Monday, November 19, 2012

கெட்டவங்க நல்லா இருக்காங்களா?

உப தலைப்பு : உப்பைத் தின்றோர் கதைகள்

சமூகத்தில் நல்லவர்களின் வாழ்க்கையையும் கெட்டவர்களின் வாழ்க்கையையும் பொதுவாகப் பார்க்கும்போது நமக்கு அயற்சியே மிஞ்சும். கெட்டவர்கள் வசதியாக, சந்தோசமாக வாழ்வதாகவும், நல்லோர் மட்டுமே கஷ்டப்படுவதாகவுமே தெரிகிறது. 

ஆண்டவன் நல்லவர்களை மட்டுமே சோதிப்பது ஏன் என்ற புலம்பலுடனே, நாம் நம் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் கடவுள் இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்தை இயக்கும்முறை, கொஞ்சம் வித்தியாசமானதாகவே உள்ளது. மேலோட்டமாக தவறு செய்தோருக்கு தண்டனை கிடைப்பதில்லை என்று நினைத்தாலும், உண்மை வேறுவிதமாகவே உள்ளது. இதை நான் அனுபவப்பூர்வமகவே உணர்ந்திருக்கிறேன்.

அந்த அனுபவத்தை கொஞ்சம் கொஞ்சமாக உங்களிடன் பகிர விரும்புகிறேன். இதற்கு உப தலைப்பாக ‘உப்பைத் தின்றோர் கதைகள்’ என்றும் வைத்துக்கொள்வோம். வழக்கம்போல் இதில் வரும் பெயர்கள், இடங்கள் மட்டும் கற்பனையே. வாருங்கள், சில வாழ்க்கையைப் பார்ப்போம்.


“எனக்கு இப்போ கல்யாணம் பண்ணி வைக்கப் போறீகளா, இல்லியா?” என்று மாடசாமி கேட்டபோது வீடே அதிர்ச்சியில் உறைந்தது.

அடுக்களையில் இருந்த மாடசாமியின் ஆத்தா “ஏலே, உனக்கு கிறுக்கு ஏதாவது பிடிச்சிருக்கா?” என்று கேட்டபடியே பாய்ந்து வந்தார்.

“ஏன்? நான் கேட்டதுல என்ன தப்பு?” என்று விறைத்தபடியே நின்று கேட்டான் மகன்.

“உன்னைவிட நாலு வருசம் மூத்தவ இன்னும் கல்யாணம் ஆகாம இருக்கும்போது, உனக்கு எப்படிலே கல்யாணம் பண்ணி வைக்கிறது?”

“ஆமா..அவளுக்கு எப்போ கல்யாணம் ஆக, நான் எப்போ கல்யாணம் முடிக்க!”

மாடசாமியின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள், அவனது கல்யாணமாகாத அக்கா லட்சுமியின் மனதை குத்திக்கிழித்தது. நான்கு வயது மூத்தவளாக இருந்தும் லட்சுமியின் கல்யாணம்

தடைபட்டதற்குக் காரணம்,அவளுக்கு இருந்த டி.பி. எனும் காச நோய் தான்.

மாடசாமியின் ஐயா வாய் திறந்தார். “மூத்தவ இருக்கும்போது உனக்கு கல்யாணம் முடிச்சா, அப்புறம் அவளை கரையேத்த முடியாதேப்பா? இன்னும் கொஞ்சநாள் பொறு. அவளுக்கு

ரெண்டு வருசமா வைத்தியம் பார்த்துக்கிட்டுத்தானே இருக்கிறோம்?”

“இப்போ சரியானாலும் யாரு இவளைக் கட்டுவா? சொந்தக்காரங்க எல்லாருக்கும் விஷயம் தெரியுமா? நான் ஒன்னே ஒன்னு கேட்கிறேன்..இப்போ நீங்களா பொண்ணு பார்த்துக் கல்யாணம்

பண்ணி வைக்கிறீகளா, இல்லே நானே எவளையாவது இழுத்துக்கிட்டு வரவா?”

அதற்குப் பின் அவனிடம் பேச ஏதுமில்லை. வீடு மௌனமாய் அழுதபடியே அவனுக்கு கல்யாணம் செய்து வைக்கும் வேலையில் இறங்கியது. சீக்கிரமாக அவனுக்கு பெண் பார்த்து

கல்யாணம் செய்துவைத்தார்கள்.

