ஜெயலலிதாவின் அப்பல்லோ வீடியோ வெளியாகி, மீண்டும் ஒரு பரபரப்பு கிளம்பியிருக்கிறது. ‘வீடியோ இருந்தால் வெளியிட வேண்டியது தானே?’ என்று கேட்டவர்களே யூ-டர்ன் அடித்து ‘இப்படி வெளியிடலாமா? நியாயமா?’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். வெளியிட்டவர்களும் ‘அதானே, இப்படி வெளியிடலாமா?’ என்று கேட்டு திகிலூட்டுகிறார்கள்.
உண்மையில் ஜெயலலிதாவிற்கு என்ன தான் நடந்தது, ஏன் இந்த மர்மம் என்பது தான் பலரின் கேள்வி. இதற்குப் பதில் தெரிய வேண்டுமென்றால், ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது எப்படி இருந்தார் என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.
அவர் எப்போதுமே மர்மங்களின் ராணி தான். என்ன நினைக்கிறார், என்ன செய்வார், யாரை எப்போது தூக்கி அடிப்பார் என்று யாருக்கும் தெரியாது. ஆட்சி அமைக்கும்போது மட்டும் மீடியாவைச் சந்திப்பார். அதன்பிறகு யாரும் அவரை அணுக முடியாது. கட்சிக்காரர்களைத் தொடர்ந்து சந்திக்கும் வழக்கமும் கிடையாது.
கடைசியாக எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஐந்து ஆண்டுகளில் அவர் வெளியே வரவே இல்லை. ஒரு அறிக்கை மட்டும் வரும். ‘இன்று, இந்த ஊரில் ஆர்ப்பாட்டம்’ என்று. அந்த ஏரியா கட்சிக்காரர்கள் அதைப் படித்து, போராடிக் களைவார்கள். பிரச்சாரத்தைத் தவிர எதற்கும் மக்களைச் சந்திக்கும் வழக்கம் அவருக்கு இருந்ததும் இல்லை. அதனால் தான் மூழ்கிய சென்னை மக்களைப் பாக்க வந்து ‘வாக்காளப் பெருமக்களே’ என்று பேசினார்.
தமிழ்நாட்டின் பெருமைகளில் ஒருவரான அப்துல் கலாம் இறந்தபோது அஞ்சலி செலுத்தக்கூட அவர் வெளியே வரவில்லை. அதற்கு எந்த விளக்கமும் அவர் தந்ததும் இல்லை. விளக்கம் சொல்லும் அளவிற்கு, மக்களோ டயர் நக்கிகளோ ஒர்த் இல்லை என்ற திட நம்பிக்கை அவருக்கு உண்டு.
ஒருமுறை சிறுதாவூர்க்கு ஓய்வு எடுக்கப்போகிறார் என்று செய்தி வந்தது. அடுத்து இரு மாதங்களுக்குப் பிறகு சிறுதாவூரில் இருந்து கொடநாட்டிற்கு ரெஸ்ட் எடுக்கப்போவதாக செய்தி வந்தது. ஃபேஸ்புக்கில் நாம்கூட ‘ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்தே டயர்டு ஆன ஒரே தலைவர் நம்ம சி.எம் தான்’ என்று கிண்டல் செய்தோம். பிறகு கொடநாட்டில் மூன்று மாதங்களுக்கு மேல் இருந்தார். இடைப்பட்ட காலத்தில் யாரையும் பார்ப்பதில்லை. ஒரு ஃபோட்டோகூட வெளியே வராது.
இது தான் ஜெயலலிதா. வெளியே என்ன நடந்தாலும் சிறு அசைவுகூட இல்லாமல் ‘தானுண்டு ...தன் சசி உண்டு’ என்று வாழ அவரால் மட்டுமே முடியும்.
இந்த ஏகாந்த பழக்கம் தான் இன்றைக்கு சசிகலாவிற்கு பெரும் தலைவலியாக முடிந்திருக்கிறது.
என்னைப் பொறுத்தவரை, சசிகலா உலகத்திற்கே கெட்டவராக இருக்கலாம். ஆனால் ஜெயலலிதாவிற்கு அவர் சிறு தீங்குகூட நினைக்க மாட்டார். அவர் அப்ரூவர் ஆகி, தப்பிக்கும் வாய்ப்புகள் இருந்தும், எந்த சூழ்நிலையிலும் ஜெயலலிதாவை சசிகலா கைவிட்டதே இல்லை.
சசிகலா குரூப்பை அழிக்க சிறு ஆயுதம் கிடைத்தாலும் மோடி அரசு விடாது. ஜெயலலிதா தாக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் அப்போல்லாவில் அனுமதிக்கப்பட்டிருந்தால், இவ்வளவு நேரம் விட்டு வைத்திருக்க மாட்டார்கள். அப்பல்லோவில் ஏதாவது நடந்திருந்தாலும், அவர்கள் அழிக்கப்பட்டிருப்பார்கள். ஒன்றும் இல்லை என்பதால் தான் இன்னும் சுற்றிச் சுற்றி வந்து குரைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
டெல்லியில் இருந்து ஒருநாள் ஒரு ஃபோன்கால் வருகிறது. சொத்துக்குவிப்பு தீர்ப்பு பற்றிய கால் என்று ஊடகங்கள் சொல்கின்றன. உடனே கோபத்தில் ஃபோனில் பேசியவரிடமும், அருகில் இருந்தோரிடமும் கத்துகிறார். மயங்கிச் சரிகிறார். அப்பல்லோவிற்கு கொண்டு செல்கிறார்கள். சில நாட்களில் தேறி அமர்கிறார். முதல்மரியாதை பார்க்கிறார். ஜூஸ் குடிக்கிறார். வழக்கம்போல் சசிகலாவை மட்டுமே பார்க்கிறார். கவர்னர், அடிமைகள், வெங்கய்யா, சொம்பய்யா என யார் வந்தாலும் ‘அந்த மூஞ்சிகளை எல்லாம் பார்க்க முடியாது. போகச் சொல்லு’ என்று விரட்டி விடுகிறார். அவர்களும் வெளியே சொன்னால் வெட்கக்க்கேடு என ‘பார்த்தோம்...பார்த்தவர்களைப் பார்த்தோம்..டாக்டரைப் பார்த்தோம்..சசிகுரூப் எங்களைப் பார்க்கவிடவில்லை’ என்று உளறி, வெளிறி ஓடுகிறார்கள்.
