Sunday, June 26, 2016

’ரசிகன்’விஜய் டூ ‘இளைய தளபதி’ விஜய் - ஒரு அலசல்


ன்றைக்கு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சக்தியாக, வசூல் நாயகனாக வெற்றிக்கொடி நாட்டியிருப்பவர் நடிகர் விஜய். இணையத்தில் அவரது பிறந்த நாள் கொண்டாட்டம் களைகட்டியிருக்கும் சூழலில், விஜய் வந்த  பாதையைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்!


1. பிட்டுப் பட காலகட்டம் (1992-1996):


‘இந்த மூஞ்சியை எல்லாம் காசு கொடுத்துப் பார்க்க வேண்டியிருக்கு’ என்பது தான் விஜய்க்கு கிடைத்த முதல் விமர்சனம். விமர்சனம் செய்தது காமாசோமா ப்ளாக்கர் அல்ல, தமிழின் மிகப்பெரிய இதழான குமுதம். இப்படி அட்டகாசமான வரவேற்புடன் தான் ஆரம்பித்தது விஜய்யின் சினிமா வாழ்க்கை. அவரது முதல் படமான ‘நாளைய தீர்ப்பு’ சூரமொக்கை என்பதால், ஹீரோவான விஜய்யும் அப்படித் தெரிந்திருக்கலாம். முதல் படம் ஊத்திக்கொண்ட நிலையில், எஸ்.ஏ.சி. புத்திசாலித்தனமாக ஒரு காரியம் செய்தார். விஜயகாந்த்தை கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்து ‘செந்தூரப்பாண்டி’யை எடுத்தார். விஜயகாந்த்துக்காக ஓரளவு ஓப்பனிங் கிடைக்க, யுவராணியின் ‘ஓப்பனிங்’காரணமாக படம் ஓரளவு ஓடியது. நாளைய தீர்ப்பு பார்க்காதவர்கள்கூட செந்தூரப்பாண்டியை பார்க்க, பி&சி ஏரியாவில் விஜய் என்று ஒருவர் இருக்கிறார் என்று தெரிந்துபோனது.

அடுத்து வந்த ‘ரசிகன்’ விஜய்க்கு நல்லதையும் கெடுதலையும் ஒரே நேரத்தில் செய்தது. இளைஞர் பட்டாளத்தை விஜய் பக்கம் திருப்பிய அதே நேரத்தில், பெண்களை தெறித்து ஓட வைத்தது. கோவில்பட்டி மூர்த்தி தியேட்டரில் அடிக்கடி ரீ-ரிலீஸ் ஆகும். வரும்போதெல்லாம் போய்ப் பார்ப்போம். அந்த தியேட்டர், பிட்டுப்படத்திற்கு புகழ் பெற்றது! ஆடியன்ஸ் மட்டுமல்ல, திரைத்துறையில் இருக்கும் ஹீரோயின்ஸ்கூட ‘விஜய்யா..அவர் பிட்டுப்பட நடிகராச்சே’ என்று விலகிப்போனார்கள். எஸ்.ஏ.சி. ஒரு மூத்த இயக்குநர், பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். அவர் ஏன் ஆரம்பத்தில் இப்படி ஒரு காரியத்தைச் செய்தார் எனும் வருத்தம் விஜய் ரசிகர்களுக்கே உண்டு. ஆனால் அவருக்கு என்று ஒரு செயல்திட்டம் இருந்தது. அது வெற்றிகரமானது என்று அவருக்குத் தெரியும். ஏனென்றால்...


விஜயகாந்த்தை தமிழ் சினிமாவில் மூன்றாவது இடத்துக்கு கொண்டுவந்தவர் எஸ்.ஏ.சி. ரஜினி-கமல் படங்களைவிட பி&சி ஏரியாவில் விஜயகாந்த்திற்கு மவுசு அதிகம். அதற்கு முக்கியக் காரணம், எஸ்.ஏ.சி. தான். இன்றைய விஜயகாந்த் ரசிகர்களுக்குக்கூட தெரியாத விஷயம், விஜயகாந்த்தும் விஜய் போல் அஜால்குஜாலில் ஆரம்பித்து ஆக்சன் ஹீரோவாக ஆனவர். எஸ்.ஏ.சி படங்கள் ஆக்சனுக்கும் கிளுகிளுப்புக்கும் பெயர் பெற்றவை. பின்னாளில் ‘போராளி இயக்குநர்’ போன்ற இமேஜ் வரவும் தான் அவற்றைக் குறைத்துக்கொண்டார். உதாரணமாக...

