Friday, October 31, 2014

ஹிட்ச்காக்: Rebecca (1940) - ஒரு அலசல் (பாகம்-2)

ரிபெக்கா எனும் பிம்பம்
சென்ற பகுதியைப் படித்த நீங்கள் படம் பார்க்காதவராக இருந்தால், ’ரிபெக்கா எப்படி இருப்பார்?, ரிபெக்கா கேரக்டரில் நடித்த நடிகை யார்?, அவர் ஸ்டில் எங்கே?’ என்றெல்லாம் யோசித்திருப்பீர்கள். இந்த படத்தின் விஷேசமே, அதில் தான் அடங்கி இருக்கிறது. ஆம், ரிபெக்கா வேடத்தில் யாருமே நடிக்கவில்லை. வசனங்களில் மட்டுமே வாழ்கிறாள் ரிபெக்கா.
சொல்லாதே…காட்டு (Show…Don’t tell)’ என்பது திரைக்கதையில் அடிப்படை விதிகளில் ஒன்று. ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை வசனங்களில் சொல்லாதீர்கள், காட்சியாகக் காட்டுங்கள் என்பதே பாலபாடம். ‘அவர் நல்லவர்..வல்லவர்’ என்றெல்லாம் மற்ற கதாபாத்திரங்கள் பேசுவதன் மூலம் சொல்வதை விட, ஒரு காட்சி மூலம் ஆடியன்ஸுக்கு விஷுவலாகப் புரிய வைப்பதே நல்ல சினிமா என்று திரைக்கதைப் பாடம் சொல்கிறது.

ஆனால் இங்கே ரிபெக்காவைப் பற்றி அனைவரும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். விஷுவலாக ரிபெக்கா வருவதேயில்லை. ‘அவளை மாதிரி ஒரு அழகிய படைப்பை நான் பார்த்ததேயில்லை. அவள் எதற்கும் பயப்படுபவள் அல்ல’ என்று வசனங்கள் மட்டும் வந்துகொண்டே இருக்கின்றன. ரிபெக்கா வருவதில்லை. ஏன்?

’அவர் யார் தெரியுமா?’ என்று பில்டப் ஏற்றிக்கொண்டே போய்விட்டு, கடைசியில் வந்து நிற்பது ராஜூ பாய் என்றால் என்ன ஆகும் என்று நமக்கே தெரியும். மீன் தொட்டியில் அடைக்கப்பட முடியாத திமிங்கலம் போல், இந்தப் படத்தினுள் அடக்க முடியாத பெரும் பிம்பமாக ரிபெக்கா உருவெடுத்து நிற்கிறாள். இந்த கேரக்டரில் யார் நடித்தாலும், அதுவரை ஏற்படுத்திய பில்டப்பை நியாயப்படுத்த முடியுமா என்பது சந்தேகமே.

அதையும் மீறி, ஒரு சிறந்த நடிகையைப் பிடித்து நடிக்க வைத்துவிடலாம். அதில் இன்னொரு சிக்கல், இது ஒரு புகழ்பெற்ற நாவலின் திரைவடிவம். நாவலைப் படித்த எல்லாருக்குமே, ரிபெக்கா எனும் பேரழகி பற்றிய ஒரு மனப்பிம்பம் இருக்கும். யார் அந்த கேரக்டரில் நடித்தாலும், முழுமையாக திருப்திப் படுத்த முடியாது. தமிழில் மோகமுள் நாவலில் வந்த யமுனா கேரக்டரை உதாரணமாகச் சொல்லலாம். யமுனா, பல இலக்கிய வாசகர்களின் ரகசியக் காதலி. அந்த நாவல் படமான போது, யமுனாவை நாம் கற்பனை செய்து வைத்திருந்ததற்கு அந்த நடிகையால் ஈடுகொடுக்க முடியவில்லை. எனவே ஆடியன்ஸின் கற்பனைக்கே ரிபெக்கா உருவத்தை விட்டுவிடுவது தான் சாலச் சிறந்தது. அதைத் தான் ஹிட்ச்காக் செய்தார்.


German Expressionism தந்த தவப்புதல்வரான ஹிட்ச்காக், விஷுவலாகக் கதை சொல்லும் பாணியை விட்டுக்கொடுத்துவிட்டாரா என்றும் ஒரு ஃபிலிம் மேக்கராக அவருக்கு இது தோல்வி தானே என்றும் கேள்வி எழலாம். அங்கே தான் ஹிட்ச்காக்கின் விஸ்வரூபத்தை நாம் பார்க்கிறோம்.

’ரிபெக்கா இந்த அறையில் தான் ஃபோன் பேசுவாள். இங்கே தான் உட்கார்ந்திருப்பாள். இந்த ஜன்னலோரம் தான் நிற்பாள்’ என மற்ற கேரக்டர்கள் சொல்லும்போதெல்லாம், கேமிரா அவர்களின் முகத்தில் நிற்பதில்லை. ரிபெக்கா இல்லாத அந்த வெற்று இடங்களில் மேய்கிறது கேமிரா. ஒரு வெறும் படுக்கை, பிண்ணனியில் ரிபெக்கா பற்றிய வர்ணனை, அதற்கு ஏற்றாற்போல் அழகாக நகரும் கேமிரா என ஹிட்ச்காக் விஷுவலாக அதகளப்படுத்தியிருக்கிறார்.

