Saturday, April 28, 2018

HEAT ( 1995) – க்ளாசிக்கல் க்ரைம் மூவி




நல்ல படங்களுக்கும் மோசமான படங்களுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை என்னவென்றால், படம் பார்த்து இரண்டு, மூன்று நாட்களுக்கு நம்மை தொந்திரவு செய்துகொண்டே இருக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு, மீண்டும் ஹீட்டை பார்த்தேன். மூன்று நாட்கள் கடந்தும் இன்னும் சூடு குறையவில்லை.

அல் பசினோ, ராபர்ட் டி நீரோ எனும் இரண்டு சிங்கங்கள் இணைந்து மிரட்டிய படம். இயக்குநர் மைக்கேல் மேன்னின் பெஸ்ட் மூவியாக இன்றும் முதலிடத்தில் இருக்கும் படம்.
இயக்குநர் மைக்கேல் மேனின் நண்பர், முன்னாள் போலீஸ்கார், இயக்குநரின் கதை ஆலோசகர் ஆடம்சன். அவர் சந்தித்த நீல் எனும் ஒரு தொடர் கொள்ளையனைப் பற்றியும், நீலின் பெர்ஃபெக்சனிசம் பற்றியும் மைக்கேல் மேன் அறிந்தபோது, தொடங்கியது இந்த கிளாசிக்கல் மூவிக்கான விதை. ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு மேலாக எழுதப்பட்ட திரைக்கதை. இடையில் l.a. takedown (1989) எனும் டிவி பைலட் மூவியாகவும் இந்தக் கதையை மைக்கேல் மேன் எடுத்தார். (ஆரம்பத்தில் இதை டிவி சீரீஸாக செய்வதாக ஐடியா).

கதையின் கிளைமாக்ஸ் சிக்கியபின், இதை அல் பசினோவும் ராபர்ட் டி நீரோவும் இணைந்து நடித்தால், மறக்க முடியாத சினிமாவாக வரும் என்பதை இயக்குநர் உணர்ந்தார். ஹீட் ஆரம்பம் ஆனது.

தனக்கென்று பெர்ஃபெக்ட்டான சிறு குழுவை வைத்துக்கொண்டு, பெரிய அளவிலான கொள்ளைகளை நட த்தி வருபவன் நீல் மெக்காலே (ராபர்ட் டி நீரோ). இதைத் தவிர வாழ்க்கையில் அவனுக்கு வேறு எதுவும் முக்கியம் கிடையாது. தொழில் பக்தாஸ்!

தனது குழுவுடன் நகரின் நடக்கும் குற்றங்களை தடுக்கும், குற்றவாளிகளை விரட்டி விரட்டி வேட்டையாடும் போலீஸ் அதிகாரி வின்சன்ட் ஹன்னா (அல் பசினோ). இரண்டு டைவர்ஸ்களைக் கடந்து, மூன்றாவது டைவர்ஸை நோக்கி போய்க்கொண்டிருக்கும் சின்சியர் ஆபீசர். வேலையைத் தவிர வேறு எதுவும் முக்கியம் கிடையாது.

ஏறக்குறைய சம திறமையுள்ள, தொழில்பக்தி மிக்க ஆனால் எதிரெதிர் துருவங்கள். பட த்தின் முதல் காட்சியிலேயே ஒரு கொள்ளை நடுரோட்டில் நடக்கிறது. டி நீரோவின் குழுவில் புதிதாகச் சேர்ந்த வேய்ங்க்ரோவின் அதிகப்பிரசிங்கித்தனத்தால், முதல் கொள்ளை மூன்று கொலைகளுடன் முடிகிறது. அதை விசாரிக்க அல் பசினோ வந்து சேர்கிறார்.

வேய்ங்ரோவை டி நீரோ கொல்ல முயல, அவன் தப்பிச்செல்கிறான். அந்த ஆபத்து டி நீரோவை நோக்கி எப்போதும் திரும்பி வரும் சூழ்நிலை. இன்னொரு பக்கம், அல் பசினோ விரிக்கும் வலை.
ஆபத்து உன்னை நெருங்கும்போது, 30 செகண்டிற்குள் விட்டு விலக முடியாத எதனுடனும் உன்னை பிணைத்துக்கொள்ளாதேஎன்பது டி நீரோவின் தொழில் தர்மம். மனைவி மேல் அட்டாச்மெண்டாக இருக்கும் தம்பிக்கே, டி நீரோ கொடுக்கும் அட்வைஸ் அது தான்.

அல் பசினோ ஸ்கெட்ச் போட்டு, டி நீரோவை நெருங்கும்வேளையில், டி நீரோவுக்கும் ஒரு காதல் வருகிறது.

