Sunday, July 8, 2012

முருக வேட்டை_19

ஆறிரு தடந்தோள் வாழ்க! அற்முகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க! குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன்னணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீ ரடியாயெல்லாம்.
-- கந்தபுராணம்

”அப்போ கடவுள் இல்லேன்னும் எதை வச்சுச் சொல்றீங்க.’இருக்கலாம்..இன்னும் தெரியலை”-ங்கிரது தானே சரியான பதிலா இருக்க முடியும்? மத்தவங்க முன்னாடி தன்னை புத்திசாலின்னு காட்டிக்கறதுக்காக நாத்திகவாதியா இருக்காதீங்க..மத்தவங்களை இன்சல்ட் பண்றது மட்டுமே நாத்திகவாதி வேலைன்னு நினைக்காதீங்க. உண்மையில் ஆன்மீகவாதியை விடவும் அதிக தேடலோட இருக்க வேண்டியன் நாத்திகவாதி”

கவிதா இவ்வளவு பேசுவாளா என்று ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக ஏதாவது நாத்திகக் கருத்து சொன்னால், சிறு புன்னகையுடன் நிறுத்திக்கொள்வான். அப்போதெல்லாம் பதில் சொல்லத் தெரியாமல் தான் அமைதியாக இருக்கிறாள் என்று நினைத்துகொள்வான். இப்போது இவள் பேசுவதைப் பார்த்தால், ‘அட..மடையா’ என்று நினைத்துத் தான் புன்னகை செய்தாளோ என்று தோன்றியது.

“அச்சு, மக்கள் கடவுள் நம்பிக்கையோட இருக்கிறதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை..முன்னாடி தமிழர்கள் தங்களுக்குன்னு தனி நாகரீகத்தோட, தனக்குன்னு தனி அடையாளத்தோட இருந்தவங்க தானே..ஆனால் ஆரியர்கள் வரவுக்கு அப்புறம் தான் தமிழன் தன் சொந்த அடையாளங்களை இழந்துட்டான், இல்லியா? தமிழ்க்கடவுள்கள்கூட ஆரியக்கடவுளா மாறிட்டாங்க இல்லியா?”

“உங்களுக்கு என்ன தாங்க பிரச்சினை? ஒரு நேரம் முருகன் மார்ஸோட காப்பின்னு சொல்றீங்க..ஒரு நேரம் அது தமிழ்க்கடவுள் தான்..ஆனால் ஆரியர் வந்து கெடுத்திட்டாங்கன்னு சொல்றீங்க..உங்களுக்கு உண்மையில் என்ன வேணும்?”

“தமிழர்கள் தங்கள் சுய அடையாளத்தோட வாழணும்..கடவுளை நம்புறதா இருந்தாலும் தமிழ்க்கடவுளையே நம்பணும்..வேறு ஆரியக்கடவுள்களை நம்பக்கூடாது..”

கவிதா இடைமறித்து “ஆரியக்கடவுளை மட்டுமா? அல்லது வெறு எந்த வெளிநாட்டுக் கடவுளையுமா?” என்றாள்.

சரவணன் திகைத்தான்.

“ஏன் யோசிக்கிறீங்க..அதையெல்லாம் மேடையில யாரும் சொல்லலியா?”

“மக்களை ஜாதியின் பேரில் இழிவு படுத்தாத எந்தக் கடவுளையும் அவங்க பின்பற்றலாம்”

“ஓ..கிரேட்..நல்ல விஷயம் தான்..என்னோட சின்ன அறிவுக்கு எட்டுனவரைக்கும் ஜாதி இல்லாத மதம் இல்லை..என்ன ஒன்னு, இந்து மதத்துல ஜாதிக்கு மதரீதியான பாதுகாப்பு இருந்தது. இப்போ சமூக மாற்றத்தால மதம் ஜாதிக்கு கொடுத்த ஆதரவை கொஞ்சம் கொஞ்சமா வாபஸ் வாங்கிக்கிட்டு இருக்கு”

“அந்த மாற்றம் எப்படி வந்துச்சு?” என்றான் சரவணன் பெருமிதத்துடன்.

“நிச்சயமா தந்தை பெரியாரும் ஒரு காரணம் தான்..தொடர்ந்து வந்த முதலாளித்துவமும் நகரமயமாக்கலும் இன்னிக்கு ஜாதியை பலவீனப்படுத்தியிருக்கு”

சரவணன் சந்தோசத்துடன் “அப்பாடி..இதையாவது ஒத்துக்கிட்டியே” என்றான்.

