Thursday, October 23, 2014

கத்தி - திரை விமர்சனம்

அதாகப்பட்டது... :
சிம்புவும் வம்பும் போன்று விஜய் படங்களும் பஞ்சாயத்தும் பிரிக்க முடியாத விஷயங்களாக ஆகி நெடுநாட்கள் ஆகிவிட்டன. அந்தவகையில் இந்தப் படம் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. முடிவில் படத்தின் போஸ்டரிலும் படத்திலும் லைக்கா லோகோவை நீக்கி, தமிழ் சமுதாயத்தையே பெரும் ஆபத்தில் இருந்து மீட்டிருக்கிறார்கள் நம் புரட்சியாளர்கள். 

ஆனால் குவைத்தில் லைக்கா லோகோவுடன் தான் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இங்கே வாழும் தமிழர்களுக்கு இதனால் சோறு தண்ணி கிடைக்காதோ என்று பயமாக உள்ளது. எனவே நம் புரட்சியாளர்களை உடனேஃப்ளைட்டில் ஏற்றி இங்கே அனுப்பி வைத்தால், தமிழ்நாடும் சுத்தம் ஆகும்; அவர்களுக்கும் சுன்னத் செய்யப்படும். ஒரே ஆபரேசனில் ரெண்டு மாங்கா எனும் வேண்டுகோளுடன், விமர்சனத்தில் நுழைவோம்.

ஒரு ஊர்ல..:
பன்னாட்டுக் கம்பெனி ஒன்றின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக ஜீவானந்தம் எனும் அப்பாவி விஜய் தலைமையில் போராடுகிறார்கள் தன்னூத்து மக்கள். ஜீவாவை வில்லன்கள் கொல்ல முயற்சிக்க, ஜீவா இடத்தில் கத்தி போன்ற ’கதிரேசன்’ விஜய் ஆள் மாறாட்டம் வந்து சேர்கிறார். கத்தியின் அதிரடியில் மக்கள் எப்படி ஜெயிக்கிறார்கள் என்பதே கதை.

உரிச்சா....:
கொல்கத்தா ஜெயிலில் இருந்து விஜய் தப்பிப்பதுடன் கதை ஆரம்பிக்கிறது. செம ஜாலியான, அதிரடியான கேரக்டர் என்பதை ஆரம்பக் காட்சிகளிலேயே உணர்த்திவிடுகிறார்கள். சென்னை வந்து, சமந்தாவைப் பார்த்ததும் காதலில் விழுகிறார். அதுவரை படம் செம ஜாலியாகப் போகிறது. அடுத்து ’ஜீவா’ விஜய்யைக் காப்பாற்றும் ’ஹீரோ’ விஜய், ஜீவாவின் இடத்திற்குப் போனதும் படம் கதைக்குள் நுழைகிறது.  வில்லனின் அறிமுகமும், ஜீவா என்று நினைத்து விஜய்யிடம் பேரம் பேசும் காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன. விஜய் போன்றே ஆடியன்ஸும் ஜீவாவின் கதையை கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்துகொள்ளும்படி திரைக்கதையை அமைத்திருப்பது அருமை. விருது வாங்கும் நிகழ்ச்சியில் தான் விஜய்யும் நாமும் ஜீவாவின் கதையை அறிந்து, இன்வால்வ் ஆகிறோம்.

தன்னூத்து விவசாயிகளின் பிரச்சினையைச் சொல்லும்போது, படத்திற்கு கொஞ்சம் டாகுமெண்டரி சாயல் வந்துவிடுகிறது. அதுவரை இருந்த ஜாலியும் குறைய, அதிலிருந்து இடைவேளை வரை படம் கொஞ்சம் ஸ்லோவாகவே போகிறது. ஆனால் அந்த நேரத்தில் வரும் காட்சிகள் அனைத்துமே நிஜம். கார்ப்பரேட் கம்பெனிகள் விவசாய நிலங்களை கபளீகரம் செய்வதும், அரசு இயந்திரங்கள் அவற்றுக்குத் துணைபோவதும் நடைமுறைக் கொடூரம். அதை தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள். 

