Sunday, September 14, 2014

திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-25)


25. முதல் பாகத்தின் முடிவில்...

திரைக்கதை சூத்திரங்கள் தொடரின் முதல் பாகத்தில் திரைக்கதைக்கான அடிப்படை விஷயங்களைப் பார்த்து வந்துள்ளோம். இவற்றைப் பற்றிய புரிதல் இல்லாமல், ஆக்ட்-1, ஆக்ட்-2 என்று இறங்கினால் சரியாக வராது என்பதாலேயே இவ்வளவு விரிவாக அடிப்படைகளைப் பார்த்தோம்.

உங்கள் ஒன்லைனை எப்படி வலுவான மற்றும் சுவாரஸ்யமான கதையாக மாற்றுவது என்று இப்போது புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். அடுத்து திரைக்கதை எழுத ஆரம்பிக்கலாமா? உங்கள் ஒன்லைனை எடுத்துக்கொள்ளுங்கள். திரைக்கதையின் அவுட் லைனை எழுதுங்கள். ஒரு படத்திற்கு தோராயமாக அறுபது சீன்கள் வரை இருக்கலாம். (இது கதை மற்றும் காட்சிகளின் நீளத்தைப் பொறுத்து மாறுபடும்)திரைக்கதை எழுத ஆரம்பிப்போமா?

நான் துப்பாக்கி படத்தின் ஒன்லைனையே எடுத்துக்கொள்கிறேன்.

விடுமுறைக்கு ஊருக்கு வரும் ஹீரோ, ஒரு தீவிரவாதச் செயலை தடுத்து நிறுத்தி,தீவிரவாதிகளை ஒழிக்கிறான்.

இதுவரை தொடரில் வந்த விஷயங்களை வைத்து, ஹீரோ-வில்லன் - ஹீரோயின் - நண்பன் - குறிக்கோள் போன்ற விஷயங்களை டெவலப் செய்திருப்போம். இப்போது படத்தை மறந்துவிட்டு,சீன்களின் வரிசையை(அவுட் லைன்) எழுதுவோம்.

சீன்கள்:

1. ஹீரோ அறிமுகம்
2. ஹீரோ ஹீரோயினை சந்தித்தல்
3. நண்பனை சந்தித்தல்
4. ஹீரோயினை மறுபடி பார்த்தல் - மோதல்
5. குண்டு வெடிப்பு
6. ஹீரோ தீவிரவாதியைப் பிடித்தல் - அடுத்த குன்டு வெடிப்பு பற்றி தெரிந்து கொள்ளுதல்
7. நண்பர்களுடன் இணைந்து பெரிய குன்டு வெடிப்புத் திட்டத்தை நிறுத்துதல்
8.  ஹீரோயினுக்கு ஹீரோ மேல் காதல் வருதல்
9.  வில்லன் ஹீரோவைத் தேடி வருதல்
10. ஹீரோயினை ஹீரோவின் மேலதிகாரியே பெண் பார்த்தல்.
11. வில்லன் ஹீரோவின் நண்பனைத் தேடிப் பிடித்தல்..கொல்லுதல்
12.. ஹீரோ வில்லனை அழித்தல்
13. ஹீரோ - ஹீரோயின் கல்யாணம்...கெக்கேபிக்கே சிரிப்புடன்  படம் முடிதல்.


'என்னய்யா இது..60 சீன் வரும் என்று நினைத்தால் வெறும் 13 தான் வந்திருக்கிறது? இன்னும் கொஞ்சம் இழுத்தால்,பதின்மூன்றை 26 ஆக்கலாம் என்றே வைத்துக்கொள்வோம். அப்போ மீதி? ..ங்ஙே!'

