையின் முதல் பிரதி எனப்படும் ஃபர்ஸ்ட் ட்ராஃப்ட் & பவுண்ட் ஸ்க்ரிப்ட் எழுத, இது போதும். இதுவரை சொல்லப்பட்ட விஷயங்களை வைத்து, நீங்கள் உங்கள் திரைக்கதையின் ஃபர்ஸ்ட் ட்ராஃப்ட்டை முடித்திருக்க வேண்டும். அப்படி முடித்துவிட்டீர்கள் என்றால், அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது இரண்டு முக்கியமான வேலைகள்:

1. குறைந்தது ஒரு வாரத்திற்கு உங்கள் திரைக்கதையை மறந்துவிட்டு, வேறு விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். எங்காவது டூர் போய் வரலாம் அல்லது ஃபேஸ்புக்கில் ஏதாவது புரட்சி செய்யலாம்.
நன்றாகவே ரிலாக்ஸ் செய்துகொள்ளுங்கள். ஏனென்றால், அடுத்து நீங்கள் செய்யவிருப்பது தான் திரைக்கதை எழுதுவதிலேயே உள்ள கடினமான, கடைசி ஸ்டெப்.

2. அது, ரீரைட் எனப்படும் திரைக்கதையைத் திருத்தி எழுதுவது.

‘என்னய்யா இது..பீட்ஷீட் போட்டு, சீன் போர்டு வச்சு சீன் போட்டு, ஒவ்வொரு சீனா அலசி, ஆராய்ஞ்சு ஸ்க்ரிப்ட் எழுதியிருக்கோம். இனிமே திருத்தி எழுத என்ன இருக்கு?’ எனும் நியாயமான கேள்வி
உங்களுக்குத் தோன்றும். ஆனால் இதைச் செய்யாமல் போனால், என்ன தான் பீட்ஷீட், சீன் போர்டு எல்லாம் சரியாக இருந்தாலும் திரைக்கதை சொதப்பிவிடும்.

ஸ்பெல்லிங் மிஸ்டேக் பார்ப்பது, கண்டினியூட்டி செக் பண்ணுவது தான் திருத்தி எழுதுவது என்று சிலர் நினைக்கின்றார்கள். ஆனால் இது அதற்கும் மேலே! ஆங்கிலத்தில் வெளிவந்த Cast Away படம் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படம். அதன் திரைக்கதை எத்தனை முறை திருத்தி எழுதப்பட்டிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? பத்து முறை?.......இல்லை, 250 முறை..ஆமாம் பாஸ், இருநூற்று ஐம்பது முறை திருத்தி எழுதப்பட்ட திரைக்கதை அது. ‘ஆணியே புடுங்க வேண்டாம்’ என்று தோன்றினால், நீங்களும் என் தோழனே!

நீங்கள் யாராவது எழுத்தாளர், ஷார்ட் ஃபிலிம் மேக்கர் அல்லது திரைக்கதையாசிரியருடன் நட்பை முறித்துக்கொள்ள வேண்டும் என்றால், அதற்கான எளிய வழி ஒன்று உண்டு. அவர்கள் படைப்பில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டினால் போதும். ஈகோவை சீண்டுகின்ற ஒரு விஷயமாக, குறையினை சுட்டிக்காட்டுதல் இருந்துவருகிறது. இப்போது திருத்தி எழுதும்போது, உங்கள் குறைகளை நீங்களே சுட்டிக்காட்டப் போகிறீர்கள். 
எனவே, மனரீதியில் இது மிக சவாலான விஷயம். ‘எவ்வளவு உலக சினிமா பார்த்து, ஐம்பது திரைக்கதை புக்ஸை படிச்சு ஒரு ஸ்க்ரிப்ட் எழுதியிருக்கிறேன். என் ஸ்க்ரிப்ட்டில் குற்றமா?’என்று தான் உங்கள் மனது உங்களிடம் சொல்லும். ‘எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது’ என்று உங்களிடம் கெஞ்சும். ஆனால் ஈவு, இரக்கமின்றி உண்மையிலேயே நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்று சரிபார்க்கும் நேரம் இது. இதுவரை மனதால் திரைக்கதையை எழுதிவிட்டீர்கள். இது அறிவால், அதைத் திருத்தும் நேரம்!

உங்கள் திரைக்கதையை ப்ரிண்ட் போட்டுக்கொள்ளுங்கள். ஒரு சிவப்புக்கலர் பேனாவுடன் அமருங்கள். முதலில் ஒரு வாசிப்பு. முதல் பக்கம் முதல் கடைசிப்பக்கம்வரை, ஒருமுறை வாசித்துக்கொள்ளுங்கள். படிக்கும்போதே, ஏதேனும் தோன்றினால் குறித்துக்கொள்ளுங்கள். அடுத்து கீழே உள்ள ஒவ்வொரு விஷயத்திற்காகவும், ஒருமுறை வாசியுங்கள். அல்லது ஒவ்வொரு சீனையும் வைத்துக்கொண்டு, கீழே உள்ள விஷயங்களை செக் பண்ணுங்கள்:

1. இடம் / நேரம் : நாம் எப்போதுமே முதலில் எழுதும்போது, எளிதான தீர்வையே நாடியிருப்போம். அது க்ளிஷேவாக இருக்கும். ஒரு சம்பவம் நடக்கும் இடம், ஹோட்டல் என்று எழுதியிருக்கிறீர்கள்
என்று வைத்துக்கொள்வோம். அது வேறு எங்கெல்லாம் நடக்கலாம், வேறு என்னென்ன சாத்தியங்கள் உண்டு என்று யோசியுங்கள். 
குஷி படத்தின் மொட்டைமாடியை இன்னும் நினைவில் வைத்திருக்கிறோம் ,அல்லவா? ‘ஆடையை விலக்கும் காற்று, சண்டையின் நடுவே இரைச்சலுடன் பாயும் விமானம், சண்டைக்குத் தேவையான தனிமை’ என அந்த மொட்டைமாடி லொகேசனும் சீனை இன்னொரு லெவலுக்குக் கொண்டுபோயிருக்கும். இது ஏதேனும் வீட்டின் உள்ளே நடந்திருந்தால், இவ்வளவு வீரியமாக(!) அந்த சீன் வந்திருக்குமா என்று யோசித்துப்பாருங்கள்.
அதே போன்றே, தேவர்மகனில் அப்பாவும் மகனும் பேசிக்கொள்ளும் ‘அவன் மெதுவாத்தான் வருவான்’ காட்சி. வீட்டுக்கூடாரத்தில் தான் இருவரும் பேசிக்கொள்கிறார்கள். அங்கே எஃபக்ட்டைக் கூட்டுவது, மழை. இடியும் மின்னலும் அந்த சீனுக்கு அதிக அர்த்தத்தைத் தருகின்றன. உங்கள் சீனின் மனநிலை(மூட்) என்ன என்று பாருங்கள் அதற்கு ஏற்ற இடமும், நேரமும் என்னவென்று யோசியுங்கள்.
நீங்கள் வாழ்க்கையில் பார்த்த இடங்கள் அல்லது ஏதேனும்  திரைப்படத்தில் பார்த்த இடங்கள் அல்லது இன்டர்நெட்டில் பார்த்த போட்டோ கூட உங்களுக்கு இன்ஸ்பிரீசனாக அமையலாம். நீங்களே உங்கள் திரைக்கதையின் இயக்குவர் என்றால், ஒவ்வொரு சீனுக்கு இப்படிப்பட்ட ரெபரன்ஸ் போட்டோக்கள் உங்களுடன் இருக்க வேண்டும். அப்படி ஒரு இடமும் நேரமும் அமையும்போது, சீன் இம்ப்ரூவ் ஆவதை உங்களால் பார்க்க முடியும்.
2.கதாபாத்திரங்கள்: நீங்கள் உருவாக்கியிருக்கும் கதாபாத்திரங்கள் இயல்பாக, உயிர்ப்புடன் இருக்கிறார்களா என்று சரிபாருங்கள். படத்தின் முக்கிய பாத்திரங்களின் வேலை, இயல்பு, வயது எல்லாவற்றையும் ஒருமுறை மனதுக்குள் மாற்றிப்பாருங்கள். என்ன செய்தால் சுவாரஸ்யத்தைக்கூட்ட முடியும் என்று பாருங்கள்.
மௌனகுரு படத்தில் வந்த, கர்ப்பிணி இன்ஸ்பெக்டர் பாத்திரம் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். உமா காமேஷ் நடித்திருந்தார். திரைக்கதையின் ஃபர்ஸ்ட் ட்ராஃப்ட்டில் அது கிடையாது, வெறும் இன்ஸ்பெக்டர் என்று தான் முதலில் அது எழுதப்பட்டது. அதன் இயக்குநர் சாந்தகுமாருக்கு ஃபர்ஸ்ட் ட்ராஃப்ட் முடித்தபின்னும், இன்னும் என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தார். அப்போது தான் ஒரு ஹிந்திப்படம் (பெயர் நினைவில் இல்லை!!) பார்த்தார். அதில் வந்த கதாபாத்திரம் தான், இந்த கர்ப்பிணி பெண் இன்ஸ்பெக்டர். தன் கதையில் வரும் இன்ஸ்பெக்டரை அப்படியே மாற்றினார். படம், இன்னொரு லெவலுக்குப் போய்விட்டது. இங்கே இன்னொரு விஷயம். Fargo எனும் ஆங்கிலப்படத்திலும் இதே போன்ற கர்ப்பிணி இன்ஸ்பெக்டர் கேரக்டர் வரும். அந்த ஹிந்திப்பட இயக்குநர், Fargo-வில் இிருந்து எடுத்திருக்கலாம்.