விஜய்யின் புகழ்பெற்ற பிட்டுக் காட்சிகள், ரசிகனில் சோப்பு போடும் சீன், யுவராணியுடன் மழை சாங் மற்றும் கபடி சீன். முதல் இரண்டு சீன்களும் விஜயகாந்த்தின் ஆரம்ப காலப் படமான சாட்சியில் எஸ்.ஏ.சி.யால் வைக்கப்பட்டவை. கபடி சீனை எஸ்.ஏ.சியின் இன்னொரு விஜயகாந்த் படமான நெஞ்சிலே துணிவிருந்தால் படத்தில் பார்க்கலாம். இவையெல்லாம் இளைஞர்களையும் பி&சி செண்டரையும் இழுத்துவரும், பிறகு புரட்சிப் படங்கள் மூலம் ஆக்சன் இமேஜை வளர்த்தெடுக்கலாம் என்பது தான் எஸ்.ஏ.சி.யின் செயல்திட்டம். விஜயகாந்த்தை அப்படித்தான் அவர் பெரிய ஸ்டாராக ஆக்கினார்.

எல்லோரும் பழைய படங்களைத் தான் ரீமேக் செய்வார்கள். எஸ்.ஏ.சி. பழைய ‘சீன்’களை ரீமெக் செய்தார். எதிர்பார்த்த மாதிரியே தமிழ் சினிமாவை அவை கலக்கின. ஆனால் பிட்டுப்படம் கைகொடுத்த அளவிற்கு மாண்புமிகு மாணவன் போன்ற புர்ச்சிப் படங்கள் கைகொடுக்கவில்லை. விஜய்யின் பொடியன் தோற்றமும் ஒரு காரணம், எஸ்.ஏ.சியின் டெக்னிக்குகள் பழகினவையாக, பழையவையாக ஆகியிருந்ததும் ஒரு காரணம். இருப்பினும் தேவா, விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்ளே போன்ற படங்கள் வெளியாகி விஜய்யை ஒரு ஆவரேஜ் ஹீரோவாக நிலைநிறுத்தின.

2. ‘லா..லா..லா’ கால கட்டம் (1996-2003):


அதே காலகட்டத்தில் புதிய மன்னர்கள் எனும் புரட்சிப் படத்தை எடுத்து படுதோல்வியைச் சந்தித்தார் இயக்குநர் விக்ரமன். பாரதிராஜாவின் என் உயிர்த்தோழன், கமலின் சத்யா போன்ற புரட்சிப்படங்களும் தோல்வியைத் தழுவிய நேரம் அது. ஆனால் புதிய மன்னர்களுக்கு முன் விக்ரமன் எடுத்த மென்மையான படமான (ஃபீல் குட் மூவி) புது வசந்தம் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது. மக்களின் ரசனை அமைதியான படங்களை நோக்கி திரும்பிக்கொண்டிருந்த காலகட்டம். புது வசந்தம் ஸ்டைலில் இன்னொரு படம் எடுப்போம் என்று பூவே உனக்காக படத்திற்குத் தயாரானார் அவர். ஒரு பெரிய ஸ்டார் உருவாவதற்கான அடித்தளமாக இந்தப் படம் இருக்கப்போகிறது என்று விக்ரமனுக்கும் தெரியாது, நடிக்க ஒப்புக்கொண்ட விஜய்க்கும் தெரியாது. விஜய்யை புக் செய்யவும், இண்டஸ்ட்ரியே விக்ரமனை மிரட்டியது. அப்போது நடந்த கூத்துக்களை கீழே உள்ள இமேஜில் பார்க்கலாம்:

