Monday, July 23, 2012

முருக வேட்டை_21


கவிதாவும் சரவணனும் பஹ்ரைனில் இறங்கி, எல்லா ஃபர்மாலிட்டீஸையும் முடித்து விட்டு, கென்ய விமானத்திற்குக் காத்திருக்க ஆரம்பித்தார்கள்.

சரவணன் “ம்..சொல்லு” என்றான்.

“என்ன சொல்லச் சொல்றீங்க?” என்றாள் கவிதா.

“அதான்..இந்துக்குன்னு ஏதோ கடமை இருக்குன்னு சொன்னியே”

“அதுவா..நான் ஏற்கனவே சொன்னபடி பிரம்மம்ங்கிறது தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை, இந்தப் பிரபஞ்சமும் அதுவே, பிரபஞ்சத்தை இயக்கும் சக்தியும் அதுவே-ன்னு பெரியவங்க சொல்றாங்க. அதுவே எல்லாத்துக்குள்ளேயும் உறைவதுன்னு நம்பிக்கை. இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்னு சொல்றது அதைத் தான். அப்படி திரும்பிலும் உறையும் தெய்வம், மனிதனுக்குள்ளேயும் இருக்க வாய்ப்பிருக்கிறது, இல்லையா?”

“ம்..மனிதனும் பிரபஞ்சத்தில் ஒரு பகுதி தானே?”

“கரெக்ட்டுங்க..அதனால இந்து மதம்...பொதுவாவே கிழக்காசிய மதங்கள் மனிதன் மேல பெரும் பொறுப்பை சுமத்தி இருக்காங்க. அது என்னன்னா..நீயும் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி. எனவே உன்னுள்ளும் இருப்பது இறைவனே..அதைக் கண்டறியும் வழிமுறை தெரிந்தால், நீயும் கடவுளின் அங்கம்னு புரிந்துகொள்வாய்-னு சொல்லி, தியானம்-யோகா போன்ற வழிமுறைகளை ஏற்படுத்தினாங்க. உலகில் பெரும்பாலான மதங்கள், மனிதனை இறைவனுக்கு அடுத்த நிலையில் உள்ள உயிரினமாய் சொன்னப்போ, இந்து மதம் இறைவனின் ஒரு பகுதியாய் மனிதனைச் சொல்லுச்சு. அப்படி சொல்ற அளவுக்கு நம் கலாச்சாரமும் பண்பாடும் அப்போ உயர்ந்த அளவில் இருந்திருக்கு.”

“அப்போ அது மனிதனோட தன்னம்பிக்கையை அதிகரிக்கச் சொன்னதா?”

“அப்படி வெறுமனே சொல்லிட முடியாது. ஏன்னா அதே வழிமுறைகளைப் பின்பற்றி புத்தர், பதாஞ்சலி, ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமணர்னு பல ஞானிகளும் பிரம்மத்தை அறிஞ்சிருக்காங்க. அது வெற்று வார்த்தைகள் இல்லேன்னு நிரூபிச்சிருக்காங்க”

“சரி..இதுக்கும் கடமைக்கும் என்ன சம்பந்தம்?”

“நீங்கள்லாம் ’பொய் சொல்லக்கூடாது..டெய்லி குளிக்கணும், திருடக்கூடாது’ன்னு தெளிவான கட்டளை வேணும்னு நினைக்கிறீங்க. ஆனால் கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தாலே புரியும், அதெல்லாம் சமூகக் கடமைகள் தானேயொழிய ஆன்மீகக் கடமைகள் இல்லேன்னு. அதைச் சொல்ல மதம் தேவையில்லை. திருவள்ளுவர், அவ்வையார், காந்தி போன்ற சிந்தனையாளர்களே போதும். இந்த மண்ணைப் பொறுத்தவரை ஆன்மீகங்கிறது அதுக்கும் மேல..”

“அதுக்கும் மேலன்னா..”

“பொறுங்க..முதல்ல நீங்க கேட்ட கடமையை க்ளிடர் பண்றேன். ‘நீயே பிரம்மம்’னு சொன்னப்புறம், அதை அடைவதற்கான வழியில் இறங்க வேண்டியது தான் ஒரு இந்துவின் கடமை. அது பக்தி மார்க்கமா இருக்கலாம் அல்லது ஞான மார்க்கமா இருக்கலாம். அப்படி பிரம்மத்தைக் கண்டறியும் பாதையில் இறங்கின அப்புறம், ஒருத்தனால எப்படித் திருட முடியும்? எப்படிப் பொய் சொல்ல முடியும்? எல்லாக் கடமைகளும் இதுக்குள்ள அடங்கிடும். தெய்வத்தின் ஒரு அங்கம் தான் நீ-ன்னு சொல்லி, அதை எப்பவும் ஞாபகப்படுத்தும் விதமா அந்தக் கடவுளின் பெயரையே குழந்தைக்கு சூட்டி விடறோம்.”

‘ஓ..குழந்தைக்கு சாமி பேரு வைக்கறது அதனால தானா?”

“ஆமா..நாம எல்லாரும் பிரம்மத்திலிருந்து மாயையால் சிதறி, வெளியே வந்தவர்கள். அந்த மாயை அகன்றால், உண்மை புரியும். புத்தர் ஞானம் அடைந்த பிறகு சொன்னார் ‘எனக்குள் இருப்பதை நான் கண்டுகொண்டேன். நீஙக்ள் இன்னும் கண்டுகொள்ளவில்லை. மற்றபடி, இருவரும் ஒருவரே’ன்னு. ஆனால் மாயையை அறுப்பது எளிதான காரியம் இல்லை. அது ஒரு பிறவியில் ஆகும் வேலையும் இல்லை.”

“அதைத் தான் நானும் யோசிச்சேன்..இதெல்லாம் நடக்கிற கதையான்னு!” என்றான் சரவணன்.

கவிதா சிரித்துவிட்டுத் தொடர்ந்தாள். “நடக்கும். ஒவ்வொரு பிறவியிலயும் ஒவ்வொரு ஆசையா உதிர்த்துக்கிட்டே போனா, ஒவ்வொரு பிறவியிலயும் செய்யிற பாவங்களைக் குறைச்சுக்கிட்டே போனால், முடிவில் பிரம்மத்தைத் தவிர வேறு எதை அடைவீங்க? ஒரு இந்துவுன் கடமையா நான் நினைக்கிறது இது தான். இந்தப் பிறவில பொய் சொல்றதை தவிர்க்க முடிஞ்சா நல்லது. காமத்தை இந்தப் பிறவில முழுக்க வெல்ல முடியாட்டியும், கட்டுக்குள் இப்போ வைக்கலாம். அது அடுத்த பிறவில காமத்தை வெல்ல உதவும். காமம் மட்டுமில்லை, எல்லா ஆசைக்கும் இது பொருந்தும். புத்தர் உட்பட எல்லா ஞானிகளுமே பல பிறவிகளுக்கு அப்புறம் ஞானம் அடைஞ்சவங்க தான் அதனால பிரம்மத்தை அடையும் வழில நடந்தாலே போதும். சமூகமே ஒரு ஒழுங்குக்குள் வந்திடும். அதைத் தான் நம் முன்னோர்கள் செஞ்சாங்க. அதுக்கான வழிமுறைகளை சொல்லிட்டுப் போனாங்க”

”அப்போ ஆன்ம விடுதலைங்கிறது?”

“மாயையில சிக்கிக் கிடக்கிறதால தான் ஆன்மா, மீண்டும் மீண்டும் பிறவி எடுக்குது. எப்போ நீங்க பிறவிகள் பல கடந்து, பிரம்மத்தை அடையிறீங்களோ, அதுக்கப்புறம் உங்களுக்கு மறுபிறவி இல்லை. அதுவே முக்தின்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க.”

“ம்..இதுக்குப் பின்னால இவ்வளவு இருக்கா? ஆனாலும்...” என்று சரவணன் இழுத்தான்.

“என்ன ஆனாலும்?”

“இல்லே..ஆனாலும் கடவுள்னு ஒன்னு இருக்கிறதா இன்னும் நம்ப முடியலியே? கடவுள் இருந்தா சுனாமி அலல்து விபத்துல ஏன் மக்கள் சாகுறாங்க? சாப்பிடவே வழியில்லாம மகக்ள் ஏன் கஷடப்படுறாங்க? சோமாலியா போன்ற தேசங்களை உங்க கடவுள் ஏன் காப்பாத்தலை?”

"சரி..அதனால கடவுள் இல்லேன்னு சொல்றீங்களா?”

“பின்னே?”

“ஓகே..முன் ஜென்ம வினை, பிரம்மத்தை அடையும் வழியில் உள்ள தடைக்கல்னு தத்துவார்த்தமா காரணங்கள் சொல்லலாம். ஆனாலும் ஒரு பேச்சுக்கு கடவுள் இல்லேன்னு வச்சுக்குவோம். அப்போ நீங்க சொல்லுங்க. ஏன் உலகத்தில் பிறக்கிற சிலர் நல்லா இருக்காங்க, சிலர் கஷ்டப்படுறாங்க? ஏன் ஒரே குடும்பத்துல பிறக்கிற ஒரு குழந்தைக்கு நல்ல வாழ்க்கை அமையுது, இன்னொரு குழந்தை கஷ்டப்படுது? ஏன் சிலர் அறுபதில் சாகுறாங்க, சிலர் ஆறில் சாகுறாங்க? இதெல்லாம் சும்மா தற்செயல்னு சொல்றீங்களா?”

சரவணன் யோசித்தான்.

”எங்களுடைய ‘கடவுள்’ங்கிற கருத்தை நீங்க மறுத்தீங்கன்னா, அதுக்குப் பதிலா பல கேள்விகள் எழும்பும். ஒரு உண்மையான நாத்திகவாதியோட வேலை, அம்மாதிரிக் கேள்விகளுக்கு விடை தேடுறது தானேயொழிய, மத்தவங்களை விட நான் புத்திசாலின்னு நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு அலையறது இல்லே.”

“ரைட்டு..நீ சொன்னதை நானும் யோசிக்கிறேன்..இப்போ ஃப்ளைட்டுக்கு நேரமாச்சு, கிளம்புவோம்” என்று எழுந்து நின்றான் சரவணன்.

(தொடரும்)
மேலும் வாசிக்க... "முருக வேட்டை_21"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

8 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, July 21, 2012

நடிகர் கார்த்திக்கு ஒரு கடிதம்....