இது தான் இன்ஸ்பிரேசன் என்பது. ஒரிஜினலுக்காக கதை எழுதாமல், தன் கதைக்குத் தேவையான கேரக்டரின் குணநலனை மட்டும் எடுத்துக்கொள்வது. ‘ஹிந்திப்படத்தில் இருந்து தான் எடுத்தேன்’ என்று சாந்தகுமார் சொல்லியும், யாரும் அவரை காப்பிகேட் என்று திட்டவில்லை. உலகில் வெளியாகியுள்ள அத்தனை படங்களில் இருந்தும் சில விஷயங்களை எடுத்துக்கொள்ளும் உரிமை நமக்கு இருக்கிறது. நம் படங்களில் இருந்தும் யாராவது நாளை இன்ஸ்பையர் ஆகலாம். ஆனால் அப்படி எடுத்துவிட்டு ‘நானா யோசிச்சேன்’ என்று பீலா விடக்கூடாது என்பதே இங்கே முக்கியம்.

எனவே, திரைக்கதை எழுதும்போதும் திருத்தி எழுதும்போதும் ஏதேனும் படத்தில் இருந்து ஏதாவது விஷயத்தை இன்ஸ்பையர் ஆகி, எடுக்க நினைத்தால் தாராளமாக எடுங்கள். ‘காப்பி..காப்பி’என்று இணையத்தில் அதிக கூச்சல் எழுவதால், இன்ஸ்பிரேசனுக்கே பயப்படும் சூழல் இப்போது வந்திருக்கிறது. சாந்தகுமார் போன்று நேர்மையாக இருந்தால், பிரச்சினையில்லை என்பதே யதார்த்தம்!

3. லீனியர் / நான் - லீனியர்: புதிதாக ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ளும்போது, அதில் புதுமையாக புரட்சி செய்ய வேண்டும் என்று தோன்றுவது இயல்பு தான். டரண்டினோவும் நோலனும் தான் இன்றைய தலைமுறைக்கு ஆதர்ச நாயகர்கள் எனும்போது, நான் - லீனியர் திரைக்கதை மேல் ஆர்வம் பொங்குவதில் ஆச்சரியம் இல்லை. இதுவரை ஒரு திரைக்கதைகூட எழுதியிராதவர்கள்கூட, நான் -லீனியர் புரட்சி செய்யத் துடிப்பதைப் பார்க்கிறேன். பலரும் என்னிடம் ‘நான் லீனியர்’ பற்றி ஏன் தனிக் கட்டுரை இல்லை என்று கேட்டிருக்கிறார்கள். ‘சினிமாவைத் தலைகீழாப் புரட்டிப்போடும்’ ஆர்வத்தை அவர்களிடம் பார்க்கிறேன். ஆனாலும், சாரி பிரதர்ஸ்!

நாம் ஏற்கனவே சஸ்பென்ஸ்/சர்ப்ரைஸ் பற்றிய ஹிட்ச்காக்கின் பாம்-தியரியையும், ஓஷோவின் கருத்துக்களையும் பார்த்திருக்கிறோம். பாட்ஷா பற்றியும் ஜெண்டில்மேன் பற்றியும் பார்த்திருக்கிறோம். 

அவை தான் நான் லீனியருக்கு அடிப்படை. இங்கே ஒரு கதை தான் திரைக்கதையின் வடிவத்தை முடிவு செய்ய வேண்டும். ஆடியன்ஸை படத்துடன் ஒன்ற வைக்க, ஒரு தகவலை முன்பே சொல்வதா அல்லது பின்னர் சொல்வதா எனும் ஜட்ஜ்மெண்ட்டே திரைக்கதையில் முக்கியம் என்று பார்த்திருக்கிறோம். அதை வைத்துத்தான் லீனியரா அல்லது நான் லீனியரா எனும் முடிவுக்கு நீங்கள் வர வேண்டும். 

கண்டிப்பாக நான் லீனியரில் தான் கதை சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கதையைக் கெடுக்காதீர்கள். நான் லீனியர் என்று நீங்கள் முடிவு செய்ய வேண்டும் என்றால், உங்கள் கதையிலோ அல்லது நீங்கள் சொல்ல விரும்பும் விஷயத்திலோ அதற்குரிய காரணம் இருக்க வேண்டும். பல்ப் ஃபிக்சனும், மெமண்ட்டோவும் புரட்சிக்காக எழுதப்பட்ட திரைக்கதைகள் அல்ல. ஒவ்வொரு கேரக்டரையும் நாம் எப்படி ஃபீல் செய்ய வேண்டும், அவர்கள் எப்படி நம்மிடம் இருந்து விடைபெற வேண்டும் எனும் தெளிவான திட்டமிடல், பல்ப் ஃபிக்சனில் இருந்தது. ஆடியன்ஸை அதிகமாக இன்வால்வ் ஆக வைக்கும் உத்தியாகவும் டரண்டினோ அதைக் கையாண்டிருந்தார். 
மெமண்டோவில் ஹீரோ போன்றே நாமும் ஷார்ட் டெர்ம் மெமரி லாஸை ஃபீல் பண்ண வேண்டும் என்று நோலன், அதை நான் லீனியராக அமைத்தார். Irreversible படமும் அப்படியே.

Citizen cane(1941), Rashomon(1950), அந்த நாள் (1954) என, நம் தாத்தாக்கள் காலத்திலேயே நான் லீனியர் படங்கள் வந்துவிட்டன. நான் லீனியர், லீனியர் போன்றே ஒரு சாதாரண விஷயம் தான். எனவே அதை உணர்ச்சிவசப்படாமல் அணுகுங்கள். ஃபர்ஸ்ட் ட்ராஃப்ட்டை நான் லீனியராக எழுதியிருந்தால், அது அவசியம் தேவைதானா என்று இப்போது சரிபார்த்துக்கொள்ளுங்கள். ஒரு திரைக்கதையை சுவாரஸ்யமாகச் சொல்வது தான் முக்கியம். அதற்கு எந்த வடிவம் சரி என்பதை, உங்கள் கதை முடிவு செய்யட்டும். உங்கள் ஆசைக்காக, திரைக்கதையை குழப்பிவிடாதீர்கள். 

4. அடிப்படைகள்: இந்த தொடரின் முதல் 24 பாகங்கள்வரை பல அடிப்படை விஷயங்கள் பற்றிப் பார்த்தோம். அவற்றை உங்கள் திரைக்கதையில் பயன்படுத்தியுள்ளீர்களா அல்லது அவற்றில் எதையாவது சேர்க்க முடியுமா என்று பாருங்கள்.

5. பீட் ஷீட்: பலமுறை திருத்தி, மாற்றி எழுதும்போது நாமே தொலைந்து போன ஃபீலிங் வந்துவிடும். எனவே ஒவ்வொரு ட்ராஃப்ட் முடியும்போதும், பீட் ஷீட்டையும் சீன் போர்டையும் அப்டேட் செய்யுங்கள். சரியான வடிவத்துக்குள்தான் இருக்கிறோமா அல்லது ஆர்வக்கோளாறில் சொதப்பியிருக்கிறோமா என்று தெரிந்துகொள்ள இது உதவும்.

6.எமோசன்ஸ்: சினிமாவில், அது எந்த ஊர் சினிமாவாக இருந்தாலும், ஆடியன்ஸை கதையுடன் ஒன்ற வைக்கும் விஷயங்களில் ஒன்று செண்டிமெண்ட். சீரியல்கள் வந்தபின், அந்த வார்த்தைக்கு நெகடிவ் அர்த்தம் வந்துவிட்டதால், எமோசன்ஸ் எனும் வார்த்தையை நாம் உபயோகிப்போம். சிரிக்கும்போது தான் படத்துடன் ஒன்றுகிறார்கள் என்று முன்பு பார்த்தோம். ஆனால் அழும்போது தான், படத்துடன் கரைந்து போகிறார்கள். ‘ச்சே..பின்னீட்டான்யா’ எனும் வார்த்தை, கண் கலங்கியபிறகு தான் நம்மவர்களிடம் இருந்து வருகின்றது. அது லவ் ஃபீலிங்காக இருக்கலாம் அல்லது அம்மா செண்டிமெண்ட்டாக இருக்கலாம். எமோசன்ஸ் இருந்தால் தான், கேரக்டர்கள் யதார்த்தமானவையாகத் தெரியும். இல்லையென்றால், நம் படம் வெறும் சினிமாவாகத் தான் நிற்கும். 

