Friday, November 7, 2014

Interstellar(2014) - திரை விமர்சனம்

கிறிஸ்டோபர் நோலன்!

இந்த தலைமுறை இயக்குநர்களில் சூப்பர் ஸ்டார் என்று நோலனைச் சொல்லலாம். கிறிஸ்டோபர் நோலனின் படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றாலே, ஹாலிவுட்டில் தீபாவளி தான். பரம வைரிகளான பாரமவுண்ட் பிக்சர்ஸும், வார்னர் பிரதர்ஸும் இணைந்து ரிலீஸ் செய்யும் அளவிற்கு, ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ளது நோலனின் புதிய படமான 'Interstellar'. ஸ்பீல்பெர்க்கை வைத்து ஆரம்பிக்கப்பட்ட புராஜக்ட் என்பதும் ‘தனது கனவுப்படம்’ என்று நோலன் சொன்னதும் பில்டப்பை ஏற்றிவிட, ஹாலிவுட்டில் களேபரம்!பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே, இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது Interstellar.
நோலனின் படங்களை இருவகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று, நம்மை பார்வையாளர்களாகத் திருப்திப்படுத்தும் பேட்மேன் சீரீஸ் வகையறாப் படங்கள். மற்றொன்று, நம்மை பார்வையாளர்களாக மட்டுமின்றி பங்கேற்பாளர்களாகவும் ஆக்கும் மெமென்டோ, ப்ரெஸ்டீஜ், இன்செப்ஷன் வகைப் படங்கள். ஒரே நேரத்தில் கொண்டாட்டத்திற்கும் குழப்பத்திற்கும் ஆளாக்கும் வல்லமை கொன்டவை இந்த இரண்டாம் வகைப் படங்கள். அந்தவகைப் படமாக ரிலீஸ் ஆகியிருக்கிறது, Interstellar.

மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக பூமி ஆகிவிட, புதிய கிரகத்தைத் தேடிப் போகும் சாகச விண்வெளிப்பயணமே படத்தின் ஒன்லைன். விண்வெளிப்பயணத்தை மையமாகக் கொண்டு எத்தனையோ படங்கள் ஏற்கனவே வந்திருந்தாலும், நோலனின் கைப்பக்குவத்தில் தனித்து மிளிர்கிறது " Interstellar ". 

பூமி மனிதர்கள் வாழத்தகுதியற்றதாக ஆன ஒரு (எதிர்)காலகட்டத்தில், வட அமெரிக்காவில் கதை ஆரம்பிக்கிறது. மக்காச்சோளத்தைத் தவிர வேறு ஒன்றும் விளையாது எனும் நிலைமை. மனித இனமே இன்னும் சில தலைமுறைகள் தான் வாழும் எனும் சூழ்நிலை. எல்லாத் தொழில்நுட்பங்களும் பொருள் இழந்துவிட்ட நிலையில், எஞ்சினியரான ஹீரோ கூப்பர் (Matthew McConaughey) ஒரு விவசாயியாக மாறி வாழ்ந்துவருகிறான். நாசா மூடப்பட்டு, ஒரு ரகசிய அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

தனது அருமை மகள் மர்ஃப்,மகன் டாம் மற்றும் மாமனாரை உள்ளடக்கியது அவன் குடும்பம். விண்வெளியில் இருந்து வரும் விண்கலம் ஒன்று, ஹீரோவின் ஏரியாவில் விழுகிறது. அது என்ன என்று ஆராயும்போது, நாசாவுடன் ஹீரோவும் இணைந்து செயல்பட வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.