தமிழில் ரிபெக்கா போன்ற கேரக்டராக ஞாபகம் வருவது, புதியபறவை சௌகார் ஜானகி கேரக்டர் தான். சிவாஜி காதலிக்கும் அளவிற்கு சௌகார் ஜானகியிடம் என்ன இருக்கிறது என்று நான் குழந்தையாக இருக்கும்போதே குழம்பியிருக்கிறேன்.

அடுத்து, ஏறக்குறைய ரிபெக்கா டெக்னிக்கை சந்திரமுகியில் காணலாம். உண்மையான சந்திரமுகி எப்படி இருப்பாள் என்று நமக்குத் தெரியாது. ஃப்ளாஷ்பேக்கில் ஜோதிகாவையே சந்திரமுகியாகக் காட்டியிருப்பார்கள். அப்படிக் காட்டாமல் விட்டிருந்தால், அதன் எஃபக்ட் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன். அப்படிக் காட்டியதால், சந்திரமுகியை விட வேட்டைய மகாராஜா தான் நம் மனதில் இடம் பிடித்துவிட்டார். 

ரிபெக்கா பற்றிய தகவல்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம் முன் கொட்டப்படுகின்றன.அவள் தைரியமான, கம்பீரமான பேரழகி. ஆண்களை துச்சமாக மதித்தவள். தன் அழகால் பல ஆண்களை வீழ்த்தியவள். கணவனையே பொம்மை மாதிரி நடத்தியவள். கேன்சர் வந்து, அவளின் ஆட்டத்தை முடித்து வைக்கிறது.

ரிபெக்கா எப்படி இறந்தாள் என்பது பற்றி குழப்பமான பதிலே கிடைக்கிறது. ‘கேன்சர் வந்ததால் சூசைடு செய்துகொண்டாள்’ என்று படத்தில் வரும் போலீஸும், பேட்டியில் ஹிட்ச்காக்கும் சொல்கிறார்கள். ஆனால் படத்தில் அப்படி வரவில்லை.

ரிபெக்கா தான் கர்ப்பமாகியிருப்பதாக நினைக்கிறாள். சோதனையில், அது கேன்சர் கட்டி என்று தெரியவருகிறது. கணவனிடம் அவள் ‘நான் கர்ப்பமாக இருக்கிறேன். அதற்கு காரணம் நீயல்ல. ஆனால் அது உன் குழந்தையாக வளரும்’ என்று வேண்டுமென்றே அவனைக் கோபப்படுத்தும் விதத்தில் பேசுகிறாள். கோபத்தில் ஹீரோ அவளை அடிக்க, கீழே விழும் அவள் தலையில் அடிபட்டு இறக்கிறாள்.

வலிய ஹீரோவை கோபப்படுத்தியதாலேயே இது தற்கொலை கணக்கில் வந்துவிடாது. தற்கொலை செய்ய ஹீரோயின் விஷம் எதுவும் அருந்தியதாகவும் வரவில்லை. ஹீரோவைக் கோபப்படுத்தினால், அவன் அடிப்பான் அல்லது கொல்வான் என்று தெரிந்தே ரிபெக்கா அதைச் செய்கிறாள். இதன் நோக்கம், கணவன் கையால் சாவது.

ஆனால் அதன் அடிப்படை நோக்கம், தான் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தமாக கணவன் கையால் சாக நினைத்தாளா அல்லது சாகும்போதுகூட கணவனை கொலைகாரனாக்கி ஜெயிலுக்கு அனுப்ப நினைத்தாளா என்பது பற்றியும் படம் விவரிக்கவில்லை. ஆடியன்ஸின் பார்வைக்கே, அதை விட்டுவிடுகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை, பாவப்பிராயச்சித்தமாகவே ரிபெக்காவின் முடிவைக் காண்கிறேன். ஹீரோ ரிபெக்காவை அடித்தது போலீஸுக்குத் தெரியாது என்பதால், தற்கொலை என்று அறிவிக்கிறார்கள்.
ரிபெக்காவின் இன்னொரு ஆபத்தான மறுபக்கத்தைப் பற்றியும் படம் பூடகமாகச் சொல்லிச் செல்கிறது. 

அது பற்றி…..அடுத்த பதிவில்!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 comments:

  1. படத்தோட தலைப்பே REBECCA . ஆனா அந்த கேரக்டர கண்ணுல காட்டாமலே கதைய சுவாரஸ்யமா கொண்டு போனது உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விஷயம்.
    அந்த காலத்திலே ஹிட்ச்காக் இந்த மாதிரி புதுமைய பண்ணது ஆச்சரியமா இருக்கு .

    உலக சினிமா ரசிகர்களுக்கு மசாலா படத்த பிடிக்காது . அதே மாதிரி தான் மசாலா பட ரசிகர்களுக்கும் .

    கத்தி படத்துக்கு விமர்சனம் எழுதிட்டு , இப்ப REBECCA படத்துக்கு அலசல்.

    ஏன்யா நீ மட்டும் இப்படி இருக்கற ?

    ReplyDelete
    Replies
    1. பிரியாணி ஒரு டேஸ்ட்டு..தயிர் சாதம் ஒரு டேஸ்ட்டு..நல்லா சமைச்சா பாராட்டுவோம்!

      Delete
  2. பத்மினி ஒரு டேஸ்ட்டு ... ஹன்சிகா ஒரு டேஸ்ட்டு ...

    நல்லா காட்டுனா சாரி நடிச்சா பாராட்டுவோம்!

    ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.