ராஜசேகர், எஸ்.பி.முத்துராமன், கே,எஸ்,ரவிக்குமார் போன்ற வெற்றிப்பட இயக்குநர்களைவிட, ஸ்ரீதர்-பாரதிராஜா-சேரன் போன்ற இயக்குநர்களை நாம் அதிகம் நினைவில் வைத்திருக்கக் காரணம், இந்த எமோசன்ஸ் தான். ரத்தமும் சதையுமாக ஒரு கேரக்டரை எமோசனுடன் நம் கண்முன் நிறுத்தும் வல்லமை இந்த ஜாம்பவான்களுக்கு உண்டு. நெஞ்சில் ஓர் ஆலயம் டாக்டரையும், முதல் மரியாதை குயிலி/பொன்னாத்தாளையும், தவமாய் தவமிருந்து அப்பாவையும் அவ்வளவு எளிதில் நாம் மறக்க முடியுமா என்ன? ‘இது வெறும் படம் அல்ல..அப்படியே வாழ்க்கையை திரையில் கொண்டுவந்துட்டான்’ என்று ஆடியன்ஸ் உணர்வதைவிடவும் வேறு என்ன விருது ஒரு படைப்பாளிக்கு வேண்டும்?

(tamilss.com என்ற இணைய தளத்திற்காக ’தமிழில் உலக சினிமா’ - என்று ஒரு கட்டுரைத் தொடர் எழுதினேன். அவை இணையத்தில் இப்போது கிடைப்பதில்லை. இந்த திரைக்கதை தொடர் புத்தகமாக
வரும்போது, அவையும் புத்தகமாக வரும். ’திரைக்கதையில் எமோசன்ஸ்’ பற்றி அறிய விரும்புபவர்கள் அவசியம் அதைப் படிக்கவும். அதில் வந்த முதல்மரியாதை பற்றிய கட்டுரையை இங்கே
படிக்கலாம். )

7. ஹீரோ/வில்லன்: இருவருக்குமான மோதல்கள் சரியான உச்சத்தைத் தொட்டிருக்கின்றனவா அல்லது இன்னும் என்ன செய்தால் மோதல் கடுமையாகும் என்று யோசியுங்கள். இதே போன்றே
ஹீரோ-ஹீரோயின் காதலுக்கும் செக் பண்ணுங்கள். இடம், நேரம், சம்பவம் எல்லாவற்றையும் மாற்றி, இன்னும் பரபரப்பானதாகவோ உணர்வுப்பூர்வமானதாகவோ ஆக்க முடியுமா என்று பாருங்கள்.

8. சீன்: ‘எல்லா நல்ல படங்களிலும், குறைந்தது ஒரு சிறந்த சீனாவது இருக்கும்’என்பார் சிட் ஃபீல்டு. மறக்க முடியாத சீன்களாக அவை நம் நினைவில் நிற்கும். மேலே குறிப்பிட்ட தேவர் மகன் மழை சீனாகட்டும், குஷி மொட்டை மாடி சீனாகட்டும் அல்லது துப்பாக்கியில் 12 பேரை ஒரே நேரத்தில் போட்டுத்தள்ளும் சீன் ஆகட்டும், இவையெல்லாமே சிறந்த சீன்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இப்படி, உங்கள் கதையில் என்ன சீன் இருக்கிறது என்று சரிபாருங்கள். தியேட்டரை விட்டுப் போனபின்பும், ஆடியன்ஸ் மனதில் நிற்கும்படி என்ன எழுதியிருக்கிறோம் என்று பாருங்கள்.

(சில நேரங்களில் ஒரு சிறந்த சீன், இந்த கதைக்குத் தேவையில்லை எனும் சூழ்நிலை வரும். சீனை விட, கதையே முக்கியம். எனவே, எவ்வளவு நல்ல சீனாக இருந்தாலும் தூக்கிக் கடாசுங்கள்.)

9. பெர்ஃபெக்சன்: மிகவும் நேர்த்தியாக, குறையே இல்லாமல் பெர்ஃபெக்ட்டாக நம் திரைக்கதை இருக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படலாம். ஆனால் உலகில் அப்படி ஒரு பெர்ஃபெக்ட் திரைக்கதை எதுவும் இல்லை. எனவே பெர்ஃபெக்சனில் தொலைந்து போய்விடாதீர்கள். சிலர் ரீரைட் எழுதவே அஞ்சுவார்கள். அவர்களுக்காகத் தான் மேலே ‘Cast Away - 250 ட்ராஃப்ட்’உதாரணத்தைக் கொடுத்தேன். ஆனால், அதையே சாக்காக வைத்துக்கொண்டு, உங்கள் திரைக்கதையை சித்ரவதை செய்துவிடாதீர்கள். மேலும்....

Procrastination என்று ஒரு விஷயம் உண்டு. ‘தள்ளிப் போடுதல்’என்று சொல்லலாம். உண்மையிலேயே செயலில் இறங்க உள்ளுக்குள் பயம் இருக்கும். எனவே செயலைத் தவிர்க்க, நம் மனம் காரணங்களைத் தேடும். திரைக்கதையை முடித்தால், ஷுட்டிங் போக வேண்டும். அதைத் தவிர்க்க வேண்டுமென்றால், ரீரைட் என்ற பெயரில் பெஞ்சைத் தேய்த்துக்கொண்டே இருக்கலாம். இந்த தள்ளிப்போடுதல் எனும் புதைகுழியில் இருந்து, நீங்கள் தான் உங்களை மீட்டெடுக்க முடியும். எனவே, உண்மையிலேயே திருத்தி எழுதுகிறீர்களா அல்லது தள்ளிப்போடுகிறீர்களா என்று நன்றாக யோசித்துக்கொள்ளுங்கள்.
இப்போது திருத்தி எழுத ஆரம்பியுங்கள். இது ஒருநாளில் அல்லது ஒரு வாரத்தில் முடியும் வேலை அல்ல. நல்ல மனநிலையில் இருக்கும்போதெல்லாம், ஒவ்வொரு விஷயமாக எடுத்துக்கொண்டு அலசுங்கள். திரைக்கதையை மெருகேற்றுங்கள்!
(தொடரும்)
மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 67"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, December 22, 2015

அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்! – மேலும் சில கேள்விகள்/பதில்கள்


கேள்வி: நீங்கள் நாத்திகரா?
பதில்: நிச்சயமாக இல்லை. நான் ஒரு தீவிர மதநம்பிக்கையுள்ள இந்து.

கேள்வி: அப்புறம் ஏன் இதை ஆதரித்துப் பேசுகிறீர்கள்?
பதில்: நீங்க தானே பாஸ் ‘நாத்திகர் ஏன் இதைப் பேசறா? இது ஆத்திகர் பிரச்சினை. ஆத்திகர் பேசட்டும்’னு சொன்னீங்க?

கேள்வி: எல்லா பிராமணரும் அர்ச்சகர் ஆக முடியாது, தெரியுமா? பிராமணரே என்றாலும், குறிப்பிட்ட குலம் கோத்திரத்தில் பிறந்திருக்க வேண்டும் தெரியுமா?

பதில்: அப்படியென்றால், நீங்கள் எங்கள் பக்கம் நிற்க வேண்டும் செண்ட்ராயன்! அந்த ஏற்றத்தாழ்வையும் சட்டம் மூலம் ஒழிக்கலாம், வாருங்கள்!


கேள்வி: அவாளுக்கு வேண்டுமென்றால், பாடி காடி முனீஸ்வரர் போன்று தனியாக கோவில்கட்டி விடலாமே?

பதில்: அதை நீங்கள் சொந்தமாக உழைத்துக் கட்டிய கோவிலில் இருந்தல்லவா சொல்ல வேண்டும்? நீங்கள் உட்கார்ந்திருப்பதே, எங்கள் சொத்து. இதில் ஓனர் மாதிரிப் பேசலாமா?


கேள்வி: ஏதோ சில கோவில்களில் தான் கொஞ்சம் நல்ல வரும்படி வருகிறது. பல கோவில்களில் எங்களாவே கஷ்டப்படறா,தெரியுமோ?