அல் பசினோ இந்த கொள்ளைக்கூட்டத்தைப் பிடித்தாரா?

டி நீரோ தன் தொழிலை அல் பசினோவை மீறி செய்ய முடிந்ததா?

இரு ஹீரோக்களாலுமே தன்னையும், தன் கூட்ட த்தையும் மற்ற ஹீரோவிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள முடிந்ததா?

இரண்டு ஹீரோக்களின் பெர்சனல் வாழ்க்கை என்ன ஆகிறது

-    என்பதை அழுத்தமாகச் சொல்கிறது இந்த க்ளாசிக்கல் மூவி.

ஹீட் -ஐ க்ரைம் மூவி என்று சொல்வதைவிட, எமோசனல் டிராமா என்று சொல்லிவிடலாம். திருடன்போலீஸ் விளையாட்டு என்பது ப்லாட்டாக இருந்தாலும், ஒவ்வொரு முக்கிய கேரக்டரின் பெர்சனல் வாழ்க்கை பற்றியும், ஃபீலிங்ஸ் பற்றியுமே படம் அதிகம் பேசுகிறது.

படத்தை மறக்க முடியாத அனுபவமாக ஆக்குபவை நான்கு சீன்கள் :

1.  1.  அல் பசினோவும் டி நீரோவும் சந்திக்கும் ரெஸ்டாரண்ட் காட்சி. சினிமா வரலாற்றில் மிக முக்கியமான காட்சிகளுள் ஒன்றாக இன்றளவும் கொண்டாடப்படும் காட்சி அது. இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் இடம் அது. அதே நேரத்தில் இன்னும் உக்கிரமாக மோதிக்கொள்ளப்போகிறார்கள் என்பதையும் நமக்கு உணர்த்திவிடும் காட்சி. இரண்டு பேரின் உடல்மொழிக்காகவே மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் காட்சி.

2.   2. பேங்க் கொள்ளை. ஒரு அதகள ஆக்சன் பட த்தின் கிளைமாக்ஸ் காட்சி போல், எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராமல் நிகழும் காட்சி. இருதரப்புமே தன்னை மறந்து களத்தில் குதிக்கும் அழகை, பார்த்துக்கொண்டே இருக்கலாம். இந்த சீனைப் பற்றி படிப்பதைவிட, பட த்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.

3.  3.  ‘Sun rises with her & sets with her’ என்று சொல்லும் தம்பி வால் கில்மர்க்கும் அவரது சீட்டிங் மனைவிக்கும் இடையிலான கடைசி ஷாட், அந்த கை அசைப்பு.
4.     
4. மைக்கேல் மேன் கேரக்டர்களை வடிவமைத்த விதத்தினால், இரு ஹீரோக்களுமே ஜெயிக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். திருடன் என்பதால் டி நீரோ தோற்றுப்போக வாய்ப்பு இருப்பதையும் நாம் உணர்கிறோம். இங்கே எதுவும் நடக்கலாம் என்பதால், ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். இந்த அளவிற்கு டச்சிங்கான கிளைமாக்ஸ் காட்சியை, ஒரு க்ரைம் மூவியில் யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. டி நீரோவின் காதலி திகைத்து நிற்கும் ஷாட், இறுதில் இரு ஹீரோக்களும் கை பிடித்து நிற்கும் அந்த ஷாட், கூடவே அந்த முடிவு….அசந்து போய் உட்கார்ந்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

ஒவ்வொரு கேரக்டர்களும் எடுக்கும் கடைசி முடிவுகளும், அதன் விளைவுகளும் தான் நம்மை உணர்ச்சிகரமாக ஆக்குகின்றன. திருந்தி வாழும் ஒருவன் மீண்டும் ட்ரைவராக திருடக் கிளம்புவது, அல் பசினோவை எப்போதும் தடுக்கும் அவன் மனைவி கிளைமாக்ஸில் தடுக்காமல் விடுவது, தம்பி மனைவியின் கடைசி முடிவு, டி நீரோ காதலி பற்றி எடுக்கும் கடைசி முடிவு, வேய்ங்ரோ பற்றி எடுக்கும் முடிவுஎன்று எல்லாமே, யோசித்துப்பார்த்தால், இவை வேறுவிதமாக நடந்திருக்கலாமே என்று நம்மை ஃபீலிங்கில் ஆழ்த்துவது தான் இந்த திரைக்கதையின் பெரும் பலம்.

இது பார்த்து ரசிக்க வேண்டிய படம் என்பதால், முடிந்தவரை ஸ்பாய்லர்களை தவிர்த்து எழுதியிருக்கிறேன். நல்ல சினிமா விரும்பிகள், கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.