இடைவேளைக்குப் பிறகு கத்தியின் அதிரடி ஆரம்பம் ஆகிறது. ஏறக்குறைய மினி ரமணாவாக படம் நகர்கிறது. ஏ.ஆர்.முருகதாஸின் திரைக்கதையும் வசனங்களும் பட்டையைக் கிளப்புகின்றன. வெறும் ஹீரோயிசப் படமாகவோ, ஹீரோவின் அல்ப அரசியல் ஆசைக்குத் தீனி போடும் படமாகவோ ஆகும் ஆபத்து இருந்தும், விவசாயத்திற்கு ஆதரவாக ஓங்கிக் குரல் கொடுத்ததன் மூலமாக ஒரு நல்ல படமாக ஆகிவிட்டது கத்தி. மக்களுக்குப் பாடுபடும் சுறா கதை தான் என்றாலும், சுவாரஸ்யமான புதிய காட்சியமைப்பும் வசனங்களும் நேரடியாக ’மாநிற எம்.ஜி.ஆரே’ என்று பில்டப் செய்யாமல் அடக்கி வாசித்திருப்பதும் படத்தினைக் காப்பாற்றிவிடுகின்றன.

விவசாயிகளின் பிரச்சினையைக் கண்டுகொள்ளாத ஊடகங்களையும், நகர மக்களையும் சாட்டை எடுத்து விளாசியிருக்கிறார்கள். கூடவே நில அபகரிப்புக்குத் துணை போகும்  அரசியல்வாதிகளையும் ஓங்கிக் குட்டி இருக்கலாம். ‘இருக்கிற பஞ்சாயத்து போதாதா?’ என்று பயந்துவிட்டார்கள் போலும். ஆனாலும் மீடியாக்கள்கூட கைவிட்டுவிட்ட ஒரு விஷயத்தை, ஆணித்தரமாக ஒரு பொழுதுபோக்குப் படத்தில் சொன்னதற்காகவே படத்தைப் பாராட்டலாம்.
விஜய்:
மனிதருக்கு இளமையும் அழகும் கூடிக்கொண்டே போகிறது. இதுவரை இரட்டை வேடம் என்றால் சொதப்பி விடுவார். ஆனால் இந்தப் படத்தில் ஜீவாவின் உடல்மொழியிலும், கதிரேசனின் உடல்மொழியும் நல்ல வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார். அழும்போது மட்டும் தான் நம்மைக் கஷ்டப்படுத்துகிறார். டான்ஸிலும் காமெடியிலும் பின்னியெடுக்கிறார். தன்னை ஓவர் பில்டப் செய்யாமல், விவசாயிகளின் பிரச்சினையை படத்தில் முக்கியமான விஷயமாக காட்டியிருப்பதற்கே விஜய்யைப் பாராட்டலாம். கோலா கம்பெனிகளைப் பற்றி விஜய் பேசும் வசனங்கள் அத்தனையும் நிஜம். அதை அவரும் உணர்ந்து, இனிமேலாவது கோலா விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று அவர் அறிவிப்பது நல்லது.

சமந்தா:
படத்தின் கதையில் அம்மணிக்கு இடமேயில்லை. டைம் பாஸுக்காகவும் பாட்டுக்காகவுமே நடமாடும் ஒரு ஜீவன். அஞ்சான் மாதிரி பிகினியில் வந்து பயமுறுத்தாமல், அழகான காஸ்ட்யூம்களில் அம்சமாக வந்து போகிறார். அந்தக் காட்சியில் அருமையாக நடித்தார் என்று சொல்லும்படி ஒன்றுமே இல்லை. ஆனால் படம் சீரியஸாக நகரும்போது, இவர் ஸ்க்ரீனில், 50 தாத்தாக்கள் மற்றும் விஜய்க்கு மத்தியில் சும்மா வந்து நின்றாலே ஆறுதலாக இருக்கிறது. ’நான் ஈ’ படத்தின் கதையைச் சொல்லி விஜய்யை மிரட்டும் சீன் செம!