படம் ரிலீஸ் ஆனது. பட்டி தொட்டி எங்கும் சூப்பர்ஹிட். ‘அடுத்த வீட்டுப் பையன் போல இருக்கான்யா’ என்று விஜய்யை ரசிக்க ஆரம்பித்தார்கள். (அப்படீன்னா ரசிகன் போன்ற படங்களில் எல்லாம் ஒருத்தனும் விஜய்யைப் பார்க்கலைன்னு அர்த்தம்!!) விஜய்க்கு மட்டுமல்ல, தமிழ் சினிமாவுக்கே புது ட்ரெண்ட்டை ஆரம்பித்த படம் பூவே உனக்காக. இதே நேரத்தில் வெளிவந்த காதல் கோட்டையின் வெற்றியும் மக்களின் ரசனை மாற்றத்தை உறுதி செய்தது. உடனே எல்லோருக்கும் லவ் ஃபீலிங் பிய்த்துக்கொண்டது. தமிழ் சினிமாவே காதல் மழையால் நனைந்தது.

அடுத்து சில படங்கள் சொதப்பினாலும் லவ் டுடே ஓரளவு விஜய்யை காப்பாற்ற, காதலுக்கு மரியாதை வெளியாகி விஜய்யை உச்சத்துக்கு கொண்டுபோனது. தனியாகப் படம் பார்த்தவன் எல்லாம் அடுத்து குடும்பத்தைக் கூட்டிக்கொண்டு போனான். குடும்பத்துடன் போன லேடீஸ், தன் ஃப்ரெண்ட்ஸுடன் தனியாகப் போனார்கள். ரிப்பீட் ஆடியன்ஸால் தியேட்டர்கள் நிறைந்தன. மினிமம் கேரண்டி நாயகர்கள் வரிசையில் விஜய்க்கு இடம் கிடைத்தது. தொடர்ந்து நினைத்தேன் வந்தாய், ப்ரியமுடன், நிலாவே வா(ஆவரேஜ்) என வெற்றிகளில் மிதந்தார் விஜய். அடுத்து ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் இன்னொரு காதலுக்கு மரியாதை எனும் அளவிற்கு வெற்றி பெற்றது. ஆர்,பி.சௌத்ரி ‘விஜய் என்றாலே வெற்றி தான்’ என்று தமிழ்நாடு முழுக்க போஸ்டர் அடித்தார்.

எப்போதெல்லாம் விஜய் உச்சத்தை நோக்கி நகர்கிறாரோ, அப்போதெல்லாம் இரண்டு கெட்ட காரியங்களைச் செய்வார். ஒன்று, அப்பா எஸ்.ஏ.சி.க்கு கால்ஷீட் கொடுப்பது. இரண்டாவது, அரசியல் ஆசையை வெளிக்காட்டும் படங்களை எடுப்பது. நெஞ்சினிலே படம் மூலம் உப்பிக்கொண்டிருந்த வெற்றிப் பலூனில் ஒரு ஓட்டையைப் போட்டார் எஸ்.ஏ.சி. கமர்சியல் கிங் கே.எஸ்.ரவிகுமாரின் மின்சாரக்கண்ணாவும் புறாவுக்கே மணியடித்து விஜய்யை காலி செய்தது. விஜய் மிக மோசமான நிலையில் இருப்பதை கண்ணுக்குள் நிலவு உறுதி செய்தது. ஏனென்றால் அது காதலுக்கு மரியாதை சூப்பர் ஹிட் கூட்டணி இணைந்த படம். ’விஜய் அவ்வளவு தான்..இவர் இன்னொரு சுரேஷ், மோகன்’ என்று பேச்சு கிளம்பியது.

அப்போது தான் அதிரடியாக இறங்கியது குஷி. தொடர்ந்து ப்ரியமானவளே. இரண்டுமே சூப்பர் ஹிட் ஆக, அடுத்த ரவுண்ட் ஆரம்பித்தது விஜய்க்கு.