அண்ணே,

வணக்கம். வீட்ல அம்மணி, அப்பா-அம்மா, அண்ணன் - ஜோ அண்ணி நலமுங்களா? ஹன்சிகாவுக்கு கடிதம் எழுதணும்னு கூட எனக்குத் தோணுனது இல்லீங்கண்ணே..ஆனால் என்னமோ தெரியலை, உங்களுக்கு எழுதியே தீரணும்னு மனசு அரிச்சுச்சு..அதான் இந்தக் கடிதம்.
அண்ணே, நான் முத முதல்ல உங்களைப் பார்த்தது சூர்யா கல்யாணத்துல. (அட, ஃபோட்டோல தான்!). பருத்தி வீரன் கெட்டப்புல தாடி, மீசையோட பார்த்தப்போ பெருசா உங்க மேல நம்பிக்கை வரலை. ‘என்னய்யா இது..சிவகுமார் எம்புட்டு அழகு..இவரு இப்படி இருக்காரு’ என்று தான் தோன்றியது. ஆனால் அது பருத்தி வீரனாக நீங்கள் வாழ்ந்த காலம்னு நமக்கு அப்போத் தெரியலை.

அப்புறம் தான் ரிலீஸ் ஆச்சு பருத்திவீரன்..ஏகப்பட்ட பாராட்டுகளைக் கேட்டு, உங்களுக்கே புளிச்சுப்போயிருக்கும். ஆனாலும் ‘அசத்திப்புட்டீங்க’ன்னு மட்டும் சொல்லிக்கிறேன்.

அடுத்தடுத்து நீங்க சூஸ் பண்ண கதைகள் தான், நம்மளை ரொம்ப அசத்துச்சு. ஆயிரத்தில் ஒருவன் நல்ல ஃபேண்டசி படமா வந்திருக்க வேண்டியது. சோழனை வம்புக்கு இழுத்து, நம்மை நாமே கேவலப்ப்டுத்திக்கிட்டதாலயும், செல்வாவோட வ்ழக்கமான வக்கிரத்தாலயும் படம் ஊத்திக்கிச்சு. உங்களைக் குறை சொல்ல ஒன்னுமில்லை. ஆனாலும் பருத்தி வீரன் மாதிரியே அதிலயும் நடிச்சிருக்கீங்களோன்னு தோணுச்சு.

என்னை அதிகம் ஆச்சரியப்படுத்திய படம் ’நான் மகான் அல்ல’ தான். ஏனென்றால் அதில் திரைக்கதை தான் ஹீரோ. கதாநாயகன் படத்தை முடித்து வைப்பவன் மட்டும் தான். அந்தப் படத்திற்குப் பிறகு தான், நீங்க நல்ல ஸ்டோரி சென்ஸ் உள்ள ஆளுன்னு எனக்குப் புரிஞ்சது.

பையா படத்துல ஓரளவு பருத்தி வீரன் சாயல் இல்லை. அடுத்து வந்த சிறுத்தைல தான் ‘நான் பருத்தி வீரன் மட்டும் இல்லைடா..பாயும் சிறுத்தை’-ன்னு அடிச்சுச் சொன்னீங்க. சரி, அதுக்கென்ன இப்போ?-ன்னு கேட்கிறீங்களா? சொல்றேன்..
இதை விட்டுட்டமே..பதிவுல!
நம்ம இளம்(?) ஹீரோக்கள்கிட்ட இருக்கிற பிரச்சினை என்னன்னா, எல்லாருமே ரஜினி ஆகணும்னு ட்ரை பண்றது தான். ஆனால் போன ஜெனரேசன்ல பார்த்தீங்கன்னா ரஜினி-கமல்-விஜயகாந்த்-சத்யராஜ்-கார்த்திக்-பிரபு-பாக்யராஜ்னு பல வெரைட்டில நடிகர்கள் இருந்தாங்க. எங்களுக்கும் அந்த மாதிரி வெரைட்டி தேவைப்பட்டுச்சு. ஆனால் இப்போப் பாருங்க..பெரும்பாலும் ரஜினி ஸ்டைல், கொஞ்சம் பேரு கமல். அதைத் தாண்டி மத்த ஸ்டைல்ல நடிக்க யாருமே தயாரா இல்லை.

ஆனால் உங்க நடிப்பு எதனாலேயோ எனக்கு நவரச நாயகன் கார்த்திக்கை ஞாபகப்படுத்துச்சுண்ணே..அந்த கார்த்திக்கிட்ட இருந்த சுறுசுறுப்பும், இளமைத் துள்ளலும் உங்ககிட்ட ரொம்ப யதார்த்தமா இருக்கு. ரொம்ப கேஷுவலா அவர் மாதிரியே நடிச்சுட்டுப் போயிடறீங்க. அதனால உங்க படம் பார்க்கிறதுக்கு, ரொம்ப ஜாலியா இருக்கு.

அதனால என்ன ஆச்சு, தெரியுங்களா? உங்க சகுனி படம் ரிலீஸ் ஆகுற அதே டேட்ல இன்னொரு பெரிய ஹீரோ படமும் ரிலீஸ் ஆகுறதா இருந்துச்சு. இங்கே, நாங்க பொதுவா ரெண்டு, மூணு ஃபேமிலீஸ் சேர்ந்து போறது வழக்கம். அப்போ அவர் படமா? உங்க படமான்னு ஆம்பிளைங்க நாங்க யோசிச்சப்போ, பெண்களும், குழந்தைகளும் கார்த்தி படம் தான் போகணும்னு முடிவாச் சொல்லிட்டாங்க.

என்ன தான் சினிமாவை கலை-ஒலக சினிமான்னு சினிமாக்காரங்க ஜல்லியடிச்சாலும், எங்களை மாதிரி சாமானியங்களுக்கு சினிமாங்கிறது பொழுதுபோக்குச் சாதனம் தான். ஒரு சினிமாங்கிறது முதல்ல எண்டர்டெய்ன் பண்ணனும். அதுக்கு அப்புறம் தான் மேக்கிங்-குறியீடு போன்ற கண்றாவிகளையெல்லாம் நாங்க கவனிப்போம்.

அந்த மாதிரி நல்ல பொழுதுபோக்குப் படமா பண்றதால தான், இந்த குறுகிய காலத்துல பெரிய்ய ஹீரோவா வளர்ந்து நிக்கிறீங்க. ஆனா, இது நீங்க ரொம்ப ஜாக்ரதையா இருக்க வேண்டிய நேரம்ணே! அன்னிக்கு சகுனி மேடையில ஒருத்தர் உங்களை ‘வருங்கால முதல்வர்’னு சொன்னாராமே..அண்ணே, ஆரம்பிச்சுட்டாங்க பார்த்தீங்களா? இதான் தமிழன்கிட்ட இருக்கிற கெட்ட பழக்கம்.ஒருத்தன் நல்லா இருந்திடக்கூடாது. உடனே கெடுக்கிறதுக்கான வேலையில இறங்கிடுறாங்க.

எங்களுக்கு ஏற்கனவே இருக்கிற ‘வருங்கால முதல்வர்கள்’ போதும்ணே..நீங்க வேற அந்த லிஸ்ட்ல சேர்ந்து இம்சை பண்ணிடாதீங்க. இப்பவும் போல, எப்பவும் நல்ல பொழுதுபோக்குப் படங்களைக் கொடுத்தாக்கூடப் போதும்.

இன்னொரு முக்கியமான விஷயம், சகுனி படத்துல அனுஷ்கால ஆரம்பிச்சு எல்லாப் பொண்ணுகளும் ‘ஹே..இவரு அழகன்டி.... ஆளு சூப்பர்டி’ன்னு டயலாக் விட்டுக்கிட்டு இருந்தாங்க. வேண்டாம்ணே, இந்த வேலை. பிரபுதேவா-சிம்பு-எஸ்.ஜே.சூர்யா-விஷால்னு பலபேரு இதனாலேயே பேரு கெட்டு, சொம்பு நசுங்கி உட்கார்ந்திருக்காங்க. நீங்களும் இந்த மன்மதன் வேலையில இறங்கி, இருக்கிற பேரைக் கெடுத்துக்காதீங்கண்ணே.

எங்களுக்குத் தேவை நல்ல பொழுதுபோக்குச் சினிமா. முடிஞ்சா, அதை நல்ல சினிமாவாத் தாங்க போதும். சகுனி படத்துக்கு வந்த விமர்சனம் எல்லாம், உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்னு நம்புறேன். அதனால, அடுத்த படத்தையாவது கொஞ்சம் கவனமாச் செய்யுங்கண்ணே. சீக்கிரமா ஒரு நல்ல படத்துல உங்களைச் சந்திக்கிறேன்.

வணக்கம்.

அன்புடன்
செங்கோவி.

டிஸ்கி : அண்ணன் அட்ரஸ் தெரியாததால இங்கே போட்டுட்டேன். அண்ணன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரங்க யாராவது இந்தப் பதிவை அவர்கிகிட்ட சேர்த்திடுங்க..ஹி..ஹி!
மேலும் வாசிக்க... "நடிகர் கார்த்திக்கு ஒரு கடிதம்...."
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

27 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, July 17, 2012

சுன்னத் செய்வது எப்படி? (கண்டிப்பாக 18 ப்ளஸ்)


டிஸ்கி: ரொம்ப நாட்களாகவே எழுத நினைத்திருந்த பதிவு. சமீபத்தில் நண்பரின் குழந்தைக்கு சுன்னத் செய்ய விவரம் தேடி அலைந்த கதையைக் கேட்டபின், உடனே எழுதுவது என்று முடிவு செய்தேன். அதனால சத்தியமா சொல்றேன்...இது ஒரு மருத்துவப் பதிவு!

“மச்சான்..போச்சு மச்சான்..போச்சு” என்று ஊரிலிருந்து மாப்ளை ஒருவன் ஃபோனில் அலறினான். நானும் பதறிப் போய் “என்னாச்சு மாப்ளே?” என்றேன். “மெயின் மேட்டர்ல உச்சா போனா, வலி..டாக்டர்கிட்டக் கேட்டா ரொம்ப வளர்ந்திருக்குன்னு சொல்றாரு” என்றான்

“அட..நல்ல விஷயம் தாம்லே..”என்றேன்.

“யோவ்..முன் தோலு மட்டும் நிறைய வளர்ந்திருக்காம்..என்னமோ பேரு சொல்தாரு அந்த நோய்க்கு..” என்றான். பிறகு டாக்டரிடன் பேசியதில் ’யூரின் போகும்போது முன் தோலை விலக்க முடியாமை, விலக்கினால் வலி...எப்போதும் அங்கே யூரின் இருப்பதால் இன்ஃபெக்சன் வருவது போன்றவையே இதற்கு அறிகுறி..உடனடியாக ஆபரேசன் செய்ய வேண்டும், இல்லையென்றால் தாம்பத்ய உறவின் போது வலி அல்லது கிழிந்து போதல் வரலாம்..இந்த ஆபரேசனுக்குப் பெயர் Circumcision..அதாவது சுன்னத்’ என்றும் சொன்னார்.