பதில்: அப்படியென்றால், உங்களில் சிலர் மட்டும் உண்டு கொழுத்துக்கொண்டு, மற்றவர்களை பட்டினியில் போட்டிருக்கிறார்கள். இது தவறு என்பதை நாங்களும் ஒத்துக்கொள்கிறோம். எனவே எல்லா அரசு வேலையிலும் இருப்பது போல், இங்கேயும் ட்ரான்ஸ்ஃபர் சிஸ்டம் கொண்டுவரலாமா? அப்பாவியான அந்த பிராமணர்களுக்காக, நீங்கள் அதைத்தானே கேட்டிருக்க வேண்டும்? பரவாயில்லை, இப்போது கேட்போம்.


கேள்வி: காசுக்காகத்தானே இந்த 207பேர் வர்றா? வருமானமில்லாத கோவிலில் போட்டால் நிப்பாளா? ஓடிற மாட்டா?

பதில்: மேலே சொன்ன ட்ரான்ஸ்ஃபர் பதில் தான் இதற்கும். ஒரு சாரார் மட்டும் வருமானமுள்ள கோவில்களில் செழிக்க, மற்றவர்கள் நிரந்தரமாக கஷ்டப்படக்கூடாது இல்லையா? எனவே, ட்ரான்ஸ்பர்!


கேள்வி: காசை எதிர்பார்க்காமல் பக்தி உணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் எங்களவா பல கோவில்களில் சேவை செய்கிறார், தெரியுமா?

பதில்: நன்றாகவே தெரியும். எங்கள் ஊர் குலதெய்வம் கோவிலில் என் தாத்தா தான் பூசாரி. அவருக்குப் பிறகு யார் என்று கேள்வி வந்தபோது ‘நோ..நோ..ஐ ஆம் எஞ்ஞினியர்’ என்று சொல்லி தப்பி ஓடிவந்துவிட்டேன். பிறகு வேறு யாராவது பொறுப்பை ஏற்றுக்கொள்வார்களா என்று பார்த்தால், யாருமில்லை.

பிறகு, பக்கத்து நகரான கோவில்பட்டியில் இருந்து ஒருவரை அழைத்து வந்தோம். செவ்வாய், வெள்ளி மட்டும் வருவதாக ஏற்பாடு. மாதச் சம்பளம், ஆயிரம் ரூபாய். இதே மாதிரி மேலும் சில கோவில்களில் அவர் வேலை செய்கிறார். மாதச்சம்பளம் ஐந்தாயிரம் வந்தால் பெரிது.

எனவே, தட்டில் விழும் காசு தான் அவரை வாழ வைக்கிறது. கஷ்ட ஜீவனம். ஆனாலும் அம்மனை அவர் தன் குழந்தையைப் போல சீராட்டுவார். ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்வார். இன்றைக்கு அம்மன் அங்கே இருப்பதே அவரால் தான் என்பேன். இல்லையென்றால், பூஜையின்றி எப்போதோ கோவில் களையிழந்து போயிருக்கும்.

இதே போன்று பல பிராமணர்களை எனக்குத் தெரியும். அவர்களில் சேவைக்கு எப்போதும் நான் தலைவணங்குகிறேன். அவர்களின் கஷ்டத்திற்கு நீங்களும், உங்களின் சிஸ்டமும் ஒரு காரணம் என்பதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள்? வாரிசுரிமை இல்லையென்று சட்டம் சொன்னாலும், சில குடும்பத்தினர் மட்டுமே வருமானமுள்ள கோவில்களை பிடித்துவைத்திருப்பது உங்களுக்கேதெரியும். ஆனால் போராட்டம் என்பது அபச்சாரம் என்று ரத்தத்தில் ஊறியிருப்பதால், வேறு யாராவது தான் போராடி இதை மாற்ற வேண்டும், இல்லையா?


கேள்வி: தகுதியற்ற நபர்களும் இந்த சட்டத்தால் வேலைக்கு வந்துவிடலாம், இல்லையா?

பதில்: மாமனார் ஊரில் ஒரு கோவிலை எடுத்துப் பெரியதாக கட்டி நிர்வகிக்கிறார். அந்தக் கோவில் அர்ச்சகரும் சேவைக்கு ஒரு நல்ல உதாரணம். வம்சவம்சாக, இதே தொழிலில் இருக்கும் குடும்பம். அம்மனை அலங்கரித்து தீபம் காட்டினார் என்றால், அம்மனே நேரில் வந்துவிட்டது போல் உடல் சிலிர்க்கும். ஆனால் அவர்கள் பிராமணர்கள் அல்ல, புலவர் இனத்தைச் சேர்ந்தவர்கள். இதே போன்றே வேளார், பிள்ளைவாள் அர்ச்சகர்களும் உண்டு.

பிராமணர்களிடம் இருக்கும் மாயை, தாங்கள் மட்டுமே தகுதியானவர் – தங்களை மட்டுமே ஆண்டவன் அர்ச்சகராக அனுப்பி வைத்திருக்கிறான் என்பது. அது உண்மையல்ல என்று கொஞ்சம் யோசித்தாலே புரியும். பழனி கோவிலையும், சமயபுரம் கோவிலையும் டெவலப் செய்து, உங்களுக்குக் கொடுத்ததே நான் – பிராமின்ஸ் தானே? தகுதி இல்லையென்றால், அவையெல்லாம் டெவலப் ஆகியிருக்குமா? மற்ற கோவில்களில் தான் தெய்வம் குடியிருக்குமா?

இருப்பினும்………………………உங்கள் கேள்வியில் உள்ள நியாயத்தை நான் ஒத்துக்கொள்கிறேன்.

தகுதியற்ற நபர்களை அர்ச்சகராகப் பார்க்க நேரிட்டால், உங்களுக்கு எப்படி வலிக்கும் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பூசாரி, தன் இடுப்பில் பான்பராக் சொருகியிருந்ததைப் பார்க்கும்போது எனக்கு வலித்திருக்கிறது. திருச்செந்தூர் பூசாரிகள் எப்போதும் பக்தர்களிடம் நாய் மாதிரி எரிந்து விழும்போதும் எனக்கு வலித்திருக்கிறது. அவர்கள் எல்லாம் பிராமணர்கள் என்பதை விட்டுத்தள்ளுவோம்.

இப்போது வரும் நான் – பிராமின்ஸில் சிலரும் அப்படி நடக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி நடந்தால், நீங்கள் கொதித்தெழுவீர்கள். இதுவரை உங்களவா தவறு செய்தபோது கொதிக்காத ரத்தம் அப்போது கொதிக்கும். எனவே கோவில்களில் நடக்கும் தவறுகளைத் தடுக்க, சரியான அமைப்பை நீங்கள் உருவாக்குவீர்கள். ஏற்கனவே அப்படி ஒரு அமைப்பு இருந்தால், அது செயல்பட ஆரம்பிக்கும். இது கோவில்களுக்கு நல்லது தானே?

அப்புறம் இன்னொரு விஷயம்…மேலே ஒரு புலவர் குடும்பம் பற்றிச் சொன்னேன், இல்லையா? அதில் அந்தக் குடும்பத்துப் பையனும் அரசு நடத்திய ஆகம பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றிருக்கிறார். இந்த சட்டம் அமலுக்கு வந்தால், வம்சவம்சமாக வறுமையில் வாடிய ஒரு பூசாரிக் குடும்பத்திற்கு ஒரு வழி பிறக்கும்.

நாத்திகர்கள் இந்த விஷயத்தை முன்னெடுப்பதால், அர்ச்சகர்களின் தகுதி பற்றி சந்தேகம் வருவது இயல்பு தான். ஆனால் உண்மையில் பல பூசாரி குடும்பங்கள் இந்த சட்டத்தால் பயன்பெறும் என்பதே யதார்த்தம்.


கேள்வி: சரி, பயிற்சி பெற்றவர் ஆகமவிதிகளின்படி நடக்கலாம். அவர் குடும்பமும் அப்படியே நடக்கலாம். ஆனால் அவர்களின் சொந்தங்கள் அப்படி ஆச்சாரமாக இருப்பார்கள் என்று சொல்ல முடியுமா? அந்த வீடுகளில் இவர் அன்னந்தண்ணி எடுக்காமல் இருப்பாரா?

பதில்: உங்கள் கேள்விக்கு என்ன அர்த்தம் என்றால்…

ஒரு பிராமணர் அர்ச்சகராக இருக்கிறார். அவர் மற்ற சொந்தக்கார பிராமண வீடுகளில் புழங்குகிறார். அத்தனை பிராமணர்களும் ஆச்சாரத்துடன் தான் இருக்கிறார்கள். அவர்களின் சொந்தத்தில் ஒருவர்கூட, ஆச்சாரம் கெட்டவர்கள் இல்லை. அத்தனையும் சொக்கத் தங்கங்கள். ஆனால் மற்றவர்கள் மட்டும் தான் மோசம், இல்லையா?

