Monday, April 10, 2017

சினிமா விமர்சனம் மூன்று நாட்களுக்கு அப்புறம்…..அப்புறம்?


நான் தீவிரமாக இணையத்தில் புழங்கிய காலத்தில் வியாழக்கிழமையே விமர்சனம் போட்டுவிடுவேன். அதற்காக நள்ளிரவில் காத்திருக்கும் பல நண்பர்கள் உண்டு. படம் ரிலீஸ் ஆகும் முன்பே நெகடிவ்வாக போடுவதால், வசூல் பாதிக்கிறது என்று சில சினிமா நண்பர்கள் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து என்னிடம் வருத்தப்பட்டார்கள்.

’மோசமான படத்தை நன்றாக இருக்கிறது என்று சொன்னால் என் நம்பகத்தன்மை போய்விடுமே?’ என்றேன். ‘நல்லா இருந்தால் மட்டும் சொல்லு..இல்லே விமர்சனம் போடாதே’ என்றார்கள். அப்படியென்றால் அதற்குப் பெயர் விமர்சனம் அல்ல, சொம்படித்து வாழ்வது. இந்த பிழைப்பு எதற்கு என்று இப்போதெல்லாம் புதுப்படங்களுக்கு விமர்சனம் எழுதுவதில்லை. மிக நல்ல படம் – மிக மோசமான படக்கள் பற்றி மட்டும் கொஞ்சம் புலம்புகிறேன்.


ஒரு தொழில் செய்பவராக, சினிமா நண்பர்களின் வேண்டுகோள் நியாயமானது தான். ஆனால் விமர்சனத்திற்கும் நியாயம் செய்ய வேண்டும், சினிமாவிற்கும் நல்ல செய்ய வேண்டும் என்றால் சும்மா தான் இருக்க வேண்டும். அதைத் தான் விஷால் இன்று சொலியிருக்கிறார்.

நெருப்புடா ஆடியோ ரிலீஸ் பங்சனில் ‘படம் ரிலீஸான முதல் மூன்று நாட்களுக்கு மீடியா விமர்சனம் எழுத வேண்டாம்’ என்று விஷால் கேட்டுக்கொண்டிருக்கிறார். சூப்பர் ஸ்டார் அதை ஆமோதித்திருக்கிறார். லாரன்ஸ் இன்னும் ஒருபடி மேலே போய் விமர்சனம் செய்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொங்கியிருக்கிறார்.

உண்மையில் சினிமா மிக மோசமான நிலையில் தான் இருக்கிறது. முன்பெல்லாம் சினிமா மட்டுமே மக்களின் பொழுதுபோக்காக இருந்தது. டிவியும் இண்டர்நெட்டும் பொழுதுபோக்கை வீட்டுக்குள்ளேயே கொண்டுவந்தபின், தியேட்டருக்கு போவது என்பது அவசியமா எனும் கேள்வி எழுந்து நிலைபெற்று நிற்கும் காலம் இது.

டிக்கெட் விலை, பார்க்கிங் கொள்ளை, கேண்டீன் கொள்ளை என்றெல்லாம் புறக்காரணிகள் இருந்தாலும், நேரம் என்பதும் பலருக்கு முக்கியமான விஷயமாக ஆகிவிட்டது. அரைநாள் செலவழித்து தியேட்டருக்குப் போவதை விட, ஹாயாக வீட்டிலேயே படுத்துக்கொண்டு விரும்பிய நேரத்தில் படம் பார்க்கும் மனநிலை எப்போதோ வந்துவிட்டது. எல்.இ.டி டிவி என்பது சர்வசாதாரணமாக பலரின் வீடுகளிலும் இருக்கிறது.

எனவே தியேட்டருகுப் போக வேண்டும் என்றால் ஒரு வலுவான காரணம் மக்களுக்கு தேவைப்படுகிறது. படம் நன்றாக இருக்கிறது என்று தெரிந்தால் ஒழிய யாரும் வீட்டை விட்டு நகர்வதில்லை. அதையும் இண்டர்நெட் சொல்லிவிடுகிறது. போட்டி நிறைந்த உலகில், முதலில் யார் சொல்வது என்று பெரும் போட்டியே நிகழ்கிறது. வலைத்தளங்கள், யூடியூப் மட்டுமல்லாது விகடன், ஹிந்து போன்ற பெரிய ஊடகங்கள்கூட சுடச்சுட விமர்சனம் போட வேண்டிய நிலை.