சுன்னத் என்றதும் என் ஸ்கூல் ஃப்ரெண்ட் கஸாலி(பெயர் மாற்றப்பட்டுள்ளது!) ஞாபகம் வந்தது. ஜீ.கே டெவலப் ஆகும் வாலிப வயதில் ‘சுன்னத் ஏன் செய்றீங்க பாய்?’ என்று அவனிடம் நண்பர்கள் சிலர் கேட்டோம். கஸாலி கற்பனை வளம் நிரம்பியவன். அவனிடம் போய்க் கேட்கலாமா? அவன் கேஷுவலாக ‘அதுவாலெ...நமக்கு கை, கால் எல்லாம் நீளமுல்லா..அப்புறம், சட்டையை இன் பண்ணா, நல்லா இருக்காதுல்லா?..அதாம்லே பாதியை கட் பண்ணிக்குவோம்’ என்றான். ‘பாதியைவா?’ என்று அரண்டு போனோம். பிறகொரு நாள் ஸ்கூல் (ஓப்பன்!) பாத்ரூமில் ’சின்ன கஸாலி’யைப் பார்த்துவிட்டு ‘பாதியே இப்படியா?’ என்று வயிறெரிந்தது தனிக் கதை.

சுன்னத் என்பது இஸ்லாமியர்கள் மட்டுமே கடைப்பிடிக்கும் வழக்கம் என்று தவறான புரிதல் நம் மக்களிடையே உண்டு. ஆனால் அது யூதர்கள் முதல் இந்துக்களில் ஒரு சமூகத்தினர் (படிக்க: கள்ளிக்காட்டு இதிகாசம்) வரை செய்து வருகின்றனர். அமெரிக்காவில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு சுன்னத் செய்யப்படுவதாக, நான் அங்கு இருந்தபோது என் அமெரிக்க கேர்ல் ஃப்ரெண்ட்(!), ஒருநாள் சொன்னாள். 

ஆனால் இதெல்லாம் படிக்காத என் மாப்ளைக்கு எப்படித் தெரியும்? எனவே அவன் ‘ஒரு முஸ்லிம் டாக்டர்கிட்டத் தான் ஆபரேசன் செஞ்சுக்குவேன். ராம்சாமி/ரமேசை நம்பியெல்லாம் இதைத் தர முடியாது. அது மட்டுமில்லை, இந்த மேட்டர் ஊரில் யாருக்கும் தெரியக்கூடாது. அதனால மெட்ரஸ்க்கு வர்றேன்..நீயே எல்லா ஏற்பாடும் செய்” என்று தெளிவாகச் சொல்லி விட்டான். (அப்போது நான் சென்னையில் இருந்தேன்).

சுன்னத்துக்கான ஏற்பாடு என்றதும் என் காலேஜ் மேட் ஹிசாம் சையது ஞாபகம் வந்தார். ஏனென்றால் காலேஜ் டேஸில் சுன்னத் பற்றிப் பேச்சு வரும்போதெல்லாம் ‘சுன்னத் பண்ணா..அந்த நேரத்துல ம்..ம்ம்’ என்று எங்களை வெறுப்பேற்றுவது அவரின் வழக்கம். எனவே அவரிடம் மாப்ளையின் பிரச்சினையைச் சொன்னேன். 

அவர் குஷி ஆகிவிட்டார். ‘ஒன்னும் பிரச்சினை இல்லைய்யா..இது சும்மா கைல கீறிக்கிட்டா பேண்டேஜ் போடற மாதிரி தான்..மாப்ளையை வரச் சொல்லும்..கிடா வெட்டிடுவோம்’ என்றார். 

மாப்ளை சென்னை வரவும் ஒரு பொன்மாலைப் பொழுதில் திருவல்லிக்கேணியில் இருக்கும் ஒரு இஸ்லாமிய டாக்டரைப் போய்ப் பார்த்தோம். முதலில் ப்ளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட் எடுத்தார்கள். ’யூரின் டெஸ்ட்டுன்னா, எவ்வளவு வேகமா அடிக்கோம்னு பார்ப்பாங்களா?’ என்ற மாப்ளையின் கேள்விக்கு விளக்கமாக ஒரு பதில் சொல்லி, எல்லா டெஸ்ட்டுகளும் எடுத்து முடித்தார்கள். ஒருநாள் கழித்து வரும்படியும், அன்று காலையில் ஆபரேசன் வைத்துக்கொள்ளலாம், மாலையில் டிஸ்சார்ஜ்’ என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்பின் குழந்தைகள் என்றால் 15 நாட்களுக்குள்ளும், பெரியோர் என்றால் 30 நாட்களிலும் புண் எல்லாம் ஆறி, நார்மல் ஆகிவிடலாம் என்று டாக்டர் தெம்பு சொல்லி அனுப்பி வைத்தார்.

ஆனால் அந்த முப்பது நாட்களும் தேங்காய் எண்ணெய் அப்ளை செய்ய வேண்டும் என்று ஹிசாம் சொன்னதை அடுத்து, ஒரு சிக்கல் எழுந்தது. எங்கள் பேசுலர் ரூமில் என்ன தான் ஆம்பிளைங்க மட்டுமே இருந்தோம் என்றாலும், அது மாப்ளைக்கு சௌகரியமாக இருக்காது என்பதால், திருவல்லிக்கேணியில் ஒரு லாட்ஜில் ரூம் போடுவது என்று முடிவு செய்தோம். அந்த லாட்ஜ் மேனேஜர் ரூமை ஒரு பேச்சிலருக்கு மாததிற்கு வாடகைக்கு விட யோசித்தார். பிறகு நாங்கள் விஷயத்தைச் சொல்லி, ‘இந்த நிலைமையில் ஐஸ்வர்யா ராயே வந்தாலும், ஒன்னும் பிரச்சினை இல்லை’ என்று புரிந்ததும் சந்தோசமாக ஒத்துக்கொண்டார்.

அந்த சுபமுகூர்த்த நாளில் நானும் ஹிசாமும் பலியாடுடன் ஹாஸ்பிடல் போய் இறங்கினோம். மாப்ளையின் பெயர் சிறு குழந்தையின் பெயர் போன்றே இருக்கும். எனவே அன்று காலை ஷிஃப்ட்டில் இருந்த நர்ஸ்கள், யாரோ ஒரு சின்னப்பையனுக்கு ஆபரேசன் என்று நினைத்து ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார்கள். நாங்கள் போய் நிற்கவும், ‘பேஷண்ட் எங்கே?” என்றார்கள். ‘இவன் தான்’ என்று மாப்ளையைக் காட்ட, மொத்த நர்ஸ் கூட்டமும் டரியல் ஆகியது. ஒரு சீனியர் நர்ஸ் ‘நான் மாட்டேன்பா’ என்று சொல்லிவிட்டு டாக்டர் ரூமைப் பார்த்து ஓடினார்.  மற்ற நர்ஸ்களும் அவர் பின்னாலேயே ஓட, ஏற்கனவே பயந்து போயிருந்த மாப்ளை மிரண்டு போனான்.

டாக்டர் (அநேகமாக) இங்கி-பிங்கி-பாங்கி போட்டு ஒரு நர்ஸை செலக்ட் செய்தார். பிறகு மாப்ளைக்கு ஆபரேசன் தியேட்டர் ட்ரெஸான கவுன் கொடுக்கப்பட்டது. அதை மட்டும் அணிந்துகொண்டு வரவேண்டும் என்று அந்த நர்ஸ் சொல்லிவிட்டு, ஆபரேசன் தியேட்டருக்குள் போனார். மாப்ளை திருதிருவென எங்களைப் பார்த்தபடியே, உள்ளே போனான்.

அங்கே மாப்ளை படுக்க வைக்கப்பட்டானாம். கண்ணைச் சுற்றி ஒரு கர்ச்சீப் போடப்பட்டதாம். கவுனில் இதற்கென்றே ஒரு ஓட்டை இருந்திருக்கும் போல.., டாக்டர் ஸ்ட்ரெயிட்டாக அதன்வழியே மேட்டருக்கு வந்தாராம். இரண்டு ஊசிகள் அந்த ஏரியாவில் போடப்பட்டன. (அது மட்டுமே அந்த ஆபரேசனில் கஷ்டமான விஷயம்.) அதன்பின் அந்த ஏரியாவே மரத்துப் போனதாம். அதன்பின் கத்திகளை எடுக்கும் சத்தம் கேட்டது. டாக்டர் மேட்டரில் கை வைக்க, மாப்ளை அலறினானாம் ‘டாக்டர்..உங்க மருந்து வேலை செய்யலை..நீங்க தொடறது இன்னும் தெரியுது..அவசரப்பட்டு அறுத்துடாதீங்க’ என்று.

அதற்கு டாக்டர் சிரித்துக்கொண்டே ‘தம்பி, தொடறது எல்லாம் தெரியும்ப்பா..ஆனால் வலிக்காது’ என்று சொல்லும்போதே அந்த ஏரியா குளிர்ந்து போனது. எவ்வளவு படிச்ச டாக்டர்..இப்படி நம்மளை குளிப்பாட்டுறாரே என்று மாப்ளைக்கு ஃபீலிங்ஸ் ஆகிடுச்சு. ‘நீங்க ஏன் டாக்டர் தண்ணியை ஊத்துறீங்க?” என்று மாப்ளை கேட்டதுக்கு ஆபரேசன் முடியட்டும் சொல்றேன் என்றாராம். கொஞ்ச நேரம் எல்லாப் பொறுப்பையும் டாக்டர்/நர்ஸ்களிடம் ஒப்படைத்து விட்டு, மாப்ளை சும்மா படுத்திருந்தானாம். அடுத்த பத்து நிமிடத்தில் ஆபரேசம் முடிந்தது. ’இன்னும் கால் மணி நெரம் சும்மா படுத்திருங்க. அப்புறம் ஆரம்பத்துல நான் தண்ணியை ஊத்தலை..அது ரத்தம்’ என்று சொல்லிவிட்டு எல்லாரும் வெளியே போக, மாப்ளை ’அவ்வளவும் ரத்தமா..அவ்வ்’ என்று படுத்திருந்தான்.