நான் டெல்லியில் வேலை செய்தபோது, என் அலுவலக /அறை நண்பன் ஒருவன் இருந்தான். மாலை ஆனதும், கையில் சிகரெட்டுடனும் பிராந்தி பாட்டிலுடன் தான் உட்காருவான். அவன் ஒரு பிராமின். அவன் அப்பா ஒரு கோவில்குருக்கள்.

என்ன செய்யலாம், குருக்களை வேலையை விட்டுத் தூக்கிவிடலாமா? குருக்களின் சொந்தக்கார குருக்களையும் வேலையை விட்டுத் தூக்கிவிடலாமா? அதை விடுங்கள், காஞ்சிபுரம் கில்மா குருக்களின் சொந்தக்கார குருக்களை என்ன செய்யலாம்?

முதலில், பிராமணர்கள் அத்தனை பேரும் சுத்தமானவர்கள்; மற்ற எல்லோரும் அசுத்தமானவர்கள் என்று நினைப்பதை விட்டொழியுங்கள். உங்கள் பிரச்சினைக்கெல்லாம் மூல காரணமே, இந்த மனநிலை தான்!


கேள்வி: இந்து மதத்தை அழிக்கவே, ஆச்சாரத்தைக் கெடுக்கும் இந்த சட்டத்தை நாத்திகர்கள் கொண்டுவருகிறார்களா?
 
பதில்: ஒட்டுமொத்த நோக்கில், இந்து மதத்திற்கு நன்மை செய்வதாகவே இது அமையும். ஆந்திராவிலும், கேரளாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டம் தான் இது. இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. இது காலத்தின் கட்டாயம். 

மேலும், விதவை மறுமணம், பெண் விடுதலை போன்ற விஷயங்களை எல்லாம் இதே நாத்திகர்கள் எழுப்பியபோது, நீங்கள் இதே வாதத்தைத் தான் முன்வைத்தீர்கள். இப்போது அந்த விஷயங்களால், அதிக பயன்பெற்றிருப்பது நீங்கள் தான்.

அதே போன்றே, இந்த மாற்றத்தையும் ஒருநாள் புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.................ஒரு சக இந்து!


மேலும் வாசிக்க... "அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்! – மேலும் சில கேள்விகள்/பதில்கள்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

6 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, December 20, 2015

அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்! - பாகம் 1

அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்!


நான் காந்தியத்தை கற்றுக்கொள்ள ஆரம்பித்த கொஞ்சநாட்களிலேயே என்னை ஆச்சரியப்படுத்திய ஒரு விஷயம், காந்தியத்திற்கும் பிராமண சுபாவத்திற்கும் உள்ள சில ஒற்றுமைகள். நமக்கெல்லாம் தெரிந்த ஒற்றுமை அஹிம்சை. அதையும் தாண்டி பல ஒற்றுமைகள் அங்கே உள்ளன.

எப்போதும் சமரசத்திற்கு தயாராக இருப்பதும், முதலில் கிடைப்பதை தக்க வைத்துக்கொண்டு பிறகு அடுத்த அடியை எடுத்து வைப்பது, எந்த நிலையிலும் எதிராளியுடனான உறவை முறித்துக்கொள்ளாமல் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருப்பது போன்றவை முக்கியமான அம்சங்கள்.

ஒரு கற்பனை உதாரணத்தை இப்போது பார்ப்போம். ஒரு அலுவலகத்தில் சனிக்கிழமையும் வேலைக்கு வரவேண்டும் என்று புதிய ரூல்ஸ் வருகிறது என்று வைத்துக்கொள்வோம். எல்லோரும் போய், அன்றைக்கு ஃபார்மலில் வராமல் கேஷுவல் ட்ரெஸ்ஸில் வரலாமா என்று கேட்கிறார்கள். பாஸ் தீர்ப்பு சொல்கிறார், ”வரலாம்..ஆனால் லெக்கின்ஸுக்கும் டைட்டான ஜீன்ஸிற்கும் அனுமதி இல்லை.”.

இப்போது நான் - பிராமின்ஸ், குறிப்பாக நம் போராளிகள் எப்படி ஹேண்டில் செய்வார்கள் என்று பார்ப்போம். முதலில் அவர்கள் புரட்சி மோடுக்குப் போவார்கள். ’பெண்ணிய விடுதலை, ஆடை சுதந்திரம், அடே காமக்கொடூரா...நாங்கள் என்ன உடுத்துவது என்று முடிவு செய்ய நீ யாரடா, உன் பொண்ணே காலேஜுக்கு லெக்கின்ஸ் தான் போட்டுட்டுப் போறா..உன் லட்சணம் தெரியாதா?’போன்ற வார்த்தைகள் வெடித்துச் சிதறும்.

தீர்ப்பு சொன்ன பாஸ் இன்னும் கடுப்பாகி, ‘நான் சொன்ன தீர்ப்பை வாபஸ் வாங்குகிறேன். எப்போதும்போல் ஃபார்மல்ஸிலேயே வாங்கடா நொண்ணைகளா!’ என்று ஆப்பு வைப்பார். ’உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா’என்பது புரிந்தாலும், ‘வெற்றி..வெற்றி..பாஸ் பயந்துட்டார்’ என்று கெத்தாக நிற்கும் புரட்சிக்கூட்டம்.

இதையே பிராமின்ஸ் எப்படி டீல் செய்வார்கள் தெரியுமா? முதலில் ‘வெற்றி..வெற்றி..பாஸ் மாதிரி நல்லவரைப் பார்ப்பது அரிது. லெக்கின்ஸ், ஜீன்ஸ் தவிர்த்து மற்ற கேஷுவல்ஸூக்கு அனுமதி அளித்த பரந்தாமனே போற்றி’ என்று சொல்லி, முதலில் கிடைத்த தீர்ப்பை மட்டுமல்லாது தீர்ப்பு சொன்ன பாஸையும் தன் பக்கம் கொண்டுவருவார்கள். கொஞ்சநாள் பாஸ் சொன்னதை கர்மசிரத்தையாக கடைப்பிடிப்பார்கள்.

அப்போது ஏதாவது ஒரு முட்டாள் ஒரு பத்திரிக்கையில் லெக்கின்ஸ் பற்றி ஒரு கட்டுரை எழுதுவான் (அல்லது இவர்களே ஒரு முட்டாளைவிட்டு எழுத வைப்பார்கள்.) ஊரே லெக்கின்ஸ் பிரச்சினைக்காக பற்றி எரியும். அப்போது பாஸிடம் போவார்கள். ‘சார், நம்ம ஆபீஸைப் பற்றியும் எவனாவது எழுதிடப்போறான். கம்பெனிப் பேர் கெட்டுவிடக்கூடாது என்பதால், லெக்கின்ஸ்/டைட் ஜீன்ஸையும் அனுமதிங்க சார்’ என்று பாஸ் மற்றும் கம்பெனியின் நலனுக்காகவே பிறப்பெடுத்தமாதிரி பேசுவார்கள். லெக்கின்ஸுக்கும் அனுமதி கிடைக்கும்.

ஒருவன் தனக்கு எதிராக 25%ம், ஆதரவாக 75%ம் கருத்து சொல்கிறான் என்றால், அவனை தகுந்த விதத்தில் ‘டீல்’ செய்து 100% எதிரியாக ஆக்குவது பெரும்பாலான நான் - பிராமின்ஸ் ஸ்டைல். ஆனால் தனக்கு எதிரான 25%-ஐ மறந்துவிட்டு, ‘வள்ளலே வாழ்க’ என்று ஃப்ளெக்ஸ் போர்டு மாட்டிவிடுவது பிராமின்ஸ் ஸ்டைல். (பிராமின்ஸ் பாராட்டிவிட்டான் என்றால், அது தனக்கு எதிரானது தான் என சில மண்டூஸ் கொதித்தெழுவார்கள் என்பதும் இதில் உள்ள சூட்சுமம்!)

பிராமணர்களை குறை சொல்லும் தொனியில் இதை நான் சொல்லவில்லை. அவங்ககிட்டே இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் என்று தான் சொல்கிறேன். (இந்த ஸ்டைல், எனக்கு அலுவலத்தில் மிகுந்த பயன் அளிப்பதை கண்கூடாக கண்டிருக்கிறேன். :) )

இப்போது அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக்கும் சட்டம் பற்றி வந்த தீர்ப்பினைப் பார்ப்போம்.

1971ல் நடந்த சேஷம்மாள் வழக்கிலேயே ‘அர்ச்சகர் பதவி என்பது வாரிசுரிமை அடிப்படையில் வருவது அல்ல’ என்று தீர்ப்பு வந்துவிட்டது. ஆனால் ‘ஆகமவிதிகள் அறிந்த, தகுதியானவரைத்தான் அர்ச்சகர் ஆக்க வேண்டும்’ என்றும் தீர்ப்பில் சொல்லப்பட்டது.