காதலுக்கு மரியாதை ஹிட் ஆன சமயத்தில்கூட ‘ஒரு ஆக்சன் ஹீரோவாக நடிக்கத்தான் எனக்கு ஆசை’ என்று பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார் விஜய். அப்போது நாங்கள்கூட ‘காதல் படங்கள் தான் நல்லா ஓடுதே..இவருக்கு ஏன் வேண்டாத ஆசை’ என்று பேசியிருக்கிறோம். வெறும் ரொமாண்டிக் ஹீரோவாக இருந்த சுரேஷ், மோகன், அர்விந்தசாமி, மாதவன் போன்றோரின் இன்றைய மார்க்கெட் வேல்யூவைப் பார்க்கும்போது, விஜய் & எஸ்.ஏ.சி.யின் தொலைநோக்குப் பார்வையை நாம் புரிந்துகொள்ளலாம். கையால் ரோஜாப்பூவை வைத்து சுற்றிக்கொண்டிருந்தால் காலியாகிவிடுவோம்..புர்ச்சிப் படங்களும் ஓடுவதில்லை. எப்படி ஆக்சன் ஹீரோ ஆவது என்ற குழப்பத்தில் விஜய் இருந்த நேரம். கொஞ்சம் ஸ்டியரிங்கைத் திருப்பி ‘ஷாஜகான், பத்ரி’யில் ஆக்சனை மிக்ஸ் செய்தார், காதலையும் விட்டுவிடாமல். ரிசல்ட், அட்டர் ஃப்ளாப்!

தொடர்ந்து தமிழன், யூத் படங்களும் ஊற்றிக்கொள்ள, அடுத்து வந்த பகவதி வெற்றிப்படமானது. பகவதி படம், பாட்ஷாவை உல்டா செய்து வந்த லோ-கிளாஸ் ஆக்சன் படம். அது வெற்றிபெற, அடுத்து வந்த ஃபீல் குட் மூவியான வசீகரா தோல்விப்படமானது. எப்போது டிவியில் பார்த்தாலும் ரசிக்க முடிகிற படம், வசீகரா. ஆனால் அது ஓடவில்லை. 

கடந்த பத்து வருடமாக ஆக்சனை விட்டு காதலில் திளைத்த தமிழ் சினிமா, மீண்டும் ஆக்சனை நோக்கித் திரும்பியதின் அறிகுறி தான் பகவதியின் வெற்றியும், வசீகராவின் தோல்வியும்.



3. ’மலை..திருமலைடா’காலகட்டம் (2003 - 2010):


விஜய்யால் மறக்க முடியாத படம், திருமலை. தன் கரியரை சரியான பாதையில் திருப்பிய படம் என்று இப்போதும் பேட்டிகளில் சொல்வார். ரஜினி-கமல் மாதிரி விஜய்-அஜித் உருவாகிக்கொண்டிருந்த நேரம் அது. முன்னோர் ஸ்டைலில் ரசிகர்களுக்குள் மோதல்கள் நடக்க ஆரம்பிக்க, ‘எவண்டா இங்கே தல?’ என்று கேட்டபடி திருமலை எண்ட்ரி ஆனார். ரஜினிக்கு எப்படி அண்ணாமலையோ, அப்படியே விஜய்க்கும் திருமலை ஒரு ஸ்டைலைக் கொடுத்தது. ஓப்பனிங் சாங், பஞ்ச் டயலாக், ஆக்சன் பாதையில் பயணிக்க ஆரம்பிக்க, திருமலையின் வெற்றி தான் முக்கியக் காரணம்.


இன்றும் பார்க்க போரடிக்காத கில்லி, அடுத்து வந்து சொல்லியடித்தது. மீண்டும் வசூல் மன்னன் ஆனார் விஜய். வெற்றியின் உச்சத்தையும், தோல்வியின் பாதாளத்தையும் விஜய் பார்த்த காலகட்டம் இது. தொடர்ந்து வந்த மதுரை சுமாராகப் போனாலும், திருப்பாச்சியும் சிவகாசியும் பட்டையைக் கிளப்பின. இடையில் வந்த இன்னொரு நல்ல ஃபீல் குட் மூவியான சச்சினும் தோல்வியடைய, காதல் படங்களுக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டு ஆக்சனில் இறங்கினார் விஜய். இடையில் வந்த ஆதிக்கு கெட்டவார்த்தையில் விமர்சனம் வந்தாலும் அடுத்து வந்த போக்கிரி, விஜய்யை உச்சத்திற்கு கொண்டுபோனது.

