Saturday, November 7, 2015

ஹே ராம் - தமிழில் ஒரு உலக சினிமாடிஸ்கி: உலக நாயகன் கமலஹாசனின் பிறந்த நாளையொட்டி, ஸ்பெஷல் மீள்பதிவு.

இது இரவின் கோரைப்பற்கள் குதறிய
குஷ்டக் காலை விடியல்.
இது காத்துக்கிடந்த விடியல் அல்ல.

மெல்ல வருடும் இரவின் அலைகள் எங்கே?
இதயவலிக்கு ஆறுதல் எங்கே?
என்று தேடிச் சென்றனரே தோழர்கள் - அது
இந்த விடியல் அல்ல!
(இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை பற்றி பாகிஸ்தான் கவிஞர் ஃபெயிஸ் அகமத் ஃபெயிஸ்).

னிதர்களை ஒருங்கிணைக்கும் மாபெரும் சக்தி எதற்கு உண்டு? அன்பு, அதிகாரம், பணம் போன்றவற்றையெல்லாம் பின்னுக்குத்தள்ளும் வல்லமை படைத்த அந்த சக்தி, வெறுப்பு தான்! உலக வரலாற்றில் மக்களை எளிதில் திரட்டும் விசையாக இருந்தது(இருப்பது) வெறுப்பு தான். ஹிட்லரின் இனப்படுகொலையானாலும், இந்திய மதக்கலவரங்களானாலும், தமிழக ஜாதிக்கலவரங்களானாலும் அது செயல்படும்விதம் இது தான்: ஒரு பொது எதிரியைக் கட்டமைத்தல், நடக்கும் எல்லாத் தவறுகளுக்கும் அந்த எதிரியைவே காரணமாக்குதல், அதன்மீது வெறுப்பைத் தீவிரப்படுத்துதல்.

மக்களை அன்பின் பேரால் திரட்டுவது என்பது நடைமுறைச்சாத்தியமற்ற ஒன்று. ஆக்கப்பூர்வமான செயலுக்கு இணையாத மனிதர்கள், அழிவுச்செயலுக்கு உடனே ஒன்றுகூடுவர். உரத்த குரலில் கோஷமிட்டபடி, எதிர்களை அழிக்கப்பாய்வர். இதுவே மனித சமூகத்தின் நடைமுறை நியதி. ஆனால் அன்பினாலும் மக்களை ஒன்று திரட்ட முடியும் என்று ஒரு ஆத்மா நம்பியது. தியாகத்தை அது மக்கள்முன் வைத்தது. தன்னைத் தகுதிப்படுத்திக்கொள்வதே, வெற்றியின் வழி என்று சொன்னது. எதிர்த்தரப்பை எதிரியாக பாவிக்காமல், மாற்றுத்தரப்பு என்றே தன் மக்களிடம் சொன்னது. எதிர்த்தரப்பில் இருந்த மனசாட்சியுள்ள மக்களிடம் அது பேசியது.

தனது வெளிப்படைத்தன்மையால், தியாகத்தால், நேர்மையால் அது அன்பின் மூலமே மனிதர்களை ஒருங்கிணைத்தது. பெரும்படை பலம் இருந்தும் பிரிட்டிஷ் தரப்பை, அன்பினால் திரண்ட கூட்டத்தின் முன் மண்டியிட வைத்தது. அதனாலேயே அந்த ஆத்மா, மகாத்மா ஆனது.

வெறுப்பிற்கு அன்பு எதிரி. வெறுப்பின்மூலமே கூட்டம் சேர்க்கும் எதிர்மறை சக்திகளுக்கு, அன்பை முன்வைக்கும் யாருமே எதிரி தான். இந்துத்துவா, முஸ்லிம் அடிப்படை வாதம், கம்யூனிஸம் என எல்லாத்தரப்புமே காந்தியை வெறுத்தார்கள். அப்படி வெறுத்த ஒரு அழிவு சக்தி, காந்தியைப் புரிந்துகொண்ட ஒரு கதை தான் ஹே ராம்!

