இப்போதெல்லாம் யாராவது என்னிடம் ஏதாவது ஒரு விஷயம் பற்றி சீரியசாகப் பேசும்போது, அதற்குச் சம்பந்தமேயில்லாத வேறொரு விஷயத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிடுகிறேன். (குறிப்பாக திருமணத்திற்குப் பின் தான் இந்த நிலை என்று சொல்லலாம்!)
சென்றவாரம் எங்கள் ஊரில் ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்துவரும் ஒரு அண்ணனிடம் போஃனில் பேசிக்கொண்டிருந்தேன். 'இப்போதெல்லாம் 30 லட்சரூபாய்க்கு மேற்பட்ட வீடுகள் விலை போவதில்லை' என்றும் ' சிறுபட்ஜெட் வீடுகளையே மக்கள் விரும்பி வாங்குவதால், அத்தகைய வீடுகளையே கட்டி, விற்றுக்கொண்டிருப்பதாகவும்' சொன்னார். நான் பதிலுக்கு 'அது சரி தான்ணே, கஸ்டமர் என்ன விரும்புறாங்களோ அதைக் கொடுப்பது தானே முறை' என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே தேவையேயில்லாமல் தமிழ்சினிமா ஞாபகம் வந்து தொலைத்தது.
தமிழ் சினிமாவும் ரியல் எஸ்டேட் போன்றே கோடிகளில் புரளும் ஒரு தொழில். ரியஸ் எஸ்டேட்டில் தோல்வி என்றால் நிலமாவது மிஞ்சும். ஆனால் தமிழ் சினிமாவில் தோல்வி என்றால் மிஞ்சுவது பிலிம் சுருள் தான். (டிஜிட்டல் உலகில் அதுவும் மிஞ்சாது என்றே நினைக்கிறேன்.).
அத்தகைய ரிஸ்க் நிறைந்த தமிழ் சினிமாவில் எடுக்கப்படும் படங்கள், கஸ்டமர்களான நம்மை திருப்திபடுத்தும்படியாக எடுக்கப்படுகின்றனவா என்று பார்த்தால், அதிர்ச்சியே மிஞ்சுகிறது.
பஞ்ச் டயலாக் பேசும் ஹீரோக்கள், 50 பேர் சேர்ந்தும் ஹீரோவை அடிக்க முடியாது அடிவாங்கி பறந்து போய் விழும் அடியாள்கள், கேண ஹீரோயின்கள் என்று நம்மால் ஒதுக்கித்தள்ளப்பட்ட விஷயங்களிலேயே இன்னும் தமிழ்சினிமா உழல்வதைப் பார்க்கையில் ஆச்சரியமே மிஞ்சுகிறது.
சென்ற வருட ஹிட் படங்களை மூன்று வகைக்குள் அடக்கலாம்:
துப்பாக்கி -சுந்தரபாண்டியன் (ஹீரோயிசம்)
ஓகேஓகே-கலகலப்பு-நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் (காமெடி)
பீட்சா / கும்கி (வித்தியாச கதைக்களன்)
தமிழ் சினிமா விமர்சகர்களிடையே உள்ள தவறான ஒரு புரிதல், ஹீரோயிசப் படங்கள் இனி வெற்றியடையாது என்பது. ஆனால் உண்மை வேறுவிதமாகவே உள்ளது. சென்ற வருட துப்பாக்கியும் சரி, சுந்தர பாண்டியனும் சரி ஹீரோயிசத்தை அடிப்படையாகக் கொண்டவையே.
இந்த ஹீரோயிசப் படங்களின் வெற்றிக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது 'கேரக்டர் ஐடென்டிபிஃகேசன்' எனப்படும் கதாபாத்திரங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்ளல்'' ஆகும். அதாவது அந்த ஹீரோ கேரக்டருடனேயே சாமானிய ரசிகன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளுதல். பெருவாரியான மக்களின் ரசனையைத் தீர்மானிப்பது இந்தக் காரணியே. சாமானிய ரசிகனால் ஒரு ஹீரோயிசப் படத்தின் ஹீரோவுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முடியாவிட்டால் 'யார் வீட்டு எழவோ' என்ற பாணியில் தான் தியேட்டரில் உட்கார்ந்திருப்பான். வெளியில் வந்ததும் அவன் சொல்லும் வார்த்தையும் 'கொன்னுட்டாங்கடா மச்சான்' என்பதாகவே இருக்கும்.
ஹீரோயிசப் படங்களின் காலம் அவ்வளவு தான் என்று பலவருடமாக சொல்லப்பட்டு வந்தாலும் எம்ஜிஆர்-ரஜினி காலம் கடந்து விஜய்-அஜித் காலம் தாண்டியும் அத்தகைய படங்களின் வரவு தொடர்வது அதனாலேயே.