இதனால் தான் முன்பு தேவர் பிலிம்ஸ், சத்யஜோதி பிலிம்ஸ் போன்றவை தனி கதை இலாகா ஒன்றை வைத்திருந்தார்கள். தற்பொழுது இயக்குநர்கள் உதவி இயக்குநர்களையும், எழுத்தாளர்களையும் சீன் டெவலப் பண்ண வைத்திருக்கிறார்கள். அவர்கள் யோசித்தோ, சுட்டோ தருவதைக் கோர்வையாக்கி தன் பெயரைப் போட்டுக்கொள்வதும் இங்கே வழக்கம். இப்படி கூட்டத்தைக் கூட்டி, விவாதித்து சீன் பிடிக்கக் காரணம், அவர்கள் திரைக்கதை ஆசிரியர்கள் இல்லை என்பது தான். இத்தகைய சூழலில் தான், ஒரு திரைக்கதை ஆசிரியரின் முக்கியத்துவத்தை நாம் அறிய முடிகிறது.

சரி. தொடர்ந்து படிப்பதை நிறுத்திவிட்டு, உங்கள் மனதில் இருக்கும் அந்த அற்புதமான கதையின் அவுட்லைனை எழுதிப் பாருங்கள். எத்தனை சீன் தேறுகின்றது? 30 சீன்? முப்பது வந்தால், நீங்கள் பெரிய ஜீனியஸ் தான்.

ஒரு கதையை விலாவரியாக மனதில் ஓட்டிப் பார்த்திருப்போம். முழுத் திரைப்படமே கையில் அல்லது மனதில் இருப்பதாக நினைத்திருப்போம். உட்கார்ந்து எழுதும்போது தான் தெரியும், பாதி திரைக்கதைகூட கையில் இல்லை என்று!


ஹிட்ச்காக்கின் பெரும்பாலான படங்கள், ஏதாவது ஒரு நாவலைத் தழுவி எழுதப்பட்டவை தான். ஒரு நாவலை படம் ஆக்கலாம் என்று அவர் தீர்மானித்ததுமே தன் திரைக்கதை ஆசிரியர்களுடன் உட்கார்வார். அவுட் லைனை மட்டுமல்லாது சீன் பை சீன் விரிவாக எழுதி முடிக்கும்வரை, அந்த நாவலை நம்ப மாட்டார். அது பற்றிக் கேட்டபோது அவர் சொன்னது, 'நாவலைப் படிக்கும்போது,ஒரு திரைப்படத்துக்குத் தேவையான அளவு அதில் சீன்கள் இருப்பதாகத் தெரியும். ஆனால் எழுதும்போது தான் விஷுவலாக எத்தனை தேறும் என்று தெரிந்துகொள்ள முடியும். சீன்கள் போதாதே என்று பின்னால் வரும் அதிர்ச்சியைத் தவிர்க்க, நான் ஆரம்பத்திலேயே பிரிபிரி என்று பிரித்துவிடுவேன்" என்றார்.

தமிழ் சினிமாவைப் புரட்டிப் போடும் கதை தன்னிடம் இருப்பதாகவும், தமிழ் சினிமாவில் யாருக்குமே உருப்படியாக படம் எடுக்கத் தெரியவில்லை என்றும் உண்மையாகவே நம்புகிற பலரும், இந்த அவுட்லைன் ஸ்டேஜிலேயே முடிந்துபோகிறார்கள். உட்கார்ந்து எழுதிப் பார்த்தாலே,பாதிக்கனவு பணால் ஆகிவிடும். எனவே ஒரு திரைக்கதை ஆசிரியராக வர விரும்புவர்கள், இந்தக் கட்டத்தை தாண்டியே ஆக வேண்டும். நம்மிடம் இருப்பது வெறும் கனவா, லட்சியமா என்பதை தீர்மானிக்கும் தருணம் தான் இந்த சீன் டெவலப் செய்தல்!

தன்னை தகுதிப்படுத்திக் கொள்ளாதவனின் ஆசையே கனவு. தன்னை தகுதிப்படுத்திக்கொண்டவனின் ஆசையே லட்சியம். நம்முடைய ஆசை எந்தவகை என்று நமக்கே தெரியும் தருணம் இந்த ஸ்டேஜ்.