மரணப்படுக்கையில் கிடக்கும் சாகேத்ராமின் ஃப்ளாஷ்பேக்கில் விரிகிறது அவரது கதை. சாகேத்ராதொல்பொருள் ஆய்வாளரான சாகேத் ராம், நேரடி நடவடிக்கை நாளினால் தன் அன்பு மனைவியைப் பறிகொடுக்கிறான். முஸ்லிம்களுக்கு அதிக இடம் கொடுத்த காந்தியே இதற்குக் காரணம் எனும் இந்துத்வா போதனையால், காந்தியைக் கொல்லும் திட்டத்தில் இறங்குகிறான். ஆனாலும் மனசாட்சியின் உறுத்தலும், காந்தி பற்றிய சாமானிய மக்களின் பார்வையும் அவனை எப்படி மாற்றுகிறது என்பதே இந்தப் படத்தின் கதை.

பிரிவினை என்று ஒன்று நடந்தால் என் பிணத்தின் மீது தான் நடக்கும் என்று சொன்ன காந்தியையும், காங்கிரஸையும் உலுக்கி, உண்மையை உணர வைத்த நாள், முகம்மது அலி ஜின்னா அறிவித்த நேரடி நடவடிக்கை நாள். ’இனிமேல் எங்களால் இங்கே இணைந்து வாழ முடியாதுஎன்று நேரடி வன்முறை மூலம் பிரிட்டிஷாருக்கும் உணர்த்திய நாள் அது. கமலஹாசனின் அறிவுத்திறனுக்குச் சான்று, படத்தின் கதையினை அந்த நேரடி நடவடிக்கை நாளில் இருந்து ஆரம்பித்தது. பிரிட்டிஷாரை வென்ற காந்தி, தன் சொந்த மக்களின் மதவெறி முன் தோற்கும் படலம் ஆரம்பித்த நாள் அது. கோட்சே சுட்ட நாளில் அந்த தோல்வி நிறைவுபெற்றது. படத்தின் மறைமுகக் கதையும் அதுவே!

இந்தப் படம் 1946 ஆகஸ்ட்டில் துவங்கி 1948 ஜனவரிவரை இருந்த, கொந்தளிப்பான காலகட்டத்தைப் பதிவு செய்கிறது. ஒரு திரைப்படத்தில் வரலாற்று நிகழ்வுகளைப் பதியும்போது, திரைக்கதை ஜம்ப் ஆகி ஜம்ப் ஆகிச் செல்வதைத் தவிர்க்க முடியாது. ஆனாலும் இதில் கமல் முடிந்தவரை ஸ்மூத்தான ஃப்ளோ இருக்கப் போராடியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். வட இந்தியர்களால், இந்த தாவுதலைப் புரிந்துகொள்ள முடியும். இடைப்பட்ட சில நிகழ்வுகள் வசனத்தில் சொல்லப்பட்டாலும், இந்திய பிரிவினை வரலாறு பற்றி அறியாதோர்க்கு, அது திரைக்கதையின் குறையாகவே தெரியும். ஆனால் இந்திய பிரிவினை வரலாறு அறிய விரும்புவோருக்கு, இந்தப் படம் ஒரு நல்ல ஆரம்பம்.

இந்தியப் பிரிவினையினால் அதிகம் பாதிப்புக்குள்ளானவை வங்காளம்-பஞ்சாப்-டெல்லி தான். ஏனென்றால் (பிரிக்கப்படாத) வங்கத்திலும் பஞ்சாப்பிலும் தான் இந்து-சீக்கியர்களும் முஸ்லிம்களும் சரிபாதியினராக இருந்தனர். பிரிவினைக்குப் பின் பாகிஸ்தானிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள், டெல்லியில் தான் அகதி முகாம்களில் தங்கியிருந்தனர். வங்காளம் கிழக்கு எல்லை, பஞ்சாப்போ மேற்கு எல்லை, நடுவில் டெல்லி. இவ்வாறு மூன்று இடங்களில் நடந்த சம்பவங்களை, சம்பந்தமேயில்லாத தமிழ்நாட்டுத் திரைப்படத்தில் சொல்ல வேண்டும் என்பது கமலுக்குப் பெரும் சவாலாகவே இருந்திருக்கும்.

அதை தன் புத்திசாலித்தனத்தால் வென்றார் கமல். தமிழனான கதாநாயகனுக்கு டெல்லி முஸ்லிம் அம்ஜத் அலி கானும், பஞ்சாப் பிஸினஸ்மேன் லால்வானியும் நண்பர்கள். தமிழ்க் கதாநாயகனுக்கு வங்காளப் பெண் அபர்னாவுடன் காதல்+ திருமணம். இவ்வாறு படத்தின் முக்கியக் கேரக்டர்களை, வரலாற்றின் முக்கிய பகுதிகளைச் சேர்ந்தவராக உருவாக்கியதிலேயே திரைக்கதையின் போக்கு ஸ்மூத்தாகி விடுகிறது.