மனிதர்கள் வாழத் தகுதியான  வேற்று கிரகங்களை கணித்து வைத்திருக்கும் இருக்கும் நாசா, அந்த புதிய கிரகங்களை அடைய ஒரு குழு பயணிக்கலாம் எனத் திட்டமிடுகிறது. ஹீரோவும் ஹீரோயின் உள்ளிட்ட விஞ்சானிகள் குழுவும் பயணத்தை ஆரம்பிக்கிறார்கள். ஹீரோ தன் அன்பு மகளைப் பிரிந்து செல்ல வேண்டிய கட்டாயம். ஹீரோயின் விஞ்சானியான தன் தந்தையைப் பிரிந்து புறப்படுகிறார். வேற்று கிரகத்தில் ஒரு மணிநேரம் என்பது பூமியில் ஏழு வருடங்கள் என்பது போல் ஒவ்வொரு கிரகத்திற்கும் வெவ்வேறு காலமிருக்கிறது. பூமி தன் வாழ்நாளின் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருப்பதால், விண்வெளியில் அவர்கள் செலவளிக்கும் ஒவ்வொரு நிமிடமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. ஹீரோவுக்கு ஒருநாள் என்பது மகளுக்கு பல வருடங்களாக இருக்கிறது. அதனால் எழும் சிக்கல்களும், விண்வெளிப்பயணத்தில் ஹீரோ சந்திக்கும் சாகசங்களுமே படம்.

கிராபிக்ஸ் உத்திகளால் மட்டுமே நிறைந்த வெறும் சாகசக்கதையாக முடிந்திருக்க வேண்டிய கதை தான் இது. ஆனால் இது நோலனின் படம் ஆயிற்றே. பூமியில் நடந்த மெமெண்டோ, பிரஸ்டீஜ் போன்ற கதைகளையே நான் - லீனியர் வடிவில் கொடுத்து அசத்தியவர் நோலன். லட்டு மாதிரி விண்வெளிப்பயணக்கதை கிடைத்தால் விடுவாரா? 'விண்வெளிக்கும் பூமிக்கும் உள்ள காலம் மாறுவதில் உள்ள வித்தியாசம்' எனும் ஆயுதம் கிடைத்தபின் சும்மா இருப்பாரா? எதற்காக மற்றும் எங்கே செல்கிறார்கள் என்று தெரிந்தபின், நடப்பது எல்லாம் நம் கற்பனைக்கும் எட்டாத சம்பவங்களாக உள்ளன. படத்தின் விஷேஷமே ஸ்பேஸில் நகரும் இரண்டாம்பாதி தான்.

நோலனின் படங்களில் சென்டிமென்ட் அடக்கி வாசிக்கப்பட்டிருக்கும். அதற்கு விதிவிலக்காக, இதில் ஹீரோவுக்கும் அவரது மகளுக்குமான உறவு அற்புதமாக சொல்லப்பட்டிருக்கிறது. தந்தை தன்னை கைவிட்டுப் போய்விட்டதாக உணரும் மகளுக்கும், தன் குழந்தைகளுக்காகவே புதிய உலகம் தேடிச் செல்லும் தந்தைக்குமான முரண்பாடுகளை விண்வெளிப் பயணத்துக்கு ஈடாக விவரிக்கிறது படம். பொதுவாக இத்தகைய படங்களில் பூமியில் நடக்கும் சம்பவங்களுக்கு பெரிய முக்கியத்துவம் இருக்காது. கன்ட்ரோல் ரூமில் சிலர் உட்கார்ந்துகொன்டு சந்தோஷத்தில் குதித்துக்கொண்டோ அல்லது டென்சனுடன் ஸ்க்ரீனையே வெறித்துப் பார்த்துக்கொண்டோ இருப்பார்கள். ஆனால் இந்தப் படம் உணர்வுரீதியில், இரண்டையும் சரிசமமாகப் பேலன்ஸ் செய்கிறது.