"அந்தக் கதையெல்லாம் இருக்கட்டும். எல்லாம் தெரியும் என்று உட்கார்ந்தால், முப்பது சீன்கூடத் தேறவில்லையே..ஆரம்பம் தெரிகிறது, முடிவும் தெரிகிறது. ஆனால் இடையில் என்ன செய்வது என்று தெரியவிலையே?" என்று கதறுகிறீர்களா?

அங்கே தான் திரைக்கதை வடிவம் எனும்  இந்த தொடரின் இரண்டாம் பாகத்தை ஓப்பன் பண்றொம்...வெயிட் &ஸீ!

முதல் பாகம் முற்றும்.

அறிவிப்பு

இந்த மாதம் 25 ஆம் தேதி முதல் அக்டோபர் 8 வரை இந்திய விஜயம். ஊரில் இருக்கும் ஃபேமிலியை குவைத்திற்கு அழைத்துவருவதற்காக, வருகிறேன். அதற்காக இங்கே வீடு பார்ப்பது, பொருட்கள் வாங்குவது என கொஞ்சம் பிஸி. எனவே ‘திரைக்கதை சூத்திரங்கள்’ தொடரும் ஹிட்ச்காக் தொடரும் ஒரு மாதம் இடைவெளிவிட்டு, அக்டோபர் மத்தியில் மீண்டும் ஆரம்பம் ஆகும். இதுவரை எழுதியதை திரும்பப் படித்துப் பாருங்கள். சில நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து, ஒப்பிட்டுப் பாருங்கள். மீண்டும் சந்திப்போம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

11 comments:

  1. நல்லா எழுதியிருக்கீங்க நண்பா வாழ்த்துக்கள்.

    இந்தியா வருவது மகிழ்ச்சி. முடிந்தால் தங்களை சந்திக்க ஆவலாய் இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கோவில்பட்டி, ராஜபாளையம் தவிர்த்து வேறு இடங்களுக்கு வர இயலாத நிலைமை. :(

      Delete
  2. ஓகே போன் பண்றேன்

    ReplyDelete
  3. 60 சீன் 120 நிமிடம் என்றால் ஒரு சீன் 2 நிமிடம்.ஒரு வேலை தோரயமாக ஒரு சீன் 1 நிமிடமோ(120 சீன்ஸ்) அல்லது 3 நிமிடமோ(40 scenes) இருக்கலாமா?. இருந்தால் என்ன மாதிரியான விளைவுகள் நிகழும்?

    ReplyDelete
    Replies
    1. ஒன்னும் ஆகிடாது. திரைக்கதையில் ஒரு பக்கம் என்பது திரையில் ஒரு நிமிடம் என்று கணக்கு. எனவே ஒட்டுமொத்தமாக 120 பக்கங்களில் முடித்தால் போதும். இதையும் ஸ்ட்ரிக்ட்டாக ஃபாலோ செய்ய வேண்டியதில்லை. :)

      Delete
  4. Replies
    1. இன்னும் நிறைய எதிர்பார்த்தேன்!!!!

      Delete
  5. சூப்பர்... வாழ்துக்கள்... உங்க குடும்பத்தை அழைத்துக் கொண்டு குவைத் வருவதற்கும் ......

    we miss you

    ReplyDelete
  6. பாக்கியராஜ் பற்றிய செய்தி இருக்கும் என ஆவலுடன் எதிர்பார்த்து, சிறிய ஏமாற்றம்...ஜி

    ReplyDelete
  7. மன்னிக்கவும் அண்ணா தொடருக்கு திரும்பி வாருங்கள் என்று தட்டச்சிடத் தவறீட்டன். விரைவில் வாருங்கள். என் பிரின்டில் இன்னும் இணைப்பதற்கு இடம் வைத்திருக்கிறேன்

    ReplyDelete
  8. ரொம்ப நல்லா எழுதறீங்க! நல்ல பயனுள்ள தொடர். பழையதொடர்களையும் வாசிக்கின்றோம்! தொடர்கின்றோம்!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.