இந்தியப் பிரிவினையின் ரத்த வரலாற்றை அந்த மூன்று இடங்களைக் கொண்டே சொல்லிவிட முடியும்.

1. பாகிஸ்தான் பிரிவினையே ஒரே தீர்வென்று ஜின்னா நேரடி நடவடிக்க நாளுக்கு அழைப்பு விடுத்தார். அந்த நாளில் பெரும் கலவரம் மூண்டது. இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் வீடுகள், முஸ்லிம்களால் சூறையாடப்பட்டன. பலர் கற்பழிக்கப்பட்டனர்/கொல்லப்பட்டனர். பின்னர், இந்துக்கள் & சீக்கியர்களின் பதிலடி தொடங்கியது. முஸ்லிம்களின் வீடுகள்/கற்பு/உயிர் சூறையாடப்பட்டது. (அபர்ணாவின் பகுதி)

2. பிரிட்டிஷாரால் முழு இந்தியா முட்டாள்தனமாக எவ்வித முன்னேற்பாடுமின்றி பிரிக்கப்பட்டவுடன், லட்சக்கணக்கான இந்துக்கள் பாகிஸ்தானிலிருந்தும், லட்சக்கணக்கான முஸ்லிம்கள் இந்தியாவிலிருந்தும் வெளியேறினர் + விரட்டியடிக்கப்பட்டனர். வரலாற்றின் மாபெரும் இடப்பெயர்வு அது. அதில் கலைந்து போன குடும்பங்கள் எத்தனையோ உண்டு, காணாமல்போன குழந்தைகளும் எத்தனையோ. இந்தியா மதச்சார்பின்மை நிலை எடுத்ததால், இங்கே முஸ்லிம்களுக்காக பேச அதிகார வர்க்கத்தில் ஆள் இருந்தார்கள். ஜின்னாவின் மகள்கூட பாகிஸ்தான் போகவில்லை! ஆனால் பாகிஸ்தானில் நிலைமை தலைகீழ். பாகிஸ்தானிலிருந்து ஒரு ரயிலில் கிளம்பிய அகதிகள் கொல்லப்பட்டு, வெறும் ரயில் இந்தியா வந்தது. (நண்பன் லால்வானியின் பகுதி-படத்தில் வசனத்தாலேயே சொல்லப்படும்)

3. அகதிகளாக தப்பி வந்த இந்துக்கள் பலரும் டெல்லியில் முகாம் அமைத்துத் தங்கினர். பாகிஸ்தானில் நாங்கள் வாழக்கூடாது என்றால், இங்கே முஸ்லிம்கள் மட்டும் எப்படி வாழலாம் என்று ஆவேசம் கொண்டனர். முஸ்லிம்களின் சொத்துக்கள் வன்முறைக்கு இலக்காகின. பல இடங்களில் முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.

இந்தியாவில் வாழ விரும்பிய அவர்கள், பாகிஸ்தானுக்கு ஓடவில்லை. இந்த மதச்சார்பற்ற தேசம், தம்மைக் காக்கும் என்று நம்பினர். அந்த நம்பிக்கையை காந்தி காப்பாற்றினார். ஆம், டெல்லி கலவரத்தை அடக்க, உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார். முஸ்லிம்களும் இந்துக்களும் அவரது அன்பின்கீழ் அடிபணிந்தனர், ஆயுதங்களைக் கீழே போட்டனர். இந்துத்வவாதிகள் பொறுத்தவரைஇங்கே முஸ்லிம்களைக் காக்க இவ்வளவு போராடுகிறாயே..பாகிஸ்தானில் இந்துக்கள் லட்சக்கணக்கில் கொல்வதற்கு என்ன செய்தாய்? இந்தியா இந்து நாடாகும் அரிய வாய்ப்பைக் கெடுத்தவர் காந்திஎன்று கோபம் கொண்டனர். (காந்தியைக் கொல்ல சாகேத் ராம் டெல்லி வருவது+ தற்காப்புக்காக சோடா பேக்டரியில் ஆயுதங்களுடன் இருக்கும் முஸ்லிம்கள்/அம்ஜத்தை சந்திப்பது- காந்தியின் ஆசிரமத்தில் நுழைவது; அப்போது தான் உண்ணாவிரதம் முடிந்து காந்தி பலவீனமாக இருப்பதாகச் சொல்வார்.)