ஒரு படத்தின் ஆயுளே இன்று ஏழுநாட்கள் தான். அடுத்த வெள்ளிக்கிழமை வேறுபடம் ரிலீஸ் ஆகிவிடுகிறது. இதில் முதல் மூன்றுநாட்களுக்கு விமர்சனம் செய்யாதே என்றால், திங்கட்கிழமை போடும் விமர்சனம் யாருக்கு உதவும்?

’யாராவது படம் எப்படி இருக்கிறது என்று சொல்லட்டும்..நல்ல ரிசல்ட் வந்தால் தியேட்டருக்குப் போவோம்’ என்பது தான் மக்களின் மனநிலை. ஆனால் ‘விமர்சகர்கள் படம் எப்படி என்று சொல்வதால் தான் மக்கள் வருவதில்லை. இவர்கள் சும்மா இருந்தால் தியேட்டர் நிறைந்துவிடும் ’என்று சினிமாக்காரர்கள் தீவிரமாக நம்புகிறார்கள். நடைமுறை யதார்த்தம் இவர்களுக்கு புரியவில்லை. ஒட்டுமொத்தத்தில் இந்த மூன்று நாள் விரதம், இழப்பையே கொண்டுவரும்.

விமர்சனம் என்றால் திட்டுவது மட்டும் தான் என்று முழு கோலிவுட்டும் நம்புகிறார்கள். எத்தனையோ நல்ல படங்களை பாராட்டியிருப்பதை யாரும் நினைவில் வைத்துக்கொள்வதில்லை.

பெரிய நடிகர்கள், இயக்குநர்களின் படங்களுக்கு விமர்சனம் தேவையில்லை. எப்படியும் மூன்றுநாள் வசூல் கிடைத்துவிடும். உதாரணமாக காற்று வெளியிடை படம் இங்கே வெள்ளி-சனி இரண்டுநாளுமே ஹவுஸ்ஃபுல்.

ஆனால் சிறுபடங்களின் நிலை? நன்றாக இருக்கிறது என்று சொல்லாமல் யாரும் தியேட்டர் பக்கம் வரமாட்டார்கள். சமீபத்தில் வந்த துருவங்கள் பதினாறு, குற்றம் 23, மாநகரம் எல்லாம் பரவலாக மக்களை அடைந்ததிற்கு உடனடி விமர்சனங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. 

சிறுபடங்கள் பற்றி வெள்ளி-சனி-ஞாயிறு விடுமுறைகளில் பேசாமல் இருந்துவிட்டு, நான்காவது நாள் திங்கட்கிழமை நன்றாக இருக்கிறது என்று சொன்னால் அதைப் பார்க்க தியேட்டரில் படமும், மக்களுக்கு நேரமும் இருக்குமா?

தியேட்டரில் படம் பார்ப்பது என்பது ஆடம்பரமான விஷயமாக ஆகி மாமாங்கம் ஆகிவிட்டது. கமலஹாசனுன் சேரனும் முயன்றது போல் இனி சினிமாவை எப்படி ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்வதும், திருட்டு விசிடியை முழுக்க ஒழிப்பதும் தான் உண்மையிலேயே பயன் தரும்.

ஹாலிவுட்டாக இருந்தாலும் சரி, கோலிவுட்டாக இருந்தாலும் சரி..வெளியாகும் படங்களில் 10% முதல் 15% வரை தான் நல்ல படங்களாக இருக்கின்றன. அது தான் நடைமுறை யதார்த்தம். எனவே விமர்சனங்களும் 15% தான் பாசிடிவ்வாக சொல்ல முடியும். மீதி நெகடிவ்வாகத் தான் இருக்கும். ஏன் பெரும்பாலான படத்தை திட்டுகிறாய் என்ற கேள்வியை எல்லா விமர்சகர்களும் சந்தித்துக்கொண்டே தான் இருக்கிறோம். இருப்பதைத் தானே சொல்ல முடியும்?

ஏறக்குறைய ஆறுவருடங்களுக்கு மேல் விமர்சகனாக இருக்கிறேன். குவைத்தில் ஒவ்வொரு வாரமும் முதல்நாளே தியேட்டருக்குப் போய் படம் பார்க்கிறேன். நான் படம் மட்டும் பார்ப்ப்பதில்லை, ஆடியன்ஸின் மனநிலையையும் சேர்த்தே கவனிக்கிறேன். எப்போது தியேட்டர் ஹவுஸ்ஃபுல் ஆகிறது, எப்போது கூட்டம் குறைய ஆரம்பிக்கிறது, எப்போது தியேட்டர் காலி ஆகிறது என்று ஆறு வருடங்களாக கவனித்து வருகிறேன்.
குறிப்பாக நடிகர் கார்த்தியின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் தியேட்டருக்குள் கண்ணாரக் கண்டிருக்கிறேன். 