அறைக்கு வெளியே ‘புருஷன்’ மாதிரி காத்திருந்த என்னிடம் ‘எல்லாம் நல்லபடியா முடிஞ்சது.’ என்று ஆறுதல் சொல்லிவிட்டுப் போனார்கள். கால்மணி நேரத்தில் மாப்ளை ரூமுக்கு நடந்தே வந்தான். (சில ஹாஸ்பிடலில் உடனே நடக்க விடுவதில்லை). அதன்பின் மூன்று மணி நேரத்திற்கு அசையாமல் படுத்திருக்க வேண்டும் என்றார்கள். ஹிசாம் குஷியாக ‘சரிய்யா..அறுப்பு முடிஞ்சது..எங்களுதுல சுன்னத் பண்ணா, பிரியாணி போடுவோம்..அதனால நான் போயி பிரியாணி வாங்கிக்கிடு வர்றேன்’ என்று சொல்லி பிரியாணிக்கு ஏற்பாடு செய்தார்.

மாலையில் ’வீட்டிற்குப் போகலாம்..சுற்றிலும் ரவுண்டாக ஒரு பேண்டேஜ் போட்டிருக்கிறோம்..அதில் தினமும் மூன்று வேளை காய்ச்சிய தேங்காய் எண்ணெய் மட்டும் போட்டால் போதும்..பெயின் கில்லர் டெப்ளெட்ஸ் எழுதியிருக்கேன்..அதையும் சாப்பிடுங்க..இனிமேல் அது கையில் பட்ட காயத்திற்கு எண்ணெய் போடுவது போல் தான்.’ என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். லாட்ஜில் மாப்ளையை இறக்கி விட்டு, டின்னர் முடித்து, வெளியேறினோம்.

அடுத்த பதினைந்து நாட்களிலேயே பேண்ட் போடும் அளவுக்கு எல்லாம் சரியாகியது. இடையில் பெயின் கில்லர் மாத்திரைகளும், தேங்காய் எண்ணெயும் மட்டுமே மருந்து. ’ஆரம்பத்தில் கொஞ்சம் வீக்கம் இருந்துச்சு..இப்போ இல்லை..கையில் கீறிக்கிட்டா, பேண்டேஜ் போடுவோமே..அதே மாதிரி தான்..ஒன்னும் பெரிய விஷயமில்லை’ என்று மாப்ளை பேசுவதை ஆ-வென்று பார்த்துக்கொண்டிருந்தோம்.

அந்த நாட்களில் ஒரே ஒரு சிக்கல்..மனதை அலைபாய விடக்கூடாது..டிவியில்கூட ஐயிட்டம் சாங்ஸ் பார்க்கக்குடாது. அவ்வள்வு ஏன்..இந்த ஸ்டில்லைக் கூட பார்க்கக்கூடாது:
படுத்தால் தூங்கிவிட வேண்டும். கண்டிப்பாக எழுந்திரிக்கக்கூடாது. மீறினால்....வலி பின்னிப் பெடலெடுத்துமாம். எனவே மாப்ளை கவனமாக நியூஸ் சேனல் மட்டுமே பார்த்தான். 

முப்பதாவது நாளில் டாக்டரைப் போய்ப் பார்த்தோம். அவர் பேண்டேஜைப் பிரித்துவிட்டு, கார் கியர் ராடைப் போல பிடித்துக்கொண்டு, டார்ச் லைட் அடித்து சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ‘ஓகே..இனிமே ஒன்னும் பிரச்சினை இல்லை..நீங்க வழக்கம்போல என்ன வேணா பண்ணலாம்’ என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

ஆனால் மாப்ளை  சர்வ ஜாக்ரதையாக அடுத்த ஒரு மாததிற்கும் விரதம் இருந்ததைப் பெருமையுடன் எனக்கு ஃபோனில் சொன்னான். இந்த லீவில் தான் மாப்ளைக்கு கல்யாணம் ஆனது. நான் ஊருக்குத் திரும்புவதற்கு கொஞ்ச நாள் முன்பு பேசிக்கொண்டிருந்தோம்.

‘அந்த ஆபரேசன் பண்ணது நல்லது தான் மச்சான்..அந்த நேரத்துல ம்..ம்ம்’ என்றான்.

அடப்பாவி..நீயுமாடா வெறுப்பேத்துறே..நல்லா இருங்கடே..நல்லா இருங்க!
மேலும் வாசிக்க... "சுன்னத் செய்வது எப்படி? (கண்டிப்பாக 18 ப்ளஸ்)"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

41 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Friday, July 13, 2012

பில்லா 2 - திரை விமர்சனம்


அதாகப்பட்டது... :

பில்லா 1 படத்தின் முன்கதை என்ற அறிமுகத்துடன், மங்காத்தா வெற்றிக்குப் பின் அஜித் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம். படத்திற்கு அட்ராக்சன் என்று பார்த்தால், அது அஜித்..அஜித்..அஜித் மட்டுமே!

ஸ்டோரி லைன் :

பில்லா எப்படி டான் ஆனான் எனும் நாயகன் காலத்துக் கதை.

திரைக்கதை :
அந்த அரதப் பழசான கதைக்கும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது பில்லா-1 வெற்றியும்,அஜித்தும் என்றால், அதை தியேட்டரில் உட்கார்ந்து பார்க்க வைக்கும் பொறுப்பு திரைக்கதைக்குத் தான். 

படம் எளிமையாக நேர்கோட்டிலேயெ பயணிக்கிறது. இலங்கையில் இருந்து அகதியாக அஜித் ராமேஸ்வரம் வருவதில் ஆரம்பித்து, தொடர்ந்து ஏற்படும்(ஏற்படுத்திக் கொள்ளும் ) தொடர்புகளால் எப்படி இண்டர்னேசனல் போலீசால் தேடப்படும் டான் ஆகிறான் என்று இடைவேளை வரை தெளிவாகவே சொல்லியிருக்கிறார்கள். 

ஆனால் பிரச்சினை தமிழ் சினிமாவிடம் தான். தமிழ் சினிமா என்றால் ஒரே படத்திலேயே காதல், காமெடி, ஆக்சன், சோகம் எல்லாம் சொல்லியாக வேண்டிய கட்டாயம். படமும் இரண்டரை மணி நேரத்திற்காவது ஓட வேண்டியுள்ளது. இந்தக் கொடுமையை மாற்றும் தைரியம் சக்ரிக்கு இருந்திருந்தால், ஷார்ப்பான படமாக வந்திருக்கும். தேவையற்ற அக்கா மகள் காதல், புதுப் புது வில்லன்கள் என  தேவையற்ற விஷயங்களைப் புகுத்தி, படத்தை இடைவேளைக்குப் பின் இழுத்திருக்கிறார்கள். 

பில்லா-1 படத்தில் வில்லனாக வந்த ரஹ்மான் கேரக்டருக்கும் இங்கே அழகாக லீட் கொடுத்திருக்கிறார்கள். கிளைமாக்ஸில் தான் படம் முடிந்துவிட்டதா?, இல்லை இன்னும் புதிதாக வில்லன்கள் வருவார்களா என்று குழப்பத்துடனே அனைவரும் தியேட்டரில் உட்கார்ந்திருக்க வேண்டிய நிலைமை. அங்கே பில்லா-1 படத்தினை லின்க் செய்திருக்கலாம்.

அஜித் :

படம் மொத்தத்தையும் அஜித் தன் தோள்களில் தாங்க வேண்டிய கட்டாயம். ஆளும் வெயிட்டான பார்ட்டி என்பதால், எளிதாக படத்தைத் தூக்கி நிறுத்துகிறார். இன்னும் ஹேண்ட்சமான ஹீரோ என்றால் அஜித்தை விட்டால் ஆளில்லை என்று படம் முழுக்க அடித்துச் சொல்லியிருக்கிறார். துடிப்பான ஆளாக, படம் முழுக்க கலக்குகிறார் அஜித். 

குஜிலீஸ் :

சரோஜா தேவி, பத்மினி, ராதா, குஷ்பூ, நமீதா என தமிழ்சினிமாக் கதாநாயகிகளின் பாரம்பரியத்தில் சேர்க்க முடியாத இரண்டு பீஸ்கள் (ட்ரெஸும் 2 பீஸ் தான்) பார்வதி ஓமணக்குட்டியும், ப்ரூனோ அப்துல்லாவும். எங்கே இருந்து தான் பிடிச்சுக்கிட்ட்டு வந்தார்களோ என்று நொந்துகொள்ள வேண்டிய நிலை. அரைகுறையாக நின்றால் போதும், தமிழன் ரசிப்பான் என்று தவறாக எடைபோட்டு, உடை குறைத்திருக்கிறார்கள். படம் பார்க்கும் நமக்கே இப்படி என்றால், அஜித் நிலைமை..மனுசன் ரொம்பப் பொறுமை சாலி தான் போல.

உலக அழகிகள் இரெண்டே வகை தான். ஒன்று, ஐஸ் பொன்ற உள்ளூர் அழகிகள். இரண்டாவது ப்ரியங்கா சோப்ரா போன்ற உள்ளூர் கிழவிகள்..இதில் பார்வதி, இரண்டாவது வகை. ஓமணக்குட்டி என்றால், எப்படி இருக்க வேண்டும். ஆனால்...உஸ்ஸ்!

வசனம் :

ரா.முருகன் மற்றும் முகமது ஜாஃபரின் வசனம், இந்தப் படத்திற்கு பெரும் பலம். நாயகனுக்கு பாலகுமாரன் போல், இந்த டானிற்கு இவர்கள். குறைவாகப் பேசும் ஹீரோ என்பதால், ஷார்ப்பான வசனங்களால் கலக்கி எடுக்கிறார்கள். ‘ஆசை இல்லை, பசி.....என் வாழ்வின் ஒவ்வொரு நொடியும்..” போன்ற வசனங்கள் அட்டகாசம். 

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:

- அஜீத்

- ஸ்டைலிஷான மேக்கிங். ஒளிப்பதிவாளரின் உழைப்பு பாராட்டப் பட வேண்டியது.

நெகடிவ் பாயிண்ட்ஸ் :

- நேரடி வன்முறை. கழுத்தை வெட்டுகிற காட்சி என்றால் உண்மையிலேயே வெட்டுவது போன்றே எடுத்திருக்கிறார்கள். டெக்னிகலாக பாராட்டப் பட வேண்டிய விஷயம் என்றாலும், பார்க்கத் தான் கொடுமையாக இருக்கிறது.

- மேலே சொன்ன குஜிலீஸின் நடிப்பு..(ஓ...இவங்க நடிச்சது நடிப்புன்னா, சிவாஜி-கமல் நடிச்சது?)

- இடைவேளைக்கு அப்புறமும் படத்தை இழுத்தது.