4. ’நாங்கள் வெளியேறினால் இந்தியா சுடுகாடாகிவிடும்/சுக்குநூறாக உடைந்துவிடும்என்று பலநேரங்களில் பிரிட்டிஷாராலும், பிரிட்டிஷ் பத்திரிக்கைகளாலும் ஆரூடம் சொல்லப்பட்டது. அதை மெய்பிக்கும்வகையிலேயே மதக்கலவரங்களும், இருதரப்பு அகதிகள் கொந்தளிப்பும் இருந்தன. இந்த மக்களை ஆற்றுப்படுத்த, ஏதேனும் ஒரு சக்தி
தேவைப்பட்டது. அது கோட்சே எனும் கொடிய சக்தியின் வடிவில் வந்து சேர்ந்தது. காந்தி உண்ணாவிரதம் இருக்கிறார் என்று சொன்னாலே பதறி ஆயுதங்களைக் கீழே போடும் மக்களுக்கு, காந்தி கொல்லப்பட்டார் எனும் செய்தி இடியாக இறங்கியது.

அதுவும் ஒரு இந்துவால், கையில் முஸ்லிம் பெயர் எழுதி, ஒரு சதித்திட்டத்துடன் கொல்லப்பட்டார் எனும்போது, அந்த இழப்பு, இருதரப்பிலும் பெரும் குற்றவுணர்ச்சியை உண்டாக்கியது. அந்த நேரத்தில் கருத்து வேறுபாடுகளால் மனக்கசப்பிலிருந்த நேருவையும் படேலையும் அதுவே இணைத்தது. மக்கள் தேசப்பிதாவின் இழப்பால் அதிர்ச்சியடைந்து, கனத்த மௌனம் சூழ்ந்த வேளையில் நேருவும் படேலும் இந்தியா எனும் தேசத்தை வலுவானதாக மாற்றியமைத்தனர். தேசத்தின் தந்தையின் மரணம், ஏறக்குறைய அடுத்த 40 வருடங்களுக்கு அந்த அமைதியை இந்த நாட்டுக்குத் தந்தது. (கிளைமாக்ஸ் பகுதி)

பிரிவினை வரலாற்றை அறியாத சாமானியனைப் பொறுத்தவரை, கதையோட்டம் எளிமையாக, கீழ்க்கண்டவாறு திரைக்கதையால் புரியவைக்கப்படுகிறது. ஹீரோ ஹீரோயின் அபர்ணாவைப் பார்க்கச் செல்கிறான். ’ஏதோவொருஇந்து-முஸ்லிம் கலவரத்தில் அவளை இழக்கின்றான். பழிவாங்க அலைகின்றான். (இடையில் கதை 1946 ஆகஸ்ட்டிலிருந்து 1947 ஆகஸ்ட்டிற்கு ஜம்ப் ஆவதை ஸ்மூத் ஆக்க, சாகேத்ராமின் இரண்டாவது திருமணக் கதையும் வந்து போகும்.) பின்னர் தெருவில் அப்பளம் விற்பவனாக, பாகிஸ்தான் பகுதியிலிருந்து அடித்து விரட்டப்பட்ட தன் பழைய நண்பன் பிஸினஸ்மேன் லால்வானியைச் சந்திக்கிறான். குடும்பத்தினரைப் பலி கொடுத்துவிட்டு, தப்பிய ஒரு குழந்தையையும் இடப்பெயர்வின்போது தொலைத்துவிட்டு நண்பன் நிற்பதைப் பார்த்து கலங்குகிறான். தான் இஸ்லாமியர்களுக்கு அதிக இடம் கொடுக்கும் காந்தியைக் கொல்ல நினைப்பது சரியே என்று நினைக்கின்றான்.