ஏதோ கொடநாட்டில்/சிறுதாவூரில் இருப்பது போல் கூலாக இருக்கும்போது, மீண்டும் உடல்நிலை மோசமாகிறது. சிலநாட்களில் சீரியஸ் ஆகி, மரணிக்கிறார்.
- இது தான் என் யூகம்.
ஏன் மக்களைப் பார்க்கவில்லை, ஏன் வீடியோ வெளியிடவில்லை, ஏன் ஒரு ஆடியோகூட வெளியிடவில்லை என்று கலைஞர் மாதிரி அரசியல்வாதிகளிடம் கேட்கலாம். எப்போதுமே ஜெயலலிதா அதைச் செய்ததே கிடையாது. ஏதோ வாராவாரம் கட்சியினருடன் கட்சி வளர்ச்சி பற்றியும், மாநில வளர்ச்சி பற்றியும் அளவளாவிக்கொண்டிருந்த மாதிரியும், அப்பல்லோ போன உடன் தான் அது நின்றுவிட்ட மாதிரியும் ஃபீல் செய்வதைவிடக் காமெடி ஏதுமில்லை.
ஜெயலலிதா நலமாகத் தேறி வந்திருந்தால் ‘ஏன் 75 நாள் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை?’ என்று யாருமே அவரிடம் கேட்டிருக்க முடியாது. தூக்கிப்போட்டு மிதித்திருப்பார். எல்லோரும் ஒன்றுமே நடக்காத மாதிரி, கலைந்திருப்பார்கள். கிளைமாக்ஸ் நெகடிவ்வாகப் போனதால், இத்தனை ரகளை!
‘நீங்க டிஸ்சார்ஜ் ஆகலாம்’ என்று டாக்டர்கள் சொன்னபிறகும் ‘நல்லநாள் பார்த்துத் தான் போவோம்’ என்று அடம்பிடித்து உள்ளே உட்கார்ந்திருந்தார். அப்பல்லோ ரெட்டியே நொந்துபோய் ‘பேசண்ட் தான் முடிவு செய்வார்’ என்று இதைச் சொன்னார். நல்லவேளை உடனே வெளியே வரவில்லை. மருத்துவமனையில் இறந்ததற்கே இத்தனை கேள்வி. வீட்டிற்குப் போய் இறந்திருந்தால், அவ்வளவு தான்.
என் உறவினர் ஒருவர் ஜெயலலிதா மாதிரி தான். சுகர், பிரஷர் என ஜெயலலிதாவிற்கு இருந்த அத்தனை வியாதிகளும், ஊழல் தவிர்த்து, அவருக்கு உண்டு. அவர் நன்றாகத்தான் இருந்தார். திடீரென ஒருநாள் கை வலிக்கிறது என்றார். ஆஸ்பத்திரி போவதற்குள் கோமாவில் விழுந்தார். ஒரு மாதம் கழித்து, கண் விழித்தார். கொஞ்சநாளில் பேச ஆரம்பித்தார். அடுத்த ஒரு மாதத்தில் மெதுவாக நடக்க ஆரம்பித்தார். வீட்டிற்கும் வந்து சில மாதங்கள் நன்றாக இருந்தார். திடீரென ஒருநாள் சாப்பிட முடியவில்லை என்றார். அடுத்த நாள் இறந்துவிட்டார்.
காலையில் நன்றாக இருந்தவர் எப்படி மாலையில் கோமாவில் விழுந்தார்? எனவே இது சதி என்று சொல்லலாமா? வீட்டிற்கு நல்லபடியாக டிஸ்சார்ஜ் ஆகிவந்தவர், எப்படி இரண்டு நாள் சீரியஸாக இருந்து இறப்பார்? கொலை என்றும் கத்தலாமா?
திமுகவிற்கு எப்படி 2ஜி-யோ, அப்படித்தான் சசிகலா குரூப்பிற்கு அப்பல்லோ மர்மம். உரிக்க, உரிக்க வெங்காயம் போல் ஒன்றும் தேறாது. ஆனாலும் எதிர்க்கட்சிகளும் சசிகலாவின் எதிர்க்கோஷ்டிகளும் ‘கொலை..கொலை’என்று கத்திக்கொண்டே தான் இருப்பார்கள். அது பாதிக்கவும் செய்யும். மக்களும் அதை நம்புவார்கள். காரணம், வரலாறு அப்படி!
நமக்கும் பரபரப்பாக பதிவு போட மேட்டர் வேண்டுமென்பதால், பல யூகங்களைக் கிளப்பலாம். காரணம், உண்மை எப்போதும் போரடிக்கும்!
0 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.