பருத்தி வீரன் – பையா – நான் மகான் அல்ல என்று தொடர்ந்து சூப்பர் ஹிட் கொடுத்தார். மக்களுக்கு அவர் மேல் நம்பிக்கை வந்துவிட்டது. முதல் முன்று நாட்களுமே சிறுத்தைக்கு டிக்கெட் புக் ஆனது. அதுவும் சூப்பர் ஹிட்.

அடுத்த ரஜினி இவர் தான் என்றார்கள். கார்த்தியின் அடுத்த படமாக சகுனி வந்தது. தியேட்டர் ஹவுஸ்ஃபுல் தான். ஆனால் யாருக்கும் படம் திருப்தி தரவில்லை. அதற்கு அடுத்து அலெக்ஸ்பாண்டியன். மக்களுக்கு இன்னும் கார்த்தி மேல் நம்பிக்கை இருந்தது. அலெக்ஸ் பாண்டியனுக்கும் நல்ல ஓப்பனிங். தியேட்டர் ஹவுஸ்ஃபுல். ஆனால் இந்த படமும் தோல்வி. 

அடுத்து வந்தது ஆல் இன் ஆல் அழகுராஜா. பாதி தியேட்டர் தான் ஃபுல் ஆகியிருந்தது. சகுனி-அலெக்ஸ் பாண்டியன் கொடுத்த அனுபவத்தில் பாதி மக்கள் எஸ்கேப். மீதிப்பேரையும் அழகுராஜா வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இன்றுவரை இழந்துவிட்ட அந்த மார்க்கெட்டை மீட்க கார்த்தி போராடிக்கொண்டிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் கார்த்தி – மணிரத்னம் காம்போவிற்கு தியேட்டர் ஹவுஸ்ஃபுல் ஆகியிருந்தது. அந்த மக்களின் நம்பிக்கையை எப்படி சிதைத்தார்கள் என்பதையும் கண்ணாரக் கண்டேன்!

இப்படித்தான் தற்போதைய சிஸ்டம் இயங்குகிறது. தியேட்டருக்குப் போவது என்று ஒரு மக்கள் கூட்டம் இருக்கிறது. எல்லோரும் வருவதில்லை. திருட்டு சிடி அல்லது ஆன்லைன் தான். தியேட்டருக்கே போகாத பல குடும்பங்களை நான் அறிவேன். 

தியேட்டருக்கு வரும் மக்களும், நடிகர் அல்லது இயக்குநர் மீது நம்பிக்கை இருந்தால் மட்டுமே முதல்நாள் தியேட்டருக்கு வருகிறார்கள். இல்லையென்றால் யாராவது இந்த படம் நன்றாக இருக்கிறது என்று சொன்னால் மட்டுமே அடுத்த நாள் டிக்கெட் புக் செய்கிறார்கள். ஆன்லைன் விமர்சனமோ அல்லது நண்பர்களின் பரிந்துரை இல்லாமல் காசையும் நேரத்தையும் செலவளிக்க இங்கே யாரும் தயாரில்லை.

ரஜினி – விஜய் –அஜித் – சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி ஆகியோரின் படங்கள் தான் இங்கே முதல் மூன்று நாட்களுக்கு ஹவுஸ்ஃபுல் ஆகின்றன. மீதி எல்லோருக்கும் பிழைப்பு ஓடுவது, விமர்சனங்களை வைத்துத் தான்.
ஊர் வாயை மூட முடியாது. டெக்னாலஜியுடன் போட்டிபோட முடியாது. இப்போது ஊர் வாய் டெக்னாலஜி வளர்ச்சியால் விமர்சனம் என்ற பெயரில் கொதிக்கிறது. இதை எதிர்த்து அடக்க முடியாது. 

எனவே மக்கள் விழிப்பதற்குள் அதிக தியேட்டரில் ரிலீஸ் செய்து சுருட்டிவிடுவோம் என்ற செயல்திட்டம் போன்றே, வீட்டுக்குள்ளும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சினிமாவைக் கொண்டு சேர்ப்பது தான் இதற்கு இருக்கும் ஒரே வழி. மேலும் விளக்கத்திற்கு கமலஹாசனை விஷால் அணுகலாம்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.