பின்னர்ஏதோவொருகலவரம் நடக்கும் டெல்லியில் தன் முஸ்லிம் நண்பனைச் சந்திக்கிறான்.(1948 ஜனவரி) தன் தந்தையும் அந்த கலவரத்தில் கொல்லப்பட்டதாக அம்ஜத் சொல்கிறான். சாகேத்ராம், தன்னைக் காப்பாற்றப் போராடும் முஸ்லிம் நண்பனைப் பார்த்து, மனம் மாறுகிறான். ஆனாலும் நண்பனை இழக்கின்றான். அந்த மரணம், அவனுக்கு உண்மையை உணர வைக்கிறது. இழப்பு என்பது இந்துக்களுக்கு மட்டுமேயல்ல, முஸ்லிம்களுக்கும் தான் நடந்திருக்கிறது. காந்தியின் வார்த்தையில் சொல்வதென்றால்பழிக்குப் பழி..கண்ணுக்குக் கண் என்று இறங்கினால் உலகம் குருடாகிவிடும்என்பதை உணர்கிறான். காந்தியைக் கொல்ல நினைத்தது தவறு, அவரது அஹிம்சாவழியே இந்த மக்களை இன்னும் மனிதர்களாக ஆக்கிவைத்திருக்கிறது என்று புரிந்துகொள்கிறான். காந்தியிடம் மன்னிப்பு கேட்கப் போகையில், காந்தி கோட்சேவால் கொல்லப்படுகிறார்.

மிகவும் கொந்தளிப்பான காலகட்டத்தை, எழுத்தில் வடித்தாலே தவறாகப் புரிந்துகொள்ளப்படும் மிகவும் சிக்கலான காலகட்டத்தை, திரைக்கதையில் கொண்டுவந்தது சாதாரண விஷயம் அல்ல. தமிழ்சினிமாவில் இந்த விஷயத்தைத் தொடும் துணிச்சலும், நடுநிலையாகச் சொல்லும் திறனும் கமலஹாசனைத் தவிர யாருக்கும் இல்லை எனலாம்.

படத்தின் மற்றொரு சிறப்பம்சம், கேரக்டர் தேர்வு. வங்காளப்பெண்ணான ராணி முகர்ஜி-பிராமணப் பெண்ணான வசுந்தரா தாஸ்-முஸ்லிம்களான ஷாருக்கான், அப்பாஸ், நாசர் என பல கேரக்டர்களும் இயல்பிலேயே அந்த இனத்தைச் சேர்ந்தவர்களே. உண்மையான வரலாற்றைச் சொல்வதால், அந்த நடிகர்கள் எளிதில் அந்த கேரக்டரில் ஒன்றிப்போக இது உதவியது.

படத்தில் வரும் இன்னொரு முக்கிய கதாபாத்திரம், அதுல் குல்கர்னியின் அபயங்கர் கேரக்டர். அதுல் குல்கர்னியின் கண்களில் ஒரு தீர்க்கமான பார்வை எப்போதும் உண்டு. அது இந்தக் கேரக்டருக்கு பொருத்தமாக செட் ஆகியிருக்கும். சாகேத் ராமை இந்துத்வாவிற்குள் கொண்டுசெல்பவராக அவர் காட்டியிருக்கும் அழுத்தமான நடிப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு இந்துத்வவாதியை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருப்பார் அதுல் குல்கர்னி.

இந்தியாவை ஒரு இந்து நாடாக ஆக்குவதற்கான வாய்ப்பை வரலாறு ஒருமுறை வழங்கியது. இந்துக்கள்-சீக்கியர்கள் வசித்தாலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பதால், பாகிஸ்தான் பகுதி ஒரு இஸ்லாமிய நாடாக ஷரியா சட்டத்தின்கீழ் செயல்படும் என்று முஸ்லிம் லீக் என்று உறுதியான முடிவெடுத்தது. ஆனால் இந்துக்கள் பெரும்பான்மையான இந்தியப்பகுதியை, இந்துநாடாக ஆக்கவேண்டும் என்ற இந்துத்வவாதிகளின் குரலுக்கு எவ்வித மதிப்பும் கிடைக்கவில்லை.