அதன்பிறகு ஆரம்பித்தது விஜய்க்கும் நமக்கும்(!) கெட்ட நேரம். கில்லி இயக்குநருடன் மீண்டும் இணைந்த குருவி, போக்கிரி இயக்குநருடன் மீண்டும் இணைந்த வில்லு ஆகிய இரண்டுமே அட்டர்ஃப்ளாப் ஆனது. பாசிலின் கண்ணுக்குள் நிலவு தோற்றபோது விழுந்த அடி, இப்போதும் விஜய்க்கு விழுந்தது. அப்போது இரண்டாவது மாடியில் இருந்தார் என்றால், இப்போது டாப் ஃப்ளோரில் இருந்தார். ‘அதெல்லாம் நல்லாத் தான் இருக்கு’ என்று ரசிகர்கள் தாங்கிப்பிடித்தாலும் வேட்டைக்காரன் வந்து ரசிகர்களையும் டரியல் ஆக்கியது.

’குருவி நல்லாயிருக்கு’ என்ற ரசிகர்களே வில்லு வரவும் ‘குருவி மாதிரி இல்லே..இது நல்லாயிருக்கு’ என்பார்கள். வேட்டைக்காரன் வரவும் ‘வில்லு மாதிரி கிடையாது..இது சூப்பர் படம்’ என்பார்கள். எத்தனை அடி விழுந்தாலும் வலிக்காத மாதிரியே நடித்த அவர்கள்கூட, சுறா வரவும் கலங்கிப் போனார்கள். விஜய்க்கு மட்டுமல்ல, விஜய்யின் ரசிகர்களுக்கும் மோசமான காலகட்டம் இது.

இந்த நேரத்தில் இரண்டு விஷயங்கள் உறுதியாகத் தெரிந்தன. ஒன்று, விஜய் தன் பாதையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இரண்டாவது, என்ன நடந்தாலும் விஜய்யைக் கைவிடாத ரசிகர் கூட்டம் உருவாகிவிட்டது. ரஜினியின் தளபதி படத்தை மனதில் வைத்து எஸ்.ஏ.சி. கொடுத்த பட்டம் தான் ‘இளைய தளபதி’. அதற்கு அர்த்தமே இளைய சூப்பர் ஸ்டார் தான். இளைய சூப்பர் ஸ்டார் என்பதை பெரும்பாலானோர் ஒத்துக்கொள்ளாவிட்டாலும், இளைய தளபதி என்பதை ஒத்துக்கொண்டார்கள்!!

காதல் படங்களின் கால கட்டத்தில் ரஜினி ரசிகனாகவும், அண்ணாமலை சீனை நடித்துக்காட்டியே அப்பாவிடம் சான்ஸ் பெற்றதாகவும் பெருமையுடன் சொல்லிவந்தார் விஜய். திருமலை காலகட்டத்தில் ஒரு அதிரடி அரசியலில் இறங்கினார். அது அவருக்கு அதிக எதிர்ப்பையும், அதிக மார்க்கெட்டையும் உருவாக்கியது. ஆம், ரஜினியை தன் போட்டியாளராக மறைமுகமாக அறிவித்தார். எலியுடன் போட்டியிட்டு ஜெயிப்பதைவிட புலியுடன் போட்டியிட்டு தோற்பது பெருமை என்று களத்தில் இறங்கினார். ரஜினியே கடுப்பாகி அஜித்தை முன்னிறுத்தினார். இன்றும், விஜய் அதே நிலையில் தான் இருக்கிறார். விஜய்யின் சூப்பர்ஹிட் படத்தின் வசூலை விட, ரஜினியின் தோல்விப்படத்தின் வசூல் அதிகம். ஆனாலும் விஜய்யின் இந்தப் போக்கு, அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியது உண்மை.