அப்புறம்....:

- ஹீரோ இலங்கை அகதியாம்..ஆனால் ஹீரோ/நண்பர்கள் பேசும் ஒரு வார்த்தைகூட இனிய ஈழத்தமிழில் கிடையாது. ஒரு மிகப் பெரிய ஸ்டாரின் படம், பல கோடி பட்ஜெட் என எல்லாம் இருந்தும் எப்படி இவ்வளவு பெரிய மிஸ்டேக் செய்தார்கள்? இது என்னவகையான கவனக் குறைவு? டைரக்டர், ஹீரோ என யாருக்குமே இதிலுள்ள அபத்தம் புரியவில்லையா? அல்லது ஈழத் தமிழ் பேசினால் புரியாது என்று நினைத்தார்களா? தெனாலி படம் முழுக்க கமல் அப்படித் தானே பேசினார்? படம் ஓடவில்லையா என்ன?

- அகதி முகாம் கொடுமையைக் கண்டு கொதித்து வெளியேறும் அஜித், அந்த மக்களை அத்தோடு மறந்ததும் உறுத்துகிறது.

- குஜிலீஸ் மற்றும் மினிஸ்டர் வில்லன் வரும் போர்சனை நீக்கிவிட்டுப் பார்த்தால், படம் நீட்டாக இருக்கிறது. 

- யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பிண்ணனி சூப்பர். பாடல்கள் தான் மனதில் ஒட்டவில்லை.

பார்க்கலாமா? :

- கண்டிப்பாக (அஜித் ரசிகர்கள்)

- ஒருமுறை (மற்றவர்கள், தனியாக!)

- வேண்டாம் (குழந்தைகளுடன் போவோர், விஜய் ரசிகர்கள்!!)


மேலும் வாசிக்க... "பில்லா 2 - திரை விமர்சனம்"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

20 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Tuesday, July 10, 2012

முருக வேட்டை_20


ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீஅருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே! -------- திருப்புகழ்


அதற்குப் பதிலாக சரவணன் “.......................இந்துங்கிறவன் யாரு? அவனுக்கு என்ன தனித்தன்மை இருக்கு? சொரணை கெட்ட, எந்தவித தனியான அடையாளமும் இல்லாத, கூட்டமாத் தானே ஆகியிருக்கீங்க? இந்துக்குன்னு ஏதாவது கடமைகள்னு சொல்லப்பட்டிருக்கா? ஆளுக்கு ஒன்னை எழுதி வச்சிட்டுப் போயிருக்கான்..இது தான், இப்படித் தான்னு தெளிவா ஏதாவது இருக்கா?..நத்திங்..” என்று ஆவேசத்துடன் பதில் சொன்னான்.

கவிதா சரவணனுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தாள். 

“இப்போ முருகர்னா யாருன்னே தெரியாமப் போயிருந்தா, நீங்க சொல்றது சரிங்கலாம். முருகரைக் கும்பிடுற உரிமை இல்லாமப் போயிருந்தாலும், ஒன்னாச் சேர்ந்தது தப்புன்னு சொல்லலாம். ஆனால் இப்பவும் ஒரு இந்து நினைச்சா முருகரை மட்டுமோ அல்லது விஷ்ணுவை மட்டுமோ வணங்கிக்கிட்டுப் போகலாமே..யாரும் அதுக்காக தலையை எடுக்கப்போறதில்லையே? அந்த சுதந்திரம் இன்னும் இருக்கத் தானே செய்யுது? ஏன் இணைச்சாங்கன்னா..அதுக்கான பதில் இப்போ என்கிட்ட இல்லை..ஆனால் இங்கே எதுவும் சும்மா வலுக்கட்டாயமா இணைக்கப்படலை..இந்து மதத்துக்கு அடிப்படையான விஷயமா ஆறு தத்துவங்கள் இருந்துச்சு. அது தான் இந்தியா முழுசையும் ஒன்னா பிணைச்சிருந்துச்சு.”

“ஆறு தத்துவமா?”

“ஆமா...ஆறு தத்துவம் தான்..அதே உங்களுக்குத் தெரியாது. ஆனாலும் துணிஞ்சு எல்லாம் தெரிஞ்ச மாதிரி இந்து மதத்தை விமர்சிக்கிறீங்க..கல்லைக் கும்பிடுற கூட்டம்ங்கிறீங்க.உண்மையில் நாங்க கும்பிடுறது கல்லையோ, அந்த உருவத்தையோ இல்லை..அதுக்குப் பின்னால இருக்கிற தத்துவத்தை..எங்க முன்னோர்களின் தத்துவ ஞானத்தை..அந்த ஆறு தத்துவ ஞானத்துக்கும் பொதுவான பிரம்மத்தை!”

கவிதா சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ஃப்ளைட்டில் ஏறுவதற்கான அழைப்பு வந்தது. க்யூவில் நின்று, கன்சீவ் ஆகியிருப்பதற்கான ஃபார்மை நிரப்பிக் கொடுத்துவிட்டு, ஃப்ளைட்டில் ஏறினார்கள். சென்னையில் இருந்து பஹ்ரைன் வழியாக கென்யத் தலைநகர் நைரோபி செல்வதாகத் திட்டம்.

கவிதாவிற்கு இது தான் முதல் பயணம் என்பதால், விண்டோ சீட்டில் ஆர்வத்துடன் உட்கார்ந்துகொண்டாள். ஃப்ளைட்டை உள்ளிருந்து பார்க்கும்போது பெரிய பஸ் போன்று தெரிந்தது அவளுக்கு. ஃப்ளைட் கிளம்பி டேக் ஆஃப் ஆகும்வரை கவிதாவின் கவனமெல்லாம் ஃப்ளைட்டின் மேல் தான் இருந்தது. சீரியசாகப் பேசிக்கொண்டிருந்தவள், குழந்தையைப் போல் எல்லாவற்றையும் ஆர்வத்துடன் பார்ப்பது வேடிக்கையாக இருந்தது.

சிறுது நேரத்தில் ஸ்நாக்ஸ் சப்ளை ஆரம்பித்தது. சரவணனும் தன் பேச்சை ஆரம்பித்தான்.

”நான் கேட்டதுக்குப் பதில் இன்னும் சொல்லலியே நீ..இந்துங்கிறவன் யாரு? இருக்கிற சாமி எல்லாத்தையும் கும்பிடுறவன் தான் இந்துவா?”

”எல்லா ஆறுகளும் கடலையே சேர்வது போல், எல்லா வழிபாடுகளும் பிரம்மத்தையே சேர்கின்றன. எந்த உருவத்தில் வழிபட்டாலும் அவர்கள் வழிபடுவது என்னையே-ன்னு கிருஷ்ணர் பகவத்கீதைல சொல்லியிருக்கார். கடவுள்ங்கிறது பிரம்மம். பிரம்மம்ங்கிறது வார்த்தையால் விவரிக்க முடியாததுன்னு வேதத்திலேயே சொல்லியிருக்கு. ரொம்ப எளிமைப்படுத்தினா, ‘அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்தப் பூர்த்தியாகி’ங்ற தாயுமானவர் வார்த்தையை வச்சுத்தான் புரிஞ்சுக்க முடியும். இந்த பிரபஞ்சம் முழுக்க நிரம்பியிருக்கும் ஒரு ஆற்றல். பக்தர்கள் விரும்பும் வடிவில் அருளும் ஒரு சக்தி. அதுவே பிரம்மம். அதை முழுசாப் புரிஞ்சுக்கறதுல வர்ற சிக்கல், லாஜிக் தான்!”

“லாஜிக்கா?”

“ஆமா..நம்மால லாஜிக்கலாத் தான் யோசிக்க முடியும். கிருஷ்ணர் மண் சாப்பிட்டார். வாயைத்திறக்கச் சொன்னப்போ, வாய்க்கு உள்ளே பூமி இருந்துச்சுன்னு புராணம் சொல்லுது. அப்போ கிருஷ்ணர் உட்கார்ந்திருந்ததும் பூமி தானே? அது எப்படி வாய்க்கு உள்ளேயும் இருக்க முடியும்? பிரம்மத்தை விளக்க முயலுற எல்லா ஞானிகளுமே உள்ளே இருப்பது எதுவோ, எதுவே வெளியேயும் பரவி இருப்பதுங்கிற சென்டன்ஸை தவறாமச் சொல்றாங்க. அதுக்கு மேல வார்த்தைகளால் சொல்ல முடியலைன்னும் சொல்றாங்க..அவங்களாலேயே சொல்ல முடியாத விஷயத்தை, நான் எப்படி உங்களுக்குப் புரியவைக்கன்னு தெரியலை!” என்றாள் கவிதா.

“என்னன்னெமோ சொல்றே..சரி, அப்போ இந்துங்கிறவன் பிரம்மத்தைக் கும்பிடுறவனா?”

“அப்படி மட்டுமே சொல்லிட முடியாது. என்னோட வழி மட்டுமே சரின்னு நினைக்காத, இறையை எந்த வடிவத்தில் கும்பிட்டாலும் அது பிரம்மத்தின் மற்றொரு வடிவமா ஏத்துக்கிறவன், அந்த வழிமுறைகளை ஏத்துக்கிறவன், எந்த நாட்டில் பிறந்திருந்தாலும், எந்த இனத்தில் பிறந்திருந்தாலும், எந்த மதத்தில் பிறந்திருந்தாலும் அவன் இந்து தான்!”

“அதனால தான் இந்துவால் வேளாங்கண்ணிக்கும் தர்காக்கும் போக முடியுதா?”

“ஆமா..அது இப்போ வந்த பழக்கம் இல்லை. சிலப்பதிகார காலத்துலேயே ஒரே நேரத்துலேயே புத்த விகாருக்கும், இந்துக் கோயிலுக்கும் போற வழக்கம் இருந்திருக்கு. அதுக்குக் காரணம், இந்த மண்ணுக்கேயுரிய பரந்த சிந்தனை. அந்த சிந்தனையைக் கொடுத்த பிரம்மம்-ங்கிற எல்லாருக்கும் பொதுவான இறை.”

“அது நல்ல விஷயம் தான். ஆனால் வெளில இருந்து பார்க்கும்போது, இந்து மதங்கிறது ஒரு குழப்படியான கூட்டமாத் தானே தெரியுது?”

“நீங்க ஏன் வெளில இருந்து பார்க்கிறீங்க? இந்து மதத்தைப் புரிஞ்சிக்க கொஞ்சம் எஃப்ஃபோர்ட் போட்டாலே போதும். அதுக்குக் கொஞ்சம் படிக்கணும். ஆனால் ஏற்கனவே எல்லாம் தெரிஞ்ச புத்திசாலின்னு ஆனப்புறம், எப்படிப் படிப்பீங்க?”

