பாகுபலி-1ல்
கதையே இல்லை..வெறும் கேரக்டரை மட்டுமே அறிமுகப்படுத்தினேன் என்று ராஜமௌலி சொன்னாலும்,
அது உண்மை இல்லை. அங்கே ஒரு கதை இருந்தது. தன் மகன் வந்து மீட்பான் என்று தாய் காத்திருக்க,
காதலிக்காக தாய் என்று தெரியாமலேயே மகன் மீட்டு வருகிறான் என்று ஒரு முழுமையான சித்திரத்துடன்
முதல்பாகம் வந்தது.
இரண்டாம்
பாகத்தில் தாய் ஏன் சிறைப்பட்டாள் என்றும் மில்லியன் டாலர் கேள்வியான கட்டப்பா ஏன்
பாகுபலியை கொன்றார் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
மகாபாரதத்தில்
திருதராஷ்டிரன் பார்வையற்றவன். எனவே தம்பி பாண்டுவை மன்னன் ஆக்குகிறார்கள். அடுத்த
தலைமுறையிலாவது தன் ரத்தம் முடிசூட வேண்டும் எனும் திருதராஷ்டிரனின் நியாயமான ஆசையும்,
பாஞ்சாலியை சபதம் செய்ய வைக்கும் கௌரவர்களின் கீழ்த்தரமான நடவடிக்கையும் தான் மகாபாரதப்
போருக்கு அடிப்படை. பாகுபலி-2 படத்தின் கதையில் மகாபாரதத்தின் மேலே சொன்னதின் தாக்கம்
நிறையவே இருக்கிறது.
பாகுபலிக்கும்
தேவசேனாவிற்குமான காதல் காட்சிகளே முதல்பாதியை ஆக்கிரமிக்கின்றன. வழக்கம்போல் பிரம்மாண்டம்
& அழகுடன் நகைச்சுவையும் சேர முதல்பாதி களைகட்டுகிறது. சத்தியராஜின் வசனங்களுக்கு
தியேட்டரில் சிரிப்பலை. இடைவேளையிலேயே விதியின் சதியால் தேவசேனாவிற்காக, அம்மாவையே
பாகுபலி எதிர்க்க வேண்டியதாகிறது.
தொடர்ச்சியான
பிரிவும் துரோகங்களும் சூழ்ச்சிகளும் முதல்பாகத்தின் ஆரம்பக்காட்சிக்கு இட்டுச்சென்கின்றன.
அதை இரண்டாம்பகுதியில் விரிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.
முதல் பாகம்
போன்றே இதிலும் பிரம்மாண்டமாக மிரட்டியிருக்கிறார்கள். யானைக்கு மதம் பிடிப்பதாகட்டும்,
மூன்று அம்புகளை தொடுக்க பிரபாஸ் அனுஷ்காவிற்கு சொல்லிக்கொடுக்கும் சண்டைக்காட்சி,
பாகுபலியின் பிள்ளையை ரம்யாகிருஷ்ணன் மாடத்தில் இருந்து உயர்த்திப்பிடிக்கும் காட்சியாகட்டும்
விஷுவல் எஃபக்ட்ஸை உணர்வுப்பூர்வமாக பயன்படுத்துவது எப்படி என்று ராஜமௌலி துல்லியமாக
அறிந்திருக்கிறார்.
பிரபாஸின்
நடிப்பும் உழைப்பும் பாராட்டுக்குரியது. அவரே ஒரு பேட்டியில் சொன்னது போல், இன்னொரு
படத்தில் இதே அளவிற்கு உழைத்தால் பாடி தாங்காது. மறக்க முடியாத ஆளுமை.
படம் முழுக்க
அனுஷ்கா தான். தமன்னா கிளைமாக்ஸ் யுத்தத்தில் தான் வாளுடன் ஓடிவருகிறார். ஒரு நண்பர்
‘இந்த பாகத்திலாவது தமன்னா திரும்பி நிற்பாரா?’ என்று கேட்டிருந்தார். இதுவொரு பிரம்மாண்டப்படம்
என்பதால், அதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லியிருந்தேன். நான் சொன்னபடியே ஆயிற்று. அவரை
நிற்கவே விடவில்லை. இதில் எங்கே திரும்புவது.
அனுஷ்கா தற்போது
ஆண்ட்டி மாதிரி ஆகிவிட்டாரே என்று கவலை(?)யுடன் உள்ளே போனால், பழைய அனுஷ்காவாக கொடியிடையுடன்
வந்து அசத்திவிட்டார். அழகும் கம்பீரமும் ஒருங்கே அமைவதெல்லாம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.
அனுஷ்கா, அந்த வரம் வாங்கி வந்த தேவதை. வழக்கமான மருமகள் போல், அம்மாவையும் மகனையும்
வாய்த்துடுக்கால் பிரிப்பதைப் பார்க்கத்தான் ஒரு மாதிரியாக இருந்தது!
பிரபாஸ்
& அனுஷ்கா தோன்றும் எம்.ஜி.ஆர்த்தனமான மக்கள் கொஞ்சும் காட்சிகளும், கிளைமாக்ஸ்
யுத்தக்காட்சிகளும் சற்று போரடிக்கின்றன. மற்றபடி, படம் முழுக்க போரடிக்காமல் சென்றது.
படகில் ஏற
பாகுபலியின் தோளில் தேவசேனா நடப்பது, படகு பறப்பது, கரடி வேட்டை, அனுஷ்கா கோட்டையில்
நடக்கும் போர்காட்சிகள் என்று படம் முழுக்க கண்களுக்கு விருந்து தரும் விஷுவல் ட்ரீட்ஸ்
நிறைய. பாகுபலியின் பலமே அது தான்.
கட்டப்பா
ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பதற்கு பதில் தான் இந்த படத்தின் கதை என்பதால், கதையைப்
பற்றி ஒன்றும் சொல்லாமலேயே முடித்துக்கொள்கிறேன்.
படம் முடியும்போது
ஒரு சோகம் நம்மைக் கவ்விக்கொள்கிறது. அதற்குக் காரணம், பாகுபலி படம் அவ்வளவு தானா,
இந்த மேஜிக் சினிமாவில் அடுத்து எப்போது நிகழும் என்பது போன்ற சிந்தனைகள் தான். படம்
முடிந்தபின்னும் ஆடியன்ஸ் ஒரு நிமிடம் ஸ்க்ரீனையே வெறித்தபடி உட்கார்ந்திருக்கிறார்கள்.
வேறுவழியின்றி பாகுபலிக்கு பிரியாவிடை கொடுத்தபடி வெளியேறுகிறோம். பாகுபலி டீமின் உழைப்புக்கு
கிடைத்த வெற்றி, இந்த அன்பு தான்!
0 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.