ரஜினி சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துக்கொண்டிருந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தார். ரஜினியின் வளர்ச்சி, ஏனோ அவருக்கு பிடிக்கவில்லை. எனவே எம்.ஜி.ஆர் கமலஹாசனை முன்னிறுத்தினார். தன் வாரிசு அவர் தான் என்பதாக தன் ரசிகர்களுக்கு சிக்னல் கொடுத்தார். ஆனால் அதன்பின் நடந்த கதை உங்களுக்கும் தெரியும், எஸ்.ஏ.சிக்கும் தெரியும். எனவே தான் ரஜினிக்கு எதிராக விஜய்யை நிறுத்த ஆரம்பித்தாரோ எனும் சந்தேகம் எனக்கு உண்டு. சவலைப்பிள்ளையாக ரஜினியை அண்டிக்கொண்டிருப்பதை விட,  சண்டைக்கோழியாக விஜய் நிற்பதை அவரது ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். (சூப்பர் ஸ்டாரின் செல்வாக்கு கபாலி டீசரிலேயே தெரிந்தாலும்!) ஒரு ரஜினி ரசிகனாக விஜய்யின் இந்தப் போக்கை நான் வெறுத்தாலும், இதில் இருக்கும் நுணுக்கமான, புத்திசாலித்தனமான அரசியலை நான் ரசிக்கிறேன்!

4. ‘மாற்றம்..முன்னேற்றம்..வளர்ச்சி’ காலகட்டம் (2011-2016):

காதல் படங்களும் ஓடுவதில்லை, ஆக்சன் படங்களும் ஓடுவதில்லை என்றால் ஒரு மனுசன் என்ன தான் செய்வது? வேட்டைக்காரன் - சுறா போன்ற துன்பியல் சம்பவங்களுக்குப் பிறகு, விஜய் தன் பாதையை மறுபரிசீலனை செய்தார். ரஜினியே அண்ணாமலை ஃபார்முலாவை விட்டு வெளியேறி எந்திரனாக மாறிவிட்டார். ஓப்பனிங் ஷாங் - பஞ்ச் டயலாக்கை எல்லாம் சிவாஜியிலேயே கைவிட்டிருந்தார். எனவே விஜய்யும் திருமலை ஃபார்முலாவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம். எனவே, சுத்தபத்தமான சைவப்பிள்ளையாக காவலனில் களம் இறங்கினார். ரிலீஸ் நேரப் பிரச்சினையால் கொஞ்சம் வசூல் பாதித்தாலும், நல்ல படம் எனும் பெயருடன் வெற்றியும் வந்தது.

வேலாயுதத்தில் ஹீரோயிசத்தில் அடக்கி வாசித்தாலும், படம் சுமாராகவே போனது. ஷங்கருடன் நண்பனில் இணைந்தார். ஷங்கர் பட்ஜெட்டை வழக்கம்போல் இழுத்துவிட, ஹிந்தியில் ஹிட் அடித்த படம் தமிழில் நஷ்டத்தைக் கொண்டுவந்தது. ஆனால் விஜய் ‘இளமையான ஹீரோ’வாக திரும்பி வந்தார். அதில் இருந்து இன்றுவரை விஜய்க்கு படங்களில் வயது குறைந்துகொண்டே போவது மேஜிக்.

கில்லி, போக்கிரி மாதிரி வெற்றிப்படத்தைக் கொடுக்க வேண்டும் எனும் பல வருட ஏக்கத்தை தீர்த்தது ‘துப்பாக்கி’. வசூலில் நூறு கோடியைக் கடந்து, விஜய்யை மீண்டும் வசூல் மன்னனாக ஆக்கியது துப்பாக்கி. இந்த காலகட்டத்தில் விஜய்க்கு உறுதியான ஃபேமிலி ஆடியன்ஸ் உருவாகியிருந்தார்கள். தலைவா, ஜில்லா, புலி எல்லாம் நல்லாயில்லை என்று விமர்சனங்கள் வந்தாலும் ‘சரி, அதையும் போய்ப் பார்ப்போமே’ என்று பல குடும்பங்கள் தியேட்டருக்கு கிளம்பி வந்தன. ‘படம் நல்லா இருக்கோ, இல்லையோ..அவர் படம் வந்தால் தியேட்டருக்குப் போவோம்’ எனும் நிலையை இன்று விஜய் எட்டியிருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.

இங்கே குவைத்தில் முதல்நாள், முதல் ஷோ போகும்போது நான் கவனிக்கும் விஷயம், யாரெல்லாம் படம் பார்க்க வருகிறார்கள் என்பது. சில நடிகர்கள் (இங்கே பெயர் வேண்டாம்) ரெண்டு ஹிட் கொடுத்ததுமே, அடுத்த படத்திற்கு தியேட்டர் ஹவுஸ்ஃபுல் ஆகிவிடும். ஆனால் அவர்களே அடுத்து இரண்டு ஃப்ளாப் கொடுத்தால், தியேட்டரில் முதல் ஷோவிற்கு ஆளே இருக்காது. ஆனால் வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு, கூட்டத்தை ஈர்க்கும் நடிகர்களில் ஒருவராக விஜய் இன்று ஆகியிருக்கிறார்.