சொந்த பந்தங்கள்:
சதீஷ் என்று ஒரு நடிகர் ரொம்ப நாட்களாக காமெடியன் ஆக முயற்சித்துக்கொண்டிருக்கிறார். இதிலும் அப்படியே! என்றாவது ஒருநாள் காமெடியன் ஆவார் என்று நம்புவோம். பல காட்சிகளில் இவரைவிட விஜய் காமெடியில் கலக்குகிறார். படத்தில் வரும் தாத்தாக்கள் அனைவருமே மனம் கவர்கிறார்கள். துப்பாக்கி வில்லன் போன்றே இதிலும் வில்லன் செமயாக இருக்கிறார்.

நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- ஜீவா கதையை நீட்டிச் சொல்லியது, படத்தின் முதல்பாதியில் அரைமணி நேரத்தை ஸ்லோவாக்கி விட்டது.
- பல இடங்களில் லாஜிக் இல்லை. வில்லன் கோர்ட்டுக்கே வந்து உட்கார்ந்திருப்பது ஒரு உதாரணம். பெரிய மனிதர்களுக்கு அழகு, வாய்தா வாங்கியாவது கோர்ட்டுக்கு வராமல் இருப்பது!
- விவசாயிகளின் பிரச்சினையை விளக்கமாகப் பேசியிருப்பது, ஒரு பொழுதுபோக்குப் படத்தின் சுவாரஸ்யத்தைக் குறைக்கவே செய்கிறது
- மீத்தேன் வாயுத் திட்டம், கெயில் குழாய் பதிக்கும் திட்டம் போன்றவற்றுக்கு நம்மை ஆண்ட இரு கட்சிகளின் அரசுகளும் தான் முக்கியப் பொறுப்பு. ஆனால் அவற்றைச் சாடாமல், ஒரு அரசியல்வாதியைக்க்கூட வில்லனாகக் காட்டாமல் எடுத்திருப்பது, தமிழ் சினிமாவின் தற்போதைய நிலையைக் காட்டுகிறது.
- கொட்டு கொட்டு மேளம் கொட்டு பாடலை நேரங்கெட்ட நேரத்தில் வைத்திருக்கிறார்கள். கொஞ்சம்கூட அந்த இடத்தில் பொருந்தவேயில்லை. அந்தப் பாடலுக்கு எதற்கு இந்தி வார்த்தைகள்?

பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- நெத்தியடி வசனங்கள். இதுபோன்று சமூகப் பிரச்சினையைப் பேசும் படங்களில் இத்தகைய நீண்ட வசனங்கள் அவசியம். முன்பு விஜயகாந்த் படங்களில் பார்த்தது. நீண்ட நாட்களுக்கு அப்புறம், வசனங்களுக்கு தியேட்டரில் கை தட்டல் பறக்கிறது. ‘ஐயாயிரம் கோடி கடன் வாங்கின பீர் கம்பெனி முதலாளி தற்கொலை பண்ணிக்கலை. ஆனால் ஐந்தாயிரம் ரூபாய் கடன் வாங்கின விவசாயி தற்கொலை செய்கிறான்’ எனும் வசனத்திற்கு அதிக கைதட்டல்.
- இரண்டாம்பாதியில் வரும் விறுவிறுப்பான திரைக்கதை தான் முதல்பாதியின் தொய்வை சரி செய்கிறது
- அனிருத்தின் பட்டையைக் கிளப்பும் பாடல்களும் அதைப் படமாக்கியிருக்கும் விதமும். ஆத்தீ பாடலை எடுத்திருக்கும் விதமும், பக்கம் வந்து பாடலுக்கு ஏர்போர்ட் லொகேசனும் கலக்கல்
- விஜய்யின் அசால்ட் பெர்ஃபார்மன்ஸ். போக்கிரிக்கு அப்புறம் இதில் சரியாக வந்திருக்கிறது.
- சில்லறை சண்டைக்காட்சி
- ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பும்

பார்க்கலாமா?
தாராளமாகப் பார்க்கலாம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

18 comments:

 1. கோலா கம்பெனிகளைப் பற்றி விஜய் பேசும் வசனங்கள் அத்தனையும் நிஜம். அதை அவரும் உணர்ந்து, இனிமேலாவது கோலா விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று அவர் அறிவிப்பது நல்லது. //// நன்று சொன்னீர் ஐயா....

