Monday, July 23, 2012

முருக வேட்டை_21


கவிதாவும் சரவணனும் பஹ்ரைனில் இறங்கி, எல்லா ஃபர்மாலிட்டீஸையும் முடித்து விட்டு, கென்ய விமானத்திற்குக் காத்திருக்க ஆரம்பித்தார்கள்.

சரவணன் “ம்..சொல்லு” என்றான்.

“என்ன சொல்லச் சொல்றீங்க?” என்றாள் கவிதா.

“அதான்..இந்துக்குன்னு ஏதோ கடமை இருக்குன்னு சொன்னியே”

“அதுவா..நான் ஏற்கனவே சொன்னபடி பிரம்மம்ங்கிறது தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை, இந்தப் பிரபஞ்சமும் அதுவே, பிரபஞ்சத்தை இயக்கும் சக்தியும் அதுவே-ன்னு பெரியவங்க சொல்றாங்க. அதுவே எல்லாத்துக்குள்ளேயும் உறைவதுன்னு நம்பிக்கை. இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்னு சொல்றது அதைத் தான். அப்படி திரும்பிலும் உறையும் தெய்வம், மனிதனுக்குள்ளேயும் இருக்க வாய்ப்பிருக்கிறது, இல்லையா?”

“ம்..மனிதனும் பிரபஞ்சத்தில் ஒரு பகுதி தானே?”

“கரெக்ட்டுங்க..அதனால இந்து மதம்...பொதுவாவே கிழக்காசிய மதங்கள் மனிதன் மேல பெரும் பொறுப்பை சுமத்தி இருக்காங்க. அது என்னன்னா..நீயும் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி. எனவே உன்னுள்ளும் இருப்பது இறைவனே..அதைக் கண்டறியும் வழிமுறை தெரிந்தால், நீயும் கடவுளின் அங்கம்னு புரிந்துகொள்வாய்-னு சொல்லி, தியானம்-யோகா போன்ற வழிமுறைகளை ஏற்படுத்தினாங்க. உலகில் பெரும்பாலான மதங்கள், மனிதனை இறைவனுக்கு அடுத்த நிலையில் உள்ள உயிரினமாய் சொன்னப்போ, இந்து மதம் இறைவனின் ஒரு பகுதியாய் மனிதனைச் சொல்லுச்சு. அப்படி சொல்ற அளவுக்கு நம் கலாச்சாரமும் பண்பாடும் அப்போ உயர்ந்த அளவில் இருந்திருக்கு.”

“அப்போ அது மனிதனோட தன்னம்பிக்கையை அதிகரிக்கச் சொன்னதா?”

“அப்படி வெறுமனே சொல்லிட முடியாது. ஏன்னா அதே வழிமுறைகளைப் பின்பற்றி புத்தர், பதாஞ்சலி, ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமணர்னு பல ஞானிகளும் பிரம்மத்தை அறிஞ்சிருக்காங்க. அது வெற்று வார்த்தைகள் இல்லேன்னு நிரூபிச்சிருக்காங்க”

“சரி..இதுக்கும் கடமைக்கும் என்ன சம்பந்தம்?”

“நீங்கள்லாம் ’பொய் சொல்லக்கூடாது..டெய்லி குளிக்கணும், திருடக்கூடாது’ன்னு தெளிவான கட்டளை வேணும்னு நினைக்கிறீங்க. ஆனால் கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தாலே புரியும், அதெல்லாம் சமூகக் கடமைகள் தானேயொழிய ஆன்மீகக் கடமைகள் இல்லேன்னு. அதைச் சொல்ல மதம் தேவையில்லை. திருவள்ளுவர், அவ்வையார், காந்தி போன்ற சிந்தனையாளர்களே போதும். இந்த மண்ணைப் பொறுத்தவரை ஆன்மீகங்கிறது அதுக்கும் மேல..”

“அதுக்கும் மேலன்னா..”

