Wednesday, February 10, 2016

திரைக்கதை சூத்திரங்கள் - முடிவுரை


 72. சூத்திரங்கள் அவசியமா?

அதுவொரு மதிய வேளை. ஒரு சாலையில் 'நோ யூ டர்ன்' போர்டு இருக்கிறது. நீங்கள் உங்கள் குழந்தையை ஹாஸ்பிடலில் காட்ட போய்க்கொண்டிருக்கிறீர்கள். அங்கே யூ டர்ன் செய்தால், ஹாஸ்பிடலை உடனே அடைந்துவிடலாம்; இல்லையென்றால், இரண்டு கிலோமீட்டர் கழித்து வரும் சிக்னலில் தான் யூ டர்ன் எடுக்க வேண்டியிருக்கும். டாக்டர் ஒருவேளை கிளம்பிவிடலாம். எனவே அங்கே ரூல்ஸை மீறி, யூ டர்ன் எடுக்கிறீர்கள். ஹாஸ்பிடல் போய் டாக்டரை கடைசி நிமிடத்தில் பிடித்துவிடுகிறீர்கள்.

மேலே சொன்ன சூழ்நிலையை ஆராய்வோம். அங்கே ஒரு விதிமுறை மீறல் நடந்திருக்கிறது. ஏறக்குறைய சில நோடிகளில் முடிவு எடுத்து, அதைச் செய்திருக்கிறீர்கள். அந்த சில நொடிகளில் நடந்த சிந்தனை ஓட்டம் என்ன?
அங்கே ஒரு தேவை இருக்கிறது. அந்த அவசரத்திற்கு ஒரு நியாயம் இருக்கிறது. யோசிக்காமல் திரும்பினால் என்ன ஆகும்?

உங்கள் பின்னால் வரும் வாகனம், நீங்கள் திடீரென திரும்புவதால் நிலைகுலைந்து உங்கள் மேல் மோதலாம்.

யூ டர்ன் எடுக்கும்போது, எதிர்திசையில் இருந்து வரும் வாகனம் உங்கள் மேல் மோதலாம்.

போக்குவரத்து காவலர் இருந்தால், உங்களைப் பிடிக்கலாம்.

யூ டர்ன் எடுப்பதில் அனுபவம் இல்லையென்றால், நீங்கள் கீழே விழலாம்.

அந்த சிலநொடிகளில் ஒரு அனலைசிஸ் நடக்கிறது.

மதிய வேளை..கூட்டமில்லை.

பின்னாலோ, எதிர்திசையிலோ வாகனம் இல்லை.

போலீஸும் இல்லை.


நம்மால் யூ டர்ன் எடுக்க முடியும்...திருப்பு!

இந்த அனலைஸிஸ்க்கு அடிப்படை, நோ யூ டர்ன் சிம்பல் பற்றிய உங்கள் அறிவு தான். அந்த சிம்பல் பற்றித் தெரியாத ஒருவன், மேலே சொன்ன எதுபற்றியும் அறியாமல் யோசிக்காமல் திரும்பி விபத்திலோ அல்லது போலீஸிடமோ சிக்கலாம்.

எனவே தான் விதிகளுக்கு எல்லாம் மேலான விதியாக இதைச் சொல்கிறார்கள்:

ஒரு விதியை மீறும் முன்பு, அதுபற்றி தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

'திரைக்கதை எழுத ரூல்ஸ், சூத்திரம், மெத்தட் எல்லாம் ஒன்னும் கிடையாது' எனும் வசனத்தை நாம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறோம். அதற்கு இணையான இன்னொரு வசனம் ' பணம் சம்பாதித்தால் நிம்மதி போய்விடும்' என்பது.

இந்த பணம் பற்றிய வசனத்தைப் பேசுபவனைப் பார்த்தால், பெரும்பாலும் பணக்காரனாகத்தான் இருப்பான். 'ஏண்டாப்பா, அவ்ளோ கஷ்டமா இருந்தால் என்கிட்டே கொடுத்திடேன்' என்று கேட்டால் தெறித்து ஓடிவிடுவார்கள். கஷ்டம் என்பது வாழ்க்கையின் அங்கம். ஏழையின் கஷ்டத்தை அனுபவிக்கப் போகிறீர்களா, பணக்காரனின் கஷ்டத்தை அனுபவிக்கப்போகிறீர்களா என்பதே உங்கள் முன் உள்ள கேள்வி.

'பணம் தேவையில்லை' என்று பேசுபவர்களை இரண்டு வகையாக நாம் பார்க்கலாம்:

1. பணக்காரர்கள்

2. பணக்காரர்கள் சொல்வதை அப்படியே கிளிப்பிள்ளையாக திருப்பிச் சொல்லும் பரதேசிகள்.