  ReplyDelete
 2. பசிச்சவனுக்கு சோறு போடணும்னு ஒரு வசனம் வருமே கிளாஸ்... நிறைய வசனம் எனக்கு பிடிச்சி இருந்தது.. சமந்தா சுத்தமா புடிக்கல ;-) மொத இருபது நிமிஷம் துரு பிடிச்ச கத்தி...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சீனு..நாம எதிர்பார்த்த அளவுக்கு சமந்தா இல்லை!!

   Delete
 3. செப். 14 .................................................................அக்.24

  ஏன்யா இவ்ளோ கேப்பா விடறது ?

  ReplyDelete
  Replies
  1. ஏன், உலகம் அழிஞ்சிடுச்சா?

   Delete
 4. அண்ணே , உங்க உண்மையான பேரு எனக்கு தெரியுமே .
  மைக்கேல் டி குன்ஹா தானே .
  முக்கியமான விசயமா இந்தியா வரேன்னு சொன்னது தீர்ப்பு சொல்ல தானே .

  ReplyDelete
  Replies
  1. அம்மையார் ஜெயிலுக்குப் போனதை எண்ணி எண்ணி, கண்ணீர் வடித்தவன் நான். என்னைப் பார்த்து, இப்படிச் சொல்லலாமா?

   Delete
 5. படம் நல்ல இருக்கும்னு நம்பி போனா கதற கதற அழுவ வைக்கறதும் ,
  படம் மொக்கையா தான் இருக்கும் படத்த கழுவி கழுவி ஊத்தலாம் னு போனா
  நல்லா இருக்கறதும்
  ஏன் செங்கோவி ஏன் ?

  ReplyDelete
 6. //கம்யூனிசமா? அப்படினா என்னண்ணா?

  பசிக்கு மேலயும் தாண்டி சாப்பிடும் ஒரு இட்லி நம்மளோடது இல்லம்மா//

  வசனம் நல்லாத்தான் இருந்துச்சு. ஆனா கம்யூனிசம்னா இதுமட்டுந்தானா என்பதில் ஏ.ஆர்.முருகதாஸ் என்ன நிலைகொண்டிருக்கிறார் என்பதைப் படம் தெளிவுபடுத்தவில்லை.

  ReplyDelete
  Replies
  1. அடுத்தவர் கதையைத் திருடியாவது ஹிட் தரவேண்டும் என்பது மட்டும் தான் முருகதாஸின் நிலைப்பாடு. அதற்கு மேல் எதிர்பார்க்காதீர்கள்.

   Delete
 7. பஹ்ரைனிலும் லைக்கா லோகோ மாற்றப்படவில்லை.

  வசனங்கள் சில இடங்களில் பட்டையை கிளப்புகின்றன.

  அந்த லேடி சண்டை சூப்பர்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாண்ணே..அந்த லேடி ஃபைட் எதிர்பாராத ஆச்சரியம்.

   Delete
 8. விஜய் இரட்டை வேடமா?எனக்கும் இந்த சதீஷ் பிடிக்காது. சிவகார்த்திகேயன் ரொம்ப சப்போர்ட் செய்கிறார்.அந்த காலத்து ஒய்.ஜி,மகேந்திரன் போல நானும் சிரிப்பு நடிகர்னு எரிச்சலாக இருக்கும்.மெட்ராசிலும் ரமா தானே அம்மா..

  ReplyDelete
  Replies
  1. சதீஷ்=ஒய்.ஜி.......சூப்பர்க்கா.

   அதே மெட்ராஸ் ரமா தான்.

   Delete
 9. தாராளமாகப் பார்க்கலாம். அப்படின்னு பார்த்த பிறகுதான் படம் பார்க்கவே போனேன்..

  ReplyDelete
 10. வணக்கம்!நலமாக இருக்கிறீர்களா?//கொஞ்சம் வேலை.....இணையத்தில் உலா வர முடிவதில்லை.///இன்று படம் பார்த்து விட்டுத் தான் உங்கள் விமர்சனம் பார்த்தேன்.சரியான+தரமான விமர்சனம்.///ஒரு காட்சியில்,அனிருத் தம்பி(செட்டப்) இசைக் கோளாறு செய்து பார்த்திருக்கிறார்,ஹி!ஹி!!ஹீ!!!

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.