Saturday, March 9, 2013

மத குருட்டுத்தனமும் குரு-மலையாளப்படமும்_நிறைவுப் பகுதி

டிஸ்கி: இந்த அற்புதமான படத்தைப் பார்க்கும் ஆவல் உள்ளவர்கள், இந்தப் பதிவை படம் பார்க்குமுன் படிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். "குரு" படம் யூடியூப்பில் இந்த லின்க்கில் கிடைக்கிறது:

னிதன் முதன்முதலாக எப்போது கனவு காண ஆரம்பிக்கின்றான்? ஆட்களை அடையாளம் காணும் வயதிலா அல்லது வார்த்தைகளைக் கற்றுக்கொண்டு பேச ஆரம்பிக்கும் வயதிலா?

இல்லை. மனிதன் தாயின் கருவறையில் இருக்கும்போதே கனவு காண ஆரம்பித்துவிடுவதாக அறிவியல் சொல்கிறது. கனவு என்பது ஆழ்மன நினைவுகளின் நடனம் என்று சொல்லலாம். எனவே ஆழ்மனம் என்ற ஒன்று கருவிலேயே உருவாகியிருக்க வேண்டும். அந்தக் கனவு ஒருவேளை முந்தைய ஜென்ம நினைவுகளின் சலனமாகக்கூட இருக்கலாம்.


இந்த விஞ்ஞான யுகத்திலும் ஒரு ஆச்சரியமான விஷயமாக இருக்கும் கனவிற்குள் நம் கதாநாயகன் ரகுராமன் மூழ்கடிக்கப்படுகிறான். இந்த உலகத்திலிருந்து நழுவி, முற்றிலும் புதிய உலகிற்குள் நுழைகிறான். அது அறியாமையின் உலகம். பார்வையற்ற மனிதர்களின் உலகம். ஆம், அந்த உலகத்தில் வாழும் யாருக்கும் பார்வையில்லை.

அவர்களை ஆட்சி செய்ய ஒரு குருட்டு ராஜா இருக்கிறார். மந்திரிகள், ஆன்மீக குருக்கள், போர் வீரர்கள், மக்கள் என அனைவரும் குருடர்களே.
அந்த ராஜா முந்தைய (ஒரிஜினல்) ராஜாவையும் அவர் குடும்பத்தையும் சிறையில் அடைத்துவிட்டு ஆட்சி புரிந்து வருகிறார். அந்த நாட்டில் வாழும் ஒரு ஏழைக்குடிமகனுக்கு சிறையில் இருக்கும் இளவரசியுடன் காதல். அந்த ஏழையை ரகுராமன், பார்வையற்ற படைவீரர்களிடம் இருந்து காப்பாற்றுகிறான்.

தனக்கு பார்வையுண்டு என்று அவனுக்கு எடுத்துச் சொல்கிறான். அப்போது தான் அவனுக்கு அந்த உலகம் பற்றிச் சொல்லப்படுகிறது. அங்கே யாருக்கும் பார்வை கிடையாது என்பது மட்டுமல்ல, மனிதனால் பார்க்க முடியும் என்று நம்புவதே பாவம்.

அப்படிச் சொன்ன, பலரும் அரசாங்கத்தால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களது மதநூல்களும் 'பார்வை என்பது சாத்தியமானது அல்ல. அது சாத்தான்ளுக்கு உரித்தானது' என்று தெளிவாக(!)ச் சொல்லியிருக்கின்றன. மதநூல்களே சொன்னபின், அது எவ்வளவு முட்டாள்தனமானதாக இருந்தாலும், எப்படிப் பொய்யாக இருக்க முடியும்???? அது கடவுளின் வார்த்தையல்லவா? எனவே 'எனக்கு பார்வை இருக்கிறது.' என்று சொல்வதே பாவம், மத விரோதம்.

ஆனால் ரகுராமனை அந்த காதல் ஜோடிகள் நம்புகிறார்கள். 'பார்வையுள்ள சாத்தான் ஒருவன்' தன் உலகிற்குள் வந்திருப்பது ராஜாவிற்கும் தெரியவருகிறது. அவனைப் பிடித்து மரணதண்டனை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்படுகிறது. இந்த சாத்தானின் வருகைக்கான பரிகாரமாக, யாரையாவது நரபலை கொடுக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்படுகிறது.

நரபலிக்காக அந்த காதலன் தேர்வு செய்யப்பட, அவனையும் அவன் குடும்பத்தாரையும் ரகுராமன் காப்பாற்றி, வேறிடம் அழைத்துச் செல்கிறான். அங்கே அவன் 'இளா பழம்' என்ற ஒன்றைக் காண்கிறான்.

அது ஒரு புனிதமான பழம். அந்த பழத்தின் கொட்டை விஷமானது, ஆனால் பழமோ சுவையானது, உடலுக்கு நல்லது. அங்கே பிறக்கும் அனைத்துக்குழந்தைகளுக்கும் அந்த பழத்தின் சாறானது ஊட்டப்படுகிறது.

ரகுராமனுக்கும் அந்த பழத்தை உண்ணும் ஆசை எழுகிறது. பழத்தின் சுவையில் மயங்கி, பல பழங்களை உண்ண, உடனே பார்வை பறிபோகிறது. அப்போது தான் அவனுக்கே தெரிகிறது, அங்கே அனைவரும் குருடர்களாய் இருப்பதற்குக் காரணம் அந்த பழத்தின் சாறை உண்பது தான் என்று.