கல்யாண வாழ்க்கை நன்றாகவே சென்றது. அதற்கு அடையாளமாய் இரண்டு குழந்தைகள் வேறு. அவ்வப்போது வருகின்ற காய்ச்சல்-சளி-இருமலைத் தவிர வேறு பிரச்சினை இல்லை.

அக்காவிற்கும் அதே நேரம் காசநோய் மட்டுப்பட்டது. அனைவரும் சந்தோசமாய் அக்காவிற்கான கல்யாண வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தபோது, தம்பி கல்யாணம் முடித்தது பற்றிய

கேள்விகளை எப்படி எதிர்கொள்வது என வீடு திகைத்தது.அந்நியத்திலேயே மாப்பிள்ளை பார்த்ததால், அவர்கள் முழு விவரம் தெரியாமல் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல

முடியவில்லை.

பின்னர் பெரியவர்கள் கூடிப் பேசி, தம்பியை கூடப்பிறந்தவன் என்று பொதுவாகவும் ரொம்பக் கேட்டால் அண்ணன் என்றே அறிமுகப்படுத்துவது என்று முடிவு செய்தார்கள். நல்ல ஒரு

வரனும் கூடிவர, கல்யாணம் நல்லபடியாக முடிந்தது. அக்காவும் அதன்பின் காசநோயின் அறிகுறியே இல்லாமல், நல்லபடியாக வாழ ஆரம்பித்தார்.


அதன்பின் அடுத்த இரண்டு வருடங்களில் அக்கா, நல்லதொரு குழந்தையைப் பெற்றெடுக்க அனைவரும் இனி அவள்பாடு பிரச்சினை இல்லை என்று நிம்மதி ஆனார்கள்.

தம்பிக்குத் தான் அடிக்கடி சளியும் இருமலுமாய் வர ஆரம்பித்தது.கூடவே குடும்பத்தில் மனைவியுடன் பிரச்சினை வர, மாமியாரிடம் அடிவாங்கும் அவலமும் நடந்தது. ஒரு கட்டத்தில்

உடல்நிலை ரொம்பப் படுத்தியெடுக்க, மருத்துவரிடம் சென்றபோது தான் தெரிந்தது தம்பிக்கு காச நோய் என்று!

மெதுவாக காசநோய் தம்பியின் உடலை உருக்க ஆரம்பித்தது. அக்காவின் வாழ்க்கை வளமாக ஆகிக்கொண்டிருந்த அதே வேலையில் தம்பியின் வாழ்க்கையும் உடல்நிலையும் மோசமாகிக்

கொண்டே வந்தது. அடுத்த இரண்டு வருடங்களில் தம்பி காலமானார்.வாலிப வயது-முறுக்கேறிய உடல்-திமிர்த்தனமான பேச்சு எல்லாம் அர்த்தமிழந்து போக, தம்பி அடக்கமானார்.


இந்த மாதிரி பல சம்பவங்களைப் பல வருடங்களாக உற்றுக்கவனித்தபின், நாம் செய்யும் செயல்களுக்கான பலன்கள் காலம் கடந்தேனும் மெல்ல மெல்ல நம்மை வந்தடைகின்றன. அவை

நல்ல செயல்களாய் இருந்தால் நன்மையாகவும், தீய செயல்களாக இருந்தால் தீமையாகவும் இறைவன் நமக்கு திருப்பிச் செலுத்துகிறான். இது ஏதோ ஓரிடத்தில் அத்திப்பூத்தாற்போன்று

நடந்த சம்பவமாய்த் தெரியலாம். ஆனால் இது போன்ற பல சம்பவங்களை என் வாழ்விலும் உற்றார் வாழ்விலும் கண்டுவிட்டே இதைச் சொல்கிறேன்.

அந்த சம்பவங்களை இன்னும் சொல்வேன்.

(தொடரும்)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 comments:

  1. அவரவர் அனுபவங்கள் மூலம் ஒரு நாள் உணர்வார்கள் என்பதையே உங்களின் சம்பவமும் சொல்கிறது...

    ReplyDelete
  2. பலருக்கு படிப்பினையாக அமையும் கதைகள் தொடருங்கள் பாஸ்

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா இந்த காசநோய் பற்றித்தான் என் நண்பருடன் இப்போது ரயிலில் பேசிக்கொண்டு வரும் போதே அது பற்றிய பதிவு ஆஹா உண்மைதான் இதன் தாக்கம் அதிகம் நானும் நேரில் பார்த்து இருக்கின்றேன் தொடருங்கள் சுவையாக படிக்க காத்து இருக்கின்றேன்!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.