“பொறுங்க..முதல்ல நீங்க கேட்ட கடமையை க்ளிடர் பண்றேன். ‘நீயே பிரம்மம்’னு சொன்னப்புறம், அதை அடைவதற்கான வழியில் இறங்க வேண்டியது தான் ஒரு இந்துவின் கடமை. அது பக்தி மார்க்கமா இருக்கலாம் அல்லது ஞான மார்க்கமா இருக்கலாம். அப்படி பிரம்மத்தைக் கண்டறியும் பாதையில் இறங்கின அப்புறம், ஒருத்தனால எப்படித் திருட முடியும்? எப்படிப் பொய் சொல்ல முடியும்? எல்லாக் கடமைகளும் இதுக்குள்ள அடங்கிடும். தெய்வத்தின் ஒரு அங்கம் தான் நீ-ன்னு சொல்லி, அதை எப்பவும் ஞாபகப்படுத்தும் விதமா அந்தக் கடவுளின் பெயரையே குழந்தைக்கு சூட்டி விடறோம்.”

‘ஓ..குழந்தைக்கு சாமி பேரு வைக்கறது அதனால தானா?”

“ஆமா..நாம எல்லாரும் பிரம்மத்திலிருந்து மாயையால் சிதறி, வெளியே வந்தவர்கள். அந்த மாயை அகன்றால், உண்மை புரியும். புத்தர் ஞானம் அடைந்த பிறகு சொன்னார் ‘எனக்குள் இருப்பதை நான் கண்டுகொண்டேன். நீஙக்ள் இன்னும் கண்டுகொள்ளவில்லை. மற்றபடி, இருவரும் ஒருவரே’ன்னு. ஆனால் மாயையை அறுப்பது எளிதான காரியம் இல்லை. அது ஒரு பிறவியில் ஆகும் வேலையும் இல்லை.”

“அதைத் தான் நானும் யோசிச்சேன்..இதெல்லாம் நடக்கிற கதையான்னு!” என்றான் சரவணன்.

கவிதா சிரித்துவிட்டுத் தொடர்ந்தாள். “நடக்கும். ஒவ்வொரு பிறவியிலயும் ஒவ்வொரு ஆசையா உதிர்த்துக்கிட்டே போனா, ஒவ்வொரு பிறவியிலயும் செய்யிற பாவங்களைக் குறைச்சுக்கிட்டே போனால், முடிவில் பிரம்மத்தைத் தவிர வேறு எதை அடைவீங்க? ஒரு இந்துவுன் கடமையா நான் நினைக்கிறது இது தான். இந்தப் பிறவில பொய் சொல்றதை தவிர்க்க முடிஞ்சா நல்லது. காமத்தை இந்தப் பிறவில முழுக்க வெல்ல முடியாட்டியும், கட்டுக்குள் இப்போ வைக்கலாம். அது அடுத்த பிறவில காமத்தை வெல்ல உதவும். காமம் மட்டுமில்லை, எல்லா ஆசைக்கும் இது பொருந்தும். புத்தர் உட்பட எல்லா ஞானிகளுமே பல பிறவிகளுக்கு அப்புறம் ஞானம் அடைஞ்சவங்க தான் அதனால பிரம்மத்தை அடையும் வழில நடந்தாலே போதும். சமூகமே ஒரு ஒழுங்குக்குள் வந்திடும். அதைத் தான் நம் முன்னோர்கள் செஞ்சாங்க. அதுக்கான வழிமுறைகளை சொல்லிட்டுப் போனாங்க”

”அப்போ ஆன்ம விடுதலைங்கிறது?”

“மாயையில சிக்கிக் கிடக்கிறதால தான் ஆன்மா, மீண்டும் மீண்டும் பிறவி எடுக்குது. எப்போ நீங்க பிறவிகள் பல கடந்து, பிரம்மத்தை அடையிறீங்களோ, அதுக்கப்புறம் உங்களுக்கு மறுபிறவி இல்லை. அதுவே முக்தின்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க.”

“ம்..இதுக்குப் பின்னால இவ்வளவு இருக்கா? ஆனாலும்...” என்று சரவணன் இழுத்தான்.

“என்ன ஆனாலும்?”