கத்தி, புலி, தெறி என சமீப காலமாக விஜய் தேர்ந்தெடுக்கும் படங்களைப் பார்த்தாலே, அவர் திருமலை ஃபார்முலாவை விட்டு விட்டு, வித்தியாசமான ஃபேமிலி ஆடியன்ஸை ஈர்க்கும் படங்களை செய்ய ஆரம்பித்திருப்பது புரியும். புலி படம் விஜய் ரசிகர்களுக்கே திருப்தி தரவில்லை. ஆனாலும் அவர் புலி படம் செய்தது சரியென்றே நான் சொல்வேன். பல வீட்டுக் குழந்தைகளையும் விஜய் ரசிகர்களாக புலி ஆக்கியிருக்கிறது. ரஜினியின் ஓல்டு டெக்னிக் தான். இதை என் வீட்டில் நானே பார்த்தேன். முதல் பையன், புலி படத்தை டவுன்லொடு ஐம்பது முறைக்கு மேல் பார்த்தது வரலாறு. அது பரவாயில்லை.

இரண்டாவது பையனுக்கு இரண்டு வயது. அம்மா-அப்பா தாண்டி இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை. புரியாத சில வார்த்தைகளை அவ்வப்போது சொல்வான். சில நாட்களாக சன் மியூசிக் ஓடும்போது என்னிடம் வந்து ‘புய்..புய்’ என்றான். ஏதோ சும்மா சொல்கிறான் என்று விட்டுவிட்டோம். ஒருநாள் கத்தி பாடல் ஓடும்போது டிவிக்கு அருகே போய் ‘அப்பா..புய்’ என்றபோது தான் அவன் விஜய்யை ‘புலி’ என்கிறான் என்பது உறைத்தது. புலி படம் பார்த்தபிறகு, எங்களுக்கே தெரியாமல் அவன் விஜய் ரசிகன் ஆகியிருக்கிறான்!

புலி படத்திற்காக விஜய் சோஷியல் மீடியாக்களில் எப்படி ஓட்டப்பட்டார் என்று நமக்குத் தெரியும். ‘புளி..கொட்டை எடுத்த புளி’ என தாளித்து எடுத்தார்கள். இத்தகைய கிண்டல்களும் அவமானங்களும் விஜய்க்குப் புதிதில்லை. முதல் படத்திலேயே அவர் இதைவிட மோசமான விமர்சனத்தைப் பார்த்துவிட்டார். 
இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம், அவர் அவ்வப்போது கீழே விழுந்தாலும் மெதுவாக தனது ரசிகர் வட்டத்தை கூட்டிக்கொண்டே செல்கிறார் என்பது. அதற்கு உதாரணம் தான் தோல்வியடைந்த புலி. அது தான் மேலும் பல சிறுவர்களையும், குடும்பங்களையும் விஜய் பக்கம் திருப்பியது. செங்கல்பட்டு ஏரியாவில் ரிலீஸ் ஆகாவிட்டாலும், தெறி வெற்றிப்படமாக ஆவதற்கு புலி போன்ற விஜய்யின் புத்திசாலி மூவ்கள் தான் காரணம். அது ஒருநாளும் அறிவுஜீவிகளுக்குப் புரியாது!


ஹேப்பி பர்த் டே விஜய்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 comments:

  1. அருமை...............ஆளப் புடிக்காதுன்னாலும்.....!

    ReplyDelete
  2. மிக மிக நுட்பமான பார்வை. பெரிய பெரிய இயக்குனர்கள் , நடிகர்கள் தயாரிப்பாளர்களின் வாரிசுகள் வெற்றி பெறாத போது , விஜய் பெற்றிருக்கும் வெற்றி அவருக்கே உரித்தானது.

    அதை விட உங்கள் எழுத்து மிக அருமை. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.