விஞ்சானி Kip Thorne இந்தப் படத்தில் டெக்னிகல் ஆலோசகராகப் பணிபுரிந்திருக்கிறார். வார்ம்ஹோல் பற்றிப் பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்தவர் கிப். படத்தில் சொல்லப்படும் விஷயங்கள் வெறுமனே ஜல்லியடிப்பதாக இல்லாமல், உண்மைக்கு நெருக்கமாக இருப்பதற்கு கிப்பும் முக்கியக் காரணம். வார்ம்ஹோல், கருந்துளை பற்றியெல்லாம் ஒன்றும் புரியாதவர்கூட, நடப்பதைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு எளிமையாகவே டெக்னிகல் விஷயங்களைக் கையாண்டு இருக்கிறார்கள். தெளிவாக விஷுவலுடன் அடிப்படை விஷயங்களை விளக்கிவிடுகிறார்கள். எனவே அறிவியல்ரீதியாக தலையைப் பிய்த்துக்கொள்ளும் அவசியம் இல்லமால் போய்விடுகிறது.

பூமியில் வாழும் உயிர்களைக் காக்க, புதிய கிரகங்களைத் தேடிச் சென்ற முந்தைய மிஷனுக்குப் பெயர் லாசரஸ்(Lazarus). அது, இயேசு கிறிஸ்துவால் உயிர்ப்பிக்கப்பட்ட மனிதனின் பெயர். இவ்வாறு நோலன் டச் குறியீடுகளும் படத்தில் உண்டு.

Anne Hathaway, Jessica Chastain என இரு கதைநாயகிகள். Anne Hathaway படம் முழுக்க வந்தாலும், கேரக்டரைசேசனால் Jessica-வே மனதில் நிற்கிறார். சிறுவயது மகளாக வரும் Mackenzie Foy-ம் அருமையான நடிப்பு. நோலனின் ஃபேவரிட் நடிகரான Michael Caine, இதிலும் Mentor டைப் கேரக்டரிலேயே வருகிறார். Bourne சீரீஸ் ஹீரோவான Matt Damon வேறு கொஞ்சநேரம் வந்து கலக்கிவிட்டுப் போகிறார். படத்தைத் தன் தோள்களில் தாங்குவது ஹீரோ McConaughey தான். சரியான தேர்வு. ஆக்சனுக்கும் செண்டிமெண்ட்டுக்கும் ஏற்ற மனிதர்.
ஸ்டேன்லி குப்ரிக்கின் 2001: A Space Odyssey -உடன் இந்தப் படம் ஆரம்பம் முதலே ஒப்பிடப்படுகிறது. 2001 ஒரு வணிக சமரசங்கள் அற்ற கிளாசிக்கல் மூவி. ஆனால் இன்ஸ்டெல்லார் கமர்சியல் சாயம் பூசப்பட்ட கிளாசிக்கல் மூவி தான். இந்தப் படத்தின் கதை 2001-ஐ விட, Solaris(1972) படத்துடன் தான் அதிகம் ஒத்துப்போகிறது.

நோலன் படங்களில் எப்போதும் விஷுவல்ஸ் அருமையாக இருக்கும். இந்தப் படத்தில் ஸ்பேஸும் இணைந்துகொள்ள, ஒளிப்பதிவிலும் விஷுவல் எஃபக்ட்ஸிலும் மிரட்டியிருக்கிறார்கள். கூடவே ஹான்ஸ் ஹெம்மரின் இசையும் சேர்ந்துகொள்ள, கலக்கலோ கலக்கல். விண்வெளிப்பயணத்தையும், புதிய கிரகங்களையும் காட்டியிருப்பதற்கே கொடுத்த காசு சரியாகப் போகிறது. நீர்க்கிரகம், பனிக்கிரகம், வார்ம்ஹோல், ப்ளாக்ஹோல் என விஷுவல் ட்ரீட்டுக்குப் பஞ்சம் இல்லை.