முதல்வகையினர் தான் புத்திசாலிகள் என்பது தெளிவு. 'பணம் மட்டுமே சந்தோசத்தைக் கொண்டுவராது. எனவே பணம் சம்பாதிப்பதற்காக, அடிப்படை மனித இயல்புகளையும் குடும்ப உறவுகளையும் நண்பர்களையும் இழந்துவிடாதீர்கள். இல்லையென்றால், பணம் இருக்கும்; நிம்மதி இருக்காது.' என்பது தான் பணக்காரர்கள் சொல்ல முயல்வது. 'பணம் வந்தால் தூக்கம் வராது' என்பது பரதேசிகள் புரிந்துகொள்வது; வறுமை என்பது தூக்க மாத்திரையா, என்ன!

திரைக்கதை விதிகள் பற்றிப் பேசுபவர்களையும் அப்படியே இரண்டு வகையாக பிரிக்கலாம்.

1. திரைக்கதை சூத்திரங்கள் பற்றிய அறிவுடையோர். அடிப்படைகள் பற்றிய தெளிவிருந்தால், ஒவ்வொரு விதிகள் பற்றியும் கவலைப்படாமல் கதையின் போக்கிற்கு ஏற்றபடி முடிவு செய்துகொள்ளலாம் என்பதை அறிந்தவர்கள்.

2. முதல்வகையினர் சொல்வதை அப்படியே திருப்பிச் சொல்லும் பரிதாபத்திற்கு உரியவர்கள்.

கடந்த ஒன்றரை வருடங்களாக இந்த தொடரை எழுதி வருகிறேன். 'திரைக்கதைக்கு சூத்திரமா? இதெல்லாம் ஏமாற்று வேலை' எனும் கமென்ட்டை தொடர்ந்து கேட்டு வருகிறேன். அந்த சமயத்தில் எல்லாம், சொல்பவர் எந்தவகை என்று தான் பார்ப்பேன். முதல்வகை என்றால், 'நீங்கள் சொல்வது உண்மை தான்' என்று ஏற்றுக்கொள்வேன். இரண்டாம்வகை என்றால் 'சிரிப்பான்' தான்.

எந்தவொரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்றாலும், முதலில் அதன் அடிப்படைகளில் தெளிவாக வேண்டும். எக்ஸ்பீரியன்ஸ் கூடக்கூட கற்றுக்கொண்டது எல்லாம் இயல்பான ஒன்றாக ஆகும். உதாரணமாக சைக்கிள் ஓட்டக்கற்றுக்கொண்டதை ஞாபகப்படுத்திப் பாருங்கள்.

இடுப்பை வளைக்காமல் நேராக உட்கார வேண்டும்.

சக்கரம் சுற்றும்வரை சைக்கிள் ஓடும், ஸ்லோ ஆனால் விழுந்துவிடும்.

வளைவைப் பொறுத்து, வேகத்தை குறைக்க வேண்டும். - என்பவை எல்லாம் திரும்பத் திரும்ப சொல்லிக்கொடுக்கப்பட்டவை. பிறகு கொஞ்ச காலத்திற்கு சைக்கிள் ஓட்டும்போது, இந்த ரூல்ஸும் நம்முடன் வந்துகொண்டே இருக்கும். எக்ஸ்பீரியன்ஸ் ஆனபின், ‘லாலாலா’ என்ற பாட்டுடன் போய்க்கொண்டிருப்போம். ‘சைக்கிள் ஓட்டும் சூத்திரங்கள்’என்று யாராவது ஆரம்பித்தால், சிரிப்போம். பொறியியல் துறையிலும் கல்லூரியில் மனப்பாடம் செய்தவை எல்லாம், அனுபவத்தில் இயல்பான ஒன்றாக ஆனதைக் கவனித்திருக்கிறேன். ஒவ்வொரு முடிவு எடுக்கும்போதும், யாரும் ஸ்டேடண்டர்ட்/ரூல்ஸ் புக்கை திறப்பதில்லை.


அதுவே இந்த தொடருக்கும் பொருந்தும். இதில் உள்ளவற்றைப் பயன்படுத்தி, சில திரைக்கதைகளை எழுதுங்கள். ஒரு கட்டத்தில் ‘இதில் புதுசா ஒன்னுமே இல்லை’என்று சொல்லி, இந்த தொடரை/புத்தகத்தை நீங்கள் தூக்கிப்போடுவது தான், இந்த தொடரின் உண்மையான வெற்றி.

திரைக்கதை எழுதுவது என்பது ஒரு மர்மமான விஷயமாகவே பலருக்கும் இருக்கிறது. நாவல் எழுதுவது போன்றது என்றே பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் திரைக்கதைக்காக பல புத்தகங்கள் கிடைக்கின்றன. தமிழிலும் அப்படி கிடைக்கவேண்டும், ஆங்கிலம் அறியாதோருக்கும் பயன்பட வேண்டும் என்பதே இந்த தொடரின் அடிப்படை நோக்கம். எனக்கு வந்த மெயில்கள், இன்பாக்ஸ் மெசேஜ்கள் மற்றும் ஃபோன் கால்கள் மூலம், இதில் ஓரளவு நான் வெற்றி பெற்றுவிட்டதாகவே உணர்கிறேன்.

