Friday, February 5, 2016

விசாரணை - திரை விமர்சனம்

அதாகப்பட்டது..:
நம் மரியாதைக்குரிய இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம், விசாரணை. சர்வதேச திரைப்பட விழா முதல் சூப்பர் ஸ்டார் வரை அனைவரின் பாராட்டுகளையும் பெற்ற விசாரணை, இன்று முதல் நம் பார்வைக்கும் வந்திருக்கிறது.
ஒரு ஊர்ல :
கோவை ஆட்டோ டிரைவர் சந்திரகுமாரின் உண்மைக்கதையை அடிப்படையாக வைத்து, விசாரணையின் கதையை அமைத்திருக்கிறார்கள். ஆந்திராவில் சாதாரண மளிகைக்கடையில் வேலை செய்யும் தினேஷையும், அவரது நண்பர்களையும் போலீஸ் அள்ளிக்கொண்டு போகிறது. அதன்பின் அவர்கள் வாழ்க்கை என்ன ஆனது என்பது தான் படத்தின் கதை.

உரிச்சா:
நம்மை படம் முழுக்க பதற வைக்கும் விஷயம், இது கற்பனை அல்ல; உண்மையிலேயே நடந்த விஷயம் என்பது தான். சுமூகமாகப் போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கை, காரணமேயின்றி எப்படி வேண்டுமானாலும் திசை திரும்பலாம் என்பது தான் இந்த வாழ்க்கையின் அபத்தம். அதிகாரத்தில் இருப்போர் மக்களை எந்த அளவிற்கு பகடைக்காயாக ஆக்கி விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று இந்தப் படம் தோலுரித்துக் காட்டுகிறது.

ஒரு பெரிய கொள்ளைக்கேஸை முடித்துக்கட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது ஆந்திர போலீஸ். திருடர்கள் தமிழர்களாய் இருக்கலாம் என்பது தான் கிடைத்திருக்கும் ஒரே க்ளூ. எனவே ஹீரோவையும் அவரது நண்பர்களையும் ஸ்டேசனுக்குக் கொண்டுபோய் அடித்தே ஒத்துக்கொள்ள வைக்க முயற்சிக்கிறார்கள். நால்வரும் மறுக்க, ட்ரீட்மெண்ட் மோசமாகிக்கொண்டே போகிறது. இண்டர்வெல்வரை இவர்களை லாக்கப்பில் வைத்து விதவிதமாக அடிப்பது தான் படமே. போலீஸ் அடி, போலீஸிடம் குவிந்திருக்கும் பவர், சாமானியர்களை அவர்கள் மனிதர்களாக மதிக்காமல் இருக்கும் அவலம் என இண்டர்வெல்வரை படம் பேசும் விஷயங்கள், நம்மை பதற வைப்பவை.

தமிழக போலீஸான சமுத்திரக்கனி தற்செயலாக அங்கே வந்து காப்பாற்றுகிறார். ‘அப்பாடி’ என்று நிம்மதிப் பெருமூச்சு விடும்போது, அடுத்து தமிழக போலீஸின் ‘மனித நேய’ நடவடிக்கைகள் ஆரம்பிக்கின்றன. இண்டர்வெல்லுக்கு அப்புறம், படம் ஒரு த்ரில்லராக நகர்கிறது. அரசியல்வாதிகளின் ஆடிட்டரான கிஷோருக்கும் சமுத்திரக்கனிக்கும் நடக்கும் போராட்டமும், அதிலும் இந்த அப்பாவிகள் கொஞ்சம் கொஞ்சமாக சிக்கிக்கொள்வதும் பரிதாபம்.

’நாம நல்லவங்க..யாருக்கும் கெடுதல் செய்ததில்லை. அதனால் நமக்கு நல்லதே நடக்கும்’என்று ஆரம்ப லாக்கப் அடிக்குப்பின் ஹீரோ சொல்கிறார். கிளைமாக்ஸில் ஹீரோவின் நண்பன் கேட்கிறான், ‘நாம நல்லவங்க..ஒன்னும் ஆகாதுன்னியே..நமக்கு ஏன் இதெல்லாம் நடக்குது?’ என்று. படம் முடிந்த பின்னும் அந்தக் கேள்வி நம்மைத் துரத்துவது தான், இயக்குநரின் வெற்றி. வெற்றிமாறனைத் தவிர்த்துவிட்டு, இனி தமிழ் சினிமா வரலாற்றை எழுதிவிட முடியாது!


தினேஷ்:

அப்பாவியான முகம்..சிம்பிளான ஒரு காதல்..எளிய வாழ்க்கை என்று ஆரம்பித்து, போலீஸில் சிக்கிச் சின்னாபின்னமாவது வரை யதார்த்தமான நடிப்பு. அதிலும் அவ்வளவு அடிவாங்கியும் ‘ஒத்துக்கொள்ள மாட்டேன்’ என்று நிற்கிறாரே, அபாரம்! அட்டக்கத்திக்குப் பின், அவர் பெயர் சொல்லும் ஒரு படம். கோர்ட்டுக்குப் போவதற்கு முன், நண்பர்கள் முன் அவர் வாங்கும் அடி பயங்கரம். கடைசிவரை ஒரு சாமானியனாக வாழ்ந்திருப்பதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.


