”தமிழ் சினிமாவுக்கு இனிமே வசந்தகாலம்தான்..ஹாலிவுட் சினிமா மாதிரி நம்ம சினிமாவும் மாறப்போகுது”
இரண்டு வருடங்களுக்கு முன்பு சினிமா ரசிகரான என் நண்பர் குதூகளித்தார். அப்போதுதான் ஐங்கரன், சாய்மீரா, மோசபியர், ரிலையன்ஸ் அட்லப்ஸ் போன்ற பெரிய கார்ப்போரேட் நிறுவனங்கள் நேரடி படத்தயாரிப்பில் இறங்கியிருந்தன.
நான் அதை முழுதும் மறுத்தேன்.
“இல்லை நண்பரே..இந்த நிறுவனங்கள் அனைத்தும் கடும் நஷ்டத்தைச் சந்திக்கும். இது சினிமாத்துறைக்கும் நல்லதல்ல.. ஃபெண்டா மீடியா போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே இங்கு ஜெயிக்கமுடியாமல் போயிருக்கின்றன.” என்றேன். நண்பர் அப்போது அதை ஒத்துக்கொள்ளவேயில்லை. இன்று இந்த நிறுவனங்கள் இருப்பது கடும் நிதிச்சிக்கலில்...
மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்கும் மேனேஜர் போலி பெட்ரோல் பில் கொடுத்து 150 ரூபாய் கமிசன் அடிப்பதை இந்தியா போன்ற தேசத்தில்தான் காணமுடியும். மிகப் பெரிய நிறுவனங்களின் உயர்பதவியில் இருப்பவர்கள் கடமை-கண்ணியம்-கட்டுப்பாட்டில் நமது அரசியல்வாதிகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல. அதுவும் அந்த நிறுவனம் ஒரு லிமிட்டேட் கம்பெனியாக இருந்துவிட்டால், கடிவாளம் அறுந்த குதிரையின் நிலைதான். போன வருடம் ஒரு பிரபல இதழில் வந்த கிசுகிசு இது:
”பட்டம் நடிகை இப்போதெல்லாம் சென்னை வந்தால், கார்ப்போரேட் நிறுவன டைரக்டர்களுடன் காரில் பறக்கிறாராம். நடிகர், இயக்குனர்களைப் பிடிப்பதைவிட நேரடியாக இவர்களைப் பிடிப்பதால் கைமேல் படங்கள்”
இது கிளுகிளுப்பான கிசுகிசு அல்ல. பெரிய நிறுவனங்களில் உள்ள அவல நிலை. ஒரு தனிப்பட்ட மனிதரின் சொந்தப் படமாக இருந்தால் அவராவது கொஞ்சம் அக்கறை கொள்வார். ஆனால் கார்போரேட் நிறுவனங்களின் நிலை அந்த வகையில் மோசம்தான்.
இவை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவன்ங்கள் என்பதால், இவர்கள் அள்ளி விட்டதில் பெரும்பகுதி மக்கள் பணம். மக்கள் பணத்தைக் கையாளும்போது தாராள மனதாய் நாம் நடந்துகொள்வதும் சகஜமே! (இத்தகைய நிறுவன்ங்களில் முதலீடு செய்வது பலமுறை யோசித்துச் செய்யவேண்டிய ரிஸ்க் மிகுந்த சமாச்சாரம்!)
நடிகர்களைக் கட்டுப்படுத்தாமல் அவர்களின் சுய சொறிதல்களுக்கு அடிபணிந்ததும், அவர்களின் சம்பளத்தை பல மடங்கு கூட்டிவிட்டதும் இந்த நிறுவனங்கள் செய்த மிகப் பெரிய தவறாகும்.
ஒரு நிறுவனத்தின் பணியானது ஒரு பொருளை(Product) தயாரிப்பது அல்லது தொலைத் தொடர்புத்துறை போன்ற சேவை(service)யினை அளிப்பது. சினிமாவைப் பொறுத்தவரை வரும் சிக்கல் என்னவென்றால் திரைப்படம் என்பதை முழுதாக பொருள்வகையிலோ சேவையிலோ சேர்க்க இயலாது. மேலும் படத்தயாரிப்பு என்பது முழுமையான தொழிலும் அல்ல. அது தொழிலும் சூதாட்டமும் சரிவிகித்தில் கலந்த ஒரு கலவை.
சினிமாவில் ஒரு நிறுவனம் ஜெயிக்கத் தேவை கண்டிப்பான தலைமை. ஏவிஎம், சின்னப்பத்தேவர் போன்ற, பெரிய ஸ்டார்களையும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு தலமை இருந்ததால்தான் அந்த நிறுவனங்களால் சினிமாவில் இத்தனை வருடம் நிலைத்திருக்க முடிந்தது.
எனவே, கண்டிப்பான தலைமையும், நேர்மையான சினிமா அறிவுள்ள அதிகாரிகளும் இல்லாதவரை கார்போரேட் நிறுவனங்களுக்கு சினிமாவில் லாபம் என்பது கனவே.
44 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.