Monday, March 4, 2013

பழிக்குப் பழியும் குரு-மலையாளத் திரைப்படமும்_2


குரு திரைப்படம் குறியீடுகளால் நிரம்பியது. மேல்மட்டத்தில் வழக்கமான சினிமாக்களமாகவும், உள்மட்டத்தில் சிம்பலிக்காக வேறொன்றைக் குறிக்கும் விதமாகவே இந்தப் படத்தின் திரைக்கதையானது சி.ஜி.ராஜேந்திர பாபுவால் உருவாக்கப்பட்டுள்ளது.

குரு திரைப்படத்தின் கதைக்களனாக ஒரு இந்தியக் கிராமம் காட்டப்படுகிறது. இந்துக்களும், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இணைந்து வாழ்கின்ற அமைதியான கிராமம் அது. ஆரம்பத்தில் காட்டப்படும் பஞ்சாயத்துக்காட்சியிலேயே அந்த கிராம மக்கள் மத வேறுபாடின்றி இணைந்து வாழ்வதாகவும், அதே நேரத்தில் அவரவர் மதநம்பிக்கைகளில் உறுதியாக உள்ளவர்களாகவும் நமக்கு உணர்த்தப்படுகிறது.

அந்த ஊரில் உள்ள ஒரு பெரிய கோவிலில் அர்ச்சகராகப் பணிபுரியும் சாருஹாசன், ஆச்சாரப்பிடிப்பு உள்ளவர். அவரது ஒரு மகனோ மனநிலை தவறியவர். இன்னொரு மகனே, மோகன்லால்.

குடும்பச் சூழ்நிலையிலேயே ஆன்மீகத்திற்கும்  வாழ்க்கைத் தளத்திற்குமான முரண்பாடு யதார்த்தமாக உணர்த்தப்படுகிறது. ஆச்சாரமான, இறைத்தொழிலிலேயே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தந்தைக்கு, மனநிலை தவறிய ஒரு மகன். கதாநாயகன் ரகுராமனுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் போக, இதுவே போதுமானது. சாஸ்திரிகள் அவனிடம் ஆன்மீக வாழ்வு பற்றி போதிக்க முற்படுகையில், தனது சகோதரனைக்காட்டி ஆன்மீகத்தில் உள்ள அபத்தத்தை சுட்டுகிறான் ரகுராமன். இந்தக் காட்சியானது தவ்ஸ்தாவெஸ்கியின் காரமசோவ் சகோதரர்கள் எழுப்பிய விவாதத்தை ஒரு நிமிடத்தில் தொட்டுச் செல்கிறது.
குடிப்பது, கேரளாவிற்கு வரும் வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு கைடாக இருப்பது, பொலிடிக்கல் சைன்ஸ் படித்ததால் இருக்கும் அரசியல் தெளிவு, கடவுள் நம்பிக்கையற்றவன் என்று ஒரு சராசரி இளைஞனாக, திரைக்கதையின் பின்பகுதியில் நடக்கப்போகும் அற்புதச்சம்பவங்களை உணரும் ஆற்றல் பெற்றவனாக, ரகுராமன் நம் மனதில் ஆரம்பக் காட்சிகளிலேயே பதிய வைக்கப்படுகிறான்.

சாஸ்திரிகளின் நெருங்கிய குடும்ப நண்பர் அப்துல்லா சாஹிப். ரகுராமனுக்கு ஒரு திருமணம் செய்துவைத்துவிட்டால், அவன் பொறுப்புள்ள மனிதனாக ஆகிவிடுவான் என்று நம்புகிறார். ரகுராமன் மேல் ஆசையுள்ள அவனின் முறைப்பெண்ணையே பேசி முடிக்கிறார்.

அந்தச் சூழ்நிலையில் நடக்கும் ஒரு சம்பவம் மதப்பிரச்சினைக்கு வித்திடுகிறது. சாஹிப் புதிதாக வாங்கிய ஒரு குல்லாவை, பள்ளிக்குச் செல்லும் தன் குழந்தைக்கு கொடுத்தனுப்புகிறார். அதை அந்தக் குழந்தையின் நெருங்கிய நண்பனான மற்றொரு இந்துக்குழந்தை கேட்க, சாஹிப்பின் மகன் கொடுக்கின்றான். அந்தக் குல்லாவுடன், வழியில் இருக்கும் கோவிலுக்குள் நுழைந்து அந்த இந்துப் பையன் சாமி கும்பிட்டுவிட்டு வெளியேற, அதைப் பார்த்த சாஸ்திரிகளும் ஏனையோரும் கோவில் தீட்டுப்பட்டுவிட்டதாக பதறுகிறார்கள்.
அதற்காக கூட்டப்படும் பஞ்சாயத்தில் 'குழந்தைகளும் தெய்வம் தானே?' என்று ரகுராமன் வைக்கும் வாதங்கள் அனைத்தும் புறந்தள்ளப்படுகிறது. அந்த சமயத்தில் பிரச்சினையின் உள்ளே புகும் அரசியல்வாதிகள், மெஜாரிட்டிகளான இந்து ஓட்டுக்களை நோக்கமாக வைத்து, மதக்கலவரத்தைச் செய்கிறார்கள். இந்துக்களும், இஸ்லாமியர்களும் கொல்லப்படுகின்றனர். ரகுராமனின் மொத்தக்குடும்பமும் கொல்லப்பட, அவன் தீவிரவாதியாக உருவெடுக்கிறான். பழிக்குப்பழி வாங்கத் துடிக்கிறான்.

