Friday, June 5, 2015

காக்கா முட்டை - திரை விமர்சனம்

அதாகப்பட்டது..

தனுஷ்-வெற்றிமாறன் தயாரிப்பில், மணிகண்டனின் இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் படம் காக்கா முட்டை. வெளியாகும் முன்பே ஏகப்பட்ட விருதுகளை அள்ளிய படம் என்பதால், படத்தின் மேல் மரியாதை கலந்த எதிர்பார்ப்பு. அதே நேரத்தில் ‘கலைப்படமோ’ என்ற பயமும்! படத்தைப் பற்றிப் பார்ப்போம், வாருங்கள்.

ஒரு ஊர்ல :
காக்கா முட்டை திருடித் தின்பதால், சின்ன காக்கா முட்டை-பெரிய காக்காமுட்டை என்று அழைக்கப்படும் இரு சேரி சிறுவர்களுக்கு பீட்சா சாப்பிட வேண்டும் எனும் ஆசை எழுகிறது. அதற்காக அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளும், அந்த ஆசையால் எழும் பிரச்சினைகளுமே கதை.

உரிச்சா:
முதலில், கலைப்படம் என்றால் மெ...து....வா...க..நகரும் என்ற இந்திய மாயையை உடைத்ததற்காகவே இந்தப் படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்டாட வேண்டும். கோழி முட்டைகூட வாங்கிச் சாப்பிட முடியாத வறுமை என்பதைக்கூட போகிற போக்கில் கேஷுவலாகச் சொல்லிச் செல்கிறார்கள்.

அண்ணன் தம்பிகளாக இரண்டு சிறுவர்கள். ஜெயிலில் அப்பா. உழைத்துக் காப்பாற்றும் அம்மா. துணைக்கு பாட்டி, பள்ளிக்குச் செல்லாத சிறுவர்கள் என ஒரு டிபிக்கல் சேரி குடும்பத்தைப் பிரதிபலிக்கும் கேரக்டர்களுடன் படம் துவங்குகிறது. உலகம் புரியாத, கொஞ்சம் கொஞ்சமாக உலகம் புரிந்துகொள்ளும் சிறுவர்களாக இருவரும் வருகிறார்கள். இரண்டு பேரும் பேசிக்கொள்ளும் பெரும்பாலான வசனங்கள் புன்னகையை வரவழைத்துக்கொண்டே இருக்கின்றன. சேரிக்கு அருகில் ஒரு பீட்சா கடை வருகிறது. அதுவரை கொஞ்சம் மெதுவாகச் செல்லும் படம், அதிலிருந்து வேகமெடுக்கிறது.

ஒரு அரசியல்வாதி....வருங்கால அரசியல்வாதியாகும் தகுதியுள்ள ஒரு சேரி இளைஞன்..ஒரு பிஸினஸ்மேன் என படத்தின் முக்கியமான கேரக்டர்களை படபடவென அறிமுகப்படுத்தியபடியே படம் வேகமாக கதைக்குள் நுழைகிறது. இரு சேரிச் சிறுவர்களுக்கு பீட்சா சாப்பிட ஆசை..சாப்பிட்டார்களா, இல்லையா என்று மட்டும் இந்தப் படத்தை எடுத்திருந்தால், படத்தில் வரும் மீடியா போன்றே இந்தப் படக்குழுவும் ஆகியிருக்கும். ஆனால் மிகவும் புத்திசாலித்தனமாக, பீட்சா சாப்பிடப் போவதால் வரும் பிரச்சினைகளை வைத்து இந்த சமூகத்தையே கண்ணாடியாக பிரதிபலித்திருக்கிறது இந்தப் படம். அதனால் தான் வெறும் டொய்யாங்..டொய்யாங் கலைப்படமாக ஆகாமல், உண்மையான உலக சினிமாவாக ஆகியிருக்கிறது.

படத்தில் பழரசம் என்று ஒரு கேரக்டர் வருகிறது. சிறுவர்களுக்கு நண்பராக..தமிழ் சினிமாவில் அப்படி ஒரு இயல்பான கேரக்டரை நான் பார்த்ததில்லை. குழந்தைகளோடு குழந்தையாக ‘ஏன், சிம்பு ரசம் சோறு சாப்பிட மாட்டானா?’எனும்போது தியேட்டரே அதிர்கிறது. அதே போன்றே சூதுகவ்வும் படத்தில் பட்டையடித்து தண்ணி அடிக்கும் நடிகரின் கேரக்டரும். இன்றைய அரசியல்வாதி எப்படி உருவாகிறான் என்று செம ஜாலியாக சொல்கிறார்கள்.