 ”ஆனாலும் இந்துக்குன்னு தெளிவா கடமைகள், அறிவுரைகள்னு எதுவும் இல்லை, இல்லியா?”

“கடமை..அறிவுரைன்னு எதைச் சொல்றீங்க? காலையில சீக்கிரமா எழுந்திரிக்கணும், டெய்லி குளிக்கணும், பொய் சொல்லக்கூடாது, திருடக்கூடாது-ங்கிற மாதிரியா? அதெல்லாம் ஆன்மீக விஷயங்களே இல்லை. அது கொஞ்சம் காமென்சென்ஸ் உள்ள மனுசனுக்கு/சொசைட்டிக்கு தானாவே தெரியற விஷயங்கள்..ஆனாலும் அதைச் சொல்லணும்னா திருவள்ளுவர், அவ்வையார், காந்தி மாதிரி சிந்தனையாளர்கள் தான், அதைப் பத்திப் பேசணும்..இந்து மதத்தைப் பொறுத்தவரை ஆன்மீகம்ங்கிறது ஆன்மாவின் விடுதலையைப் பத்திப் பேசறது..அதிலேயே எல்லாக் கடமைகளும், அறிவுரைகளும் அடக்கம்”

“ஆன்மாவின் விடுதலையா? அது என்ன?”

“இப்போ எனக்கு டயர்டா இருக்கு..பஹ்ரைன்ல ஒன் அவர் வெயிட்டிங் இருக்கே..அப்போச் சொல்றேனே!” என்று சொல்லிவிட்டு, தூங்க ஆரம்பித்தாள் கவிதா.


(தொடரும்)

மேலும் வாசிக்க... "முருக வேட்டை_20"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

11 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Sunday, July 8, 2012

முருக வேட்டை_19

ஆறிரு தடந்தோள் வாழ்க! அற்முகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க! குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன்னணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீ ரடியாயெல்லாம்.
-- கந்தபுராணம்

”அப்போ கடவுள் இல்லேன்னும் எதை வச்சுச் சொல்றீங்க.’இருக்கலாம்..இன்னும் தெரியலை”-ங்கிரது தானே சரியான பதிலா இருக்க முடியும்? மத்தவங்க முன்னாடி தன்னை புத்திசாலின்னு காட்டிக்கறதுக்காக நாத்திகவாதியா இருக்காதீங்க..மத்தவங்களை இன்சல்ட் பண்றது மட்டுமே நாத்திகவாதி வேலைன்னு நினைக்காதீங்க. உண்மையில் ஆன்மீகவாதியை விடவும் அதிக தேடலோட இருக்க வேண்டியன் நாத்திகவாதி”

கவிதா இவ்வளவு பேசுவாளா என்று ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக ஏதாவது நாத்திகக் கருத்து சொன்னால், சிறு புன்னகையுடன் நிறுத்திக்கொள்வான். அப்போதெல்லாம் பதில் சொல்லத் தெரியாமல் தான் அமைதியாக இருக்கிறாள் என்று நினைத்துகொள்வான். இப்போது இவள் பேசுவதைப் பார்த்தால், ‘அட..மடையா’ என்று நினைத்துத் தான் புன்னகை செய்தாளோ என்று தோன்றியது.

“அச்சு, மக்கள் கடவுள் நம்பிக்கையோட இருக்கிறதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை..முன்னாடி தமிழர்கள் தங்களுக்குன்னு தனி நாகரீகத்தோட, தனக்குன்னு தனி அடையாளத்தோட இருந்தவங்க தானே..ஆனால் ஆரியர்கள் வரவுக்கு அப்புறம் தான் தமிழன் தன் சொந்த அடையாளங்களை இழந்துட்டான், இல்லியா? தமிழ்க்கடவுள்கள்கூட ஆரியக்கடவுளா மாறிட்டாங்க இல்லியா?”

“உங்களுக்கு என்ன தாங்க பிரச்சினை? ஒரு நேரம் முருகன் மார்ஸோட காப்பின்னு சொல்றீங்க..ஒரு நேரம் அது தமிழ்க்கடவுள் தான்..ஆனால் ஆரியர் வந்து கெடுத்திட்டாங்கன்னு சொல்றீங்க..உங்களுக்கு உண்மையில் என்ன வேணும்?”

“தமிழர்கள் தங்கள் சுய அடையாளத்தோட வாழணும்..கடவுளை நம்புறதா இருந்தாலும் தமிழ்க்கடவுளையே நம்பணும்..வேறு ஆரியக்கடவுள்களை நம்பக்கூடாது..”

கவிதா இடைமறித்து “ஆரியக்கடவுளை மட்டுமா? அல்லது வெறு எந்த வெளிநாட்டுக் கடவுளையுமா?” என்றாள்.

சரவணன் திகைத்தான்.

“ஏன் யோசிக்கிறீங்க..அதையெல்லாம் மேடையில யாரும் சொல்லலியா?”

“மக்களை ஜாதியின் பேரில் இழிவு படுத்தாத எந்தக் கடவுளையும் அவங்க பின்பற்றலாம்”

“ஓ..கிரேட்..நல்ல விஷயம் தான்..என்னோட சின்ன அறிவுக்கு எட்டுனவரைக்கும் ஜாதி இல்லாத மதம் இல்லை..என்ன ஒன்னு, இந்து மதத்துல ஜாதிக்கு மதரீதியான பாதுகாப்பு இருந்தது. இப்போ சமூக மாற்றத்தால மதம் ஜாதிக்கு கொடுத்த ஆதரவை கொஞ்சம் கொஞ்சமா வாபஸ் வாங்கிக்கிட்டு இருக்கு”

“அந்த மாற்றம் எப்படி வந்துச்சு?” என்றான் சரவணன் பெருமிதத்துடன்.

“நிச்சயமா தந்தை பெரியாரும் ஒரு காரணம் தான்..தொடர்ந்து வந்த முதலாளித்துவமும் நகரமயமாக்கலும் இன்னிக்கு ஜாதியை பலவீனப்படுத்தியிருக்கு”

சரவணன் சந்தோசத்துடன் “அப்பாடி..இதையாவது ஒத்துக்கிட்டியே” என்றான்.

”சமூக விடுதலையில உங்க பங்கை யாரும் மறுக்க முடியாது. ஆனால் ஒரு விஷயத்தை விமர்சிக்கிறோம்னா அது என்ன ஏதுன்னு தெரிஞ்சுக்காம, சும்மா அரைகுறையா அடிச்சுவிடறது தான் எரிச்சலா இருக்கு”

“என்ன அரைகுறையா?”

“இந்து மதத்தை விமர்சிக்கிறீங்கன்னா, அது பத்தின பேசிக் நாலேட்ஜாவது வேணாமா உங்களுக்கு?...ஆதிசங்கரர் காலம்வரை இந்து மதம் ஆறு பெரும் மதங்களா இருந்து வந்தது தெரியுமா, உங்களுக்கு?”

“கேள்விப்பட்டிருக்கேன்”

“அப்போ அந்த ஆறும் என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்?”

“சைவம், வைணவம் தெரியும்..முருகனுக்குன்னு நீ ஏதோ சொன்னியே..கௌபீனமா?”

“அது கோமணம்..நான் சொன்னது கௌமாரம்..இந்தியாவில் ஆதியில் ஆறு பெரிய மதங்கள் தான் இருந்துச்சு.

சிவனையே கும்பிட்ட சைவம்
விஷ்ணுவை வணங்கிய வைணவம்
முருகரை வணங்கிய கௌமாரம்
விநாயகரை மட்டுமே வணங்கிய கணாபாத்யம்
சக்தியை வழிபட்ட சாக்தம்
சூரியன், அக்னியை வழிபட்ட சௌரம்.

இது தவிர நம் பழங்குடிக் குழுக்கள்கிட்ட வள்ளி, அய்யனார் போன்ற சிறுசிறு தெய்வ வழிபாடுகளும் இருந்துச்சு. ஆதிசங்கரர் தான் இது எல்லாத்தையும் ஒன்னாச் சேர்த்து இந்துமதம்-ன்னு ஒன்னை உண்டாக்கினார். அதனால தான் சொல்றோம், இந்து மதம்ங்கிற இந்த இந்திய மண்ணில் புழங்கிய அனைத்துவகை ஞானங்களின் தொகுப்புன்னு!” என்று பெருமிதத்துடன் சொன்னாள் கவிதா.

அதற்குப் பதிலாக சரவணன் “அதையே தான் நாங்களும் சொல்றோம்..ஆரியம் பசப்பு வார்த்தைகளால் இந்த மக்களின் மதங்களை கபளீகரம் செஞ்சு இந்து மதம்னு பேர் கொடுத்து, நம்மை அடிமையாக்கிடுச்சுன்னு! உங்க முருகரோட கௌமாரத்தோட பேராவது இந்தத் தலைமுறைக்குத் தெரியுமா? முருகரை மட்டுமே கடவுள்னு கும்பிட்ட மக்களை குழப்பி, ஆயிரக்கணக்குல கடவுளை மக்கள் தலையில கட்டுனது புத்திசாலித்தனமா? ஒரே கடவுள்..அது முருகன் தான்னு நிம்மதியா இருந்த மக்களை குழப்ப வேண்டிய அவசியம் என்ன? மக்களின், குறிப்பா தமிழர்களின் தனித்தன்மையை ஏன் கெடுக்கணும்? இப்போ என்ன ஆச்சு? இந்துங்கிறவன் யாரு? அவனுக்கு என்ன தனித்தன்மை இருக்கு? சொரணை கெட்ட, எந்தவித தனியான அடையாளமும் இல்லாத, கூட்டமாத் தானே ஆகியிருக்கீங்க? இந்துக்குன்னு ஏதாவது கடமைகள்னு சொல்லப்பட்டிருக்கா? ஆளுக்கு ஒன்னை எழுதி வச்சிட்டுப் போயிருக்கான்..இது தான், இப்படித் தான்னு தெளிவா ஏதாவது இருக்கா?..நத்திங்..” என்று ஆவேசத்துடன் பதில் சொன்னான்.


(தொடரும்)











மேலும் வாசிக்க... "முருக வேட்டை_19"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Saturday, July 7, 2012

முருக வேட்டை_18


மூவிரு முகங்கள் போற்றி! 
முகம்பொழி கருணை போற்றி!
ஏவருந் துதிக்க நின்ற ஈராறு தோள் போற்றி! - காஞ்சி
மாவடி வைகுஞ் செவ்வேள் மலரடி போற்றி! - அன்னான்
சேவலும் மயிலும் போற்றி!
திருக்கைவேல் போற்றி! போற்றி!

- கந்த புராணம்.