இங்கே கதாசிரியர் செய்யும் நுணுக்கமான வேலைகள் கவனிக்கத்தக்கது. உண்மையான உலகில் கலவரத்தை ஏற்படுத்தும் மனிதர்கள் குழந்தைகள் அல்ல. ஆனாலும் அறிவின் அடிப்படையில், அறியாமையில் அடிப்படையில் அவர்கள் குழந்தைகளே. மேலும், படத்தில் வரும் அரசியல்வாதி பாத்திரமானது ஒட்டுமொத்த இந்திய அரசியலைக் குறிப்பதாக உள்ளது.

குடும்பத்தை இழந்த வெறுப்பில், ரகுராமன் இந்துத்வா பிடியில் சிக்குகிறான். நாம் முந்தைய பதிவில் பார்த்தபடி, 'நம் மக்களுக்குப் பாதுகாப்பில்லை. நாம் இரண்டாம்தரக் குடிமக்களாய் ஆகிவிட்டோம்' போன்ற வழக்கமான பிரச்சாரங்களின் அடிப்படையில் ரகுராமன் வெறுப்புக்குள் சிக்குகிறான். பழிக்குப் பழி வாங்க முடிவெடுக்கிறான்.

நவீன உலகில், ஜனநாயகம் முன்னிறுத்தப்படும் சூழலில் பழிக்குப் பழி என்பது காலாவதியாகிவிட்ட கொள்கை. அதனால் விளையும் நன்மை என்று இருதரப்புக்குமே ஏதுமில்லை என்பதை உணர்ந்து உலகமே ஒதுக்கிவிட்ட கொள்கை அது. ஏனென்றால், பழிக்குப் பழி என்பது முடிவற்ற அழிவுப்பயணம். பாபர் மசூதி இடிப்புக்கு பழிவாங்கலாக கோத்ரா ரயில் எரிப்பு, கோத்ராக்கு பழிவாங்கலாக குஜராத் கலவரங்கள் என அழிவானது பல மடங்காக ஆகுமேயொழிய, மனிதகுலத்துக்கு அதனால் நன்மையேதும் கிடையாது.

'பாபர் மசூதி இடிப்புக்கும் கோவை காவலர் கொலைக் கலவரத்திற்கும் பழிவாங்கலாக கோவை குண்டுவெடிப்பு' எனும்போது, கோவை குண்டுவெடிப்புக்கு எதிராக இன்னொரு குண்டுவெடிப்பு, அதற்கு எதிராக இன்னொரு குண்டுவெடிப்பு என்று போனால், அழிவு மட்டுமே மிஞ்சும். 'கண்ணுக்குக் கண் என்று போனால் உலகமே குருடாகிவிடும்' என்று சான்றோர் எச்சரிப்பது அதனால் தான்.

மேலும், பழிக்குப் பழி என்பது ஒரு அபத்தமான வழிமுறை. எனென்றால் பெரும்பாலான குற்றங்களில் குற்றவாளி யார் என்பது உடனே நமக்குத் தெரிவதில்லை. சில நேரங்களில் குற்றவாளிகள் கண்டுகொள்ளப்பட்டாலும், குற்றம் செய்யக் காரணமானவர் யாரென்றே நமக்குப் புரிவதில்லை.கோபத்தின் உச்சியில், தவறுதலாக சாமானியமக்களே தண்டிக்கப்படுகிறார்கள்.