வழக்கம்போல் ‘அடே, உச்சிக்குடுமி நீதிமன்றமே’என்று பொங்கிவிட்டு, நாம் சைலண்ட் ஆகிவிட்டோம். பிறகு 2006ல் தெளிந்து ‘அனைத்து சாதியினருக்கும் ஆகமவிதிகள் கற்றுக்கொடுத்தால் போதுமே..சட்டப்படி அது செல்லுமே’ எனும் முடிவுக்கு அப்போதைய திமுக அரசு வந்தது. ‘அனைத்து சாதியினரும் அர்ச்சர் ஆகலாம்’ எனும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதற்கான பயிற்சிக்கூடங்களும் ஏற்படுத்தப்பட்டு, 207 பேர் தேர்ச்சிபெற்றார்கள்.

இதை எதிர்த்து பிராமணர்கள் உச்சநீதிமன்றம் போனார்கள். இப்போது தீர்ப்பு வந்திருக்கிறது. என்னவென்று....?

1. தமிழக அரசு கொண்டு வந்த, அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் அரசாணையை நீக்க முடியாது. அது செல்லும். (75% பாசிடிவ்)
2. ஆனால் ஆகம விதிகளின்படி தான் நியமனம் நடைபெற வேண்டும். (25% நெகடிவ்)

சரி, இதை ஊடகங்கள்...குறிப்பாக பிராமண ஊடகங்கள் தீர்ப்பு வந்த உடனேயே செய்தி வெளியிடுகின்றன. என்னவென்று...........??

"அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் சட்டம் ரத்து!”

இது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். ‘அறிவிருக்கா? தீர்ப்பை முழுசாப் படிச்சியா?’என்று கேட்க வேண்டிய விஷயம். ஏன் இப்படி செய்தி வெளியிட்டார்கள் என்று, முந்தைய லெக்கின்ஸ் உதாரணம் படித்த உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும். உடனே ஃபேஸ்புக்கில் பலர் புரட்சி மோடுக்கு போனார்கள். ‘ஏ, உச்சிக்குடுமி நீதிமன்றமே..’என்று ஆரம்பித்தார்கள். பிராமணர்களுக்கு கொண்டாட்டம், அவர்கள் எதிர்பார்த்தது இதைத் தானே!

பகுத்தறிவுவாதிகள் என்ற போர்வையில் இறங்கும் சில மாற்றுமத போராளிகள்கூட ‘ச்சீ..இந்துக்களே, நாண்டுக்கிட்டு சாகுங்கள்’எனும் ரேஞ்சில் தங்கள் காரியத்தை செவ்வனே செய்தார்கள். கம்யூனிஸ்ட், வைகோ போன்றோர், உடனே மேல்முறையீடு செய்யுங்கள் என்று அறிக்கையும் விட்டார்கள். நல்லவேளையாக எப்போதும் உளறிக்கொட்டும் கி.வீரமணியும், கூடவே சுப.வீ.யும் இதில் தெளிவான அறிக்கை கொடுத்தார்கள்.

உண்மையில், இந்த தீர்ப்பு ‘அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்றே சொல்கிறது.

1. தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்படவில்லை.
2. ஆகமவிதிகளின் படி தான் அர்ச்சகர் நியமனம் செய்யப்படவேண்டும்.

ஓகே..இதில் ஆகமவிதிகள் ‘பிராமணர் தான் அர்ச்சகர் ஆகவேண்டும்’ என்று சொல்வதாக பிராமணர்கள் அடித்துவிட, எப்போதும்போல் ஃபேஸ்புக் புரட்சி நடந்தது. உண்மையில், எந்தவொரு ஆகமத்திலும் அர்ச்சகரின் ஜாதி பற்றி குறிப்பிடப்படவே இல்லை. அதாவது ஆகமங்களின்படி ‘அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்பது தான் கதையில் பெரிய ட்விஸ்ட்!

1971ல் முட்டாள்தனமாக பொங்கி கோட்டைவிட்டது போன்றே, இப்போதும் நடக்க வேண்டும் என்பது தான் பிராமணர்களின் ஆசை. அதனால்தான் பிராமண ஊடகங்களும், பிராமணர்களும் ‘சுப்ரீம் கோர்ட்டே சொல்லிடுத்து..எல்லோரும் ஆத்துக்குப் போய் புள்ளகுட்டிகளை படிக்க வைங்கோ..போங்கோ..போங்கோ’என சபையைக் கலைப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். அதை உண்மை என்று நம்பும் அப்பாவி நான் - பிராமின்ஸ் இந்துக்களே, இப்போது காந்திய வழியில் இறங்குவோம். நிதானமாக இதை அணுகுவோம்.

தீர்ப்பின்படி, இப்போது நிலவரம் என்ன?

1. தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்படவில்லை. (எனவே அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்.)
2. ஆகமவிதிகளின் படி தான் அர்ச்சகர் நியமனம் செய்யப்படவேண்டும். (ஆகமவிதிகள் பிராமணர்தான் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. எனவே அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்.)


‘அதர்வண வேதத்தில் ஏவுகணை தொழில்நுட்பம் இருக்கு. சாம வேதத்தில் சொன்னபடி, ஏரோப்ளேனே செய்யலாம். உண்மையான இந்துவாக இருந்தால், இதைப் பகிருங்கள்’ என்று வரும் அண்டப்புளுகுகளை ஷேர் செய்யும் அப்பாவிகள் நீங்கள் என்பதால் தான், ’ஆகமத்தின்படி பிராமணர்தான் அர்ச்சகர் ஆகணும்’ எனும் புரளி பாரம்பரிய ஊடகங்கள் மூலமாகவே பரப்பப்படுகின்றன. முதலில் அதை நம்பாதீர்கள், பரப்பாதீர்கள். ‘வெற்றி..வெற்றி’ என்று நாம் கூவ வேண்டிய நேரமிது. இப்போதும் ஏமாந்து போகாதீர்கள்.

இன்னொரு வேடிக்கையான தகவல். இந்து அறநிலையத்துறையின் கீழ் இருப்பது 36000 கோவில்கள். அதில் ஆகமவிதிப்படி இருப்பது 1200 கோவில்கள் தான் என்று அவாளே சொல்கிறார். ஆகமவிதிகள் தான் பிரச்சினை என்றால், முதலில் 1200 கோவில்கள் தவிர்த்து, மற்ற கோவில்களில் இந்த 207 பேரை நியமிக்கலாம் தானே?

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழக அரசே ஆகமவிதிகள் பயின்ற, தகுதியான நபர்களை அர்ச்சகர் ஆக்கலாம். ஏற்கனவே 207 பேர் தகுதி பெற்று இருக்கிறார்கள். அவர்களை உடனே அர்ச்சகராக நியமிப்பது தமிழக அரசின் கடமை.

 எனவே இளையராஜாவை எங்காவது பார்த்தால் ‘இந்த 207 பேரையும் அர்ச்சகராக நியமிப்பீர்களா?’என்று கேட்கும்படி ஊடக நண்பர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

------------------------------------

அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் – கேள்வி 1:
பிராமணர்களை அழிக்க வேண்டும் என்பதற்காகவே கொண்டுவரப்படுகிறதா இந்த சட்டம்?

பதில்:

நாத்திகர்கள் இதை முன்னெடுப்பதால், இந்த சந்தேகம் வருவது இயல்பு தான். இந்த சட்டத்திற்குப் பின்னால் இருக்கும் நோக்கம், பிராமணர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ஆதிக்க சாதிகளுக்குமே எதிரான, உயர்வான நோக்கம். பிறப்பை மட்டுமே தகுதியாகப் பார்க்கும் இழிநிலையை மாற்றுவது தான் இதன்பின்னால் இருக்கும் நோக்கம். இந்த நோக்கத்தினால் பாதிப்பு பிராமணர்களுக்கு மட்டும் என்பதே பெரும் பொய்.

நமது சமூக அமைப்பில் தொழில்கள் ஜாதிவாரியாக பிரிக்கப்பட்டிருந்தன. ஒரு ஜாதியில் பிறந்தோர், இன்னொரு ஜாதியினரின் தொழிலைச் செய்ய முடியாது. உதாரணமாக, காவல் தொழில் தென்மாவட்டங்களில் தேவர் சாதி போன்ற ஆதிக்கசாதியினர் கையில் இருந்தது. காவல் அமைப்பில் ஒரு அங்கமான தலையாரி பதவியும் வாரிசு அடிப்படையிலேயே காலங்காலமாக இருந்து வந்தது.

அப்படித்தான் கோவில்பட்டி அருகே, என் நண்பனின் ஊரிலும் இருந்துவந்தது. தலையாரி குடும்பம் என்றே ஒரு குடும்பம் அங்கே இருந்தது. பரம்பரை பரம்பரையாக அவர்களின் வாரிசுகளே தலையாரிகளாக இருந்துவந்தார்கள். வாரிசு அடிப்படையில் பதவி என்பது வர்ணாசிரமத்தை கட்டிக்காக்கும் விஷயம் என்பதால், வாரிசுரிமை 1970களில் நீக்கப்பட்டது. (சரியான ஆண்டு, நினைவில் இல்லை).