ஆனால் பார்வையிழந்த ரகுராமன், ராஜாவிடம் பிடிபடுகிறான். அவன் சொல்லும் சமூக/மத நம்பிக்கைக்கு எதிரான விஷயத்தை நம்ப யாரும் தயாராக இல்லை. அவனுக்கு அந்த இளா பழத்தின் கொட்டையின் சாறை ஊட்டி கொல்லும்படி ராஜா உத்தரவிடுகிறான்.

அவ்வாறே செய்யப்படுகிறது. ஆச்சரியமாக ரகுராமன் பார்வையைத் திரும்பப் பெறுகிறான். இந்த மக்கள் முட்டாள்தனமாக பழத்தின் கொட்டையை உண்ணாமல், பழத்தை உண்பது தான் பிரச்சினைக்குக் காரணம் என்று ரகுராமன் புரிந்து அனைவரையும் குருட்டு உலகத்தில் இருந்து மீட்கிறான்.

கனவில் இருந்து மீழும் ரகுராமன், தன் அறியாமையை உணர்ந்து மத வெறியை உதறுகிறான்.

இதில் இளா பழம் என்பது அருமையான குறியீடாக உள்ளது. அது மதத்திற்கு உவமையாக காட்டப்படுகிறது. ஒரு மதத்தின் அடிப்படையான ஆன்மீகக் கருத்துக்களை மட்டும் எடுத்துக்கொள்ளாமல், என்ன உடை உடுத்த வேண்டும், என்ன மாதிரி முடி வளர்க்கவேண்டும்/மொட்டை அடிக்க வேண்டும், என்ன கிழமை விரதம் இருக்க வேண்டும் என சமூக ஒழுங்கை மட்டுமே அடிப்படையாகக்கொண்ட மேலோட்ட கருத்துக்களையே நாம் எடுத்துக்கொண்டு குருடர்களாய் வாழ்ந்து வருவதை, இளா பழ உவமை முகத்தில் அறைந்தாற்போன்று சொல்கிறது.

எல்லா மதங்களுக்கும் அடிப்படைக் கருத்தான அன்பை விட்டுவிட்டு, வழிபாட்டுத் தலங்களுக்காகவும் வழிபாட்டு செயல்முறைகளுக்காகவுமே அடிதடி-கலவரம்-குண்டு வெடிப்பு என அழிவுப்பாதையில் இறங்குவோரின் அகக்கண்ணைத் திறக்கும் பாடம், இந்தப் படம்.

இந்த உலகத்தையும் மதத்தையும் காக்க வேண்டியது கடவுளின் வேலை தானேயொழிய, அந்த கடவுளின் மதத்தைக் காப்பது நம்முடைய வேலையல்ல. சொந்த மத்த்தையே காக்க வக்கற்றவனா கடவுள் என்ற எளிய கேள்வியையும் இந்தப் படம் எழுப்பிச் செல்கிறது.

ராஜீவ் அஞ்சால்
இயக்குநர் ராஜீவ் அஞ்சாலின் கச்சிதமான இயக்கத்தில், எஸ்.குமாரின் உறுத்தாத ஒளிப்பதிவில், இளையராஜாவின் மயக்க வைக்கும் சிம்பொனி பிண்ணனி இசையுடன் 1997ல் வெளிவந்த இந்தப் படம், இந்திய அரசால் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

நல்ல சினிமாக்களைப் பார்க்கும் ஆர்வம் உள்ளவர்கள், தவற விடக்கூடாத நல்ல படம் "குரு".

டிஸ்கி: எனக்கு மலையாளம் முழுமையாகத் தெரியாது. எனவே ஏதேனும் சொற்குற்றம் இருந்தால், பொறுத்தருள்க.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

8 comments:

 1. எனக்கு மலையாளம் சுத்தமாக தெரியாதென்பதால் இந்த தொடரை முழுவதும் படிக்கவில்லை...!!!

  ReplyDelete
 2. அருமை செங்கோவி!மலையாளம் முழுமையாகத் தெரியா விட்டால் என்ன?முடிந்தவரை புரிந்து சொல்லியிருக்கிறீர்கள்.யூ டியூப் தானே?பார்த்து விடுவோம்!

  ReplyDelete
 3. கதையை, சுருக்கமாய் கச்சிதமாய் அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். நானும் படம் பார்த்து பிரமித்து, நண்பர்கள் எல்லோரிடமும் ’இப்படியும் எடுக்கலாம் சினிமா’ என்று வியந்து வியந்து கண்டிப்பாய் பார்க்குமாறு பரிந்துரைத்தேன். தத்துவார்த்தமாக excellent film

  ReplyDelete
 4. நல்ல படத்துக்கு ஏது மொழி கற்பனா சக்தி ]போதும் நல்ல விடயத்தை இவ்வளவு வருடம் கடந்து சொல்லி இருக்கின்றீர்கள் விரைவில் பார்த்து விடுகின்றேன்! நன்றி லிங்கு பகிர்வுக்கு!

  ReplyDelete
 5. கட்டாயம் பார்கவேண்டிய படம் யூடியூப் பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 6. நன்றி அண்ணா கட்டாயம் பார்க்கிறேன்

  ReplyDelete
 7. மலையாள படம் அதிகமா பாபீங்களா ?????இரண்டு பதிவுகள் மலையாள படம் பத்தியே போட்டு இருக்கீங்க ??? @செங்கோவி

  ReplyDelete
 8. @ஆர்மேனிய தமிழன் அதிலென்ன சந்தேகம், நான் மலையாளம் கற்றுக்கொண்டதே ஷகீலா படங்கள் பார்த்துத்தானே!!!!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.