மேலும், பழிக்குப் பழியில் ஒரு அடிப்படையான தவறு உண்டு. ஒரு குற்றம் நடைபெறும்போது பாதிக்கப்பட்டவன் - பாதிப்பை ஏற்படுத்தியவன் என்று இரு தரப்பு ஏற்படுகிறது. பழிக்குப் பழியின் நம்பிக்கை என்னவென்றால் பாதிக்கப்பட்டவன் குற்றத்திற்கு எவ்வகையிலும் பொறுப்பானவன் அல்ல என்பது தான். ஆனால் உண்மை வேறு மாதிரி.
எனக்குத் தெரிந்து நடந்த ஒரு சம்வத்தை எடுத்துக்கொள்வோம். ஒரு ஏழைக்குடும்பம் தன் வீட்டுப் பெண்பிள்ளையை படிக்க வைக்க முடியாமல் கஷ்டப்பட்டது. அதே நேரத்தில் ஒரு படிப்பறிவற்ற இளைஞன், அந்தப் பெண்ணைப் படிக்க வைக்க முன்வந்தான். குடும்பத்தின் செலவுகளையும் பார்த்துக்கொண்டான், ஒரே ஒரு எதிர்பார்ப்பின் அடிப்படையில். அந்தப் பெண்ணை அவன் காதலித்தான். அவளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆவலிலேயே இந்த உதவிகளைச் செய்தான். அந்த குடும்பமும் அதை உணர்ந்தே, உதவிகளை ஏற்றுக்கொண்டது.

ஆனால் அந்தப் பெண் படித்துமுடித்து வேலைக்குச் சென்றபின், அவளின் மனம் மாறியது. தன்னால் படிக்காத ஒருவனுடன் வாழ முடியாது எனும் யதார்த்ததிற்கு வந்தாள். அவனை உதறினாள். அந்த படிக்காத முட்டாள், அவளைக் கொலை செய்தான்.

இப்போது அவனைத் தூக்கில் போட வேண்டும் என்று அந்தப் பெண்ணின் குடும்பமும் சமூகமும் கோரியது. அது நியாயமான கோரிக்கை தான். சமூகத்தைப் பொறுத்தவரை அந்தக் குடும்பம் பெண்ணையை இழந்தவர், பாதிக்கப்பட்டவர். ஆனால் இந்தக் கொலையில் அவர்களுக்கு எந்தப் பங்குமே இல்லையா? அந்தப் பையனைத் தண்டிக்க சட்டத்திற்கு அதிகாரம் உண்டு. ஆனால் அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு அருகதை உண்டா?

இதுவே பழிக்குப் பழி வாங்குதலில் உள்ள சிக்கல். பாதிக்கப்பட்டவன் எப்போதுமே குற்றத்திற்கு அப்பாற்பட்டவன் இல்லை. அதனாலேயே தண்டனையைத் தீர்மானிப்பது பாதிக்கப்பட்டவனாக இருப்பது அபத்தமாக ஆகிவிடுகிறது.
கண்மூடித்தனமாக, வெறுப்பின் அடிப்படையில் பழிவாங்குதலில் இறங்கும்போது, மனிதமும் நியாயமும் செத்துவிடுகிறது. மதங்களும், சான்றோர்களும் வன்முறைக்கு, பழிவாங்கலுக்கு எதிராக இருப்பது அதனாலேயே!

ரகுராமனும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் அடைக்கலமாகியிருக்கும் ஒரு இந்து ஆஸ்ரமத்தை குண்டு வைத்துத் தகர்க்க ஆயத்தமாகிறான். அந்த முயற்சியில் தோல்வியடைந்து, அந்த ஆஸ்ரமவாசிகளாலேயே காப்பாற்றப்படுகிறான். ஆனாலும் உள்ளே இருந்துகொண்டே, பழிவாங்குவது எனும் முடிவுடன், தன் பெயர் அப்துல்லா என்று சொல்லி அங்கே தங்குகிறான். (அது அவன் பிரியத்திற்குரிய அப்துல்லா சாஹிப்பின் பெயர்!).

அடுத்த தாக்குதலுக்குத் தயாராகும்போது, அந்த ஆஸ்ரமத்தில் ஆன்மீக சக்தியாக இருக்கும் 'குரு'வால் ஒரு கனவுக்குள் மூழ்கடிக்கப்படுகிறான். அவன் காணும் கனவே இந்தப் படத்தை பேஃன்டஸி வகைப்படமாக ஆக்குகிறது. அதுவே இதுவரை வழக்கமான படமாகச் செல்லும் படத்தை, வேறொரு உயர்ந்த தளத்தில் பயணிக்கச் செய்கிறது.

அது என்ன கனவு?

(தொடரும்)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

4 comments:

  1. வணக்கம் செங்கோவி!///ஒரு திரைக் கதையுடன் ஒன்று கூட்டி பழிக்குப் 'பழி' தீர்வல்ல என்று விளக்கும் விதம் அருமை!

    ReplyDelete
  2. உண்மைதான் ஐயா பழிக்குப் பழி அழிவது சமூகம் தான் இந்தப்படம் தமிழில் மாற்றி எடுத்தார்களா நெப்போலியன் ஹீரோவாக நடித்த படமா என்று ஒரு சந்தேகம்!ம்ம்ம்

    ReplyDelete
  3. நிச்சயமாக ஆழமாக சிந்திக்கத் தூண்டுகின்றீர்கள். இப்படத்தைக் காண வேண்டும்.

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.