”சமூக விடுதலையில உங்க பங்கை யாரும் மறுக்க முடியாது. ஆனால் ஒரு விஷயத்தை விமர்சிக்கிறோம்னா அது என்ன ஏதுன்னு தெரிஞ்சுக்காம, சும்மா அரைகுறையா அடிச்சுவிடறது தான் எரிச்சலா இருக்கு”

“என்ன அரைகுறையா?”

“இந்து மதத்தை விமர்சிக்கிறீங்கன்னா, அது பத்தின பேசிக் நாலேட்ஜாவது வேணாமா உங்களுக்கு?...ஆதிசங்கரர் காலம்வரை இந்து மதம் ஆறு பெரும் மதங்களா இருந்து வந்தது தெரியுமா, உங்களுக்கு?”

“கேள்விப்பட்டிருக்கேன்”

“அப்போ அந்த ஆறும் என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்?”

“சைவம், வைணவம் தெரியும்..முருகனுக்குன்னு நீ ஏதோ சொன்னியே..கௌபீனமா?”

“அது கோமணம்..நான் சொன்னது கௌமாரம்..இந்தியாவில் ஆதியில் ஆறு பெரிய மதங்கள் தான் இருந்துச்சு.

சிவனையே கும்பிட்ட சைவம்
விஷ்ணுவை வணங்கிய வைணவம்
முருகரை வணங்கிய கௌமாரம்
விநாயகரை மட்டுமே வணங்கிய கணாபாத்யம்
சக்தியை வழிபட்ட சாக்தம்
சூரியன், அக்னியை வழிபட்ட சௌரம்.

இது தவிர நம் பழங்குடிக் குழுக்கள்கிட்ட வள்ளி, அய்யனார் போன்ற சிறுசிறு தெய்வ வழிபாடுகளும் இருந்துச்சு. ஆதிசங்கரர் தான் இது எல்லாத்தையும் ஒன்னாச் சேர்த்து இந்துமதம்-ன்னு ஒன்னை உண்டாக்கினார். அதனால தான் சொல்றோம், இந்து மதம்ங்கிற இந்த இந்திய மண்ணில் புழங்கிய அனைத்துவகை ஞானங்களின் தொகுப்புன்னு!” என்று பெருமிதத்துடன் சொன்னாள் கவிதா.

அதற்குப் பதிலாக சரவணன் “அதையே தான் நாங்களும் சொல்றோம்..ஆரியம் பசப்பு வார்த்தைகளால் இந்த மக்களின் மதங்களை கபளீகரம் செஞ்சு இந்து மதம்னு பேர் கொடுத்து, நம்மை அடிமையாக்கிடுச்சுன்னு! உங்க முருகரோட கௌமாரத்தோட பேராவது இந்தத் தலைமுறைக்குத் தெரியுமா? முருகரை மட்டுமே கடவுள்னு கும்பிட்ட மக்களை குழப்பி, ஆயிரக்கணக்குல கடவுளை மக்கள் தலையில கட்டுனது புத்திசாலித்தனமா? ஒரே கடவுள்..அது முருகன் தான்னு நிம்மதியா இருந்த மக்களை குழப்ப வேண்டிய அவசியம் என்ன? மக்களின், குறிப்பா தமிழர்களின் தனித்தன்மையை ஏன் கெடுக்கணும்? இப்போ என்ன ஆச்சு? இந்துங்கிறவன் யாரு? அவனுக்கு என்ன தனித்தன்மை இருக்கு? சொரணை கெட்ட, எந்தவித தனியான அடையாளமும் இல்லாத, கூட்டமாத் தானே ஆகியிருக்கீங்க? இந்துக்குன்னு ஏதாவது கடமைகள்னு சொல்லப்பட்டிருக்கா? ஆளுக்கு ஒன்னை எழுதி வச்சிட்டுப் போயிருக்கான்..இது தான், இப்படித் தான்னு தெளிவா ஏதாவது இருக்கா?..நத்திங்..” என்று ஆவேசத்துடன் பதில் சொன்னான்.


(தொடரும்)மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 comments:

  1. இரவு வணக்கம்,செங்கோவி!விவாதம் சூடு பிடிக்கிறது.பல விடயங்கள்,இந்துவாக இருந்தும் தெரிந்து கொண்டிருக்கவில்லையே என்று வெட்கப்படுகிறேன்!

    ReplyDelete
  2. ஏகப்பட்ட விஷயம் படிச்சிருக்கீங்களே .... intersting

    ReplyDelete
  3. நிறைய விவாதங்கள் தொடர்கின்றது மதம் என்றால் எல்லாம் சேர்ந்ததுதானே !ம்ம் தொடரட்டும் !

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.