காரணம், இந்திய சுதந்திரப்போராட்டத்தில் இந்துத்வவாதிகளின் பங்களிப்பு என்று பெரிதாக ஏதுமில்லை. காந்தியின் காங்கிரஸே மக்களை ஒருங்கிணைத்தது, காந்தியை நம்பியே மக்கள் ஒன்று திரண்டனர். எனவே இந்த தேசத்தை என்னவாக ஆக்குவது எனும் முடிவு எடுக்கும் தகுதியும் அதிகாரமும் காந்தியிடமே இருந்தது. அவர் தன் கொள்கைக்கேற்ப, இதை மதச்சார்பற்ற நாடாக, அதாவது பழைய இந்தியாவாகவே தொடர வேண்டும் என்று அறிவித்தார். அதை அவரது அரசியல்வாரிசு நேரு செயல்படுத்திக் காட்டினார். காந்தியைப் பொறுத்தவரைஎங்களுக்கு இஸ்லாமிய நாடு வேண்டாம், இந்தியா போதும்என்று சொல்லும் முஸ்லிம்களை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவது பாவம் என்று கருதினார். அவர்களுக்கு இங்கே வாழ்வதற்கான முழு உரிமையும் உண்டென்று சக காங்கிரஸ்காரர்களிடம் அறிவித்தார்.

ஹே ராம் படம், சாகேத் ராமின் பார்வையில் சொல்லப்படுவதால், இவையெல்லாம் காட்சிப்படுத்தப்படவில்லை. ஆனால் அவற்றையெல்லாம் புரிந்துதான், ஷாருக்கான் குடும்பம் இங்கேயே வாழ போராடுவது அறிந்து தான், அவர் காந்தியைக் குற்றம் சொல்வது தவறென்று மனமாற்றம் அடைவார்.

படத்தில் மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம், சாபு சிரிலின் ஆர்ட் டைரக்சனும் திருவின் ஒளிப்பதிவும். மொகஞ்சதோராவாகட்டும், பழைய கல்கத்தாவாகட்டும், சென்னை கார்களாகட்டும், அப்படியே பழங்காலத்தை கண்முன் கொண்டுவந்திருப்பார்கள். ஆர்ட் டைரக்சன் மட்டும் பெர்ஃபெக்ட்டாக இல்லையென்றால், ஸ்கூல் டிராமா மாதிரி ஆகிவிடும் அபாயம் வரலாற்றுப்படங்களுக்கு உண்டு. அந்தவகையில் கமலுக்கு கை கொடுத்திருப்பார் சாபு சிரில்.

கமலஹாசன் எனும் கலைஞனின் கடும் உழைப்பில் அவரது திறமைக்குச் சான்றாக உருவான இந்தப் படம், ரிலீஸ் ஆனவுடன் விமர்சகர்களின் கடும் எதிர்ப்புக்கும் சராசரி ரசிகனின் புறக்கணிப்பிற்கும் ஆளானது. அதற்குக் காரணங்களும் உண்டு.

இந்த கட்டுரையின் ஆரம்பத்திலேயே சொல்லப்பட்ட வெறுப்பின்மீது கட்டமைக்கப்பட்ட இசங்கள் இங்கே உண்டு. ஒன்றையொன்று வெறுக்கும் அந்த இசங்களுக்குள் ஒரே ஒரு ஒற்றுமை உண்டு. அது, அவை அனைத்துமே காந்தியிசத்திற்கு எதிரானவை. ஒருவன் மாற்றுக்கருத்து கொண்டிருந்தால், அவனை கொன்று அப்புறப்படுத்தி விடுவதே மற்ற இசங்களுக்குத் தெரிந்த வழி. ஆனால் காந்தியிசம், எதிரிகளுடன் பேசுவதற்கான கதவை எப்போதும் திறந்துவைத்திருக்கும். சமரசத்திற்கும் தயங்காது.

அதை மற்ற இசங்களால் இன்றளவும் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதே உண்மை. கொடுமையான கலவரம் நடக்கும் சூழலில், சாதாரண மனிதனே ஆயுதம் ஏந்தி அண்டை வீட்டானைக் கொல்லும் வெறியில் இருக்கும்போது, காந்தி என்ற ஒற்றை மனிதரால் அந்த கலவரங்களை நிறுத்த முடிந்தது. எல்லா வெறுப்பிசங்களும் அந்த மாமனிதரின் தியாகத்தின் முன் தோற்றுப்போயின. எனவே காந்தியிசம் என்ற ஒன்று இருக்கும்வரை, மற்றவர்களுக்கு மனிதர்களை வெறுப்பின்பிடியில் நிரந்தரமாக வைப்பது கடினமே. எனவே காந்தியின்மீதான கருத்துத்தாக்குதல் என்பது, அவரது காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது.