விதா கென்யா செல்லும் ஆர்வத்தில் பம்பரமாகச் சுழன்று வேலை செய்தாள். ஆஃபீசில் பெர்மிசன் வாங்கி, டிக்கெட்டையும் அவளே புக் செய்து, மாமாவிடம் கிளம்புவதைத் தெரிவித்துவிட்டு, சரவணனுடன் சென்னை ஏர்போர்ட் சென்று இறங்கினாள். போர்டிங் பாஸ் வாங்கிவிட்டு, இமிக்ரேசனில் ‘கென்யாவா?’ எனும் வியப்புப் பார்வையைக் கடந்து, செக்யூரிட்டி செக்கிங்கை முடித்து விட்டு, வெயிட்டிங் ஹாலில் அமர்ந்தார்கள்.

சரவணன் வாட்ச்சைப் பார்த்தான். இன்னும் இரண்டு மணி நெரம் இருந்தது. ‘ரொம்ப சீக்கிரமா வந்துட்டோம். இன்னும் ஒன் அவர் கழிச்சுக் கிளம்பி வந்திருக்கலாம்” என்றான்.

“லேட்டாகிடுச்சுன்னா, இப்போ நான் ஓட முடியுமா? சீக்கிரம் வந்ததால என்ன? வேடிக்கை பார்ப்போம், இல்லே ஏதாவது பேசிக்கிட்டிருப்போம்” என்றாள் கவிதா.

கொஞ்ச நேரம் சுற்றும் முற்றும் பார்த்த சரவணன், திடீரென கவிதா பக்கம் திரும்பி, “அச்சு, நான் அன்னிக்குக் கேட்டனே..மார்ஸோட காப்பி தான் முருகனான்னு? அதைப் பத்தி அப்புறம் யோசிச்சியா?” என்றான்.

“உஸ்ஸ்ஸ்..அதையெல்லாம் கொஞ்சநாளைக்கு ஒத்தி வைப்போம்னு தானே இப்போ..”

“ஆமா..ஆனா என்னால அதை மறக்க முடியலியே..உன்னால எப்படி முடியுதோ?”

”நானும் மறக்கலைங்க..ஆனா அடிப்படையிலேயே நீங்க ஏதோ மிஸ் பண்ணீட்டீங்களோன்னு எனக்கு ஒரு டவுட்டு..அதான் கொஞ்சம் கேப் விட்டுட்டு, ஃப்ரெஷ்ஷா ஆரம்பிச்சா, உங்களுக்கே புதுசா ஏதாவது தடயம் கிடைக்கலாம்”

“சரி..ஆனால் கேஸுக்காகன்னு இல்லை..சும்மா கேட்கிறேன்..அதைப் பத்தி நீ என்ன நினைக்கிறே?”

“தமிழ் இலக்கியத்துல எழுதப்பட்ட முதல் ஆன்மீக நூலே முருகாற்றுப்படை தான்..முருக வழிபாடுங்கிறது அந்தளவுக்கு முன்னாடி இருந்தே இருந்துக்கிட்டு வர்ற விஷயம்..எப்போ தமிழன்னு ஒரு இனம் உருவாச்சோ அப்பவே முருகன்ங்கிற கடவுளும் உருவாகியிருக்கணும். முருகன்ங்கிற பேருக்கு அழகன், குமரன்னு அர்த்தம். முருக வாழிபாடுங்கிறது கௌமாரம்-ங்கிற பேர்ல தனி மதமாவே ஆரம்பித்தல இருந்துச்சு. முருகன் மார்ஸோட காப்பின்னா வள்ளி யாரு?”

“அது இவங்களோட கற்பனையா இருக்கலாம்..எதை வச்சு இந்தக் கதையெல்லாம் உண்மைன்னு நம்புறே?”

“நம் முன்னோர்கள் சொல்லிட்டுப் போயிருக்கிறாங்க..”

“ஆங்..அதான் பிரச்சினை..முன்னாடி எவனோ எதையோ எழுதிட்டுப் போய்ட்டான்..அதை அப்படியே உண்மைன்னு நம்பி மூடநம்பிக்கைலயே கிடக்கிறீங்க..”

கவிதா சிரித்தபடியே “நாங்க மட்டும் தான் அப்படியா?” என்றாள்.

”பின்னே?”

“ஒகே, அப்போ நான் கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்லுங்க..சோலார் சிஸ்டத்துல மண்டலத்தில் மொத்தம் எத்தனை பிளானட்ஸ் இருக்கு?”

“நயன்..இல்லை, இல்லை எய்ட்”

“நயனா/ எயிட்டா?”

“எயிட் தான்..2006-ல ப்ளூட்டோ ப்ளானட் இல்லேன்னு கண்டுபிடிச்சுட்டாங்களே..”

“யாரு கண்டுபிடிச்சா?”

“சைண்டிஸ்ட் தான்”

“அப்போ முதல்ல ப்ளூட்டோ ப்ளானட்னு யார் சொன்னா?”

“அது..அதுவும் சைண்டிஸ்ட் தான்”

கவிதா சிரித்தாள்.

“ஹே..சிரிக்காதே..டெக்னாலஜி இம்ரூவ் ஆகும்போது, சில விஷயம் தப்புன்னு தெரிஞ்சா மாத்திக்கிறது என்ன தப்பு?”

”தப்பு மாத்திக்கிறதுல இல்லை...1930ல ப்ளூட்டோ ஒரு ப்ளானட்னு சொன்னாங்க..1930ல இருந்து 2006 வரைக்கும் 76 வருசம் நாம அதை நம்பிக்கிட்டே இருந்திருக்கோம்..இடையில ஸ்கூல்ல. காலேஜ்ல இருந்து எவ்வளவு பேர் இதை உண்மைன்னு நம்பி, படிச்சு வெளில வந்திருக்காங்க..அதை நம்பின போன தலைமுறைல பலபேரு இப்போ அதே நம்பிக்கையோட இறந்தும் போயிருக்காங்க..எவ்வளவு பெரிய மடத்தனம்..நாளைக்கு இதே சைண்டிஸ்ட்டுங்க ப்ளூட்டோ ப்ளானட் தான்னு சொன்னா, நீங்க அதையும் ஆமான்னு ஒத்துப்பீங்க, இல்லியா? என்னே உங்க பகுத்தறிவு!”

“இதோ பார்..சைண்டிஸ்ட்டுங்க சும்ம எதையும் சொல்றதில்லை. பல கோடி செலவு பண்ணி, பலவருட ஆராய்ச்சிக்கு அப்புறம் தான் ஒரு விஷயத்தை முடிவாச் சொல்றாங்க..நம்மளை மாதிரி சாமானியர்களுக்கு தனியா ஆராய்சி பண்ணி உறுதிப்படுத்திக்க வசதியும் கிடையாது, அறிவும் கிடையாது. நமக்கு இருக்கிற ஒரே வழி, அவங்களை நம்புறது தான்”

“ஆங்..அதைத் தான் நானும் சொல்றேன்..நம்ம முன்னோர்கள் தங்கள் தவ வலிமையாலும், ஞானத்தாலும் பல விஷயங்களை உணர்ந்து சொல்லிட்டுப் போயிருக்காங்க. அதை தனியா உறுதிப்படுத்திக்க நம்மை மாதிரி சாமானியர்களால முடியாது. நமக்கிருக்கும் ஒரே வழி, அவங்களை நம்புறது தான்..நாங்க முன்னோர்கள் பேச்சை அப்படியே நம்புனா மூட நம்பிக்கை. நீங்க சைண்டிஸ்ட் பேச்சை அப்படியே நம்பினா, பகுத்தறிவா?”

“முன்னோர்கள் நம்மை முட்டாளாக்க...”

கவிதா இடைமறித்தாள். ”வியாபார நோக்கத்தோட, மக்களை முட்டாளாக்கும்விதமா எத்தனை விஷயங்கள்-ஆய்வுகள் சைன்ஸ்ல நடக்குன்னு தெரியாதா உங்களுக்கு?”

“சில பேரு அப்படி இருக்காங்க தான்..”

“கரெக்ட்..அதனால தான் சொல்றேன்..முன்னோர்களை நாங்க எப்படி நம்புறோமோ, அப்படித் தான் நீங்க சைண்டிஸ்ட்டுகளை நம்புறீங்க..முன்னோர்கள் பண்ண, சொன்ன பல விஷயங்களை சைன்ஸால ப்ரூஃப் பண்ண முடியலேன்னா அது முட்டாள்தனம்னு சொல்லி மூட்டை கட்டிடறீங்க..அஸ்ட்ராலஜீல நம்மாளுக எவ்வளவு பெரிய அறிவாளிகளா இருந்திருக்காங்க. நீங்க பலகோடி செலவழிச்சு இப்போக் கண்டுபிடிக்கிற கிரகங்களின் சுற்றுவட்டப்பாதை, சுற்றும் கால அளவு எல்லாத்தையும் அப்போவே எழுதி வச்சுட்டுப் போயிருக்காங்களே, அது எப்படி?..அது எப்படின்னு உங்க சைண்டிஸ்ட்டுங்க கண்டுபிடிச்சுட்டாங்களா? அது அவங்களோட ஞானத்தால, ஞானதிருஷ்டியால உணர்ந்து சொன்ன விசயங்கள்னு நாஙக் நம்புறோம். ஆதாரப்பூர்ப்வமா உங்களால மறுக்கமுடியுமா? சன்ஸால ‘தெரியாத’ விஷயங்களை உறுதிப்படுத்த முடியாது. தெரின்ச்ஜ விஷயங்களைத் தான் உறுதிப்படுத்த முடியும். இப்போ ஒரு ப்ளானட் இருக்குன்னு அவங்களுக்குத் தெரிஞ்சா, அது பத்தின விவரங்களை துல்லியமா அப்போதுள்ள வசதிப்படி சொல்ல முடியும். ஆனா இருக்கா, இல்லையான்னே தெரியாத விஷயங்களைப் பத்தி சன்ஸால ஏதாவது சொல்ல முடியுமா?” மூச்சிரைக்கக் கேட்டாள் கவிதா.

“ம்..முடியாது” என்றான் சரவணன்.

“அப்போ கடவுள் இல்லேன்னும் எதை வச்சுச் சொல்றீங்க.’இருக்கலாம்..இன்னும் தெரியலை”-ங்கிறது தானே சரியான பதிலா இருக்க முடியும்? மத்தவங்க முன்னாடி தன்னை புத்திசாலின்னு காட்டிக்கறதுக்காக நாத்திகவாதியா இருக்காதீங்க..மத்தவங்களை இன்சல்ட் பண்றது மட்டுமே நாத்திகவாதி வேலைன்னு நினைக்காதீங்க. உண்மையில் ஆன்மீகவாதியை விடவும் அதிக தேடலோட இருக்க வேண்டியன் நாத்திகவாதி”

(தொடரும்)

மேலும் வாசிக்க... "முருக வேட்டை_18"
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

6 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Thursday, July 5, 2012

என்னை வளர்த்த புத்தகங்கள்...