சமுத்திரக்கனி:

இடைவேளைக்குப் பின், இவர் தான் ஹீரோ. மனிதர் பின்னியிருக்கிறார். ஒரு இன்ஸ்பெக்டராக, நல்லவனாக, கெட்டவனாக, கையாலாகாதவனாக நடிப்பில் நவரசங்களையும் காட்டியிருக்கிறார். ஒரு முழுமையான நடிகனாக அவர் ஆகியிருக்கும் படம் இது என்றே சொல்லலாம். அட்டகாசம்!

முருகதாஸ்:
படத்தின் இன்னொரு ஹீரோ, ஹீரோவின் நண்பராக வரும் முருகதாஸ். சில நேரங்களில் தினேஷை விடவும் அற்புதமான நடிப்பு. போலீஸ் அடியில் பல் உடைந்தபின், அவர் பேசும் வசனங்கள் துயர நகைச்சுவை. போலீஸ் ‘விடுதலை’ செய்ததும் அவர் காட்டும் சந்தோசமும், ஹோட்டலில் வெளுத்துக்கட்டுவதும் பார்க்கப் பார்க்க நமக்கும் அந்த குஷி ஒட்டிக்கொள்கிறது.


சொந்த பந்தங்கள்:
ஆனந்தி, தினேஷின் காதலியாக இரண்டு சீன்களில் வந்து போகிறார். பாந்தமான நடிப்பு. வெற்றிமாறனின் படங்களில் எப்போதும் கலக்கும் கிஷோரும் இதில் வந்து கலக்குகிறார். சமுத்திரக்கனிக்கு சரியான போட்டியாக இவர் நடிப்பு. ஆந்திர போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் அந்த கொடூர மொட்டை ஆசாமியை இன்னும் கொஞ்ச நாளைக்கு மறக்க முடியாது.


 நெகடிவ் பாயிண்ட்ஸ்:

- இண்டர்வெல்வரை விதவிதமான போலீஸ் அடிகள் தான். சும்மா அடித்து நொறுக்குவதில் ஆரம்பித்து, தலைகீழாக கட்டி வைத்து அடிப்பது, ஜட்டியோடு நிற்க வைத்து அடிப்பது என எல்லாவித ட்ரீட்மெண்டையும் காட்டுகிறார்கள். அதுவே முதல்பாதி முழுக்க வருகிறது. விருதுக்கு ஓகே. கமர்சியலுக்கு..?

- ஆந்திரா சீன்களில் பெரும்பாலும் தெலுங்கு வசனங்கள். அட்லீஸ்ட் வாய்ஸ் ஓவரிலாவது தமிழ் வசனங்களை கொடுத்திருக்கலாம். சப்-டைட்டில் படித்தே மண்டை காய்கிறோம்.

- இது உண்மைக்கதை. அதை நேர்மையாக எடுத்திருக்கிறார்கள். எனவே வன்முறை தவிர்க்க முடியாத விஷயம். அது லேடீஸ் & குழந்தைகள் ஆடியன்ஸ் வருகையைக் குறைக்கும். இருந்தாலும், பாலா போன்று வன்முறையை வலிந்து, சைக்கோத்தனமாக காட்டாமல், கலைநேர்த்தியுடன் செய்திருக்கிறார்கள்.


 பாசிடிவ் பாயிண்ட்ஸ்:
- நேர்மையாக உண்மையை உள்ளபடி எடுத்திருப்பது.
- தினேஷ், முருகதாஸ், சமுத்திரக்கனி, கிஷோர் என அனைவரும் அவர்களின் பெஸ்ட் நடிப்பை வழங்கியிருப்பது
- ஜி.வி.பிரகாஷின் நம்ப முடியாத(!), அருமையான பிண்ணனி இசை.
- வலியை நமக்குள் கடத்தும் ஒளிப்பதிவும், எடிட்டிங்கும்.
- இறுதியில் உண்மையான சந்திரகுமாரையே காட்டுவது டச்சிங்!
- வெற்றி மாறன்.

பார்க்கலாமா?
கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம். ( சென்ற வாரம் இறுதிச்சுற்று..இந்த வாரம் விசாரணை. தமிழ் சினிமாவின் பொற்காலமா இது? )
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 comments:

  1. செம...செம...செம...

    ReplyDelete
  2. செம...செம...செம...

    ReplyDelete
  3. அருமையான விமர்சனம்.உரித்துக் காட்டியிருக்கிறீர்கள்.பார்ப்போம்.........

    ReplyDelete
  4. அதுசரி, அந்த ரெண்டு படம் இங்கன எதுக்கு?

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.