திரைக்கதை பற்றிய சில ஆங்கிலப் புத்தகங்களைப் படித்தபோது, நான் உணர்ந்த விஷயம், சில ஆசிரியர்கள் எல்லாவற்றையும் பொதுவில் வைப்பதில்லை. சில முக்கியமான டெக்னிக்குகளை ஒரு வரியில் கடந்து செல்வதைக் கவனித்திருக்கிறேன். இன்னும் சிலர், ’படிப்பவனுக்கு புரிந்துவிடவே கூடாது; ஆனால் எனக்கு விஷயம் தெரியும்ன்னு மட்டும் அவன் புரிஞ்சிக்கணும்’எனும் ரேஞ்சி எழுதியிருப்பதைப் பார்த்திருக்கிறேன். எனவே இந்த தொடர் எழுத ஆரம்பிக்கும்போது, நான் முடிவு செய்த ஒரே விஷயம் ‘எதையும் மறைக்காமல், நான் அறிந்த எல்லாவற்றையும் பொதுவில் வைக்க வேண்டும்’ என்பதே! 

சில நண்பர்கள் ‘இவ்வளவு விரிவாக எல்லாவற்றையுமே சொல்ல வேண்டுமா?’என்றுகூட கேட்டிருக்கிறார்கள். இருப்பினும் நான் அறிந்த அனைத்தையும் இங்கே பொதுவில் வைத்துவிட்டேன். இனி ஏதாவது தெரிய வந்தால், அதையும் எழுதுவேன். இதைப் படித்து, என்னை விட பெட்டராக நீங்கள் திரைக்கதை எழுதினால், அதைவிட எனக்கு சந்தோசம் தரும் விஷயம் வேறு ஏதும் இல்லை.

சில நண்பர்கள், மொத்தமாக இதைப் படிக்க வேண்டும் என்று காத்திருப்பதாகச் சொன்னார்கள். திரைக்கதை சூத்திரங்கள் - CONTENTS-ஐ அப்டேட் செய்திருக்கிறேன். மேலும், இது விரைவில் புத்தகமாக வரும். இனி அவர்கள் படிக்க ஆரம்பிக்கலாம்.

ஒன்றரை வருடங்களாக இந்த தொடரை எழுதி வந்திருக்கிறேன். தொடர்ந்து பின்னூட்டம் மூலமும், ஃபேஸ்புக்கிலும் என்னை ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி. சில டெக்னிகல் விஷயங்களைப் பற்றிய விவாதத்தில் உதவிய என் மரியாதைக்குரிய நண்பர்களான கேபிள் சங்கருக்கும் வினையூக்கி செல்வகுமாருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

சில நல்ல தமிழ்ப் படங்களின் திரைக்கதையைப் பற்றிய அலசல் கட்டுரைகளை அடுத்து எழுதலாம் என்றிருக்கிறேன். ஹிட்ச்காக் படங்கள் பற்றிய தொடரும் பாதியில் நிற்கிறது. அதையும் தொடர்வோம். 

தொடர்ந்து இணைந்திருப்போம்...நன்றி, வணக்கம்!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

8 comments:

  1. மிகப்பெரிய நன்றி பாஸ்.
    எளிமையான முறையில் அத்தனையையும் புட்டு புட்டு வைத்தமைக்கு,
    கடந்த காலங்களில் இலங்கை சிங்கள இயக்குனர்களான அசோக் ஹந்தகம, பிரசன்ன விதானகே, Sudath Mahadiwulwewaபோன்றோரின் திரைக்கதை வகுப்புகளில் கலந்து கொண்டிருக்கிறேன் இதை விட குறைவான விடையங்களுடனும் சிங்கள படங்களின் உதாரணங்களையும் மட்டுமே கொண்டிருந்தன அவை.

    ReplyDelete
  2. மிகவும் பயனுள்ள தொடர்..கோட்டான கோடி நன்றி தலைவா..!

    ReplyDelete
  3. திரைக்கதை நுணுக்கங்களை பொதுவில் வைத்தமைக்கு மிக்க நன்றி அண்ணா.
    இன்னும் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  4. திரைக்கதை நுணுக்கங்களை பொதுவில் வைத்தமைக்கு மிக்க நன்றி அண்ணா. என்னை போல் வாய்ப்புக்கள் தேடி கொண்டிருக்கும் உதவி இயக்குனர்களுக்கு மிகவும் பயண் உள்ளதாக இருக்கிறது... இது அனைவருக்கும் செல்ல வேண்டிய ஒன்று.😊🙏

    ReplyDelete
  5. சிறப்பு... நன்றி

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.