இன்று அது முற்றிய நிலையில் உள்ளது. ஒரு இந்துவால், முஸ்லிமால், தலித்தால், கம்யூனிஸ்ட்டால், பகுத்தறிவுவாதிகளால், பிற்படுத்தப்பட்டவர்களால், பெரும்பாலான இளைஞர்களால் வெறுக்கப்படும் மனிதராக காந்தி, ஆக்கப்பட்டிருக்கிறார். காரணம், காந்தியிடம் இருந்த நேர்மையும், நடுநிலையும். ஹே ராம் படத்தை விமர்சனம் என்ற பெயரில் குதறிப்போட்டவர்களை எடுத்துப்பாருங்கள், காந்தியைப் பற்றியும் அதே வன்மத்துடன் தான் கருத்துச் சொல்லியிருப்பார்கள்.

இந்துவிரோதி-பார்ப்பான் - முதலாளித்துவத்துக்கு சொம்படிப்பவர்-போலி பகுத்தறிவுவாதி-முஸ்லிம் விரோதி என கமலஹாசனும் காந்தியை வெறுக்கும் எல்லாத்தரப்பினாலும் புகழ்ந்து தள்ளப்பட்டார். அவர் நேர்மையாகவே இந்தப் படத்தைப் படைத்தார் என்பதற்கு அதுவே சான்று.

கமர்சியல்ரீதியாக படம் வெற்றியடையாமல் போனதற்குக் காரணம், ஒரு தமிழ்ப்படத்தை சப்-டைட்டிலுடன் பார்க்கும் துர்ப்பாக்கியநிலை நமக்கு வந்து சேர்ந்தது தான். எமது தொடரில் வந்த முந்தைய படங்களான சுப்பிரமணியபுரம், முதல் மரியாதைக்கும் இந்தப் படத்திற்கும் ஒரு பெரும் வித்தியாசம் உண்டு. அவை சாமானிய மக்களின் உணர்வுகளுக்குள் ஊடுருவும் எளிமையைக் கொண்டிருந்த, தமிழரின் வாழ்க்கைக்கதைகள். ஆனால் ஹே ராம், வட இந்தியாவின் கதை. பாகிஸ்தானுடன் மதம் தவிர்த்து வேறு எவ்வித உறவுமற்ற தென்னிந்தியாவிற்கு அந்நியமான விஷயம், இந்தியப் பிரிவினை.

எனவே சாமானிய ரசிகனுக்கு கதையிலேயே ஒரு அந்நியத்தன்மை வந்துவிடுகிறது. அதை இன்னும் சிக்கலாக்கியது படத்தில் வந்த பன்மொழி வசனங்கள். தமிழ், ஹிந்தி, பெங்காலி, ஆங்கிலம் என அந்தந்த கேரக்டர்கள், அவரவர் மொழியிலேயே பேசிவிட, பாமர ரசிகன் மண்டை காய்ந்து போனான். எல்லா வட இந்தியக்கேரக்டரும் தமிழில் பேசினால், யதார்த்தம் கெட்டு கேலியாகிவிடும். அவரவர்மொழியில் பேசினால், கமர்சியல்ரீதியாக படம் படுத்துவிடும்.
கமலஹாசன் எனும் கலைஞன், இரண்டாவது சாய்ஸைத் தேர்வு செய்தார். அது சினிமாவின் மேலுள்ள காதலாலும், தரமான படைப்பைக் கொடுக்கும் வெறியினாலும், இந்த ரிஸ்க்கை தெரிந்தே அவர் எடுத்தார். பொருளாதார ரீதியாக இதனால் அவர் கடும் பின்னடைவைச் சந்தித்தாலும், தமிழ்சினிமா வரலாற்றில் தவிர்க்கமுடியாத கலைஞனாக அவர் நிலைபெற, இந்தப் படம் உதவியது.

இந்தப் படத்தை தயாரிக்க ஆரம்பித்தபோது வேறொரு இசையமைப்பாளரை தேர்வு செய்திருந்தார். ஆனால் அவருக்கு சம்பளம் கொடுப்பதில் ஏற்பட்ட சிக்கலால், இளையராஜாவிடம் சரணடைந்தார். அந்த பொருளாதாரக் கஷ்டம், படத்தின் தரத்தை உயர்த்தும் நல்ல பிண்ணனி இசையைக் கொடுத்தது. மேலும் நீ பார்த்த பார்வைக்கு நன்றி பாடலும், இசையில் மயங்குதம்மா பாடலும் கிளாசிக். இப்போது கேட்டாலும் அஜோய் சக்ரபர்த்தி பாடிய இசையில் மயங்குதம்மா பாடல் மனதை நெகிழ வைக்கும்.