அப்போது தலையாரியாக இருந்த தேவருக்கு பிரச்சினை இல்லை. ஆனால் அவர் மகன் வளர்ந்து பெரியவன் ஆனபோது, அதாவது தேவர் ஓய்வுபெற்றபோது பெரும்சிக்கல் எழுந்தது. 1980களில் அவரது பையனுக்கு வாரிசுரிமை அடிப்படையில் வேலை மறுக்கப்பட்டது. அதற்குப் பதிலாக, வேறொருவர் அந்த வேலையைப் பெற்றார். அவர் ஒரு தலித். சிக்கலின் தீவிரம், இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

வாரிசு, தேவர் என்றாலும் ஒரு அப்பாவி. எப்படியும் அப்பா வேலை கிடைத்துவிடும் என்று நம்பி வளர்ந்தவர். அது இல்லையென்றானதும், பதறிப்போனார். சொந்தங்கள் மீசை முறுக்கி, என்ன செய்யலாம் என்று ஆலோசித்தன. தலித்தை கொன்றுவிட்டால் என்ன எனும் யோசனை உதித்தது. இது தெரிந்த தலித், ஊரைவிட்டு ஓடிப்போனார்.

தலித்தைக் கொன்றாலும் வேலை வாரிசுக்கு கிடைக்காது, ஜெயில்வாசம் தான் மிஞ்சும் எனும் அறிவுரை தேவர்சாதியில் இருந்த சில பெரியோர்களாலேயே சொல்லப்பட்டது. எனவே சட்டப்படி, நீதிமன்றத்தை நாடி வேறு ஊரிலாவது வேலை கேட்போம் என்று முடிவுசெய்து கோர்ட் படியேறினார்கள்.

அந்த தலித் தலையாரியாக அந்த ஊரில் ரிட்டயர்டு ஆகும்வரை பணியாற்றினார். ஊரில் 90% தேவர்கள் தான். சிலசில முணுமுணுப்புகள் எழுந்தாலும், மிகக்கவனமாக பணியாற்றி, அந்த தலித் நல்ல பெயர் எடுத்தார். அவர் என் அப்பாவின் நண்பர் என்பதால், எனக்கு முழுக்கதையும் தெரியும். அதுபற்றி பேசும்போது அவர் ஒருமுறை சொன்னார்: காலங்காலமாக எங்கள் முன்பு நெஞ்சு நிமிர்த்தி நடந்தவர்கள். இப்போது என்னிடம் வந்து நிற்கவேண்டும் என்றால் கூசவே செய்யும். நாம் தற்செயலாக ஏதாவது செய்தால்கூட, அவர்களின் ஈகோ அடிவாங்கும். இப்போது நடந்துகொண்டிருப்பது ஒரு பெரிய சமூக மாற்றம். அதைப் பொறுமையாக, அட்ஜஸ்ட் செய்து தான் நாம் நடத்திக்காட்டவேண்டும். அடுத்த தலைமுறையில் இவ்வளவு எதிர்ப்பு இருக்காது.

அப்படித்தான் ஆனது. 2000ஆம் ஆண்டிற்கு அப்புறம், அவர் தலையாரியாக இருப்பது யாருக்கும் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ஏனென்றால், தலித்கள் கலெக்டராக இருப்பதே சாதாரணமான நேரத்தில், தலையாரி ஒன்றும் பெரியவிஷயம் இல்லையே!

சரி, கோர்ட்டுக்குப் போன தேவரின் வாரிசு கதையைப் பார்ப்போம். 20 வருடங்களுக்கு மேலாக போராடினார். தாங்கள் இந்த நாட்டிற்கு(ஜமீனுக்கு) செய்த உயிர்த்தியாகங்கள் மற்றும் சேவைகளை எல்லாம் பட்டியல் போட்டார். எனவே, நியாயப்படி இந்த வேலை தனக்கு வருவது தான் சரியாக இருக்கும் என்று மன்றாடினார். ஆனாலும் கோர்ட் ‘இனியும் பிறப்பின் அடிப்படையில் தகுதியை நிர்ணயிக்க முடியாது’ என்று மறுத்துவிட்டது. பலவருட நீதிமன்றப் போராட்டம், சொந்தங்கள் மத்தியில் தலைகுனிவு, வறுமை எல்லாம் சூழ, தன் நாற்பதாவது வயதில் அவர் மனநிலைப் பாதிப்புக்கு உள்ளானார். நாற்பத்தி இரண்டாவது வயதில் தற்கொலை செய்துகொண்டார்.

‘இந்த நாட்டிற்கு ஒரு ஆபத்தென்றதும், வேல்கம்புடன் போருக்குப் போனது நாங்க. மற்ற ஜாதிகளின் பாதுகாப்பிற்காக, தாலியறுத்தது நாங்க. எல்லோரும் வணிகம் செய்து துட்டு எண்ணிக்கொண்டிருந்தபோது, எத்தனை பேர் செத்தார்கள் என்று பதறிக்கிடந்தது நாங்க. எங்க தியாகத்திற்கு பொருள் இல்லையா?’ என்று அந்த வீட்டுப்பெண்கள் கதறினார்கள்.

இன்றைக்கு பிராமணர்கள் அதையே கேட்கிறார்கள். ஒரு கோவிலுக்காக ஒரு குடும்பம் காலங்காலமாக உழைத்திருக்கிறது என்றால், அவர்களுக்குத் தானே அர்ச்சகர் வேலையில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.

ஆனால் இங்கே ‘பிறப்பால் அனைவரும் சமம்’ எனும் சமூகநீதி நிலைநாட்டப்படுவது தான் முக்கியம். ஒருவனின் தகுதி என்பது, அவனின் சொந்த உழைப்பால் தான் வரவேண்டும். ஒரு குலத்தில் பிறந்ததாலேயே அவனுக்கு தகுதி உண்டு என்பதோ இல்லை என்பதோ ஜனநாயகப் பண்பும் அல்ல, மனிதநேயமும் அல்ல.

இன்றைக்கு பிராமணர்கள் சந்திக்கும் இந்த கஷ்டத்தை(?), ஏற்கனவே ஏதோவொரு விதத்தில் எல்லா ஜாதிகளும் அனுபவித்துத்தான் இங்கே சமூகநீதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எல்லா ஜாதிகளுமே தங்களுக்கான தொழிலை, பிறருடன் பகிர்ந்துகொண்டாக வேண்டிய கட்டாயம் இங்கே எப்போதோ வந்துவிட்டது. நீங்கள் கொஞ்சம் மேலே உட்கார்ந்து இருந்ததால், உங்களுக்கு இது தெரியாமல் போயிருக்கலாம்.
மொத்தத்தில், பழைய நாட்கள் போய்விட்டது. இந்த மாற்றம் பிடிக்கிறதோ இல்லையோ, இதை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். ’எல்லோரும் மனுஷா தான்’ என்று இப்போதாவது உணர்வது தானே நியாயம்!

(தொடரும்)
 
மேலும் வாசிக்க... "அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்! - பாகம் 1"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, November 28, 2015

திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 66

66. மாற்றம்...முன்னேற்றம்...வளர்ச்சி

Transition:
ஒரு சினிமா இரண்டரை மணி நேரம் ஓடினாலும், அதன் உள்ளே நடக்கும் சம்பவங்கள் அதே போன்று இரண்டரை மணி நேர சம்பவங்களாக இருப்பதில்லை. ஒரு ஹீரோ பிறந்ததில் இருந்து இறக்கும்வரையான முழு வாழ்க்கைகூட இந்த இரண்டரை மணி நேரத்தில் சொல்லப்பட்டுவிடுகின்றன. காலம் நகரும் விதம், சினிமாவில் தனித்தன்மையுடன் நடக்கிறது.

ஒவ்வொரு சீனின் முடிவிலும் 'இரண்டு நாட்களுக்குப் பிறகு' என்றோ 'ஒரு மணி நேரம் கழித்து' என்றோ எழுத்துக்கள் போடப்படுவதில்லை. ஆனால் மனித மனம், இந்த இடைவெளியை தன் கற்பனையால் நிரப்பும் வல்லமை கொண்டதாக இருக்கிறது.

ஒருவன் துப்பாக்கியுடன் ஹீரோவை விரட்டுகிறான். இருவரும் ஒரு இருட்டான அறைக்குள் போகிறார்கள்.துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்கிறது. அமைதி. ஹீரோ கையில் துப்பாக்கியுடன் வெளிவருகிறான். - இப்படி ஒரு சீனைப் பார்க்கும்போது, இடையில் இருட்டில் நடந்தது என்ன என்று ஆடியன்ஸும் தங்கள் கற்பனை சக்தி மூலம் புரிந்துகொள்கிறார்கள்.