டிஸ்கி : மின்னஞ்சல் அனுப்பி. எனது புத்தக வாசிப்பு பற்றி பதிவெழுதத் தூண்டிய தம்பி கோபிக்கு நன்றி.

இணையம் இல்லாத முந்தைய காலகட்டத்தில், எமது அறிவை வளர்ப்பதற்கான ஒரே வழியாக இருந்தவை புத்தகங்கள் தான். எனது புத்தக வாசிப்பு, எனக்கு விவரம் தெரியுமுன்னே தொடங்கிவிட்டது. கிராமத்தில் நாங்கள் கடை வைத்திருந்தோம். எனவே கடையில் பார்சல் போட வாங்கப்படும் புத்தங்களே, முதலில் நான் வாசிக்க ஆரம்பித்தவை எனலாம். சிறுவயதில் குமுதம்/விகடனை விட தினசரிகள் இலவசமாகத் தரும் சிறுவர்மலர்கள் தான் என்னைக் கவர்ந்தன.

புத்தகங்கள் மேல் எனக்கு ஆர்வத்தை உண்டாக்கியவர் என ‘கொக்காடி’ தாத்தாவைச் சொல்லலாம். அவர் ராமநாதபுரம் அல்லது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொக்காடியில் இருந்து எங்கள் ஊருக்கு இடம்பெயன்று வந்தவர். மகாபாரதம், ராமாயணத்தை கரைத்துக்குடித்தவர். எனவே யார் அகப்பட்டாலும் ‘பீஷ்மன் ஏன் அப்படிச் செஞ்சான்னா....’ என்று ஆரம்பிப்பார். நண்பர்கள் சிதறி ஓடிவிடுவார்கள். ஆனால் எனக்கு மட்டும் அவரிடம் கதை கேட்பது அலுப்பதேயில்லை. பெரிய எழுத்து விக்ரமாதித்யன் கதை போன்ற புத்தகங்களை அவரிடம் வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். மகாபாரதம், கந்தபுராணம் போன்ற புராணங்கள் சிறுவயதிலேயே அறிமுகம் ஆனது என் கொடுப்பினை என்று தான் சொல்ல வேண்டும்.

அதன்பின் கோவில்படி ஸ்கூலுக்குப் போனபின், பாக்கெட் நாவல்கள் அறிமுகம் ஆகின. 

பல்சுவை நாவல்கள் : 
ஏழாம்வகுப்பு முதல் பத்தாம்வகுப்பு வரை சுஜாதா, ராஜேஸ்குமார்,சுபா. பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்களை தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தேன். பெரும்பாலும் ஏதேனும் ஒரு கொலை முதல் அத்தியாயத்திலேயே விழும். கொலையாளி யார் என அந்தந்த எழுத்தாளர்களின் டிடெக்டிவ்கள் கண்டுபிடிப்பார்கள். பெரும்பாலும் கால்வாசிக் கதையிலேயே யார் கொலையாளி என்று ஒரு ஐடியா வந்துவிடும். ஆனால் ஒருகட்டத்தில் பொழுதுபோக்கை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு எழுதப்படும் நாவல்கள் (சுஜாதா நாவல்கள் தவிர!) போரடிக்க ஆரம்பித்தது. சுஜாதா போன்ற பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளியை மட்டுமே கடைசிவரை நம்மால் ரசிக்க முடிகிறது. 

பாலகுமாரன்: 
அதன்பின் ஆரம்பித்தது பாலகுமாரன் பைத்தியம். பாலகுமாரனின் தொடக்கக்கால நாவல்கள் நல்ல கற்பனை வளமும் நல்ல மொழிநடையும் கொண்டவை. (உதாரணம் - இரும்புக் குதிரைகள்). அவரது ஆன்மீக நாவல்களில் காதற்பெருமான், தங்கக்கை போன்ற நல்ல முத்துக்களும் உண்டு. மனதோடு பேசுவது, மனதிற்குள் வளரும் கற்பனைகள் போன்றவற்றை இது இயல்பானவை, ஆனால் எல்லை மீறினால் ஆபத்தானவை என நம் கை பிடித்துச் சொல்லித்தந்தது பாலகுமாரன் தான். 

எப்போதும் நிதானமாக ஆழ்ந்து யோசிக்கும் அவரது ஹீரோக்களின் பாதிப்பு என் ஆளுமையை மாற்றியது என்றே சொல்ல வேண்டும். பாலகுமாரனே ஓஷோவை அறிமுகப்படுத்தி வைத்தார். அது ஆன்மீகரீதியில் பேருதவியாக இருந்தது. ஆனாலும் பிற்காலத்தில் புகழ்போதையில் மயங்கி, தன்னை ஞானியாக பாலகுமாரன் எண்ண ஆரம்பத்த பின் நல்ல படைப்புகள் அவரிடமிருந்து வரவில்லை. உடையாரே அவரின் கடைசி நல்ல நாவல் என்று நினைக்கின்றேன். இருப்பினும் ஒரு தமிழ் வாசகன் பாலகுமாரனை கடந்து வருவது அவசியம்.

தி. ஜானகி ராமன்: 
மென்மையான உணர்வுகளுடன் கதை சொல்வதில் வல்லவர். மோகமுள் நாவல் இவரது உச்சம். மற்ற படைப்புகளும் வாசிக்க வேண்டியவையே. மென்மையான மொழி நடையுடன் பெரும்பாலும் கற்புக்கோட்டில் நின்று உரையாடும் கதைகள் இவருடையவை. திருச்சி காவிரியைக் கடக்கும்போதெல்லாம் தி.ஜானகிராமன் தான் எனக்கு ஞாபகம் வருவார்.

ஜெயகாந்தன்: 
அதன்பின் நானும் என்னை எழுத்தாளனாக கற்பனை செய்துகொண்டு கதைகள் எழுத ஆரம்பித்தேன். அப்படியே தொலைந்து போக இருந்த என்னைக் காப்பாற்றியது ஜெயகாந்தன் தான். அவரது கதைகளைப் படித்தபிறகே, ‘இதுல்லய்யா கதை! ‘ என்று ஞானோதயம் பிறந்தது.

உண்மையை அப்பட்டமாக முகத்தில் அறையும் வண்ணம் சொல்லும் கதைகள் இவருடையவை. சில நேரங்களில் சில மனிதர்கள், யாருக்காக அழுதான் போன்ற நாவல்கள் மனதைத் தொட்டவை, மறக்க முடியாதவை. இவரது கதைகளை விட கட்டுரைகள் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியதுண்டு. தற்போதைய அவரது அரசியல்/சமூக நிலைப்பாடு நம்மால் ஜீரணிக்க முடியாதது, சிங்கம் அடிமாடாகப் போன சோகக் கதை அது. ஆனாலும் தமிழ் இலக்கிய உலகில் பழைய ஜெயகாந்தனின் இடத்தை யாரும் இன்னும் நிரப்பவில்லை என்றே சொல்லலாம்.

அகிலன்: சாதாரண சமூகக் கதைகள் தான். ஆனாலும் சரளமான மொழிநடையால் என் மனம் கவர்ந்தவர். குலமகள் ராதை திரைப்படம் இவரது நாவலை அடிப்படையாகக் கொண்டு வந்தது. 

கல்கி :
கல்கி என்றாலே பொன்னியின் செல்வன் தான். ஒரு தமிழ் வாசகன் பொன்னியன் செல்வனை அவசியம் படித்திருக்க வேண்டும் என்பது அடியேனின் கருத்து. 5 பாகங்களும் எடுத்தால் கீழே வைக்க முடியாத தன்மை கொண்டவை.

இவர்கள் தவிர கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமி போன்றோரை நான் கடந்து வந்திருந்தாலும், அவர்களை நான் அதிகம் ரசித்ததில்லை. ஒருவேளை உங்களுக்குப் பிடிக்கலாம்.

தற்கால இலக்கிய ஆளுமைகளாக ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா இருக்கிறார்கள். இவர்களது அத்தனை படைப்புகளும் முக்கியமானவை என்பது என் கருத்து. குறிப்பாக,

ஜெயமோகன் - விஷ்ணுபுரம், கொற்றவை, பின் தொடரும் நிழலின் குரல்

எஸ்.ராமகிருஷ்ணன் - துணையெழுத்து(கட்டுரைகள்), உப பாண்டவம்

சாரு நிவேதிதா - ராசலீலா, எக்சிஸ்டென்சியலிசமும் ஃபேன்சி பனியனும் 

ஆகியவற்றைச் சொல்லலாம்.

(நாஞ்சில் நாடனை நான் இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை, ப்ளாக்கால் நான் இழந்தது புத்தக வாசிப்பைத் தான்.)


இலக்கிய வாசிப்பிற்கு நம் அனுபவமும் ஆர்வமும் முக்கியம். நமக்கு ஆன்மீக நாட்டம் உண்டென்றால் ஜெயமோகன், எஸ்.ரா உதவுவர். சமூக நாட்டமென்றால் ஜெயகாந்தன் உதவுவார். உங்கள் ரசனையோடு எவர் ஒத்துப்போவார் என்று பார்த்துவிட்டு நாம் படிக்க ஆரம்பிப்பது நல்லது. நமக்கு எல்லா இலக்கியகர்த்தாவையும் பிடிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. 

புத்தகங்களே நல்ல நண்பனாகவும், ஆசானாகவும் எனக்கு இருந்திருக்கின்றன. புத்தகங்களைப் பற்றிப் பேசுவது எனக்கு எப்போதுமே சந்தோசமான விஷயமாக இருந்திருக்கின்றன. இன்னும் படிக்க வேண்டிய எழுத்தாளர்களும் நிறைய இருக்கின்றார்கள். எழுதுவதும், படிப்பதும் மட்டுமே வாழ்க்கையாக அமைந்தால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும்!!

பிஸ்கி: பதிவின் நாகரீகம் கருதி நான் படித்த ‘வாழ்க்கைக் கல்வி’ புத்தகங்களை இங்கே குறிப்பிடவில்லை. விவரம் வேண்டுவோர் ஆயிரம் ரூபாய் மணியார்டருடன், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்!

மேலும் வாசிக்க... "என்னை வளர்த்த புத்தகங்கள்..."
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

31 comments:

Post a Comment

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.