பீட்சா பிரச்சினையை போலீஸ்-அரசியல்வாதி-பிஸினஸ்மேன் -மீடியா எல்லோரும் எப்படிக் கையாள்கிறார்கள் என்பதைக் காட்டுவதில் தான் டைரக்டர் உயந்துநிற்கிறார். ஊரே அந்தப் பிரச்சினையால் பரபரப்பாக, ஒன்றும் தெரியாமல் வழக்கம்போல் அந்தப் பொடியன்கள் உலா வருவது தான் உலக சினிமா. கடைசிவரை குழந்தைகளை குழந்தைகளாகவே காட்டியிருப்பதற்குப் பாராட்ட வேண்டும். வழக்கமான ஓவராகப் பேசும் சினிமாக் குழந்தைகள் போல் இல்லாமல், அந்த வயதிற்கு என்ன பேசுவார்களோ அதை மட்டும் பேசவைத்திருப்பது அருமை.

படம் முடிந்து வெளியே வரும்போது, நாம் எந்த கேட்டகிரியில் இருக்கிறோம் என்று நம்மையே சுயபரிசோதனை செய்ய வைத்திருப்பதில்தான் இந்தப் படம் வெற்றியடைகிறது. ஒரு மணிநேரம், நாற்பது நிமிடத்தில் இண்டர்வெல்லே இல்லாமல் படம் ஓடுவது சிறப்பு. ஒரு உலக சினிமாவில் ஜாலியாகவும் கதை சொல்லலாம் என்று நிரூபித்து, போலி அறிவுஜீவிகளிடம் இருந்து நம்மை காப்பாற்றியதற்காகவே ஒரு பெரிய சல்யூட்.

பொடியன்கள்:

பெரியோரின் சிந்தனை ஓட்டத்துடன் ஒட்டமுடியாத அப்பாவித்தனம், அண்ணன் - தம்பிக்குள் இருக்கும் இயல்பான பாசமும் சண்டையும், வறுமை விரட்டினாலும் சுயமரியாதையுடன் இருப்பது என விக்னேஷ்-ரமேஷ் இருவரும் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். இயல்பாகவே சின்ன காக்கா முட்டையான ரமேஷிடம் நம் மனம் பறிபோகிறது. நடிப்பு என்றே நம்ப முடியாதபடி, அப்படி ஒரு யதார்த்தம்.

சொந்த பந்தங்கள்:
அம்மாவாக ஐஸ்வர்யா..சினிமாவுக்கு வந்ததிற்கு அவர் பெயர் சொல்ல, இந்த ஒரு படம் போதும். கண்டிப்பான அம்மாவாக, குடும்ப பாரத்தைத் தாங்குபவராக யதார்த்தமான நடிப்பு. பழைய அர்ச்சனா ஞாபகம் வந்துவிட்டது. மொக்கைப் படங்களிலேயே கண்களால் பேசுவார். இதில் பல விஷயங்களை ஒரு பார்வையிலேயே சொல்லிவிடுகிறார். போலீஸ் வேன் பயணம் ஒரு உதாரணம்...அதே போன்று பாட்டியாக நடித்திருப்பவரும்..என்னா நடிப்பு!


பாசிடிவ் பாயிண்ட்ஸ்:

இசை, ஒளிப்பதிவு, வசனம், இயக்கம், நடிப்பு, எடிட்டிங் என எல்லாமே...தனுஷ், வெற்றிமாறன், மணிகண்டன் என இப்படத்தில் பணியாற்றிய அனைவருமே அதற்காக பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

பார்க்கலாமா?


கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.

டிஸ்கி:
நான் எழுதிவரும் தமிழில் உலக சினிமா தொடரில் இந்தப் படம் முதல் இடத்தைப் பிடிக்கும்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

  1. கட்டாயம் பார்க்க காத்திருக்கிறேன்

    ReplyDelete
  2. இன்னிக்கு பார்க்க போறேன்.

    ReplyDelete
  3. Excellent movie... good and honest review... kudos...

    ReplyDelete
  4. Excellent movie... good and honest review... kudos...

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.