'நெக்ஸ்ட் ஃப்ரை டே..காலைல 9 மணிக்கு ஷார்ப்பா ரயில்வே ஸ்டேசனில் இருப்பேன்' என்று ஒரு கேரக்டர் வசனம் பேசியதும், அடுத்த சீன் ரயில்வே ஸ்டேசனில் ஆரம்பித்தால், அது வெள்ளிக்கிழமை 9 மணி என்று ஆடியன்ஸ் தாமாகவே புரிந்துகொள்கிறார்கள். 'ஒரு செகண்ட்டில் எப்படிப்பா வெல்ளிக்கிழமை வரும்?' என்று யாரும் லாஜிக் கேட்பதில்லை. (சில இணையப் போராளிகள் அதையும் சீக்கிரமே கேட்பார்கள் என்று யூகிக்கிறேன்.)

ஒரு சீனில் இருந்து இன்னொரு சீனுக்கு மாறுவதை ஆங்கிலத்தில் transition என்கிறார்கள். transition என்பதற்கு சீரான மாற்றம் என்று அர்த்தம். இந்த மாற்றம்  என்னென்ன வகைகளில் சொல்லப்படுகிறது என்று இப்போது பார்ப்போம்.

1.       FADE IN:
ஒரு திரைக்கதை அல்லது சினிமா ஆரம்பிக்கிறது என்பதைக் குறிப்பது ஃபேட் இன். டைட்டிலுக்குப் பிறகு, ஆக்சன் ஆரம்பிக்கும் நேரம் Fade In. எனவே இது திரைக்கதையில் ஒரே ஒரு முறை தான் எழுதப்படும். அதாவது, உங்கள் திரைக்கதையின் முதல் வரி, இந்த Fade In.

2.       CUT TO:

ஒரு சீன் முடியும்போது, இந்த இடத்தில் கட் செய்து அடுத்த இடத்தில்/நேரத்தில் காட்சி ஆரம்பிக்கிறது என்று சொல்வது இந்த கட் டூ. வீட்டில் நடக்கும் ஒரு சீன் முடிந்து, அடுத்த காட்சி காலேஜில் ஆரம்பித்தால், இப்படி எழுதுவோம்:

SCENE 1: INT.HERO HOME – DAY
****
****
CUT TO :

SCENE 2: EXT.COLLEGE-DAY

ஆனால் சீனின் தலைப்பிலேயே இடமும் நேரமும் மாறுவதை சுட்டிக்காட்டும் வழி இருப்பதால், இந்த கட் டூ-ஐ எழுதுவது தேவையற்ற விஷயமாக தற்போது கருதப்படுகிறது. எனவே இதைத் தவிர்க்கலாம். எங்காவது ஸ்பெஷலான ஒரு இடம் அல்லது நேரத்திற்கு நடக்கும்போது மட்டும், CUT TO-ஐக் குறிப்பிடவும்.


3.       MATCH CUT

ஹீரோவும் ஹீரோயினும் ஹாலில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஹீரோவை ஹீரோயின் தள்ளிவிடுகிறாள். ஹீரோ மல்லாக்க விழுகிறான். அவன் விழுவது, பெட்டில்; பெட் ரூமில் இருக்கும் ஒரு பெட்டில். - இந்த மாதிரிக் காட்சிகளை படங்களில் பார்த்திருப்பீர்கள். இப்படி ஸ்மூத்தாக, இரு இடங்களை அல்லது ஆட்களை அல்லது இரு பொருட்களை இணைப்பது தான் மேட்ச் கட்.

சுவாரஸ்யத்தைக்கூட்டவும், நேரத்தைக் குறைக்கவும் உதவுபவை இந்த மேட்ச் கட்கள். உங்கள் திரைக்கதையில் அப்படி எங்காவது மேட்ச் கட் செய்ய முடியுமா என்று சோதித்து, முடிந்தால் மாற்றிக்கொள்ளுங்கள்.

 4.       DISSOLVE TO:

ஒரு சீன் மறையும்போதே, இன்னொரு சீன் அதன் மேல் தோன்றுவது தான் DISSOLVE TO. பொதுவாக 'காலம் நகர்கிறது' என்பதைக் குறிக்கவே இந்த ட்ரான்சிசன் உபயோகிக்கப்படுகிறது. வாழ்க்கை வரலாற்றுக் கதைகளில் இந்த ஆப்சன் அதிகம் பயன்படும்.

5.       FADE OUT:
சுபம் போட்டு, திரைக்கதையை முடிக்க உதவுவது ஃபேட் அவுட். FADE In-ற்கு  நேரெதிரானது இது. திரைக்கதையுன் கடைசி வார்த்தை.


இவை எடிட்டிங்கில் பயன்படும் அடிப்படை விஷயங்கள் என்றாலும், திரைக்கதை எழுதும்போதே இவற்றை நீங்களும் குறிப்பிடலாம். மேலும், டெக்னாலஜி வளர, வளர இந்த ட்ரான்சிசனும் மாறிக்கொண்டே வருகின்றன. எனவே புதிய படங்களைப் பார்க்கும்போது, எப்படி ஒரு சீனில் இருந்து இன்னொரு சீனிற்கு போகிறார்கள் என்று பாருங்கள். அப்படி பயன்படும் சில புதிய உத்திகள்:

1.   இசையும் ஒலியும்:

ஒரு கேரக்டர் 'நாளைக்கு நீ அமெரிக்கா போறே' என்று சொல்லும்போதே, ஃப்ளைட் சத்தம் ஒலிக்கப்படும். அடுத்த சீனை அமெரிக்காவில் ஆரம்பித்தால், ஆடியன்ஸ் இடையில் நடந்தது என்ன என்று புரிந்துகொள்வார்கள். ஏர்போர்ட் சீன் மிச்சம். இதே போன்றே ஆம்புலன்ஸ் சத்தம், போலீஸ் சைரன் போன்ற ஒலிகள் எப்படி ஒரு காட்சியை சுருக்குகின்றன என்று கவனித்து வாருங்கள்.


2. இருக்கு ஆனா இல்லை:

ஹீரோ தன் வீட்டில் குளிப்பதற்காக ஷவரைத் திறக்கிறான்.

ஷவரில் இருந்து தண்ணீர் கொட்டுகிறது.

ஷவருக்குக் கீழே ஹீரோயின் குளித்துக்கொண்டிருக்கிறாள், அவள் வீட்டில்.

இப்படி ஹீரோ வீட்டில் கட் செய்து, ஹீரோயின் வீட்டில் ஓப்பன்(!) செய்தால், அற்புதமாக இருக்கும் இல்லையா? இதுவும் ஒருவகையில் மேட்ச் கட் தான். ஒரே இடத்தில் நடக்காமல், இன்னொரு இடத்தில் நடக்கும் மேட்ச் கட் இது.


3. கேள்வியும் பதிலற்ற பதிலும்:

ஹீரோ
(ஹீரோயினிடம்)

படத்துக்குப் போகலாமா?

CUT TO: EXT.ROAD

பைக்கில் இருவரும் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

இப்படி ஒரு இடத்தில் கேட்கப்படும் கேள்விக்கு, இன்னொரு இடத்தில் சொல்லப்படும் அல்லது நடக்கும் ஆக்சனை பதிலாக மேட்ச் செய்யலாம். இது கட் டூவும் மேட்ச் கட்டும் கலந்த கலவையாக வரும்.

ஒவ்வொரு சீனையும் இப்படி ஸ்பெஷல் ட்ரான்சிசனுடன் முடிக்க வேண்டிய அவசியம் இல்லை. சில சீன்களில் மட்டும் இப்படி வந்தால் சுவாரஸ்யமாக இருக்கும்.

Softwares:

ிரைக்கை எழும்ப லெஃப்ட் அலைன்மென்ட், சென்டர் அலைன்மென்ட் என்றெல்லாம் செய்துகொண்டிருப்பது இம்சையாக இருக்கலாம். அப்படியென்றால், Celtex சாஃப்ட்வேர் உங்களுக்கு நல்ல உதவியான ஒன்றாக இருக்கும். அதுவொரு இலவச,  திரைக்கதை எழுதும் சாஃப்ட்வேர். அதை ஷூட்டிங் ஸ்க்ரிப்ட்டாக மாற்றுவதும் ஈஸி. அதைப் பற்றி, நண்பர் ஜெய்லானி விரிவாக எழுதியிருக்கிறார். இங்கே போய் படித்துக்கொள்ளவும்.

இருப்பினும், ஆரம்ப கட்டத்தில் இருப்போருக்கும் மைக்ரோசாஃப்ட் பிரியர்களுக்கும் MS-Word போதுமானது.

(ொடும்)
 

மேலும் வாசிக்க... "திரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 66"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.