“இல்லே..ஆனாலும் கடவுள்னு ஒன்னு இருக்கிறதா இன்னும் நம்ப முடியலியே? கடவுள் இருந்தா சுனாமி அலல்து விபத்துல ஏன் மக்கள் சாகுறாங்க? சாப்பிடவே வழியில்லாம மகக்ள் ஏன் கஷடப்படுறாங்க? சோமாலியா போன்ற தேசங்களை உங்க கடவுள் ஏன் காப்பாத்தலை?”

"சரி..அதனால கடவுள் இல்லேன்னு சொல்றீங்களா?”

“பின்னே?”

“ஓகே..முன் ஜென்ம வினை, பிரம்மத்தை அடையும் வழியில் உள்ள தடைக்கல்னு தத்துவார்த்தமா காரணங்கள் சொல்லலாம். ஆனாலும் ஒரு பேச்சுக்கு கடவுள் இல்லேன்னு வச்சுக்குவோம். அப்போ நீங்க சொல்லுங்க. ஏன் உலகத்தில் பிறக்கிற சிலர் நல்லா இருக்காங்க, சிலர் கஷ்டப்படுறாங்க? ஏன் ஒரே குடும்பத்துல பிறக்கிற ஒரு குழந்தைக்கு நல்ல வாழ்க்கை அமையுது, இன்னொரு குழந்தை கஷ்டப்படுது? ஏன் சிலர் அறுபதில் சாகுறாங்க, சிலர் ஆறில் சாகுறாங்க? இதெல்லாம் சும்மா தற்செயல்னு சொல்றீங்களா?”

சரவணன் யோசித்தான்.

”எங்களுடைய ‘கடவுள்’ங்கிற கருத்தை நீங்க மறுத்தீங்கன்னா, அதுக்குப் பதிலா பல கேள்விகள் எழும்பும். ஒரு உண்மையான நாத்திகவாதியோட வேலை, அம்மாதிரிக் கேள்விகளுக்கு விடை தேடுறது தானேயொழிய, மத்தவங்களை விட நான் புத்திசாலின்னு நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு அலையறது இல்லே.”

“ரைட்டு..நீ சொன்னதை நானும் யோசிக்கிறேன்..இப்போ ஃப்ளைட்டுக்கு நேரமாச்சு, கிளம்புவோம்” என்று எழுந்து நின்றான் சரவணன்.

(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

8 comments:

  1. நல்ல தத்துவ விசாரணை செங்கோவி. தொடரட்டும். அடுத்த பகுதியை எதிர் நோக்கிக் கொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  2. Another reason to put the names of God to the children is, everybody thinks of their children at their last time So they will pronounce the name of God when their life ends..

    ReplyDelete
  3. விவாதத்தின் ஊடே பிரம்மத்தின் தெளிவைக் கொடுத்த வண்ணம் இயல்பாக நகர்கின்றது தொடருங்கள் வேட்டையை!

    ReplyDelete
  4. புதுமையான தொடர்..இந்த உலகத்துக்கு இன்னும் தெளிவா பல விசயங்கள் சொல்ல நினைக்கும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. பாராட்டுகள் செங்கோவி..... விவாதம் பல அருமையான கருத்துகளை உங்களுக்கே உரிய பாணியில் கொண்டு வருது......!

    ReplyDelete
  6. மிகவும் அருமை நண்பரே.சமயம் கிடைக்கும் போது நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க நண்பரே..http://dohatalkies.blogspot.com/2012/07/schindlers-list_1072.html

    ReplyDelete
  7. மறுபடியும் விடுமுறையா? ஆகஸ்ட் 15 வரை பொறுத்துக்கறோம்...

    ReplyDelete
  8. காலை வணக்கம்,செங்கோவி!விடுமுறை கழித்து ஊர்?!திரும்பி விட்டேன்.நீங்கள் விடுமுறையில் இருப்பது தெரிகிறது.விடுமுறை நலமே கழிய பிள்ளையார் துணை வேண்டி...........................மீண்டும் சந்திக்கலாம்.உடல் அசதி அதிகம்.பார்க்கலாம்...........

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.