தமிழ்சினிமா இதுவரை தொடாத, ஒரு புதிய கதைக்களம். இந்திய சினிமா மட்டுமல்ல இந்திய ஊடகத்துறையே தொடத்தயங்கும், இந்திய வரலாற்றின் ரத்தக்கறை படிந்த பக்கங்களைப் பேசுகிறது இந்தப் படம். அதனாலேயே தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்றாக ஆகிறது ஹே ராம்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

8 comments:

 1. சூப்பர் பதிவு செங்காவி... உலக நாயகனை தவிர இந்த மாதிரி கதைகளத்தை வேறு யாராலும் படமெடுக்க...ம்ஹ்ம்ம்.. இல்லை...இல்லை.. யோசிக்க கூட முடியாது...

  காந்தியை கொல்வது போல கதைகரு.. இந்தியா பாகிஸ்தான் பிரிவு.. இந்து முஸ்லிம் கலவரம்.. பல வரலாற்று செய்திகளை உள்ளே கொண்டு வந்திருப்பார்...

  டிசம்பர் 6 கலவரம் , நவகாளி கலவர சம்பவம், இந்தியா பாகிஸ்தான் பிரிவு, காந்தி - ஜின்னா பேச்சு, காந்தி சுடப்படுவது... இன்னும் சொல்லி கொண்டே போகலாம்... இதில் கமலின் டீடெய்லிங் அற்புதமாக இருக்கும்.... (உ.ம் ) கமல் ஒரு காட்சியில் அதிகாலையில் வீட்டு வாசல் வழியே வெளியே பார்ப்பார்.. ஒரு குழு பஜனை பாடி கொண்டு தெருவில் செல்லும்..(ராமா ராமா என்று நாமம் சொல்லி படுவோம்..) அதாவது அது டிசம்பர் (மார்கழி ) மாதம் என்று சொல்லமல் சொல்லுவார். அதாவது காந்தி இறப்பதற்கு ஒரு மாதம் முன்... இது போல பல காட்சிகள் உண்டு படத்தில்...

  வசனங்களும் செம ஷார்ப்...

  " நான் ராம் தம்பிதான் ...ஆனா அம்ஜத் கான்.. " (ஷாருக்)

  "நான் சொல்றது உனக்கு புரியாது டா..ஏன்னா நீ சவுத் இந்தியன் ..இல்ல டா..என்னக்கு புரியும் " (கமல்-லால்வானி )

  நான் ஹே ராமை பார்த்து ரசித்ததையெல்லாம் நீங்களும் எழுதியுள்ளீர்கள்... மிக்க நன்றி !!!

  ReplyDelete
 2. http://theseventhart.info/2008/06/20/hey-ram-an-analysis-part-120/ சமீபத்தில் 5 வது முறையாக பார்த்தேன் after reading the review from above site. World class movie.

  ReplyDelete
 3. இந்தப் படத்திற்கு இப்படியொரு விமர்சனத்தை இப்போதுதான் படிக்கிறேன். படம் சொல்லும் வரலாற்றுக்கு நீங்கள் சொல்லும் வரலாறும் பிரமிக்க வைக்கிறது. இந்தியா இப்படித்தான் என்பதை இந்தக் கால மாணவர்களுக்குச் சொல்ல ஹே ராம் போதும். உடன் இந்த விமர்சனமும்... சூப்பர் செங்கோவி அண்ணா..))

  ReplyDelete
 4. இப்படியொரு விமர்சனம் நான் படித்தததே இல்லை. இன்னும் சொல்லப்போனால் இது விமர்சனம் அல்ல. வரலாற்று அலசல். இதை படித்த பிறகு தான் படம் முழுமையாக புரிந்தது. அருமை..
  antikamalians படித்தால் கூட அவரைப் பிடித்துப்போகும்.

  ReplyDelete
 5. அற்புதமான பதிவு தோழர்..!!

  ReplyDelete
 6. இந்த படமும் உங்களுடைய விளக்கமும் என்னுள் ஏற்பட்டிருந்த பல குழப்பங்களுக்கு விடையளித்தது நன்றி நன்றி ஐயா.

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.