Memento படத்தின் திரைக்கதை ஷார்ட் டெர்ம் மெமரி லாஸை நாமும் உணரும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும். Prestige படத்தின் திரைக்கதை மேஜிக்கின் மூன்றுநிலைகளான தோன்றுதல், மறைதல், மீண்டும் திரும்ப வருதல் எனும் பாணியில் அமைக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் Interstellar படத்தின் திரைக்கதையை த்ரில் நிறைந்த விண்வெளிப்பயணம் என்ரே சொல்லலாம். நோலனின் ஸ்பெஷாலிட்டிகளில் ஒன்று, கடைசி நிமிடத்தில் வரும் ட்விஸ்ட்கள். நாம் அதுவரை நினைத்துப் பார்த்திராத கோணத்தில் படத்தைத் திருப்புபவையாக அவை இருக்கும். அதனாலேயே படத்தினை மறுபடியும் பார்க்க வேண்டிவரும். இதிலும் அப்படியே கடைசி நேர ட்விஸ்ட் ஒன்று நம்மை அசர வைக்கின்றது. 

நோலனின் முந்தைய படங்களை விட இந்தப் படம் சிறந்தது என்று சொல்லிவிட முடியவில்லை. ஆனால் இது நோலன் படம் எனும் முத்திரை ஒவ்வொரு சீனிலும் இருக்கிறது. படத்தின் முழுக்கதையையும், சில முக்கியமான விஷயங்களையும் இங்கே சொல்லாமல் தவிர்த்திருக்கிறேன். க்ளீன் சிலேட்டாக தியேட்டரில் போய் அமருங்கள். நோலனின் மேஜிக் எப்போதும் போல் இப்போதும் உங்களை வசீகரிக்கும்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 comments:

 1. விமர்சித்த பாங்கு நன்று.///இங்கிலீஷ் படமெல்லாம் பாக்கிறதில்ல!(தமிழ் பாக்கவே நேரமில்ல.)

  ReplyDelete
 2. (வழக்கப்படி) நெடுங்காலமாகவே உங்கள் பதிவுகளை பின் தொடர்கிறேன்..
  குறிப்பாக எனது பேவரைட் ஆல்பிரட் ஹிட்ச்காக்
  (ஹிட்ச்காக் பிரசண்ட்ஸ் சீரீஸ் பார்த்திருக்கிறீர்களா)

  ஸ்பேஸ் ஒடிசி - அப்படி என்ன இருக்கு அதுலன்னு (பிளைட்டில்) பார்க்க ஆரம்பித்தேன்.. ஆரம்பத்துல சில குரங்குகளை காண்பிச்சாங்க அதுல சொக்க ஆரம்பிச்சது.. ஒரு கல்லு பறக்குது பறக்குது பறக்குது பறக்குது பறக்குது பறக்குது பறக்குது பறக்குது பறக்குது... தொங்கிட்டேன் ச்சே.. தூங்கிட்டேன்.. ஒரு மணிநேரம் கழிச்சி சாப்பாடு தராங்கலேன்னு எழுந்தரிச்சா.. அதே கல்லு பறக்குது பறக்குது பறக்குது.. பறக்குது பறக்குது ..அப்பத்தான் பூமிக்கும் வானத்திற்கும் உள்ள டைம் டிப்ரன்ச பத்தி புரிஞ்சிகிட்டேன்.. (உங்களுக்கு புரிஞ்சச்சா) சரி பறந்துகிட்டே இருக்கட்டுமின்னு அந்த நேரத்துல ரெண்டு கொரியன் படம் பார்த்தேன்

  ReplyDelete
  Replies
  1. 1. ஹிட்ச்காக் சீரிஸும் என் கலெக்சனில் உண்டு.

   2. ஒடிஸி: முதல்முறை பார்க்கும்போது, அதே அனுபவம் தான் எனக்கும். பின்னர் படம் பற்றிப் படித்து, அவரது பிற படங்களைப் பார்த்து ட்ரெய்னிங் எடுத்தபின் ‘கொஞ்சம்’ புரிஞ்சது. குப்ரிக் ‘ஆமாம்..இது போரடிக்கிற படம் தான்.’ என்று சொல்லிவிட்டே எடுத்தார். அதாவது, டிசைனே அப்படி!

   Delete
 3. உங்கள் விமர்சனத்தை படித்தபின்தான் படம் பார்த்தேன்..படம் அருமை

  ReplyDelete

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.