உதாரணமாக, சுந்தரபாண்டியன் படம் என்னை எவ்விதத்திலும் கவரவில்லை என்பதே உண்மை. அது பழைய சசி படங்களின் கலவையாகவே எனக்குத் தோன்றியது. ஆனால் என் கிராமத்து நண்பர்களிடம் பேசியபோது, அவர்கள் சுந்தர பாண்டியனை தங்களுக்கு நெருக்கமானவாக உணர்ந்திருப்பதைப் புரிந்துகொண்டேன்.
சென்ற வருட சூப்பர் ஹிட் படமாக துப்பாக்கியும், அதற்கு முந்தைய வருட சூப்பர் ஹிட் படமாக சிறுத்தையும் இருப்பதன் காரணம் அதுவே. மொத்தத்தில் அதிக லாஜிக் மீறல் இல்லாத, விறுவிறுப்பான திரைக்கதையால் பின்னப்பட்ட ஹீரோயிசப் படங்களுக்கு என்றும் நம் மக்களிடையே வரவேற்பு இருக்கும்.
ஹீரோயிசப் படங்களுக்கு அடுத்தபடியாக மக்களின் வரவேற்பைப் பெறுபவை காமெடிப் படங்கள் தான். ஆனால் ஒரு படம் முழுக்க காமெடியாக எடுப்பது அதிக ரிஸ்க் நிறைந்த விஷயம். ஏனென்றால் 75% காமெடிப் படங்கள், எடுத்து முடிக்கப்படும்போது மொக்கைப்படங்களாக ஆகும் வாய்ப்ப்பே அதிகம். (சமீபகாலத்தில் சுந்தர்.சி ஒருவர் தான் துணிந்து காமெடிப்படங்களை எடுக்கிறார்.)
வித்தியாசமான கதைக்களன் கொண்ட படங்களுக்கு அறிவுஜீவிகள் வட்டத்திலும், ப்ளாக்கர்கள் மத்தியிலும்(இரண்டும் ஒன்றல்ல!!) அமோக வரவேற்பு எப்போதும் உண்டு. ஆனால் அதை மட்டுமே வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்பதே சோகம். உதாரணமாக ஆரண்ய காண்டத்தைச் சொல்லலாம்.
ஆனால் சமீபகாலமாக இதிலும் நல்ல மாறுதல் தெரிகின்றது. அளவான பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் வித்தியாசமான படங்கள் ஓரளவு வரவேற்புப் பெற்றாலே லாபமீட்டிவிடுகின்றன. உதாரணம் பீட்சா மற்றும் நடுவுல.....(ஆரண்ய காண்டத்தின் பிரச்சினை 4 கோடிக்கு மேல் நீண்ட அதன் பட்ஜெட் தான்!).
எனவே ஒப்பீட்டளவில் ரிஸ்க் குறைந்தவையாக ஹீரோயிசப் படங்களும், அதற்கடுத்து காமெடிப்படங்களும் இருந்த சூழ்நிலையில், டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியால் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கபடும் வித்தியாசமான படங்களும் மினிமம் கேரண்டி படங்களாக மாறி வருவது வரவேற்கத்தக்க விஷயம்.
வெற்றிப்படங்களை அலசும் அதே நேரத்தில் தோல்விப்படங்களையும் தோல்வியின் காரணிகளையும் நாம் கணக்கில் கொள்வது அவசியமாகிறது. சென்ற வருட தோல்விப்படங்களில் முக்கியமானவையாக பில்லா-2, மாற்றான், சகுனி போன்ற பெரிய பட்ஜெட் படங்களைக் குறிப்பிடலாம்.
இந்த படங்களின் தோல்விக்கு முக்கியக்காரணம், அவை ஹீரோவை மட்டுமே திருப்திப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது தான். அதுவும் பில்லா-2 திரைப்படமானது கேரக்டர் ஐடென்டிபிகேசனுக்கு கொஞ்சமும் இடமில்லாததாக, வித்தியாச கதைக்களனிலும் சேர்க்க முடியாததாக உருவாக்கப்பட்டிருந்தது. மாற்றானும், சகுனியும் ஓவர் கான்பிஃடென்ஸில் பஞ்சர் ஆன படங்கள்.
கடந்த சில வருடங்களாகவே ஓவர் ஹீரோயிசப் படங்கள் மண்ணைக் கவ்வுவதும், மினிமம் பட்ஜெட்டில் தயாரான மைனா போன்ற படங்கள் வெற்றிபெறுவதையும் சினிமாக்காரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். சுறா, வில்லு போன்ற படங்களின் கதியைப் பார்த்தபின்னும் அலெக்ஸ்பாண்டியன்கள் உருவாவது எப்படி என்றே நமக்குப் புரியவில்லை.
மொத்தத்தில் ரசிகர்களாக நாம் எதிர்பார்ப்பது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த அல்லது வித்தியாசக் கதைக்களனைக் கொண்ட படங்களையே.
தமிழ் சினிமா உலகும் ஹீரோக்களின் திருப்திக்காக படம் பண்ணுவதை விடுத்து, நம்மை திருப்திப்படுத்த படம் எடுத்தால் அது இருதரப்புக்குமே நன்மையாக முடியும்
19 comments:
Post a Comment
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.